| sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists | Help |
|
June 26 நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 5முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 ஆறாம் பத்து, ரொம்ப ஆச்சர்யமான பத்து பாசுரங்கள்.
(திருவாய்மொழி – 6.5.1) இதைத் தோழிப் பாசுரமாக தாயாரைப் பார்த்து சொல்லிண்டிருக்கா தோழி. இனிமே இந்தப் பெண்கிட்டே ஆசையே வைக்காதீங்கோ. அவ அவ்வளவுதான். எப்ப அவ அந்த திருத்தொலைவில்லி மங்கலம் அரவிந்தலோசனுக்குன்னு மனசைப் பறிகொடுத்துட்டாளோ, இனிமே நீங்க என்ன பேசியும் பிரயோஜனமில்லே. குமுறும் ஓசை விழவொலி தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு – ஆசையில்லாம விடுவதற்கு நீங்கதானே வழி தேடிக் கொண்டீர்? ஏன்னா, ஏற்கனவே தொலைவில்லி மங்கலத்துக்குப் போகாதேன்னாளாம். சின்னக்கதை பார்ப்போம். நம்மாழ்வார் பிறந்தார். பிறந்தவுடனே ஜோசியக்காராளா கூட்டி ஜாதகம் எழுதினா. அவர் எல்லாம் நல்லாத்தான் இருக்கும், பொண்ணு நல்லாத்தான் வாழுவோன்னு சொல்லிட்டு, ஆனா இந்த தொலைவில்லி மங்கலம் ரெட்டைத் திருப்பதி பெருமாளை மட்டும் சேவை பண்ணி வைக்காதீங்கோ. பண்ணி வைச்சா இந்தப் பொண்ணு உங்க பொண்ணே இல்லேன்னு அன்னைக்கே சொல்லிட்டார். தாயார் எல்லாரும் கூடி முடிவெடுத்தாளாம். இந்த பொண்ணை சேவை பண்ணி வைக்கலாமா, இல்லே நமக்குப் பொண்ணு வேணும்ன்னா சேவை பண்ணி வைக்காம இருந்துடலாமா? ஆனா அவா குலதெய்வமே அந்தப் பெருமாள்தான். யார் குடும்பத்துல பிறந்தாலும் அவரை சேவிச்சுத்தான் ஆகனும். அப்போ நம்மாழ்வாரோட தாயார் முடிவெடுக்கறா. இந்தப் பெண்ணு நம்மளிடத்திலே இருக்கட்டும், இல்லாது போகட்டும், அந்த பெருமாளை சேவிச்சுத்தான் ஆகணும். அன்னைக்கு முடிவெடுத்துக் கொண்டு போய் சேவை பண்ணி வைச்சாளோல்லையோ? அன்னைக்கே அந்தப் பெருமாளுக்குன்னு அந்தப் பொண்ணு ஆயிட்டா. இது நீங்க எப்பவோ எடுத்த முடிவாச்சே. இன்னைக்கு வந்து மனசைப் பறிகொடுத்துட்டாளேன்னு சொல்றதுல ஏதானும் அர்த்தம் உண்டா? குமுறும் ஓசை விழவொலி தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு – இந்தப் பெண்ணை விழா ஒலியோடு இருக்கக்கூடிய தொலைவில்லி மங்கலத்துக்கு அழைச்சுட்டுப் போனீர்கள். செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – பிரான், எம்பெருமான் இருக்கறதையும் இவளுக்கு சேவை பண்ணி வச்சீர்கள். அன்னிலேர்ந்து இந்தப் பெண் தன் வசத்திலேயே இல்லே, என்று தொலைவில்லி மங்கலத்துக்காக பத்துப் பாசுரம் பாடினார். அது தோழிப் பாசுரமாக. அதே இன்னொரு பத்துப் பாசுரங்கள். மன்னார்குடி இராஜ கோபாலனுக்கு அதிலேர்ந்துதான் ஒரு பாட்டை எடுத்து மணவாள மாமுனிகள் சமர்ப்பித்தார்.
(திருவாய்மொழி – 4.6.1) பெண்ணுக்குப் பெருமானிடத்தில காதல். மூர்ச்சித்துக் கிடக்கறா. ஏதோ பூதப் பிரேத பிசாசம் பிடிச்சுடுதுன்னுட்டுன்னு அம்மா நினைச்சுனுட்டா. நினைச்சினுட்டு, குறத்தி எல்லாம் கூப்பிட்டு அவளைக் குறி சொல்லச் சொல்றா. ஏன்னா என்ன வந்துடுத்துன்னு, மோந்து பார்ப்பாளாம், இப்படி நாடி பிடிச்சுப் பார்ப்பா. அதுக்கு அவ என்னென்னமோ பண்றா. சோழியெல்லாம் தூக்கிப் போடறா. முறத்தைக் கொண்டு வந்து வச்சு நெல்லைத் தூக்கி வீசறா. இதெல்லாம் வரத வச்சிண்டு யார் இவள் பேரில பிடிச்சிண்டிருக்கான்னு அந்தக் குறத்தி சொல்லுவள் போலருக்கு. அதுக்காக கூப்பிட்டுட்டு பண்ண ஆரம்பிக்கிறா. அப்போ தோழி வந்தா. என்னத்துக்கு இதெல்லாம் ஏற்பாடு பண்ணிண்டிருக்கீள்ன்னு கேக்கறா. இல்லேல்லே, இந்தப் பெண்ணை யார் பிடிச்சிண்டிருக்கான்னு நான் கண்டுபிடிச்சாகனும்ன்னு தாயார் சொல்றா. என்னமோ பைத்தியக்காரத்தனம் பண்ணிண்டிருக்கேளே இப்போ. ஏற்கனவே அவ அவனுக்கு மனசை பறிகொடுத்தாச்சு. நீங்க இதெல்லாம் வேற பண்ண ஆரம்பிச்சேள்ன்னா ஒட்டிண்டிருக்கற உயிரும் போய்டப் போறது. இதுதான் நடக்கும்ங்கிறதுக்காக அந்தத் தோழி வந்து தடுக்கிறாள். இந்தப் பெண்ணினிடத்தில இதெல்லாம் நீங்க பண்ணாதீங்கோ. யாராரோ வந்து ஏதேதோ தப்புத்தப்பா அர்த்தம் சொல்லிடப்போறா, வேண்டாம்னு மறுத்தாளோல்லையோ? அதுக்குன்னு ‘சகி வெறிவிலக்குதல்’ன்னு தமிழ் இலக்கியத்திலே ஒரு வழக்கம். சகின்னா தோழி, வெறி விலக்குதல்ன்னா, இவா ஏதோ தப்பு பண்ணப்பார்க்கிறாளோல்லையோ, இந்தப் பெண்ணுக்கு வேற ஒரு மாப்பிள்ளை பார்த்துட்டாள்ன்னா, அது கூடாதுன்னு விலக்குவதற்குத்தான் இந்தப் பத்துப் பாசுரங்கள் பாடினார். ஏழாம் பத்துக்குன்னு இருக்கிற தனிச்சிறப்பு, தாய்ப்பாசுரம், திருவரங்கத்துக்குன்னு இருக்கிற பத்துப் பாசுரங்கள் பாடினார்.
(திருவாய்மொழி – 7.2.1) திருவரங்கத்தானினுடைய திருமணத் தூண்கள் இரண்டு. அதுக்கு முன்னாடி இந்தப் பராங்குச நாயகியைக் கொண்டு போய் கீழ போட்டுட்டார் தாயார். இந்தப் பெண்ணு உன்னையே நினைச்சிண்டு மூர்ச்சையா கிடக்கிறா. நீ திரும்பிப் பார்த்தாத்தான் உண்டு. நான் நினைத்து ஒரு பிரயோஜனமும் இல்லே. இவளைப் பத்தி நீ என்ன நினைத்தாய்ன்னு தாயார் கேக்கறது பத்துப் பாசுரங்கள். அதற்கடுத்தது தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதன், நவதிருப்பதி திவ்யதேசத்துக்குள்ளே தென் திருப்பெரை ஒன்று.
(திருவாய்மொழி – 7.3.1) நீங்க என்ன பேசினாலும் நான் கேக்கறதாயில்லே. என் நெஞ்சு திருப்பேரை பெருமானிடத்தில போய்டுத்து. நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கில்லை என் தோழிமீர்காள் – எனக்கினி நாணமில்லை, வெட்கமில்லை. பகவானைத்தேடி நான் போகத்தான் போகிறேன்னுட்டு பொண்ணு புறப்பட்டுப் போறா. அதை ஏழாம் பத்தாலே சாதித்தார். இப்படி பல பதிகங்களாலே தூதுவிடுதல் பார்த்தோம், அனுகாரம் பார்த்தோம், மடலெடுத்தல் பார்த்தோம், பிரிவு ஆற்றாமையாலே துடித்தல் பார்த்தோம். ஆறாம் பத்தில் ’மின்னிடை மடவார்கள்’ன்னு பத்துப் பாசுரம். அதான் ஊடல் பாசுரம்.
(திருவாய்மொழி – 6.2.1) வாசல்ல வந்து தோட்டத்துல நிக்கிறார் பெருமாள். பராங்குச நாயகியும் தோழியும் பூப்பந்து ஆடிண்டு இருக்கா. ஒரு பத்து நிமிஷம் நாழி கழிச்சு வந்துட்டார். ஆறு மணிக்கு வரேன்னு சொல்லியிருந்தார். ஆனா நாழியாக்கி, ஆறு பத்து, ஆறே கால். என்ன கோபம் இந்த நாயகிக்குன்னா, ஆறு மணிக்கு வரென்னு சொன்னியோல்லியோ? நீ ஏன் வரலே? அப்படிங்கறதுக்காக கதவடைச்சுத் தள்ளிட்டா இப்போ. இது இங்கே. ஏன் அவருக்கு நாழியாச்சு? வரேன்னு சொன்னவர் ஆறு மணிக்கு வந்திருக்கலாமோல்லையோ? என்னத்துக்கு ஆறு பத்து, ஆறேகால் ஆக்கிட்டார்ன்னா, அதுக்குப் பரகால நாயகி தான் பதில் சொல்லியிருக்கார். இங்கே எப்படி கோபத்தாலே, பிரணய ரோஷத்தாலே மின்னிடை மடவார்களோ, அதேபோல அவரும் பத்துப் பாசுரம் பாடினார்.
(பெரிய திருமொழி – 10.8.1) இந்தப் பெருமான் என்னத்துக்காக வந்து நிற்கிறார்? அவர், போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் – கதவோரமா வந்து நின்னுண்டாராம். ஆறுக்கு வரேன்னு சொல்லிட்டு ஆறேகாலுக்கு வந்துட்டீரோல்லையோ? உம்ம யாரு இந்த இடத்தில வரச்சொன்னா இப்போ? ஏதுக்கிதுவென் இதுவென் இதுவென்னோ – இங்க நீர் வர வேண்டிய தேவையே இல்லே, போம். பெருமாள் வாயைத் திறந்து, என்னத்துக்கு கால் மணி அவகாசம் ஆயிடுத்துன்னு கேளேன். அதைச் சொல்லுவேனோல்லையோ? அதைக் கேட்காமலே நீ கோவிச்சுக்கறியேன்னா,
(பெரிய திருமொழி – 10.8.2) நீ வந்ததெல்லாம் ரொம்ப நன்னா எனக்குத் தெரியும். துவராடை உடுத்து, கலிங்கம் உடுத்து – பெருமாள் நிறைய அலங்காரமெல்லாம் பண்ணிண்டு பரகால நாயகியை அனுக்கிரகம் பண்ணக் கிளம்பிட்டார். ஆறு மணிக்கு கிளம்பனும்ன்னா அஞ்சரைக்கு அலங்காரம் பண்ணிண்டு வேகமாப் போகணுமோல்லையோ? எல்லாம் பண்ணினுட்டார். அவரோ மாடு மேய்க்கப் போறவர். கண்ணனோல்லையோ? பகல் பொழுது முழுக்க மாடு மேய்ச்சுட்டுத் திரும்பி வந்தா, எல்லா அலங்காரத்தையும் மாத்திக்கணும். மாடு மேய்க்கிற அலங்காரத்தோட போனால் எந்த நாயகி திரும்பிப் பார்ப்பள்? அதனாலதான் சரின்னு எல்லா அலங்காரத்தையும் மாத்தினுட்டார். இப்போ நல்ல ஆடை எல்லாத்தையும் அணிஞ்சிண்டாச்சு. புஷ்பம் எல்லாம் சூடிண்டாச்சு. புறப்பட்டுப் போறச்சே இப்படிக் கண்ணாடி வச்சிருந்தது வாசப்படிக்குப் பக்கத்திலே. அதை ஒரு பார்வை பார்த்துண்டு போக மாட்டாளா? எல்லாம் சரியா அலங்காரம் பண்ணிண்டு இருக்கமான்னு பார்க்கறதுக்காகப் பார்த்தா, நித்யபடிக்கே மாடு மேய்க்கப் போறச்சே, காதில இருக்கற தங்கக் குண்டலங்களை எல்லாம் யசோதை கழட்டிடுவோ. ஏன்னா அதிலே இருக்கிற இரத்தினமெல்லாம் கீழே விழுந்துடறது, காட்டில அங்கயிங்க போய்ட்டு வரதுக்குள்ளே. அதனால அதைக் கழட்டிடு துணித்திரி போட்டுத்தான் அனுப்புவளாம். இந்த காது தூந்து போய்டாது இருக்கணும்னா துணித்திரி போடணும். அதைக் கழட்டிட்டோம்ன்னா சீக்கிரமே இளம் வயசிலே தூர்ந்து போய்டும். அதனால துணித்திரி போட்டு அனுப்பிச்சிருந்தா. மத்த எல்லாத்தையும் மாத்தினுட்டார் பெருமாள். அதை மட்டும் கழட்டலே. இது இத்தனையும் தங்கம் தங்கமாப் போட்டுகிட்டு, துணித்திரிய மட்டும் கழட்டாம போனா நன்னாயிருக்குமா? அதனால பார்த்துட்டு, உள்ள போய் பெட்டியைத் திறந்து, நிறைய குண்டலம் வச்சிருந்தார். பார்த்து ரெண்டு குண்டலத்தை எடுத்துக் கண்ணாடி முன்னாடி நின்னு அது சரியா இருக்கான்னு பொருத்திட்டு ஒருதரம் பார்த்துட்டு வரணுமோல்லையோ? பத்து நிமிஷம் ஆய்டுத்து. ஆறு மணிக்கு போறேன்னு சொன்னவர், ஆறேகால் ஆச்சு. அதைப் பாட்டிலேயே சொல்லிட்டார். காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்து தாது நல்ல தண்ணந் துழாய் கொடணிந்து – இதெல்லாம் பண்ணிக்கறதுக்கு, போது மறுத்து – உனக்கேன் போது (பொழுது) ஆயிடுத்து? இந்த அலங்காரமெல்லாம் சீக்கிரம் நீ பண்ணிண்டு வந்திருக்கணும். அது வராததுனாலதான் உனக்கு போதாயிடுத்து. நீர் இங்கே வரவேண்டியதேயில்லே. இவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இதுவென் இதுவென் இதுவென்னோ, என்று பரகால நாயகி பத்துப் பாசுரங்கள். ஒரு செண்டு சிலுப்பி – கையில ஒரு மலர் செண்டு பிடித்து, மெதுவா அதை அசைச்சிண்டே வரார். யாரேனும் பார்த்து எதுக்குப் போகிறீர்ன்னு கேட்டா, பரகால நாயகியை அனுகிரகிக்கப் போறேன்னு சொன்னா இவர் பெருமை குறைஞ்சு போய்டுமாம். அதுக்காக இதை இப்படியே வெறும திருப்பிண்டு, ஒரு செண்டு சிலுப்பி. கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி – தலையைத் தூக்கி அவர் சீவியிருக்கற அழகைப் பார்த்தாலே யாரும் மனசைப் பறிகுடுத்துடுவர்கள். அப்படி ஒரு அழகிய திருக்கோலத்தோடே வந்தீர். ஆனா நான் மனசைப் பறிகுடுக்கறதா இல்லே. நீர் அங்கேயே நில்லும், என்று பரகால நாயகி சொல்லுவதாக ‘காதில் கடிப்பிட்டு’. நம்மாழ்வார் ஊடினது ‘மின்னிடை மடவார்கள்’. அதே குலசேகர ஆழ்வாரும் ‘ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்’ன்னு ஊடினார். அதனால ஊடல் திறம்ங்கறதுக்காக் இந்த விசயம் பார்த்தோம். இப்படி பல பத்துப் பத்துப் பதிகங்களாக நம்மாழ்வார் 27 பதிகங்களில் நாயகி பாவத்தில் பாடியிருக்கிறார். திருமங்கையாழ்வாரும் பல திவ்யப்பிரபந்தகளில், ஆறு திவ்யப் பிரபந்தங்களுக்குள்ளே, பெரிய திருமொழியிலாகட்டும், திருநெடுந்தாண்டகத்திலாகட்டும், இந்த ரெண்டு இடத்திலதான் பிரதானமா நாயகி பாவத்தில் பாடியிருக்கார். திருமங்கையாழ்வாருக்கு ஒரு வேறுபாடு என்னன்னா, தாய்ப்பாசுரமும், மகள்ப் பாசுரமும் ஸ்பஷ்டமா இருக்கும். ஆனா தோழிப் பாசுரம் ஸ்பஷ்டமா இருக்காது. ஆனா இந்த மகள் பாடறதப் பார்த்தா ஒரு தோழி இருந்திருந்தாத்தான் பேசியிருக்க முடியும். நாம யூகிச்சுக்கணும். இப்ப நான் பேசறேன்னு வச்சுக்கங்கோ, நான் தனியா உட்கார்ந்து பேசறேன்னு நினைப்பேளா? நீங்க யாரோ உட்கார்ந்திருக்கவேதான நான் பேசிண்டிருக்கேன். அதேபோல திருமங்கையாழ்வார் பாட்டைப் பார்க்கறச்சே யாரோ தோழி பக்கத்தில இருந்திருக்கான்னு நமக்குப் புரியும். அவர் சொல்லியிருக்கற பாட்டு அப்படித்தான் இருக்கு. ஆனா தோழி பேசியிருக்கறது பாட்டிலே இல்லே. இப்போ தோழிப்பாட்டாக அதிலே இருக்கணுமோல்லையோ? அந்த மாதிரி அதிலே இல்லே. அதனால் நம்மாழ்வாரிடத்திலே மூன்று பாவனையும் ஸ்பஷ்டம். திருமங்கையாழ்வாரிடத்திலே ரெண்டு பாவனை. அதிலே திருநெடுந்தாண்டகங்கிறது ரொம்ப ஆச்சர்யமான பத்துப் பாசுரம். மொத்தம் முப்பது பாட்டு அதிலே. அதில முதல் பத்துப் பாசுரங்கள் ஞான பாவனையோட பாடிட்டார். அடுத்த பத்து தாய்ப்பாசுரமாகப் பாடறார். கடைசிப் பத்து மகள் பாசுரமாகப் பாடுகிறார். இந்தத் தாயர் பெண்ணைப் பார்த்து வருத்தப்டறா.
(திருநெடுந்தாண்டகம் – 11) கட்டுவிச்சியைக் கூப்பிட்டு வந்துட்டு, கடல் வண்ணார் இது செய்தார். யார் இந்த மாதிரிப் பண்ணியிருக்க இந்தப் பெண்ணை? மூர்ச்சையாகி விழறாளே, மயக்கமாக விழுந்துட்டாளே. பட்டுடுக்கும் – இந்த சின்னப் பெண், பரகால நாயகி, பட்டை எடுத்து உடுத்தி உடுத்திப் பார்த்துக்கறாளாம். பாவாடை இடுப்புல நிக்கவே மாட்டேங்கறது இன்னும். அயர்த்திரங்கும் – ஆனா அந்தப் பட்டைக் கட்டிக்கறதுக்குள்ள ஆயாசம் ஏற்பட்டுக் கீழே விழுந்துடறா. பாவை பேணாள் – பொம்மை இல்லாட்டா முன்னாடித் தூங்கவே மாட்டா. இப்போ பெருமான் இல்லேன்னவுடனே என்ன பொம்மை வாங்கிக் குடுத்தாலும் பிடிக்கறதில்லே. எட்டுணைப் போதென் குடங்கால் இருக்ககில்லாள் – என் மடியிருந்தாத்தான் முன்னாடி என் பெண் தூங்குவள். இப்போ என்னமோ தெரியலே, என் மடியிலே அழுத்தி வைச்சாக்கூட தூங்க மறுக்கிறாள். மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை – இந்தப் பெண்ணை யார் இப்படி செய்துட்டார்ன்னு கண்டுபிடிக்கறதுக்காகக் கட்டுவிச்சியைக் கூப்பிட்டா. கட்டுவிச்சிதான் குறத்தி. அவள் வந்து பார்த்து, யாருமில்லே, கடல்வண்ணார் இது செய்தார். கடல் வண்ணன்னா, நாராயணன் கடல் வண்ணனோல்லையோ? கடல்வண்ணனே பண்ணிட்டா அப்புறம் யார் காப்பாத்துவா? பூதப்பிரேதங்கள் பிடிச்சிருந்ததுன்னா பகவானிடத்திலே போய்க் கேட்கலாம். பகவானே பிடிச்சிண்டு இருக்காரோல்லையோ. இதிலே யாரும் மாத்தறதுக்கு வழி கிடையாது. தாயே, நல்லவேளை இந்தப் பெண்ணுக்கு இந்த வியாதி பிடிச்சதேன்னு சந்தோசப் பட்டுக்கோன்னுட்டாள் அவள். அப்படியா, வியாதி பிடித்தா துக்கமில்லையான்னா, இது உற்ற நன்னோய் இது தேறினோம். இந்த நோய்தான் பக்தின்னு பேர். இது வருமா, வருமான்னுதான் பெரிய பாகவதர்களெல்லாம் பிரார்த்திக்கிறார்கள். இது உன் பெண்ணுக்குத் தானே வந்துருக்கு. கவலைப்படாதேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாள் அவள். அதனாலே பத்துப் பாசுரங்களாலே தாய் பாவனையிலேயே பாடி வந்தார்.
(திருநெடுந்தாண்டகம் – 12) என்று ஆச்சர்யமா தெரிவித்தார். ஆக இந்தப் பத்துப் பாசுரங்களூம் தாய் பாவனையோடே பாடினது. கடைசிப் பத்துப் பாசுரம்தான் மகள் பாவனையோடே பாடினார். ரொம்ப அழகான பாசுரம்.
(திருநெடுந்தாண்டகம் – 21) பெருமாள் எப்படியாவது ஆழ்வாரைத் தன் வசப்படுத்திடனும்ன்னு வரனாம். ஆனா அவன் என்ன அழகைக் காட்டினாலும் நான் வசப்படறதா இல்லே, என்று பரகால நாயகி சொல்லிக் கொண்டு இருக்கிறாள். கடைசில பெருமாள் பாடிப் பார்த்தாராம். இவ என்ன பண்ணாலும் வசப்பட மாட்டேங்கறா. பாட்டுக்குக் கல்லும் இரங்கும், பேயும் இரங்கும்ங்கிறா. பரகால நாயகி இரங்கமாட்டாளா? அப்படிங்கறதுக்காக நைவளம் ஒன்றாராயா நம்மை நோக்கா – நைவளம்ன்னா நட்டபாடை நாட்டக்குறிஞ்சி ராகம். நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் செய்வளவில் – பெருமான், ஒண்ணும் இந்தப் பெண்ணை ஏமாத்தறதுக்கு முடியலே. வசப்பட மாட்டேங்கறா. நாம வேணா அவளுக்குத் தாசன்னு சொல்லிடுவோம், அப்படின்னு அவன் பண்றதுக்குள்ளே, என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய – என் மனசும் கண்ணும் அவனிடத்தில போய்டுத்து தோழி. இத்தனை நாளும் அவனைப் பார்த்தா திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சிட்டிருந்தேன் பார், நானும் நிறையும் இழந்தேன் – அத்தனையும் பகவானிடத்தில் பறிகொடுத்தேன்னு திருநெடுந்தாண்டகத்திலே சாதித்தார். அது கடைசிப் பிரபந்தம் திருமங்கை ஆழ்வாரது. இருக்கறதுல பிரசித்தி பெற்றதுன்னா சிறிய திருமடல், பெரிய திருமடல். இந்த ரெண்டு பிரபந்தமும் திருமங்கையாழ்வார் முழுக்க முழுக்க மடலெடுத்ததே. நம்மாழ்வாரானும் ஒரு பத்துப் பாசுரத்தில எடுக்கலாமான்னு பார்த்தார். ஆனால் திருமங்கையாழ்வார் இரண்டு பிரபந்தங்களாலே. சிறிய திருமடலாலே,
ஆழ்வார் எவ்வளவு தைரியமாப் பேசிட்டார் இந்த நாயகி பாவத்திலேன்னா, அறம் பொருள் இன்பம் வீடுன்னு நாலு புருஷார்த்தம்ன்னு சொல்றாளே, பொய். வீடுன்னு ஒரு புருஷார்த்தம் கிடையவே கிடையாது. இருக்கறதே காமம்தான் புருஷார்த்தம். அதைத்தான் இந்தப் பிரபந்தத்திலே சொல்றார் ஆழ்வார் இப்போ. அறம், பொருள், இன்பம், வீடு இல்லே, மூனுதான். இப்பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே – புருஷார்த்தம் நாலுன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம். தர்ம, அர்த்த, காம, மோக்ஷம். ஆனா மோக்ஷத்தையே ஒத்துக்காம, காமமே மோக்ஷம்ன்னு ஆழ்வார் தெரிவிக்கிறார். ஏன்னா இது நாயகி பாவனையோட பாடறபடியாலே, வைதிக காமமேதான மோக்ஷமா இருக்கணும்? லௌகிக காமம் வேணா மோக்ஷமா இருக்காது. ஆனா ஆத்ம, பரமாத்மாவுக்குள்ள காமம் ஏற்பட்டால், அந்த வைதிக காமமேதான் மோக்ஷமென்று திருமங்கையாழ்வார் இந்த பிரபந்தத்தாலே சாதித்தார். இதிலே கடைசில வரிசையா திவ்யதேசப் பட்டியலே படிக்கிறார். ஒவ்வொரு திவ்ய தேசமாச் சொல்லி, ஒவ்வொரு திவ்ய தேசத்துக்கும் போயாவது இந்தப் பெருமானை அடைந்தே தீருவேன், என்று சிறிய திருமடலாகட்டும், பெரிய திருமடலாகட்டும், ரெண்டாலயும் திருமங்கையாழ்வார் பாடினார். கடைசிப் பிரபந்தமான திருநெடுந்தாண்டகத்தாலே பெருமானோடேயே கலந்தார், அனுபவித்தார்ங்கிறது சரித்திரம். இப்போ பராங்குச நாயகியும் சிலது பார்த்திருக்கோம். பரகால நாயகியும் சிலது பார்த்திருக்கோம். தோழிப்பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம். என்ன பாவனையில பாடினா? சம்பந்தம், உபாயம். பகவானுக்கும் நமக்கும் இருக்கிற சம்பந்தம் ஞாபகம் வந்தா தோழிப்பாசுரம். ஆறியிருக்கணும், சமாதானத்தோடே இருக்கணும், வரச்சே வருவர்ன்னு தோணினா, தாய்ப்பாசுரம். அடைந்து உடனே அனுபவிக்கணும்ன்னு தோணினா, மகள்ப் பாசுரம். ஓம், நமஹ, நாராயணாய, இந்த மூன்று சொற்களினுடைய அர்த்தமாகவே ஆழ்வார் இப்படித் தோழிப் பாசுரமாய், தாய்ப் பாசுரமாய், மகள்ப் பாசுரமாய் பாடினார்ங்கிரது சம்ப்ரதாயம். (முற்றும்) -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston) TrackbacksThe trackback URL for this entry is: http://kaatru.spaces.live.com/blog/cns!8A3636B33FA87F5E!751.trak Weblogs that reference this entry
|
|
|