sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    September 15

    நாச்சியார் திருமொழி

    ஆழ்வார்கள் அனைவரும் சேர்ந்து பாடினதுதான் ’நாலாயிர திவ்ய ப்ரபந்தம்’ என்று நாம் அறிவோம்.  அதில் ஆண்டாளின் பங்கு இரண்டு திவ்ய ப்ரபந்தங்கள்.  இந்த இரண்டுமே முதல் ஆயிரத்தில் சேர்க்கப்பட்டன.  ஒன்றனுக்கு ’திருப்பாவை’ன்னு திருநாமம்.  மற்றொன்றுக்கு ‘நாச்சியார் திருமொழி’ன்னு திருநாமம்.  அவளே நாச்சியார்.  அவளுடைய திருவாக்கு, மொழின்னா வாக்கு, திருன்னா அவளே திரு. நாச்சியாருடைய திருவான வாக்கு, நாச்சியார் திருமொழி என்று பேர் பெற்றது.  திருப்பாவை – பாவைன்னா பதுமை, பொம்மைன்னு அர்த்தம். திருப்பாவை என்றால், மார்கழி மாசத்தில் கார்த்யாயினி தேவியைப் போல ஒரு பொம்மையைச் செய்து, அவளுக்குப் பூசை செய்து விரதம் இருந்து, கண்ணனையே தனக்குக் கணவனாகக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிப் பாடின பிரபந்தம்.  அதனாலே திருப்பாவை அப்படின்னு அதுக்குப் பேர் வந்தது.  முப்பது பாசுரங்களோடே கூடினது திருப்பாவை143 பாசுரங்களோடே கூடினது நாச்சியார் திருமொழி.  மார்கழி மாசத்துக்கென்று திருப்பாவை.  தை மாசத்துக்கென்று நாச்சியார் திருமொழி.  ஏன்னா ரெண்டு ப்ரபந்தமும் மாசப் பேரோடதான் தொடங்கறது.  ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ன்னு திருப்பாவை தொடங்கும்.  ’தையொரு திங்களும் தரை விளக்கி’ன்னு நாச்சியார் திருமொழி தொடங்கும். அதனாலே ஹேமந்த ருதுவினுடைய இரண்டு மாசங்களுக்காக இரண்டு பிரபந்தங்களை ஆண்டாள் அனுகிரகித்தாள்.  ஆழ்வாருக்கே (பெரியாழ்வார்) பெருமானிடத்தில் பரிவு அதிகம்.  அதையே என்னான்னு கேட்குமளவுக்கு ஆண்டாளுக்குப் பெருமானிடத்தில் பரிவு அதிகம்.  ஆண்டாளுக்குன்னு இருக்கற ஏற்றம், ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு வைபவம்ன்னால், ஆழ்வார்கள் ஆண்களாகப் பிறந்துவிட்டுப் பெண் தன்மையை ஏறிட்டுக் கொண்டு பிரபந்தம் பாடினார்கள்.  ஆனால் ஆண்டாளுக்கோ, ‘ஜென்ம ஸித்த ஸ்த்ரீத்வம்’.  அவள் பிறக்கும் போதே பெண்ணாகப் பிறந்துட்டபடியால், செயற்கையா ஒன்றை ஏறிட்டுக்கனும்ங்கிற அவசியமே இல்லையோல்லையோ?  ஆண்களாகப் பிறந்துட்டு செயற்கையா ஒன்றை ஏறிட்டுக் கொண்டு ஆழ்வார்கள் பாசுரம்.  ஆனால் பெண்ணாகப் பிறந்து இயல்பாகவே பெண்ணான தன்மையோடே பாடினது, ஆண்டாளுக்கு உண்டான ஏற்றம்.  ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய். ஆழ்வார்கள் பாடின பிரபந்தங்களைக் காட்டிலும் இதுக்கு என்ன ஏற்றம்?  ஏதோ இருக்கிறதே.  என்னதுன்னு பார்த்தால், இது பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்.  இவளுக்குக் கோதைன்னு பேர்.  கோதா என்றால் மாலைன்னு அர்த்தம்.  இவ்வாண்டாளே தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமானுக்குன்னு சூடினபடியால் இவருக்கு சூடிக் குடுத்த நாச்சியார்ன்னு திருநாமம்.  இவள் பாடிக் குடுத்தபடியால் பாடவல்ல நாச்சியார்ன்னு திருநாமம்.  இவளே கோதா. கோதாம்பான்னு சொல்லுகிறார்கள்.

    श्री विश्णुचित्त कुलनन्तन कल्पवल्लीं
    श्री रञ्गराज हरिचन्तन योगदृश्याम्
    शाक्षाथु शमां करुणैया कमलामिवान्यां
    खोथाम् अनन्य सरण: सरणं प्रबत्ये

    [ ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
    ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம்
    ஷாக்ஷ்ஷாது ஷமாம் கருணையா கமலா மிவாந்யாம்
    கோதாம் அநந்ய சரணஹ சரணம் ப்ரபத்யே ]

    கோதாஸ்துதியினுடைய ஆரம்பத்துல ஸ்ரீவேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.  ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் – பெரியாழ்வாருடைய குலத்துக்கு பெருமை சேர்ப்பதற்காகவே அவதரித்தாள்.  என்ன அவர் குலம்?  என்ன பெருமை சேர்த்துட்டாள்ன்னா, பகவானுடைய திருமேனிக்குப் பரிந்து பல்லாண்டு பாடுவது அவர் குலம்.  மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவுதானன்றிப் பொங்கும் பரிவாலே வில்லிப்புத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்.  பொங்கும் பரிவு பெரியாழ்வாருக்கு.  அதைப்போலத்தான் பரிவு ஆண்டாளுக்கு.  இவள் பெண்ணாகப் பிறந்துட்டபடியால், அவளுடைய ஒரே குறிக்கோள், நாம் மானிடவர்கென்று பேச்சுப்படுவதில்லை.  லோகத்தில் இருக்கிற மனுஷ்யர்களுக்கு வாழ்க்கைப்படப் போவதில்லை.  பராத்பரனான சர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணன் திருவரங்கநாதனாக இருக்கிறான்.  அவனே கண்ணனாக அவதரித்தான்.  அந்தக் கண்ணனுக்கே வாழ்க்கைப் படுவோம்.  அரங்கனுக்கே வாழ்க்கைப் படுவோம், என்று தன் உள்ளத்திலே உறுதி பூண்டாள்.  அந்த உறுதி ஆண்டாளுக்கு எப்படி ஏற்பட்டதுன்னால், பெரியாழ்வார் சொல்லிக் குடுத்திருக்கிற கதைகள்.  பகவானுடைய வைபவத்தை நன்னா சொல்லி வைத்தார்.  அவனுடைய அவதார சேட்டிதங்களையெல்லாம் சொன்னார்.  அவனே பரதெய்வம்ங்கிறதைப் புரிய வைத்தார்.  புரிஞ்சவுடனே, அப்போ எந்த ஆத்மாவுமே இன்னொருத்தனுக்கு ஈடுபடக்கூடாது.  யார் ஜெகத்துக்கே காரணமோ, எவன் என்னைப் படைத்தானோ, காத்தானோ, எவன் எனக்கென்றே காத்திருக்கிறானோ, எவன் ஒருத்தனாலேதான் மோக்ஷத்தையே குடுக்க இயலுமோ, அவனைத்தவிர மற்றொருத்தன் இடத்தே நாம் கண் வைக்க மாட்டோம்.  அதனாலே திருவரங்கநாதனுக்குத்தான் ஆட்பட வேண்டும்ன்னு மனசிலே உறுதி கொண்டாள்.  ஆனா அது உடனே நடந்துடுமா?  நடந்துட்டா ஆண்டாள் பிரபந்தமே பாடமாட்டாளோல்லையோ?  பகவான் ஆண்டாளைப் பிறப்பிச்சிருக்கறது எதுக்கு?  உலகோரைத் திருத்த வேண்டும்ங்கிறதுக்காக. நிறையப் பாசுரங்களைப் பாடும், பாட்டை சொத்தா விட்டுட்டு வாரும்.  இது கொண்டு மக்கள் நம்மைப் புரிந்து கொள்வர்கள்.  இதுக்குன்னு பெருமாள் அவளை அவதாரம் பண்ண வைச்சிருக்கச்சே, ஆசைப்பட்டாள்ன்ன உடனே அவரும் அழைச்சிட்டுப் போய்ட்டார்ன்னு வச்சிக்கங்கோ, அப்புறம் பாட்டே வராதோல்லையோ?  அதனால இந்தப் பிரபந்தங்களைப் பாடுவிக்கனும்ங்கிறதுக்காகத்தான் ஆண்டாள் வைக்கப்பட்டாள்.  ஆனால் அவளுக்கோ பகவானை விட்டுப் பிரிவு, துடிப்பு, விரக தாபம். தாபத்தோடதான் தனக்குள்ள இருக்கற தாபத்தைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக இரண்டு பிரபந்தங்கள் பாடினார், திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும்.  அதிலே திருப்பாவை ரொம்ப பிரசித்தம்.  இப்போ பார்க்கப் போறது நாச்சியார் திருமொழி.

    நாச்சியார் திருமொழியில் மொத்தம் 143 பாசுரங்கள்.  அதிலே மொத்தம் 14 பதிகங்கள் உண்டு.  என்னிக்கும் ஒரு பிரபந்தம்ன்னு எடுத்துட்டா அதை பத்துப் பத்துப் பாசுரங்களாக அனேகமா பிரிச்சுருவா.  பத்துப் பாசுரங்கள் கொண்டது ஒரு திருமொழி.  நாச்சியார் கோவில், நாச்சியார் திருமாளிகைன்னு ரெண்டு திவ்யதேசம் இருக்கு.  இப்போ இந்தப் பிரபந்தத்தினுடைய பேர் நாச்சியார் திருமொழின்னு இருக்கறதுனால முதல்ல பெயர்க்காரணம் பார்ப்போம்.  நாச்சியார்ன்னா ஆண்டாள்.  இன்னிக்கு அவள் அவதாரம் பண்ணி எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ‘நாச்சியார் திருமாளிகை’ன்னு பேர்’நாச்சியார் கோவில்’ன்னு ஒரு ஊர் உண்டு.  அது திருநரையூர், சோழ தேசத்திலே இருக்கு.  ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பாண்டிய தேசத்திலே உள்ளது.  மூன்று திவ்ய தேசங்கள் மூன்று நாச்சியார்களுக்குப் பெருமை.  ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி.  ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’.  பூதேவி நாச்சியாருக்கு ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’.  நீளாதேவி நாச்சியாருக்கு ‘திருநரையூர்’.  இந்த மூன்று இடத்திலே இந்த மூன்று நாச்சிமார்களுக்குப் பெருமை.  இந்த மூன்று இடத்திலேயும் புறப்பாடு ஆகறச்சே நாச்சியார் பல்லக்கு முன்னாடி போகும், பெருமாள் பல்லக்கு பின்னாடி போகும்.  வேற எங்கேயும் இதைப் பார்க்க முடியாது.  முன்னாடிதான் பெருமாள் ஏழுவர், பின்னாடிதான் நாச்சியார் ஏழனும்.  ஆனால் இந்த மூன்று சன்னிதிகளில் முன்னாடி பிராட்டிக்கு வைபவம், பின்னாடி பெருமாள் எழுந்தருளுகிறார்.

    நாச்சியார் திருமொழி மூன்று பிரகரணங்களாக (கட்டங்களாக) பிரிக்கப்படுகிறது.  முதல் ஐந்து பதிகங்களும் ஒரு பிரகரணம்.  ஆறாம் பதிகம் இரண்டாவது பிரகரணம்.  7,8,9,10,11,12,13,14 பதிகங்கள் மூன்றாவது பிரகரணம்.  முதல் பிரகரணம் திருக்கல்யாணக் கனவு காண்பதற்கு முன்பாக.  இரண்டாம் பிரகரணம் திருக்கல்யாணக் கனவு.  மூன்றாவது பிரகரணம், கல்யாணம் ஆன பிறகு நடப்பவை.

    முதல் பதிகம், காம தேவனிடத்தும் சாம தேவனிடத்தும் காலிலே விழுந்து எப்படியாவது கண்ணனை எனக்குக் கணவனாக பெற்றுக் குடுங்கோள் என்று பிரார்த்திக்கிறாள்.

    இரண்டாம் பதிகம், நாமம் ஆயிரம் ஏத்த நின்றங்கிற பதிகம்.  இதாலே சிற்றில் வந்து சிதையேலே என்று கண்ணனுடைய பால்ய சேட்டிதம் ஒன்றைச் சொல்லி, எங்களுடைய சிந்தனையை இப்படி சிதைத்து விடாதே.  உன்னை அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனா அந்த ஆசை நடக்காதபடிக்கு சிதைச்சுடாதே என்று ஆண்டாள் கண்ணனிடத்தே பிரார்த்திக்கிறாள்.

    மூன்றாம் பதிகத்தாலே, கோழி அழைப்பதன் முன்னம்ன்னு பாசுரம். கவர்ந்த துணிகளை வேண்டி கன்னியர் கண்ணனை இரத்தல்.  அதில் இந்திரியங்கள் நம்மை துன்புறுத்துகின்றன, மனசு நம்மை அடக்கப் பார்க்கிறது, கண்ணனே நீ நம்மை அடக்கி ஆட்கொள்ள வேண்டும், என்று பிரார்த்தித்தது மூன்றாவது பதிகத்தினுடைய கருத்து.

    அடுத்து நாலாவது பதிகம், நீ கூடிடு கூடலேன்னு பிரார்த்திக்கிறாள்.  சம்ப்ரதாயத்திலே வடக்குத் திருமலை, திருவேங்கடம்தெற்குத் திருமலை திருமாலிருஞ்சோலைமலைகீழவீடு திருக்கண்ணபுரம்மேலவீடு திருவரங்கம்.  இவை நான்கையும் இந்த நாலாம் பதிகத்தின் முதல் இரண்டு பாசுரங்களில் சேர்க்கிறாள் ஆண்டாள்.

    ஐந்தாம் பதிகம் குயில் பாட்டு. மென்னடை அன்னம் என்று பெரியாழ்வாரையே குறிக்கிறாள்.  நடை என்பது நடத்தை, ஆச்சாரத்தை குறிக்கிறது.  ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்கமன்னார் சன்னிதியில் எங்குமே காண முடியாத ஆச்சர்யமாய், வலப்பக்கம் ஆண்டாள், நடுவில் பெருமாள், இடப்பக்கம் கருடன், என்று சேவை சாதிக்கிறார்கள். இது அ, உ, ம என்ற பிரணவ தத்துவத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

    ஆறாம் பதிகம், வாரணம் ஆயிரம் என்று தொடங்கும் திருக்கல்யாண வைபவம்.  வாரணமாயிரம் – ஆயிரம் யானைகள்.  எப்படி கண்ணனுக்கு ஆயிரம் யானைகள்?  அவர்கிட்ட மாடுதானே இருக்கும்?  கண்ணன் பிறந்தது ஷத்ரிய குலம், வளர்ந்தது வைசிய குலம்.  பிறந்த குலத்திலேர்ந்து அவருக்கு ஆயிரம் யானைகள்.  வளர்ந்த குலத்திலேர்ந்து கறவைக் கணங்கள்.  சரி, எதற்கு ஆயிரம் யானைகள்?  அவர் ஒருத்தர்தானே வரார்?  அவருடைய தோழர்கள் ஆயிரம் பேர்கள்.  ஒவ்வொருவரையும் ஒரு யானை மேல் ஏற்றி அழைத்து வருகிறார்.  பொதுவாக கல்யாண மாப்பிள்ளை மட்டும்தான் சிறப்பு வாகனத்தில் வருவர்.  ஆனால் பகவானுக்கு இருக்கிற குணம், அவனிடம் சரணம் என்று சொல்லியவர்களை தனக்குச் சமமாக உயர்த்தி அமர வைக்கிறான்.  பெரியவாச்சான் பிள்ளை இதன் உட்கருத்தாக சாம்யாபத்தி மோக்ஷத்தைக் கூறுகிறார்.  பகவானிடத்தில் ஒருத்தன் சரணம் என்று சொல்லி, அவன் மோக்ஷம் அடையும் போது, பகவானுடைய எட்டு கல்யாண குணங்களை அடைந்து ‘சாம்யாபத்தி மோக்ஷம்’ அடைகிறான்.  அந்த எட்டு கல்யாண குணங்களாவன,

    अपकतपाप्मा विजर: विमुर्ति: विसोक: विजकिक्स: अपिपाश: सत्यकाम: सत्यसङल्प:

    [ அபகதபாப்மா விஜரஹா விமுர்த்திஹு விசோகஹா விஜகிக்ஸஹா அபிபாஸஹா சத்யகாமஹா சத்யசங்கல்பஹா ]

    அபகதபாப்மா – பாபம் தீண்டாத தன்மை;  விஜரஹா – மூப்பு கிடையாது;  விமுர்த்திஹு – மரணம் கிடையாது;  விசோகஹா – சோகமே கிடையாது;  விஜகிக்ஸஹா – பசி கிடையாது;  அபிபாஸஹா – தாகம் கிடையாது;  சத்யகாமஹா – ஆசைப்படக்கூடிய குணங்கள் படைத்தவர்;  சத்யசங்கல்பஹா – எடுத்த செயல் அத்தனையும் முடிக்கிற தன்மை.

    ஏழாம் பதிகம், கல்யாணம் ஆன பிறகு உண்டான வைபவம்.  கற்பூரம் நாறுமோ பாசுரம்.  சக்கரத்தாழ்வானுக்கு இல்லாத பெருமை சங்கத்தாழ்வானுக்கு உண்டு.  சங்கத்தாழ்வான் பகவானுடைய இடக்கையை விட்டு நீங்குவதே இல்லை.  சக்கரத்தாழ்வார் எதிரிகளை அழிக்க பகவானுடைய கையை விட்டு நீங்கி திரும்பவும் வருகிறார்.  சங்கத்தாழ்வானுக்கு பகவானுடைய திருவாயமிர்தம் கிடைக்கும். சக்கரத்தாழ்வானுக்கு அது கிடைக்காது.  அதனாலே சக்கரத்தாழ்வானைவிட சங்கத்தாழ்வானுக்கு வைபவம் அதிகம்.

    எட்டாம் பதிகம், திருவேங்கடவனுக்காக ஆண்டாள் விட்ட தூது.

    ஒன்பதாம் பதிகம், தெற்குத் திருமலை, திருமாலிருஞ்சோலைமலை அழகருக்காக அமைத்தாள் ஆண்டாள்.  நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்கார அடிசல் இந்த பதிகத்தினாலே சமர்ப்பித்தாள்.  அவள் பாடினதை, அவள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவது நமது பொறுப்பு எனக்கொண்டு, பகவத் இராமனுசர் வந்து நேரடியாக சமர்ப்பித்து நிறைவேற்றி வைத்தார்.  இதனாலே இராமனுசர் ‘கோயில் அண்ணனாக’ ஆண்டாளால் பாவிக்கப்படுகிறார்.  அந்த அக்கார அடிசில் இன்னைக்கும் சமர்ப்பிக்கலாம்.

    பத்தாவது பதிகம், இராமசந்திரனுடைய ’சொல்’, கண்ணனுடைய ’வார்த்தை’, வராகனுடைய ’பேச்சு’, அதாவது இராம சரம ஸ்லோகம், கண்ணனின் சரம ஸ்லோகம், வராக சரம ஸ்லோகம் இவற்றைக் குறித்து பாடியது.

    பதினோராவது பதிகம், திருவரங்கநாதனுக்கென்று பாடியது.

    பனிரெண்டாவது பதிகம், இனி நம்மால் தாங்க முடியாது என்று பிருந்தாவனத்துக்கு என்னை உய்த்திடுமின், மதுரைக்கு என்னை உய்த்திடுமின், யமுனை நதி தீரத்துக்கு என்னை உய்த்திடுமின் என்று, இங்கிருந்தால் என் உயிர் தரிக்காது, சீக்கிரம் என்னை கண்ணன் இருக்குமிடத்துக்கு கொண்டு போங்கோள் என்று பாடியது.

    பதிமூன்றாவது பதிகம், கண்ணனுடைய வஸ்திரத்தை கொண்டு வந்து வீசுங்கோள், அவன் தரித்த துளசியைக் கொண்டு வந்து வீசுங்கோள். அப்போதுதான் நாம் தரிப்போம் என்று தெரிவித்தாள்.

    பதினாலாவது பதிகம், ரெண்டு பேர் சேர்ந்து பாடற பாட்டு. ஆண்டாள், மற்றும் இன்னொரு கோபிகைன்னு வச்சுக்கங்கோ.  ஆண்டாள் கண்ணன் எங்கே, எங்கேன்னு தேடறா.  இந்த மாதிரி பிள்ளை ஒருத்தர் இந்த அடையாளத்தோட போறத பார்த்தீளோ?  அப்படின்னு ஒருத்தர் கேப்பா.  அந்தப் பிள்ளைதானே, பார்த்தேனே, அப்படின்னு இன்னொருத்தி பதில் சொல்லுவோ.

    இப்படி நாச்சியார் திருமொழி பாடப்பட்டிருக்கிறது.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாச்சியார் திருமொழி உபந்நியாசம் – Houston)

    Comments

    Please wait...
    Sorry, the comment you entered is too long. Please shorten it.
    You didn't enter anything. Please try again.
    Sorry, we can't add your comment right now. Please try again later.
    To add a comment, you need permission from your parent. Ask for permission
    Your parent has turned off comments.
    Sorry, we can't delete your comment right now. Please try again later.
    You've exceeded the maximum number of comments that can be left in one day. Please try again in 24 hours.
    Your account has had the ability to leave comments disabled because our systems indicate that you may be spamming other users. If you believe that your account has been disabled in error please contact Windows Live support.
    Complete the security check below to finish leaving your comment.
    The characters you type in the security check must match the characters in the picture or audio.

    To add a comment, sign in with your Windows Live ID (if you use Hotmail, Messenger, or Xbox LIVE, you have a Windows Live ID). Sign in


    Don't have a Windows Live ID? Sign up

    Trackbacks

    The trackback URL for this entry is:
    http://kaatru.spaces.live.com/blog/cns!8A3636B33FA87F5E!799.trak
    Weblogs that reference this entry
    • None