| sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists | Help |
|
June 25 நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 2முந்தைய பாகம் – பாகம் 1 ஆழ்வார் நாயகி பாவத்தில பாடறார்ன்னா, அதற்குள்ள பல பேதங்கள் உண்டு. வெறும பெண் பாவனையில அவர் பாடிடுறதில்லே. அதிலே மூன்றாகப் பிரிச்சுக்கிறார்கள். தாய்ப் பாசுரம், தோழிப் பாசுரம், மகள் பாசுரம்ன்னு மூன்று. மகள் பாசுரம்தான் தலைவி. யார் காதலியோ அவள். பகவான்தான் காதலன், நாயகன். நாயகி, நம்மாழ்வார். நம்மாழ்வார் நாயகின்னா அவருக்குப் பேர் மாறிப் போய்டும். அவருக்கு ’பராங்குச நாயகி’ன்னு பேர் வரும். இதே திருமங்கையாழ்வாருக்கு நாயகி பாவம்ன்னு வச்சுக்கங்கோ, அவருக்குப் ’பரகால நாயகி’ன்னு பேர் வரும். ஏன்னா, நம்மாழ்வாருக்குப் பேர் ’பராங்குசர்’. அவருடைய பாவனை மாறிப் பெண் பாவனை வருதோல்லையோ? அப்ப பராங்குச நாயகி. திருமங்கையாழ்வாருக்குப் பேர் பரகாலன். அவருடைய பாவனை மாறி பெண் பாவனை வருதோல்லையோ? அதனால பரகால நாயகின்னு பேர். அப்போ பராங்குச நாயகி, பரகால நாயகி. இந்த ரெண்டு பேரோட பிரபந்தங்கள் ரொம்பத் தெளிவா இருக்கு. இதிலே குழப்பமே இல்லே. இதைத் தவிர இன்னும் ரெண்டு ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். குலசேகர ஆழ்வாரும் பாடியிருக்கார். பெரியாழ்வாரும் பாடியிருக்கார். குலசேகரர் பாடினதுல ஒரு வேறுபாடு இருக்கு. பெரியாழ்வார் பாடினதுல ஒரு வேறுபாடு இருக்கு. மத்த ரெண்டு பேரும் பார்க்கறச்சே, நாயகியா தங்களை வச்சுனுட்டா, பகவானை நாயகனா வச்சுட்டா, பாடிட்டா. ஆனால் பெரியாழ்வார் அப்படி அல்ல. தன்னை யசோதையா வச்சிண்டு, பகவானைக் குழந்தையா நினைச்சினுட்டார். அப்போ அது தாய் பாவனை. தாய்ங்கிறது இங்க, பகவானுக்கே தாய். ஆனா நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாசுரங்களில் தாய்ப் பாசுரம்ன்னு சொன்னது, நாயகியான பெண்ணினுடைய தாயார். அதேபோல் காதலியினுடைய தோழிப் பாசுரம் மற்றும் காதலியினுடைய பாசுரம். ஆனா பெரியாழ்வார் அப்படிச் சொல்லலை இப்போ. கண்ணனையே தன் குழந்தையா நினைச்சினுட்டார். யசோதை எப்படி தொட்டிலிட்டு இருப்பளோ, தாலாட்டுப் பாட்டு பாடியிருப்பளோ, பாலூட்டி இருப்பளோ, சோறு ஊட்டிவிட்டிருப்பளோ, குளிப்பாட்டி விட்டிருப்பளோ, பூச்சுட்டி விட்டிருப்பளோ, என்னென பண்ணியிருப்பளோ, பத்துப் பத்துப் பாட்டா பெரியாழ்வார் பாடிட்டார். இதுல ‘சீதக் கடலுள் அமுதன்ன தேவகி’ங்கிற பதிகத்தில இருந்து ஆரம்பம். கண்ணன் பிறந்த உடனே தொட்டில்ல இட்டுட்டா. ஊர்க்காரார் எல்லாரையும் கூப்பிட்டு, இதோ கண்ணனைப் பாருங்கோன்னு, அவன் திருவடியிலேர்ந்து ஓரோரு அங்கமா காட்டிண்டு வராளாம். யசோதை எல்லாருக்கும் காட்டறா. பக்கத்துல இருக்கிற வயசானவாளுக்கெல்லாம் கவலை. குழந்தையோ இவ்வளவு அழகா இருக்கு. ஊர்ல இருக்கறவாள எல்லாம் நீ கூப்பிட்டுக் கூப்பிட்டு காட்டிண்டிருந்தியானா, எல்லார் கண்ணும் ஒன்னா இருக்குமா? ஒரு கண்ணு நல்லாயிருக்கும், ஒரு கண்ணு நல்லா இருக்காது. குழந்தையை ஜாக்கிரதையா வச்சிக்கறத விட்டுட்டு இப்படி எல்லாரையும் பார்க்கச் சொல்றியேன்னு வயசானவா கோவிச்சுக்கறா. இந்தக் குழந்தைக்கு ஒன்னுமே வராது. இது அப்பேர்ப்பட்ட குழந்தையா இருக்குன்னு யசோதை எல்லாருக்கும் காட்டிண்டு இருக்கா. அதனாலே யசோதை பாவனையிலேயே பாடினது. பிள்ளைத் தமிழ்ன்னு கேள்விப்பட்டிருக்கீளோல்லையோ? தமிழ் இலக்கியத்துல ஒரு வகை. பிள்ளைத் தமிழ்ங்கறது குழந்தைகள் என்னென்ன பண்ணுமோ, அத்தனையும் பாடுவதுதான் பிள்ளைத்தமிழ். அதிலே இனிப் பாட்டு மிச்சம் இருக்க முடியாது. அப்படித்தான் பெரியாழ்வார் பாடினார். கண்ணன்னு ஒருத்தரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும்ன்னால், பெரியாழ்வாருடைய யசோதை பாவனை பாசுரத்தைப் படிக்காமல், என்ன கண்ணனைப் பத்திப் புராணத்தில படிச்சாலும் நாம தெரிஞ்சுக்கவே முடியாது. ஏன்னா புராணத்தில ரிஷிகள் பாடியிருக்கறதெல்லாம் மறுபடியும் ஆண் பாவனை. எவ்வளவு பாடிட முடியும் அவாளாலே? ஆணா இருந்துண்டு எப்படிப் பார்க்க முடியுமோ, அவ்வளவுதான் பாட முடியும். ஆனா ஒரு பெண் தன் குழந்தையைப் பார்த்தாப்ல ஆணால பார்க்கறதுக்கே முடியாதோல்லையோ? அதனால பெரியாழ்வார் பார்த்தார். மறுபடியும் என் பாட்டு ரிஷிப்பாட்டா இருக்கறதுக்கு நான் விரும்பலே. யசோதை எப்படியெல்லாம் அனுபவிச்சிருப்பளோ அப்படி எல்லாம் தானும் பாட வேண்டுமென்று ’பெரியாழ்வார் திருமொழி’யில பாடினார். இது ஒரு பக்கம். மற்றொரு பக்கத்துல குலசேகராழ்வார். அவரொரு தனிச்சிறப்போட பாடினார், தேவகியாகத் தன்னை நினைத்துக் கொண்டு. பத்து வருஷம் தேவகி கிருஷ்ணானுபவத்தை இழந்துட்டாளோல்லையோ? மதுரைப் பட்டணத்தில தேவகிதான் கண்ணனைப் பெற்றாள். ஆனா பெத்துக் குடுத்ததோட சரி. வளர்க்கற பாக்யம் அவளுக்கு கிடைக்கவே இல்லே. ஏன்னா அன்னைக்கு ராத்திரியே கண்ணன் கிளம்பி யசோதையினுடைய பவனத்துக்குப் போய்ட்டார், அந்தப் பக்கம் கோகுலத்துக்குப் போய்ட்டார். வளர்க்க முடியலே. பத்து வருஷம் கழிச்சு, கம்சனைக் கொன்னுட்டு, தேவகியையும் வசுதேவரையும் சேவிக்கறதுக்காக கண்ணன் ஓடி வரார். வந்த சமயத்தில தேவகி கண்ணனைக் கட்டிண்டு அழ ஆரம்பிச்சா. பத்து வருஷமா எல்லா பாக்யத்தையும் இழந்து போய்ட்டேன். எனக்கு மொத்தத்தையும் இப்போ காட்டுன்னா அவள். என்ன காட்டணும்ன்னு பத்து வயசு கண்ணன் கேட்கறார். நீ தவழ்ந்தது, நீ குளிப்பாட்டினா வர மாட்டேன்னு சொன்னது, நீ பூச்சூடிக் கொண்டது, காளிங்கனை முடித்தது, கோவர்த்தனோர்த்தனம் பண்ணினது, வெண்ணெய் திருடினது, கட்டுப்பட்டது, மொத்துப்பட்ட்து, எல்லாம் பார்க்கணும். சொன்னா, வரிசையா ஒன்னொன்னா திரையில ஓடறாப்ல கண்ணன் காட்ட ஆரம்பிச்சுட்டார். பத்து வருஷமா தான் என்னென்ன அனுபவங்களை கோகுலத்தில குடுத்தானோ, அது அத்தனையும் தேவகிக்குக் காட்டிண்டு வரார். அப்போ அவள் கேட்கறா, நீ பாலுண்டாயாமே? அதை என்னிடத்தில நீ பாலுண்ணனும், எனக்குக் காட்டனும்ன்னு கேட்கறா. வயசு கண்ணனுக்குப் பத்து. தேவகி கடைசிக் குழந்தை பெத்து வருஷம் பத்து ஆச்சு இப்போ. அவளுக்கு அப்போ பால் சுரந்தது, கண்ணன் குடித்தான்ங்கிறதுதான் சம்ப்ரதாயம். பராசர பட்டர்ன்னு ஆச்சார்யர் இருந்தார். அவர் சிஷ்யர் நஞ்சீயர். அவர் போய் ஆச்சார்யனிடத்தில கேட்கறார், ’இது நம்பத் தகுந்ததா இல்லையே. பத்து வருஷம் ஆச்சே குழந்தை பெத்து அவள். அவளுக்குப் பால்தான் சுரக்குமா? இல்லே பத்து வயசுப் பிள்ளைதான் பால்தான் குடிக்குமா? இது நம்பறாப்ல இல்லையே’ன்னு சிஷ்யன் ஆச்சார்யனைக் கேட்கறார். அப்போ அந்த ஸ்வாமி பதில் சொல்றார், ’நீ நினைச்சிண்டு பேசறதெல்லாம் லௌகீக காமத்தைப் பத்தி. ஆனா நாம பேசிண்டிருக்கறது வைதீக காமத்தைப் பத்தி’. வேதத்தில இருக்கிற காமம் உண்டு. நாம லோகத்தில ஆண், பெண் காமம்ன்னு பார்க்கிறோமோல்லையோ? அது வேதத்திலயும் உண்டு, ஆழ்வார் பாசுரத்திலயும் உண்டு. ஆனா இந்தக் காமம் உடல் ரீதியான காமமே அல்ல. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உண்டான பரிமாற்றம். ரெண்டு ஆத்மாக்கள். பரமாத்மா ஒருத்தர், ஜீவாத்மா ஒருத்தர். கண்ணன் ராசக்கீரீடை பண்ணினார்ன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம். அப்போ பல பெண்கள், ஏற்கனவே கல்யாணம் பண்ணின பெண்களெல்லாம் கண்ணனோடே நாட்டியம் ஆடியிருக்கான்னு கேள்விப்படறோம். இதை சுகாச்சார்யாரிடத்தில பரீக்ஷித்தே கேட்டான். ‘இது ஒன்னும் நியாயமாப் படலையே எனக்கு. தர்ம சம்ஸ்தாபநாத்தார்ய ஸம்பவாமி யுகே யுகேன்னு கண்ணனே சொல்லிட்டு, அதர்மத்தைப் போய் அவர் பண்ணலாமா’ன்னு பரீக்ஷித்து சுகரிடத்திலே கேட்டான். அப்போ அவர் சமாதானம் சொல்றார், ’கண்ணனுக்கு வயசு பத்தே ஆகலே கோகுலத்தில இருக்கறச்சே. மத்த குழந்தைகளுக்கெல்லாம் வயசு அஞ்சு. பத்து வயசுப் பிள்ளை, அஞ்சு வயசுக் குழந்தையோட என்ன காமத்தை அனுபவிச்சுற முடியும்? முதல்ல நீ புரிஞ்சு பேசறியா’ன்னு சுகாச்சார்யர், பரீக்ஷித்தினிடத்தில கேட்டார். அப்புறம் அவர் பதில் சொல்றார், ’இந்தப் பரிமாற்றமெல்லாம் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் நடக்கறதே தவிர, இதில சரீர ரீதியான தொடர்பே கிடையாதுன்னு புரிஞ்சுக்கோ’, என்று ஆச்சார்யன் சிஷ்யனுக்குச் சொல்லிண்டிருக்கார். அதே நிலையை நாம் இங்கே வச்சுப் பார்க்கணும். தேவகிக்குப் பால் சுரந்ததே, கண்ணன் குடித்தானேன்னா, நாம நினைச்சிண்டிருக்கற லோகத்துல இருக்கிற காமம் இது அல்ல. இது வைதீக காமத்தோடே, பகவான், அவரிடத்தே ஒரு சிஷ்யை பிரார்த்திக்கறச்சே பகவான் அனுபவத்தைக் குடுக்கிறார்ன்னுதான் நாம் கொள்ள வேண்டும். குலசேகரர் ஒரு பாசுரத்தில தெரிவிக்கிறார்.
(பெருமாள் திருமொழி – 7.6) - என்று பெருமாள் திருமொழியில் ஒரு ஆச்சர்யமான பாசுரம். கண்ணன் ஆங்காங்கு புழுதி அளைவராம். ஊர்ல முழுக்கப் புழுதி ப்ருந்தாவனத்துலே. எல்லா இடத்துலயும் கையை வச்சு அளைஞ்சுட்டு, தவழ்ந்துட்டு, நேரே திரும்பி வந்து, யசோதை நல்ல புடவையா கட்டிண்டிருந்தா அதை வந்து கட்டிண்டு அழுக்காக்கிடுவர். மண்ணில் செம் பொடி – ஊர்ல எல்லாம் செம்பொடி, சிகப்பு வேறே, வெறும் மணலா இருந்தாக்கூட தேவலை. செம்மண், செம்மண்ணோட ஓடிவந்து தாயாரைக் கட்டினுட்டா, அப்போ புடவை முழுக்க வீணாயிடறதோல்லையோ? இப்போ தேவகி என்ன ப்ரார்த்திக்கிறாள்ன்னா, அப்படி அவன் கட்டிண்டு யசோதைக்கு புடவை வீணாகிற பாக்கியம் கிடைச்சதாமே, எனக்குக் கிடைக்கலையே. அவ கேக்கறது அப்படி இப்போ. ஏன்னா ஒரு குழந்தை வந்து கட்டிண்டதுக்காக புடவை வீணாப் போச்சுன்னு யாராச்சும் நினைச்சுப்பாளா? குழந்தை வந்து கட்டிக்கலையேங்கிற வருத்தம் இருக்குமோல்லையோ? மேலே சொல்லுகிறாள் தேவகி, வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – குழந்தைக்குச் சோறு ஊட்டிண்டு இருக்கா யசோதை. அப்போ அந்தப் பாத்திரத்தில தன் கையை வச்சு வச்சு அளைவராம். அதை எடுத்து கண்ணனுக்கு வாயில சோறு ஊட்டிடுறா. பக்கத்தில வழியறது. இவளுக்கு ஆசை, தன் குழந்தை எல்லாத்தையும் சாப்பிட்டுடணும்னுட்டு. இவளுக்கோ ரொம்ப நாளா குழந்தை பெறலே. ஊர் முழுக்க வெண்ணெயும் பாலும். எல்லாத்தையும் அது தலையிலேயே அடைச்சுருவோம், அப்படின்னு வாயில போட்டா அது வழியறது இந்தப் பக்கம். யசோதை தனித்து சாப்பிடவே மாட்டாளாம். இங்க வழிஞ்சத எடுத்து எடுத்து தான் சாப்பிட்டே பசி ஆறிடுவளாம். அப்போ அந்தக் குழந்தையினுடைய பிரசாதமா, கிருஷ்ணப் பிரசாதமா கிடைச்சதாகவும் ஆயிடுத்து. தன் குழந்தையினிடத்தில அன்பால தான் சாப்பிட்டதாகவும் ஆயிடுத்து. அதைப்போல உன் வாயில வழிஞ்சத எடுத்து சாப்பிடற பாக்யம் எனக்குக் கிடைக்கலையேன்னு தேவகி அழறா இப்போ. இந்த பாக்யம் எல்லாம் யசோதைக்குக் கிடைச்சுடுத்தே. நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே. இந்த வைபவம் எல்லாம் நந்தகோபாலனுக்குக் கிடைச்சுடுத்து. ஒன்னுகூட உன்னைப் பெற்ற வசுதேவனுக்குக் கிடைக்கலையோல்லையோ? நாங்கள் இழந்து போனோமேன்னு தேவகி புலம்பிய புலம்பல். எதுக்குச் சொல்ல வந்தேன்னா, குலசேகர ஆழ்வார் ஒரு பெரிய ஷத்ரியர். அவர் ஒரு ராஜா. ராஜா குலசேகரருக்குப் போய், ஒரு தாயார் குழந்தை அனுபவத்தை இழந்தது தோணி, ஒரு ஷத்ரிய ராஜா எப்படி இருப்பர்ன்னு தெரியும். அவர் கையில வில்லுதான் பிடிக்கத் தெரியும், கத்திதான் பிடிக்கத் தெரியும், சண்டைதான் தெரியும். அப்படி இருக்கறவர் போய் ஒரு தேவகி என்னென்ன புலம்பியிருப்பளோ அதைப் புலம்பியிருக்கணும்ன்னால் அப்போ இந்த நாயகி பாவம் அவா பேர்ல எவ்வளவு தாக்குதலை ஏற்படுத்தி இருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும். இதை அவர் குலசேகரரா இருந்து பாடியிருக்க முடியுமா? நிச்சயமா முடியாது. குலசேகரரா இருந்தா என்ன பாடுவர்? இராமனுக்கு யுத்தத்தில சகாயம் வேணும்ன்னா நான் வரேன்னுவர். அது வேணா சொல்லிண்டு இருக்கலாமே தவிர, இராமன் இராவணனைக் கொல்லப் போறச்சே ஆளில்லேன்னா நான் வேணா ஜெயிச்சுத் தரேன்னு சொல்லலாம். இவ்வளவுதான் பாடமுடியுமே தவிர, குழந்தை கண்ணனிடத்திலே பாலூட்டினதோ, சோறுண்டதையோ பாட முடியாது. அதனால குலசேகரர் தேவகி புலம்பிய புலம்பலாகப் பத்துப் பாசுரம் பாடினார். இன்னொரு முக்கியப் பத்துப் பாசுரம் அவர் பாடினார். கௌசல்யையாத் தன்னை நினைச்சிண்டார். நினைச்சினுட்டு திருக்கண்ணபுரம் சவரிப் பெருமாளைப் போய் சேவிச்சார். அந்தப் பெருமாளை எப்படி இராமனை தொட்டில்ல போட்டு ஆட்டியிருப்பளோ, அதப்போல தான் தொட்டிலிட்டு தாலாட்டுப் பாடிட்டார்.
- என்று தொடங்குகிற பத்துப் பாசுரங்கள்.
- (பெருமாள் திருமொழி – 8.6) - என்று பத்துப் பாசுரங்களிலும் தாலேலோ, தாலேலோன்னு பாடினார். இதுவும் தாய் பாவனை. பெரியாழ்வார் தாய் பாவனை யசோதையா. ஆனா இந்த இடத்தில தாய் பாவனை, கௌசல்யையா. கௌசல்யை இராமனை எப்படித் தொட்டிலிட்டுப் பாடியிருப்பளோ, அதைப்போல பாடினார். குலசேகர ஆழ்வாருக்கு இராமன் பேர்லதான் அதீதப் ப்ரீதி. அவர் வாழ்ந்ததே இராமனுக்காக. பெருமாள் திருமொழின்னு அவர் பாடியிருக்கிற பிரபந்தத்துக்குப் பேர். பெருமாள்ன்னு இராமனுக்குத் திருநாமம். அவனைப் பத்தியே பாடினனாலதான் பெருமாள் திருமொழின்னு இந்தத் திவ்யப் பிரபந்தத்துக்கே பேர் வந்தது. இது குலசேகரரிடத்திலேயும், பெரியாழ்வாரிடத்திலேயும் இருந்த மாறுதல். தாய் பாவனையில பாடினா, அப்படிங்கறதுக்காக. ஏன்னா சாதாரணமா நாயகி பாவம்ன்னால், நாயகியாத்தான் பாடணும். ஆனா இந்த இடத்தில மட்டும் தாய்ப் பாசுரமா பாடியிருக்கா. முக்கியமா நாம பார்க்க வேண்டியது, பராங்குச நாயகி எப்படி பாடியிருக்கா? பரகால நாயகி எப்படி பாடியுள்ளார்? இவா ரெண்டு பேருக்கும்தான் என்னைக்குமே போட்டி, ஆரோக்யமான போட்டி. சண்டையில்லே. பத்துப் பத்துக்கள் பாடியிருக்காரே. இதில என்ன நாயகி பாவத்தோட பாடுவர்ன்னா, அதை நாம சில வர்க்கங்களாப் பிரிச்சுனுடலாம். ஒன்று, விரக தாபத்திலே துடிப்பர்கள். அது ரொம்ப முக்கியமான பதிகங்கள். விரக தாபம்ங்கிறது நாயகனை விட்டுப் பிரிந்து, அவனோட அனுபவம் கிடைக்காம நாயகி துடிக்கிறாளோல்லையோ, இந்த விரக தாபத்தில பாடுறது பல பாசுரம். தூது விடுதல் பல பாசுரம். நாயகன் எங்கேயோ இருப்பர். நாயகி எங்கேயோ இருப்பள். பறவைகளைப் பிடித்து நீ போய் என் விஷயத்தை பகவானிடத்தில சொல்லு, அப்படின்னு தூது விடறது ரெண்டாவது வகை. மூன்றாவது வகை, மடலெடுத்தல். மடலெடுத்தல்ங்கிறது அந்த நாள்ல இருந்த ஒரு வழக்கம். தமிழ் இலக்கியம் எப்படி இருந்ததுன்னு சொல்றேன், சம்ஸ்கிருத இலக்கியம் எப்படி இருந்ததுன்னு சொல்றேன். ஆழ்வார்கள் எப்படிப் பின்பற்றி இருக்காங்கிறதைச் சொல்றேன். நம்மாழ்வாரும் மடலெடுத்திருக்கார். திருமங்கையாழ்வாரும் மடலெடுத்திருக்கார். மடல் எடுத்தல் என்றால், மடல்ங்கிறது பனை மடல். பனை ஓலை இருக்கோல்லையோ, அதுல என்ன மடல் இருக்கோ அதை எடுத்துக்கணும். எடுத்துட்டு தான் யாரை ஆசைப்பட்டோமோ, அவனுடைய படத்தை வரைஞ்சுக்கணும். வரைஞ்சுட்டு, பனை மடலாலேயே ஒரு குதிரை பொம்மை கட்டணும். கட்டிட்டு, அந்தக் குதிரைக்கு மேலே ஏறி உட்கார்ந்துட்டு, பொம்மைக் குதிரை, அதை நாலு பிள்ளைகளைப் பிடிச்சு இழுக்கச் சொல்லணும். அந்த ஊரில தெருத்தெருவா சுற்றி வந்து, நான் இன்னாரைக் காதலிச்சேன். ஆனா அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மறுத்துட்டார். அவரை இழந்து நான் இப்படித் துடிக்கிறேன்ங்கிறத அதுக்குரிய பாட்டைச் சொல்லிண்டே போகணும். எதுக்கு இதப் பண்ணுவாள்ன்னா, ஒருவேளை அவனுக்கே கண்ணுல பட்டு, ஓ, இவ்வளவு ஆசை இருக்கு போலருக்குன்னு அவனோ, அவளோ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலாம். இல்லே, ராஜா கண்ல பட்டுட்டு, ஏன் ஒழுங்கான பெண்ணைப் பிள்ளையோட கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்கறீள், அப்படினுட்டு ராஜா குறுக்க பூந்து சரி பண்ணி வைக்கலாம். இல்லே பெற்றோர்களுக்கே மனசு மாறி சரிபடுத்தி வைக்கலாம். இது எதானும் ஒன்று நடக்குமாங்கிற ஆசையிலதான் மடல் எடுப்பர்கள். இந்த மடல் எடுக்கறதை, நம்மாழ்வாரும் மடல் எடுத்திருக்கார், திருமங்கையாழ்வாரும் மடல் எடுத்திருக்கார். இவர் பிரபந்தம் அவர் பிரபந்தம் ரெண்டுமே சொல்றேன். அப்போ விரக தாபத்தில் பாடுவது, தூது விடுவது, மடலெடுப்பது, அடுத்து அனுகாரம் பண்ணுவது. அனுகாரம்ன்னா, பகவான் இருக்க மாட்டார். ஆனா அவர் இல்லேங்கற ஆற்றாமையைத் தனிச்சுக்கணுமோல்லையோ? விரகதாபத்தைத் தணித்துக் கொள்ளுவதற்கு என்ன பண்ணலாம்? அவர் இருக்கறாப்லயே நினைச்சுக்கறது. அப்போ பாட்டு அவர் பக்கத்தில இருக்கறாப்ல நினைச்சிண்டு பாடிடுவா. இன்னும் ஒரு படி மேல போச்சுன்னா, தங்களையே அவனா நினைச்சிண்டு பாடிடுவா. தானேதான் பகவான்னு நினைச்சுக்கறது. அவர் என்னென்ன சேஷ்டிதமெல்லாம் பண்ணியிருப்பரோ, அதெல்லாம் தானே பண்ணினதுன்னு நினைச்சுக்கறது. இதுக்கு அனுகாரம்ன்னு பேர். அடுத்த வகை, ஐந்தாவது வகை, ஊடல் வகை. ஊடல்ங்கிறது பொய்க்கோபம். ’ப்ரநய ரோஷம்’ன்னு அதுக்குப் பேர். ப்ரநயம்ன்னால் காதல், அன்பு. ரோஷம்ன்னாக் கோபம். அன்பின் வெளிப்பாடான கோபம். இது ப்ரநய ரோஷம். நிஜக்கோபமில்லே. ப்ரநய ரோஷத்துக்கு மட்டும் இன்னைக்கும் திவ்யதேசங்களிலே நடக்கறது. அன்னைக்கு ஆழ்வார்கள் எப்படி ப்ரநய ரோஷத்தோட பாடினார்களோ, இன்னைக்கும் அதுக்கு ‘மட்டையடி உத்சவம்’ன்னு கோயில்களிலே பேர். பங்குனி உத்திரத்தன்னிக்கு காத்தால போனீள்ன்னா இன்னைக்கும் அந்த உத்சவம் ஸ்ரீரங்கத்தில நடக்கறது. நம்பெருமாள் எட்டு வீதி எழுந்தருளிட்டு கோவிலுக்குள்ள வருவர். நாச்சியார் சன்னிதி வடக்கு வாசல்லே. நாச்சியார் சன்னிதிக்குள்ள போறதுக்காக பல்லக்கோட வருவர். பெரிய கதவை தடால்ன்னு சாத்திடுவா. சாத்தின உடனே பெருமாளால உள்ள போக முடியாது, பல்லக்கோட திரும்ப வருவர். இன்னொருதரம் போகப் பார்ப்பர், கதவை சாத்திடுவா. இன்னொருதரம் போகப் பார்ப்பர், கதவை சாத்திடுவா. அதுக்கப்புறம் என்ன நடந்தது பெருமாளுக்குத் தெரியாது, வெளிய நின்னுடுவர். நடுவுல அரையர் ஸ்வாமி, அவாளுக்கு ’விண்ணப்பம் செய்தார்’ன்னு பேர். தாளம் வைத்துக் கொண்டு ஆழ்வார்களுடைய பாசுரங்களை அவாதான் பாடுவா. அவா போய்ப் பெருமாள்கிட்ட என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு தாயார் சன்னிதியில போய்ச் சொல்லுவா. தாயார்கிட்ட உமக்கு என்ன கோபம்ன்னு கேட்டுகிட்டு பெருமாள்கிட்ட வந்து சொல்லுவா. அப்போ தாயார் பெருமாள்கிட்டே ’நாம் இனி இவரை மன்னிக்கிறதா இல்லே. எங்க போய்ட்டு வந்தார்ன்னு கேளு’ன்னு தாயார் சொல்லுவா. அப்போ பெருமாள், ‘எங்க போய்ட்டு வருவேன்? நான் எல்லாரையும், ஆஸ்ருதர்களை இரட்சிக்கறதுக்காக, ஹிரண்யகசிபுவைக் கொல்லணும், ஹிரண்யாட்சனைக் கொல்லணும், சிசுபாலனைக் கொல்லணும், இராவணனைக் கொல்லணும், எவ்வளவு வேலை இருக்கு. இதுக்காகத்தான் எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்தேன்’னுவர். ‘இருக்கட்டும், ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க எழுந்தருளியிருந்தார்ன்னு கேள்’. இந்தப் பங்குனி உத்திர உத்சவத்திலே இது ஒன்பதாம் உத்சவம். இப்ப சொல்றது ஒன்பதாம் திருநாள் அன்னிக்கு நடக்கிற உத்சவம். ஆறாம் திருநாள் அன்னிக்கு, பக்கத்துல உறையூர்ன்னு திவ்யதேசம். கமலவல்லி நாச்சியார்ன்னு கேள்விப்பட்டிருப்பீள். ரொம்ப ஆச்சர்யமான திவ்யதேசம். உறையூருக்கு இன்னொரு சிறப்பு, திருப்பாணாழ்வாருடைய அவதார ஸ்தலம். இந்த உறையூருக்கு நாச்சியாருடன் சேர்த்திக்காக இவர் போயிருப்பர். நம்பெருமாளுக்கு உறையூர் நாச்சியார் சேர்த்தி ஒருநாள். ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி, பங்குனி உத்திரத்தில ஒன்பதாம் திருநாள். சேரகுலவல்லி நாச்சியார், இப்ப குலசேகர ஆழ்வார்ன்னு சொன்னேனே, அவளுக்குச் சேரகுலவல்லின்னு ஒரு மகள். அந்த மகளை நம்பெருமாளுக்கு, திருவரங்கநாதனுக்குத்தான் கல்யாணம் பண்ணிக் குடுத்தார். அது ஸ்ரீராம நவமி அன்னிக்கு இன்னைக்கும் அவளோட சேர்த்தி நடக்கிறது. அதனால ஸ்ரீரங்கத்துல நம்பெருமாளுக்கு மூன்று தாயார்களோட சேர்த்தி, வெவ்வேறு நாட்களிலே. இது ஆறாம் திருநாளன்னிக்கு உறையூர் எழுந்தருளிட்டுத் திரும்ப வருவர். அப்போ நாச்சியாருக்குக் கோபம். அங்கு போயிருந்தீர், ஏன் போயிருந்தீர், வர வேண்டாம்ன்னு கோபித்துக் கொள்ளுவர். அப்போ பதில் சொல்லுவர், ‘அதுக்கப்புறம் எத்தனை வேலை இருந்தது எனக்கு. நீ என்னமோ என் உடம்பில ரத்தக்கறை தெரியறது, அப்படியே நகக்கீறல் தெரியறதே, புஷ்பத்தினுடைய தாதுக்களெல்லாம் உடம்புல தெரியறது, குங்குமப்பூ தெரியறது. இது எல்லாம் என்னத்துக்காகன்னு தாயார் கேட்பர். அப்போ பெருமான் சொல்லுவர், வழியில எத்தனையோ இராட்சசர்களையும், அசுரர்களையும் முடித்துவிட்டு, நாம் குதிரைநம்பிரான் பேரிலே ஆரோகணித்து உம்மைக் காணவேண்டுமென்ற வேகமான ஆதுரத்தோடே வந்தோம். எத்தனை பெண்களெல்லாம் பாரிஜாத புஷ்பம் குடுத்தா தெரியுமா? பிராட்டி பக்கத்தில இல்லாத அணிஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன். எத்தனை பேர் குங்குமப்பூ சமர்ப்பித்தா தெரியுமா? அவள் இல்லாமல் நான் அலங்காரமே பண்ணிக்கறதில்லேன்னு சொல்லிட்டு வந்தேன். அப்படி இருக்கறச்சே உனக்கு இந்தக் கோபம் கூடுமோ? ஏன் கண் சிவந்திருக்குன்னு கேட்டீரே? வெகு நாட்களாக இராக்ஷசர்களோட யுத்தம் புரிஞ்சுருக்கேன். கண் சிவந்தது. உம்மையும், உன் குழந்தைகளையும் இரக்ஷிக்கத்தானே இவ்வளவு பாடும் நாம் படறோம், என்று தாம் பண்ணினதெல்லாத்தையும் பெருமாள் சொல்லுவர். அரையர் ஸ்வாமி போய் எல்லாத்தையும் நாச்சியாரிடத்தில சொல்லிட்டு, கொஞ்சம் உள்ளம் இரங்கும் அவளுக்கு. ஆனாலும் சுலபத்துல ஏத்துனுட மாட்டா. அதுக்கப்புறம்தான் நடுவுல நம்மாழ்வார் விக்ரஹ ரூபத்தில இருக்கறார். அவர் குறுக்க வருவர். இவா ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டுருந்தா நமக்குன்னா ஆபத்து இப்போ? இவா சேர்ந்து இருந்தாத்தான் நம்மளை இரட்சிக்க முடியும். தாயாருக்கே பெருமாள்கிட்ட கோபம்ன்னா? பெருமாளுக்குக் கோபம் வந்தா தாயார்கிட்டப் போகலாம். தாயாருக்கே கோபம்ன்னா, அப்புறம் யார்கிட்டப் போறது? வேண்டாம், அனர்த்தத்தில கொண்டு போய் விட்டுடும்னுட்டு, நம்மாழ்வார் நேர பெருமாள்கிட்டப் போகனும், போக மாட்டார். தாயார்கிட்டப் போய்ட்டு, ‘அவர்தான் ஏதோ பேசிண்டிருக்கார்ன்னா, தேவரீர் கோபித்துக் கொண்டால் உலகம் தாங்குமா? நமக்காக தேவரீர் பொறுத்தருள வேண்டும்’, அப்படின்னு பிரார்த்திக்க, அப்ப நாச்சியார், அங்க பெரிய கோஷ்டி இருக்கும். ஆயிரக்கணக்கான ஜனங்கள் நின்னுண்டிருப்பா. ‘நம்முடைய பெரியன் நம்மாழ்வார் சொன்னதுக்காக இந்த நம்பெருமாளைப் பொறுத்தோம்’, அப்படின்னு தாயார் ஒத்துப்பள். அதுக்கப்புறம் நம்பெருமாள் சன்னிதிக் கதவைத் திறந்து உள்ளுக்குள்ள போய் மத்தியானம் ஒன்னரை மணிக்கு சேர்த்தி. ஒரே சிம்மாசனத்தில் தாயாரும், பெருமாளுக்கும் அன்னைக்குத்தான் சேர்த்தி நடக்கும். அன்னைக்கு இராத்திரிதான் இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்து கத்யத்ரேயம் சாதித்தார். ஏன்னா பிராட்டி பக்கத்தில இருக்கறச்சே சரணாகதி பண்ணினாதான் சுலபமா பலிக்கும். அதனாலதான் அன்னைக்குத் தேர்ந்தெடுத்து ஸ்வாமி பண்ணினார். அப்போ அன்னைக்கு நடந்ததுதான் பிரணயகலக உத்சவம். அதுக்கு மட்டையடி உத்சவம்ன்னும் பேர். மட்டையடி உத்சவம்ன்னா இந்தப் பெருமாள் உள்ள வரார் பாருங்கோ, வரச்செ சட்டி நிறைய தயிர், பால், வெண்ணெய் எல்லாத்தையும் இந்த நாச்சியார் சன்னிதிக்காரா வச்சுப்பா. வச்சுக்கிட்டு வரும் போது வீசி வீசி அவன் பேரில அடிப்பா. யாரெல்லாம் அந்தப் பல்லக்கைத் தூக்கிட்டு வராளோ, அவா அத்தனை பேரும் அதில் குளிக்க வேண்டியதுதான். பெருமான் பேரிலயும் அது படும். அங்க இருக்கற எல்லாருமே நனைஞ்சுட்டுத்தான் கிளம்பிப் போயாகணும். அப்ப அந்த பிரணய ரோஷத்துக்குத்தான் ஊடல்ன்னு பேர். பொய்க்கோபம்தானே, நிஜமான கோபம் அல்ல. அன்பின் வெளிப்பாட்டாலே, அன்பின் மிகுதியாலே பிறந்த கோபம். அந்தக் கோபம் முடிந்த பிற்பாடுதான் சேர்த்தி நடக்கும். அன்னைக்கு ஒருநாள் மட்டும்தான் ரெண்டு பேரும் ஒரே சிம்மாசனத்தில எழுந்தருளி இருப்பர்கள். மற்ற நாளெல்லாம் நம்பெருமாள் வேற சன்னிதிதான், தாயார் வேற சன்னிதிதான். அதனாலே பிரணய ரோஷ நிலையிலும் ஆழ்வார்கள் பாடுவர். பெருமானை வரலையே, வரலையேன்னு தூதுவிட்டுட்டு, அவன் வந்திருக்கச்சே கோவிச்சுனுடுவா. தூதுவிட்டுப் பறவை போய் பகவான்கிட்டச் சொல்லும். அவரும் சரின்னு அலை குலையத், தலை குலைய ஓடி வருவர். வந்துட்டுப் பார்த்தா இவர் உள்ளேயே விடமாட்டார், வாசல்லயே நிறுத்தி வச்சுருவர். அவர் ஒன்னும் போகல்லாம் மாட்டார். அவர் நின்னு எப்படி அனுகிரகிக்கணுமோ, ஆழ்வாரோடே சேர்ந்த பிற்பாடுதான் பெருமாள் புறப்படுகிறார். (தொடரும்) -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston) நாலாயிரத்தில் நாயகி பாவனை
ஆழ்வார்கள் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி அவதரித்தவர்கள். அதில் தலைவராக நம்மாழ்வார் இருந்தார். இவர்கள் பன்னிரெண்டு பேருக்குள்ளே ஒருத்தி, ஆண்டாள் மட்டும்தான் பெண்ணாகப் பிறந்தவள். மற்ற எல்லா ஆழ்வார்களுமே புருஷர்கள்தான். ஆனா அவர்களுக்குள்ள எப்படி நாயகி பாவத்தில பாசுரம் வந்தது? அவர்கள் எதற்காகப் பெண் பாவனைல பாடினார்கள்ங்கிறது ஒரு முக்கியமான விசாரம். அது ஏன்னு தெரிஞ்சுக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா அந்தப் பாசுரங்கள் எவ்வளவு நன்னாயிருக்கு, எவ்வளவு அனுபவிக்கிறாப்போலே இருக்குங்கிறதுதான் இன்னும் நமக்கு முக்கியம். பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், இவா பத்து ஆழ்வார்கள். இதிலே நம்மாழ்வாருக்கு ஒரு சிஷ்யர் இருந்தார், மதுரகவியாழ்வார்னு பேர். பெரியாழ்வாருக்கு ஒரு பெண் பிறந்தாள், ஆடி மாசம், பூர நட்சத்திரலே, ஸ்ரீவில்லிபுத்தூரில். ஆண்டாள்ன்னு திருநாமம். ஆக மொத்தத்தில பன்னெண்டு பேர். இதிலே ஒருத்தி மட்டும்தானே பெண்ணாகப் பிறந்தாள்? மற்ற எல்லாரும் ஆண் தானே? அப்படியே பாசுரங்களைப் பாடிடுறதுதானேன்னு நமக்குத் தோணும். ஆழ்வார்கள் லோகத்தில் பரப்ப வந்தது பக்தி நெறியை. பக்திங்கறது ஞானத்தினுடைய ஒரு பக்குவமான நிலை. பல சமயங்களீல் பக்தி முற்றித்தான் ஞானம்ன்னு நாம நினைச்சிண்டிருப்போம். அப்படி அல்ல. ஞானம் முற்றினால்தான் பக்தியே பிறக்கும். பக்திஸ்ச்ச ஞான விஷேஷஹா, அப்படின்னு அதை விளக்குகிறார்கள். பக்திங்கறதே ஞானத்தினுடைய ஒரு விஷேசமான தன்மை. ஞானத்தினுடைய முதிர்ந்த தன்மை. இதை பக்தின்னு சொல்லுகிறோம். பவ்யம் இருந்தால்தான் பக்தி வரும். பவ்யமா இருக்கறதுன்னா விநயமா இருக்கறது; நெகிழ்ந்திருத்தல்; நனைந்திருத்தல். இது இத்தனையும் இருந்தாத்தான் பக்தியே பண்ண முடியும். ஞானம்ங்கிறது வறட்டுத்தனமா நிறைய அறிவு பெற்று இருப்பது. பக்திங்கறது நேர் எதிரா இருக்கே? இதுவோ நனைஞ்சிருக்கறதா இருக்கு, நெகிழ்ந்திருக்கிறதா இருக்கு. ஆனா பல பண்டிதர்களை நாம பார்க்கிறோமோல்லையோ? ஒரேயடியா சமஸ்கிருத ஞானம் இருக்கும். தெரியாததே இருக்காது. பேசறதுக்கே கிட்டக்கப் போக முடியாது. அப்படிப்பட்ட பண்டிதர்களெல்லாம் ஞானவான்களா இருக்கட்டும். அப்போ பக்திங்கறது நேர் எதிரா? பாண்டித்யமே வேண்டாமா? ஞானம் வேற மார்க்கம், பக்தி வேற மார்க்கமான்னா, அப்படி அல்ல. ஞானமே பரிபக்குவமான நிலை அடைந்தால்தான் பக்தி ஆகிறது. என்னைக்குமே நமக்கே கொஞ்சம் இளரத்தமா இருக்குன்னு வச்சுக்கங்கோ. இப்பத்தான் 25 வயசு, 30, 35ன்னா, ரத்தம் வேகமாத்தான் இருக்கும். அப்போ நம்ம பேச்செல்லாமே வேகமாத்தான் இருக்கும். கொஞ்சம் நாளாக, நாளாக நம்ம பேச்சே மாறதோல்லையோ? நாமே 25 வயசுக்கு எப்படிப் பேசியிருப்போம்? இப்போ 50 வயசுக்கு எப்படிப் பேசறோம்ன்னு பார்த்தா மாறுதல் நமக்கே தெரியும். அப்போ வேகமா பேசியிருப்போம், அறிவு பூர்வமா பேசியிருப்போம். தர்க்க ரீதியாப் பேசியிருப்போம். இன்ன கேள்வி கேட்டு, இன்ன பதில் கிடைச்சாத்தான் சரின்னுவோம். ஆனா வயசாக, வயசாக அப்படி யாரும் வாதம் பண்ணிண்டு இருக்கறதாத் தெரியலே. இதுதான் உலகம். இதுதான்ங்கிறது தெரியறது. இதுல வாதம் பண்ணி பிரயோஜனம் இல்லே. இந்தப் பல விஷயங்களை நாம வயசானா தெரிஞ்சுக்குறோம். அப்போ சிறு வயசில் ஞானத்தின் அடிப்படையில் பேசினோம். வயசாக, வயசாக அனுபவத்தின் அடிப்படையில் பேசுகிறோம். ஞானத்தில பேசினதை விட, அனுபவத்தில் பேசுவது என்பது இன்னும் மெருகூட்டுகிறதோல்லையோ? அதனாலே முதல் நிலைங்கறது ஞானம். அது முதிர்ந்தாத்தான் அனுபவம். இது வாழ்க்கையில நாம நிச்சலும் பார்க்கிறது. அதேபோல சம்ப்ரதாயத்திலே, ஆன்மீகத்திலெ பார்த்தோம்ன்னாலும், முதல் நிலை ஞானம். அந்த ஞானமே முதிர்ந்தாத்தான் பக்தி நிலையை அடைகிறோம். ஞானத்திலேர்ந்து எப்படி பக்தி நிலைக்குப் போறாள்ன்னா, ஞானத்தாலே தியானம் பண்ணுவோம். பகவானைக் குறித்து தியானம் பண்றதோ, ஆத்மாவைக் குறித்து தியானம் பண்றதோ, இதெல்லாம் ஓர் நிலை. அதுல அன்பு ரொம்ப சேர்ந்திருக்கும்ன்னு சொல்ல முடியாது. நீங்க பூ தொடுத்துப் பார்த்திருக்கீளோல்லையோ? புஷ்பங்களை எடுத்து நார்ல வைக்கிறோம். கட்டறோம். கட்டறச்சே வெறும தொடுத்துற மாட்டா. பக்கத்துல ஒரு பாத்திரத்துல ஜலம் வச்சிண்டு, தொட்டுத் தொட்டு தொடுக்கறாளோல்லையோ? ஏன் வெறும் பூவா தொடுத்தாப் போறாதா? என்னத்துக்கு ஜலத்தைத் தொடணும்ன்னால், அப்பதான் அது ஒழுங்கா கட்ட வரும். ஜலத்தைத் தொடாமல் பூவைக் கட்டினோம்ன்னால், அவ்வளவு நன்னாக இனிக்காது, ரசிக்காது. எப்படிப் புஷ்பத்தைத் தொட்டுக்கறச்சே ஜலத்தை தொட்டுக்கறோமோ, அதைப்போல தியானம் பண்ணிண்டே இருக்கறச்சே அன்பு சேர வேண்டும். வெறுமேகூட தியானம் பண்ணலாம். பல இடத்துல நீங்களும், யோகா, தியானம் கற்றுக் குடுக்கப்படும்ன்னு போட்டு, கத்துகிறதுக்காக போறோமோல்லையோ? அங்க இப்படி வட்ட, வட்டமாப் போட்டு, நடுவுல ஒரு புள்ளி குத்தி, அந்தப் புள்ளியையே பார்த்திண்டு இரு. அங்கயே உன்னுடைய லக்ஷியம் வச்சுக்கோன்னுவா. எத்தனை நாழி புள்ளியைப் பார்க்க முடியும்? ஏதோ கொஞ்ச நாழி பார்க்கலாமே தவிர, என்ன பெரிய ரசனையா? இல்ல ஏதானும் குணம் இருக்கா, சுவை இருக்கா, ஒன்னுமே இல்லே. இதே ஒரு திருவரங்கநாதன் படமோ, திருக்குடந்தை ஆராவமுதனோட படமோ வச்சுட்டு, கொஞ்ச நாழி பார்த்திண்டிருன்னு சொன்னா, எத்தனை நாழி வேணாலும் பார்த்திண்டிருக்கலாம். அதென்ன கருப்புப் புள்ளியா, பார்க்க முடியாத கொஞ்ச நாழி கழிச்சுப் போய்டறதுக்கு. அப்போ வெறும தியானம் மட்டும் பண்ணிண்டு இருந்தோம்ன்னா, அது பக்தி ஆகாது. அது தியானத்தோட, ஞானத்தோட நின்னுடும். அந்த தியானத்திலேயே நாம் அன்பு கலந்தோம்ன்னால், தியானத்திலேயே பிரேமம் கலந்தோம்ன்னால், அது பக்தி ஆகிறது. வெறும் தியானம் பண்ணினா ஞான நிலைன்னு அர்த்தம். தியானத்தில அன்பைக் கலந்துட்டோம்ன்னால் அது பக்தி நிலைன்னு அர்த்தம். இதுனாலதான் ஸ்நேகபூர்வம், அநுதியானம், பக்தித்தய அபிதீயதேன்னு சொல்லுவர்கள். தியானம், அநுதியானம். இடைவிடாத தியானம். அதிலே ஸ்நேகபூர்வ அநுதியானம். ஸ்நேகம்ங்கிறதுதான் பக்தி. ஸ்நேகத்தோடு கூடியிருக்கிற தியானத்தைப் பக்தின்னு சொல்லுகிறார்கள். அதனாலே ஞானம் கனிந்துதான் பக்தியே தவிர, பக்தி கனிந்து ஞானம் அல்ல. இது கீதையிலே ஆகட்டும், புராணங்களிலே ஆகட்டும், ஞானம் கனிந்த நலமான பக்தியைப் பேண வேண்டும்ன்னு சொல்லுவர்கள். சரி, அப்போ பக்திங்கறது ஞானமில்லாம இல்லையோல்லையோ? ஞானமிருந்தாத்தான் மேல பக்தியே பிறக்கும். வெறும் ஞானத்தோட நின்னுட்டாலும் முக்தி கிடைக்காது. ஞானமில்லாம வெறும் பக்தி மட்டும் பண்ணனும்ன்னாலும், பண்ணவே முடியாது. ஞானம் இருந்திருந்தாத்தான் பக்தியே வரும். அப்போ ஞானம் தேவை, பக்தி தேவை. அப்போ ஞானம், பக்தி இந்த ரெண்டும் கலந்ததுதான் நமக்கு முக்தி குடுக்கிறது. இதுக்கு ’பக்தி ரூபாபன்ன ஞானம்’ன்னு பேர். இதைத்தான் ‘உபாசனம்’ என்று உபநிஷத்திலே சொல்லுவர்கள். உபாசனம் பண்றார்ன்னு சொல்றோமோல்லையோ, அது வெறும் தியானம் பண்றார்ன்னு அர்த்தமல்ல. தியானமும், பிரேமமும் சேர்ந்தால்தான் உபாசனமே பண்ண முடியும். அப்போ யாரும் உபாசனா மார்க்கத்தாலேதான் மோக்ஷம் போக வேண்டும். ஆணா இருந்தாலும் அப்படித்தான், பெண்ணா இருந்தாலும் அப்படித்தான். யாருமே அப்படித்தான். ஆனா இந்த நிலை யாருக்கு நன்னா வரும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. ஆணுக்கு இந்த நிலை சுலபமா வந்துருமா? இல்லே பெண்ணுக்கு இந்த நிலை சுலபமா வருமான்னா, அவரவர்களுக்குன்னு சில உடல்ரீதியான, மனரீதியான எண்ணங்கள் ஓட்டம் இருக்கோல்லையோ? ஆணின் எண்ண ஓட்டமும், பெண்ணின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இல்லே. பெண்களுக்குள்ளேயே ஒரோருத்தரின் எண்ண ஓட்டமும் மாறுபடுகிறது. ஆண்களுக்குள்ளேயும் மாறுபடும். ஒருவேளை ஆண்களெல்லாம் ஒரு எண்ண ஓட்டம், பெண்களெல்லாம் ஒரு எண்ண ஓட்டம்ன்னு வச்சுக்கங்கோ. அதுக்குள்ள நிறைய வித்தியாசம் இருக்கோல்லையோ? அநேகமா ஆண் பேசறது ஞான பாவனையோடதான் இருக்கும். அநேகமா பெண் பேசறது பிரேம பாவனையோடதான் இருக்கும். ஒரு குழந்தைகிட்ட நடந்துக்கிற விதமே பார்ப்போமே. அப்பா, பொண்ணோ, பிள்ளைகிட்டயோ எப்படி நடந்துப்பர்? அம்மா பொண்ணு, பிள்ளைகிட்ட எப்படி நடந்துப்பள்ன்னு பார்த்தாலே, ஒன்னு ஹிதத்தைக் குறித்தும், ஒன்னு பிரியத்தைக் குறித்தும். நம்ம வாழ்க்கைல ரெண்டு உண்டு, ப்ரியம்ன்னு ஒண்ணு, ஹிதம்ன்னு ஒண்ணு. ஹிதம்ன்னா எனக்கு நல்லது. எதெது நல்லதோ அது ஹிதம். ப்ரியம்ன்னா எனக்குப் பிடிச்சது. இந்த ரெண்டும் ஒன்னா இருக்கணும்ன்னு அவசியமே இல்லே. எனக்கு நன்னா இருக்கறதெல்லாம் பிடிச்சிருக்கணும்ன்னு தேவையில்லே. பிடிச்சதெல்லாம் நன்னா இருக்கணும்ங்கிற அவசியமும் இல்லே. எனக்கு எத்தனையோ விஷயம் பிடிக்கும். அதெல்லாம் சாப்பிடக்கூடாது. இது சாப்பிட்டா ரொம்ப நன்னா இருக்கும் தொண்டையிலேன்னா, அது சாப்பிட்டுடலாமா? கூடாதுன்னா கூடாதுதான். நன்னா இருக்கறதெல்லாம் பிடிக்குமா? வேப்பங்கொழுந்து ரொம்ப நல்லது. உடம்புக்கு நல்லதுதான், சாப்பிடுன்னா யார் சாப்பிடுவா? அதுக்கு வயசு வேண்டியிருக்கு பாருங்கோ. இப்போ நானே பாகற்காயை பதினாறு வயசிலே, சாப்பிடுன்னு எங்க அம்மா சொல்றச்சே, வேண்டாம்னுட்டேன். இப்ப 45 வயசிலே அதுதான் உடம்புக்கு நல்லது, சாப்பிடுன்னா சரிங்கறேன். அப்ப அப்படி சொன்னீரே, இப்ப இப்படி சொல்றீரேன்னா, அது ஞானம், இது பிரேமம். அந்த ஞானதசை மாறிடுத்து. இனிமெ வாதப் பிரதிவாதங்களுக்கெல்லாம் இடம் இல்லே. அதனாலே, ஹிதம், பிரியம் ரெண்டிலே, அநேகமா நல்லது எதோ, இந்தப் பிள்ளை இப்படி வரணுமே, இப்படி வரணுமேங்கறதப்பத்திதான் அப்பா பேசுவர். இப்படியே கையிலே பிரம்பை வச்சிண்டே பேசிண்டிருந்தா பிள்ளை முன்னுக்கு வரவே போறதில்லே. அதுக்குப் பிடிச்சதையும் குடுத்தாத்தான் முன்னுக்கு வரும். இது அம்மா பேசுவள். சரி, பிடிச்சதையே குடுத்திண்டிருந்தியானா கெட்டே போயிடும் பிள்ளை, பிரம்பும் கையில வச்சிக்கணும். இது அப்பா பேசுவர். அப்போ இவர் பேச்சு, அவள் பேச்சு ரெண்டையும் சேர்த்து ஒரு பிள்ளையை வளர்க்கறதோல்லையோ? எப்படி பிரியம், ஹிதம்ன்னு ரெண்டையும் தாய், தகப்பனார்கிட்ட பார்க்கறோமோ, அதேபோல, அதையே கொஞ்சம் இழுத்து வைச்சுப் பாருங்கோ. ப்ரியத்தையே பிரேமமாக்கிக்கங்கோ, ஹிதத்தையே ஞானமாக்கிக்கங்கோ. அப்போ ஞானத்தாலே பேசறாள்ன்னா அநேகமா ஆண் பேச்சாக இருக்கும். பிரேமத்தோடே பேசறோம்ன்னா பெண் பேச்சாக இருக்கும். இது லோகத்துல கண்கூடா நாம பார்க்கறது. இதையேதான் ஆழ்வார்களும் பின்பற்றினார்கள். எப்பப்பெல்லாம் தங்களுக்கு ஞானம் அதிகரிக்கிறதோ, பகவான் புருஷோத்தமன், அவன்தான் முழுமுதற் கடவுள், ஜகத்துக்குக் காரணம், படைக்கிறவர், காக்கிறவர், அழிக்கிறவர், முமூஷுவுக்கு மோக்ஷம் குடுக்கிறவர்ன்னு என்னென்னல்லாம் தோண்றதோ, இதெல்லாம் ஞானத்தின் அடிப்படையில் சம்ஸ்கிருத வேதாந்தத்தின் அடிப்படையில் தோன்றுவது. அது அத்தனைக்கும் ஆழ்வார்கள் ஆணாகவே பாடிடுவா. ஆனா இப்படியே பண்ணிட்டு மோக்ஷம் போய்ட முடியுமா? வெறும் வறட்டுத்தனமா தியானம் பண்றேன்ங்கறதுக்காக, மோட்சம் பகவான் குடுத்துறதில்லே. அவரிடத்திலே உள்ளம் கனிந்து, உருகி, நைந்தாத்தான் முக்தி. அப்போ அந்த நிலையை ஏறிட்டுக்கனும்ன்னால், ஆண்களேதான் பக்தியும் பண்ணனும். ஆழ்வார்களுக்கு அந்த பக்தியை பண்ணப்பண்ண ஏதோ நாம போட்டிண்டிருக்கற வேஷத்துக்கு ஒத்து போறதில்லேன்னு தோணிப் போய்டறது. இவர்கள் இருக்கறது ஆண் உடுப்பிலே இருக்கா. ஆனா பண்றதோ பரமப்ரேமம் கலந்த பக்தி. ஏதோ ஒரு வேஷம் போட்டுண்டு, ஏதோ ஒரு மாதிரி நடந்திண்டிருந்தா? இது அப்பப்ப ஒத்து வரமாப் போகவேதான் அந்த நிலையை விட்டுவிட்டு, தங்களையே பெண்ணாகப் பாவித்துக் கொண்டு, நாயகி பாவத்தில் பாடுகிறார்கள். நாயகியாக பாடுகிறார்கள்ன்னு சொல்றச்சேவே, அப்போ பிரேம பாவனையில பாடுகிறார்கள்ன்னு சொல்ல வேண்டும். ஆச்சார்ய ஹ்ருதயம்ன்னு ஒரு கிரந்தத்திலே, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்ன்னு ஒரு ஆச்சார்யர், அந்த ஸ்வாமி தெரிவிக்கிறார், ‘ஞானத்தில் தன் பேச்சு, ப்ரேமத்தில் பெண் பேச்சு’. ஞானத்தோடு ஆழ்வார் பாடினா, தன் பேச்சாகப் பேசுவர். தன் பேச்சுன்னா, ஆண் பாவனைன்னு அர்த்தம். ப்ரேம பாவனையில் பாடினா, அப்போ நாயகி பாவனையிலே பாடுகிறார். இது அடிப்படை. அப்போ ஆழ்வார்கள் ஏன் நாயகி பாவத்தில் பாடறான்னா, பிரேமம் அதிகரித்தால் நாயகி பாவத்தோடே பாடுவர்கள். ஞானத்தோடே பாடினார்களென்னால் ஆண் பாவனையில பாடினார்கள். அப்படின்னா பெண் பாவனையில பாடறச்சே ஞானமில்லேன்னு சொல்லக்கூடாது. ஞானம் முதிர்ந்துதான் பிரேமம்ன்னு இப்பதான் பார்த்தோம். இதிலே நம்மாழ்வார் நாயகி பாவத்திலே பாடியிருக்கார். திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் பாடியிருக்கார். பத்து ஆழ்வார்களும் பாடவில்லை. முதல் மூன்று ஆழ்வார்களிடத்தும் நாயகி பாவம் இல்லை. ஆண் பாவனையோட மட்டும்தான் பாடியிருக்கார்கள். திருமழிசையாழ்வார், ஒருவேளை ஓர் பாசுரம் நாயகி பாவத்திலே பாடினாரோன்னு சந்தேகம். அவர் ரெண்டு பிரபந்தம் பாடியிருக்கார். அதிலே ஒரே ஒரு பாட்டு மட்டும் நாயகி பாவமோன்னு சந்தேகப்பட்டு, அதுவும் ஆராய்ச்சியாளர்கள் இல்லேன்னு முடிவு பண்ணிட்டா. அதனால முதல் நான்கு ஆழ்வார்களும் நாயகி பாவத்திலே பாடவில்லை. ஐந்தாவது ஆழ்வார்தான் நம்மாழ்வார். வைகாசி மாசத்தில், விசாக நட்சத்திரத்தில், ஆழ்வார் திருநகரி, திருக்குறுகூர்ன்னு திருநெல்வேலிக்குப் பக்கத்திலே திவ்யதேசம். அந்த இடத்திலதான் நம்மாழ்வார் திருவவதாரம் பண்ணினார்.
-(உபதேச ரத்தின மாலை – 15)
ஆழ்வார் திருநகரிக்கு நிகர் அந்த ஊர்தானாம். வைகாசி விசாகத்திற்கு நிகர், அந்த நட்சத்திரம்தானாம். நம்மாழ்வாருக்கு நிகர் அவர்தானாம். அவர் பாடின திருவாய்மொழிக்கு நிகர் அதே பிரபந்தம்தானாம். அவ்வளவு உயர்த்தியா பாடியிருக்கார் நம்மாழ்வார், அவரிடத்திலதான் நாயகி பாவத்தை முழுமையோடே நம்மால பார்க்க முடியும். நாயகியாகவே தன்னை நினைச்சிண்டு பத்து பத்துப் பாசுரங்களாகப் பாடுகிறார். நம்மாழ்வார் நாலு பிரபந்தம் பாடியிருக்கார், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இந்த நாலும் நான்கு வேதங்களுக்குச் சமம். ரிக் வேதம், சாம வேதம், யஜுர் வேதம், அதர்வண வேதம். இதிலே என்ன ஆச்சர்யம்ன்னா, சொல்ல வந்த கருத்துக்களெல்லாம் வேதாந்தத்தினுடைய கருத்து. ஆனா அதை இவர் பாடிண்டிருக்கறது நாயகி பாவத்தோடே. சொல்ல வந்திருக்கறது ரொம்ப ஞானத்தினுடைய நிலையைத்தான் சொல்ல வரார். ஆனா அதைப் பிரேம தசையில் இருந்து கொண்டு அர்த்தங்களைத் தெரிவிக்கிறார். இப்படிச் சேருமான்னு கேட்டா, ரெண்டும் சரியான விகிதத்தில சேர்ந்திருந்தாத்தான் நமக்கும் பக்தி வளரும். வெறும் ஞானத்தோட மட்டும் பேசிண்டிருந்தாலும் பிரயோஜனமில்லே. வெறும் மூடத்தனமான பிரேமத்தோட பேசியும் லாபமில்லே. அப்போ ஞானமும், பக்தியும் கலக்க வேண்டுமோல்லையோ? அதைத்தான் முதல் பாசுரத்தாலே நம்மாழ்வார் சாதித்தார்.
(திருவாய்மொழி – 1.1.1) - என்று முதல் பாசுரம். அதிலே ’மதிநலம் அருளினன்’னு சாதித்தாரோல்லையோ? மதி, நலம். மதின்னு சொல்றது ஞானம். நலம்ன்னு சொல்றது பிரேமம். மதிநலம்ன்னு சொல்றது ஞானமும், பிரேமமும் கலந்தது. இதைத்தான் பகவான் ஆழ்வாருக்கு அனுகிரகிக்க அது கொண்டே 1102 பாசுரங்களும் பாடினாராம். இந்த 1102 பாசுரங்களை 100 திருவாய்மொழியாக பிரிச்சுப்பா. மொத்தம் 1102 சேர்த்தும் திருவாய்மொழின்னுதான் கிரந்தத்துக்குப் பேர். அதற்குள்ளே பத்து, பத்து பாசுரங்களா பிரிவு. பத்துன்னு சொன்னா பதினொன்னுன்னு வச்சுக்கங்கோ. பதினோரு, பதினோரு பாசுரங்களா மொத்தம் 100 திருவாய்மொழிகள். 11 x 100 = 1100 ஆச்சா? இப்போ 2 பாசுரம் கூட இருக்கோல்லையோ? ஏன்னா, ‘கேசவன் தமர் கீழ்மேல் எமரேல் எழு பிறப்பும்..’ன்னு ஒரு பத்துப் பாசுரம். இரண்டாம் பத்திலே பாடியிருக்கார். அதிலே மட்டும் 11 பாசுரத்துக்குப் பதில் 13 பாசுரம் இருக்கு. எப்பவுமே பத்துப் பத்தா பாசுரம் பாடுவர். பத்தாம் பாட்டு வரைக்கும் தான் சொல்ல வந்ததை சொல்லிடுவர். பதினோராவது பாசுரத்திலே, நான்தான் நம்மாழ்வார், நான்தான் திருக்குறுகூரில பிறந்தேன், நான்தான் ஆயிரத்துக்குள்ளே இந்தப் பத்துப் பாசுரத்தைப் பாடியிருக்கேன், இந்தப் பத்துப் பாசுரத்தை யார் சொன்னாலும் இந்தப் பலம் கிடைக்கும். அப்படின்னு ‘பலஸ்ருதி’ பாசுரம்ன்னு சொல்றோமோல்லையோ, அதைத்தான் கடைசிப் பாட்டில வச்சுருவர். இந்த கேசவன் தமர்ல மட்டும், அதுக்கு ’பன்னிரு திருநாமப் பாடல்’ன்னு பேர். ’கேசவாதி த்வாதச நாமங்கள்’ன்னு கேள்விப்பட்டிருப்பீள். கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்கிரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேத் ,பத்மநாப, தாமோதர-ன்னு சொல்லுகிறோமோல்லையோ? அந்த பன்னெண்டு திருநாமத்துக்கும் பன்னெண்டு பாட்டுப் பாடிட்டார். அதுக்கப்புறம் தான் பாடினதுன்னு ஒரு பாட்டிலே சொல்லணுமோல்லையோ? அப்போ 12 + 1, 13 போச்சு. அதனாலே 1102 பாசுரங்கள். இதை திராவிட வேத சாகரம்ன்னு சொல்லுவர்கள். சாந்தோக்ய உபநிஷத்துக்குச் சமமான பாசுரம். சாம வேதத்தில் என்னென்ன கருத்துக்கள் உண்டோ, அது அத்தனையும் தெள்ளு தமிழிலே, இனிமையான தமிழிலே நம்மாழ்வார் குடுத்தார். இந்த சம்ப்ரதாயத்துக்கு ’உபய வேதாந்தம்’ன்னு பேர். உபய வேதம்ன்னா, சமஸ்கிருத வேதம், திராவிட வேதம். சம்ஸ்கிருதமும் கற்றிருக்க வேண்டும், தமிழும் கற்றிருக்க வேண்டும். உபநிஷத்துக்கள், சம்ஸ்கிருத வேதம், வேதாந்தம். அதே ஆழ்வார் பாசுரங்கள் திராவிட வேதம், வேதாந்தம். இந்த ரெண்டையும் நாம் ரெண்டு கண்களாகக் கொள்ள வேண்டும். ரெண்டு கண் இருந்ததுன்னா விஷயத்தை நன்னாப் பார்க்கிறோமோல்லையோ? ரெண்டு கண்ணு இருக்குங்கிறதுக்காக வஸ்து ரெண்டாத் தெரியலாமா? அது ஒன்னாத்தான் தெரியணும். அதுபோல சம்ஸ்கிருத வேதாந்தம், திராவிட வேதாந்தம் ரெண்டு கண்ணும் சேர்ந்து பகவானை ஒருவனாகத்தான் காட்டும். ரெண்டு அர்த்தம் சொல்லாது. எம்பெருமான் ஒருத்தன், அவனிடத்திலே பக்தி பண்ண வேண்டும், இந்த அர்த்தத்தைத்தான் சம்ஸ்கிருத வேதாந்தமும் சொல்லும், திராவிட வேதாந்தமும் சொல்லும். அப்போ சம்ஸ்கிருத வேதாந்தம்தானே பழசு? ரிக் வேதம், யஜுர் வேதம் எல்லாம் எவ்வளவு நாட்களாக இருக்கிறது. ஆழ்வார் தமிழ்ப் பாசுரம்தானே பாடியிருக்கார். முதல்ல தமிழுக்கு சமஸ்கிருதம் சமமாகுமா? ஒரு கேள்வி. மேலும் சம்ஸ்கிருதம் ரொம்ப நாள் முன்னாடி இருக்கே. ஆழ்வார் பாட்டு என்னைக்குன்னு எங்களுக்குத் தெரியுமே. தேதியிருக்கிற பாசுரம் போய் உசந்த பாசுரமா இருக்க முடியுமா? ரெண்டாவது கேள்வி. மேலும் இது பாடினது எல்லாம் பிராமணர்களாகக்கூடத் தெரியலையே? ஆழ்வார்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்லர்கள். ஒரு சிலர், தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியாழ்வார், மதுரகவியாழ்வார், இதைப் போன்றவர்கள்தான். குலசேகரர், ஷத்திரியர். திருமங்கையாழ்வார், கள்ளர் குலத்திலே பிறந்தார். திருப்பாணாழ்வார், பாணர் குலத்திலேயே பிறந்தார். இப்போ இந்த மூன்று சந்தேகம் வந்துருச்சு பாருங்கோ. இது சம்ஸ்கிருதமா, இல்லையே தமிழாச்சே? இது ரொம்ப பழைய காலம் இல்ல போலருக்கே. ஆழ்வார்கள் எல்லாம் பிராம்மணாள் இல்ல, போலருக்கே. இந்த மூன்றையும் ஒன்னுமில்லேன்னு ஆக்கற அளவுக்குத்தான் அந்த பாசுரங்களிலே பக்தி ததும்புகிறது. ஆழ்வார் பாடினது அத்தனையும், இவ்வளவு ஒசத்தியா, சம்ஸ்கிருத வேதத்துக்கு சமமா திவ்யதேசங்களிலே நாம சேவிச்சுட்டு இருக்கோம். இதே ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேள்ன்னா, கோவில்களிலே ஆழ்வார் பாசுரங்களை இப்படி சேவிச்சிண்டு இருக்கலே. நாதமுனிகள்ங்கிற முதல் ஆச்சார்யன்தான் இதை உள்ளே புகுத்தினார். 823ம் வருஷத்திலே நாதமுனிகளோட அவதாரம். சுமார் 1200 வருஷத்துக்கு முன்னாடி. அவர்தான் இந்த ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு போய் திவ்யதேசங்களிலே பாடவேண்டும் என்று ஏற்படுத்தினார். அது என்ன ஆயிடுத்துன்னா, இன்னைக்கு வேதம் பின்னாடி போய்டுத்து, ஆழ்வார் திவ்யப் பிரபந்தம் முன்னாடி வந்துடுத்து. முன்னாடி காலத்துல சம்ஸ்கிருத வேதம் மட்டும்தான் உண்டு. ஆனா இன்னைக்குப் பெருமாளுக்கு புறப்பாடு நடக்கறதுன்னா, அருளிச்செயல் கோஷ்டிதான் முன்னாடி வரும். வேத பாராயண கோஷ்டி பின்னாடிதான் வரும். முன்னாடி இருந்ததை பின்னுக்குத் தள்ளியிருக்கணும்ன்னால், என்னமோ அந்தப் பாட்டில இருக்கணுமோல்லையோ? இல்லேன்னா இவ்வளவு தூரம் வேதத்தைப் பின்னுக்குத் தள்ளிட்டு, அதாலே முன்னுக்கு வந்திருக்க முடியுமா? என்ன இருக்குன்னா, ஒன்னுமில்லே, நாயகி பாவம்தான் இருக்கு. அந்தப் பாசுரங்களுக்கு இவ்வளவு தூரம் ஏற்றம் எதனாலே ஏற்பட்டதுன்னா, வெறும் வேதாந்தம்ன்னு பேசியிருந்தா, அது பெண் பாவனையே பேசாது. ஆண் பாவனையேதான் வேதம் பேசும். ஆனா ஆழ்வார்களைப் பொறுத்தவரை தங்களையும் மீறி, பக்தி ததும்ப பெண் பாவனையோட பாடியிருக்காளோல்லையோ? அதனாலதான் இந்தப் பாசுரங்களுக்கே ஏற்றம். இது எல்லாமே அனுபவ ரீதியான பாசுரங்கள். மேலே சொன்ன மாதிரி தர்க்க ரீதியாக இங்கெ பேச்சில்லே, அனுபவ ரீதியாகத்தான் பேச்சு. அதனால வாதத்துக்கு இங்க எதுவுமே இல்லே. ஆழ்வார் நிலைமைலேர்ந்து யோசிக்கணும். அந்த பக்தி நிலைமைக்கு நம்மளை உசத்திண்டாத்தான், ஓ, இவர் என்ன சொல்ல வர்றார்ன்னே புரியும். நாம பக்தில ஆரம்பப் படிக்கட்டுல நின்னுகிட்டு, கடைசி படிக்கட்டுல நின்னுகிட்டு இருக்கிற ஆழ்வாரைப் பார்த்து, இந்த மாதிரி எல்லாம் நடக்குமான்னால், நடக்கணும், நடந்திருக்கு. ஆழ்வாருக்கு நடந்திருக்குங்கிறதைத்தான் உண்மையா எழுதி வச்சிருக்கா. அப்போ என்ன ஆசைப்படலாம்? இந்த நிலைக்கு நானும் வருவேனா? அப்படிங்கற அளவுக்கு வேணா நாம பகவானிடத்திலே ப்ரார்த்தித்துக் கொள்ளலாம். (தொடரும்) -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston) June 11 ஆழ்வார்கள் செய்தி – பாகம் 4முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3 அடுத்து தொண்டரடிப்பொடியாழ்வார். இவர் மார்கழிக் கேட்டையில் திருவண்டங்குடியில் அவதரித்தவர். சரி, காத்திண்டிருக்கேன். காத்திண்டிருக்கற நாழியிலே இந்த லோகத்துலே என்ன பண்ணனும்? பொழுது போக வேண்டாமா? சமாஸ்ரயணம் பண்ணினுட்டேன். மோக்ஷம் போய்டுவேன்னு உறுதி இருக்கு. அப்போ இருக்கற காலத்துல என்ன பண்ணனும்ன்னு தொண்டரடிப்பொடியாழ்வார் சாதிக்கிறார். நாம சங்கீர்த்தனம்தான் ஒரே வழி. திருமாலைன்னு 45 பாசுரங்கள், திருப்பள்ளியெழுச்சின்னு 10 பாசுரங்கள் பாடினார். அதிலே இந்த திருமாலையிலே,
(திருமாலை – 1) பகவானுடைய திருநாமங்களே நம்மை இரட்சிக்கும். நேத்து வரைக்கும் நான் நாமங்களைச் சொல்லலே. இன்னைக்கு பகவானுடைய திருநாமங்களைச் சொன்னேன். நேத்து வரைக்கும் எமனைக் கண்டு பயந்திருந்தேன். இன்னைக்கு திருநாமத்தைச் சொன்னேனோல்லையோ, எமனே இங்க வா, உன் தலைல என் காலை வைக்கணும்னுட்டேன். எங்கேர்ந்து இவ்வளவு தைரியம் வந்ததுன்னா, வந்தது. நேத்து வரைக்கும் சுக்ரீவன் வாலின்னு சொன்னாலே பயந்திண்டிருந்தான். இன்னைக்கு இராமனைக் கை சேர்த்த உடனே, வாலியை சண்டைக்கு வான்னு போய் கூப்பிடலையா? அதேபோலத்தான். பெருமாள் பார்த்தார். ஓ, நாமங்களைப்பத்தி ஆழ்வீர் ரொம்ப நல்லாச் சொல்றீரே, அப்போ உனக்கு மோட்சம் குடுக்கலாம்ன்னு இருக்கேன், அப்படின்னு பெருமாள் சொன்னார். நான் வாங்கிக்கறதாவே இல்லையேனுட்டார் ஆழ்வார்.
(திருமாலை – 2) நாம சங்கீர்த்தனம் சொல்ற இந்த இன்பத்தை விட்டுட்டு நீ மோட்சமே குடுக்கறதா இருந்தாலும் எனக்குத் தேவையில்லே, என்று அவ்வாழ்வார் சாதிக்கிறார்.
(திருமாலை – 12) நரகத்தைக்கூட சொர்க்கமாக்குற அளவுக்குத் திருநாமங்கள் படைத்தவன் எம்பெருமான். அவன் நாமத்தை ஒருதடவையாவது சொல்லுங்கோ. சொல்லலே, நரகத்துக்குப் போய் நிற்போம். அப்போ எமன் கிட்டக்க வந்து கேட்பர், ஒரு தடவை கீழ வாழறச்சே, நீ நாமத்தைச் சொல்லலியா? ஏன் என் ஊருக்கு வந்து என்னையும் கஷ்டப்படுத்தி, நீயும் கஷ்டப்படறே? ஒருதடவை பகவன் நாமத்தைச் சொல்லியிருந்தா அத்தனை பாபங்களும் தொலைஞ்சே போயிருக்குமே?, என்று எமதர்மராஜன் கேட்பன். அதனால் இங்கு இருக்கும் போதே பகவானுடைய நாமங்களைச் சொல்லி அவனை ஆஸ்ரயிங்கோள்ன்னு தொண்டரடிப்பொடியாழ்வார் தெரிவித்தார். அவ்வாழ்வார் பாடினதே திருவரங்கநாதனை மட்டும்தான். திருமாலைல முழுக்கவே அரங்கனுக்குன்னுதான் மொத்த பாசுரங்களையுமே சமர்ப்பிச்சார். திருவேங்கடமுடையானை ஒன்பது ஆழ்வார்கள் பாடியிருக்கா. திருவரங்கநாதனை பத்து ஆழ்வார்கள் பாடியிருக்கா. தொண்டரடிப்பொடியாழ்வார் மட்டும் திருவேங்கடமுடையானைப் பாடாது போய்ட்டார். அதனால்தான் திருவரங்கநாதனுக்கு ‘பதின்மர் பாடும் பெருமாள்’ன்னு ஏற்றம். அடுத்து திருப்பாணாழ்வார், கார்த்திகை மாசம், ரோகிணி திருநட்சத்திரத்திலே மிசுளாபுரிங்கற உறையூர் திவ்யதேசத்திலே திருவவதாரம் பண்ணினவர். அவர் பத்தே பாசுரம்தான் பாடியிருக்கார். அமலனாதிபிரான்ங்கற பத்து பாசுரம். திருவரங்கநாதனை திருவடியில் இருந்து திருமுடிவரை ஓரோரு அங்கம் அங்கமாக, அவயவம் அவயமாக அனுபவித்தார். ஓரோரு அங்கத்துக்கும் ஓரோரு பாசுரம் பாடிட்டார். திருவடியிலேர்ந்து, ’திருக்கமலபாதம் என் கண்ணினுள் வந்து ஒக்கின்றதே’ன்னு ஆரம்பிச்சு, ’நீல மேனி ஐயோ! நிறைகொண்டதென் நெஞ்சினையே’, என்று திருமேனி முழுவதுமாக திருப்பாணாழ்வார் அனுபவித்தார். அப்ப அவர் சொன்ன கருத்தென்ன? ’திருக்கமல பாதம் வந்து’ன்னு சொன்னார். ’அரைச்சிவந்த ஆடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே’ன்னு சொன்னர். ’அயனைப் படைத்ததோர் எழில் உந்தி’ன்னு பாடினார். உதரபந்தத்தைப் பற்றிப் பாடினார். இப்படி ஓரொரு அவயவத்தையும் ஏன் பாடினார்ன்னா, அவர் ஒரு செய்தி சொல்றார். நம்முடைய இந்திரியங்களெல்லாம் நம்ம வசப்படுத்தனும். சுலபத்துல அது வசப்படாது. அதை வசப்படுத்தறதுக்கு ஒரே வழி, பகவானுடைய திருமேனியில கொண்டு போய் அந்த இந்திரியங்களையெல்லாம் வச்சுடனும். வச்சுட்டா அது எங்கேயும் ஓடவே ஓடாது. அதுக்குத்தான் அவர் அழகே இவ்வளவு தூரம் கொட்டி வச்சிண்டிருக்கார். பெருமான் திருமேனி எதுக்கு அழகுன்னா, அவர் நமக்கு சாஸ்திரமெல்லாம் குடுத்து நம்மளைத் திருத்தனும்ன்னு பார்ப்பர். ஆனா நாம திருந்தவேயில்லைன்னு வச்சுக்கங்கோ, கடைசியா ஒரு பிரம்மாஸ்திரம் வச்சிருக்கார். தன் திருமேனியைக் காட்டி நம்மைத் திருத்திருவராம். அதுக்கு மயங்காதவன் யாரும் இருக்க முடியாது. அப்போ திருப்பாணாழ்வார் நமக்குச் சொன்ன செய்தி, இந்திரியங்கள் அடங்க வேண்டுமென்றால், கண்டபடி திரியக் கூடாதென்றால், அவை அத்தனையும் பகவானுடைய திருமேனியிலே வைத்து விடுங்கோள். அவன் திருமேனியை அனுபவிக்க, அனுபவிக்க, அது நம்முடைய சந்தேகங்களையெல்லாம் போக்கிடும். ஞானத்தை வளர்க்கும். பக்தியை வளர்க்கும். பிரேமத்தை வளர்க்கும். கைங்கர்யம் செய்யத் தூண்டும். அதனால ஒரே வழி, இந்திரியங்கள் அடங்க, பக்தி பெருக, திருமேனியை சேவியுங்கோள். இதை அமலனாதிபிரானாலே திருப்பாணாழ்வார் சொல்லிவிட்டுப் போனார். இனி, கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார். இவர் கார்த்திகை மாசம், கார்த்திகை நட்சத்திரத்திலே, திருக்குறையலூர், சீர்காழிக்குப் பக்கத்திலே இருக்கற திவ்யதேசம், அங்கே அவதரித்தவர். திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்பிரபந்தங்கள் பாடினார். அவை எல்லாமே அர்ச்சாவதார ஏற்றத்துக்காக. ஆங்காங்கே பெருமாள் சேவை சாதிக்கிறாரோல்லையோ, அந்த திவ்யதேசங்களுக்குப் போங்கோ, பெருமாளை சேவியுங்கோ. அது இல்லாதவர்களுக்கு உய்வே கிடையாது. இதைத் தன்னுடைய ஆறு பிரபந்தங்களாலேயும் சொல்றார். முதல் பிரபந்தம், பெரிய திருமொழி. அடுத்து, திருக்குறுந்தாண்டகம். அடுத்து, திருவெழுகூற்றிருக்கை. அடுத்து, சிறிய திருமடல், பெரிய திருமடல். கடைசியா, திருநெடுந்தாண்டகம். அதுல தன்னுடைய மதம் என்னங்கிறத திருக்குறுந்தாண்டகம் கடைசில தெரிவிக்கிறார்.
(திருக்குறுந்தாண்டகம் – 19) திவ்யதேசங்களிலே உங்களுக்குப் ப்ராவண்யம் இல்லையா, அந்த எம்பெருமானுக்குக் கைங்கர்யம் நீங்க பண்ணலையா, அப்போ எங்கேயோ உழல வேண்டியதுதான், மோக்ஷத்துக்கே போக முடியாதுனுட்டார். மற்றை ஆர்க்குய்யல் ஆமே – மிச்சப் பேர்க்கு உய்வு, உஜ்ஜீவனம் கிடையாது. அர்ச்சாவதாரத்துல மண்டினவனுக்குத்தான் உஜ்ஜீவனம் உண்டு. திருமங்கையாழ்வாருக்குச் சிறப்பே, அர்ச்சா மாகாத்மியத்தை நமக்குச் சொல்லிக் குடுத்தவர். ஏன்னா வைகுண்டநாதனை நாம சேவிக்க முடியுமா? இங்கேர்ந்து முடியாது. திருப்பாற்கடல்? முடியாது. விபவா அவதாரம்? இராம, கிருஷ்ணா அவதாரம் பாரதத்திலதான் நடந்தது. அது என்னைக்கோ, நான் என்னைக்கோ. அந்தர்யாமி எனக்குள்ளேயே இருக்காரேன்னா, நாம என்ன ஹனுமானா, இப்படிக் கிழிச்சா பெருமானெல்லாம் தெரியறதுக்கு? அந்த சக்தியெல்லாம் நம்மகிட்டே கிடையாது. அப்போ நாம கண் கொண்டு யாரை சேவிக்க முடியும்? அர்ச்சையை மட்டும்தான். திவ்யதேசங்கள்தோறும், விக்ரஹ ரூபத்தில எழுந்தருளியிருக்கிற பெருமாளைத்தான் நாம சேவிக்க முடியும். அதனால அவனையே பற்றிக் கொள்ளுங்கோள். ஆகாயத்தில ஏறி எங்கேயும் மோக்ஷத்தைத் தேடிப் போகாதீங்கோ. இது எதுக்கு இப்போ? ’ஏறார் முயல் விட்டு காக்கை பின் போவதே’ன்னு சாதித்தார். நல்லா முயல் மாமிசம் கைல கிடைக்கறச்சே, எதுக்கு காக்கா மாமிசத்தைத் தேடிண்டு போறீள்ன்னார். நமக்குத் தோணும் இந்த உபந்யாசகருக்கு எப்படி முயல் மாமிசம், காக்கா மாமிசம் பத்தியெல்லாம் தெரிஞ்சதுன்னு நமக்குத் தோணும். அடியேன் சொல்ல வரலே. வியாக்யானத்துலே இருக்கு. வியாக்யானம் எழுதின பெரியவாச்சான் பிள்ளையும் பிராம்மணோத்தமர். அப்போ அவருக்கு எப்படித் தெரியும்ன்னா, திருமங்கையாழ்வாருக்குத் தெரியும். ஏன்னா அவர் கள்ளர் குலத்தில பிறந்தவரா இருந்தாரோல்லையோ? அவர் இது எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிண்டிருந்ததால எழுதிட்டார். ஒன்னு, காக்கா மாம்சம் ரொம்ப மட்டம், முயல் மாம்சம் ரொம்ப உசத்தி. இந்த உசத்தியான முயல் மாம்சம் பூமியில கிடைக்கறது சுலபமா. ஆனா மட்டமான மாம்சம் ஆகாசத்துல தேடிண்டு போகணும். அதனாலே இதோடயே இருங்கோன்னார். அதைப் போலத்தான் வைகுண்டம். அது எங்கேயோ இருக்கு, யார் தேடிண்டு போறது? போறன்னிக்குப் பார்த்துப்போம். இருக்கறன்னிக்கு அர்ச்சாவதார திவ்யதேசத்தையே பற்ற வேண்டும்ன்னு, இதை திருமங்கையாழ்வார் காட்டிக் குடுத்தார். இப்படி பத்து ஆழ்வார்கள் பத்து செய்தி சொன்னார்கள். அடுத்து மதுரகவியாழ்வாரும், ஆண்டாளும். மதுரகவிகள் நம்மாழ்வாருடைய சத்சிஷ்யராக இருந்தார். கண்ணிநுண்சிறுத்தாம்புங்கிற 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இவர் திருக்கோளூரில், சித்திரை மாசத்தில், சித்திரை நட்சத்திரத்தில் திருவவதாரம் பண்ணினார். அவர் வெளியிட்ட கருத்தென்னன்னா, எங்க முன்னாடி இருந்த பத்து ஆழ்வார்களும் பகவானை தெய்வம், தெய்வம்ன்னு பாடிட்டுப் போனா. ஆனா நான் அதை சொல்லப் போறதில்லே. அப்படின்னு சொன்ன நம்மாழ்வாரே எனக்குத் தெய்வம், என்று தன் கண்ணிநுண்சிறுத்தாம்பிலே தெரிவிக்கிறார். ‘தேவு மற்றறியேன் குறுகூர் நம்பி பாவி நின்னிசைப் பாடித் திரிவனே’. தெய்வம்ன்னா ஆச்சார்யன்தான் தெய்வம். ’ஆச்சார்யாது இஹ தேவதாம் சமதிஹாம் அந்யாம்ந அந்யாம்நஹே’. ஆச்சார்யனை தெய்வமென்றே கொண்டிருக்கிற மிக உயர்ந்த சொல், மதுரகவியாழ்வாருடைய சொல். அப்போ மத்த பத்துப் பேரும் ஒரு தட்டுன்னா, இவ்வாழ்வார் தனித்தட்டு. அவர்களைக் காட்டிலும் மிக உயர்ந்த தராசுத் தட்டிலே மதுரகவியாழ்வார் இருந்தார். ஏன்னா, இதைச் சரம பர்வ நிஷ்டைன்னு சொல்லுவர்கள். ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம். பகவானைப் பற்றினாக்கூட நடக்குமோ, நடக்காதோ. ஆச்சார்யனைப் பற்றினா கண்டிப்பா வேலை நடந்து போய்டும். இதைத்தான் மதுரகவியாழ்வார் நமக்குச் சொல்லிக் குடுத்தார். கடைசியாக ஆண்டாள்.
(உபதேசரத்தின மாலை – 24) ஆடிமாசம், பூர நட்சத்திரத்திலே, ஸ்ரீவில்லிபுத்தூரிலே பெரியாழ்வாருக்குத் திருக்குமாரத்தியாக அவதரித்தாள். அவள் பாமாலை பாடிக் குடுத்தபடியால், பாடவல்ல நாச்சியார். பூமாலை சூடிக்குடுத்தபடியால் சூடிக்குடுத்த நாச்சியார். சூடிக்குடுத்த நாச்சியார் பாடினது, திருப்பாவை, நாச்சியார் திருமொழின்னு இரண்டு பிரபந்தங்கள். திருப்பாவை 30 பாசுரங்கள். நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள். இதுனால ஆண்டாள் தெரிவித்தது என்னன்னா, ஒரு தனிச்சிறப்பான செய்தி. பாகவத சமாகமம். அடியார்களோடே கூடி இருக்க வேண்டும். எல்லாரும் ஒத்த மனது படைத்தவர்களாக இருக்க வேண்டும். ஒன்னா பகவானை அனுபவிக்க வேண்டும். ஆனந்தமாக, திருப்தியாக இருக்க வேண்டும். சோகமே கூடாது. பகவானே நமக்கு ஒரே உய்வு என்று இருக்க வேண்டும், என்று அடியார்களுடைய சேர்க்கை. பாகவதர்களோடே கூடி இருக்கறது, பாகவதர்கள்தான் சிறப்புப் பெற்றவர்கள்ங்கிறதை ஆண்டாள் தெரிவித்தார். இதைக் ’கூடியிருந்து குளிர்ந்து’ என்று தன்னுடைய ஒரே வார்த்தையாலே இந்தப் பதினொரு பேர் சொன்னதையும் சேர்த்துச் சொல்லிட்டுப் போய்ட்டாள் ஆண்டாள்.
(திருப்பாவை – 27) அப்போ பாகவதர்கள் கூடணும். அதனாலதான் முதல் பாசுரத்திலேர்ந்தே ஒவ்வொருத்தரையா கூப்பிடறா அவள். தான் மட்டும் போய் கண்ணனை அனுபவிக்கறதுக்கு ஆசைப்படலே. அப்போ இது தனி அனுபவம் அல்ல, துணையாகக் கூட்டமாக இருக்க வேண்டும். பாகவதர்களுடைய பிரபாவம், பகவானைக் காட்டிலும் அவனுடைய தொண்டர்களுக்கு உண்டான ஏற்றம், இதைத் தெளிவுபடுத்தி இருப்பதே ஆண்டாள் நமக்குச் செய்த முக்கியமான உபதேசம். ஆழ்வார்களுடைய திருவடிகளுக்குப் பல்லாண்டு. (முற்றும்) -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் செய்தி உபந்நியாசம் – Boston) ஆழ்வார்கள் செய்தி – பாகம் 3முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2 அடுத்து திருமழிசை ஆழ்வார். அவர் அவதாரம் பண்ணினது, தையில் மகத் திங்குதித்தான் வாழியே. திருமழிசைங்கிற திவ்யதேசத்திலே தை மாசத்தில் மக நட்சத்திரத்தில் திருவவதாரம் பண்ணினார். பகவானுடைய சக்கரத்தின் அம்சமாகவே திருமழிசை ஆழ்வார் அவதரித்தார். ரொம்ப முக்கியமான ஆழ்வார். நம்புவியில் நாலாயிரத்து எழுநூறு இருந்தான் வாழியே. இந்த லோகத்திலே நாலாயிரத்து எழுநூறு வருஷம் இருந்தார் அவர். திருமழிசையாழ்வார் இரண்டு திவ்யப்ரபந்தங்கள் பாடினார். ஒன்று நான்முகன் திருவந்தாதின்னு பேர். மற்றொன்று திருச்சந்த விருத்தம்ன்னு பேர். இதிலே முதல் ஆயிரத்திலே ஒன்று சேர்க்கப்பட்டது. இயற்பாவில் மற்றொன்று சேர்க்கப்பட்டது. அவ்வாழ்வாருக்கு ’உறையிலிடாதவர்’ன்னு பேர். அப்படின்னா என்னதுன்னா, கத்தியை உறையில போடவே மாட்டார். திருமழிசையாழ்வாரை எங்கயுமே கத்தியோடயோ, வேலோடயோ நாம சேவிச்சதே கிடையாது. திருமங்கையாழ்வார்தான் கையில வேல் வச்சிண்டு இருப்பர். போனாப் போறது குலசேகரர், ராஜா, எங்கையாவது வேணா அவர் வச்சிண்டு இருக்கலாமே தவிர, மத்த யாரும், திருமழிசையாழ்வாரெல்லாம் வேல் வச்சிண்டதில்லையே, கத்தி வச்சிண்டதில்லையே? பின்ன ஏன் உறையிலிடாதவர்ன்னு சொல்றோம்ன்னா, அவருடைய கத்தி அவர் நாக்குதான். நாக்கை உறையில அவர் வைக்கவே மாட்டார். அவர் பேசுற வேகத்துக்கு யார் கேட்டாலும் பயந்தே போய்டுவா. அவர் தெரிவிக்கிறார்.
(நான்முகன் திருவந்தாதி – 53) இது திருமழிசையாழ்வாருடைய பாசுரம். கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் – இலங்கையைக் கொன்று முடித்த இராமன். அந்த இராமனைத் தவிர ஒருதெய்வம் எனக்கு மற்றொருத்தன் கிடையாது. அந்த இராமனைத்தான் தெய்வமாகப் பற்றினேன். ஆக இராமனையே தெய்வமாகப் பற்றுங்கோ. ஆனால் வெறும் இராமனை இல்லேன்னுட்டார் அவர். பின்னே? சீதா ராமர்களைத்தான் பற்ற வேண்டும். வெறும் இராமனைப் பற்றினா கொன்னுண்டே இருப்பர். இதுதான் அவருக்குத் தெரியுமே தவிர, பக்கத்திலே சீதை இருக்கறப்போதானே அவன் எப்போதும் இரட்சித்துக் குடுக்கிறான். பொல்லாத தேவரை தேவர் அல்லாரை திருவில்லாத் தேவரை தேறேல்மின் தேவு – மத்த பேரெல்லாம் பொல்லாத தேவர்களாம். யார் பொல்லாத தேவர்ன்னா, யாருக்கு ஸ்ரீதேவி நாச்சியார் சம்பந்தம் இல்லையோ, அவா எல்லாம் பொல்லாத தேவர்கள். யார் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு தன் திருமார்பிலே இடம் குடுத்தானோ அவன்தான் நல்ல தெய்வம். மற்ற தேவரெல்லாம் தேவரே அல்லர்கள். உங்களுக்கு திரு வேணுமா, திருவுடைய தேவரைப் பற்றுங்கோ. அப்போ ஸ்ரீமந் நாராயணனே பரதேவதை அப்படிங்கிறத திருமழிசை ஆழ்வார் ரொம்ப ஸ்பஷ்டமா தெரிவித்தார். ஏன்னா முதல் மூன்று ஆழ்வார்களும் ஓர் கருத்தைச் சொன்னார்கள். நாராயணனைப் பற்ற வேண்டும் அப்படின்னு அவா சொல்லிடுவா. ஆனா நாலாவது ஆழ்வார் அதையே கொஞ்சம் மாத்திப்பர். எங்க பூர்வர்கள் முன் ஆழ்வார்களெல்லாம் ரொம்ப சாதுக்கள். ஆனா நான் அப்படியெல்லாம் இல்லே. எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும் என்று திருமழிசை ஆழ்வார் சொல்றச்சேவே, அவாள்லாம் சொன்னது என்ன? நாராயணனைப் பற்றுங்கோள்ன்னுட்டு. இப்போ நான் சொல்லட்டுமா, அவனைத் தவிர இன்னொருத்தனைப் பற்றக்கூடாது. இது இவர் பேசினது இப்போ. அதுக்கு ‘அந்வயம்’, இதுக்கு ’வியதிரேகம்’ன்னு பேர். இப்போ ஒரு ஊருக்குப் போறேன். ‘இந்த ஸ்வாமி நல்ல வித்வான்’, அப்படின்னா அவர் நல்ல வித்வான்னுதான் அர்த்தம் கிடைக்கும். ஆனாலும் கொஞ்சம் சந்தேகம் இருக்கும். அதே இப்படி கேட்டா, ‘இவரைத் தவிர இந்த ஊரிலே வித்வானே இல்லே’. இப்படிச் சொன்னா இவர் நிச்சயமான வித்வான்னு ஆயிடுச்சோல்லையோ? அதனாலதான் நாராயணனே பரதேவதைன்னு முதல் மூன்று ஆழ்வார்களும் சொல்ல, அதே ஸ்ரீமந் நாராயணனைத் தவிர மற்றொருத்தர் தேவதையே அல்ல, என்பதைத் திருமழிசையாழ்வார் சாதித்துப் போனார். ஐந்தாவது ஆழ்வார் நம்மாழ்வார். நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர். நம்மாழ்வார் நான்கு திவ்யப்ரபந்தங்கள் பாடினார். திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. ரிக், யஜுஸ், அதர்வம், சாமம், இந்த நான்கு வேதங்களுக்குச் சமமாக இந்த நான்கு பிரபந்தங்களைப் பாடியிருக்கார் ஆழ்வார். அதிலே முதல் பிரபந்தம் திருவிருத்தம். திருவிருத்தத்தின் கடைசியிலே யாரை நாம் பற்ற வேண்டும்? நாம் பகவானைப் பற்றப் போகிறோமே, நமக்குள் உயர்வு தாழ்வுகள் உண்டா? இன்னான் பகவானைப் பற்றலாம், இன்னான் பற்றக்கூடாதுன்னு ஏதேனும் உண்டா? நமக்குள் ஏற்றத்தாழ்வுகளை பகவான் பார்க்கிறாரா? இதைப் போல பல சந்தேகம் வருமோல்லையோ? ஐந்தாவது ஆழ்வாரான இவர் முதல் நான்கு ஆழ்வார்கள் சொன்னதையும் சேர்த்துண்டார். பகவானையே பற்றுங்கோ, மற்ற பேரைப் பற்றாதீங்கோ. பற்றப் போறச்சே உங்க மனசிலே ஒரு சந்தேகம் வந்துடலாம். நாம தாழ்ந்தவனாச்சே, பணத்தாலேயோ, படிப்பாலயோ, அழகாலயோ, குலத்தாலயோ, எதுனால வேணா நாம தாழ்ந்தவர்களா இருக்கலாம். இப்படி ஆச்சேன்னு ஒரு சந்தேகம் வந்தால், கவலைப்பட வேண்டாம். நான் ஒரு பெருமானைக் கைகாட்டிக் குடுக்கிறேன். அவர் எல்லாரையும் சமமாகத்தான் ஏற்றுக் கொள்ளுகிறார். இதை நான் கண்ட நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள், என்று திருவிருத்தத்திலே சாதிக்கிறார்.
(திருவிருத்தம் – 99) ஈனச் சொல்லாயினுமாக – என் வார்த்தை ஏழை சொல். ஏழை சொல் அம்பலம் ஏறாதுன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். இதைச் சொல்றவர் நம்மாழ்வர். பரம பக்தாக்ரேசர். ஆழ்வார்களுக்குள்ளே தலைவர். ஆழ்வார்ன்னா பகவானே உருகிப் போய்டறார். அப்படி இருக்கறவர் சொல்லிக்கிறார், நான் ஏழை. என்கிட்ட நயா பைசா கிடையாது. இது சொல்லே ரொம்ப தாழ்ந்த சொல். அம்பலம் ஏறுமான்னு எனக்குத் தெரியாது. ஆனா எனக்குத் தெரிஞ்ச நல்லதை நான் சொல்லிடுறேன். எடுத்துக்குங்கோ, எடுத்துக்காது போங்கோ. ஈனச் சொல் – தாழ்ந்த சொல். என்ன சொல்லப் போறீர்ன்னு நாம கேட்டோம். எரிதிரை வையம் முற்றும் ஏனத் திருவாய் இடந்த பிரான் – வராகப் பெருமான்தான் எல்லாராலயும் பற்றப்பட வேண்டியவன். இன்னைக்கும் பூ வராகனாகா, லக்ஷ்மி வராகனாக, பூமிப்பிராட்டியோடே வராகனாக எத்தனை திவ்ய தேசங்களிலே பெருமான் சேவை சாதிக்கிறார். அந்த எம்பெருமான்தான் உங்களாலே பற்றத் தகுந்தவன். இதுதான் எனக்குத் தெரிஞ்ச நல்லது. நீங்க இல்லே, அவன் இல்லே, யாருமே இல்லே. இருங்கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்ற எல்லா எவர்க்கும் – வானத்தில இருக்கட்டும், பூமியில இருக்கட்டும், எந்த லோகத்தில வேணா யார் வேணா இருக்கட்டும். ஞானப்பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லது – அவ்வெம்பெருமான் திருவடிகளைத்தான் பற்ற வேண்டும்ன்னு சாதிக்கிறார். இதை ஸ்ரீபராசர பட்டர் ரொம்ப வேடிக்கையா தெரிவிப்பராம். ஏன் வராகப் பெருமானைப் பற்ற வேண்டும்? அவரைப் பற்றினாத்தான் நமக்கு உஜ்ஜீவனம் கிட்டும். ஏன் மத்ஸ்ய மூர்த்தியைப் பற்றினா என்ன? முதல் அவதாரம், மீன் அவதாரம் எடுத்தாரே பகவான். அவரைப் பற்றினா என்ன? அவரே கரையேற முடியாது. அப்போ சம்சார சமுத்திரல அழுந்திக் கிடக்கிற நம்மளையா கரையேற்றப் போறார்? அவர் கரையேறினால்ல நம்மளைக் கரையேத்தறதுக்கு? வேண்டாம் விட்டுடுங்கோ. கூர்மவாதாரத்தைப் பற்றலாம்ன்னா, அவர் முதுகிலேயே மந்தர மலை அழுத்திண்டு இருக்கு. ஏற்கனவே சம்சார மலை என்னை அழுத்திண்டு இருக்கு. அவர் வெளில வர மாட்டார், விட்டுடுங்கோ. சரி, நரசிம்ஹாவதாரத்தைப் பற்றலாமான்னா, பற்றலாம். பிரகலாதனுக்கு ரொம்ப ஆப்தர்தான். ஆனா கழுத்துக்கு மேல ஒரு மாதிரி இருக்கார், கழுத்துக்கு கீழ ஒரு மாதிரி இருக்கார். சந்தேகமா இருக்கு. அதனால அதை வேண்டாம்னுட்டார். சரி, வாமன மூர்த்தியைப் பற்றலாமோன்னா, சின்னக் காலைக் காட்டிட்டு, பெரிய காலால அளந்துட்டாரோல்லையோ? ஆரம்பமே வஞ்சனை. ஏமாத்தத்துலேயே தொடங்கிட்டார். வாமனனை விட்டுடுங்கோனுட்டார். சரி, கண்ணனைப் பற்றலாமான்னு கேட்டா, பற்றலாம். கைப்பிடித்த ஆண்டாளே கண்ணனைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கா. நமக்குப் பயமாயிருக்கு. ‘மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே’. நன்னா பொய் சொல்லக்கூடியவர். சாமர்த்தியமே இல்லாமல் குட்டு வெளிப்பட்டுற அளவுக்குப் பொய் சொல்லக் கூடியவர். இதெல்லாம் ஆண்டாள் கண்ணனைப்பத்திச் சொல்லியிருக்கா. பொய் சொல்றவரை நம்பி நாம என்ன பண்ண முடியும் இப்போ? கீதைன்னு சொன்னா, எல்லாரும் கேட்டு நடங்கோன்னுவா. கண்ணன் நடந்தபடி நடங்கோன்னு ஒருத்தருமே சொல்லமாட்டா. கீதைல சொல்லியிருக்கறபடி நடங்கோன்னு சொல்லுவாளே தவிர, அவர் எப்படி நடந்தாரோ அப்படி நாம நடக்க முடியுமா? இராமனாயிருந்ததுன்னா இராமன் நடந்தபடி நடக்கலாம். கண்ணன்? சொன்னபடி நடக்கலாம். அதனாலே இப்படி ஒருத்தொருத்தருக்கும் ஓரோரு கஷ்டம் இருக்கறச்சே, பூமிப்பிராட்டியை பிரளய சமுத்திரத்துக்குள்ளே மறைத்து வைக்க, அப்போது பூமியை இடர்ந்தெடுத்த வள்ளலே வராகப் பெருமான்தானே? எப்போ அந்த சமுத்திரத்துலேர்ந்து பூமியை எடுத்துட்டாரோ, அதேபோல சம்சார சாகரத்திலேர்ந்து நம்மையும் இடர்ந்தெடுத்து விடுவார். ஆகையால் நான் கண்ட நல்லது வராகப் பெருமானைப் பற்றுவதே. வராக அவதாரத்துக்கும் நம்மாழ்வாருக்கும் நெருங்கின தொடர்பு. அவனைத்தான் ஞானப்பிரான்னு இந்தப் பாசுரத்தாலே கொண்டாடுகிறார். இன்னைக்கும் ஆழ்வார் திருநகரிக்குப் போனீள்ன்னா, ஞானப்பிரான் சன்னிதி தனி சன்னிதி. பொலிந்த நின்ன பிரான் சன்னிதி, பக்கத்துல திருப்புளி ஆழ்வார், திருப்புளியாழ்வார் அடியிலே நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கார். இந்தப் பக்கத்துலே பிரதக்ஷணம் வரச்சே ஞானப்பிரான் சன்னிதி. அந்த திவ்யதேசத்து ஞானப்பிரானுக்குத்தான் இந்தப் பாசுரத்தையே பாடினார் ஆழ்வார். அடுத்தது குலசேகர ஆழ்வார், ஆறாவது ஆழ்வார். மாசி புனர்வசுவில் திருவஞ்சிக்களத்தில் அவதரித்தவர். பெருமாள் திருமொழிங்கற 105 பாசுரங்கோளேடே கூடின, அற்புதப் பிரபந்தம் பாடியுள்ளார். அவ்வாழ்வார் ஒரு முக்கியக் கருத்தை, திருவித்துவக்கோடுங்கிற மலையாள திவ்யதேசம், அதைப்பத்தி வெளிப்படுத்துகிறார். எங்க முதல் ஆழ்வார்கள் சரணாகதி பண்ணுன்னு சொன்னா. அதைப் பண்ணுவது ரொம்ப சுலபம்ன்னும் சொன்னா. திருமழிசையாழ்வார், அதைப் பண்ணவேண்டியது பரதேவதையான ஸ்ரீமந் நாராயணனிடத்திலதான்னு சொன்னார். அதே எம்பெருமான்தான் வராகப் பெருமான், அவனைப் பற்றுங்கோள்ன்னு எங்க ஆழ்வார் சொன்னார். ஆனா மக்கள் மனசில ஒரு சந்தேகம் இருந்துண்டிருக்கே. சரணாகதி பண்ணிட்டா மறுநாள்லேர்ந்து சுகமா இருக்கலாமா? கஷ்டங்களெல்லாம் போய்டுமா? பணமாக் கொட்டுமா? வீடு கிடைக்குமா? ஆரோக்யக்கேடு போய்டுமா? கல்யாணமாயிடுமா? இதெல்லாம் கேட்கறாளேன்னார். ஆழ்வார் சொன்னார், இன்னும் கஷ்டம் வரும். அதை வேணா நான் சொல்லலாமே தவிர, இருக்கற கஷ்டமெல்லாம் போய்டும்ன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன் ஆழ்வீர் இப்படி சொல்றீர்ன்னா, இப்போ சரணாகதி பண்ணிட்ட பிற்பாடு, ஒருவேளை இந்த வாழ்க்கை ரொம்ப சுகமா அமைஞ்சுடுத்துன்னு வச்சுக்கங்கோ, அப்புறம் அடுத்த ஜன்மம், மோக்ஷம் போவமான்னு தெரியாது. இவனுக்கு கஷ்டப்படறனால்லதான் வைகுண்டத்துக்கு போய்டலாம்ன்னு தோன்றது. சம்சாரம் மட்டும் ரொம்ப சுகமா இருந்துடுத்துன்னு வச்சுக்கங்கோ, அப்போ அடுத்த பிறவி ஒன்னு எடுத்து, இந்த சுகத்தை நாம் ஏன் இன்னும் அனுபவிக்கக்கூடாது என்று தேவையற்ற ஒரு ஆசை வந்துடும். பெருமாள் இந்தக் கஷ்டத்துல வைச்சிண்டிருக்கச்சேயே, இன்னொரு ஜென்மா எடுக்கலாமான்னு இவன் பார்க்கறானே, அவர் இன்னும் சுகத்துல வேற இவனை இன்னும் வைச்சுட்டார்ன்னு வச்சுக்கங்கோ, வைகுண்டத்தைப் பற்றி இவன் நினைக்கவே மாட்டான். அதைத்தான் குலசேகர ஆழ்வார் சாதிக்கிறார். நீ கஷ்டத்தைக் குடு. நீ கஷ்டத்தைக் குடுத்தாலும் நான் அதை நல்லதாகத்தான் ஏற்றுக் கொள்ளுவேன். ஏன்னா இந்த கஷ்டத்தை நீ குடுக்கறதே, நீ என்னை பக்குவப்படுத்தறேங்கறது எனக்குத் தெரியும். எத்தனை இடத்தில நான் கஷ்டத்தை அனுபவிச்சேன், ஆனா அது நல்லதாத்தானே இருக்கு. எங்கேங்கறதத்தான் இந்தப் பத்துப் பாசுரத்துல சொல்றார்.
(பெருமாள் திருமொழி - 5.1) ஒரு குழந்தையை ஒரு அம்மா ஒரே கோபத்தால முதுகில ஓங்கி வைச்சு, உன்னை வெட்டிடுறேன் பார், நீ விஷமம் பண்றியாங்கறா. உடனே நீ எப்ப என்னைக் கோவிச்சிண்டியோ, எப்ப என்னை வெட்டிவேன்னு சொன்னியோ, இனிமே நீ எனக்கு அம்மா இல்லே. நாளைலேர்ந்து பக்கத்து வீட்டுக்காரிதான் எனக்கு அம்மா. அப்படின்னு அந்தக் குழந்தை எங்கேயாவது போகுமா? அவளைப் பார்த்து ஒரே கோவமா சத்தம் போட்டு ஒருதரம் அழுதுட்டு, நாலடி கிட்டக்க வந்து அவ காலையே கட்டிண்டு அழும். இந்தக் குழுந்தைக்கு அதுதான் வழக்கமே தவிர, அதுக்கு அந்த காலை விட்டு இன்னொரு கால் தெரியவே தெரியாது. ஆழ்வார் தெரிவிக்கிறார், அதைப்போல பகவன்னு நீ என்ன வேணா துன்பத்தைக் குடு. நான் அறிந்தது உன் திருவடிகளைத்தான். இதைத்தவிர இன்னொரு இடத்தில என் புத்தி போய்டவே போய்டாது, என்று இது ‘அநந்யகதித்வம்’, வேறு கதி எனக்குக் கிடையாது. புகல் உன் திருவடியே தவிர வேறு எனக்குக் கிடையாது. பாதுகை, பெருமாள் எத்தனை உதைச்சாலும் அவர் திருவடிகளையே கெட்டியா பிடிச்சிண்டிருக்கு. பாதுகா சஹஸ்ரத்திலே தேசிகன் தெரிவித்தார், பாருங்க்கோ அந்த பாதுகை எத்தனை உதைச்சாலும் கெட்டியா பிடிச்சிண்டிருக்கதாலே, அதுக்கு பட்டாபிஷேகமே ஆயிடும். நாம தெரிஞ்சுக்க வேண்டியது அதுதான் இப்போ. கடைசில பாதுகைக்கு பட்டாபிஷேகம் ஆச்சு. பரதனுக்கும் ஆகலே, இராமனுக்கும் ஆகலே. ரெண்டு பேருக்கும் இல்லே, பாதுகை பட்டாபிஷேகம் பண்ணிட்டுப் போய்டுத்தேன்னா, எதனாலெ இப்போ, இராமன் திருவடிகளை விடாம பற்றிக் கிடந்ததோ இல்லையோ? நாமும் பெருமான் திருவடிகளைப் பிடிச்சிருந்தோம்ன்னா, எத்தனை துன்பம் அவர் குடுத்தாலும் அதைத் துன்பமா ஏத்துக்கக்கூடாது. நம்மளைப் பரீட்சை பண்ணி, இன்னும் பக்குவமாக்குகிறார்ன்னுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எங்கே கண்டோம்ன்னா,
(பெருமாள் திருமொழி - 5.4) இந்தப் பாசுரம்தான் குலசேகர ஆழ்வாருடைய செய்தி. வைத்தியன் வந்து நமக்கு ஒரு இடத்தில ரணம் வந்துடுச்சுன்னா, அதை வந்து வெட்டி, அறுவை சிகிச்சை பண்றாரோல்லையோ? அவர் வெட்டறாரா இல்லையா? எனக்கு வலிக்கப் போறதா இல்லையா? வலி குடுக்கறாரேங்கறதுக்காக நான் கோவிச்சுக்கறதே இல்லையே. பதிலா நான் சம்பாவனை பண்றேன். எங்கயாவது யாரனும் லட்ச ரூபாய் குடுத்து, அடியேனை அவசியம் நீங்க வெட்டணும்ன்னு கேள்விப்பட்டிருக்கீளா? எங்கயுமில்லை. வைத்தியர் ஒருத்தரிடத்திலதான் இது நடக்கும். அப்பன்னா என்ன அர்த்தம்? இப்ப எனக்கு ஒரு வலி ஏற்பட்டாலும் நாளைக்கு வலி தீர்ந்து போய்டும்ங்கிற நம்பிக்கைதானே? பகவன்னு நீ என்ன கஷ்டத்தை எனக்குக் குடுத்தாலும், இது இன்னைக்கு இருக்கிற வலி, நாளைக்கு அந்த வலி போய்டும்ன்னு எனக்குத் தெரியும். ஆகையால் நீ என்ன துன்பம் குடுத்தாலும் அது கண்டு நான் கலங்குவதாக இல்லை. திருவடிகளைப் பிடித்தது பிடித்ததே. அப்படித்தான் சரணாகதன், ப்ரபன்னன் இருக்க வேண்டும் என்பதை குலசேகராழ்வார் தன்னுடைய பெருமாள் திருமொழியாலே சாதித்தார். அடுத்து ஏழாவது ஆழ்வார் பெரியாழ்வார். பெரியாழ்வார் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆனி ஸ்வாதியில் அவதரித்தவர். சம்ப்ரதாயத்திலேயே மிக முக்கியமான சமாஸ்ரயண வைபவத்தை பெரியாழ்வார்தான் பெரியாழ்வார் திருமொழியிலே தெரிவிக்கிறார். குலசேகரர் சரணாகதி பண்ணிண்டவன் விட்டுட்டு போகக்கூடாதுன்னு சொன்னார், வாஸ்தவம்தான். கேட்டு பயந்து போய்டாதீங்கோன்னார் பெரியாழ்வார். ஓ, பெருமாள் கஷ்டமே குடுத்துட்டு இருப்பார் போலருக்குன்னு நீங்க பயந்துட வேண்டாம். உண்டு, எத்தனையோ நன்மைகளைச் செய்கிறான். நாம ஒன்னும் பெரிசா கஷ்டப்பட வேண்டிய தேவையே இல்லே. பகவத் சமாஸ்ரயணம் பண்ணிக் கொள்ள வேண்டும். அவனுடைய சங்கத்தையும், சக்கரத்தையும் நம் மேல் தோளிலே ஒத்திக் கொள்ள வேண்டும். அதைப் பண்ணிக் கொண்டு, என்னைக்கு பகவானுடைய புருவம் நெறிக்கப் போறது, என்னிக்கு அவர் ஜாடை காட்டப் போறார், அப்ப நான் மோக்ஷம் போய்டலாம், அப்படின்னு காத்துண்டே இருக்கணுமாம். வேற ஒண்ணும் நீ கஷ்டப்பட வேண்டிய தேவையே இல்லே.
(பெரியாழ்வார் திருமொழி - 44.1) பெரியாழ்வாருடைய திருமொழியில் ரொம்ப ஆச்சர்யமான பாசுரம். சென்னியோங்கு தன் திருவேங்கடம் உடையாய் – திருவேங்கடமுடையானே, ஸ்ரீநிவாசப் பெருமானே, உலகத்தனையும் வாழ்வதற்காக வந்து நிற்கும் நம்பி, உன்னிடத்தில ஒன்னு நான் பண்ணினுட்டேன். இனிமே எனக்குக் கவலையே இல்லே. என்னையும் என் உடைமையையும் – என்னைன்னு சொன்னது ஜீவாத்மாவை. என் உடைமைன்னு சொன்னது சரீரத்தையும், மத்த பேரையும். உன் சக்கரப்பொறி ஒத்திக் கொண்டு – சக்கரப்பொறி ஒத்தி கொள்வதுதான் சமாஸ்ரயணம் பண்ணி வைத்தல். என்னத்துக்காக ஸ்ரீவைஷ்ணவர்கள் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கணும், சமாஸ்ரயணம் பண்ணிக்கணும்ன்னு சொல்றோம்? ஒரு பெண்ணைப் பார்த்தால் கல்யாணம் ஆனவள்ன்னு எப்படிச் சொல்றோம்? மெட்டி இருக்கா, திருமாங்கல்யம் இருக்கா, குங்குமம் இருக்கா, வளையல் இருக்கா? அடையாளம் சொல்லிடறோமோல்லையோ? அப்படின்னா கல்யாணம் ஆனவள்ன்னு அர்த்தம். பரமாத்மா ஸ்ரீமந் நாராயணனுக்கும், இந்த ஜீவாத்மாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்குன்னு அடையாளம் வேண்டாமா? ஒரு பதிவிரதைக்கு, சுமங்கலிக்கு எப்படி அடையாளம் இருக்கிறதோ, அதைப்போல ஓரொரு ஜீவாத்மாவுக்கும் அடையாளம் இருக்கான்னா, சங்க சக்கர லாஞ்சனம்தான் அடையாளம். இந்த அடையாளத்தை ஒத்தினுட்டு, நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – எப்ப தேவரீர் அனுக்கிரகிக்கப் போகிறீர்ன்னு அடியேன் காத்திருக்கேன். எப்ப புருவத்தை நெறிக்கப் போகிறீர்? எப்ப கண் ஜாடை காட்டி என்னை மோக்ஷத்துக்கு அழைச்சுட்டுப் போகப்போறீர்? ரொம்ப சுலபமா கேட்டுட்டார் ஆழ்வார். அவ்வளவுதானான்னா, அவ்வளவுதான். பெருமாளை நான் எப்போ பற்றியாச்சோ, ரொம்ப பெரியவரை நான் பற்றியிருக்கேன். அவர் கண்ஜாடை காட்டினா மோட்சம் கிடைச்சுடப் போறது. அப்போ பெரியாழ்வார் சொன்னது, சமாஸ்ரயணம் பண்ணிண்டு, பெருமாள் எப்போ மோட்சம் குடுப்பார்ன்னு ஜாடைக்குக் காத்திண்டு இருங்கோ. அவர் அனுமதிக்குக் காத்திண்டிருங்கோ. சுலபத்துல கிடைச்சுரும். இது பெரியாழ்வார் சொன்ன செய்தி. (தொடரும்) -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் செய்தி உபந்நியாசம் – Boston) ஆழ்வார்கள் செய்தி – பாகம் 2முந்தைய பாகம் – பாகம் 1 முதல் ஆழ்வார் பொய்கையாழ்வார். பொய்கையாழ்வாருக்கு சிறப்பே அவர்தான் முதலில் பூலோகத்தில் அவதரித்தார். அவருக்குப் பிற்பாடுதான் இத்தனை ஆழ்வார்களும் பிறந்து, இவ்வளவு பிரபந்தங்களையும் பாடியுள்ளார்கள். பொய்கையாழ்வார் ’முதல் திருவந்தாதி’ன்னு பாடினார். 100 பாசுரங்கள் கொண்டது. முதலாழ்வார்கள் மூவரும், திருக்கோவலூரில் மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரம இடைகழியில் சந்தித்தார்கள். பெருமாளே வந்து சேவை சாதித்தார். அதிலிருந்துதான் பிரபந்தம் பாட ஆரம்பித்தார்.
(முதல் திருவந்தாதி – 1) நம்முடைய இடர்கள் அத்தனையும் நீங்க வேண்டும், அதற்குத்தான் நான் இந்த நூறு பாசுரங்களைப் பாடுகிறேன், என்று தெரிவித்தார். வெண்பா பாசுரங்கள். பொய்கையாழ்வார் ஒரு பாசுரத்தாலே தெரிவிக்கிறார்.
(முதல் திருவந்தாதி – 67) ஆத்மா, தன் ஞானம் மலர்வதற்காக ஸ்ரீமன் நாரயணனையே எதிர்பார்க்கிறான். இதுதான் முதல் கருத்து நாம பார்க்க வேண்டியது. இந்த ஜீவாத்மாவுக்கு அநேக கால அவித்யா, அஞ்ஞானம். அது மூடிண்டு இருப்பதால்தான் நாம் சம்சாரத்திலே உழலுகிறோம். நாம் எதுக்கு சம்சாரத்திலே உழலணும்? ஏன் ஸ்ரீவைகுண்டத்திலே இல்லே? கர்மம் காரணம். அநேக காலமாய் கர்மங்கள், பாப புண்ணியங்களைச் சேர்த்து வைத்துள்ளோம். அது திரும்பத் திரும்ப நம்மை சம்சாரத்திலே பிறக்க வைக்கிறது. பிறக்கும்போது திரும்ப பாப புண்ணியங்களைச் சேமிக்கிறோம். அடுத்த ஜன்மம் பிறந்து விட்ட இடத்தில் கர்மங்களைத் தொடருகிறோம். இது எங்கேயவாது ஒரு இடத்தில் உடைஞ்சாத்தானே, இந்த சுற்றுச்சுழல்லே இருந்து நாம வெளியே வரணுமோல்லையோ? என்ன பண்ணலாம்? யாரை எதிர்பார்க்கலாம்ன்னா, ஜீவாத்மா தேகத்தைக் காட்டிலும் வேறுபட்டவன்ங்கிற ஞானம் வரணும். அவனுக்கு சம்சாரம் துக்கமயம், மோக்ஷம்தான் சுகமயம்ங்கிற ஞானம் ஏற்படவேண்டும். எப்போ தேக விலக்ஷணன் ஜீவாத்மாவோ, பகவானுக்கு சேஷன் ஜீவாத்மாங்கிற ஞானம் ஏற்பட வேண்டும். இந்த ஞானத்துக்கெல்லாம் அவர் யாரை எதிர்பார்ப்பர்? யாராவது ஒருத்தர் சொல்லிக் குடுக்க வேண்டாமா? அப்போதானே ஞானமே பிறக்கும்? யாரைங்கிறதைத்தான் இந்தப் பாசுரத்தாலே பொய்கையாழ்வார் சாதிக்கிறார். பெயரும் கருங்கடலே நோக்குமாறு – எந்த நதி ஓடினாலும் அது கடைசில சமுத்திரத்தைத்தான் நோக்கும். கருங்கடலே நோக்கும் ஆறு, ஆறு கடலைத்தான் எதிர்பார்க்கும். உயிரும் தருமனையே நோக்கும் – ஓர் உடலைவிட்டு உயிர் பிரிந்ததுன்னால், அந்த உயிர் என்ன தரும காரியங்கள் பண்ணியிருக்கு, பாபமா, புண்ணியமா? இதை அலசிப்பார்த்து முடிவு குடுக்க வேண்டியது யார்? எமதர்மராஜனைத்தான் அது எதிர்பார்க்கும். ஒன்பூ உயரும் கதிரவனையே நோக்கும் – ஒரு தாமரை கீழ இருக்கறது மலரணும்ன்னால் அது யாரை எதிர்பார்க்கும்? சூரியனைத்தான் எதிர்பார்க்கும். சூரியன் எங்க இருக்கார், தாமரை எங்க இருக்கு? இங்க ஏதோ ஒரு குளத்தில இருக்கு தாமரை. எங்கேயோ இருக்கார் சூரியன். ஆனா அந்த சூரியன் உதித்தால்தான் இந்தத் தாமரை மலருகிறது. அந்த சூரியன் அஸ்தமிச்சுட்டார்ன்னா தாமரை கூம்பிப் போகிறது. இதை ஒருத்தன் பார்த்துகிட்டே இருந்தான். அவனுக்கு வேடிக்கையா தோணித்து. இது என்னத்துக்கு எங்கேயோ இருக்கிற சூரியனைப் போய் இந்தத் தாமரை எதிர்பார்க்கணும்? நான் வேற பண்றேன்னு, ஒரு சட்டி பானையை கொண்டு வந்தான். நிறைய தணலை அதுக்குள்ள போட்டான். எப்படியும் சூடு இருந்தாத்தானே தாமரை மலருகிறது? அதுனால நான் கொண்டுபோய் இந்த பானை சூட்டை பக்கத்துலே வைக்கிறேன். எங்கேயோ இருக்கிற சூரியனுடைய ஒளிக்கே இது மலருகிறதே? நான் வைத்த சூட்டுக்கு இது மலரட்டும்ன்னு பக்கத்துலே கொண்டு போய் வைத்தால், மலராதது மட்டுமல்ல உலர்ந்தும் போகும். இப்போ மூன்று பார்த்திருக்கிறோம். நதியாக இருந்தால் கடலையே எதிர்பார்க்கும், உயிராக இருந்தால் எமதர்மராஜனையே எதிர்பார்க்கும், தாமரையாக இருந்தால் சூரியனையெ எதிர்பார்க்கும். இந்த மூன்றும் எவ்வாறு உண்மையோ, அதேபோல ஜீவாத்மா, ஜீவாத்மாவினுடைய ஞானமாகிற தாமரை மலர்வதற்கு ஸ்ரீமந் நாராயணனான சூரியனையே எதிர்பார்க்க வேண்டும். வேற வழி கிடையாது என்பதைத்தான் ஆழ்வார் இந்த பாசுரத்திலே தெரிவிக்கிறார். அப்போ நம்முடைய ஞானம் மலரணும்ன்னுதான் பகவான்கிட்ட பிரார்த்திக்கணும். ஆத்மா தன்னுடைய ஞானம் மலர்வதற்காக ஸ்ரீமந் நாராயணனையே எதிர்பார்க்கும், உண்மை. ஆனால் நாம அதில் ஒன்றே ஒன்றை மட்டும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
(பெருமாள் திருமொழி – 5.6) இது மற்றொரு ஆழ்வாரினுடைய (குலசேகரர்) பாசுரம். கீழ ஒருத்தனைப் பற்றி பார்த்தோமே, தாமரை மலருவதற்காக சட்டியிலே நெருப்பைக் கொண்டு போய் வைத்தான் என்று, இது ஒரு பக்கம். அப்போ சூரியன் மலர்த்துவார்ன்னு தெரியறதோல்லையோ? தாமரையை குளத்துலேர்ந்து எடுத்து நிலத்தில போட்டுடுங்கோ. அதுக்கப்புறம் அந்த சூரியனுடைய ஒளி தாமரை பேர்ல பட்டா என்ன ஆகும்? அவர் மலர்த்தமாட்டார், உலர்த்திடுவர். சூரியன்தான் மலர்த்தனும், ஆனா ஜலத்திலே இருந்தாத்தான் மலர்த்துவர். ரெண்டுமே முக்கியம். ஜலத்தைவிட்டு தாமரை வெளிலே வந்துட்டாலும் சூரியன் மலர்த்தமாட்டார். ஜலத்திலே இருக்கறப்பவே சட்டியிலே நெருப்பைக் கொண்டுபோய் வைத்தாலும், அது மலராது, உலர்ந்துதான் போகும். அதேபோல பகவான்தான் ஜீவாத்மாவுக்கு ஞானவிகாசத்தை ஏற்படுத்தனும். ஆனா அந்த தண்ணீர் சம்பந்தம் எதுன்னா, ஆச்சார்ய சம்பந்தம். ஆச்சார்யன்கிற குளத்திலே ஜீவாத்மாங்கிற தாமரை இருக்கிறவரைதான் பகவான்ங்கிற சூரியன் அதை மலர்த்துவர். ஆச்சார்ய சம்பந்தத்திலேர்ந்து இந்த ஆத்மா வெளியே வந்துடுத்துன்னால், அப்போ அதே பகவான் மலர்த்தமாட்டார், உலர்த்திடுறார். அதனாலே ஆச்சார்ய சம்பந்தமாகிற குளத்திலே நாம எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இது முதல் திருவந்தாதியினுடைய கருத்து. பொய்கையாழ்வாருக்கு அடுத்தாப்போலே பூதத்தாழ்வார். அவர் சொல்றார், எங்க பெரியவர் பொய்கையாழ்வார் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போய்ட்டார். ஆத்மா ஞான விகாசத்துக்கு பகவானைத்தான் எதிர்பார்க்கணும்ன்னு சொல்லிட்டார். சாதகப்பறவையெல்லாம் ஆகாசத்தையே பார்த்திண்டு இருக்கும். மழை மேகத்திலேர்ந்து ஜலம் கொட்டினா சாப்பிடும். அப்படி இல்லையா, பக்கத்திலே இருக்கிற ஜலத்தையெல்லாம் அது தீண்டாது. மழை பொழியலே, உயிரையே விட்டுடும். இதைப்போலத்தான், தம் ப்ரப்பன்ன ஜன சாதகாம்புதம்ன்னு தெரிவிக்கிறார்கள். அதேபோலத்தான் சரணாகதன் ப்ரபன்னன், பகவானை மட்டும்தான் எதிர்பார்ப்பர். அவர் அனுகிரகத்தைப் பொழியலே, இன்னொருத்தரை அவன் எதிர்பார்க்கவே மாட்டான். உயிரையே விட்டுடுவன் ப்ரபன்னன். அதைத்தான் இப்போ பூதத்தாழ்வார் தெரிவிக்கிறார். முதல் ஆழ்வார், பகவானைத்தான் ஞானவிகாசத்துக்கு எதிர்பார்க்கணும்ன்னு சொல்லிட்டுப் போய்ட்டார். அவ்வெம்பெருமான்தான் பெரிய மேகத்தைப்போலே. குணம் திகழ்க் கொண்டல்ன்னு சொல்லுகிறோமோல்லையோ? மேகவண்னன், முகில்வண்ணன் என்று மேகத்தைப் போல கருத்திருக்கிறவர். மேகத்தைப் போல ஔதார்யம், வாரிக் குடுக்கக்கூடிய தன்மை படைத்தவர். வள்ளல் தன்மை படைத்தவர். அவ்வெம்பெருமானிடத்திலே நாம என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்தால் பகவான் அனுகிரகிச்சுடறார், அப்படிங்கிறதை இரண்டாவது ஆழ்வார் ஒரு பாசுரத்தாலே தெரிவிக்கிறார்.
(இரண்டாம் திருவந்தாதி – 16) இது இரண்டாம் திருவந்தாதி பாசுரம். தனக்கடிமை பட்டது தான் அறியான் ஏனும், தனக்கு – பகவானுக்கு. அடிமை பட்டது – ஜீவாத்மாக்கள் அடிமைப்பட்டிருப்பது. தான் அறியான் ஏனும் – அதை ஜீவாத்மா புரிஞ்சுக்கவே இல்லைன்னு வச்சுப்போம், அப்போ விட்டுடலாமா, இழந்து போய்ட வேண்டியதுதானான்னா, வேண்டாம் வேண்டாம், அதுவரைக்கும் நான் சொல்றதைச் செய்யுங்கோ, மனத்தடைய வைப்பதாம் மாலை – மால், திருமால். அவனை உங்கள் மனசில வையுங்கோள். இந்த அடிமை, கைங்கர்யம் பண்ணனும், அவன் யாரு, நீங்க யாரு, தெரியறதெல்லாம் அப்புறம் பார்த்துப்போம். முதல்ல திருமாலைக் கொண்டு வந்து உங்கள் மனசில வச்சுக்கங்கோ. அப்படின்னா என்ன அர்த்தம்? பகைமை பாராட்ட வேண்டாம்ன்னு அர்த்தம். அவன்கிட்ட நீங்க பக்தனா இருக்கறது, கைங்கர்யம் பண்றதெல்லாம், நாளைக்கு. அதுக்கு முதல்ல ஒரு வேலை செய்யுங்கோ, பெருமான்னா துவேஷித்து திரும்பிண்டு போறீர்களோல்லையோ, அது வேண்டாம். மனத்தடைய வைப்பதாம் மாலை, மனசில கொண்டு போய் திருமாலை வைங்கோ. வைச்சுட்டு நீங்க பாட்டுக்கு காத்திண்டிருங்கோ. என்னைக்கு எது நடக்குமோ அன்னைக்கு அது நடக்கும்ங்கிறார். மழை பொழியும் போது ஜலத்தை சேமிக்கணும்ன்னால், குளம் வெட்டணும். குளம் வெட்டி வைத்திருந்தால்தான் மழை பொழியும்போது சேமிக்க முடியும். ஒருத்தன் என்ன பண்ணினான், கிடுகிடுன்னு ஒரு குளத்தை வெட்டினான். வெட்டி முடிச்சுட்டு ஆகாசத்தைப் பார்த்து, நான் குளம் வெட்டியாச்சு, நீ மழை கொட்டலாம்ன்னான். அதெல்லாம் கொட்டாது. நான் குளம் வெட்டி வச்சிருக்கறதால மேகம் மழை பொழியுமா என்ன? நான் குளம் வெட்டி வச்சிக்கணும், மேகம் என்னைக்கு மழை பொழியுமோ, அன்னைக்குப் பொழியும். ஆனா குளம் வெட்டாமயே விட்டுட்டா மழை பொழியறப்போ சேமிக்க முடியாது. குளம் வெட்டணும், வெட்டினதுக்காக மழை பொழியாது, ஆனா மழை பொழியறச்சே சேமிக்கணும்ன்னா வெட்டித்தான் ஆகணும். இது இப்படித்தான். அதே போல மனத்தடைய வைப்பதாம் மாலை, பகவானே நீயே சரணம்ன்னு சொல்லிடு, சரணாகதி பண்ணிடு. பண்ணிட்ட பிற்பாடு காத்துண்டிரு. சரணகதி பண்ணிட்டு உடனே அவன்கிட்ட போய் ‘எப்போ மோக்ஷம் குடுக்கறே’ அப்படின்னு கேட்டா, தரணும்ங்கிற அவசியம் அவனுக்கில்லே. இவன் சரணாகதி பண்ணிட்டு காத்திண்டிருக்க வேண்டியதுதான். அப்போ ஒருத்தர் கேட்டார், ‘ஸ்வாமி, அடியேன் சரணாகதி பண்ணினதுக்காக அவர் குடுக்கப் போறதில்லையோல்லையோ? அப்படின்னா நான் பண்ணாமயே விட்டுடறேன்’னார். விட்டுட்டா அவர் என்னைக்கு குடுக்கறாரோ அப்போ அதை ஏத்துக்கற மனப்பக்குவமே வராது. இது குளம் வெட்டினாப்பலதான் இது. வனத்திடரை ஏறியாம் வண்னம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிப்பார் மற்று. ஆக நான் பகவானை உள்ளத்திலே வைக்க வேண்டும். சரணம்ன்னு சொல்ல வேண்டும். சொல்லிவிட்டு காத்திருக்க வேண்டும். நிர்பந்தப்படுத்தறதுக்கு முடியாது. நான் செஞ்சதுக்காக பகவான் குடுக்கலே. அவன் கருணை அடியாகக் குடுக்கிறானே தவிர, நான் ஏதோ செய்தேன்கிறதுக்காக பகவான் குடுத்துரலே. இதை இரண்டாவது ஆழ்வார் தன்னுடைய இரண்டாம் திருவந்தாதியிலே சாதித்தார். அடுத்த ஆழ்வார் பேயாழ்வார். மயிலாப்பூரிலே திருவவதாரம் பண்ணினவர். அவர் மூன்றாம் திருவந்தாதி பாடினார். அவ்வாழ்வார் சொன்னார், சரணாகதி பண்ணனும்ன்னு எங்க பெரியவர் இப்பதானே சொன்னார். முதல் ஆழ்வார் ஞான விகாசத்துக்கு பகவானை எதிர்பார்ப்போம்ன்னார். அடுத்த ஆழ்வார் சரணாகதி பண்ணிவிட்டு காத்திருன்னு சொன்னார். தானே பெருமான் உதாரண், குடுப்பன்னு சொல்லிவிட்டுப் போனார். நான் சொல்றேன் கேட்டுக்கங்கோ, அது பண்றது ரொம்ப சுலபம். முன் நாட்களிலே எல்லாம் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம்ன்னு ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் பண்ணிண்டு இருந்தா. ஆயிரமாயிரம் ஆண்டுகள் தபஸ் பண்ணனும். இப்படியெல்லாம் ரிஷிகள் கஷ்டப்பட்டு பண்ணிண்டிருந்தாளோல்லையோ, வேண்டவே வேண்டாம். மூன்றாம் திருவந்தாதியிலே பேயாழ்வார் வழி சொல்றார். நமக்கு கஷ்டமே இல்லாத வகையில் பெருமாளை சுலபமா அடைஞ்சுடலாம், ஸ்வாராதத்துவம்ன்னு பேர். பகவானை ஆராதிப்பது வெகு சுலபம். ’அரியனவன் ஆரதானைக்கென்று’ன்னு திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரம். பகவான் ஆராதனம் பண்ணுவதற்கு கஷ்டமானவரே அல்ல. ரொம்ப சுலபமாகப் பண்ணிவிடலாம். அதை இந்த ஆழ்வார் சொல்லுகிறார்.
(மூன்றாம் திருவந்தாதி – 76) பொருப்பிடையே நின்று – மலைக்கு மேல் நின்று நீங்க தபஸ் பண்ண வேண்டிய தேவை இல்லே. புனல் குளித்து – அடிக்கடி தீர்த்தமாடி, தீர்த்தமாடி, சமுத்திரத்துக்கு நடுவிலே தபஸ் பண்ணவேண்டிய தேவையும் இல்லே. ஐந்து நெருப்பிடையே நீர் நிற்கவும் வேண்டா – நெருப்புக்கு நடுவிலே நின்னுண்டு கோரமான தபஸ் பண்ணவேண்டிய தேவையும் இல்லே. இப்போ இதெல்லாம் ரிஷிகள் ஏற்கனவே பலகாலம் பண்ணியிருக்கா. பின்ன ஒன்றுமே பண்ண வேண்டாம்ன்னா நாங்க எப்படித்தான் மோக்ஷம் போறதுன்னு ஆழ்வாரைக் கேட்டோம். அப்போ சொன்னார், விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை - எம்பெருமானோ தான் ஆசையோடே திருவெஃகா திவ்யதேசத்திலே வந்து சயனித்துக் கொண்டு இருக்கிறார். எதுக்கு இப்படி பண்ணியிருக்கார்ன்னா, நீங்க இனிமே எந்த தபஸ்ஸும் பண்ண வேண்டாம். உயர்ந்த தபஸ்ஸான நியாஸமான சரணாகதியை என்னிடத்திலே அனுஷ்டியுங்கோள். அதுவும் உங்களுக்கு கஷ்டமா இருக்குமா? மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால் – நல்ல புஷ்பங்களைக் கொண்டு வந்து என் திருவடிகளிலே போட்டுட்டு, அஞ்சலி, கையைக் கூப்புங்கோ போறும். அஃகாவே தீவினைகள் ஆய்ந்து – அடுத்த நிமிஷம் தீவினைகள் எதுவும் உங்ககிட்ட வரவே வராது. இந்தப் பாசுரம் நேரே சரம ஸ்லோகத்தினுடைய தமிழ் மொழிபெயர்ப்புன்ன் வச்சுனுடலாம்.
இது கண்ணன் கீதையில சொன்ன சரம ஸ்லோகம். எல்லா தர்மங்களையும் விடு. என்னையே சரணமாகப் பற்று. நான் உன்னை சகலவிதமான பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். சோகப்படாதே. இது சரம ஸ்லோகம். இது அப்படியே இந்த பாசுரத்தில் இருக்கு பாருங்கோ. பொருப்பிடையே நின்னும் புனல் குடித்தும் ஐந்து நெருப்பிடையே நீர் நிற்கவும் வேண்டா – ஸர்வதர்மான் பரித்யஜ்ய; திருவெஃகா எம்பெருமான் – மாம்; மாமேகம் ஸரணம் வ்ரஜ – விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூய் கைதொழுதால்; ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஸ்யாமி – அஃகாதே தீவினைகள் ஆய்ந்து. இதனால்தான் ஆழ்வார்கள் அவதரித்ததே சமஸ்கிருத வேதாந்தத்தை தமிழ்படுத்தி சுலபமா குடுக்கறதுக்காக. புஷ்பங்களைக் கொண்டுபோய் போட்டு, கைகூப்புவது என்ன கஷ்டமான காரியமா? சுலபமான காரியம்தானே. ஆனா ஆழ்வார் அதுமட்டும் சொல்லிடலே, மெய்ம்மலர்ன்னு சொல்றார். அதென்ன மெய் மலர்? மலர்களிலே மெய்யான மலர், பொய்யான மலர்ன்னு இருக்கா என்ன? ஒருவேளை காகிதப்பூ போடாதேன்னு ஆழ்வார் சொல்றாரா? நிஜப்பூ வேணும்ன்னு சொல்றாரான்னா, அப்படி அபிப்ராயம் அல்ல. இந்த புஷ்ப கைங்கர்யம் பண்ணிட்டு, இதுக்கு பதில் நீ என்ன எனக்குக் குடுப்பேன்னு கேட்காத மலர். அது ரொம்ப முக்கியம். நான் போய் ஒரு கைங்கர்யம் பண்ணிட்டு, இதுக்குப் பதில் நீ என்ன எனக்குக் குடுப்பேன்னு கேட்டால் அது தூய மலர் அல்ல, அது அழுக்குப் படிந்த மலர். அப்படி இல்லாமல் மெய்யான மலர்களைத் தூவி, கை தொழுதால் – கீழ கிடக்கிற கைகளை தூக்கி இப்ப்டி நாம கூப்பணும். அஞ்சலி (விபீஷண சரணாகதியில் பார்க்க, 1, 2). அஞ்சலி பரமா முத்திரா தேவப் ப்ரசாதிநின்னு சொல்லுவர்கள். இது பரமமான முத்திரை. இதுக்கு மேலே பகவானுக்கு நாம செய்யக்கூடியது ஒன்றுமே இல்லே. ஒரு இடம் பார்ப்போம். மஹாபாரதப்போர் நடந்துண்டிருக்கு. அஸ்திரங்கள் வரிசையா வந்துண்டிருக்கு. முன்னாடி கீதாசார்யன், பார்த்தசாரதி, தேரோட்டி கண்ணன் உட்கார்ந்துண்டு எல்லாரையும் இரட்சித்துக் கொண்டு இருக்கிறார். வரிசையா கர்ணன், பீஷ்மர், துரோணர் எல்லாரும் அஸ்திரங்களை விடுகிறார்கள். கண்ணன்தான் முன்னாடி உட்கார்ந்துண்டு எல்லாத்தையும் இரட்சித்துக் குடுத்துண்டிருந்தார். அவன் நாகாஸ்திரம் விட்டா, இவர் அதுக்கு கருடாஸ்திரம் விடுறார். வருணாஸ்திரம் விட்டா, இவர் அதுக்கு அக்னியாஸ்திரம் விடறார். நடந்துண்டு இருக்கு. நாராயணாஸ்திரம் வருது எதிர்ப்பக்கத்திலே இருந்து. அர்ஜுனனுக்கு என்ன பண்றதுன்னு தெரியலே. ஓ, நாராயாணஸ்திரம் வருதே, நம்மளை என்ன பண்ணிடுமோ, கொன்னுடுமோன்னு பயந்தான். பயந்துட்டு கண்ணன்கிட்டே இதுக்கு பிரத்யஸ்திரத்தை நான் எங்க போய்த் தேடணும், சொல்லுன்னு கேட்டான். கண்ணன் தலைல கை வச்சுனுட்டார், ‘உனக்குப் போய் எழுநூறு ஸ்லோகம் கீதை நான் சொன்னேன் பார். ஆரம்பத்திலே இவ்வளவு பெரிய கீதை சொல்லிட்டு, என் அஸ்திரம் வரும்போது எது பிரத்யஸ்திரம்ன்னு நீ யோசிக்கிறியே, எனக்குப் பிரதியிருந்தாலன்னோ என் அஸ்திரத்துக்குப் பிரதியிருக்க? எனக்கும் பிரதி கிடையாது, என் அஸ்திரத்துக்கும் பிரதி கிடையாது. ஒன்று செய், உன் தேர்லேர்ந்து இறங்கு, கவசத்தைக் கழட்டு, காண்டீபத்தைக் கீழ வை, கைகூப்பிக் கொண்டு நில், அப்பதான் என் அஸ்திரம் ஒன்றும் பண்ணாமல் போகும்’ன்னார். அஸ்திரம் வந்தது, ஒரு சுத்து பிரதட்ஷணம் பண்ணிட்டு அர்ஜுனனை ஒன்றுமே பண்ணாம போய்டுத்து. அப்போ நாராயணாஸ்திரத்தைக் கூட உருக்கிடறோதோல்லையோ, அதனாலதான் அதுக்கு அஞ்சலின்னு பேர். அதனாலதான் அஞ்சலிதான் நம்மகிட்ட இருக்கிற ஒரே பிரத்யஸ்திரம். பகவான் நிக்ரகம்ங்கிற அஸ்திரத்தைத் தொடுக்க வந்தால், நாம அதை எப்படி சமாளிக்கிறதுன்னா, அஞ்சலிதான். கையைக் கூப்பினுட்டோம்ன்னா அவர் நிக்ரகிக்கிறதே கிடையாது, என்பது அந்த இடத்திலே சூஷ்மம். அதனாலதான் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் இதைக் காட்டிக் குடுத்துப் போனார். (தொடரும்) -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் செய்தி உபந்நியாசம் – Boston) June 10 ஆழ்வார்கள் செய்திஆழ்வார்கள் அவதாரத்துக்கு ஏது பிரயோஜனம்ன்னால், அளவிலடங்காமல் இருக்கக்கூடிய வேதத்தை, புரியாமல் இருக்கக்கூடிய வேதத்தை, சம்ஸ்கிருதத்தில் இருக்கக்கூடிய வேதத்தை, அளவுக்குட்ப்படுத்தி, புரிகிறாப்போலே, தமிழ் பாஷையில் பாடுவதற்காக ஆழ்வார்கள் அவதரித்தார்கள். இது அவர்களுடைய அவதாரப் பிரயோஜனம். இதைச் சொல்றதுக்கு ஒரு ஆழ்வார் போறாதா? ஏன் பதின்மர் அவதரிக்க வேண்டும்? அப்போ பத்துப் பேரும் வெவ்வேறு கருத்துக்கள் சொன்னார்களா? அல்லது அனைவரும் ஒரே கருத்துடையவர்களா? என்கிற சந்தேகம் வரும். ஆழ்வார்களைப்பற்றி ஒரு கொண்டாட்டம் உண்டு. ‘பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்’, என்று சொல்லுகிறோம். அதாவது இவா பத்துப்பேருக்கும் சேர்ந்து குரல் ஒன்று, கருத்து ஒன்று, உடல் மட்டும்தான் பத்து. சிலசில விஷயங்கள் ஒவ்வொரு ஆழ்வார்களாலும் வெளியிடப்படுகிறது. இன்ன ஆழ்வார், இன்ன விஷயத்தை நமக்குச் சொல்லுகிறார், என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்த பன்னிரெண்டு ஆழ்வார்களிலும், என்னென்ன கருத்தை யார் யார் வெளியிட்டார்கள் என்று பார்ப்போம். இதைச் சொல்லுவதினால், இந்த ஆழ்வார் சொன்னதை அந்த ஆழ்வார் சொல்லவில்லை என்பதில்லை. எல்லா ஆழ்வார்களும் எல்லா கருத்தையும் உடையவர்கள்தான். ஆனால் அந்தந்த ஆழ்வார் எதை முக்கியமாகச் சொல்லியிருக்கார்ங்கிறதுக்காக பார்க்கிறோமே தவிர, இப்போ சயனத் திருக்கோலத்துல ஒரு திவ்யதேசத்துல சேவிக்கிறோம், இருந்த திருக்கோலத்தில ஒரு திவ்யதேசத்துல சேவிக்கிறோம், நின்ற திருக்கோலத்துல ஒரு திவ்யதேசத்துல சேவிக்கிறோம். அப்படின்னா அந்தப் பெருமாளுக்கு நிற்கவே தெரியாது, உட்காரவே தெரியாது, இல்ல சயனிச்சுக்கவே தெரியாதுன்னு அர்த்தமா? எல்லாப் பெருமாளும் எல்லாம் அறிந்தவர்கள்தான். நமக்கு ஒரு ஆசைக்காக, ஒரு அனுபவத்துக்காக அப்படிச் சொல்லுவர்கள். அதேபோல ஆழ்வார்களிலே இன்னென்னார் இன்னென்ன கருத்தைச் சொல்லியிருக்கார்ன்னு பார்ப்போம். ஆழ்வார்கள் பாசுரத்தைத் தெரிஞ்சுக்கனும்ன்னால், வ்யாக்யான சக்ரவர்த்தியாய், பரம காருணிகர்ன்னு பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை, அந்த ஸ்வாமிதான் நாலாயிரத்துக்கும் வ்யாக்யானம் அனுக்கிரகித்தார். அவர் என்ன எழுதி வைத்திருக்கிறாரோ, அதுதான் ஆழ்வார்களுடைய கருத்தாகவே இருக்கும். சேங்கனூர் அப்படிங்கிற இடத்துலே அந்த ஸ்வாமி திருவவதாரம் பண்ணியிருக்கிறார். சோழதேசத்திலே இருக்கிற திவ்யதேசம்தான். அதனாலே அவர் என்ன எழுதியிருக்கார்ங்கிறத முதல்ல பார்ப்போம்.
இது அந்த ஸ்வாமி எழுதி வைத்திருப்பது. பத்துப்பேருக்கும் எங்கெங்க ஈடுபாடு, எதைப் பிரதானமாகக் கொள்ளுவர்கள்ன்னு சாதிக்கிறார். பரத்துவம் – வைகுண்டநாதனுடைய நிலை. அந்த எம்பெருமானிடத்திலதான் முதல் மூன்று ஆழ்வார்களுக்குமே ஊற்றம். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இவர்கள் பாசுரங்களைப் பார்த்தால் அனேகமா வைகுண்டத்தைப் பற்றியும், வைகுண்டநாதனைப் பற்றியும்தான் பாடுவர்கள். அடுத்து திருமழிசையாழ்வார், நமக்கு உள்ளேயே இருக்கக்கூடிய அந்தர்யாமி எம்பெருமான், அந்த அந்தர்யாமிக்குத்தான் திருமழிசையாழ்வார் பாடுவர். நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும், ஆண்டாளும், கண்ணனுக்குன்னே பிறந்தவர்கள். கண்ணனுக்குன்னே வாழ்ந்தவர்கள். பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ்லே எல்லாமே கண்ணனைப்பத்திப் பாடிட்டார். நம்மாழ்வாருக்கோ, ’கண்ணனல்லால் இல்லை தெய்வம்’, ’நம் கண்ணன் கண் அல்லதில்லையோர் கண்ணே’. ஆண்டாளோ திருக்கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டதே கண்ணணைத்தான். அதனால் இந்த மூன்று பேரும் கிருஷ்ணனுக்குன்னே இருந்தவர்கள். அடுத்து ஆறாவது ஆழ்வார் குலசேகர ஆழ்வார். அவர் இராமச்சந்திரனுக்காகவே பிறந்தார், வாழ்ந்தார். பிரபந்தத்துக்கே பெருமாள் திருமொழின்னு திருநாமம். பெருமாள் – இராமன், பெருமாள் திருமொழி – இராமனைப் பற்றின திருமொழி. இல்லே, குலசேகரப்பெருமாள், அதனாலே பெருமாள் திருமொழி. குலசேகர ஆழ்வாருக்கு என்ன பெருமைன்னால், இராமன் சிரிச்சால் இவரும் சிரிப்பர். இராமன் அழுதால் இவரும் அழுவர். அது தசரதனுக்கு மகனாகத் தோன்றியது முதலா, தன்னுலகம் புக்க தீரான்னு பெருமாள் திருமொழியில கடைசில தெரிவிக்கிறார். அதனால இராமனுக்கு ஒரு ஆபத்துன்னால், தன் சைன்யத்தோட சமுத்திரத்தில இறங்கி, என்னைக்கோ இருந்த இராமனுக்கு ஒத்தாசை பண்ணப்போற அளவுக்கு இராமனிடத்தில் குலசேகரருக்கு ஈடுபாடு. திருமங்கையாழ்வார், ஆழ்வார்களிலே கடைசி. எல்லா திவ்யதேசங்களிலேயும் அவருக்கு ப்ராவண்யம். ஒருத்தன் வாழணும், அவன் உஜ்ஜீவனம் அடையனும்ன்னால் திவ்யதேசங்களிலே ப்ராவண்யம் இருந்தால்தான் வாழவே முடியும். அதுலே ஆசை இருக்கணும், திவ்யதேசங்ளிலே கைங்கர்யம் பண்ண வேண்டும். இதுதான் வாழ்க்கையின் பயன், என்று திருமங்கையாழ்வார் இருந்தார். அவர் அதுக்குன்னு 86 திவ்யதேசங்களுக்கு பல்லாண்டு பாடினார். நாம மொத்தம் 108 சேவிக்கிறோமே, அதுல 86ஐ திருமங்கையாழ்வார் போய்ப்போய் பாடியிருக்கணும்ன்னால், எத்தனை ஊற்றம் திவ்யதேசங்களிலே அவருக்கு இருந்திருக்கணும்? தொண்டரடிப்பொடியாழ்வாரும், திருப்பாணாழ்வாரும், அவர்களுக்குப் பெருமை, திவ்யதேசங்களிலேயே தலைமைப்பீடம், பிரதானமான திவ்யதேசம், வேர்ப்பற்றான திவ்யதேசம், திருவரங்கம். அந்த திருவரங்கத்துக்குன்னே பிறந்தவா இந்த இரண்டு ஆழ்வார்களும். இனி ஒவ்வொரு ஆழ்வாராகப் பார்ப்போம். (தொடரும்) -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் செய்தி உபந்நியாசம் – Boston) May 13 விஸ்வாமித்திரருக்கும் பரசுராமருக்கும் உள்ள தொடர்புப்ரம்மா, அவருக்குப் பிள்ளை குசர், அவருக்குப் பிள்ளை குசநாபர், அவருக்குப் பிள்ளை காதி. அந்த காதியோட பிள்ளைதான் விஸ்வாமித்திரர். காதிக்கு சத்யவதி அப்படிங்கற பொண்ணு பிறந்தா. காதியினுடைய மனைவிக்கு நமக்கு பிள்ளை பிறந்தா தேவலைன்னு ஒரு ஆசை இருந்தது. இவர்களோ ஷத்ரியர்கள், காதி ஷத்ரியர். காதியினுடைய பெண்ணுக்கு, சத்யவதிக்கு, ரிசீகர்ன்னு ஒரு பிராமண ரிஷியைக் கல்யாணம் பண்ணி வைச்சா. சத்யவதிக்கும் குழந்தை பெற வேண்டும்ங்கற ஆசை இருந்தது. காதியினுடைய மனைவி, தன் மாப்பிள்ளையினிடத்தில போய்ப் பிரார்த்திக்கிறா, அவர் பெரிய ரிஷியாச்சே. அதனால அவரிடத்தில் பெண்ணை விட்டுப் பிரார்த்திக்கிறாள். சத்யவதி, எனக்கு என் தாய்க்கும் புத்ரபாக்யம் வேணும். அதற்கு ஏதானும் குடும்ன்னு கேட்கறா. அவர் ஒரு உயர்ந்த சரு, பாயசம், தயார் பண்ணி, இது உனக்கு, இது அவளுக்குன்னு ரெண்டு பேருக்கும் வச்சுட்டார். அவர் பிராமணரோல்லையோ? அதுக்குத் தகுந்த குழந்தை பிறக்கறதுக்கு ஒரு சரு. மாமியார் சத்ரியர்களோல்லையோ? அவர்களுக்குத் தகுந்த குழந்தை பிறக்கறதுக்கு மற்றொரு சரு தயார் பண்ணினார். ஆனா இந்தப் பெண்ணோட அம்மா வந்தவள், என்னதான் இருந்தாலும் ரிஷி, தன் பிள்ளைதான் உசத்தியாப் பிறக்கணும்ன்னு உயர்ந்த சரு பண்ணி வச்சிருப்பர். அதை நாம எடுத்துச் சாப்பிட்டுடுவோம்ன்னு சாப்டுட்டா. இது மாறிப் போன விஷயம் அப்புறம்தான் பெண்ணுக்கே தெரிய வந்து போய் கணவனிடத்தில மன்றாடறா. ’தப்பு நடந்து போச்சு, அடியேனுக்குத் தெரியாது, நான் காரணமில்லே. இப்படி அவள் பண்ணிட்டாள்’ன்னா, ’ஒண்ணும் பண்ண முடியாது பெண்ணே, நான் எப்ப பகவானைப் பிரார்த்திச்சுண்டு எடுத்து வச்சேனோ, அதுக்குத் தகுந்தாப்லதான் குழந்தை பிறக்கும். இனி உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ரொம்ப கோபிஷ்டனாகப் பிறக்கப் போகிறான். அவனுக்கு ஷாத்ரவ தேஜஸ் இருக்கும், ஷத்ரியனுக்குரிய கோபம் இருக்கும்’ன்ன உடனே, அவ நடுங்கிப் போய்ட்டா. அப்போ விழுந்து பிரார்த்திக்கிறா, ’இல்லேல்லே கூடாது’ன்னு. ’கூடாதுன்னு நான் தள்ளிப்போட முடியாது. ஒன்னு வேணா செய்யறேன். அடுத்த குழந்தைக்கு வேணா சொல்றேன். அப்படின்னால், இந்தப் பிள்ளைக்கு பிள்ளை பிறக்குமோல்லையோ? அப்போ நான் சொன்ன சாபம் நடந்துதான் தீரும்’ன்னுட்டார் அவர். அதனாலதான் முதல்ல ரிசீகருக்கும், சத்யவதிக்கும், ஜமதக்னி பிறந்தார். ஜமதக்னியே அந்தக் கோபத்தோடே இருந்திருக்கணும். ஆனா இவர் சாபத்தைக் கொஞ்சம் மாத்திவிட்டாரோல்லையோ? அதனாலதான் ஜாமதக்னியன் என்று பேர் பெற்ற பரசுராமன் அந்தக் கோபத்தோடே பிறந்தான். அதனால பரசுராமர் ரிசீகருக்குப் பேரன், பிராமண வம்சத்திலே பிறந்தவர், ஆறி இருந்திருக்கணும். ஆனா அவ்வளவு கோபத்தோடே இருந்தாரேன்னா, சரு ஷத்ரிய சரு. அதனால அங்க அந்த மாதிரி ஆச்சு. அதே மாதிரி காதியினுடைய மனைவிக்கு பிறந்த குழந்தைதான் விஸ்வாமித்திரர். விஸ்வாமித்திரர் பிறப்பால ஷத்ரியராக இருந்திருந்தாலும் பிராமணரா இருக்கணும்ங்கிற ஆசை அவருக்கு ஏற்பட்டுப் போச்சு பாருங்கோ. -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta) தசரதன் பதில் - விஸ்வாமித்திரர் இராமனைக் கேட்கும் போதுநின் மக்களுள் கரிய செம்மல் ஒருத்தனைத் தருதி என்று விஸ்வாமித்திரர் கேட்கறார். ’உன் மூத்த பிள்ளை இராமனை என்னோடு அனுப்பி வை’, அப்படின்னு விஸ்வாமித்திரர் கேட்கிறார். ஆனா தசரதன் மனசு தாங்காமல் அதெப்படி பன்னிரெண்டு வயசுப் பிள்ளையை உம்மோடு நான் அனுப்பி வைக்க முடியும்? நீர் ஆனா ராக்ஷசர்களோடு சண்டை போடுவதற்கு கேட்கறீர், சின்ன பிள்ளைகளை யாரானும் சண்டை போடுவதற்கு அனுப்பி வைப்பர்களா, என்று மனசு வருத்தப்பட்டு தசரதன் பேசினான். அப்போ விஸ்வாமித்திரர் சொல்றார்,
அஹம்வேத்மி மகாத்மாநம் ராமம் சத்யபராக்ரமம் – மகாத்மாவான இராமனை நான் அறிவேன். தசரதா, நீ என்னமோ உன் குழந்தைக்கு ஒண்ணும் தெரியாது, பன்னெண்டு வயசுதான் ஆச்சு, சண்டையே போடத்தெரியாதுன்னு பயப்பட்டியோல்லையோ, பயப்படாதே. அஹம்வேத்மி – எனக்கு இராமன் இன்னார்ங்கிறது தெரியும். மகாத்மாநம் – அவனை மகாத்மான்னு தெரியும். ராமம் – உன் பிள்ளை ராமன் மகாத்மான்னு தெரியும். சத்யபராக்ரமம் – உண்மையான பராக்ரமம் படைத்தவன் இராமன், அப்படின்னு தசரதனுக்கு விஸ்வாமித்திரர் சொல்லிண்டிருக்கார். தசரதன் பார்த்தார், பெற்றவன் நான். ஆனா என் பிள்ளை எப்படிப்பட்டவன்னு இவர் எங்கேர்ந்தோ வந்து நமக்குச் சொல்லிக்கிட்டிருக்காரே இப்போ? எனக்குத்தானே தெரியும், இவருக்கு எப்படித் தெரியும்ன்னு தசரதன் நினைக்கிறான். ஆச்சார்யர் பெரியவாச்சான்பிள்ளை தெரிவிக்கிறார், இந்த விஸ்வாமித்திரர் தசரதனைப் பார்த்து சொல்றாராம். ‘உனக்குத்தான் உன் பிள்ளையைப்பத்தித் தெரியும்ன்னு நினைச்சுக்காதே தசரதா. எனக்குத்தான் தெரியும், உனக்குத் தெரியாது’ங்கறார். ‘இல்லையே, நாந்தானே பெற்றேன்’ என்று தசரதன் சொல்லுகிறான். அப்போ விஸ்வாமித்திரர் சொல்றார், ‘இல்லேல்லே, உனக்கு ஏன் தெரியாதுன்னு சொல்றேன் தெரியுமா? நீ நினைச்சிண்டிருக்கறது, நீ இருக்கறது, உன் ஆசை, எல்லா நிலையும் வேறே. நீயோ வில்லும் கையுமாக இருக்கிறாய், நானோ புல்லும் கையுமாக இருக்கிறேன். புல் பிடித்த எனக்குத்தான் இராமனைத் தெரியுமே தவிர, வில் பிடித்த உனக்கு இராமனைத் தெரியாது. நீ ஆசனத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கறே, உனக்கு இராமனைத் தெரியாது. ஆனா நான் பகவானுடைய ஆசனத்துக்கு கீழ் உட்கார்ந்திருக்கிறேன், எனக்குத்தான் தெரியும். உன்னுடைய ஆசையெல்லாம், அர்த்தத்திலேயும் (செல்வம்), காமத்திலேயும் உனக்கு ஆசை. தர்மத்திலேயும், மோக்ஷத்திலேயும் எனக்கு ஆசை. தர்ம, மோக்ஷ பராயணனான எனக்கு இராமனைத் தெரியுமே தவிர, அர்த்த, காம பராயணனான உனக்கு இராமனைத் தெரியவே தெரியாது. இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ தசரதா, இராமனை உன்னுடைய கர்ப்பம்ன்னு நீ நினைச்சிண்டிருக்கே. ஆனா நான் புரிஞ்சிண்டது, உலகமே இராமனுக்கு கர்ப்பம்னுட்டு. உன் கர்ப்பம்ன்னு நினைச்சிண்டியானா அவன் பெருமை தெரியாது. லோகமே பகவானுடைய கர்ப்பம்ன்னு புரிஞ்சாதான் அவனுடைய பெருமை தெரியும். அதுக்கு மேலே அவர் சொல்றார், ’இந்த ஒரு விஷயத்தை யோசிச்சுப் பார், உன்னுடைய ராஜசபையில நிறையப் பேர் ரிஷிகளெல்லாம் உட்கார்ந்திட்டு இருக்காளோல்லையோ? அங்க வசிஷ்டர்ன்னு ஒருத்தர் இருக்கார் பார், உன் குலகுரு, எனக்கும் அவருக்கும் ரொம்ப பொருத்தம். எத்தனை நாளா நாங்க ரெண்டு பேரும் என்ன சண்டை போடணுமோ, மொத்தமும் போட்டுண்டிருக்கோம். ஆனா இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ யோசிச்சுப் பார். நான் ஒன்னை உண்டுன்னு சொன்னா, தலைப்பொறுப்பா அவர் அதை இல்லேன்னுடுவர். அவர் ஏதாவது ஒன்னை இருக்குன்னு சொன்னா, தலைப்பொறுப்பா நான் அதை இல்லேன்னுடுவேன். இப்படித்தான் இன்னைக்குவரைக்கும் ரெண்டு பேரும். உனக்கு ஒரே ஒரு பரீட்சை இப்போ, நான் சொல்றேன், இராமன் சத்யபராக்ரமன், இராமன் மகாத்மானுட்டு. தைரியம் இருந்தா வசிஷ்டரை இல்லேன்னு சொல்லச் சொல்லிப்பார். இந்த ஒன்னுலதான் எனக்கு வாய்ப்பு இப்போ. வசிஷ்டோபி மஹாதேஜாஹா – இந்த வசிஷ்டரும்கூட, நான் எதைச் சொன்னாலும் மறுக்கற வசிஷ்டரும்கூடன்னு அர்த்தம். அப்படிப்பட்ட வசிஷ்டரும்கூட நான் இப்போ சொன்னதை மறுத்துப் பேசமாட்டார். ஏசேமே தபஸிஸ்திதாஹா – அதோடு அல்ல, பக்கத்துல இத்தனை ரிஷிகள் உட்கார்ந்திருக்கிறார்களே, அத்தனை பேரும் ஒத்துக்கொள்ளுவர்கள். இவர்கள் ஒவ்வொருத்தரும் தபஸ் பண்ணி, தபஸ் பண்ணி ப்ரம்மத்தைத் தேடி வச்சிண்டிருக்கவா. நீ இராமனைப் பெற்றதாக நினைக்கிறாய். ஆனா பெற்றது ப்ரம்மத்தைங்கிறது இவர்களுக்குத்தான் தெரியும். ப்ரம்மம் தேர்ந்தெடுத்து உன்னைத் தாயார், தகப்பனாராச் சொல்லியிருக்கு. அதனால உனக்குத் தெரியாது தசரதா, சொன்னதைக் கேள். உன் மூத்தபிள்ளை இராமனைக் குடு’, அப்படின்னு விஸ்வாமித்திரர் கேட்கிறார். இருந்தாலும் தசரதனுக்கு மனசு ஏற்கலே. தசரதன் மேல பதில் சொல்றான்,
ஒரு முகூர்த்தம் பேசவேயில்லையாம். இதைக் கேட்டவுடனே தசரதனுக்கு அதிர்ச்சி இப்போ. ஒரு முகூர்த்தகாலம் சும்மா இருந்துட்டு இப்போ பேசறான். ஊநஷோடஸ வருஷஹா மே ராமோ ராஜீவ லோசநஹா – என் ராமன் தாமரைக்கண்ணன், ராஜீவ லோசநஹா. ஊநஷோடஸ வருஷஹா – ஷோடஸம்ன்னா பதினாறு; ஊந – குறைவு; பதினாறு வயசுக்குக் குறைவுங்கிறததான் ஊநஷோடஸ வருஷஹான்னு சொல்லுகிறான். பன்னெண்டுன்னு சொல்லலே இவன். பதினாறு நிரம்பப் பெறாத இராமன். பன்னெண்டை ’த்வாதச’ன்னு சொல்லத் தெரியாதா தசரதனுக்கு? என்னத்துக்கு என்னமோ சொல்லிண்டிருக்கானேன்னா? ஏன்னா அந்த நாள்ல ஒரு வழக்கம், பதினாறு வயசு நிரம்பினாத்தான் போர்க்களத்துக்கு அனுப்ப முடியும். இது சட்டம், யுத்த நீதி. இப்ப இவனுக்கு, விஸ்வாமித்திரரோட அனுப்பிச்சு வைக்க மாட்டேன்னு சொல்றதுக்கு, பதினாறு நிரம்பலேன்னு சொல்லனுமோல்லையோ? அதனால பன்னெண்டுன்னு சொல்றதுல அவனுக்கு நோக்கம் இல்லே. பதினாறு ஆகலேன்னு சொல்றதுலதான் நோக்கம். மே ராமஹா – ஆச்சர்யமா பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் பண்ணினார், மே ராமஹா – என்னுடைய ராமன். அப்படின்னா, இருக்கட்டுமே, உன் ராமனாவே இருக்கட்டும், அதைத்தான் கேட்கறேன்னா, ’ஏதோ பரசுராமர்ன்னு நினைச்சுட்டு இங்க வந்துட்டீர் போலருக்கு. இது என் இராமன். நீர் பார்கவ ராமனைத் தேடிண்டு வந்திருக்கீர். இவன் தசரத ராமன். தசரத ராமனுக்கு இந்த சண்டை, பூசல்லெல்லாம் தெரியாது. நீர் ஏதோ கோடாரி வச்சிருக்கவரைத் தேடிப் போயிருக்கணும். ஏதோ முகவரி மாறி இங்க வந்துட்டீர்ன்னு நினைக்கிறேன்’. மே ராமஹா – என்னுடைய இராமன். இன்னொரு ஆழ்ந்த கருத்து உண்டு. நாம ஒரு பொருளை ’நம்மது’ ன்னு சொல்லிட்டா, பெரியவர்கள் அதை வாங்கிக்க மாட்டா. அவாள்ட்ட கொடுக்கணும்ன்னு வச்சுக்கங்கோ, ‘இதந் நமம’, இது என்னுதல்ல. உன்னைக் குறித்து இதைக் குடுக்கறேன். இது என்னுதல்ல. ஒரு பொருளை என்னுது, என்னுதுன்னு நாம சொந்தம் கொண்டாடினா, பெரியவர்கள் அதை வாங்கிக்கவே மாட்டா. அது நம்மது அல்லங்கிற எண்ணத்தோடதான் அவர்கள்கிட்ட கொடுக்கணும். குடுத்த பிற்பாடு தப்பித்தவறி நம்மதுங்கிற எண்ணமே வச்சுக்கக்கூடாது. தசரதனுக்கு இந்த சாஸ்திரமெல்லாம் தெரியுமோல்லையோ? அதனால வேணும்ன்னு ‘மே ராமஹா’, என்னுடைய இராமன்ங்கிறான். கோபம் வந்து விட்டுட்டுப் போய்டட்டுமே! ஏன்னா என்னுடையன்னு நான் சொல்லிட்டேனோல்லையோ? நீ உன்னோடதுன்னுட்டே இனிமே நான் வாங்கிக்க மாட்டேன், அப்படின்னு சொல்லிட்டுப் போய்டட்டுமேன்னு எதிர்பார்த்தா, நீ உன்னோடதுன்னு சொன்னியோல்லையோ, அதனாலயே வேணும்ங்கிறார் அவர். ராஜீவ லோசநஹா – தாமரைக் கண்கள் படைத்த இராமன். இப்ப என்ன இராமனுடைய தாமரைக் கண்ணைப்பத்தி, விஸ்வாமித்திரர்கிட்ட சொல்லியாகணும்? இப்ப சண்டைக்கு வான்னு அவர் கூப்பிட்டுண்டு இருக்கறச்சே, இராமன் தாமரைக் கண்ணனா இருந்தா என்ன, தடந்தோளனா இருந்தா என்ன, இல்லே கொவ்வைவாய் இதழனாய் இருந்தா என்ன? இது ஒண்ணும் அழகைப் பாடற பாசுரமே இல்லே. எதுக்குச் சொல்றார்ன்னா காரணம் இருக்கு அந்த இடத்திலே. ராஜீவ லோசநன்னா தாமரைக்கண்ணனோல்லையோ? தாமரை எத்தனை நாழி முழிச்சுண்டு இருக்கும்? அஞ்சே முக்கால் ஆனா மொட்டிச்சுப் போயிருமா? சூரிய அஸ்தமனம் ஆறச்சே, தாமரை எல்லாம் மலராது, மொட்டிச்சுரும். மறுநாள் காத்தால சூரியோதயம் ஆறப்போதான் மலரும். ராக்ஷசர்களுக்கு ‘ரஜநீசராள்’ன்னு பேர். ரஜநீசராள்ன்னா, ராத்திரி வேளைலேயே சஞ்சரிக்கிறவாள்ன்னு அவாளுக்கு பேர். அப்போ ராக்ஷசாளுக்கெல்லாம் ராத்திரிலதான் பலம். இராமனோ தாமரைக்கண்ணன். அப்படின்னா அவர் எத்தனை மணிக்கு தூங்கிப் போய்டணும்? அஞ்சே முக்காலுக்குத் தூங்கிடனுமோல்லையோ? ’இராமன் எவ்வளவு சுகுமாரன், செல்லப்பிள்ளைன்னா, அஞ்சரை, அஞ்சே முக்காலுக்குத் தூங்கிப் போய்டுவர். நீர் ஆனா, அப்புறம் எழுந்திருக்கறவாளோட சண்டை போடறதுக்காக கூப்பிடுண்டிருக்கீர். இது நடக்கவே போறதில்லே.’ நயுத்த யோக்ய தாமஸ்ய – இவனுக்கு யுத்தம் பண்ணுகிற யோக்யதையை நான் இன்னும் பார்க்கவில்லை. பஷ்யாமி சக ராக்ஷசைஹி – அதுவும் யாரோட சண்டை போட கூப்பிடுறீர்? ராக்ஷசர்களோடே. மனுஷர்களோடயா சண்டை போட கூப்பிடுறீர்? கண்டிப்பா இராமனை அனுப்பறதுக்கு இல்லை, என்று தசரதன் முடிவெடுத்துட்டான். இதுவரைக்குமாவது முன்னபின்ன பேசிண்டிருந்தான். எப்போ இவன் இல்லேன்னு சொல்லிட்டானோ, அப்போதான் சுருக்குன்னு கோவம் வந்தது விஸ்வாமித்திரருக்கு. நித்யாபிரதிக்ஞஹா காகுஸ்த சுகீபவசபாந்தபஹா. பொய் சத்யம் பண்ணவனே, உன் குடும்பத்தோட நன்னா இரு. நேர சொல்லிட்டார் ஒரே வார்த்தைல. இஷ்வாகு குலத்துல பிறந்தேன்னு பேர் வேற வச்சிண்டிருக்கியே தசரதா நீ. இப்படியா மாற்றிப் பேசுவாய்? அந்தக் குலத்தில இருக்கிற யாரும் சொன்ன சொல் மீறினதே கிடையாது. ரகுகுலத்தில பிறந்தவர்களுக்கு ஏற்காத வார்த்தை நீ பேசிவிட்டாய். பொய் சத்யம் பண்ணினாய். சுகீபவ சபாந்தபஹா – உன் குடும்பத்தோட சுகம்ம்மா இரு. இங்க ’சுகம்ம்ம்மா இரு’ங்கறதுக்கு அர்த்தம் என்னன்னு நமக்குச் சொல்ல வேண்டியதில்லே. இது ஆசீர்வாதமே இல்லே, ‘நீ எப்படி சுகமா இருந்துரேன்னு பார்த்துரேன்’ன்னு அர்த்தம். சொல்லிட்டு வேகமா புறப்பட்டார். அந்த சமயம்தான் வசிஷ்டாச்சார்யர் தடுக்கிறார். இதுவரைக்கும் என்ன நடக்கறதுங்கிறத மேற்பார்வை பார்த்துட்டிருந்தார். சரி, இவன் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான், விஸ்வாமித்திரர் கோபமா போறார்ன்ன உடனே, ஜாடை காட்டறார் அவர். ‘ தசரதா, தப்புச் செய்கிறாய். அவர் உள்ள வரும் போது எது கேட்டாலும் குடுக்கறேன்னு சொல்லிட்டாய். இப்ப குடுக்க மாட்டேன்னு சொன்னால் உனக்குப் பாபம். அதைப்பத்திக்கூட ரொம்பப் பேச வரலே இப்போ. ஆனா உன்னுடைய பிள்ளையினுடைய நன்மைக்காகத்தான் இவர் கூப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொள். அது தெரியாமல் நீ பேசுகிறாய்.’ ’என் பிள்ளைக்கு என்ன நல்லது நடக்கணும்’ன்னு தசரதன் கேட்டிருக்கணுமோல்லையோ? அவனுக்கு என்ன குருபக்தின்னா, எப்போ இந்த வார்த்தை வசிஷ்டர் சொன்னாரோ, பேசவேயில்லே அனுப்பிச்சுட்டான் இராமனை. இத்தனை நாழி மாட்டேன் மாட்டென்னு இவ்வளவு தூரம் பேசிண்டிருந்தானோல்லையோ? வசிஷ்டர் சொன்னவுடனே, அவன் திரும்பச் சொல்றான் தசரதன். ‘என் பிள்ளைக்கு நல்லதா, தீயதாங்கிற கவலையில்லே. நீ அனுப்புன்னு சொல்றீரா இல்லையாங்கிறதுதான் பேச்சு’. அனுப்புன்னு சொல்லிட்டார் வசிஷ்டர். அடுத்த நிமிஷம், ‘ததௌ குசிகபுத்ராய சுப்ரீதேந அந்தராத்மநஹா’. தங்கத் தாம்பாளத்துல வைச்சுப் பொருளைத் தூக்கிக் குடுக்கறாப்ல குடுத்துட்டார். ததௌன்னா குடுத்தான்னு அர்த்தம். பொருளைக் குடுக்கறச்சேதான் ததாதின்னு சொல்லுவா. இப்போ ஒரு குழந்தையை அவாளோடே அவா வீட்டுக்கு அனுப்பறோம்ன்ன் வச்சுக்கங்கோ, அப்போ இப்படி பேச மாட்டோம். குழந்தையை கூட அனுப்பிச்சு விட்டுருக்கான்னுவா. ஒரு பழத்தைக் குடுத்தா, பழத்தை கூட அனுப்பிச்சு வைச்சுருக்கான்னா சொல்லுவா? பழத்தைக் குடுத்துவிட்டார்ன்னுதான சொல்லுவா? குழந்தையைக் குடுத்துவிட்டார்ன்னு சொல்லமாட்டா. அப்போ அந்த அளவுக்கு தசரதனுக்கு இராமன் அடங்கி இருந்தானாம். அறுபதனாயிரம் வருஷம் குழந்தைப் பேறில்லாமல், அதற்கப்புறம் பிறந்த குழந்தை. நாமே ஒரு அஞ்சு வருஷம் குழந்தை இல்லாமல், அதற்கப்புறம் பிறந்த குழந்தைன்னா எப்படி பார்த்துப்போம்? அதுவும் இவர் சக்ரவர்த்திக்குப் பிறந்த குழந்தை. செல்வச் சீமானுடைய பிள்ளை, சாமான்யனோட பிள்ளையில்லே. தசரதன் எப்படியெல்லாம் போற்றிப் பாதுகாத்து வளர்த்திருப்பர்? அப்படிப்பட்ட பிள்ளைகளை ஒரு ரிஷியின் பின்னால், காடு மேடெல்லாம் அலைந்து, ராக்ஷஷர்களோட சண்டை போட அனுப்ப வேண்டுமென்றால்? அவ்வளவு குருபக்தி தசரதனுக்கு வசிஷ்டரினிடத்தில். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta) இராமன் ஏன் இஷ்வாகு குலத்திலே பிறந்தான்?பெருமாள் இராமனாக அவதாரம் பண்ணினார் சரி. ஆனால் ஏன் அவர் தசரத மகாராஜாவுக்குப் புதல்வனாக, இஷ்வாகு குலத்தின் வழித்தோன்றலாக பிறக்க வேண்டும்? அவர் அவதார காரணத்தை நிறைவேற்றுவதற்கு அவர் எங்க வேணும்னாலும், வேறு எந்த ராஜாவுக்கு வேணும்ன்னாலும் பிள்ளையாப் பிறந்திருக்கலாமே? காரணம் இருக்கு. இஷ்வாகு வம்சத்தில் ஒரு பெருமாள் ரொம்ப நாளா அரண்மனைக்குள்ள இருந்தார். இன்னைக்கு அவர் ஸ்ரீரங்கத்திலே படுத்திண்டிருக்கார். எந்த எம்பெருமான் திருவரங்கத்தில் சயனித்திருக்கிறானோ, அவர் முதமுதல்ல திருபாற்கடல்ல பிரணவாகார விமானத்தோடே தோன்றினார். அந்தப் பெருமாளை பிரம்மாவினுடைய சத்யலோகத்திலே எழுந்தருளப்பண்ணி, பிரம்மா நெடுநாட்கள் திருவாராதனம் பண்ணிண்டு வந்தார். அதற்கப்புறம் இஷ்வாகு, அவன் பிரம்மாவினுடைய சத்ய லோகத்துக்கு போய்ட்டு வரக்கூடிய அளவுக்கு யோகபலம் படைத்தவன். அவன் அங்க போய் விழுந்து சேவிச்சு, ‘தேவரீர் லோகத்துல இருந்து என்ன லாபம்? எங்க லோகத்துக்குன்னா இந்தப் பெருமாள் வரணும்?’, அப்படின்னு கேட்கிறார். இதே பெருமாள்தான், இன்னைக்கு ஸ்ரீரங்கத்துல போய் சயனத்திருக்கோலத்துல சேவிக்கறமே, 16 அடி அந்தப் பெருமாள். அந்தப் பெருமாளையேதான் அங்க வச்சிண்டிருந்தா. இஷ்வாகு போய்ப் பிரார்த்தித்த உடனே, பார்த்தா ப்ரம்மா, சரி, கீழ்லோகத்துக்குப் போகட்டும். அயோத்திக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போ என்று சொன்னார். இஷ்வாகு அங்க இருந்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து சரயு நதிக்கரையில பிரதிஷ்டை பண்ணிட்டார். ரொம்ப வருஷம் அங்க இருந்தார் இந்தப் பெருமாள். சூர்ய வம்சத்திலே, மனு குலத்திலே, இராமன் 35வது இராஜாவாகப் பிறக்கிறார். இவருக்கு முன்னாடி, சூர்யன், மனு, இஷ்வாகு, கட்வாங்கன், அஜமகாராஜன், திலீபன், மாந்தாதா, அம்ஸுமான், பகீரதன், ககுஸ்தன், போன்ற பல ராஜாக்கள் மிகச்சிறப்பாக ஆண்டு வந்திருந்தார்கள். இதில் அஜமகாராஜனுக்கு புத்திரன் தசரதன். இத்தனை இராஜாக்களும் திருவாராதனம் பண்ணியிருக்கா. அப்போ ஓரோரு இராஜாவும் அர்ச்சகர், இந்தப் பெருமாள்தான் அர்ச்சனையை வாங்கிண்டு இருக்கறவர். எல்லாரும் பண்ணினாலும், இந்தப் பெருமாள் திருப்திக்குத் தகுந்தாப்போலே ஒருத்தருமே பண்ணலயாம். எல்லாரும் பண்றாளே தவிர, அவ்வளவு திருப்தி ஏற்படலே பகவானுக்கு, என் பெருமைக்குத் தகுந்தாப்போலே பண்ணலேனுட்டு. நாமளும்தான் நித்ய பூஜை பண்றோம். கடைசில என்ன சொல்லிடுவோம்.
நான் ஏதோ பதினாறு உபசாரம் பண்ணலாம்ன்னு ஆரம்பிச்சேன். அது முப்பத்திரெண்டு அபசாரமா முடிஞ்சு போச்சு. ஷமித்தருள வேண்டும். இவ்வளவுதான் எனக்குத் தெரிஞ்சது. அப்படின்னு சொல்லி விழுந்து சேவிச்சுருவோம். ரொம்ப நாளா இது நடந்திண்டு இருக்கறது. பெருமாள் யோசிச்சுப் பார்த்தார், நம்ம பெருமைக்குத் தகுந்தாப் போல ஒருத்தனும் பண்ண மாட்டேங்கறானேன்னு ஆசை. யார் பண்ணப்போறா இப்போ? அவர் பெருமைக்குத் தகுந்தாப்போல அவரே பண்ணிண்டாதான் உண்டு. இந்த முடிவுக்குத்தான் அவர் வந்தார். அப்போ அர்ச்சகனாகவும் அவர் பிறந்தாகனும், அர்ச்சிக்கப்படுபவனாகவும் அவன் இருந்தாக வேண்டும். அர்ச்சிக்கப்படுபவனா பெரிய பெருமாள், திருவரங்கநாதன் உள்ள இருக்கார். இவர் எங்கயாவது போய் மனுஷ ஜாதில பிறந்திருந்தா இராவணனைக் கொன்னுருக்கலாம். ஆனா இந்தப் பெருமாளுக்கு ஆராதனம் பண்ணியிருக்க முடியாது. இந்தக் குலத்தில பிறந்தாத்தானே இவருக்கு பூஜை பண்றதுக்கு யோக்யதை கிடைக்கும். அதனாலதான் தசரதனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta) May 12 நாரத வால்மீஹி சம்வாதம் – ஸங்க்ஷேப இராமாயணம்இராமன்னு எடுத்துக்கொண்டால் எத்தனையோ கல்யாண குணங்கள் நிரம்பியவன். இராமனுக்கு அயோத்யா சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் ஒரு பெரிய விஷயம் அல்ல. ஏன்னா ஜகத்துக்கே சக்ரவர்த்தியான எம்பெருமானுக்குப் போய், ஒரு சின்ன நாட்டுக்குத் தலைவன், அப்படின்னு சொல்றதுலே என்ன பெரிய வைபவம் வந்துடப் போறது? அதனாலே இராமனுக்குப் பட்டாபிஷேகம்ன்னால் குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம். அவனுடைய கல்யாண குணங்கள், மங்கலமான குணங்களே ஒரு இராஜ்யம். அந்த இராஜ்யத்துக்கு யார் மன்னன்னால், எப்போதும் இராமச்சந்திரன்தான் மன்னன். இதை முதமுதல்லே இராமாயணம் துவங்கும்போதே, வால்மீஹி நாரதரிடத்தே விசாரித்தார். நாரதர் வால்மீஹியினுடைய ஆஸ்ரமத்துக்கு வருகை தந்தார். தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாத்வீதாம்பரம் முநிபுங்கவரான நாரதரை வால்மீஹி வேண்டுகிறார். நாரதருக்கு இருக்கிற பெருமைகளைச் சொல்றார், தபஸ்வாத்யாய நிரதம் – தபஸ்ஸாலே பூரித்தவர்; ஸ்வாத்யாயம் – வேத அத்யயநம் பண்ணுதல்; ஸ்வாத்யாய நிரதம் – வேதங்களை முழுவதுமாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்; தபஸ்வீ வாத்வீதாம்பரம் – நல்ல வாக்கு சாதுர்யம் உள்ளவர். ஒரு ஆச்சார்யனாக இருந்தால் இந்த மூன்றும் வேண்டும். சாஸ்திரத்தை நல்லா அத்யயனம் பண்ணியிருக்கணும், அனுஷ்டானம் இருக்கணும் (தபஸ்). இந்த ரெண்டும் இருந்தா அவர் மோக்ஷத்துக்குப் போய்டுவர். நாம எப்படிப் போறது? அதுக்காகத்தான் வாக்வீதாம்பரம். அவருக்கு வாக்குச் சாதுர்யம் இருந்தாத்தான் நமக்குச் சொல்லிக் குடுப்பர். இந்த மூன்றும் நாரதரிடத்திலே இருந்ததாம். அவரை விழுந்து நமஸ்கரித்து வால்மீஹி பிரார்த்திக்கிறார். வால்மீஹி பதினாறு கேள்விகள் கேட்கிறார். ரொம்ப ஆச்சர்யமான கேள்விகள். பதினாறு குணங்களைப் பற்றிச் சொல்லி, இந்தப் பதினாறும் யாரிடத்தில் உள்ளன, என்று கேட்கிறார். கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான், கஸ்யவீர்யவான், தர்மஞையஸ்ச, கிருதஞையஸ்ச, சத்ய வாக்யோ திடவ்ரதஹா, சாரித்ரேனச கோயுக்தஹா, சர்வபூதேஸு கோகிதஹா, ஆத்மவான்கஹா, ஜிதக்குரோதஹா, துதிமான், கோனசூர்யகஹா, வித்வான்கஹா, கஸ்ஸமர்த்தஸ்ச, கஸ்ஸைகப் பிரியதர்சநஹா, கஸ்யவிப்பதி தேவாஸ்ச ஜாதரோசஸ்ச சங்யுகே பதினாறு கேள்வி. இந்தப் பதினாறு கல்யாண குணங்களும் ஒரு நேரத்தில் ஒருத்தனிடத்தில் உண்டா? இதுதான் கேள்வி. பதினாறும் பதினாறு பேரிடத்தில் இருக்கலாம், அது வேறே. இந்தப் பதினாறும் ஒருத்தனிடத்தில் இருக்கான்னு கேட்கிறார். பதினாறுங்கிறதே ரொம்ப உசத்தியான எண்ணிக்கை. ஷோடஸகலா பரிபூர்ணமான சந்திர மண்டலம்ன்னு சொல்லுவர்கள். பூர்ணசந்திரனுக்கு பதினாறு கலைகள் நிரம்பி இருக்கும். கிருஷ்ணபக்ஷத்தின் போது அந்த கலை ஒன்றொன்றா குறைஞ்சுகிட்டே வரும். சுக்லபக்ஷத்தின் போது கலை நிரம்பிண்டே போகும். இதைப் பண்ணுவது சூர்யன். பதினாறு கலைகளும் நிரம்பி இருந்ததுன்னா பூர்ணசந்திரன் அப்படின்னு நாம கொண்டாடறோம். அதேபோல் ராமசந்திரனுக்கு எது பூர்த்தி? இந்தப் பதினாறு குணங்களான கலைகள். இவர் பதினாறுன்னு கேட்டாலும், பதினாறுதான் என்று வைத்துக் கொள்ளக்கூடாது. பதினாறுங்கிறது புரிஞ்சுக்கிறதுக்காக. அவருக்கு இருப்பது எண்ணிலடங்கா கல்யாண குணங்கள். கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே – இந்த இப்போதிருக்கிற உலகத்திலே, குணவான் – யாரு சுஸீலன்? சௌஸீல்யம் உடையவன் யார்? குணம் சப்தம் பொதுவாக இருந்தாலும், விசேசித்து சௌஸீல்யம் என்பது பொருள். சௌஸீல்யம்தான் இராமாவதாரத்திற்கே முக்கியமான குணம். சௌஸீல்யம்ன்னால், மகதகா மந்தைஸ்யஹ நீரந்திரேந சம்ஸ்கிலேஷ சுபாவம் – சௌஸீல்யம். மகதகா - மிகப்பெரியவன் ஒருத்தன், மந்தைஸ்யஹ – ரொம்ப சாமான்யன் இன்னொருத்தன். நான் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்னு வேறுபாடு பார்க்காமல் யார் தோளோடு தோள் கைகோர்த்துக் கொள்கிறானோ, அவன்தான் சுசீலன். இராமன் அப்படித்தான் பண்ணினார். கஸ்யவீர்யவான் – வெறுமே சுசீலனா இருந்தாப் போதுமா? வீரம் இருக்கணுமோல்லையோ? யார் மெய்யே பேசுபவன்? யார் பார்ப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டுபவன்? யார் கோபமே இல்லாதவன்? யாருக்குக் கோபம் வந்தால் தெய்வங்கள்கூட நடுங்கும்? யாரைப்பற்றி எழுதுவதற்கு ரிஷிகள் அத்தனை பேரும் ஆசைப்படுவர்கள்? யாரொருத்தன் செய்த நன்றியை ஒரு துளிக்கூட மறக்கமாட்டான்? யாரொருத்தன் என்ன அபகாரம் செய்யப்பட்டாலும் அதை மறந்தே போய்விடுகிறான்? யார் வித்வான்? யார் ஆத்ம தத்வத்தை அறிந்தவன்? யார் அனைத்து ஜீவராசிகளிடத்தும் கருணையே வடிவெடுத்தவன்? யார், யார், யார், விடாம கேட்டுட்டார். அவர் யார்? அவரை மட்டும் எனக்கு அடையாளம் காட்டும்.’ என்று வால்மீஹி நாரதரைக் கேட்க, நாரதர் ஒரு நிமிஷம் அவகாசம் எடுத்துண்டார். அப்போ அவரைப் பார்த்துச் சொல்றார்.
உன்னாலே பாடப்பட்ட இக்குணங்களெல்லாம் தேடித்தேடிப் பார்த்தாலும் யாரிடத்திலேயும் கிட்டாது. நீர் ஆனா சட்டுன்னு கேட்டுட்டீர். இருந்தாலும் நீர் கேட்டதற்கு யோசித்துச் சொல்லுகிறேன். எனக்கு சந்தேகமில்லே யாரிடத்தில இந்த குணங்கள் இருக்குங்குறது. நிச்சயமாத் தெரியும். ஆனா ஏன் யோசித்துச் சொல்றேன்னார்ன்னால், இன்னாரிடத்தில இருக்குங்கிறதை நான் நினைத்த உடனே, அவனைப் பற்றி நினைத்து உள்ளம் உருகுகிறது. உடல் நிற்கத் தயங்குகிறது. கால் தடுமாறுகிறது. வாய் தழுதழுக்கிறது. அதானாலே எனக்கு ரெண்டு நிமிஷம் அவகாசம் கொடும். இராமனைப்பத்தி யோசிச்சு, மனசைத் தேத்திண்டு உமக்கு பதில் சொல்றேன். குணே வக்ஸ்யாம்யஹம் புத்வா, அஹம் புத்வா-ன்னால், நான் புதுசா தெரிஞ்சிண்டுன்னு அர்த்தமல்ல. இனிமேலெயா நாரதர் தெரிஞ்சுக்கப் போறார். இராமன்தான் கல்யாண குணாதி இராமன்னுட்டு. ஆனா அந்தக் கல்யாண குணங்களோடு கூடிய இராமனை நினைத்த உடனே, கால் ஆளும் நெஞ்சழியும் கண் சுழலும். கண்களிலேர்ந்து நீர் சொரிய, மயிர்க்கூச்செரிய, உடம்பு தள்ளாட, நா தழுதழுக்க, மேல இராமனைப்பற்றி சொல்ல மாட்டாமல் நின்று போய், யோசித்து சொல்றதுக்கு ஆரம்பிச்சார். ’நீர் பதினாறு கேள்வி கேட்டுட்டீர். என்கிட்ட ஒரே பதில்தான் இருக்கு. நான் பதினாறு பதில் சொல்லப் போறதில்லே. ஒரே பதில். ‘இஷ்வாகு வம்ஷப்ரபவஹா ராமோ நாம ஜனைஸ்ருதஹா’. இஷ்வாகு குலத்திலே தோன்றினவனாய், இராமன் என்று பெயர் பெற்றவன்தான் நீர் கேட்ட அத்தனை கல்யாண குணங்களுக்கும் ஒரே இருப்பிடம். அவனைப்போல் இன்னும் பார்த்ததில்லை, நாளையும் யாரும் பார்க்கப் போவதில்லை. அந்த இராமனைப்பற்றி மேலே சொல்லுகிறேன்’னுட்டு, சங்க்ஷேப இராமயணம் தொடங்கி, இராமாயணக்கதை அத்தனையும் 32 ஸ்லோகங்களுக்குள்ளே சுருக்கமாச் சொன்னார். இந்த இடத்திலே வால்மீஹி பகவான் ராமனுடைய உருவ அழகைப்பத்தி ரொம்பக் கேட்கலே. குணங்களைப்பற்றித்தான் நிறையக் கேட்டார். ஆனா நாரதர் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் பாருங்கோ, உருவத்தைப்பற்றி 8 ஸ்லோகம் சொல்லிட்டு, அப்புறம் குணங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார். ’ஏன்னா என்னை ஈர்த்தது அதுதான் வால்மீஹி. உமக்கு இன்னும் அது தெரியாது. நீர் பார்த்துட்டீர்ன்னா நீர் இதெல்லாம் கேட்க மாட்டீர். இராமனுடைய அழகைப் பத்தித்தான் பேசுவீர்’. இப்போ பெருமாளைச் சேவிக்கிறோம். அவர் ப்ரம்மம், காரணம், எங்கேயோ இருக்கிறார், எல்லாத்தையும் படைக்கிறார், இதெல்லாம் இருக்கட்டும். உசத்திதான். ஆனா அதைப்பற்றி எத்தனை நாழி சொல்லியிருந்தா நமக்கு மனசு ஈர்க்கப்போறது சொல்லுங்கோ? நாம பார்த்ததே இல்லே. பார்க்காத ஒரு விஷயத்தைப்பற்றி என்னதான் யோகம், தியானம்ன்னாலும், மனசு ஈடுபடவே படாது. இராமன்ன உடனே, கருநீல வர்ணம், எட்டடி உசரம், அழகில அழகே வடிவெடுத்த சீதை, இந்தப்பக்கம் அதுக்குத் தகுந்த லக்ஷ்மணன், கையிலே பிடித்த வில், கருணையே ததும்பும் விழிகள், இதை ஞாபகம் வச்சிண்டாதான் நமக்கு பக்தியே. இதை விட்டுட்டு அவரே ப்ருத்வி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம், உண்மைதான். சாஸ்திரம் சொல்றது ஒன்னுமே பொய் கிடையாது.
ஆழ்வார் பாசுரத்திலே சொல்றார், நீயே நீர், நீயே தீ, நீயே கால், நீயே அயன். எல்லாமே நீதான். பெருமாள் உடனே சொன்னார், ’எல்லாம் நாந்தான்னு புரிஞ்சுனிட்டீரோல்லையோ, அப்போ என்னை வரணும், வரணும்ன்னு சொல்லாதேயும். உம்ம ஊர்லயே ப்ருத்வி, அப்பு, தேஜஸ் எல்லாம் இருக்கோல்லையோ, அதையே பார்த்து என்னை சேவிச்சதா வச்சுக்கும்’னுட்டார் பெருமாள். ஆழ்வார் சொன்னார், ‘அதெல்லாம் எனக்கு திருப்தி கிடையாது. அதுக்குன்னு குளத்தைப் போய் பார்த்தா உன்னைப் பார்க்கிற அளவுக்கெல்லாம் ஞானம் எனக்கு இல்லே. அது யாரானும் நாலு ரிஷிகளுக்கு இருந்திருக்கலாமே தவிர, நீ எனக்கு வேண்டியபடி, கூரார் ஆழி வெண்சங்கேந்தி கொடியேன்பால் வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. சங்க சக்கரங்களை ஏந்திண்டு, நான்கு தோள்களோடே எனக்குப் பிடிச்ச வடிவத்தோடே வந்தாத்தான என் மனசு ஈடுபடும்? நீ ப்ருத்வி, அப்பு, தேஜஸ்ஸுன்னு இருந்தா எனக்கு மனசு ஈடுபடுமா? அதனால ராமன்ன உடனே, குணங்கள் எத்தனையோ இருந்தாலும், ரூப குணங்கள்தான் நாரதரை ஈர்க்கிறது. பெருமாளுக்கு சொரூப குணங்கள்ன்னு பல, ரூப குணங்கள்ன்னு பல. சொரூபம்ங்கிறது அவருடைய இயற்கை. அதைப்பத்தி சொல்லக்கூடிய குணங்கள் எத்தனையோ. அதை எல்லாத்தையும் கொஞ்சம் பின்னாடி தள்ளிட்டார் நாரதர். தள்ளிட்டு அவனுடைய ரூபத்தைப் பத்திதான் முதல்ல சொல்றார்.
மஹோரஸ்கஹா – எட்டடி உசரம், மகேஸ்வாஸஹா – அந்த அடி உயரத்துக்குத் துளி குறைச்சலான உயர அளவுக்கு வில்லு இராமன் கையிலே இருக்கும். சார்ங்கம்ங்கிற வில், அவர் நிற்கிறாரா, வில்லு நிற்கிறதான்னு இருக்குமாம். ஆஜானுபாகுஹு – தன்னுடைய முழந்தாள் அளவு நீண்ட கைகளோடே, சம பக்த விபக்தாங்க – அவனுடைய தோள்கள்லேர்ந்து, இடையிலேர்ந்து, தொடையிலேர்ந்து, திருவடிவரைக்கும், தகுந்த சமனான சீரிலே இருக்ககூடிய வடிவழகு. ஸ்நிக்த வர்ணஹா – நிகுநிகுன்னு மனசை ஈர்க்கக்கூடிய கருநீல வர்ணம். பீநவக்ஸாஹா – நல்லா அகன்று இருக்கிற திருமார்புகளோடே, விசாலக்ஷஹா – ரொம்ப நீளமான திருக்கண்கள். ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரிரக்ஷிதா ரக்ஷிதா தர்மஸ்ய சுவஜநஸ்ய ரக்ஷிதா - இராமனுக்குப் பெருமையே தன்னுடைய அந்தப்புரத்தையும் விட்டுக் குடுக்கமாட்டார், நாட்டையும் விட்டுக் குடுக்க மாட்டார். இந்த ரெண்டையும் அவருக்குச் சமமா பார்த்துக்கத் தெரியும். ஆனா கண்ணன் ஸ்வஜனத்தை விட்டுக்குடுத்துருவர். லோக ரக்ஷனத்துக்கு நிறையவே பாடுபடுவர். ஆண்டாள் ஒரு பாசுரத்திலே கண்ணனுக்கு பேர் குடுக்கிறாள், ‘பெண்ணின் வருத்தம் அறியாப் பெருமாள்’. பெண்களோட வருத்தம் என்னதுன்னே இவருக்குத் தெரியாது. அதனால எங்களை இவர் கண்டுகொள்ளவே மாட்டார். அதே ஆண்டாள் இராமனுக்குப் பேர் குடுக்கிறாள், ‘மனத்துக்கினியான்’. எங்க மனசுக்கு ரொம்ப இனிமையானவர் இராமன். ஆண்டாள் பிறந்ததே கண்ணனுக்கு, அதை ஞாபகம் வச்சுக்கணும். ஆனா அவ பாடும்போது கண்ணனைக் கொண்டாட மாட்டேங்கறா. இராமனைத்தான் ‘மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்’ன்னு திருப்பாவை பாசுரமோல்லையோ? அதனாலே இராமன் எல்லாருக்கும் மனத்துக்கினியான். யார் மனத்தையும் ஈர்க்கக்கூடியவர். சத்ருக்கள்கூட விதிவிலக்கல்ல. ரெண்டு கேள்வி சேர்த்துக் கேட்டார் வால்மீஹி. ஜிதக்குரோதஹா – யாருக்குக் கோபமே வராது? கோபத்தை ஜெயித்தவன் யார்? கடைசிக் கேள்வி கேட்டார், கஸ்யவிப்பதி தேவாஸ்ச ஜாதரோசஸ்ச சங்யுகே – யாருக்குக் கோபம் வந்துடுத்துன்னா தேவர்கள்கூட பயந்து போய்டுவா? உடனே இவர் என்ன சந்தேகப்படணும்? இவர் என்ன கோபத்தை ஜெயித்தவர் யாருன்னு இவரே கேட்கறார், யாருக்கு கோபம் வந்துடுத்துன்னா தேவர்கள்கூட பயப்படுவான்னு கேட்கறார். ஒன்னு கோபம் வரணும், இல்லே வரப்படாது. ரெண்டும் ஒருத்தரிடத்திலே இருக்குமான்னா, கோபமே வராது. ஆனா எப்போ தெரியுமா வரும்? தன் அடியவர்களிடத்திலே யாரேனும் அபசாரப்பட்டால் மட்டும் வரும். தன்னிடத்தில எத்தனை அபசாரப்பட்டாலும் கோபம் வராது. தன் பக்தனிடத்தே எங்கு, யார் அபசாரப்பட்டாலும், அப்ப வர்ற கோபத்தைப் பார்க்கணுமே, தெய்வங்கள்கூட நடுங்கிப் போய்டும். யாரும் எதிர் நிற்க மாட்டார்கள். தன்னை இராவணன் அடியா அடிச்ச வரைக்கும் இராமனுக்குக் கோபமே வரலே. சிரிச்சிண்டே அத்தனையும் ஏத்திண்டிருந்தார். இராவணன் ஹனுமார் பேர்ல முதல் அம்பு விட்டான். அப்பதான் இராமனுக்குக் கோபமே வந்தது. இனி இவனை உயிரோடு விட்டு வைப்பதில்லை, என்று கோபப்பட்டாரோல்லையோ? நாரதர் புறப்பட்டுப் போனவுடனே வால்மீஹி போய் தீர்த்தமாடிட்டு வரலாம்ன்னு புறப்பட்டார். அவர் சிஷ்யர் பரத்வாஜ மகரிஷி. அவரைக் கூட்டிட்டு புறப்பட்டார். கொஞ்ச தூரம் போகணும் கங்கை நதிக்கு. நாழியாயிடுத்தே, சீக்கிரம் பக்கத்துல போய்ட்டு வந்துரலாம்னுட்டு, பக்கத்துலே தமஸான்னு ஒரு நதி, அங்க தீர்த்தமாடுவதற்குப் போனார். இன்னிக்கும் இருக்கு, பிட்டூர்ன்னு அந்த இடத்துக்குப் பேர். உத்தர பிரதேசத்திலே கான்பூருக்குப் பக்கத்திலே வால்மீஹியினுடைய ஆஸ்ரமம் இருக்கு. அந்த இடத்துக்கு ஐம்பது மைல் தொலைவிலே பிட்டூர்ன்னு ஒரு இடம். அங்க தீர்த்தமாடிட்டு வெளில வந்தார். விசித்ரமான பகவத் சங்கல்பத்தாலே திரும்ப நேர ஆஸ்ரமத்துக்கு வந்துடாமல், பக்கத்துல இருக்கிற தோட்டத்துக்குள்ள போனார். அங்க ஒரு மரத்தில் இரு பறவைகள் அமர்ந்திருந்தன. ஆணும் பெண்ணுமாக சுகத்திலே ஈடுபட்டிருந்தன. இவர் பார்த்துண்டே இருக்கறச்சே ஒரு வேடன் குறுக்க வந்தான். அம்பு எய்தான், ஒரு பறவையை அடித்து வீழ்த்திவிட்டான். துடித்துப் போன மற்றொரு பேடை விரக தாபத்தாலே சிரமப்பட்டுக் கொண்டு இருந்தது. பார்த்த வால்மீஹிக்கு உள்ளம் முழுக்க சோகம். நன்னா இருந்த ரெண்டு பறவையைப் போய் ஒன்னை அடிச்சுட்டானே. இதுனாலே உள்ளுக்குள்ள இருந்த சோகம், வேகமா ஸ்லோகமா வாயாலே வெளியே வந்தது. சோகமே ஸ்லோகமாக வந்ததுதான் வால்மீஹி இராமாயணம்ன்னு சொல்லுவர்கள். உடனே அவனுக்கு சாபம் குடுத்துட்டார்.
இந்த ரெண்டு க்ரௌஞ்சங்களுக்குள்ள ஒன்றை அடித்து வீழ்த்தினாயே, உனக்கு எல்லா அமங்களங்களும் உண்டாகுக. உனக்கு நன்மை ஏற்படாது, அப்படின்னு சபிச்சார். ஆஸ்ரமத்துக்கு வந்துட்டார். இதான் முதல்முதல்ல ஒரு ஸ்லோகமே பண்ணியிருக்கது. இதுவரைக்கும் வால்மீஹி ஸ்லோகம் பண்ணதில்லே. வாயால் வந்த முதல் ஸ்லோகம் இது. ஆஸ்ரமத்துக்கு வந்து யோசிச்சுப் பார்த்தா, எல்லா எழுத்து, சீர், அடி, தொடை, யாப்பிலக்கணம் எல்லாமே சரியா இருக்கு. ஆனா முதல் ஸ்லோகம் போய் சாபமா இருக்கலாமா? மங்களமா பாட ஆரம்பிக்க வேண்டாமா? அதை விட்டுட்டு சாபமா பாடிட்டோமேன்னு வருத்தம். அப்போ ப்ரம்மா வால்மீஹி ஆஸ்ரமத்துக்கு வருகிறார். ப்ரம்மா ஏன் ஏதோ வருத்தமா இருக்கிறீர்ன்னு கேட்க, இவர் இப்படி ஒரு முதல் ஸ்லோகம் பாடினேன், ஆனா அமங்களமா போச்சு, என்று சொல்லுகிறார். ’கவலைப்படவேண்டாம், அந்த ஸ்லோகத்தையே நல்ல வார்த்தையா நான் மாத்தி தரேன்’னார் அவர். ப்ரம்மா இப்போ இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்றார். ‘ஆணும் பெண்ணுமா ரெண்டு பறவைகள் உட்கார்ந்திருந்ததே, அதுதான் சீதா இராமர்கள். அதை இராவணன்ங்கிற வேடன் வந்து குறுக்க பிரிச்சுட்டான். அதை ஒழித்தது யார் தெரியுமோ? மா நிஷாத. மா – உண்டாகமல் போகட்டும். வால்மீஹி இந்த அர்த்தத்திலதான் ஸ்லோகம் பண்ணியிருக்கார். ஆனா ப்ரம்மா, மா என்ற சப்தத்துக்கு ‘மாதா லக்ஷ்மி’ என்று வைத்துக் கொண்டார். மா நிஷாத – அந்த லக்ஷ்மி அமர்ந்திருக்கக்கூடிய இடம், ஸ்ரீநிவாசப் பெருமாளுடைய திருமார்பு. அதனாலே, ஸ்ரீநிவாசப் பெருமாள், லக்ஷ்மியை தன் திருமார்பிலே இருத்திக் கொண்டவர், இந்த ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டுட்ட இராவணனை, தான் அம்பு விட்டு கொன்னுட்டார். அவனுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகுக. மா என்ற சப்தத்தை இடம் மாற்றினால் எல்லா அர்த்தமும் மாறிப் போகிறது. ஏனென்றால் மாநிஷாத என்றால், ஏ நிஷாத (வேடனே) உனக்கு எந்த நல்லதும் ஏற்படாமல் போகட்டும், என்று விலக்கித்து. ஆனால் மா என்பதற்கு பிராட்டி என்று அர்த்தம் வைத்தால், ஸ்ரீநிவாசனே உனக்கு, ஸாஸ்வதீஸ்ஸமாஹா – எத்தெத்தனை நாட்கள் உண்டோ, அத்தனை நாட்களுக்கும் உனக்கு நல்லதே உண்டாகட்டும், அப்படின்னு இந்த ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு மேலே நீர் பாடலாம், என்று ப்ரம்மா அனுகிரகித்தார். என்ன பாட வேண்டும் என்று வால்மீஹி கேட்கிறார். ப்ரம்மா சொல்றார், நாரதரை அனுப்பி வைத்தேனே, வரலையான்னார். அப்போதான் வால்மீஹிக்கு என்ன கேட்டோம் என்றே தெரிகிறது. ப்ரம்மா சொல்றார், ’நாம்தான் சரஸ்வதியை உன் நாவில் அமர்த்தி இந்த ஸ்லோகமே பாட வைத்தோம். நாம்தான் நாரதரை அனுப்பி உமக்கு ராம கதையை சொல்லச் சொன்னோம். நமக்கு இராமனுடைய ஆணை, அவசியம் இராம சரித்திரத்தை எழுத வேண்டுமென்று. அதற்காகத்தான் உம்மிடத்தே நாம் வந்தோம், இப்போது உம்மை அனுக்கிரக்கிறேன்’ன்னு சொல்லுகிறார். இனி எத்தனை நாட்கள் காடுகள் இருக்குமோ, எத்தனை நாட்கள் மலைகள் இருக்குமோ, அதுவரைக்கும் இராமாயணமும் இருக்கும். இராமாயணம் இருக்கும்வரையிலும் உம்முடைய வைபவமும் உலகத்திலே இருக்கும். எதுவரைக்கும் கங்கை ஓடிண்டிருக்கோ, எதுவரைக்கும் ஜோதிஷ்சக்கரங்களெல்லாம் இருக்குமோ, யாவதாவர்த்ததே சக்கரம்ன்னு சொல்லுவர்கள், அதுவரைக்கும் இராமாயணத்தின் பெருமையும் இருக்கும், உம்முடைய வைபவமும் இருக்கும்ன்னு வால்மீஹிக்கு ப்ரம்மா அனுகிரகித்தார். அது தொடங்கித்தான் ஸ்ரீஇராமாயணத்தைப் பாட ஆரம்பிச்சார். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta) ஸ்ரீராம அவதார காரணம்பகவான் செய்தருளிய அவதாரங்களிலே சரணாகதி சாஸ்திரத்தை உலகோருக்குப் புரிய வைப்பதற்காகவே ஸ்ரீஇராமச்சந்திரன் அவதரித்தான். ரகுகுல திலகனாய் இராகவன் என்றும், ககுஸ்தனுடைய வம்சத்தில் அவதரித்தபடியால் காகுத்தன் என்றும், இஷ்வாகு வம்சத்திலேயே அவதரித்து, நம் பாரத தேசத்தினுடைய தர்ம சாஸ்திரங்களை எடுத்துரைத்தும் நடத்தியும் காட்டியவன், மரியாதா புருஷோத்தமனான இராமன். தசரதனுக்கு குமாரனாகப் பிறந்தபடியால் தாசரதி என்று பெயர் பெற்றான். அண்ணனிடத்தே தம்பி எப்படி நடக்க வேண்டும், தந்தையிடத்தே தமையன் எப்படி நடக்க வேண்டும், ஆச்சார்யனிடத்தே சிஷ்யன் எப்படி நடக்க வேண்டும், பொதுவாக பெரியோர்களிடத்தே சிறியோர்கள் எப்படி நடக்க வேண்டும், இந்த முறையெல்லாம் மாறிக் கிடந்ததாம். அதை சரிப்படுத்தி, இதுதான் எல்லாரும் நடக்க வேண்டிய முறை என்று உணர்த்துவதற்காகவே இராமனுடைய அவதாரம். அது பிரதானமான பிரயோஜனம். அதோடுகூட அவதரித்தபோது வேறு சிலவற்றையும் பகவான் செய்து காட்டினான். அதிலே ஒன்று இராவணனை முடித்தது. கொல்லுவதற்காக பகவதவதாரம் அல்ல. அது பிரதானமான காரணமோ, பிரயோஜனமோ அல்ல. ஏன்னா ஒரு சாதாரணனான இராவணனைக் கொல்றதுக்குப்போய், சர்வேஸ்வரன் கீழ வரணும்ங்கிற அவசியம் இல்லை. அதனால அவர் கீழ வரவேண்டுமென்றால், மக்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியாக இருப்பதற்குத்தான். பெயர்க் காரணம் தசரதனுக்கு குழந்தைகள் பிறந்தவுடன், அவரது குலகுருவான வசிஷ்டர் பெயர் வைக்கிறார். இராமன் – ரமையதீதி ராமஹா. காண்பவர்களின் கண்ணையும், மனத்தையும் பறிக்கும்படி அழகை வழங்குவதால், ரமையதீ – ஆனந்தத்தைக் குடுப்பதால், இராமன்னு பெயர். லக்ஷ்மணன் – லக்ஷ்மணஹா லக்ஷ்மி சம்பந்நஹா, லக்ஷ்மி வர்த்தநஹா. நல்ல லக்ஷ்மி செல்வம் இருக்கப் போறது. நாடே போய்டப் போறது, இவருக்கு என்ன லக்ஷ்மி சம்பந்தம்ன்னா? கைங்கர்ய லக்ஷ்மின்னு அர்த்தம். ஏன்னா பதினான்கு வருஷம் உண்ணாது, உறங்காது சகல கைங்கர்யங்களையும் பண்ணினாரோ இல்லையோ? அதுதான் லக்ஷ்மணனுக்கு இருக்கற லக்ஷ்மியே. ஒரு சம்சாரி, ஜீவாத்மாவுக்கு இருக்கிற லக்ஷ்மின்னா, கைங்கர்யம்தான் லக்ஷ்மி. கைங்கர்யம்ங்கிறது என்றைக்கும் விட்டுப் பிரியாமல் இருக்ககூடிய லக்ஷ்மி. பரதன் – பரதைதி ராஜ்ய பர்நாத். இராஜ்யத்தை இவன்தான் பரிக்கப் போகிறான், அதனால பரதன் என்று பெயர். பரதன் எத்தனை வருஷம் ஆண்டார்? பதினாலு வருஷம், மத்தபடி இராஜ்யத்தை அவன் ஆளவே இல்லே. அவருக்கு ஏன் அப்புறம் பரதன்னு பேர்? இராஜ்ய பாரத்தை சுமக்கப் போறார், அதனால பரதன்னா, இராமனுக்கு சொல்லியிருக்கலாம், தசரதனுக்கு சொல்லியிருக்கலாம், அஜமகா ராஜாவுக்கு சொல்லியிருக்கலாம், எந்த ராஜாவுக்கும் சொல்லியிருக்கலாம். அத்தனை பேரையும் விட்டுட்டு பரதனுக்கு ஏன் வைச்சார்ன்னா, பரதன் ஒருத்தன்தான் இராஜ்யத்தை பாரம்ன்னு நினைச்சிண்டு சுமந்தான். மற்ற யாரும் பாரம்ன்னு நினைக்கவே இல்லையோல்லையோ? இதைப் போய் என் தலையில வைச்சுட்டாளேங்கிற வருத்தம் பரதனுக்குத்தான் உண்டு. அதனாலதான் இராஜ்யத்தைப் பரித்தவன் பரதன். சத்ருக்கணன் – நித்ய சத்ருக்கநஹா. சத்ருக்களை ஜெயித்தவன், சத்ருக்கணன். எந்த சத்ருவை? இராம பக்திங்கிற சத்ருவைத் தாண்டி, பரத பக்தில நின்னானோல்லையோ? ஏன்னா இவர் சண்டை போட்டே நாம பார்த்ததில்லே. லவனாசுரனை ஒருதரம் போய் சண்டை போட்டு முடிச்சுட்டு வந்தார். மற்றபடி அவர் எல்லாம் சண்டைக்கே வரலை. அப்போ இராமனை சத்ருக்கணன்னு பேர் வைக்கிறத விட்டுட்டு, சத்ருக்கணனுக்கு வைச்சுருக்காளேன்னா, இராம பக்தின்னு பகவானுக்கு அடிமையா இருக்கறதவிட, அதைத்தாண்டி பக்தனுக்கு அடிமையா இருக்கணும்ன்னு நினைச்சானோ இல்லையோ? அதனாலதான் சத்ருக்கணஹா நித்ய சத்ருக்கணஹான்னு பேர் வைத்தார். அவதார நோக்கம் இராமனுடைய அவதாரத்துக்குப் பிரயோஜனம், மூத்தவன் சொல்லை இளையவன் கேட்க வேண்டும். இது லோகத்துல மாறிப் போச்சு. முறைமாறிப் போனதை சரிப்படுத்துவதற்காக ஸ்ரீராமாவதாரம். தகப்பனார் சொன்னா பிள்ளை கேட்கணும்; குரு சொன்னா சிஷ்யன் கேட்கணும்; அண்ணன் சொன்னா தம்பி கேட்கணும். இதைப் போல மூத்தவன் சொன்னால் இளையவன் கேட்க வேண்டும். இதை நிலைநிறுத்துவதற்காக இராமன் பிறந்துட்டார். லக்ஷ்மணனுடைய அவதாரத்துக்குப் பிரயோஜனம், சேஷத்துவம். சேஷத்துவத்தை அறிவிப்பதற்காக லக்ஷ்மணனுடைய அவதாரம். சேஷத்துவம்ன்னால் என்ன? பகவானுக்கு அடிமையாக இருக்கும் தன்மை. பகவானுக்கு கைங்கர்யம் பண்ண வேண்டிய தேவை. ஒரு ஆத்மா எவ்வாறு ஞானமயன், ஆனந்தமயனோ, அதோடு அவர் பகவானுக்கு அடிமை என்பதும் இயல்பு. ஆண்டானுக்கு அடிமை கைங்கர்யம் செய்வதே, தொண்டு புரிவதே கடமை. இதை உணர்த்துபவர் லக்ஷ்மணன். இதைப்பற்றி சாஸ்திரமே சொல்லுகிறது,
நம்முடைய கை, கால்கள் முதலானவற்றையெல்லாம் பரப்ரம்மமான எம்பெருமான் படைத்து ‘இது எனக்காக உபயோகப்படட்டும்’, அப்படின்னு சொல்லிக் குடுத்துருக்கார். அவருக்கு உபயோகமே படுத்தாது விட்டுட்டோம்ன்னா? நமக்காக நிறைய உபயோகப்படுத்திக்கிறோம், கொஞ்சமாவது அவருக்காக உபயோகப்படுத்த வேண்டுமோல்லையோ? அதைச் செய்யணும்ங்கிறதுக்குத்தான் லக்ஷ்மணன் பிறந்து, கைங்கர்யமே வாழ்க்கை, தொண்டு புரிதலேதான் வாழ்க்கைன்னு வாழ்ந்து காட்டினான். இதைத்தான் சேஷத்துவம்ன்னு சொல்லுகிறோம். பரதனுடைய அவதாரத்துக்குப் பிரயோஜனம், பகவத் பாரதந்திரியமே சொரூபம்ன்னு சொல்வது. சொரூபம்ன்னா இயற்கைத் தன்மை. பாரதந்திரியம்ன்னால், பெருமானையே சார்ந்து இருத்தல். நமக்கு நாம் சுதந்திரர் அல்லர்கள், பரதந்திரர்கள். யாருக்கு தானே பிரதானமோ, அவன் சுதந்திரன். யாருக்கு பரனான பகவான் பிரதானமோ, அவன் பரதந்திரன். பரதன் இருந்த நிலை, ‘பகவானுக்கு அடியேன் பரதந்திரன். அவர் காட்டில வைச்சாலும் இருக்கேன். நாட்டிலே வைச்சாலும் இருக்கேன். நாட்டை ஆளுன்னு சொன்னாலும் ஆளுவேன், வேண்டாதே சொன்னாலும் விட்டுடுவேன். எப்படியாயிருந்தாலும் தயார்’. லக்ஷ்மணன் அந்த அளவு ஒத்துக்கமாட்டார். இராமன் நாட்டிலே இருன்னு சொன்னால், வருவேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டுப் போனானோல்லையோ? அப்போ அடிமைத்தனத்திலதான் அவருக்கு ஊற்றம். ஆனா பரதன் இந்தப் பிடிவாதம் பிடிக்கவில்லை. அப்போ லக்ஷ்மணனுக்கு ’தான் தொண்டு புரியவேண்டும்’ங்கிறது முக்கியம். பரதனுக்கு ‘அவன் மனம்படி நடக்க வேண்டும்’ங்கிறது முக்கியம். அதனாலதான் லக்ஷ்மணனைக் காட்டிலும் பரதனுக்கு ஓர் படி உயர்வுண்டுன்னு சொல்லுவர்கள். சத்ருக்கணனுடைய அவதாரம், அவரும் சேக்ஷத்துவம், பாரதந்திரியம்தான் சொன்னார். ஆனா பகவானிடத்தில் அல்ல. பாகவதனிடத்தில். பகவானைக் காட்டிலும் அவன் அடியவனுக்கு அடியவனாக இருப்பேன். அவன் அடியவனே எனக்கு முக்கியம். இதைச் சொல்லுவதற்காக சத்ருக்கணனுடைய அவதாரம். இதனால்தான் பரதாழ்வான், சத்ருக்கணனாழ்வான்னு எழுதுவர்கள். லக்ஷ்மண ஆழ்வான்னு ரொம்ப பேர் கிடையாது. ஏன் அந்த இருவருக்கு மட்டும் இப்படி உயர்வாகப் பேர்ன்னா, சேஷத்துவத்தைவிட பாரதந்திரியத்துக்கு ஏற்றம். அதனாலதான் பரதாழ்வான். பகவத் சேஷத்துவத்தைவிட பாகவத சேஷத்துவம் ஏற்றம். அதனாலதான் ஸ்ரீசத்ருக்கணனாழ்வான். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta) எவ்வாறு மஹாபாரதத்தைவிட ஸ்ரீராமாயணம் பிரபலம்?மஹாபாரதம் கண்ணனைப்பற்றி பதினெட்டு பர்வங்களிலும் சொல்லவில்லை. எங்கேயோ, யாராரோ பிறந்து, எப்படியெப்படியோ வளர்ந்து, அத்தனை கதையும் மஹாபாரதத்திலே உண்டு. ஆனால் இராமாயணத்தை எடுத்துக் கொண்டால், முதல் ஸர்க்கத்திலே இருந்து கடைசி ஸர்க்கம் வரைக்கும் இராமன் உண்டு. அதுல குறைவில்லே. வியாஸாச்சாரியருக்கே, ஓ, நாம இப்படிப் போய் ஒரு மஹாபாரதம் எழுதிட்டோமேன்னு, ஏன்னா, மஹாபாரதம் எழுதிட்டு, யார் யார் கதையோ எழுதிட்டேன், சொல்ல வந்த கதையை விட்டுட்டேன்னு ஒரு வருத்தம், அதனாலதான் வருத்தம் தீர பாகவதமே எழுதினார் அவர். அவருக்கே தோணிப்போச்சு, இத்தனை கதையை எதுக்குச் சொன்னேன்? இதை வச்சிண்டு யாரும் மோட்சம் போகப் போறதில்லே. நான் எதுக்கு அதைச் சொன்னேன்னுட்டு, மாற்றி பாகவத மஹா புராணத்தை இயற்றினார். அந்தக் குறைபாடு இராமயணத்துக்கு இல்லை. என்ன சொல்ல வந்தாரோ, அதை முதல்லே இருந்து கடைசி வரைக்கும் அப்பழுக்கில்லாம சொல்லிட்டுப் போய்ட்டாரோல்லையோ வால்மீஹி பகவான்? இராமயணத்தை இராமன்னு தொடங்கினார், இராமனோடேயே முற்றுப்பெற்று வைத்தார். இன்னொன்னு, ரெண்டுமே பகவத் அவதாரந்தான், இராமனாகட்டும், கண்ணனாகட்டும். ரெண்டு பேருக்கும் ஒற்றுமையும் நிறைய உண்டு, வேற்றுமையும் நிறைய உண்டு. இராமன் சூர்ய குலத்தில பிறந்தார். சந்திர வம்சத்தில பிறந்தவன் கண்ணன். இராமனோ அரண்மனையில பிறந்தார், கண்ணனோ சிறைச்சாலையில பிறந்தார். இராமன் பகல்வேளையிலே பிறந்தார், கண்ணன் ராத்திரி வேளையிலே பிறந்தார். இராமன் நவமியிலே அவதரித்தார். கண்ணன் அஷ்டமியிலே அவதரித்தான். இராமனுக்கு எப்போதும், எல்லாமே ஒன்று. பிறந்த இடம், வளர்ந்த இடம், ஆண்ட இடம், புறப்பட்டுப் போன இடம், எல்லாமே ஒன்று. கண்ணனுக்கு அத்தனையுமே வேறே. பிறந்த இடம் மதுரை, வளர்ந்தது கோகுலம், வாழ்ந்தது துவாரகை, புறப்பட்டது பிரபாஸ தீர்த்தம். ஓரிடத்தில அவர் இருக்கவேமாட்டார். நாலும் வெவ்வேறே. எல்லாம் ரெண்டு ரெண்டா இருந்தா, வார்த்தையும் ரெண்டு. இராமனுக்கு சொல்லு ஒன்றுதான் எப்பவுமே. ரெண்டாவது சொல்லு பேசமாட்டார். ஆனா கண்ணனோ, ‘மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக்கண்டீரே’ன்னு ஆண்டாள் பாசுரம். அவளுக்குத்தான் உண்மை தெரியும், கைப்பிடித்த மனைவி ஆண்டாள். அதனால அவ சொன்னபடிதான் நாம கேட்கணும். இந்தப் பொய் சொல்ற பிள்ளை கண்ணனை எங்கேயாவது பார்த்தீளா, அப்படின்னு ஆண்டாளே பாசுரத்திலே கேட்கறாளோல்லையோ? போட்டி ஒன்றுமில்லை இப்போ, ரெண்டும் அனுபவம். அதோடு மட்டுமல்ல, கண்ணனைப்பற்றி இருந்ததுன்னாக்கூட ருக்மிணிப் பிராட்டியைப்பற்றி நிறைய இருக்கா என்ன? இல்லையே, மஹாபாரதத்தில பெரிய கதை இல்லை. இல்லே, கண்ணனுடைய சிஷ்யர்கள், கண்ணனுடைய பக்தர்களைப்பற்றி ஏதாவது நிறைய எழுதியிருக்கா? இல்லே. அந்தமாதிரி எல்லாம் குறைபாடுகள். ஆனா ஸ்ரீராமாயணம்ன்னு எடுத்துண்டா, இராமனைவிட ஒருபடி மேல சீதாதேவியினுடைய சரித்திரம் இருக்கோல்லையோ? அவளைப்பற்றி சேர்த்து இருக்கறபடியாலே ‘ஸ்ரீராமாயணம்’. மஹாபாரதம்ங்கிறோம், அப்படி ஒன்னும் ‘ஸ்ரீமஹாபாரதம்’ன்னு வார்த்தையிலே இருக்கறதாத் தெரியலே. ஆனா இராமயணம்ன்னா, ஸ்ரீமத்ராமாயணம், ஸ்ரீராமாயணம்ங்கிறோமே, ஏன்னா ‘ஸ்ரீ’ இருக்காளே. சீதை முழுக்க அதிலே இருக்கறபடியாலேதான் ஸ்ரீமத்ராமாயணம், ஸ்ரீராமாயணம்ன்னு சொல்றோம். இதைக்காட்டிலும் சொல்லனும்ன்னா, இராமன் எங்கேயும் இருக்கட்டும், சீதை எங்கேயும் இருக்கட்டும். ஆனா அவாள்லாம் இப்போ இங்கே இல்லே. இப்போ இந்த மேடையிலே, இந்த மண்டபத்துக்குள்ளே இராமாயண கதாபாத்திரத்திலேர்ந்து ஒருத்தர்தான் இருக்கார். வேற யாரும் வரமாட்டா நம்மகிட்டே. ஆனா அவர்மட்டும் போகவேமாட்டார். அவர், ஆஞ்சநேயரான ஹனுமார். (உபந்நியாச மண்டபத்தில்) பக்கத்தில போட்டிருக்கிற ஆசனம் வேற யாருக்குமல்ல, அவருக்குத்தான். அவர் செய்தது, யத்ரயத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ரதத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம் கண்ணும் கண்ணீருமாக, கைகளைக் கூப்பிக்கொண்டு, தலையைக் குனிந்து கொண்டு, எந்தக் குழந்தை இராமாயணம் படிச்சாக்கூட கேட்டுண்டு இருப்பர். வால்மீஹி சொன்னதையே அவர் கேட்டாச்சு. அவரே ஒருதரம் சொல்லியாச்சு. லவ குசர்கள் கானம் பண்ணினதைக் கேட்டாச்சு. அப்படிக் கேட்ட செவிக்கு நாம பேசறதெல்லாம் முதல்ல ஏற்கவே ஏற்காது. ரொம்ப உசத்தியான சொல்லுக்கு காதைக் குடுத்திருந்தீள்ன்னு வச்சுக்கங்கோ, சாதாரண சொல்லு அந்தக் காதில ஏறவே ஏறாது. இது ஒன்னுமில்லாத நமக்கே வழக்கம். அப்படியிருக்கச்சே ஹனுமானுக்கு, வால்மீஹீயினிடத்திலேர்ந்து இராமாயணத்தைக் கேட்டவர் போய், இன்னைக்கு நாம உளறிண்டு இருக்கோம், அவ்வளவுதான் சொல்லணும், ஆனா அந்த உளறலைக்கூடே? கேட்கட்டும், ஆனா பலபேர் சும்மா மோட்டுவளையைப் பார்த்துண்டு கேட்டுண்டு இருப்பா. அப்படி இல்லையாம். கண்ணும் கண்ணீருமாக கேட்டுக் கொண்டு இருக்கிறார். யத்ரயத்ர ரகுநாத கீர்த்தநம் – எங்கெங்கு இராம கதை பாடப்படுகிறதோ, தத்ரதத்ர – அங்கங்கு, க்ருதமஸ்தகாஞ்சலிம் – தன்னுடைய கைகளைக் கூப்பி, தலையை வணங்கிக் கொண்டு, பாஷ்பவாரி பரிபூர்ந லோசநம் – கண்ணு முழுக்கக் குளமாக, கண்ணீர் தேங்கி ஹனுமார் கேட்டுண்டு இருக்காரேன்னா, யாரு சொல்றாங்கிறது அவருக்கு முக்கியமில்லே. சொல்லப்பட்டது ராம கதையா? சொல்லப்பட்டது ராமனுடைய திருநாமமா, அப்படிங்கிறதுலேயே நிரதராக இருக்கிறார். இப்படி பல பெருமைகள் நிறைந்ததுதான் ஸ்ரீமத் இராமாயணம். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta) May 07 ஸ்ரீமத் இராமாயணம் - ஸ்துதிகூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் வால்மீஹேர் முநிசிம்ஹஸ்ச கவிதா வநசாரிநஹா யவ்ப்விவந் சததம் ராம சரிதா அம்ருத சாகரம் கோஸ்பதி க்ருதவாராஸிம் மசகீகிருத ராக்ஷஸம் அஞ்சனாநஞ்சனம் வீரம் ஜானகி சோகநாஸநம் மனோஜவம் மாருததுல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் உல்லங்யஸிந்தோ ஸலிலம்ஸலீலம் யஸ்ஸோகவந்நிம் ஜநகாத்மஜாயாஹா ஆஞ்சநேயம் அதிபாடலாநநம் யத்ரயத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ரதத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம் வேதவேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே ததுஉபகதஸமாஸ ஸந்தியோகம் ஸமமதுரோபநதார்த்த வாக்யபத்தம் ஸ்ரீராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம் ஸீதாபதிம் ரகுகுலாந்வய ரத்னதீபம் வைதேஹி சஹிதம் ஸுரத்ருமதலே ஹைமேமஹாமண்டபே அக்ரே வாசயதிப் ப்ரபஞ்சநஸுதே தத்வம் முநிப்யவ்ப்பரம் -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta) April 25 விபீஷண சரணாகதி - பாகம் 2முந்தைய பாகம், பாகம் 1 விபீஷணன் ஆசையோட வந்தான். இராமனைப் பற்ற வேண்டும்ங்கிற எண்ணத்தோட வந்தான். எத்தனை சந்தேகப்பட்டிருக்கணும்? ஒரு இராஜா தன் நாட்டைவிட்டு இன்னொரு இடத்தில போகணும்ன்னால், முதல்ல வெள்ளைக்கொடியை அனுப்பனுமோல்லையோ? போய் என்னன்ன நடக்கிறதுன்னு பார்த்துட்டு வந்துதானே பற்றுவர்கள்? ஒண்ணுமே பண்ணலையே விபீஷணன். நாலு பேரோடே கிளம்பினான், நேர வந்துட்டான். அதுதான் சரணாகதிக்கு வேண்டிய மஹா விஸ்வாஸம். விஸ்வாஸம்ன்னா என்னான்னு பார்ப்போம். சரணம்ன்னு ஒருத்தர் வரவேணும்ன்னால்,
இந்த ஸ்லோகம் ரொம்ப முக்கியம். இது சம்ஹிதா வாக்யம். அஹிபுத்ஹிதை சம்ஹிதை, விஹஹேஸ்வர சம்ஹிதை, இதிலெல்லாம்தான் நிறைய சரணாகதியைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும். அதுல சொல்றது, நான் சரணம்ன்னு சொல்லணும்ன்னா, இந்த ஆறும் தேவை. அநுகூல்யஸ்ய சங்கல்பஹா – பகவானுக்கு எது பிடித்தமோ அது மட்டும் செய்வேன். பிராதிகூல்யஸ்ய வர்ஜனம் – அவருக்கு எது பிடிக்காதோ அதைக் கண்டிப்பாக தவிர்த்துவிடுவேன். ரக்ஷ்ஸிஸ்யதீதி விஸ்வாஸஹா – எப்படியும் பகவான் என்னை இரட்சிப்பன்ங்கிற உறுதியான நம்பிக்கையோடே இருப்பேன். கோத்ருத்தவர்நந்ததா – தேவரீரே அடியேனுக்கு இரட்சகனாக இருக்கவேண்டும் என்று வேண்டுவேன். தார்ப்பண்யம் – அடியேன் கையில் ஒன்றுமில்லை என்பதை வெளியிட்டுக் கொள்வேன். ஆத்மநிக்ஷ்யேபம் – நம் ஆத்மா அவனது என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். இந்த ஆறும் சரணாகதிக்கு ரொம்ப முக்கியம். இதில சலிச்சு எது முக்கியமா வேண்டும்ன்னு கேட்டா, ரக்ஷ்ஸிஸ்யதீதி விஸ்வாஸஹா – கண்டிப்பா இரட்சிப்பன்ங்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கை இருந்தது விபீஷணனிடத்தே. இல்லேன்னா, ஆள் அனுப்பிச்சுப் பார்த்துட்டு இராமன் ஏத்துப்பரான்னு கேட்டுட்டுன்னா வரணும்? அவனுக்கு நம்பிக்கை இராமனிடத்திலே. ஒருநாளும் கைவிடமாட்டான்னு. அதனால நேர புறப்பட்டானே தவிர, யாரிடத்திலேயும் விசாரிக்கவே இல்லே. அநுகூல்யஸ்ய சங்கல்பஹா – இராமனுக்குப் பிடிச்சததான் பண்ணுவேன். இதை விபீஷணன் பண்ணிண்டே இருக்கான். என்ன செய்தான் பாருங்கோ. இராமனுக்குப் பிடித்தது சீதா ரக்ஷணம். சீதை கொண்டு போய் சமர்ப்பிச்சுரு, சமர்ப்பிச்சுருன்னு பேசிண்டே இருக்கானோல்லையோ? அப்போ இராமனுக்குப் பிடிச்சத பண்ணார்ன்னு அர்த்தம். பிராதிகூல்யஸ்ய வர்ஜனம் – இராமனுக்குப் பிடிக்காததைப் பண்ணவே கூடாது. யாரிடத்திலயும் மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் துன்புறுத்தக்கூடாது. இது இராமனுக்குப் பிடிக்காது. அதை விபீஷணன் செய்யவே மாட்டார். இராவணனை விட்டுட்டு வந்தாரே தவிர, வேறொன்னும் அவனுக்குத் தீங்கு நினைக்கலையோல்லையோ? அப்படியே விட்டுட்டான். வந்தவன் ப்ரார்த்திக்கிறானா, தேவரீர்தான் எனக்கு ரட்சகமா இருக்கணும்ன்னு? ப்ரார்த்திக்கிறான், ஒருதடவை இல்லே, மூணுதடவை ப்ரார்த்திக்கிறான். ராகவம் சரணங்கதஹா – ராகவனிடத்திலே சரணாகதி பண்ணுவதற்கு வந்தேன். பவந்தம் சரணங்கதஹா – உன் திருவடியைப் பற்ற வந்தேன். பாதயோஹோ நிபபாத சரணாம்வேஷி – உன் திருவடிகளை இதோ பற்றுகிறேன், என்று சரணம், சரணம்ன்னு பெருமானிடத்தே ப்ரார்த்தித்து இருக்கிறான். ஆத்பநிக்ஷேபம் – நானும் என் அடிமைகளும் அத்தனை பேரும் உனக்கே சொத்து என்று சொல்லிக் கொண்டே வந்தான். எத்வா புத்ராஞ்ச தாராஞ்ச பவத்கதம்மே ராஜ்யஞ்ச ஜீவீதஞ்ச சுகாநிச – என்னுடைய புத்திரர்கள், தாரம், ராஜ்யம், சொத்து, சுகம் மொத்தத்தையும் விட்டேன் இராமா. இனி எனக்கு எதுவாக இருந்தாலும் உன்னுடைய திருவடி மட்டுமே. இந்த நிழலை விட்டு அங்கிங்கு செல்ல மாட்டேன்னு விபீஷணன் வந்தானோல்லையோ? இந்த ஆறு லக்ஷணங்களும் அவனிடத்தே பொருந்தி இருந்தனங்கிறது முக்கியம். அப்போ அவர் ஆகாசத்தில வந்துட்டார். நாலு இராக்ஷசர்களோட வர்றார். பயந்திருக்கான் சுக்ரீவன், இவன் வேற கையைக் கூப்பிண்டு வந்துட்டானேன்னு. வேதாந்த தேசிகன் அஞ்சலி வைபவம்ன்னே ஒரு ஸ்தோத்திரம் பண்ணியிருக்கார். பகவானைப் பார்த்து நாம அஞ்சலி பண்ணிட்டோம்ன்னால், அதுக்கு அவர் உருகிடுறாராம். அஞ்சலின்னா எப்படி அர்த்தம் தெரியுமா? அம் ஜலையதீதி அஞ்சலிஹி. அ – பகவான், அம் – பகவானை, ஜலையதீ – உருக்கக்கூடியது, அஞ்சலி. ஓ, இப்படி வந்துட்டானே, என்ன ஆயிடுமோன்னு பயந்துதான் சுக்ரீவன், ஆகாசத்தில ராக்ஷசன் வந்துட்டான்னு தூண்டிவிட்டுட்டான் இவாளை. விபீஷணன் கீழே இறங்கவேயில்லே. அவன் கீழ என்ன நடக்கறதுங்கிறத பார்த்துட்டான். ஆகாசத்தில நின்று கொண்டு கீழ இருக்கிற சுக்ரீவாதிகளைப் பார்த்துட்டு கலங்கவேயில்லை. சரணம்ன்னு வருபவன் எதைக் கண்டும் கலங்கமாட்டான். யார் எதிர்த்தாலும் கலங்கமாட்டான். ரொம்ப ஆச்சர்யமான ஸ்லோகம்.
நிவேதயத – நான் வந்திருக்கேன்னு எல்லாரும் சொல்லுங்கோள். கீழ இருக்கிற மொத்தப் பேரைப் பார்த்தும் பொதுவாச் சொல்றான். மாம் – நான்; ஸிப்ரம் – சீக்கிரம் (போய்ச் சொல்லுங்கோள்); விபீஷண உபஸ்திதம் – விபீஷணனான நான் வந்திருக்கேன்னு சொல்லுங்கோள்; யாரிடத்திலே போய் சொல்ல வேண்டுமென்றால், ராகவாய – ரகுகுல திலகமான இராமனிடத்தே; மகாத்மநே – மகாத்மாவான இராமனிடத்தே; ஸர்வலோக ஸரண்யாய – சர்வலோகத்துக்கும் சரண்யனான இராமனிடத்தே, என்று பிரார்த்திக்கிறான். நிவேதயத. சுக்ரீவனைப் பார்த்து மட்டும் சொல்றதுதானே? ஹனுமானைப் பார்த்து மட்டும் சொல்றதுதானே? பரிச்சயம் வேறு இருக்கோல்லையோ? ஏற்கனவே ஹனுமானைப் பார்த்திருக்கார் அவர். அப்போ அவரைப் பார்த்து நீ போய்ச் சொல்லுன்னு சொல்லலாமே, ஏன் பொதுவாக எல்லாரையும் பார்த்து நிவேதயதன்னு சொல்றார்ன்னா, என்றைக்கும் பாகவதர்கள் பலபேர் இருக்கும் போது, ஒருத்தரை நமஸ்கரிக்கக் கூடாது. மொத்தப் பேரைச் சேர்த்துத்தான் நமஸ்கரிக்க வேண்டும். அதனால மொத்தப் பேரை சேர்த்துச் சொல்லிட்டான். ஆனா அதிலேயே சாமர்த்தியமும் இருக்குன்னு வச்சுக்கங்கோ. நான் யாராவது ஒருத்தரைப் பார்த்துச் சொல்ல, அவருக்கு என்னைப் பிடிக்காமப் போய்டுச்சுன்னு வச்சுக்கங்கோ, அவர் போய்ச் சொல்லவேமாட்டார். கோஷ்டில மொத்தமாச் சொல்லி வைச்சா, யாராவது ஒருத்தருக்குப் பிடிக்காதா? அவன் போய் இராமனிடத்திலே சொல்லமாட்டானா? இந்த சாமர்த்தியத்துக்காக நிவேதயத. மூன்றாவது அர்த்தம் சொன்னார், பாகவதோத்தமர்கள் அத்தனை பேருக்கும் ஒரு பேர் கிடைக்கணும். விபீஷணனை இராமனோடு சேர்த்து வைத்தார்கள்ங்கிற பெருமை மொத்த பாகவதர்களுக்கும் கிடைக்க வேண்டாமா? அது ஏன் ஒருத்தருக்கு மட்டும் கிடைக்கணும்? அதனாலதான் நிவேதயத. சுக்ரீவன் பார்க்கிறார், ‘சொல்லுங்கோள்ன்னா என்ன அர்த்தம்?’. என்ன சொல்ல வேண்டும், யாரிடத்தில சொல்ல வேண்டும்ன்னு சுக்ரீவன் கேட்கிறார். மாம் – நான் வந்திருக்கிறேன்னு போய்ச் சொல்லுங்கோள். ’சரி சொல்றேன், நாலு நாள் ஆகட்டும். இப்பதானே வந்திருக்கே. என்ன அவசரம்? உடனே உடனே போய்ச் சொல்லிடமுடியுமா என்ன?’ ஸிப்ரம் நிவேதயத – சீக்கிரம் போய்ச் சொல்லு; மாத்திட்டான் ஸ்லோகத்தை. ஏன்னா, முதல் வ்யாக்யானம் பண்ணார், ‘இப்போ இராமனுக்கே என்னை அங்கீகாரம் பண்றதுக்கு நினைவு இருக்கு. ஆசை இருக்கு. ஒருவேளை நீ எங்கேயாவது மெதுவா, நாலு நாள் கழிச்சுப் போய்ச் சொல்றதுக்குள்ள மனசு மாறிப்போய் அங்கீகாரம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டா?’ இது முதல் அபிப்ராயம் சொன்னார். யோசித்துப் பார்த்தார், இராமன் கூடவா மாறுவன்? லோகத்தார் மாறுவர்களே தவிர, இராமன் ஒருநாளும் மாறமாட்டான். என்னைக்கும் சரணம்ன்னு யார் வந்தாலும் இராமனுக்கு அங்கீகரிக்கத்தான் தெரியும். அப்பன்னா விபீஷணன் என்ன தெரியுமா நினைக்கிறான்? ‘இன்னைக்கு இராமனைப்பற்றி சரணாகதி பண்ணனும்ங்கிற எண்ணம் என்கிட்ட இருக்கு, சுக்ரீவா. நீ அரைமணி காலதாமதப்படுத்திட்டியானா, இந்த இராக்ஷச புத்தி எப்படிப் போகும்ன்னு எனக்குத் தெரியாது. இந்த நிமிஷம் அவன் திருவடிகளைப் பற்றணும்ன்னு ஆசை. சீக்கிரம் போய்ச் சொன்னியானா என் காரியமும் நடந்துரும், சரணாகதனை ஏத்துண்டான்னு எனக்குக் கிடைச்சுரும். இராமனுக்கு சரண்யன்ங்கிற பட்டம் கிடைச்சுரும். உங்களுக்கு சேர்த்து வைச்சவாங்கிற பட்டம் கிடைச்சுரும். எல்லாருக்கும் நன்மை உடனே நடக்கும், காலதாமதப்படுத்தாதே’. ஸிப்ரம் நிவேதயத. விபீஷண உபஸ்திதம் – இராமபிரானுடைய பத்தினியான சீதாவைப் பிரித்த இராவணனுடைய தம்பி விபீஷணன் வந்திருக்கேன்னு சொல்லுங்கோள். உபஸ்திதம் – எங்கிருந்தோ நான் கேட்கலை. இதோ இராமபிரான் இருக்கும் இடத்துக்கே, ஏற்கனவே ஆசையோடு வந்திருக்கிறேன்னு சொல்லுங்கோள். யாரிடத்தில சொல்லணும்ன்னு சுக்ரீவன் கேட்டான். இது நல்ல கதையா இருக்கே? இத்தனை நாழி நான் என்ன சொல்லிண்டிருக்கேன், யாரிடத்தில சொல்லணும்ன்னு கேட்கறியே? ராகவாய மகாத்மநே ஸர்வலோக ஸரண்யாய நிவேதயத. ரகுகுலத்திலே பிறந்த இராகவனிடத்திலே சொல்லுங்கள். மகாத்மாவிடத்தில் சொல்லுங்கள். சர்வலோக சரண்யனிடத்தில் சொல்லுங்கள். இந்த இடத்தில் சரண்யனுக்குண்டான விதிகளை வைத்துப் பார்க்க வேண்டும். ராகவாய – ரகுகுலத்தில் பிறந்தவன் என்பதனாலே, சௌலப்யம், எளிமை சொல்லப்பட்டது. மகாத்மநே – எப்போ மகாத்மான்னு இருக்கோ, ரொம்பப் பெரியவர், பரத்வம் உடையவர். யாருக்கு பரத்வமும், சௌலப்யமும் இருக்கோ அவர்தான் ‘ஸர்வலோக சரண்யன்’. சுக்ரீவன் நேர இராமனிடத்திலே வந்தான். சுக்ரீவன், ஹனுமான், லக்ஷ்மணன், மற்ற எல்லாரும் பேசறதுக்கு ஆரம்பித்தார்கள். ‘நான்கு இராக்ஷசர்களோடு வந்திருக்கிறான் விபீஷணன். அவனைப் பேசாமல் கொன்றுவிட வேண்டும்’, இதுதான் முதல் பேச்சு, சுக்ரீவன் ஆரம்பிச்சான். இப்படி ஒரு சுடுசொல் சொல்லுவான்னு இராமன் எதிர்பார்க்கவேயில்லை. சரி, மற்றப்பேர் அபிப்ராயம் என்னன்னு கேட்டான். ஜாம்பவான், நலன், நீலன், முதலான மற்றப்பேர்கள் எல்லாரும் பேசினார்கள். எல்லாரும் சொன்னது, கண்டிப்பா கொன்னுட வேண்டியதுதான். என்ன காரணம்ன்னு இராமன் கேட்கிறான். அதற்கு இரண்டே பேர்தான் காரணம் சொன்னார்கள். ஜாம்பவானும், சுக்ரீவனும். ’வரக்கூடாத இடத்தில், வரக்கூடாத காலத்தில், கூடப்பிறந்த தமையனை விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது. ஆனாலும் வந்தான். இவன் நம்மைவிட்டுப் போய்விடமாட்டான்ங்கிறது என்ன நிச்சயம்? ஆகையாலே அவனை அங்கீகாரம் பண்ணக்கூடாது’. இது ஒருத்தர் சொன்னார். இன்னொருத்தர் சொல்லுகிறார், ‘என்னத்துக்கு இராமா அந்த கோஷ்டியிலேர்ந்து ஒருத்தரை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்? இது ஏதோ சூதாக, சதித்திட்டமாகப் படுகிறதே தவிர, இவனை ஏற்றுக்கொள்ளுதல் கூடாது.’ ஆஞ்சநேய ஸ்வாமி அதுவரைக்கும் வாயைத் திறக்கலே. எழுந்திருந்தார். ’அதசம்ஸ்ஹார சம்பந்நஹா ஹனுமான் சசியோத்தமஹா’. மந்திரிமார்களுக்குள்ளே தலைவனாய், சம்ஸ்ஹார சம்பத்துப் படைத்து, எதைப் பேச வேண்டுமோ, வார்த்தை மாறாமல் பேசக்கூடிய சத்யசந்தனான ஹனுமான் எழுந்திருந்தார். ரொம்ப ஆனந்தம் சுக்ரீவனுக்கு. ‘ஹனுமன்னு, நீதான் சரியான ஆள். நாங்கள்லாம் சொன்னா இந்த இராமன் ஏத்துக்கமாட்டார். நீர்தான் விபீஷணனைப் பார்த்துட்டு வந்திருக்கீர். அதனால நாங்க பேசிப் பிரயோஜனமில்லே. அங்கீகாரம் பண்ணிக்கக்கூடாதுன்னு நீர் சொல்லும்.’, அப்படின்னு அவரைச் சொன்னா, அவர் சொன்னார், ‘விபீஷணஸ்து அங்கீகார்யஹா’, விபீஷணனை அங்கீகாரம் பண்ணியே தீரவேண்டும், நல்லவனானபடியாலே. ஹனுமான் சொல்லி முடித்தார். விபீஷணனைக் கொன்னுடனும், தீயவனானபடியாலே, சுக்ரீவன் சொல்லிட்டார். ரெண்டு பேருடைய வாதத்தையும், பிரதிவாதத்தையும் இராமன் கேட்டுட்டார். அதற்கப்புறம் இராமன் ப்ரார்த்திக்கிறார், ‘விபீஷணனைப்பற்றி எனக்கும் சொல்லுவதற்கு ஒரு வார்த்தை உளது, கேட்கிறீர்களா’ன்னார் இராமன். அப்பதான் குரங்குகளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இராமன் ஆணையிட்டுத்தான் பிரஜைகளுக்குப் பழக்கமே தவிர, இந்த குரங்குகளைப் பார்த்து, மாமபிச – என்னாலயும் சொல்ல வேண்டியது சிறிது உள்ளது, அதை நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறீர்களா? அப்படின்னு இராமன் சொன்னவுடனே, ‘இராமா, ஆணையிடு. இந்த மாதிரி கேட்டுக்கிறியான்லாம் கேட்காதே.’ அப்போ திரும்ப ரெண்டு பேருடைய வாதத்தையும் இராமன் சொல்றார். சுக்ரீவன் பேசினான், தீயவனானபடியாலே கொன்றுவிட வேண்டும், கைப்பற்றக்கூடாதுன்னுட்டு. ஹனுமான் சொன்னார், நல்லவனானபடியாலே கைக்கொள்ள வேண்டும்னுட்டு. நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ரெண்டு பேருடைய முடிவையும் ஏத்துக்கப் போறதில்லேனுட்டார். புரியலை யாருக்கும். ஒன்னு இப்படிப் போகலாம், இல்லை அப்படிப் போகலாம். ஆனா ரெண்டு முடிவும் இல்லேங்கிறியே இராமா, என்னன்னு சுக்ரீவன் கேட்டான். ’உன் முடிவிலேர்ந்து ஒரு பாதி எடுத்துண்டேன். ஹனுமான் முடிவிலேர்ந்து ஒரு பாதி எடுத்துண்டேன். உன் முடிவிலிருந்து ‘தீயவனானாலும்’ங்கிறத எடுத்துண்டேன். ஹனுமானுடைய முடிவிலிருந்து அங்கீகாரம் பண்ணனும்ங்கிறத எடுத்துண்டேன். அதை ரெண்டையும் சேர்த்தேன், அவன் தீயவனானாலும் அங்கீகாரம் பண்ணனும்ங்கிற முடிவுக்கு வந்துட்டேன்.’ இப்போ இராமன் மட்டும் ஹனுமான் சொன்னமாதிரி, நல்லவனானபடியாலே அங்கீகாரம் பண்ணனும்ன்னு சொல்லிட்டா, அப்போ யாரானும் தீயவன் வரச்சே நீங்களே கேள்வி கேட்பேள், அன்னைக்கு நல்லவனைத்தானே சொன்னாய், இன்னைக்கு தீயவன் வந்திருக்கானேனுட்டு. எனக்கு அந்த அபிப்ராயமே கிடையாது. அவன் தீயவனோ, நல்லவனோ, வந்தவனை அங்கீகாரம் பண்ணுவோம். இதுதான் இராமனுக்குத் தெரியும். அவன் எந்தத் தீயவனா இருந்தாலும் நாம் அங்கீகாரம் பண்ணுவோம், என்று இராமன் சொல்ல அப்பதான் பேச்சுவார்த்தை ஆரம்பிச்சது. ’இராமா, இப்படிச் சொல்றியே, நாளைக்கு அவனால நமக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன ஆகும்?’, சுக்ரீவன் பயந்து பேசறார், ஜாம்பவான் பயந்து பேசறார், ஹனுமானானால் ஒன்று பேசறார். சுக்ரீவன் வாதப்பிரதிவாதத்தைத் தொடங்கினான். விபீஷணனுடைய சரணாகதி பலிக்கவே கூடாது, அப்படின்னு ஆரம்பிக்கிறான் அவன். ஏன்னு இராமன் கேட்கிறார். ’ஏனெனில் இவன் உன்னுடைய கைங்கர்யத்தைப் ப்ரார்த்தித்து வரலே. தமையனைக் கொன்று இராஜ்யம் வேணும்ங்கிற தாழ்ந்த இன்பத்துக்காக வந்திருக்கிறான். அதனால் இந்த சரணாகதி பலிக்கக்கூடாது.’, என்று எடுத்துச் சொல்லுகிறார் சுக்ரீவன். ’அபயப்பிரதானசாரம்’ன்னு வேதாந்த தேசிகன் ஒரு கிரந்தம் எழுதியிருக்கார். அதில இந்த வாதப்பிரதிவாதங்களெல்லாம் நிறைய இருக்கும். இந்த ஸ்வாமி எடுத்துக்காட்டறார், ரெண்டு வார்த்தை. இராஜ்யத்தை எதிர்பார்த்து விபீஷணன் வந்திருக்கிறான். இது ஒருத்தர் வார்த்தை. இராஜ்யத்தை ப்ரார்த்தித்து புத்திபூர்வமாக விபீஷணன் வந்திருக்கிறார், இது மற்றொருத்தர் வார்த்தை. இது ரெண்டும் சொல்லலாமா? இராஜ்யத்தைப் ப்ரார்த்தித்தா விபீஷணன் வந்தார்? இராம கைங்கர்யத்தைக் கேட்டு வந்தானே தவிர, கேவலம் இராஜ்யத்தைக் கேட்டு அவன் வரவே இல்லே. ஆனா இந்த மாதிரி ரெண்டு பேரும் சொல்லிண்டிருக்காளே, என்ன அர்த்தம்ன்னா, தேசிகன் விசாரிச்சுச் சொன்னார். ஹனுமான் சொல்றதுலே ஒரு அபிப்ராயம் உண்டு. என்னவெனில், நான் ஒன்னும் இவர் ராஜ்யத்தை ஆசைப்பட்டு வந்தார்ன்னு சொல்லவே வரலே. ஆனா இவருக்கு மனசுக்குள்ள ஒரு ஆசையாம். நான் இங்கேர்ந்து அங்க போயிருக்கச்சே என்னை இவர்தான் காப்பாத்திவிட்டார். இல்லேன்னா கொன்னுருப்பனோ இல்லையோ அவன்? இவருக்கு வால்ல நெருப்பு வைக்கணும்ன்னு சொல்லி காப்பாற்றிவிட்டது அவன்தான். இப்ப அவர் நம்ம வீட்டைத்தேடி வந்திருக்கார். அவருக்கு ராஜ்யமாவது பெற்றுக் குடுக்கணும். அவர் ராஜ்யத்தைக் கேட்டு வந்தார்ன்னு சொல்லலே. அவர் இராம கைங்கர்யத்தைக் கேட்டு வந்திருக்கார். நமக்கு பண்ணின நல்லதுக்கு நாம ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டாமா? அதுக்காக இராஜ்யத்தைப் பெற்றுக் குடுப்போம்ன்னு சொல்லிண்டாரே தவிர, அவன் இராஜ்யத்தைக் கேட்டு வந்தான்கிற அபிப்ராயம் இல்லை. இராமன் திரும்பச் சொல்றார், ‘சுக்ரீவா உன் பேச்சென்ன? அவன் இராஜ்யத்தை எதிர்பார்த்தான், தமையனைக் கொல்லுவதற்காக வந்திருக்கிறான், ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதுதான உன் அபிப்ராயம்? இதன்படி என்கிட்ட இருந்திருக்கனும்ன்னால், நான் முதல்ல உன்னைக் கைவிட்டிருக்கனும். ஏன்னா நீ வந்ததே அதுக்குத்தானே? உன் அண்ணனைக் கொன்று கிஷ்கிந்தா இராஜ்யம் வேணும்ங்கிறதுக்குத்தானே என்கிட்ட வந்தே? அப்போ அவனை மட்டும் குற்றம் சொல்லுகிறாயே? அப்போ அவனை விடணும்ன்னால் உன்னையும் விட்டாக வேண்டும். சொல்லாதே’, என்று அதையும் தவிர்த்தான். சுக்ரீவன் அப்பவும் சமாதானமடையலே. இராமன் அவருக்கு சில கதைகள் சொல்ல ஆரம்பிக்கிறார். எந்த கட்டம்? அந்த பக்கம் இராவணன் காத்துண்டிருக்கான், சீதையை ஒரு பக்கம் காணோம், இங்க விபீஷணன் வந்து நிற்கிறான், சுக்ரீவன் கொதிச்சுண்டு இருக்கான், இதுக்குள்ள கதை சொல்றார் இராமன். அவசரமே இல்லாமல், ரெண்டு கதைகளை எடுத்துரைத்து சுக்ரீவன் மனசை சமாதானப்படுத்தப் பார்க்கறார். ’சுக்ரீவா, குரங்குக்கதை தெரியுமா’ன்னு கேட்டார். ’நானே குரங்குதான். இதென்ன குரங்குக்கதை தெரியுமான்னா’. ‘உன்னுடைய மூதாதையர் ஒரு குரங்கைப்பற்றி நான் சொல்றேன். ஒரு மனுஷனைப் புலி துரத்திண்டு வந்தது. தப்பிக்கணும்ங்கிறதுக்காக மனுஷன் வேகமா ஓடி ஒரு மரத்து மேல ஏறிட்டான். ஏறிக்கிட்டக்கப் போறப்பதான் தெரிஞ்சது, ஒரு மனுசக்குரங்கு உட்கார்ந்திருந்தது. ஓ, இதென்ன புலிக்குத் தப்பிக்கப் போய் மனுசக்குரங்கு வாயில விழுந்துருவோம் போலருக்கே. குரங்கு அவனைக் கூப்பிட்டு, நீ என் மரம் தேடி வந்துட்டே. உன்னைக் கைவிட்டுட மாட்டேன் உட்கார். நான் உன்னைக் காப்பாத்தி விடறேன், அப்படின்னு மனுஷனை உட்கார்த்தி வைச்சுடுத்து. புலி வந்து மரத்தடில காத்துண்டு இருக்கு. இவன் என்ன இறங்காது போய்டப் போறானா, நாம சாப்பிட்டுக்குவோம், அப்படினுட்டு. ராத்திரி வந்தது, கொஞ்ச நேரம் குரங்கு தூங்குது, கொஞ்ச நேரம் மனுஷன் தூங்கறான். ஒருத்தருக்கொருத்தர் காவல் காத்திண்டிருந்தா. இந்த மனுஷன் முழிச்சுண்டு இருக்கற சமயமா புலி தேர்ந்தெடுத்தது. மனுஷன்கிட்ட பேச ஆரம்பிச்சு மனசைக் கலக்க ஆரம்பிச்சது. அது சொல்லித்து, ‘குரங்கு புத்தியை நம்பி, உன்னைக் காப்பத்தறேன்னு சொன்னதை நம்பி உட்கார்ந்திருக்கியே, குரங்கு புத்தி எப்பவாவதும் ஒருமாதிரி இருந்திருக்கோ? சபல சித்தம், அப்படியே மாறிண்டே இருக்கும். திடீர்ன்னு உன்னை அது சாப்ட்டாலும் சாப்ட்டுரும். அதனால நான் உனக்கு ஒரு வழி சொல்றேன். குரங்கு தூங்கிண்டிருக்கோல்லையோ? அதைப்பிடிச்சுத் தள்ளிவிட்டுரு. தள்ளிவிட்டுட்டியானா, நான் அதைச் சாப்பிட்டுட்டு உன்னை விடுதலை பண்ணிடறேன். இதுதான் உனக்கு நியாயம்’ன்னது புலி. எல்லாரைவிட மனுஷ புத்தி என்னன்னு நமக்குத் தெரியும். அந்த மனுஷன் இப்ப யோசிக்க ஆரம்பித்தார். இந்தப் புலி சொல்றது வாஸ்தவம்தான். நாம அந்தக் குரங்கைப் பிடிச்சுத் தள்ளிவிட்டுருவோம், அப்படின்னுட்டு காப்பாற்றின குரங்கைத் தள்ளிவிட்டுட்டான் அவன். அந்த குரங்கு உருண்டு கீழவந்து விழப்போறது. குரங்கு முழிச்சுனுடுத்து. புரிஞ்சு போச்சு. புலிக்கிட்ட போய் உட்கார்ந்து பேசறதுக்கு ஆரம்பிச்சது. புலி சொல்லுச்சு, ‘குரங்கே உன் மாமிசத்துல எனக்கு ஆசையே கிடையாது. நர மாமிசம் ருசிக்கிறாப்போலே வானர மாமிசம் ருசிக்காது. எனக்கு அதுதான் பிடிக்கும். பின்ன எதுக்குத் தெரியுமா உன்கிட்ட இந்த மாதிரிப் பேசினேன்? அந்த மனுஷன் எப்படின்னு உனக்குப் புரியவைக்க வேண்டாமா? அதுக்காகத்தான் உன்கிட்ட இப்படிப் பேசினேன். இப்ப உன்னை நான் விட்டுடறேன், மேல போ, மனுஷனைப் பிடிச்சுத் தள்ளிவிடு. நீ தப்பிச்சுக்கோ. மனுஷனை நான் சாப்பிடுறேன்’னுது. அதுக்கென்ன, இனிமே நான் மனுஷனைக் காப்பாத்துவேனா என்ன, நிச்சயமாத் தள்ளிவிட்டுடறேன்னு குரங்கு ஒத்துனுடுத்து. மேல ஏறி வருது. மனுஷன் நடுங்கறார். குரங்கு வந்துடுத்துன்னா தன்னைப் பிடிச்சுத் தள்ளிவிட்ருமோல்லையோ? குரங்கு நேர ஏறிப்போய் மனுஷன் பக்கத்துல உட்கார்ந்து, அவன் தோள்லே கைவைத்தது. ‘மனுஷ்யனே, கவலைப்படாதே. நீ எப்ப என் மரத்தைத் தேடி வந்துட்டியோ, உன்னை ஒரு நாளும் நான் காட்டிக் குடுக்க மாட்டேன்’. அப்ப மனுஷன் சொன்னான், ’அங்க உருட்டி விட்டுருவேன்னு சொன்னியே’ன்னான். ’அப்பதான் புலி என்னை விடும். அதுக்காக நான் சொல்லிட்டு வந்தேன். உன்னைத் தள்ளணும்ங்கிற அபிப்ராயமே எனக்குக் கிடையாது. எப்போதும் காலிலே விழுந்தவர்களை இரட்சிப்பதற்குத்தான் குரங்குகளுக்குத் தெரியும்.’ இது அந்தக் குரங்கு சொல்லித்தாம். இராமன் சுக்ரீவனைப் பார்த்துச் சொல்றார், ‘அந்தக் குரங்கு ஜாதிலதான சுக்ரீவா நீயும் பிறந்தாய்? கால்ல விழுந்தவனை இரட்சிக்கணும்ங்கிறது தெரியாம நீ பேசலாமா? இதையாவது புரிந்து கொள். இராமன் கண்டிப்பா இரட்சித்தான்னு பேர் இருக்கணுமே தவிர, கைவிட்டுவிட்டான்னு வால்மீஹி எழுதிடக்கூடாது.’ ஒரு கதை இது. அடுத்த கதை சொன்னார். ‘சாஸ்திரத்தில புறாவைப்பத்தி கதை சொல்லியிருக்கே சுக்ரீவா, உனக்குத் தெரியாது? ரெண்டு ஆண், பெண் புறா. ரெண்டும் சௌக்யமா இருந்தது. அந்த சமயத்தில ஒரு வேடன் வந்து, பெண் புறாவை அடிச்சுக் கொன்னு தூக்கிண்டு போய்ட்டான். ஆண் புறா மட்டும் தனியாத் தவிக்கிறது. இது நடந்தது வெய்யில் காலத்திலே. அப்புறம் மழைக்காலம் வந்துடுத்து. மழைக்காலத்தில வேடர்களுக்கு ஒன்னுமே கிடைக்காதோல்லையோ? தனியா தவிச்சிண்டு, குளிரிலே வெடவெடத்துப் போய், ஆண் புறா தனியா எந்த மரத்தில உட்கார்ந்திண்டிருக்கோ, அந்த மரத்துக்குக் கீழே வரான். பசி, ஒண்ணும் கிடைக்கலே. வெளிலே வேற மழை, குளிரு. என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுண்டு உட்கார்ந்திருக்கான். நாலு சுள்ளியைப் பொறுக்கி வைச்சு, அதில தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருக்கான் வேடன். மேல இருந்த புறா பார்த்தது. நம்ம வீடு தேடி வந்திருக்கானே, நம்ம மரத்துக்கு கீழேன்னா வந்திருக்கான். அப்ப அவனுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டியது நம்ம பொறுப்பாச்சே? அப்படின்னு ஆண் புறா யோசித்து என்ன பண்ணலாம்ன்னா, அது என்ன பண்ணமுடியும் இப்போ? அவனுடைய பசியைப் போக்கணும். சரணம்ன்னு அவன் சொல்லவே இல்லே. அவனுக்கு மேல புறா இருக்கறது தெரியவே தெரியாது. ஆனா இந்தப் புறாவா இவன் சரணம்ன்னு சொல்லிட்டான்னு நினைத்துக் கொண்டு, புறா நேரப்போய் அந்தச் சுள்ளில தன்னைத்தானே மாய்த்துக் கொண்டது. அது விழுந்து தன் உயிரைப் போக்கி, நீ என்னை ஆகாரமா வச்சுக்கோ. என் வீடு தேடி வந்தியோல்லையோ? அதனால என்னையே உனக்கு ஆகாரமாக்குகிறேன்’னு புறா குடுத்துடுத்து. இந்த புறாக்கதையைச் சொல்லிட்டு இராமன் சுக்ரீவனிடத்தே, ‘கதை புரிஞ்சுதா சுக்ரீவா’ன்னார். ‘எனக்கு ஒண்ணும் புரியலே. விபீஷணன் நிக்கறான்னு ஒன்னுதான் எனக்குத் தெரியுது. இது தவிர் நீர் சொல்றது எதுவுமே என் புத்தியிலே ஏறலே’ன்னான் சுக்ரீவன். இராமன் தெரிவிக்கிறார், ‘ஆணும் பெண்ணும் புறாவும்தான் நானும் சீதையும். பிரித்தான்னு ஒரு வேடனைச் சொன்னேனே அவன்தான் இராவணன். என்ன தெரியுமா நடந்திருக்கணும் சுக்ரீவா? நாங்க ரெண்டு பேரும் இருக்கறச்சே, இராவணன் சீதையைக் கொன்னுருக்கணும். ஏன்னா அந்த இடத்தில புறாவைக் கொன்னுட்டானோல்லையோ வேடன்? அதப்போல இந்த இடத்தில கொன்னுருக்கணும். யார் கொன்னானோ இராவணன், அவனே திரும்பி வந்திருக்கணும். ஏன்னா வேடனே திரும்பி வந்தான். ஆனா இந்த இடத்தில அவன் திரும்பி வரலே. இராவணன் திரும்பி வரலே, தம்பி விபீஷணன்தான் வந்திருக்கிறான். வந்த வேடன் சரணம்ன்னு ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லே. ஆனா இங்க தம்பி விபீஷணன் சரணம், சரணம்ன்னு அழுதுண்டே இருக்கான். அதுக்கும் குறைவில்லே. அப்படி இராவணனே சீதையைக் கொன்னுருக்கனும். இராவணனே திரும்பி வந்திருக்கணும், சரணம்ன்னு சொல்லியிருக்கக்கூடாது, அப்படி சொல்லாத இராவணனுக்காக என் உயிரையே குடுத்திருக்கணும். ஏன்னா ஆண் புறா உயிரையே குடுத்ததோ இல்லையோ? அதப்போல இராமன் உயிரையே குடுத்திருக்கணும். குடுத்தாலும் வால்மீஹி என்ன தெரியுமா எழுதி வைப்பர்? ஒரு புறா பண்ணினத இராமன் பண்ணார்ன்னு எழுதி வைப்பர். எனக்கு ஒன்னும் தனிப்பேரே குடுக்கமாட்டார் வால்மீஹி. இப்படி இருந்ததுன்னா எனக்கு எப்படிப் பேர் கிடைக்கப்போறது சுக்ரீவா? இதையாவது புரிந்துகொள். அப்போ புறாவைப் பார்த்துத் தெரிந்துகொள், குரங்கைப் பார்த்துத் தெரிந்துகொள்’. மனுஷனைப் பார்த்துத் தெரிந்துகொள்ன்னு அவர் சொல்லவே இல்லை. இத்தனை சொல்லியும் சுக்ரீவனுக்கு மனசு சமாதானமாகலை. இராமன் யோசிக்கிறார், ‘என்ன காரணமாயிருக்கும்? அனேகமா ஒரு காரணம். எனக்கு என்ன வந்துருமோ, என்ன வந்துருமோன்னு சுக்ரீவன் பயப்படறான்.’ அந்தப் பயத்தைப் போக்க வேண்டும்ங்கிறதுக்காக இராமன் மாற்றி மூன்று ஸ்லோகங்கள் தெரிவிக்கிறார். அது விபீஷண சரணாகதியின்போது இருக்கிற ஸ்லோகம்.
உடனே வால்மீஹி தெரிவித்தார், ‘இரண்டு வார்த்தை பேசாதவன் மூன்று வார்த்தை பேசினான்’னார். இராமனுக்கு ரெண்டாவது வார்த்தையே தெரியாது. ஆனா அவர் மூனு ஸ்லோகம் சொல்லிட்டாரோல்லையோ? மூன்று ஸ்லோகங்களுமே மணிமணியான ஸ்லோகங்கள்தான். முதல் ஸ்லோகத்துல சொல்றார், ‘சுக்ரீவா, கவலைப்படாதே. இவன் வந்து என்னை என்ன பண்ணிடமுடியும்ன்னு நீ பயப்படறே? உன் பயம் என்ன? எனக்கு விபீஷணனாலே என்ன ஆபத்து வந்துருமோன்னுதான பயம்?’ நாம சுக்ரீவனைப் பத்தி தப்பாவே நினைப்போம். அப்படி அல்ல. இராமனாகட்டும், சுக்ரீவனாகட்டும், தங்கள் கால்லே விழுந்தவர்களை இரட்சிக்கணும்ன்னு பார்க்கிறார்கள். சுக்ரீவன் கால்லே இராமன் விழுந்திருக்கார், அவரை இரட்சிக்கணும்ன்னு இவர் பார்க்கிறார். இராமன் கால்லே விபீஷணன் விழுந்திருக்கான், அவனை இரட்ச்சிக்கணும்ன்னு இராமன் பார்க்கிறார். ரெண்டு பேருமே சரணாகதர்களை இரட்ச்சிக்கத்தான் பாடுபடுகிறார்கள். ‘உலகத்தில இருக்கிற பிசாசம், தானவன், யக்ஷன், இராக்ஷசன், அசுரன், மொத்தப்பேரும் தனித்தனியே வரட்டும், கூட்டம் கூட்டமாக வரட்டும். சுக்ரீவா, நான் வேண்டாம், என் கை வேண்டாம், என் விரல் வேண்டாம், அங்குள்யக்ரைந தாந்தந்யான் இச்சந்நு ஹரிகணேஷ்வர – விரல் நுனியால அத்தனை பேரையும் அழித்துவிடுவேன், கவலைப்படாதே.’ உடனே வ்யாக்யாதார் தெரிவித்தார், ‘ஓ, பூர்வ அவதாரத்தோட நினைவு போலருக்கு. நரசிம்ஹா அவதாரத்தில விரல் நுனியால நகத்தாலயே முடிச்சுட்டாரோல்லையோ? மித்ரபாவேந சம்ப்ராப்தம் – என்னிடத்தே உண்மையான நட்போடே வரவேண்டாம். நண்பன் என்று வேஷமிட்டுக் கொண்டு வந்தால் கூடப்போதும். நத்கதேஜம் கதஞ்சந – அவன் ஒருநாளும் என்னால் கைவிடத்தகுந்தவன் அல்லன். தோஷோயப்பதி தஸ்யஸ்யாது – அவன் தோஷங்களோடேயே வந்தாலும் சரி, சதாமேதது அதர்ஹிதம் – ‘நான் மட்டும் இவனைக் கைவிட்டுவிட்டால், நாளைக்கு என்ன தெரியுமா ஆகும்? எல்லாம் முடிஞ்சு சீதையை மீட்டுக்கொண்டு ஊருக்குப் போய்டுவேன். போனப்புறம் வசிஷ்டர் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிச்சுருவர். பதினாலு வருஷம் காட்டுக்குப் போய்ட்டு வந்தியே இராமா, என்னென்ன பண்ணினாய்ன்னு கேட்பர். நான் ஒன்னொன்னா சொல்லிண்டு வருவேன். விபீஷணன்னு ஒருத்தர் சரணாகதிக்காக வந்தார், ஆனா சுக்ரீவன் வேண்டானுட்டான். அதனால நான் விட்டுட்டேன்னு சொன்னா, வசிஷ்டர் என்ன தெரியுமா கேட்பர்? இஷ்வாகு வம்சத்துல பிறந்துட்டு சரணாகதனை இரட்சிக்கத் தெரியாத நீ ஒரு இராஜாவா? உன்னுடைய தகப்பனார், தாயார் சொல்றது இருக்கட்டும். இப்ப நான் சொல்றேன், இந்தத் தப்புக்காக பதினாலு வருஷம் காட்டுக்குப் போய்ட்டு வான்னுடுவர். அதனால நான் திரும்பப் பதினாலு வருஷம் எல்லாம் போறதா இல்லே சுக்ரீவா. ஒரு தடவை போனதே போறும். அதனால தோஷமோடு வந்தாலும் விடேன்’னு சொல்ல, கடைசி ஸ்லோகம், சக்ருதேவப் ப்ரபந்னாய – ஒருதடவை சரணம் என்று யார் சொல்லுகிறானோ, த்வய மஹாமந்த்ரத்தின் பொருளும் அதேதான். ஒரு தடவை சரணம்ன்னு எவன் சொல்லுகிறானோ, தவாஸ்மீ – நான் உன்னுடையவன் என்று எவன் வேண்டுகிறானோ, யாசதே அபயம் சர்வபூதேப்யாஹ ததாமி – அவனுக்கு எல்லா ஜீவராசிகளிடத்திலிருந்தும் அபயம் வழங்குகிறேன். அவனை விடுதலை பண்ணுகிறேன். ஏதத்வ்ரதம் மம – இது இராமனுடைய விரதம். அவர் எடுத்த செயலிலிருந்து மாறமாட்டோம்ன்னு உறுதியாக நின்னார். மொத்தத்தையும் கேட்டு முடிச்சப்புறம்தான் சுக்ரீவனுக்குத் தோணித்து, இந்த இராமனுக்கு எதிர் நிற்க யாரும் கிடையாது. சரணாகதனை ஒரு நாளும் இராமன் கைவிடமாட்டான். இந்த உண்மை புரிஞ்சது, ‘சரி இராமா, நீ சொல்றதுதான் சரி. ஏற்றுக்கொள்ளுகிறேன்’னு சுக்ரீவனும் ஏற்றான். சரின்னு போய் சுக்ரீவன் விபீஷணனை கூட்டிட்டு வரணுமோல்லையோ? அப்போ சுக்ரீவன் மூலமாகத்தான் விபீஷணன் வர்றார். இராமன் விபீஷணனை நேரக்கூப்பிடலை. அதே சுக்ரீவனை அனுப்பறார்.
ஏ சுக்ரீவனே, குரங்கு கூட்டத்தலைவனே, ஆநய – போய் அழைத்துக் கொண்டு வா. தத்த அஸ்ய அபயம் மயா – என்னாலே விபீஷணன் அபயம் குடுக்கப்பட்டான், போ. போன்ன உடனே சுக்ரீவன் கிளம்பினார். நிறுத்தினார் இராமன். ‘அவசரப்படாதே சுக்ரீவா, நாம ஒரு பதினைஞ்சு நிமிசமாப் பேசிண்டு இருக்கமா, நீ இங்கேர்ந்து போறதுக்குள்ளே ஒருவேளை இராவணன் மனசு மாறி வந்திருந்தான்னு வச்சுக்கோ, திரும்பப் பேசறதுக்கு வராதே. ஒருதரம் பேசினதே போறும் இப்போ. ஒரு விபீஷணன் மட்டும் வந்திருந்தா, நாலு இராக்ஷசர்களுக்கு வாழ்ச்சி. இராவணன் வந்தால் ஊருக்கே வாழ்ச்சி. விபீஷணன் வந்தால் திருப்தி. இராவணன் வந்தால் பரம திருப்தி. போ, உடனடியாகக் கூட்டிவா’ன்னு போக, அவனும் போய் விஷயத்தைச் சொல்ல விபீஷணன் ஓடோடி வந்தான். இராமன் திருவடிகளிலே விழுந்தான். பாதயோஹோ நிபபாத சரணாந்வேஷி, என்று திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான். அப்போ இராமன், உனக்கு இராஜ்யத்தைப் பெற்றுக் குடுக்கறேன்னு சூளுரைக்கிறான். விபீஷணன் ப்ரார்த்திக்கிறான், ’இராமா இதைக் கேட்டு நான் வரலே. இதைக் குடுத்து என்னைக் கேவலப்படுத்தி விடக்கூடாது. எனக்கு இருக்கிற ஒரே சொத்து உன்னுடைய திருவடி. சித்திரகூடத்துக்கு பரதன் வந்து திரும்ப வான்னு கூப்பிட்டபோது, அவனுக்கு உன் பாதுகைகளைக் குடுத்து, உன் திருவடியை எடுத்து அவன் தலையிலே அணியாக விளக்கினாய். அதேபோல எனக்கும், இதோ குனிகிறேன். உன்னைத் தண்டனிடுகிறேன். உன் இளையவர்க் கவித்த மௌலி என்னையும் கவித்தி. உன்னுடைய தம்பி பரதனுக்கு உன் திருவடித் தாமரைகளை வைத்தாயே, அதையேதான் நானும் ப்ரார்த்திக்கிறேன்னு குனிய, இராமனும் தன் திருவடிகளைத் தூக்கி விபீஷணன் தலையிலே வச்சுட்டு, அவனை வார்த்தையால மயிலிறகால தடவிக் குடுக்கறாப்ல குடுத்தானாம் இராமன். இராமன் நினைச்சுக்கிறார், ’சுக்ரீவன் கொஞ்ச நாழியாக்கிட்டான் இல்லே, காலதாமதப்படுத்திட்டான். நானே உன்னை இலங்கைல வந்து அங்கீகாரம் பண்ணியிருக்கணும். அது பண்ணாததுக்கே எனக்கு ரொம்ப வருத்தம். உன்னைப் போய் அக்கரையிலேர்ந்து இக்கரைக்கு வரவச்சுட்டேன் பார், சரணாகதனை நடக்க வைக்கிறது எனக்குப் பழக்கம் இல்லே. நான் போய் ஏற்றுக்கொண்டுதான் எனக்குப் பழக்கம். அயோத்தியிலிருந்து கிளம்பினதே உன்னை ஏற்றுக்கொள்ளுவதற்காகத்தான். அதில் ஒரு பாதி தூரம், உன்னை நடக்க வைத்ததை நினைத்து ரொம்ப வெட்கப்படுகிறேன். அதிலேயும் ஒரு கால் மணி உன்னைக் காக்க வைச்சுட்டேனே, நாளைக்கு சாஸ்திரம் என்ன தெரியுமா சொல்லும்? சரணம்ன்னு ஒருத்தன் வந்தான், ஆனா யாராரோ தடுத்தபடியால இராமன் அவனை கால்மணி காக்க வச்சுட்டான்னு சொல்லிட்டா, வர்ற நாலு பேரும் சரணாகதிக்கு வரமாட்டான். அது எனக்கும் தெரியும் விபீஷணா. இருந்தாலும் வேறு வழியற்றுப் போயிற்று’, என்று நல்வார்த்தைகள் சொல்லி மயிலிறகாலே தடவிக்குடுக்கறாப்போலே, கண்களாலே விபீஷணனைப் பாரித்துக் குளித்துக் கொண்டு இராமன் இருந்தான், என்று வால்மீஹி பகவான் தெரிவிக்கிறார். அதனாலே விபீஷணன் சர்வத்தையும் துறந்து, இராமனே சரண், இராமனே புகல் என்று சரணாகதி பண்ணினான். சரணாகதி பலித்தது. இராமனும் விபீஷணனை ஏற்றுக்கொண்டான். அவனும் அவனுமாக, ஸ்வாமியும் தாசனுமாக, சேஷியும் சேஷனுமாக, சுதந்திரனும் பரதந்திரனுமாக, பிதாவும் புத்திரனுமாக, பர்த்தாவும் பத்தினியுமாக, சேஷி எம்பெருமான், சேஷபூதன் விபீஷணன், இருவரும் என்றும் நித்யகைங்கர்யத்திலே இருந்தார்கள் என்பது முக்கியமானச் சரித்திரம். விபீஷணன் திருவடிகளுக்கும், இராமன் திருவடிகளுக்கும், எழுதி வைத்த வால்மீஹி பகவானுக்கும், வியாக்யாதாவான பெரியவாச்சான் பிள்ளைக்கும் பல்லாண்டு. -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – இராமாயணத்தில் சரணாகதி (2) உபந்நியாசம் – Toronto) விபீஷண சரணாகதி - பாகம் 1ஸ்ரீராமாயணத்தில் 24,000 ஸ்லோகங்கள், 500 ஸர்க்கங்கள், 6 காண்டங்கள். இது இத்தனையும் தேடித் திரட்டிப் பிடித்தால் என்ன கிடைக்கும்ன்னால், கடைசியா விபீஷண சரணாகதி கிடைக்கும். அந்த விபீஷணன் எப்படி சரணாகதி அனுஷ்டிக்கிறான் அப்படின்னு பார்ப்போம். இராவணன் தம்பி விபீஷணன். இராவணன்தான் இராமனின் மனைவியான சீதையைப் பிரித்தான். பிரித்து அசோகவனத்திலே கொண்டு போய் அடைத்து வைத்தான். விபீஷணன் ரொம்ப நாளா பேசிப்பேசிப் பார்த்தான். அவன் முதல் நாள்லேர்ந்தே சும்மா இருக்கலே. திரும்பத் திரும்ப இராவணனிடத்திலே நீ பண்றது தப்பு, தப்புன்னு சொல்லிண்டுதான் இருந்தான். ’ப்ரதீயதாம் தாசரதாய மைதிலி’, மைதிலியைக் கொண்டுபோய் தாசரதியிடத்திலே திருப்பிக் குடுத்துரு. அபசாரப்படாதே. அவனிடத்திலே அபசாரப்பட்டால், நாம கூண்டோட அழிஞ்சு போயிருவோம். யாருமே மிச்சமிருக்க முடியாது. ராமேதிதாஹா வாயு சமாந வேதாஹா வஜ்ரூபமாஹா – வஜ்ரத்தை ஒத்த பாணங்கள் இராமனுடையவை. ஒன்னொன்னும் அக்னிக் கங்குகள் போலே வரும். ஒன்னொன்னும் நாகாஸ்திரத்தைப் போல வந்து நம் அத்தனை பேரையும் அழித்துவிடும். வேண்டாம். இலங்கை இருக்க வேண்டும். நம் நாடு நன்றாகக் குடிகுடியுமாக இருக்க வேண்டும். கொண்டு போய் சமர்ப்பிச்சுரு’ன்னு சொல்லுகிறான். ஆனா ஒன்னும் இராவணன் காதிலே ஏறுவதாகவே தெரியலே. கடைசியா ஒருநாள் இராஜசபை கூடித்து. ஹனுமான் வந்துட்டு, திரும்பிப் போய்ட்டார். இந்தமாதிரி ஹனுமான் வந்தாரே, எல்லாத்தையும் எரிச்சுட்டார், புறப்பட்டுப் போய்ட்டார். அப்போ எதிர்கட்சியினுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? இந்த விஷயத்தை ஆராய்வோம்ங்கிறதுக்காக எல்லாரும் கூடி உட்கார்ந்துள்ளார்கள். இந்திரஜித்தும் இருக்கிறான். மற்றுமுள்ள மந்திரிமார்களும் இருக்கிறார்கள். அப்போ விபீஷணன் எடுத்துரைத்தான், ‘நாம பண்ணுவது சரியல்ல. நாம மைதிலியைக் கொண்டுபோய் உடனே இராமனிடத்திலே சமர்ப்பித்துவிட வேண்டும். இல்லையென்றால் நம் இலங்கையும் தப்பிக்காது. நம் இராட்சச ஜாதியும் தப்பிக்காது. நாம பண்ணுவது கூடாதுன்னு இராவணனிடத்திலே பேசுகிறான். அப்ப வால்மீஹி பகவான் ரொம்ப அழகாத் தெரிவிக்கிறார். விபீஷணன் எடுத்துச் சொல்லும் போதே, ‘யாரெல்லாம் நல்லது சொல்லுவர்களோ இராவணா, அவர்கள் சுலபத்திலே கிடைக்க மாட்டார்கள்’. அப்ரியஸ்யத வக்தா வக்தா ஸ்ரோதாஸ்ச துர்லபஹா – எல்லா இடத்தில போய்த் தேடித்தேடிப் பார்த்தாலும், சததம் ப்ரியவாதிநஹா, பிரியமாப் பேசறதுக்கு உலகம் முழுக்க நிறைய பேர் கிடைப்பர்கள். ஆனால், அப்ரியஸ்யச – அப்ரியமா இருந்தாலும் இதுதான் நல்லதுன்னு எடுத்துச் சொல்வதற்கு, வக்தா ஸ்ரோதாஸ்ச துர்லபஹா – சொல்றதுக்கும் ஆள் கிடைக்காது, கேட்டுக்கறதுக்கும் ஆள் கிடைக்காது. நான் உனக்கு நல்லது சொல்றேன், கேட்டுக்கொள்’, என்று விபீஷணன் சொல்ல, அது இராவணனுடைய காதிலே ஏறலே. ஏறாமல் அவனை ரொம்ப ஏசத் தொடங்கினான்.
சுநிவிஷ்டம் ஹிதம்வாக்யம் – நல்ல வாக்யமாத்தான் சொன்னான். பிடிக்கறாப்லதான் சொன்னான். ரெண்டு விஷயம் நாம பார்க்கணும். ஒன்னு, சொல்றவாளப் பார்க்கணும். இல்லே, என்ன சொல்லப்பட்டதுன்னு பார்க்கணும். எனக்கு ரொம்ப வேண்டியவர் சொல்றாரா, கொஞ்சம் ஏத்துக்க முடியாம இருந்தாக்கூட அதை ஏத்துக்கணும். ஏன்னா என்னுடைய நலத்தில அக்கறை இருக்கறவரோல்லையோ? அப்ப எடுத்துக்கணும். என் விரோதியே சொல்றானா, விஷயம் ரொம்ப உசந்ததா இருக்குன்னு வச்சுக்கங்கோ, விரோதி சொன்னாலும் ஏத்துக்கணும். இப்போ தம்பி சொல்றான்னு பார்த்தாலும் ஏத்துண்டிருக்கலாம். நல்லது சொல்றான்னு பார்த்தாலும் ஏத்துண்டிருக்கலாம். ரெண்டுத்துல எதுக்காகவான்னாலும் விபீஷணன் சொன்னதை ஏத்துகலாமோல்லையோ? ரெண்டையுமே பார்க்கலே. தம்பி சொல்றான்கிறதையும் பார்க்கலே, நல்லது சொல்றான்கிறதையும் பார்க்கலே. உக்தவந்தம் விபீஷணம் – விபீஷணன் ஒன்னும் மென்னு முழுங்கலே, நன்னாத்தான் சொன்னான். எப்போதுமே ஒருத்தர் தவறான வழியிலே போறார்ன்னு வச்சுக்கங்கோ, பார்த்துக் கொண்டு நாம சும்மா இருக்கமுடியாது. சொல்லிடணும். சொல்லிடணும்ன்னா, ஏதோ ரெண்டுங்கெட்டானா மென்னு முழுங்கவும் கூடாது. ஏன்னா அப்புறம், இதை நீங்க ஒழுங்காச் சொல்லியிருந்தீள்ன்னா நான் கேட்டிருப்பேனே, அப்படின்ன் அவாளே திருப்பிச் சொல்லிடுவா. அதனால சொல்லும்போது நன்றாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதைத்தான் உக்தவந்தம்ன்னு தெரிவிக்கிறார். சுநிவிஷ்டம் – நன்னா காதுக்கு இனிமையாத்தான் இருக்கு கேக்கறதுக்கு. அவன் ஒன்னும் தப்பு சொல்லலே. ஹிதம்வாக்யம் – நன்மையைத்தான் எடுத்துரைத்தான். உக்தவந்தம் – நன்றாகத்தான் எடுத்துரைத்தான். விபீஷணம் – கூடப்பிறந்த தம்பி. வால்மீஹி இராமாயணம்ன்னால், ஸ்லோகத்திலே சப்தம் சப்தமா அர்த்தம் பார்த்தால்தான் புலப்படும். பின்ன ஏன் இராவணன் ஏசறதுக்குத் தொடங்கினான்? அப்ரவீத் பருஷம்வாக்யம் ராவணஹா காலசோதிதஹா, அப்ரவீத் – சொன்னான், பருஷம்வாக்யம் – காதாலே கேட்க முடியாத அளவுக்கு வைதான். ராவணஹா – இராவணன், பேரே இராவணனோல்லையோ, இராவயதேதி இராவணஹா, எல்லாரையும் அழப் பண்ணுபவன், அதனாலே இராவணன்னு அவனுக்குப் பேர். அதனால அவனே அழப் பண்றவன், கேட்கற வார்த்தை நல்ல வார்த்தையா இருக்குமா? காலசோதிதஹா – காலதேவன் வந்து இராவணன் காது முனைல உட்கார்ந்துண்டு நல்வார்த்தை இராவணன் காதிலே ஏறவேண்டாம்ன்னு தடுக்கறாராம். ஒருத்தனுக்கு மட்டும் கெட்ட காலம் வருதுன்னால், அப்போ சாதுக்களோட வார்த்தை காதில போகாத அளவுக்கு எமதர்மராஜனோ, காலதேவனோ வந்து தடுத்துருவா. நல்வார்த்தைகள் காதிலே போகலேன்னா, நம்மால நல்ல முடிவுகளை எடுக்கவே முடியாது. அதனாலே காலதேவனாலே தூண்டப்பட்ட இராவணன் நல்வார்த்தைகளை கேட்காமலே போனான். அப்போ இந்திரஜித் கேவலமாக சில வார்த்தைகள் பேசினான். இராவணன் அதை ஏற்றுக்கொண்டு, ‘நீ குலத்துக்கே கோடரிக் காம்பாக பிறந்தாய் விபீஷணா. நம்குலம் இராட்சச குலம். எதிர்த்து நின்று ஜெயிப்பதுதான் பௌருஷ்யம், வீரம். அதை விட்டுவிட்டு பேடியைப் போல பேசுகிறாயே. இதை நான் எதிர்பார்க்கவில்லை.’, என்று காலாலே நெட்டித் தள்ளிவிட்டான் விபீஷணனை. நீ இனி இந்த இடத்திலே இருக்க வேண்டிய தேவை கிடையாது, என்று இராவணனாலே அவமானப்படுத்தப்பட்டு, தாசவச்ச அவமானிதஹா, ஒரு தாசனைப்போலே நான் அவமானப்படுத்தப்பட்டேன். அப்ப விபீஷணன் முடிவெடுத்தாக வேண்டும். இந்த பக்கம் இருக்கணுமா, அந்த பக்கம் போகணுமா, எங்கு போகணும்? இந்த முடிவெடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் விபீஷணன் இருந்தான். அப்போது சுற்றுமுற்றும் எல்லாரையும் ஒருதடவை பார்த்தான். ‘நான் லங்கையை விட்டுத் துறந்து நேரே இராமச்சந்திரன் இருக்கும் இடத்துக்குப் போகப் போகிறேன். இராமன் திருவடிகளே சரணம்ன்னு பற்றப் போகிறேன். இங்கிருப்பவர்களில் யாருக்கேனும் அதையே செய்வதற்கு எண்ணமிருந்தால், என்னோடுகூட வரலாம்’, அப்படின்னு விபீஷணன் திறந்த இராஜ சபையில அறிவிக்கிறான். அதுக்கு தைரியம் வேணும். ஏன்னா இவனே ஓடிண்டு இருக்கான் நாட்டைவிட்டு. அந்த சமயத்தில போய் அங்க இருக்கறவாளுக்குச் சொல்லணும்ன்னால், நாம எடுத்திருக்கிற முடிவு சரி, பெருமானே சரணம்ன்னு பற்றப் போகிறோம்ன்னா, தைரியத்தோடதான் யாரையுமே கூப்பிடணும். இதிலே போய் பயத்துக்கு இடமே குடுக்கக்கூடாது. ஒருத்தன் தர்மத்தின் வழி பேசுகிறான்னால் சுணங்க வேண்டிய அவசியமே இல்லை. நாலு இராட்சசாள் வரேன்னு ஏத்துண்டா. அவன் தனியாகப் போகலை. அதோடு ஒரு மூலைல கதை ஒன்று இருந்தது. அந்த கதையை எடுக்கறதுக்காகப் போனான் விபீஷணன். கதை, நான் வரலேன்னு சொல்லலே. அதனால அதையும் எடுத்துனுட்டான். வால்மீஹி உடனே விசாரிச்சிண்டார், உத்பபாத கதாபாநிஹி, கதாபாநியாய் கதையும் கையுமாக, உத்பபாத – ஆகாசத்திலே எழுந்தான். யாரவன்னா, ஸ்ரீமான் – வால்மீஹி உடனே பட்டம் குடுக்கிறார். உத்பபாத காதாபாநிஹி சதுர்த்திஷ் ராட்சஸைஹி ஸ்ரீமான், ஆகாசத்திலே ஸ்ரீமானான விபீஷணன் தாவினான்னு வால்மீஹி எழுதினார். பெரியவாச்சான்பிள்ளைன்னு ஒரு ஆச்சார்யர். அந்த ஸ்வாமி விசாரிச்சிண்டார், நேத்தி வரைக்கும் கொஞ்சமாவது நப்பாசை இருந்திருக்கும். இராஜ்யத்தில ஒரு மடங்கு பங்கு உண்டுனுட்டு. ஏன்னா தம்பிகள்ல ஒருத்தர். இனிமே ஆசைக்கு இடமே இல்லே. விட்டாச்சு எல்லாத்தையும். அவனும் காலாலே உதைச்சுட்டான். இப்ப இராமனைப்பற்றிப் போறச்சே, வெறும் பிச்சை. அவ்வளவுதான் இருக்கே தவிர, இவன்கிட்ட ஒண்ணுமே கிடையாது. இராஜ்யத்திலே பங்கு இருக்கறச்சே ’ஸ்ரீமான்’னு சொல்றதா, ஒண்ணுமே இல்லேன்னு விட்டுட்டு கிளம்பிண்டிருக்கச்சே ஸ்ரீமான்னு சொல்றதா? இது வேணும்ன்னு ஒருவேளை கேலி பண்றாப்லே, பரிகாசமா ஏதானும் எழுதியிருக்காரா? நேத்திவரைக்கும் ஸ்ரீமான், இப்போ ஒண்ணுமே இல்லே, இராஜ்யமே போய்டுத்து. இப்பபோய் ஸ்ரீமான்னு சொல்லலாமான்னா, இப்பத்தான் சொல்ல வேணும்ன்னு வ்யாக்யானம் பண்ணினார். இதுவரை ஆபாச பந்துவை பந்துவாக நினைத்தான். இப்போது ப்ராப்த பந்துவை பந்துவாக முடிவெடுத்துவிட்டான். இந்த பந்துக்களெல்லாம் ஆபாச பந்துக்கள். அண்ணன்ங்கிறதுக்காக பார்த்துட்டு நின்னுண்டுருந்தானோல்லையோ, அதுவரைக்கும் அவனுக்கு ஸ்ரீமத்துவம் இல்லே. சொத்து ஸ்ரீமத்துவம் இருந்திருக்கலாமே தவிர, இராமனுடைய திருவடிங்கற தனம் நேத்துவரைக்கும் இல்லையே. அந்த முடிவு இப்பதான எடுத்திருக்கிறான். இப்பதான் ஸ்ரீமத்துவம். இப்பதான் விபீஷணனை ஸ்ரீமான்னே கூப்பிடலாம் அப்படின்னு தெரிவிக்கிறார்கள். இதிலேர்ந்து நாம புரிஞ்சுக்க வேண்டியது, உறவு என்பது எப்போதும் பகவானகத்தான் இருக்கிறான். திருமங்கையாழ்வார் தன்னுடைய பெரிய திருமொழியில், முதற் பத்து, ஒன்பதாம் திருமொழி திருவேங்கடமுடையானுக்காகச் சமர்ப்பித்தார். அதிலே சாதிக்கிறார், தாயே தந்தையென்னும் தாரமே கிளை மக்களென்னும் நோயே பட்டொழிந்தேன். இதுநாளும் தாய், தந்தை, தாரம், கிளை, மக்கள் இந்த நோயேதான் பட்டொழிந்தேன். இப்போது உன் திருவடிகளே சரணம்ன்னு வந்துவிட்டேன். நீயும் இங்கே வராதேன்னு சொல்லிட்டியானா, எனக்குப் போக்கிடமே யாரும் கிடையாது. ப்ராதா நாராயணஹா, பிதா நாராயணஹா, மாதா நாராயணஹா என்று சகலவிதமான பந்துவும் நாரயணனோல்லையோ? ஆழ்வார் சாதிக்கிறார், ‘சேலை கண்ணிரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே’ன்னு பாசுரம். அந்த உறவுமுறை தெரியாமல் யாரோ உறவுன்னு இதுநாள்வரை நினைத்திருந்தான். நாம நினைச்சிண்டிருப்போம், யாராரோ உறவுக்காரால்லாம் நம்மை ஆபத்திலேர்ந்து காப்பாத்துவான்னுட்டு. அதெல்லாம் அவாள்லாம் பண்றதில்லே. அப்படி ஒருவேளை பண்ணனும்ன்னு வச்சுக்கங்கோ, தாராளமா அந்தந்த அப்பா அம்மா காப்பாத்தியிருக்கலாம். கைகேயி பிள்ளை பரதனைக் காப்பாத்தி இருக்கக்கூடாதா? எது வேண்டாமோ அதைப் பண்ணிவச்சாளோ இல்லையோ? தகப்பனார் ஹிரண்யகசிபு, பிரகலாதானை இரட்சிக்கக்கூடாதா? அவரேதான் மலைமுகட்டிலேர்ந்து பிடிச்சுத் தள்ளிவிட்டார். அவரேதான் யானை கால்லே இடற வச்சார். அண்ணன் தம்பியைக் காப்பாற்றலாம்ன்னா, வாலி சுக்ரீவனை இரட்சிச்சு இருக்கலாமோல்லையோ? நடந்ததாத் தெரியலே. இராவணன் விபீஷணனை இரட்சிச்சிருக்கலாமோல்லையோ? நடந்ததாத் தெரியலே. அதனாலே இந்த உறவுக்காரர்களெல்லாம் இரட்ச்சிக்கப் போறதில்லே. ஆனா இன்னொரு ஆச்சர்யம், இவா ஒரோருத்தராலேயும் கைவிடப்பட்டவர்களை பகவான்தான் காப்பாற்றி இருக்கார். அதனாலே ஆபாச பந்துக்கள் பந்துக்களாக மாட்டார்கள், ப்ராப்தனான பகவானே பந்து. இந்த ஞானம் ஏற்பட்டாத்தான் சரணாகதிக்கு வருவோம். பகவானுக்கும் எனக்கும் உறவுங்கிற ஞானம் ஏற்பட வேண்டும். அப்போதான் நீயே உபாயம்ன்னு ஓடி வந்து விழுவோம். இதைப் புரிஞ்சுனுட்டான் விபீஷணன். இனி இந்த உறவுக்காரர்களிடத்திலே இருக்கறதில்லே. இதை ஏற்கனவே லக்ஷ்மணன் ஒரு இடத்திலே ரொம்ப ஆச்சர்யமா விளக்கினான். குகன் இருக்கும் ஸ்ருங்கிபேரபுரத்துக்கு இராமனும், சீதையும், லக்ஷ்மணனும் வந்து சேர்ந்துள்ளார்கள். ஓடத்திலே ஏத்திண்டு கங்கையைக் கடந்து அக்கரையிலே கொண்டுபோய் விடப்போகிறான். சுமந்திரன் இதுவரைக்கும் கூட வந்திருக்கார். அவர்தான் தேரோட்டி, மந்திரி இராமனுக்கு. இதுவரைக்கும் வந்தவர் விடைபெற்றுண்டு திரும்பிப் போகணும். நான்கூட வரேனே தேர் எடுத்துண்டுன்னு சொன்னார் அவர். இராமன் விலக்கிட்டான், ’இல்லே, நீர் திரும்பப்போம். இராஜ்யத்தை பாத்துக்கறதுக்கு ஆளில்லே. நான் புறப்பட்டுட்டேன்ங்கிற துக்கம் தசரதனுக்குத் தாங்காது. அவனால எவ்வளவு தூரம் வாழமுடியும்ன்னு தெரியாது. நீர் போம், நான் அனுமதி குடுத்துட்டேன்’, என்று இராமன் திருப்பி அனுப்பிச்சுட்டான். அப்போ உன்கிட்ட ஏதாவது செய்தி வாங்கிட்டுப் போறேன்னு நிக்கறார் சுமந்திரர். இராமனைப் பார்த்து, நாட்டுக்கு என்ன செய்தின்னு கேட்டார். ‘நான் என்ன சொல்லப் போறேன், நான்தான் இந்த நாட்டைப் பார்த்துண்டிருக்கணும். ஆனா பிதுர்வாக்யப் பரிபாலனுத்துக்காக கிளம்பி வந்துட்டேன். தகப்பனாரை ஜாக்ரதையாப் பார்த்துக்கோ, தாயாரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ’. நல்ல வார்த்தையெல்லாம் சொல்லிட்டார். அடுத்து சீதையினடத்திலே வந்து, ’உன் நாட்டுக்கும், உன் மாமனார் மாமியாருக்கும் என்ன செய்தி? என்று கேட்கிறார் சுமந்திரர். அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது. எங்க பிறந்தோம், எங்க வளர்ந்தோம், வாழ்க்கைப்பட்டோம், எங்க வந்து உட்கார்ந்துண்டிருக்கோம். பிறந்த குலத்துக்கு குறைவில்லே, ஜனக குலத்துக்கு சுந்தரி. புகுந்த குலத்துக்கு குறைவில்லே, தசரத குலத்துக்கு நாட்டுப்பெண். இந்த ரெண்டு பெருமையும் இருக்கறச்சே ஒரு காட்டுக்கு நடுவிலே வந்து உட்கார்ந்திருக்கணும்ன்னால், அவளுக்குத் துக்கத்திலே பேசறதுக்கு வரலே. ஒண்ணுமே சொல்லலை அவள். அடுத்து லக்ஷ்மணனிடத்திலே வந்தான் சுமந்திரன். ’லக்ஷ்மணா உன் தந்தைக்கு என்ன செய்தி சொல்ல’ன்னு கேட்டான். அவன் திரும்பி பதில் சொல்றான், ‘நீ கேள்வியே தப்பாக் கேட்கிறே, ஒழுங்காக் கேளு’ன்னான். ’ஏன், உன் தந்தைக்கு என்ன பதில் சொல்லணும்ன்னுதானே கேட்டேன்’. ‘தசரத சக்ரவர்த்திக்கு என்ன சொல்லணும்ன்னு கேள். என் தந்தைக்கு என்ன சொல்லணும்ன்னு கேட்காதே.’ ‘ஏன் ரெண்டு பேரும் ஒருத்தர்தானே, அதனாலதானே கேட்டேன்’னா, ‘இல்லே, நான் சொல்ற ஒரே ஒரு வார்த்தையைப் போய்ச்சொல். அவனைத் தந்தையாக மதிக்கவில்லைன்னு போய்ச்சொல்.’ லக்ஷ்மணன் நேர சுமந்திரனைப் பார்த்துச் சொல்றான், ’பிதுர்த்வம் நோபலக்ஷயே – தசரதனைப் பிதாவாக நான் மதிக்கவில்லைன்னு சொல்’. வாங்கினுட்டான், சுமந்திரன் நேர நாட்டுக்கு வந்தான். ’உன் நாட்டு மக்கள் அத்தனை பேரும் பரிதவிக்கிறா. ஆடு, மாடு, கோழி, குதிரை அழறது. மொத்தச் செடி,கொடிகளும் பட்டுப்போய்க் கிடக்கின்றன. இது ஒருபக்கம் தசரதா, உன் பிள்ளை லக்ஷ்மணன் சொன்னதைச் சொல்றேன், கேட்டுக்கோ. எனக்கேத் தாங்கலே. உனக்கு நெஞ்சு வெடிச்சு பிராணன் போய்டுமோ என்னமோ, சொல்றேன் கேட்டுக்கோ’ன்னான். ‘சொல்லு’ன்னான் தசரதன். அப்ப சுமந்திரன் தெரிவிக்கிறான். ’ஒரோருத்தரையா செய்தி கேட்டேன். லக்ஷ்மணனிடத்திலே கேட்டேன். அப்போ ஒரு வார்த்தை சொன்னான். தசரதனை தந்தையாக மதிக்கவில்லைன்னு சொல்லச் சொன்னான்’. தசரதனுக்கு ஒண்ணும் ஆகலே. இவன் எதிர்பார்த்தபடி அவன் ஒண்ணும் துடிச்சுப் போய்டலே. தசரதன் எழுந்து உட்கார்ந்துண்டான். இதுவரைக்கும் படுத்து இருந்தவர் எழுந்து உட்கார்ந்துண்டு, ’இவ்வளவுதான் சொன்னானா சுமந்திரா, இல்லே இதுக்கு மேலே ஏதானும் சொன்னானா’ன்னு கேட்டான். அப்போ, ’ஆமா, இன்னொரு வரி சொன்னான். அதை நாந்தான் விட்டுட்டேன். பிதுர்த்வம் நோபலக்ஷயேன்னு சொன்னவன், ப்ராதா பர்த்தா பந்துஸ்ச பிதாச மம ராகவா. ராகவனே எனக்குப் ப்ராதா, ராகவனே பந்து, ராகவனே பிதா, ராகவனே மாதா. எல்லாமாக ராகவனை வச்சுனுட்டேன்னு சொல்லு. தசரதனை தந்தையாக மதிக்கவில்லைன்னு சொல்லு.’ இதைக் கேட்டவுடனே தசரதனுக்கு சிரிப்பு மலர்ந்து, சுமந்தரனைப் பார்த்துச் சொல்லுகிறான், ’நான் இராமனைப் பெற்று பெருமிதம் அடையவில்லை சுமந்திரா, லக்ஷ்மணனைப் பெற்றதால் ஆனந்தப்படுகிறேன். இராமனை பெற்றுக்கூட எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஏன்னா நான் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இராமன் போயிருக்க வேண்டாம். அப்படியே தந்தை சொல்லுதான் இருக்கட்டுமே, தந்தை சொல்லு முக்கியமா, தந்தை மனசு என்னாகும்ங்கிறது முக்கியமா? என் சொல்லே இருக்கட்டும், கூட இருந்தா நான் உயிரோட இருப்பேனோல்லையோ? அதைப் பார்க்காமே என்ன இப்போ இவனுக்கு தந்தை சொல்லு முக்கியமா போச்சு? நான் நினைக்கிறபடி இராமன் நினைக்கலே. ஆனா நான் நினைக்கிறபடி இலக்குவன்தான் நடந்தான். அவனன்றோ இராமனே எல்லாம்ன்னு பற்றியிருக்கிறான்?’. ஆகவே லக்ஷ்மணன் அப்பவே காட்டிக் குடுத்தது, பந்து என்றால் பகவான்தான் பந்து. மத்த பேரெல்லாம் வருவா, கிளம்பிப் போய்டுவா. இதைத்தான் மனுபகவான் தெரிவித்தார். இந்த உலகத்திலே, இந்த ஜென்மத்தில் யாராரோ உறவுக்காரர்களோடு இருக்கோமே தவிர, இவ்வாத்மாவுக்கு கடந்த ஜென்மத்தில யார் உறவுன்னு தெரியாது. அதற்கு முன் ஜென்மத்துல யார் உறவுன்னு தெரியாது. ஆனா ஒன்று தெரியும். இத்தனை ஜென்மங்களைத் தாண்டி ஒருத்தர் மட்டும் உறவா இருந்திருக்கார். அதிலே சந்தேகமேயில்லையோல்லையோ? அதனால அந்த ஓர் உறவைப் பற்ற வேண்டியது முக்கியமே தவிர, அதை விட்டுவிட்டு இந்த அண்ணன் சொன்னார், தம்பி சொன்னார்ன்னு பார்த்துட்டு இருந்தோம்னா. இருக்கிற காலத்தில எல்லா உறவுக்காரர்களுக்கும் நல்லதா நடந்துக்கணும். நம்மாலான எல்லா உதவிகளையும் செய்யனுமே தவிர, பகவானுடைய உறவா, இவர்களுடைய உறவான்னு முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்துடுத்துன்னால், அப்போ கண்டிப்பா மற்றதைத் துறந்து பகவான் உறவைத்தான் பற்றியாக வேண்டும். இந்த விஷயத்திலே விபீஷணன் எடுத்தது உயர்ந்த முடிவு. ஏன் அப்படிச் சொல்றேன்னா, இந்த இடத்துல தப்பான முடிவு இன்னொருத்தர் எடுத்துட்டார். அவரைப்பத்தி பட்டிமன்றங்களெல்லாம் நாம நடத்திக்கிட்டிருக்கோம். ஆனா அதை சாஸ்திரக்காரா ஒத்துக்கவே மாட்டா. கர்ணன் எடுத்த முடிவு சரியான முடிவு அல்ல. கண்ணன் பேசின பிற்பாடும் கர்ணன் இடம் மாறாமல் இருந்திருக்கான்னால், அப்போ பகவானை விட்டுட்டு என்னமோ, யாரையோ பற்றுவதற்கு அவனுக்குத் தோணித்தே தவிர, அப்போ பிறந்துண்டே இருக்க வேண்டியதுதான், சம்சாரத்திலே உழண்டுண்டே இருக்க வேண்டியதுதான். இதெல்லாம் சாமான்ய தர்மம். சாமான்ய தர்மத்துக்கும், விசேஷ தர்மத்துக்கும் வேறுபாடு உண்டு. ரெண்டும் பண்ண முடியும்ன்னு இருந்தா, ரெண்டையுமே பண்ணிக்கனும். ஆனா சாமான்ய தர்மத்துக்கும், விசேஷ தர்மத்துக்கும் போட்டி வந்துடுத்துன்னால் சாமான்யத்தை விட்டுடணும், விசேஷத்தைத்தான் பற்ற வேண்டும். ஓரே ஒரு இடம் பார்ப்போம். ஸ்ரீரங்கத்திலே பெருமாள் புறப்பாடு நடந்துண்டிருக்கு. ஸ்ரீபராசரபட்டர்ன்னு ஒரு ஆச்சார்யார். அவர் கோஷ்டியோடே பெருமாளுக்குப் பின்னாடி நடந்துண்டிருக்கார். மணி ஐஞ்சே முக்கால், சந்தியாவந்தனத்துக்கு நாழியாயிடுத்து. பக்கத்திலே இருக்கற சிஷ்யர் ஞாபகப்படுத்தறார், ‘ஸ்வாமி, சந்தியாவந்தனத்துக்கு நாழியாயிடுத்து, போவேண்டாமா?’ன்னு. அவர் அப்போ சொன்னார், ‘நாம பெருமாளுக்குப் பின்னாடி போகற கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கோம். இது விசேஷ தர்மம். நான் பிராமணனாப் பிறந்தேங்கறதுக்காக நீ சந்த்யாவந்தனம் ஞாபகப்படுத்தறே. அது சாமான்ய தர்மம். இப்போ நான் அதைப் பார்த்துட்டு, பெருமாளை விட்டுட்டுப் போய்ட்டேன்னா? இவர் ஜாக்கிரதையா உள்ள போய்ச் சேருகிற வரைக்கும் என் பொறுப்புத்தான். அதனால அவர் உள்ள போறதுக்கு ஏழு மணியானா அப்பதான் நான் போய் சந்தியாவந்தனம் பண்ண முடியும். இன்னைக்கு ஒருநாள் சந்தியாவந்தனம் நாழி கழித்ததை சித்திரகுப்தன் கணக்கெழுத மாட்டான், போ.’, அப்படின்னு பராசரபட்டர் தன் சிஷ்யனுக்குச் சொன்னாராம். விபீஷணன் சாமான்ய தர்மமான அண்ணனை விட்டுப்பிரிந்து, விசேஷ தர்மமான இராமனைப் பற்றுவதற்குப் புறப்பட்டான். ஆஜகாம முகூர்த்தேந யத்ரராம ஸலக்ஷ்மணஹா. ஆஜகாம – வந்தான். யாராவது ஒருத்தர், தான் வீட்லேர்ந்து புறப்பட்டு இன்னொரு இடத்துக்குப் போறார்ன்னு வச்சுக்கங்கோ. அப்போ அவர் போறார்ன்னு சொல்லுவமா, வந்தார்ன்னு சொல்லுவமா? என் இடத்துக்கு வரேன்னா வந்தார்ன்னு சொல்லுவோம். என் இடத்தைவிட்டு இன்னொரு இடத்துக்குப் போறேன்னா, போறேன்னு சொல்லுவோம். இதான வழக்கம்? அதேபோல விபீஷணன் லங்கையிலேர்ந்து புறப்படுறாரோ இல்லையோ? அப்படின்னா என்ன சொல்லியிருக்கணும்? இராமன் இருக்குமிடம் சேரப் போனார், அப்படின்னு சொல்லணுமா? அல்லது, லங்கையிலேர்ந்து இராமன் இருக்குமிடத்துக்கு வந்தார்ன்னுவாளா? லங்கையிலேர்ந்து ஸ்லோகம் சொல்றதுன்னா போனார்ன்னுதான் சொல்லுவா. ஆனா இந்த இடத்திலே, ‘ஜகாம’ன்னு இல்லே, ‘ஆஜகாம’ன்னு இருக்கு. எதை வந்தார்ன்னு சொல்லணும்? ஸ்வஸ்தானத்தை வந்தார்ன்னு சொல்லணும். என் இடம் எதோ அது ’வந்தார்’. பரஸ்தானம் எதோ, அதுதான் ’போனார்’. அப்போ விபீஷணனுடைய அபிப்ராயத்தாலே, இராமன் எங்கிருக்கிறானோ அதைத்தான் ஸ்வஸ்தானமாக நினைத்திருக்கிறான். அவன் மனசு மற்றொரு இடத்திலே இல்லே. இராமன் திருவடி நிழல் எங்கேயோ, அதுதான் என் ஸ்தானம். அப்போ திரும்ப வீட்டுக்கு வரமாதிரிதான அர்த்தம். அதனாலதான் ‘ஜகாம’ன்னு சொல்லாமல், ‘ஆஜகாம’ன்னு தெரிவித்தார். முகூர்த்தேந – ரொம்ப சீக்கிரமாக. ஏன் சீக்கிரமாக வந்தார்ன்னு கேட்டால், சரணம் பண்ணனும் புத்தி வந்துட்டால் சீக்கிரமாக பண்ணிடனும். அதுக்கு நாள், நட்சத்திரம் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியதில்லே. ஆச்சார்யனிடத்தில போய் சமாஸ்ரயணம் பண்ணிக்கிறதுக்கோ, பகவானிடத்தில போய் சரணாகதி பண்ணிக்கிறதுக்கோ, செவ்வாய், வெள்ளி, அஷ்டமி, ராகுகாலம், எமகண்டம், எதுவுமில்லை. பகவானை ஆச்ரயிக்கப் போறோம்னால், அதை உடனடியா செய்துடனுமே தவிர, அதுல காலம் தாழ்த்தினோம்னால், நம்ம புத்தியே மாறிப் போய்டும். அதனாலதான் ‘முகூர்த்தேந’, ரொம்ப சீக்கிரமாக வந்தான். எத்ரராமஹா – எங்கு இராமன் இருந்தானோ அங்கு வந்தான். இராமனிடம் வந்தான்னு மட்டும் சொல்லாமல், எத்ரராமாஹான்னு போடணுமா? ’எத்ர’ங்கிற சொல்லு இடத்தைக் குறிக்கறதோல்லையோ? இராமன் எங்கிருந்தானோ, அங்கு வந்தான்னால், பகவானைக் காட்டிலும் அவன் இருக்கிற திவ்யதேசம் உத்தேசம். இந்த விஷயத்தை வால்மீஹி தெரிவிக்கிறார். பெருமாள் இருப்பர். அவர் எந்த திவ்யதேசங்களிலே ஆசையோடே இருக்காரோ, அந்த இடங்களிலே நமக்கும் ஆசை இருக்கணும். பெருமாளிடத்திலே சரணாகதி பண்ணனும்ன்னா எங்க போய் பண்ண முடியும்? ‘இதில் ப்ரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர்’ன்னு பிள்ளை லோகாச்சார்யர் தெரிவிக்கிறார். ஆச்சார்யர்கள் சரணாகதி பண்ணுவதோ, ஆழ்வார்கள் சரணாகதி பண்ணுவதோ, நாம் சரணாகதி பண்ணுவதோ, அத்தனையுமே திவ்யதேசங்கள்லேதான். ஏன்னா நம்மால பரரூபத்தை சேவிக்கவே முடியாது. வியூக ரூபம் எங்க இருக்கோ தெரியாது. அந்தர்யாமி எங்கேயோ உள்ள இருக்கார். விபவ அவதாரம் என்னைக்கோ நடந்திருக்கு. நாம இன்னைக்குச் சரணம்ன்னு போய் பெருமாளிடத்தில நிற்கணும்ன்னால், அதற்கு ஒரே வழி அர்ச்சாவதாரத்திலதானே. அதனாலதான் எத்ரராம ஸலக்ஷ்மணஹான்னு தெரிவிக்கிறார். அதுக்கடுத்தது ‘ஸலக்ஷ்மணஹா’ன்னு இருக்கோல்லையோ? லக்ஷ்மணனோடு கூட இருக்கும் இராமன் இருக்குமிடத்துக்கு வந்தான். என்ன ஸ்வாமி, இராமனைத்தான நேர வரணும்? இப்ப குறுக்க லக்ஷ்மணன் எதற்காக? லக்ஷ்மணன் இருக்கறது ஒரு இன்றியமையாதது. பகவானிடத்தில சரணம்ன்னு போறோம்ன்னாலே, அவர் தனியா இருக்கறச்சே போனா காரியம் நடக்குமா, நடக்காதா தெரியாது. சிபாரிசு பண்றதுக்கு ஆள் கூட இருக்கணும். அப்பதான் போனா நம்ம காரியமே நடக்கும். அதாவது பாகவதோத்தமர்களைப் பற்றியே பகவானைப் பற்ற வேண்டும். இது இந்த ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தினுடைய ரொம்பப் பிரதானமான கருத்து. அவனைவிட அவன் அடியார்களுக்குத்தான் ஏற்றம். அவனைப் பற்றுவது ஓர் படி, பகவத் பக்தர்களைப் பற்றுவது இன்னும் மேல்படி. மற்ற ஆழ்வார்களெல்லாம் ஒரு நிலைன்னா, மதுரகவியாழ்வார் தனி நிலை. நம்மாழ்வார்தான் அவருக்குத் தெய்வமே. ’தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவி நின்னிசைப் பாடித் திரிவனே’ன்னு கண்ணிநுண்சிறுத்தாம்புங்கிற பிரபந்தத்தில பாடினார். தேவு மற்றறியேன் – எனக்கு வேறு தெய்வம் தெரியாது. குருகூர் நம்பி பாவி நின்னிசைப் பாடித் திரிவனே – குருகூர் நம்பியான நம்மாழ்வாரே எனக்குத் தெய்வம். எனவே ‘எத்ரராம ஸலக்ஷ்மணஹா’ன்னா ‘நாம் பாகவதர்களை முன்னிட்டுக் கொண்டு, பெருமானைப் பற்றிவிடலாம்’, இந்த ஆசையோடு வந்திருக்கிறான் விபீஷணன். இன்னொரு அர்த்தம் வேடிக்கையாகச் சொல்லுவர்கள். அதாவது, தம்பி வார்த்தை கேளாத கோஷ்டியைத் துறந்து, தம்பி வார்த்தை கேட்கும் கோஷ்டிக்குப் புகுந்தான்னார். ஒரு கோயிலுக்குப் போறாம்னாலே, முதல்லே கருடன் சன்னிதி, அனுமார் சன்னிதி, ஆழ்வார்கள் சன்னிதி, ஆச்சார்யர்கள் சன்னிதி, இதெல்லாத்தையும் சேவிச்சுட்டு, தாயார் சன்னிதியைச் சேவிச்சுட்டுத்தான் பெருமாள் சன்னிதிக்குப் போகணும். அதனால முதல்ல பாகவதர்களை முன்னிட்டு, அடுத்து மஹாலக்ஷ்மியை முன்னிட்டு, அதற்கப்புறம்தான் பகவத் ஆஸ்ரயணம். அந்த முறையெல்லாம் சரியா விபீஷணனுக்குத் தெரியும். அதனாலதான் பாகவதனை முன்னிட்டுக் கொள்ளுவோம்ன்னு லக்ஷ்மணன் இருக்கும் இடத்துக்கு வந்தான். இவர் சிபாரிசு பண்ணுவர்னுட்டு. அப்ப ஒரு சந்தேகம் வரும், ‘ஸ்வாமி, பிராட்டி பக்கத்துலேயே இல்லையே? நீர் சொன்னபடி பார்த்தா தாயாரிடத்திலே சரணாகதி பண்ணிட்டு, அவள் புருஷகாரபூதையாக இருந்துதானே பெருமானைப் பற்றி இருக்க வேண்டும்? இப்போ சீதையே பக்கத்தில இல்லையே? அப்போ இராமன் ஒரேயடியா கோவிச்சுட மாட்டாரா’ன்னா, இந்த மொத்த விபீஷண சரணாகதிக்கு அடிப்படையே சீதா அனுக்கிரகம்தான். அது இல்லாம இது நடந்தே இருக்காது. எவ்வளவு தூரம் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சீதை என்னத்துக்காக இராவணனாலே தூக்கப்பட்டு, அசோகவனத்தை அடைந்தாள்? அவள் அடைந்ததற்கு காரணம் உண்டு. விபீஷணனை அனுக்கிரகித்து, தயார்படுத்தி சரணாகதிக்கு அனுப்பி வைக்கத்தான். அவ அந்த ஊருக்குள்ள போனதுக்கே இதுதான் காரணம். அதனால அவள் அனுக்கிரகம் இல்லாம விபீஷணன் வந்துடவே இல்லே. ஒரு சந்தேகம் ஏற்படும், எப்பவும் இராமன் அனுக்கிரகிக்கனும்ன்னா கூட சீதை இருக்கணுமே? ரெண்டே ரெண்டு இடத்தில மட்டும் சந்தேகம். சுக்ரீவாதிகளை இராமன் சீதை இல்லாத போது தோழனாக ஏற்றுக்கொண்டான். விபீஷணனை இராமன் சீதை அருகில் இல்லாத போது தனக்கு சரணாகதனாக ஏற்றுக்கொண்டான். இந்த ரெண்டு இடத்தில மட்டும் சந்தேகம் வரும். மத்த எல்லா இடத்திலேயும் சீதை கூட இருந்தாத்தான். இந்த சந்தேகம் சீதைக்கே வந்துடுத்து. வந்ததாலதான், அசோகவனத்துக்கு ஹனுமார் வந்துருக்கச்சே, ஹனுமாரைப் பார்த்துக் கேட்கிறாள். ’கீதுருஸம் வத்ஸுஸம்ஸ்தாநம் ரூபம் இராமஸ்ய கீதுருஸம்’, ’என் இராமனுடைய அங்க அடையாளங்களையெல்லாம் சொல்லு. நீ அவரைத்தான் பார்த்திருக்கியான்னு நான் கண்டுபிடிச்சாகனும்’. அப்படின்னு அனுமான்கிட்ட கேட்டுட்டு, அவனுக்கும் இவனுக்கும், வானரானாம் நரானாஞ்ச கதமாஸீ ஸமாகமஹா, வாரணத்துக்கும் நரத்துக்கும் என்னமா தோழமை ஏற்பட்டது? ரொம்ப ஆச்சர்யமா இருக்கே. குரங்கும் குரங்கும் கைகுலுக்கிப் பார்த்திருக்கேன். மனுஷனும், மனுஷனும் கைகுலுக்கிப் பார்த்திருக்கேன். மனுஷனும் குரங்கும் கைகுலுக்கி நான் பார்த்ததேயில்லே. எப்படி இவா ரெண்டு பேருக்கும் நட்பு ஏற்பட்டதுன்னு சீதை கேட்கறா. ஹனுமார் சட்டுன்னு புரிஞ்சுனுட்டார். ’சீதை, இதுதான் உன் கேள்விக்கு அபிப்ராயமா, இல்லே எதைக் கேட்க நினைச்சு எதைக் கேட்கறே?’ன்னார் அவர். சீதை சொன்னா, ’நான் எதைக் கேட்க நினைக்கறேன்னு தெரியறதோல்லையோ? அப்ப அதுக்கே பதில் சொல்லு’, அப்படின்னுட்டாள். சீதை எதைக் கேட்க நினைக்கிறாள்? எப்படி வானரத்துக்கும், நரத்துக்கும் நட்பு ஏற்பட்டதுங்கிறது அவ சந்தேகமே இல்லே. ஏன்னா இராமன் யாரோடும் தோழமை கொள்ளுவன்னு அவளுக்குத் தெரியும். இராமன் உயர்வு, தாழ்வு பாராமல் எல்லாரையும் நண்பனாக ஏற்றுக் கொள்ளுகிற சுசீலன். சீதைக்கு இது நன்னாவே தெரியும். ஆனா அவள் சந்தேகம் என்னன்னா, நான் பக்கத்திலே இல்லாது இருக்கச்சே எப்படி சுக்ரீவனை நண்பனா ஏத்துண்டான்? இதுதான் அவள் கவலை இப்போ. நான்கூட இல்லையே, அசோகவனத்திலேன்னா இருந்தேன். அப்போ நீங்கள்லாம் கூடப்போய் இராமனுடைய திருவடிகளைப் பற்றிட்டீர்களே, என்னமா இராமன் உங்களை ஏற்றுக்கொண்டான்? ஹனுமான் ரொம்ப ஆச்சர்யமா சமாதானம் சொன்னார், ‘தேவி, தேவரீர் அனுக்கிரகத்தோடதான் இராமனே எங்ககிட்ட வந்தான். ஞாபகமில்லையா? நாங்களெல்லாம் கிஷ்கிந்தையிலே ரிஷ்யமுக பர்வதத்தில உட்கார்ந்திண்டிருந்தோம். இராவணன் உம்மை ஆகாச மார்க்கத்தில தூக்கிண்டு போயிண்டிருந்தான். தேவரீருடைய ஆபரணங்களை மூட்டையாகக் கட்டி எங்களுக்கு நடுவிலே போட்டது. நீர் எங்களை கீழ பார்த்து கடாக்ஷித்த பிற்பாடுதான், இராமனே வந்தான். உம் அனுக்கிரகம் இல்லாத இராமன் எங்க வரப்போறார்? உம்மை பிடிச்சுக்காம இராமன் எங்க எங்களை அனுக்கிரக்கப் போறார்? உம்ம ஆபரணங்கள் மூலமா உங்கள் அனுக்கிரகத்தை வாங்கினுட்டு, அப்புறம்தான் இராமன் திருவடிகளை நாங்கள் பற்றினோம். அதனால நீங்கள் கவலையே படவேண்டாம், உம்ம சம்பந்தத்தோடதான் இராம அனுக்கிரகம். ஹனுமார் சொன்னப்புறம்தாம் மூச்சே வந்தது சீதைக்கு. சீதா அனுக்கிரகம் இருந்தாலே இராமா அனுக்கிரகம் கிட்டும். அது திண்ணம். அடுத்த சந்தேகம், விபீஷணன் எப்படி நேரே போய் பற்றிட்டாரேன்னா, விபீஷணனைக் கிளப்பி அனுப்பிச்சதே அவதான். இங்க இருந்து கிளம்பி இலங்கைக்குப் போனது இராவணனை முடிக்கறதுக்கெல்லாம் இல்லே. இந்த இராவணனைக் கொல்றதுக்காக இதெல்லாம்ன்னு நினைச்சிண்டா ஏதோ மேலெழுந்தவாரியா கதை கேட்கறோம்ன்னு அர்த்தமே தவிர, இராமாயணத்தினுடைய ஆழ்ந்த பொருள் புரியவே புரியாது. ஒரு சரணாகதனைத் தயார்ப்படுத்த வேண்டியது, பிராட்டியினுடைய முக்கியப் பொறுப்பு. அதனாலதான் அந்த ஊருக்குப் போய் விபீஷணனைத் தயார்படுத்தி அனுப்பி வைத்தாள்ன்னு சொல்லுவர்கள். அப்போ சீதையை முன்னிட வேண்டும், லக்ஷ்மணனை முன்னிட வேண்டும். இதைச் செய்தே விபீஷணன் இராமன் திருவடிகளைப் பற்றுகிறான். பகவானைப் பற்றனும்ன்னால் இருவரையும் சேர்த்தேதான் பற்ற வேண்டும். சீதையினடத்தில மட்டும் ஆசை? கூடாது. இராமனிடத்தில மட்டும் ஆசை? கூடாது. இராமனிடத்தில மட்டும் ஆசைப்பட்டாள் சூர்ப்பனகா. காது, மூக்கு போய்டுத்து. சீதையினடத்தில மட்டும் ஆசைப்பட்டான் இராவணன். தலையே போய்டுத்து. சீதையை முன்னிட்டுக் கொண்டு, இராமனைப் பற்றினான் விபீஷணன், பேரின்ப வாழ்வே பெற்றான். விபீஷணன் ஆகாயத்தில வந்தானே, ஒருவேளை, கீழ இவ்வளவு பெரிய சமுத்திரம் இருக்கே, இறங்கி ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துருப்பனா? ஒரு முழுக்குப் போட்டு, நீராடி, ‘இனிமே இலங்கைக்கும் எனக்கும் தொடர்பில்லை. இனிமே இராமனுக்கு எனக்கும்தான் தொடர்பு’, அப்படின்னு சொல்லியிருப்பனா? அல்லது, சரணாகதி பண்ணப்போறோமே, தீர்த்தமாடிட்டுப் போகவேண்டாமா? சரணாகதி பண்றது எவ்வளவு பெரிய காரியம்? நீராடிட்டாவது போக வேண்டாமான்னால், வ்யாக்யாதார் தெரிவித்தார், இதை அவன் பண்ணவே இல்லை. சமுத்திரத்தில இறங்கவே இல்லே, நீராடவே இல்லே. நேரயே வந்துட்டான். ஏன் அப்படி எனில், சரணாகதிக்கு நேரமோ, இடமோ, நியமங்களோ, எதுவுமே கிடையாது. எப்போது வேண்டும்னாலும் பண்ணலாம். யார் வேணும்ன்னாலும் பண்ணலாம். எந்த பலத்துக்காகவும் பண்ணலாம். எங்கு வேணும்ன்னாலும் பண்ணலாம். எதைப் பண்ணாவிட்டாலும் பண்ணலாம். சரணாகதிக்கு எது யோக்யதை? ரொம்ப சுலபமாச் சொல்லணும்ன்னா, வேறு யோக்யதை இல்லாமலிருத்தல் யோக்யதை. ஆகாயத்தில பறந்து வர்றார். வரும்போது பின்னாடியே நாலு இராட்ஷசாளும் பறந்து வர்றா. கையைக் கூப்பிண்டு, அதுக்கு நடுவுலே கதையை கீழ்நோக்கி வைச்சுனுட்டான். இப்போ இக்கரை, திருப்புல்லாணிக்கரையிலே மொத்த வானரோத்தமர்களும் ஜாக்கிரதையா இராமனைப் பாதுகாத்துண்டிருக்கா. ஆகாயத்தில பார்த்தா மேகநாதத்தைப் போன்ற ஒலியுடன் வேகமா விபீஷணன் வந்துண்டிருக்கான். கீழ இருந்து சுக்ரீவன் பார்த்துட்டான். அவனைப் பார்த்த உடனே சுக்ரீவனுக்குக் கொதிக்க ஆரம்பிச்சுடுத்து. வானரோத்தமர்களைப் பார்த்துச் சொல்லுகிறான், ராக்ஷஷோத்வேதி பக்ஷத்வம் அஸ்மாந் ஹம்தும் நஸம்ஸயஹா. ’ஹே, வானரோத்தமர்களே பாருங்கள். ஆகாயத்தில் ராக்ஷசன் வருகிறான். நம் அத்தனை பேரையும் கொல்லுவதற்காக வருகிறான்ங்கிறதில சந்தேகமில்லை.’ அப்படின்னு ஒரு வார்த்தை சுக்ரீவன் சொல்லுகிறான். அத்தனை குரங்கும் அடுத்தது எழுந்ததுதான். ஒரே சத்தம், கூச்சல், குழப்பம் எல்லாம். ஒன்னொன்னும் ஒரு கையில ஒரு மலையைப் பேர்த்துண்டது, ஒரு கையில ஒரு மரத்தை எடுத்துண்டது. வால்மீஹி சொல்றார், சுக்ரீவஸ்ய வஸஸ்ருத்வா சர்வேதே வானோரோத்தமாஹா, சுக்ரீவனுடைய வார்த்தை காதில பட்டதோ இல்லையோ, சர்வேதே வானோரோத்தமாஹா – அத்தனை வானரோத்தமர்களும், சாலாஞ் சைலாஞ்ச உத்தம்ய – ஒரு கையில் மரம், ஒரு கையில் மலை. இந்த ரெண்டையும் கையில ஏந்திண்டு, விபீஷணன் கீழ இறங்கட்டும் அப்படிங்கறதுக்காக காத்துண்டிருந்ததாம். அப்ப ஆகாசத்துல பார்த்த சுக்ரீவன் சொல்லுகிறான்,
’ராக்ஷசன் வருகிறான்; நம் அத்தனை பேரையும் கொல்லுவதற்கு வருகிறான், சந்தேகமில்லை.’ இவா இத்தனை லட்சம் பேர் இருக்கறச்சே ஒரு இராட்சசன் வந்தா கொன்னுடப் போறான்? மேலும் சுக்ரீவன் என்ன பயந்தாங்கொள்ளியா? ஆனா மத்த அத்தனை பேரையும் கொல்றதுக்கு வர்றான்னு ஏன் சொல்றான்னா, அவன் வருவது எங்கள் யாரையும் கொல்றதுக்கு அல்ல, இராமனைக் கொல்றதுக்குன்னு அவன் நினைச்சினுட்டான். இராமனுக்கு என்ன வருமோன்னு அவனுக்கு பயம். இராமனுக்கு ஏதானும் ஆகிவிட்டால் நாம மொத்தப் பேரையும் கொல்லுவதற்குச் சமம்தானே? எங்க யாரையும் அவன் தனித்தனியா அவன் அடிக்கவே வேண்டாம், கொல்லவே வேண்டாம். இராமனுடைய திருமேனியில ஒரு கீறல் விழுந்துடுத்துன்னா நான் இருந்தே லாபமில்லே. விபீஷணன் வர்றான்ன உடனே, மொத்தப் பேரையும் கொல்றதுக்குத்தான் வருகிறான். ‘வர்றவன் எப்படி வருகிறான் பார்த்தீர்களா வானரோத்தமர்களே, ஏஷ சர்வாயுதோ பேதஹா – அத்தனை ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு வந்தான்’. இந்த இடத்துல உடனே ஒரு சந்தேகம் வரும். உத்பபாத காதாபாநிஹி சதுர்த்திஷ் ராட்சஸைஹி, இப்பதான் நாலு ஸர்க்கத்துக்கு முன்னாடி கதையும் கையுமாகப் புறப்பட்டான்னு எழுதியிருக்கார். இந்தப்பக்கம் வர்றதுக்குள்ளே நடுவுல என்ன ஆயுதக்கடை வச்சிருந்தாளா, இறங்கி வாங்கிண்டு வர்றதுக்கு? சர்வாயுதோ பேதஹாங்கிறாரே, மொத்த ஆயுதமும் எங்கேர்ந்து வரும்? இருக்கிறது ஒரு கதை. ஒரு கதையைச் சொல்லிட்டு ஏன் இத்தனை ஆயுதம்ன்னு சொல்றார்ன்னா, பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்தில தெரிவித்தார், அந்த ஒரு கதையைப் பிடிச்சிண்டிருக்க அழகைப் பார்த்தா, மொத்த ஆயுதத்தையும் பிடிப்பன்னு நினைக்கத் தோண்றதாம். அதனால எல்லாம்ன்னு சொல்லிட்டாராம். அடுத்தது சொன்னார். அவன் கதையை எப்படிப் பிடிச்சிருந்தாலும் எனக்குக் கவலை கிடையாது. ஆனால் யாரோ இராமனைப் பற்றின இரகசியத்தை விபீஷணனுக்குச் சொல்லிக் குடுத்திருக்கா. அதுதான் பயந்து போய்ட்டான் சுக்ரீவன். கையை கூப்பினுட்டு, கூப்பின கைக்கு நடுவில கதையை வச்சுனுட்டான். எங்க இராமன் கதைக்குப் பயப்படமாட்டான், வில்லுக்குப் பயப்படமாட்டான், கத்திக்கு பயப்படமாட்டான். ஆனால் யாரேனும் கைகூப்பினார்களேயானால் அதை எதிர்த்து இராமனால் எதுவுமே செய்ய இயலாது. இந்த இரகசியத்தை யாரோ விபீஷணனுக்குச் சொல்லிக் குடுத்துட்டாள்ன்னா. அப்போ அஞ்சலிதான் எல்லா ஆயுதமும். நாம பெருமாளை நோக்கிக் கையைக் கூப்பிடறோம் பாருங்கோ. அவன் கையைக் கூப்பிண்டு, கதையைக் குறுக்க வச்சுண்டானோல்லையோ? கதை ஆயுதமாவே சுக்ரீவனுக்குப் படலே, அஞ்சலிதான் ஆயுதமாப்படறது. ‘ஓ, இவன் இராமனைக் கொன்னுடறதுன்னு வந்துட்டான் போலருக்கே. இந்தக் கூப்பின கையோடு முன்னாடி வந்தால், இராமன் வில்லு கையில இருந்து நழுவி விழுந்துடும். பார்த்து அம்பு விடுவதற்கு அவரால முடியாது.’ நடக்கப் போறதே, இது முடிஞ்சுட்டு சமுத்திர ராஜனிடத்தே சரணாகதி பண்ணப் போறார். அவன் வரமாட்டான். நீ வில்லைக் கொண்டா, அம்பைக் கொண்டான்னு தூக்கிட்டார். பயந்துபோய் அங்கேர்ந்து சமுத்திரராஜன் வந்துருவன். வந்தவுடனே இராமன் என்னமா மாத்தினார், தெரியுமா? அவனைக் கொல்றதுக்காக வில்லை வளைச்சு அம்பைப் பூட்டியாச்சு. அவன் சரணம்ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தவுடனே, ‘சமுத்திரராஜனே, உன் விரோதிகள் யாராவது இருந்தாச் சொல்லு. அவாளைக் கொல்றதுக்காகத்தான் வில்லையே வளைச்சேன்’னுட்டார் அவர். வால்மீஹி பார்த்தார், ‘இராமனும் மாற்றிப் பேசுவன்னு இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன்’ன்னார் அவர். ஏன்னா மாற்றிப் பேசறதுக்கே தெரியாது இராமனுக்கு, ராமோ த்விர்நாபிபாஷதே. இரண்டாவது வார்த்தையே இராமனுக்குத் தெரியாது. ஆனா அங்கயும் அவர் மாத்தறார்ன்னா, சரணம்ன்னு சொல்லிட்டா மொத்தத்தையுமே அவர் விட்டுக்குடுத்துடுவர். ’ஆஸ்ருத பக்ஷபாதி’ன்னு பகவானுக்குப் பேர். நாம வந்து அவர் நடுநிலைமையாளர்ன்னு நினைச்சிண்டு இருக்கோம், அல்ல. அவன் நடுநிலைமையாளன் அல்லன். அவன் ஒரு பக்கமாகத்தான் சாய்வன். தன் திருவடிகள்ல யாரு சரணம்ன்னு சொல்லிட்டானோ, அவன் பக்கம்தான் அவர் பேசுவர். மற்றொருத்தர் பக்கம் பேசமாட்டார். பின்ன சமோஹம், சமோஹம்ன்னு கீதைல சொல்லிண்டே இருப்பர் அவர். சமோஹம் சர்வபூதேஸு ஞ்யாத்வாமாம் சாந்திமிர்ச்யதி, நான் மொத்தப் பேருக்கும் சமம்ங்கிறாரேன்னா, சரணாகதி பண்ண வர்றவாளுக்குள்ள சமம்ன்னு சொல்றார். யாரெல்லாம் சரணம் வர்றானோ, அது பசுவா இருக்கட்டும், மனுஷனா இருக்கட்டும், பட்சியா இருக்கட்டும், சமம். இதைத்தான் அவர் சொல்றாரே தவிர, துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் நான் சமம்ன்னு அவர் சொல்லவேமாட்டார். அப்படி இருந்தா அவனை ஜெயிக்க வச்சுருக்கணுமோல்லையோ? இப்படிப்போய் பெருமாள் சொல்லலாமா, ஒருதலைப் பட்சமா பெருமாள் நடந்துக்கலாமா, ஒரு பக்கம் சாயறாரேன்னா, அவர் ஒருபக்கம் சாயறவன் நான்னு சொல்லிட்டாரோல்லையோ? இனிமே நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமோ? அது என்னமா நீ அவர்கள் பக்கம் நடக்கலாம்ன்னு கேட்டுண்டுருந்து, வாழ்க்கையை வீணே கழிச்சுட்டு, அடுத்த பிறவி எடுக்கறதுன்னா தாராளமா எடுத்துக்கலாம். அதை விட்டுட்டு, அவரோ ஆஸ்ருதர்கள் பக்ஷபாதம்ன்னு சொல்லிட்டார். அந்த ஆஸ்ருதர்கள் கோஷ்டிக்குள்ள ஒரு இடம் கிடைக்கிறதுக்கு வழியைப் பார்த்துட்டு நிம்மதியாப் போய்டலாம். இதை விட்டுட்டு, அதெப்படி அவர் இந்த மாதிரி சட்டம் போடலாம்ன்னு கேட்டுண்டு இருக்கணும்ன்னா, அவர் சட்டத்தை எல்லாம் மாத்தவே போறதில்லே. நம்ம கேள்விக்கு அவர் பதில் சொல்லவும் போறதில்லே. அப்போ கேட்டுக் கேட்டு பொழுதை வீணாக்கறதவிட, பெருமாள் இதான் ஆட்டம்ன்னு சொல்லிட்டா. ‘என் திருவடிகளைப் பற்று. ஏன்னு என்னைக் கேள்வி கேட்காதே. பற்றினவனுக்கு மோக்ஷம் தரேன். ஏன் குடுத்தே, இன்னாருக்குக் குடுத்தே, கேட்காதே. நான் ஆசைப்பட்டவனுக்குக் குடுப்பேன்.’ இதுதான் அவருடைய சட்டதிட்டம். இந்த விளையாட்டுக்கு உட்பட்டு ஆடறதா இருந்தா ஆடலாம். ஆடி ஜெயிச்சு கோப்பையை வாங்கிட்டுப் போகலாம்ன்னா போகலாம். இல்லே, இதென்னமா இந்த விளையாட்டு நடக்கலாம்ன்னா, கேட்டுண்டே இருக்கலாம். இவ்வளவுதான் நடக்கும். பதில் வராது. கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு அடுத்த பிறவி வருமே தவிர, பதில் மட்டும் வரவே வராது. ஒரு மனுஷன் ஏற்படுத்தியிருக்கிற எத்தனையோ சட்டதிட்டங்களை நம்பிக்கையோடு, கேள்வி கேட்காமல் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் பகவான் இதுதான் சரணாகதின்னு சட்டதிட்டம் ஏற்படுத்தி இருந்தா, அதைப் பற்றிட்டு போறதை விட்டுட்டு ஆயிரம் கேள்வி கேட்டுட்டு இருந்தோம்ன்னா, கேட்டுட்டே இருக்க வேண்டியதுதான். இது ஸ்வாதந்திரியத்தினால நாம பேசுகிறோமோ தவிர, ஏத்துக்கறதுக்கு மனசில்லாம நாம பேசுகிறோமே தவிர, உண்மை உறைச்சுதுன்னா ஒருநாளும் கேள்வி கேட்கவே மாட்டோம். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – இராமாயணத்தில் சரணாகதி (2) உபந்நியாசம் – Toronto) April 16 இராமாயணத்தில் சரணாகதிகள்ஸ்ரீஇராமாயணத்தில் இருக்கும் சரணாகதிகளில் 1,3,5 சரணாகதிகள் பலித்தது; 2,4,6 பலிக்கலை. முக்கியமா ஆறு சரணாகதிகள் நடந்திருக்கு. முதல் சரணாகதிங்கறது தேவர்கள் ஸ்ரீநாராயணனிடத்தில் பண்ணினது. ’இராவணனுடைய துன்பம் தாளவில்லை, தேவரீர் பிறந்து எங்களை இரட்சிக்க வேண்டும்.’ இது முதல் சரணாகதி, பலித்தது. அதற்கு அடுத்த சரணாகதி, இராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம் பண்ணி தசரதன் ஊருக்கு அழைச்சிண்டு வந்துண்டு இருக்கார். அப்போ பரசுராமர் கோபத்தோடே வந்தார். என் பிள்ளைகளை விட்டுடு, ஒன்னும் பண்ணாதேன்னு தசரதன் பரசுராமரிடத்திலே சரணாகதி பண்ணுகிறான். பலிக்கலை. பரசுராமர் ஒன்னும் விட்டுடலை. தசரதன் பண்ணின இந்த சரணாகதி பலிக்காமப் போய்டுத்து. இரண்டாவது பலிக்கலை. மூன்றாவது இராமன் காட்டுக்கு கிளம்பிப் போகும் போது, லக்ஷ்மணன் கூட வருவேன்னு பிரார்த்தித்தான். கூடாதுன்னு இராமன் சொன்னார். அப்போ லக்ஷ்மணன் இராமனிடத்திலே சரணாகதி பண்ணி, அவசியம் தேவரீர் நம்மை அழைத்துப் போக வேண்டும் என்கிறார். பலிச்சுடுத்து. நான்காவது சரணாகதி, பரதன் சித்திரகூடத்துக்கு வந்து, இராமனிடத்திலே வேண்டி திரும்ப நாட்டுக்கு வரவேண்டும் என்று இரைஞ்சினான். அப்போ சரணாகதி பண்ணுகிறான். ஆனா இராமன் திரும்பி வரலை. அந்த சரணாகதி பலிக்கலையோல்லையோ? ஐந்தாவது சரணாகதி, விபீஷணன் இராமனிடத்திலே பண்ணின சரணாகதி. அது பலித்தது. ஆறாவது சரணாகதி, இராமனே சமுத்திர ராஜனிடத்திலே பண்ணின சரணாகதி. சமுத்திரமே எனக்கு வழிவிடு, இங்கேர்ந்து நான் அக்கரைக்குப் போகணும்ன்னு இராமன் கேட்டாரோ இல்லையோ? ஆனா அது பலிக்கவே இல்லை. வில்லை எடுத்து, இந்த அடி உதவராப்போலேன்னு சொல்லுவாங்க பாருங்கோ, அந்த மாதிரிப் பண்ணினதும்தான் வந்தானே தவிர சமுத்திர ராஜன், ஒழுங்கா காலப்பிடிச்சுண்டு கேக்கறச்சே அவன் வரவே இல்லே. வில்லை எடு, இவனை இப்படியே வற்றடிச்சிருவோம்ன்னு இராமன் கோபப்பட்டார். அப்போதான் சமுத்திரம் வந்தது. அப்போ இராமன் சமுத்திரராஜனிடத்திலே சரணாகதி பண்ணினது, ஆறாவது சரணாகதி. அதுவும் பலிக்கவில்லை. குறிப்பிட்ட சரணாகதிகள் பலிப்பதற்கும், மற்றவை பலிக்காததற்கும் ஏது காரணம்? இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், சரணாகதி என்றால் என்ன? சரணாகதிக்கு என்ன தேவை? சரணாகதி பண்ணுபவனுக்கு என்ன தேவை? யார்கிட்ட சரணாகதி பண்ணப்படுகிறதோ, அவனுக்கு என்னென்ன தேவை? பண்ணப்படும் செயலுக்கு என்னென்ன தேவை? இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சரணாகதாள் – சரணாகதி பண்ணுபவர்கள்; சரண்யன் – யார்கிட்ட சரணாகதி பண்ணப்படுகிறதோ, அவன்; சரணாகதி – பண்ணப்படும் செயல். மூன்று பேருக்கும் லக்ஷணம் சொல்ல வேண்டுமோல்லையோ? Definition-ங்கிறது வேறே, Explanation-ங்கிறது வேறே. இங்க Definition வேணும். இந்த மூன்றுக்கும் அடையாளம் (சொரூப நிரூபக தர்மம்) வேணும். சரணாகதி என்கிற சொல்லுக்கு பொருள் பார்ப்போம். ‘சரணமிதி ஆகதிஹி சரணாகதிஹி’. சரணம் என்று வருதல் சரணாகதி. ஆகதிஹி – வருதல். அப்போ சரணம் என்றால் என்ன என்று கேள்வி வரும். சரணம் என்பது மூன்று பொருள்களில் வரும். உபாயம், க்ருகம், ரக்ஷணம், இந்த மூன்று பொருள்களிலே சரணம்ங்கிற சொல் வரும். உபாயம்ன்னா வழின்னு அர்த்தம். க்ருகம்ன்னா வீடுன்னு அர்த்தம் (உ-ம்) பறவைகள் சரணாலயம். ரக்ஷணம்ன்னா காத்தல்ன்னு அர்த்தம். இவற்றைப் பார்க்கும் போது, ‘உபாயம்’ என்ற அர்த்தத்திலேயே இங்கு சரணம் வருகிறது. அப்போ சரணாகதி என்றால், ‘உபாயம் என்று வருதல்’. இப்போ உபாயம்ன்னா என்னன்னு பார்க்கணும். ’உப அயதே இதி உபாயஹா’. உப – சமீபத்தில்; அயதே – அழைத்துச் செல்லுகிறது, எதுவோ அது உபாயம். அப்போ எதற்கு சமீபத்தில் அழைத்து செல்லுவது? எங்கு, எப்படி, யாரை, யாருக்கு சமீபத்தில், இந்தக் கேள்விகளெல்லாம் பிறக்கும். பலத்துக்கு சமீபத்தில். பலத்துக்குன்னா எந்தப் பலத்துக்கு? பலம் (புருஷார்த்தம்) மூன்று வகை, ஐஸ்வர்யம், கைவல்யம், பகவல்லாபம். இதிலே ஐஸ்வர்ய, கைவல்ய பலத்துக்கு அழைத்துச் செல்லாமல், பகவல்லாபமான மோட்ஷ பலத்துக்கு அருகில் எது அழைத்துச் செல்கிறதோ, அது உபாயம். அப்போ மோட்ஷமாகிற பலத்துக்கு அருகில் அழைத்துப் போவது உபாயம். அப்போ மோட்ஷத்துக்கு அருகில் அழைத்துச் செல்லுவான் என்ற நம்பிக்கையோடு வருதல் சரணாகதி. சரண்யன் – மோட்ஷமாகிற பலத்துக்கு அருகிலே அழைத்துப் போபவன் யாரோ அவன் சரண்யன். சரணாகதன் – மோட்ஷமாகிற பலத்தை அடைய வேணும் என்று ஆசைப்படுபவன் யாரோ அவன் சரணாகதன். சரணாகதி – மோட்ஷமாகிற பலத்தை அடைவிக்கும் செயல் யாதோ அது சரணாகதி. அப்போ என்ன தோன்றுமென்றால், சரண்யன் யாராக இருக்க வேண்டும்? சரணாகதன் யாராக இருக்க வேண்டும்? அவர்களுக்குண்டான லக்ஷணங்கள் எவை? சரணாகதியின் முக்கிய பொருளைப் பார்ப்போம்.
ப்ரபத்தி என்றாலும், சரணாகதி என்றாலும், ந்யாஸம் என்றாலும் ஒரே பொருளைத்தான் குறிக்க வந்தது. நான் வந்து ஒன்றை அடையணும்ன்னு ஆசைப்படுறேன். அதாவது மோட்ஷம் அடையணும்ன்னு ஆசைப்படுறேன். அதை அடைவதற்கு என்கிட்ட ஏதானும் இருக்கான்னு தேடிப்பார்க்கிறேன். ஒன்னும் வழியில்லேன்னு புரிஞ்சு போச்சு. ஏதேதோ வழி இருக்கறதா நினைச்சிண்டேன். ஒன்னொன்னையும் பத்து பத்து வருஷம் பண்ணிப் பார்த்தேன். ஒன்னும் பிரயோஜனமில்லேன்னு தெரிஞ்சுனுட்டேன். அநந்யசாத்யே ஸ்வாபிஷ்டே; ஸ்வ – தன்னுடைய, அபிஷ்டம் – ஆசைப்பட்டது, அநந்யசாத்யே – வேறு எந்த வழியாலும் சாதிக்க இயலாது, என்கிற எண்ணம் வந்து விட்டால், மஹாவிஸ்வாஸ பூர்வகம் – பெருத்த விஸ்வாஸத்தோடே, உறுதியான நம்பிக்கையோடேகூட, ததேக உபாயதாயாஞ்சா – அதை அடைவிக்கும் உபாயமாக தேவரீரே இருப்பீர், என்று பெருமானிடத்திலே பிரார்த்திக்கும் எண்ணம் சரணாகதி. அப்போ முதல் சந்தேகம் என்ன வரும்ன்னால், அப்போ பக்தி மார்க்கத்திலேயோ, கர்ம யோக மார்கத்திலேயோ, ஞான யோக மார்க்கத்திலேயோ, பெருமானே மோட்க்ஷம் குடுன்னு கேக்கறதில்லையான்னா, உண்டு, பெருமான்தான் மோட்க்ஷம் குடுக்கப் போறார். ஆனா அதிலே ஒரு வித்தியாசம் இருக்கு. என்ன வித்தியாசம்ன்னால், உபாயம் என்பதும், பலத்தை குடுப்பவரும் எப்போதும் வேறு வேறாக இருக்கும். உதாரணம் பார்ப்போம். நான் ஒரு நூலகத்துக்கு போக வேண்டும், வழி தெரியாது. ஒருத்தர் வந்தார், ‘வா, உன்னைக் கூட்டிப் போகிறேன்’னுட்டு கூட்டிட்டுப் போனார். கூட்டிடுப் போய் நூலகத்து வாசல்ல விட்டுட்டார். அவர் உபாயம். இப்போ நூலகத்து அதிகாரி கதவைத் திறந்து, எனக்கு புஸ்தகம் குடுத்து ‘இந்தா படி’ன்னு சொல்லணும். அவர் பலத்தைக் குடுப்பவர். நூலகத்து அதிகாரி கதவை சாத்திட்டார்ன்னா, அழைச்சிட்டுப் போனவர்னாலே எனக்கு எந்த ப்ரயோஜனமும் இல்லே. அதேபோல் அந்த அழைச்சிட்டுப் போறவர் இல்லேன்னா, நான் நூலகத்துக்கு அருகிலேயே போயிருக்க முடியாது. இதேபோல் பக்தி மார்க்கம் உபாயம், பகவான் மோட்சத்தைக் குடுப்பவர் (அதிகாரி). பக்தி மார்க்கம் மோட்சத்துக்கு அருகிலே அழைத்துச் செல்லும், அவ்வளவே. அதுவே மோட்சம் குடுத்துராது. பகவான்தான் குடுக்க வேண்டும். இதுவே சரணாகதியில் என்ன ஆகிறதென்றால், மோட்சத்தை குடுப்பவர் அவர்தான். உபாயமும் அவரேதான். இங்க ரெண்டு வேலையையும் அவரே பார்க்கிறார். சாத்யோபாயம், சித்தோபாயம். ’சாத்ய உபாயம்’ன்னால், என்னாலே சாதிக்கப்படுவது. என்னாலே சாதிக்கப்படுகிற உபாயம், பக்தி. அப்போ பக்தி மார்க்கம், சாத்யோபாயம். என் ப்ரயத்தனத்தாலே சாதிக்கப்படுகிற உபாயம் சாத்யோபாயம். சித்தோபாயம். சரணாகதி என்பது சித்தோபாயம். ஏனெனில் இங்கு உபாயம் ஏற்கனவே இருக்கிறது. என் ப்ரயத்தனத்தாலே சாதிக்கப்படுவது கிடையாது. அதனாலே ‘சித்தம்’. என் ப்ரயத்தனத்தாலே சாதிக்கப்படாமல், தானே இருப்பது சித்தம். சாத்யோபாயம்ங்கிறது சிரமம். சித்தோபாயம்ங்கிறது சுலபம். ஏனென்றால் சாத்ய உபாயம்ன்னாலே பொறுப்பு என் தலைல விழுந்துடுத்தோல்லையோ? அப்போ நான் கஷ்டப்பட்டுத்தான் சாதிச்சாகனும். ஆனா சித்தோபாயம்ன்னால், ஒரு பொறுப்பும் இல்லையே, அவர்தான் காத்திண்டே இருக்காரே. அதனாலே சித்தோபாயம் சுலபம். அப்போ சரணாகதர்கள் எல்லாரும் பக்தர்கள் இல்லையான்னா, உண்டு. அவர்களும் பக்தர்களே. பக்தி என்றால் என்ன?
(பகவத்கீதை - 9.34) நெஞ்சும், வாக்கும், உடலும் பகவானிடத்திலேயே லயித்திருப்பது பக்தி. அவ்வளவுதானே? சரணாகதன் ஒவ்வொருத்தனுக்கும் நெஞ்சும், வாக்கும், உடலும் பகவானிடத்திலேயேதான் லயித்திருக்கும். அப்போ அவருக்கும் பக்தி உண்டு. அப்போ என்ன வித்தியாசம்ன்னால், சரணாகதன் பக்தி மார்க்கத்தை உபாயமா ஏத்துக்கமாட்டார். பகவானை உபாயமா ஏற்றுண்டு பற்றிண்டுவர். அப்போ பக்தி எதுக்கு பண்ணுவர்ன்னா, பகவானை உபாயமாகப் பற்றி, மோட்ஷம் குடுன்னு கேட்டுட்டு, தரேன்னு பெருமாள் ஒத்துண்டுடராரோ இல்லையோ? ஆனா ஒத்துண்ட அடுத்த நிமிசம்லாம் மோட்க்ஷம் தரமாட்டார். சரணாகதின்னு பண்ண பிற்பாடு இந்த வாழ்க்கையினுடைய முடிவில மோட்க்ஷம் குடுப்பர். இன்னொரு பிறவி தரமாட்டார். அந்தத் திருப்திக்குத்தான் வருகிறோமே தவிர, பண்ணின உடனேயே முக்தின்னு சொன்னால் யாரும் வர மாட்டா. அப்போ சரணாகதி பண்ணினால், தேகத்தின் முடிவில் முக்தி கிடைக்கிறது. அப்போ சரணாகதி பண்ணினதிலேர்ந்து, வாழ்க்கை முடியற வரையிலான இடைப்பட்ட காலத்தில் என்ன பண்றது? அப்ப பண்ணுவதுதான் பக்தி. அதைப் பண்ணினதுனால நான் மோட்சம் போகப் போறதில்லே. பகவானிடத்தில சரணாகதி பண்ணிட்டேன், அவர் அனுக்கிரகத்தால மோட்சத்துக்குப் போகப் போறேன். போற வரைக்கு நல்ல பொழுதை நான் போக்கியாகனும். அதற்காக பக்தி பண்றேன். இப்படி இருக்கும் போது, அந்த பக்தி உபாயமாக ஆகவே போறதில்லே. இதிலே என்ன லாபம்ன்னால், இந்த பக்தியை நான் கொஞ்சம் பண்ணலாம், பண்ணாம விடலாம், ஒரு குற்றமுமே வராது. ஏன்னா, நான் ஒன்னும் இதை உபாயமாக்கி பெருமாள்கிட்ட கேக்கலையோ இல்லையோ? பக்தி மார்க்கம், கரணம் தப்பினால் மரணம். தப்பு நேர்ந்தா போச்சு, அவ்வளவுதான். பலம் கிடைக்கப் போறதில்லே. ஆனா சரணாகதியில் இந்த அபாயம் இல்லை. அதனாலே பக்தியைச் சரணாகதன் வெகு சுலபமாகப் பண்ணுகிறான். மேலும் கண்ணன் கீதையில சொல்லியிருக்கிற பக்தி யோகம், உபநிஷத்துக்களிலே சொல்லப்பட்டிருக்கிற பக்தி மார்க்கம், ரெண்டும் ஒன்றுதான். இவற்றை பிராம்மண, ஷத்திரிய, வைசிய, இந்த மூன்று குலத்தார்தான் செய்ய இயலும். நான்காவது வர்ணத்தவர்களாலே அது செய்வதற்கு இயலாது. பின்ன எப்படி நான்காவது வர்ணத்தவர்கள் மோட்க்ஷம் போலாமா, வேணாமான்னா, தாராளமாகப் போகலாம். அது அவர் சொல்லவே இல்லை. ஆனால் பக்தி மார்க்கத்தினால மோட்க்ஷம் கிடைக்காது. சரணாகதி மார்க்கத்தாலே மோட்க்ஷம் கிடைக்கும். அப்போ சரணாகதி நாலு வர்ணத்தவர்களுக்கும் பொது. பக்தி மூன்று வர்ணத்தவர்களுக்குத்தான் பொது. ஏன் அந்த மாதிரி ஆயிடுத்துன்னு சொல்றேன் கேளுங்கோ. காரணம் தெரியணுமோல்லையோ? பெருமாளிடத்திலே ஒரு குறை நாம சொல்லிடவே முடியாது. இன்னார் மோட்க்ஷத்துக்கு வரவே கூடாதுன்னு அவர் சொல்லவே மாட்டார். இன்னன்னார் இந்தந்தப் பாதையில வாங்கோன்னு சொல்லுவர். அதைத்தான் அவர் சொல்லுவரே தவிர, யாருக்கும் முக்தி தரேன். ஆனா அவன் போற பாதையிலதான் நான் போவேன்னு பிடிவாதம் பிடிக்காதே. இதைத்தான் அவர் சொல்றார். இன்னொன்னும் உண்டு, ஸ்த்ரீகள் வேத மந்திரங்களையோ, உபநிஷத்துக்களையோ, காயத்ரி உட்பட, சொல்லுவது கூடாது. சொன்னால் குடும்பத்துக்கு ஆகாது. இதை பெரிய, பெரிய ஆச்சார்யர்களெல்லாம் ரொம்ப விசாரம் பண்ணி பார்த்துட்டு, சொல்லியிருக்கிறார்கள். காரணம் என்னன்னா, பக்தி யோகம் பண்ணனும்ன்னால், கர்ம, ஞான யோகங்களைப் பண்ணினால்தான் பக்தி மார்க்கத்துக்கே வரமுடியும். கர்ம, ஞான யோகங்களைப் பண்ணனும்ன்னா சாஸ்திரம் கற்க வேண்டும். அப்போ வேதம் கற்பதற்கு எவனுக்கு யோக்யதை இருக்கிறதோ, அவன்தான் பக்தியோகத்தைப் பண்ணவே முடியும். இது அங்க போக முடியும். வேதத்தை கத்துண்டவனாலதான் கர்ம, ஞான யோகங்களைப் பண்ண முடியும். கர்ம, ஞான யோகங்கள் இருந்தால்தான் பக்தியே வரும். பக்தி, அப்போ இன்னன்னார் மட்டும்தாம் பண்ண முடியும்ன்னு ஆயிடறது. ஆனால் சரணாகதி மார்க்கத்தில் இந்த பேச்சுக்கே இடமில்லை. ஆணும் பற்றலாம், பெண்ணும் பற்றலாம். நான்கு வர்ணத்தவர்களும் பற்றலாம், மனிதரும் பற்றலாம், விலங்கும் பற்றலாம், பறவையும் பற்றலாம். ஜடாயு மோட்ஷத்துக்குப் போச்சு, பறவைக்கு மோட்ஷம். கஜேந்திரன் மோட்ஷம் எய்தினான், யானைக்கு மோட்ஷம். திரௌபதி மூன்று நாட்களின் போது சரணாகதி பண்ணியிருக்கா. திரௌபதி ஸ்நதயாயன்னே சரணாகதி பண்ணுத்துன்னு பிள்ளை லோகாச்சார்யர் தெரிவிக்கிறார். ஸ்நதயாயன்னேன்னால், தான் குளிக்காமல் இருக்கும் நாட்களில் சரணாகதி பண்ணியிருக்கிறாள். அப்படிங்கிற அளவுக்கு எடுத்துட்டு போய்ட்டா இப்போ. அப்போ யாரும் பண்ணலாம், எப்போதும் பண்ணலாம், எந்த நிர்பந்தமும் கிடையாது. எந்த நியமமும் தேவையில்லை. அது சரணாகதிக்கு உண்டான ஏற்றம். இப்போ ஒரு பதினெட்டு மாடி கட்டடம்ன்னு வச்சுக்கங்கோ. படிக்கட்டு கட்டி வைச்சுருக்கா. பக்கத்துலே ‘Elevator / Lift’ அப்படின்னு ஒன்னு வச்சுருக்காளோல்லையோ? அதுல ஏறி உக்காந்துண்டு பொத்தான அமுக்கினாப் போதும், கிடுகிடுன்னு என்னை மாடிக்குக் கொண்டு போய் விட்டுடும். நான் வேணும்ன்னா, அது பிடிக்காம மாடிப்படில மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஏறி வரலாம். இப்போ இந்த ரெண்டு பேரும் மொட்டைமாடில பேசிக்கிறா. நீ வந்த மார்க்கம் பதினெட்டு மாடியை ப்ரயத்தனப்பட்டு நீ ஏறிக் கடந்தது. சாத்யோபாயம். நான் வந்தது சுலபமா வண்டில ஏறி உட்கார்ந்துண்டு வந்து சேர்ந்தது. சித்தோபாயம். ரெண்டு மார்க்கம். அடைந்தது ஒரே இடம். இதில் ஒரே ஒரு இடைஞ்சல். என்னன்னா, நாம வந்து அந்த Liftக்குள்ள ஏறி உட்கார்ந்துட்டோம்ன்னு வச்சுக்கங்கோ, உட்கார்ந்தப்புறம் நம்ம கையில ஒன்னுமே கிடையாது. கதவை சாத்தியாச்சு. கதவை சாத்தினப்புறம் அது விட்ட வழி. குறுக்க நின்னா நின்னது; கதவைத் திறக்க முடியாது; வெளிய வரதுக்கு முடியாது; அப்போ நம்மை மொத்தமா அதுகிட்ட சமர்ப்பிச்சுடணும். சமர்ப்பிச்சாத்தான் மேல நாம போயி சேரது நடக்கும். அதேபோல பகவானிடத்தில நம்மைச் சமர்ப்பித்து, அவனிடத்தில விஷ்வாஸம் இருந்தாத்தான் சரணாகதி பலிக்கும். ஏன்னா இது மொத்தமும் அங்க போயிடுத்து. ஏன் போகணும்ன்னு கேட்டா, என்னால வேற எந்த வழியின் மூலமாகவும் இதை (மோட்ஷத்தை) அடைய முடியாதுங்கிற முடிவுக்கு வந்துட்டேனோல்லையோ? அதனாலதான சரணாகதிக்கே வரேன். இப்ப பகவான்கிட்ட வந்துட்டு, நான் ஒரு கை குடுக்கறேன், நீ ஒரு கை குடுன்னா அவர் ஒத்துக்கமாட்டார். அப்படின்னா நீயே கை வச்சுக்கோ, என்னைக் கூப்பிடாதே. என்னை ரட்சிக்கணும்ன்னு கூப்பிட்டியானா உன் கையை விட்டுடணும். உன் கை ஒன்று, என் கை ஒன்றுன்னு இந்த கூட்டு வியாபாரம் எல்லாம் பகவானுக்கு எண்ணமே கிடையாது. என்னைக்கும் அவரது தனி வியாபாரம் தானே தவிர, ஒன்னு நீ பண்ணனும்ன்னா, உன் பாட்டை நீ பார்த்துக்கோ. இல்லே உன் பாட்டை என்கிட்ட விட்டுடு. நீ பாதி, நான் பாதின்னா கடைசில எந்தப்பக்கம் போறோம்னே தெரியாது. அதனாலே பெருமானுடைய திருவடிகளே சரணம், அதுவே உபாயம்ன்னு பற்றினால், நம்முடைய முயற்சி அதில் இருக்கவே கூடாது. ஒரு யானை மேல ஏத்தி என் குழந்தையை ஒரு சுத்து சுத்திட்டு வரணும்ன்னு ஆசை. இப்போ எங்கேயாவது மக்கள் கூடுகிற இடத்துல பார்க்கலாம். யானையை யானைப் பாகன் ஓட்டிண்டு வருவர். அதுல குழந்தை ஏறணும்ன்னு அடம்பிடிக்கும். இப்போ யானை மேல குழந்தையை எப்படி ஏத்தறது? நான் வந்து கீழே இருந்து குழந்தையை மேல தூக்கிவிட்டு, யானைப்பாகன் மேலேர்ந்து குழந்தையைத் தூக்கி, இதுக்குள்ள குழந்தை வீர்,வீர்ன்னு அலறி, அது கை,காலெல்லாம் உதறி, இது இத்தனை பாடு நடந்துரும். கடைசில ஏறி உட்கார்ந்த உடனே, அது அழுது பயந்து ரெண்டே நிமிஷத்துல கீழ இறங்கிரும். இது பல தரம் பார்த்திருக்கோம். மற்றொரு வழி என்னன்னா, இந்த ஒரு கஷ்டமுமே வேண்டாம். நான் தூக்கிக் குடுக்கற முயற்சியும் வேண்டாம்; பாகன் கையை நீட்டற முயற்சியும் வேண்டாம்; யானை நகர்ந்துடுமோங்கிற பயமும் வேண்டாம். குழந்தை கை,கால உதைச்சுடுமோங்கற பயமும் வேண்டாம். இது ஒன்னுமே வேண்டாம். பாகனிடத்திலே சொல்லிட்டீள்ன்னு வச்சுக்கங்கோ, அவர் காலைத் தொங்கப் போட்டிருக்கற இடத்திலே, யானையினுடைய காதுக்குப் பக்கத்திலே, ஒரு குத்து குத்துவர். குத்தினா, யானை முழங்காலை மடிச்சிண்டு கீழ உக்காரும். கொஞ்சம் தன்னையே தாழ்த்திக்கும். தாழ்த்திண்டு தன் தும்பிக்கையால இடுப்புல ஒரு சுத்து சுத்தி, அப்படியே மேலே தூக்கி உக்கார வச்சுரும். இதுல அப்பாவும் ஒண்ணும் பண்ண வேண்டாம், பாகனும் ஒண்ணும் பண்ண வேண்டாம், குழந்தையும் ஒண்ணும் பண்ண வேண்டாம். எதுவுமே பண்ண வேண்டாம். அவ்வளவு லாவகமா குழந்தையைத் தூக்கி உட்கார வச்சுருமோல்லையோ? ஆனா அதுலே ஒரே ஒரு ஆபத்து. வேற எந்த கஷ்டமமுமே இல்லே, ஒண்ணே ஒன்னு, அது தூக்கற சமயத்துக்கு யானை ஒழுங்கா தூக்குமான்னு சந்தேகப்பட்டு, நான் குறுக்க கையைக் கொண்டுபோய் வச்சாலோ, இல்ல பாகன் சந்தேகப்பட்டு கையை வச்சாலோ, இல்ல குழந்தை திடீர்ன்னு கையைக் காலை உதைச்சு கீழ வரணும்ன்னு பார்த்தாலோ, தூக்கின வேகத்துல சுத்தி அடிச்சுரும். அப்படியே தூக்கின வேகத்துல சுழட்டி அடிச்சரதோல்லையோ? அதனால் அந்தக் குழந்தை யானையினிடத்தில சமர்ப்பிக்கப்பட்டால்தான் அது தூக்கும். இல்லேன்னா அது வேலைக்கு வரவே வராது. இல்லேன்னா நீங்களாப் பார்த்து எப்படி மேலே வர்ரீளோ, மேல ஏறிக்கங்கோ. இதேபோல் சரணாகதிங்கிறது முதல் படியாக இல்லாமல், யானையினிடத்திலே சமர்ப்பிக்கப்பட்டு, யானை மேல ஏறி உட்கார்ந்துக்கிறோமோல்லையோ? அது சரணாகதி மார்க்கம். ஏன்னா, பகவானுடைய திருவடிகளைப் பற்றி, அதன் மூலமாகவே மோட்க்ஷத்துக்குப் போதல். இன்னொரு திருஷ்டாந்தம் பார்ப்போம். ரெண்டு பெரிய மலை இருக்கு. சாளக்கிராமம் திவ்யஷேத்திரம் இருக்கு. இந்தப்பக்கம் அன்னபூர்ணான்னு ஒரு மலை, அந்தப்பக்கம் தௌலகிரின்னு ஒரு மலை. இது ரெண்டுத்துக்கும் நடுவுலதான் உலகத்திலேயே ஆழமான பள்ளத்தாக்கு இருக்கு. அதுலதான் கண்டகி நதி ஓடறது. இதுலே ஒரு பெரிய சிங்கம். அந்த சிங்கம் இந்த மலை முகட்டிலேர்ந்து அந்த மலை முகட்டுக்குத் தாவும். அவ்வளவு சக்தி படைத்த சிங்கம். இந்த மலை முகட்டிலே ரெண்டு புழு நின்டிண்டிருக்கு. ஒரு புழு இன்னொரு புழுகிட்ட பேசறது. ஒரு புழு சொல்லித்து, ‘நான் அந்த மலை உச்சிக்குப் போறதா இருக்கேன்’னது. இந்த இன்னொரு புழுவுக்கு ஒரே சிரிப்புத் தாங்கலே. ஏன்னா ஒரு புழுவுக்கு ஆயுசு பத்து நாள். அவ்வளவுதான் இருக்கப்போறது. அது ஒரு நாள் முழுக்க ஊர்ந்ததுன்னா பத்தடி போகும். அப்போ ஒரு புழு ஆயுசுல நகர்ந்தா நூறடி நகரலாம். இந்த மலையோட உசரம் 24,000 அடி. அந்த மலையோட உசரம் 25,000 அடி. இப்படி இருக்கறச்சே இந்தப் புழு என்னைக்கு இறங்கி, என்னைக்கு இன்னொரு பக்கம் ஏறிட முடியும்? ‘நீ என்ன வேடிக்கை பண்றே?’ அப்படின்னு பக்கத்துப் புழு கேட்டுது. ‘நீ வேணா பாரேன், நான் அந்த மலை உச்சிக்குப் போறேனா இல்லையான்னு பார்’, இந்தப் புழு சொல்லித்து. ரெண்டும் வேடிக்கை பார்த்துண்டே இருக்கறச்சே, இந்த சிங்கம் இங்கேர்ந்து அங்க தாவறதுக்குத் தயாராச்சு. அப்போ இந்த சாமர்த்தியக்காரப் புழு என்ன தெரியுமா பண்ணித்து? ஓரடி நகர்ந்து போய், சிங்கத்தினுடைய கால்ல ஏறி உட்கார்ந்துடுத்து. உட்கார்ந்த உடனே உறுமிண்டு, சிங்கம் தாவிடுத்து. இந்த மலையிலேர்ந்து அந்த மலைக்கு தாண்டியாச்சு. தாண்டி அங்க போய்ட்டு, புழு கால்லே இருந்து ஓரடி கீழ இறங்கிடுத்து. இறங்கிட்டு அந்தப்பக்கம் இருக்கிற புழுவைப் பார்த்து, ‘நான் வந்துடுவேன்னு சொன்னேன், நம்பினியா? இப்போ நான் வந்துட்டேன் பார்’ அப்படின்னு கேட்டது. அந்தப்புழு சொன்னது, ‘இது என்ன தப்பாட்டமா இருக்கு. நீ இறங்கி, அந்தப்பக்கம் போறதா நான் நினைச்சிண்டு இருந்தேன். இதென்ன நீ இப்படி போய்ட்டியே’ன்னு கேட்டது. ‘நான் அப்படி சொல்லவேயில்லையே. அந்த மலை உச்சிக்குப் போகப்போறேன்னு சொன்னேனே தவிர, நான் இறங்கிப் போகப் போறேன்னு உன்கிட்ட எப்பவாவது சொன்னேனா?’ இப்போ நான் இறங்கி அடுத்த மலை உச்சிக்குப் போயிருந்தால் அது சாத்யோபாயம். அது பக்தியோகத்தைப் போலே. இந்த சிங்கம் இருக்கே, அதுதான் நரசிம்ஹப் பெருமாள். அவருடையை திருவடித் தாமரைகளையே உபாயம்ன்னு பற்றினால், அது சித்த உபாயத்தைப் போலே. அதனாலே இது உன் ப்ரயத்தனத்தாலே நடக்கறதா, இல்லே அவன் ப்ரயத்தனத்தாலே நடக்கறதா. நாம ப்ரயத்தனப்பட்டால் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். அவர் அனுக்கிரகிச்சார்ன்னா, நடந்தே தீரும். அதனாலதான் சுலபமா அவனையே பற்றுவோம்ன்னு சொல்லுகிறார்கள். இதுல ‘மர்க்கடகிஷோர நியாயம்’, ’மார்ஜ்ஜார கிஷோர நியாயம்’ன்னு ரெண்டு. ஸ்வகதஸ்வீகாரம், பரகதஸ்வீகாரம்ன்னு சொல்லுவர்கள். ஸ்வகதஸ்வீகாரம், நாம போய் பகவானைப் பற்றுதல். பரகதஸ்வீகாரம், அவன் நம்மைப் பற்றிக் கொள்ளுதல். இது குரங்கு-குரங்குகுட்டி, பூனை-பூனைக்குட்டி. குரங்குகுட்டி தாய்க்குரங்கைப் பிடிச்சுக்கும். தாய்க்குரங்கு தன் உடம்பைப் பிடிச்சிருக்கிற குட்டிக்குரங்கோடே, இந்த மரக்கிளையிலேர்ந்து அந்த மரக்கிளைக்குத் தாவும். இது ஒரு பக்கம். இன்னொன்னு, பூனை குட்டி போடும். அந்த பூனைக்குட்டியை தன் வாயிலே கவ்விக்கும். நமக்கு பயமாயிருக்கும், ஆனா அந்தக்குட்டிக்கு ஒன்னுமே பண்ணாது. ஒரு பக்கம் உடம்பு கிடக்கும், ஒரு பக்கம் தலை கிடக்கும். இப்போ இது ரெண்டிலே எது நழுவுவதற்கு வாய்ப்பு தெரியுமா? இந்தக் குரங்குக்குட்டி குரங்கைப் பிடிச்சிண்டிருக்கோல்லையோ, அது எப்பவாவது நழுவினா, தாவிண்டிருக்கிற குரங்கால ஒன்னுமே பண்ண முடியாது. இது கீழ விழுந்தது விழுந்ததுதான். அது தாவுற வேகத்தில இதைப் பிடிச்சிக்கவே முடியாது அதாலே. அதே இந்த தாய்ப்பூனை, குட்டிப்பூனையைப் பிடிச்சிண்டிருக்கு பாருங்கோ, பிடியை விடவே விடாது. ஏன்னா அதுங்கிட்ட இருக்கோல்லையோ பிடி? குழந்தைக்கு வேலையே கிடையாது. இப்போ முதல்ல சொன்னது நாமா பகவானைப் பற்றிக் கொள்வதற்குப் போறது. ஆனா அடுத்துச் சொன்னது, பகவான் நம்மை அனுக்கிரகிக்க வருதல். அதிலே எப்போதும் கை நழுவவே நழுவாது, என்று சரணாகதிக்குண்டான ஏற்றத்தைச் சொல்லுகிறார்கள். சரணாகதி பண்ணுபவனுக்கு என்ன தேவை? ஏது முக்கியமான தேவைன்னா, மோட்க்ஷத்துக்குப் போறதுக்கு என்கிட்ட ஒன்னுமில்லையேங்கற சோகம் இருக்கணும். இருந்தாத்தான் சரணாகதி பண்ணுவதற்கு வரவே முடியும். ஏன்னு யோசிச்சு பாருங்கோ.
(பகவத்கீதை – 18.06) -என்று கண்ணன் சொல்றாரோல்லையோ? மா ஸுச: - சோகப்படாதே. இப்போ ஒரு ஸ்லோகத்துல ஒருத்தரைப் பார்த்து சோகப்படாதேன்னு சொல்லணும்ன்னு வச்சுக்கங்கோ, அவன் சோகப்பட்டிருக்கணும். அப்போதானே நான் சோகப்படாதேன்னு சொல்லுவேன். அர்ஜுனன் சோகப்பட்டிருக்கிறான். அவனைப் பார்த்துக் கண்ணன் சோகப்படாதேன்னு தெரிவிக்கிறார். அப்போ என் திருவடிகளிலே சரணாகதி அனுஷ்டிப்பாய், சோகப்படாதே, அப்படின்னா என்ன பொருள்? அப்போ, சரணாகதி பண்ணுவதற்கு முன்பாக சோகம் இருக்க வேண்டும், சரணாகதி பண்ண வேண்டும், பண்ணின பின்பு சோகம் விலகிவிட வேண்டும். இந்த மூன்றுதான் அந்த ஸ்லோகத்திலேர்ந்து நாம் தெரிஞ்சுக்க வேண்டியது. இன்னொன்னு முக்கியம், இந்த ஸ்லோகத்தை நாம எப்படி அர்த்தம் பண்ணிடுவோம்ன்னா, ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – எல்லா தர்மங்களையும் விடு; மாமேகம் ஸரணம் வ்ரஜ – என்னையே எல்லா தர்மமாகவும் பற்று; அஹம் – நான்; த்வா – உன்னை; ஸர்வபாபேப்யஹா – என்னை அடைவதற்கு தடங்கலாக உள்ள எல்லாப் பாபங்களிலிருந்தும்; மோக்ஷ்யயிஷ்யாமி – விடுவிக்கிறேன்; மா ஸுச: - சோகப்படாதே. இந்த ஸ்லோகத்தைப் பார்த்தால் எப்படித் தோணும்ன்னால், பெருமானுடைய திருவடிகளிலே சரணாகதி பண்ணிடலாம், மற்ற எல்லா தர்மத்தையும் விட்டுடலாம், சோகப்படாதேன்னு பகவான் சொல்றார். வாஸ்தவம். ஆனா இந்த ‘சோகப்படாதே’ன்னு சொல்றது ஒரு அபிப்ராயம் சொல்றாப்லேன்னு நாம நினைச்சிண்டு இருக்கோம். அப்படி அல்ல. மாமேகம் ஸரணம் வ்ரஜ, அப்படிங்கறது விதி. விதின்னா பண்ணித்தான் ஆகணும்ங்கிறது. அவர் நம்மைப் பார்த்து, ‘என்னுடைய திருவடிகளை பற்றுவதானால் பற்று’, இப்படியெல்லாம் அவர் சொல்லலை. இதில் மூன்று விதிகள் இருக்கு. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய – எல்லா தர்மங்களையும் விடு. முதல் விதி. நீ ஏதேதோ மார்க்கங்களைப் பற்றிக் கொண்டு, என்னையும் பற்ற முடியாது. நீ எந்தெந்த மார்க்கங்களை உபாயம்ன்னு நினைச்சிண்டு இருக்கியோ, அது அத்தனையும் விட்டுடணும். மாமேகம் ஸரணம் வ்ரஜ – என் திருவடிகளை உபாயமாகப் பற்று. இது இரண்டாவது விதி. இந்த ஸ்லோகத்திலே ரெண்டு விதி இருக்கறதா நினைச்சிண்டு இருப்போம். மூன்றாவது விதி இருக்கு. மா ஸுச: - சோகப்படாதே, அப்படிங்கறது அபிப்ராயமில்லே, அது விதி. பகவான் சொல்லுவது, ‘என் திருவடிகளைச் சரணமாகப் பற்றிட்டால், அர்ஜுனா நீ எக்காரணம் கொண்டும் சோகப்படக் கூடாது’. கூடாதுன்னா சொல்றார், படவேண்டாம்ன்னு சொல்றார்ன்னு நினைச்சேன்னா, இல்லே, கூடாதுன்னு சொல்றார். ஏன்னா, சரணாகதி பண்ணுவதற்கு எது யோக்யதை? சோகம். சோகம் இருக்கறவன் சரணாகதி பண்ணிடலாம். சரணாகதி பண்ணிட்டா எது பலம்? சோக நிவிர்த்தி. இந்த சோகம் என்ன சோகம்? கல்யாணம் ஆகலையேங்கற சோகமா, இல்லை வேலை கிடைக்கலேங்கற சோகமா? இல்லை. மோட்க்ஷத்தை அடைவதற்கு என்னிடத்தில் ஒரு உபாயமும் இல்லையேங்கற சோகம். என்னிடத்தில் கர்ம யோகமோ, ஞான யோகமோ, பக்தி யோகமோ, ஒன்றுகூட இல்லையே, என்னிடத்தில் சாதிக்கப்படக்கூடிய உபாயங்கள் ஒன்றுகூட இல்லையே, அப்படிங்கற சோகம். அந்த சோகம் இருக்கிறவன்தான் சரணாகதிக்கே வருகிறான். அதனால் சரணாகதனுக்கு இருக்க வேண்டிய இரண்டு லட்க்ஷணங்கள், ஒன்று, ஆகிஞ்சண்யம், மற்றொன்று, அநந்யகதித்வம். ஆகிஞ்சணயம், கிஞ்சிது – சிறிது; கிஞ்சண – சிறிது இருக்குமவர்; அகிஞ்சண – சிறிதும் அற்றவர்; அப்போ சிறிதும் கர்மயோக, ஞானயோக, பக்தியோகம் அற்றவர். அவனுக்கு அகிஞ்சனன்னு பேர். என்னிடத்தில் கைமுதல் ஒன்றுமில்லை, அப்படின்னு பெருமாளிடத்தில கையைக் கூப்பிடறோம் பாருங்கோ. நமஹா சொல்றதுக்கு அர்த்தமே, உள்ள ஒன்னுமில்லேன்னு அர்த்தம். அது ஆகிஞ்சண்யம். இந்தக் கையில் ஒன்றுமில்லை. ‘ஒன்றுமில்லேன்னா என்கிட்ட ஏன் வரே’னுட்டு அவர் கேட்பர். ‘ஏன்னா நீ இருக்கிறாய்ங்கிறதுக்காக வரேன். என்னிடத்தில் என் பிரயத்தனத்தாலே ஒன்றுமில்லே. ஆனால் நான் பிரயத்தனப்படாத நீ இருக்கிறாய். அந்த நம்பிக்கையில வந்தோம்’ன்னு சொல்றோம். இது ஆண்டாள் திருப்பாவையில்,
(திருப்பாவை – 28) ஆண்டாள் சொல்லும்போது, ‘நாங்கள்லாம் ஏதோ கறவை மாட்டுக்குப் பின்னாடி போயிண்டிருக்கறவா. எங்களுக்கெல்லாம் ஒன்னும் ஞானமும் கிடையாது, பக்தியும் கிடையாது. ஒன்றுமில்லே’ன்னா. பெருமாள் உடனே சொன்னார், ‘உன்கிட்ட ஒன்னும் கிடையாதுன்னா, என்கிட்டயும் கொடுக்கறதுக்கு ஒன்னும் கிடையாது. போய்ட்டு வா’ன்னுட்டார் அவர். அப்ப ஆண்டாள் திரும்பச் சொல்றா, ‘நான் பிரயத்தனப்பட்டது ஒன்றுமில்லேன்னு சொன்னேன். நீ இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே. ’உன் தன்னைப் பிறவி பெருந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்’. எங்களிடத்திலே நாங்களாகத் தேடின புண்ணியம் கிடையாது. ஆனால் நீயே எங்களுக்கு நடுவில் புண்ணியமாகப் பிறந்திருக்கிறாய் அல்லவா?’. அதனால நான் புண்ணியத்தை சம்பாரிக்கணும்ன்னா, பக்தி. அவரே புண்ணியம்னுட்டா சரணாகதி. அநந்யகதித்வம். அப்படின்னா, வேறு போக்கிடமில்லை. கதி – போக்கிடம்; அந்யகதி – வேறு போக்கிடம்; அநந்யகதி – வேறு போக்கிடமில்லை. நீ இல்லேனுட்டியானா எனக்கு வேறு போக்கிடம் இல்லை. இதுவும் சரணாகதன் சொல்லிக் கொள்ள வேணும். ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் – என்னிடத்தில் ஏதுமில்லை, உன்னையே நம்பி வந்தேன். நீ இல்லேன்னுட்டியானா எனக்குப் போக்கிடமும் இல்லை. இது ரெண்டும் சரணாகதனுக்கு இன்றியமையாதது. கையில கர்ம,ஞான,பக்தி யோகங்கள் இருந்துட்டா, அவர் வரமாட்டார். அதையே பிடிச்சுக்கோன்னுடுவர். உன்னைத்தவிர வேறொருத்தர் இருக்கார்ன்னு பேசினா, அப்பவும் அவர் வர மாட்டார். அவரையே போய் கேட்டுக்கோன்னுடுவர். இந்த இரண்டும் இல்லேன்னு சொன்னாத்தான் சரணாகதன். சரி, சரண்யனிடத்தில என்ன இருக்கணும்? இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும். ஒன்று பரத்வம், மற்றொன்று சௌலப்யம். இந்த இரண்டும் இருந்தாத்தான் சரண்யன், அவரை நாம பற்றவே முடியும். பரத்வம் – அவர் ரொம்பப் பெரியவரா இருக்கணும். அதாவது மோட்க்ஷம் குடுக்கிற சக்தி உடையவரா இருக்கணும். அப்போதான் நான் சரணாகதி பண்ணினா மோட்க்ஷம் கிடைக்கும். சௌலப்யம் – எளிமை. நான் பற்றும்படி சௌலப்யம் இருக்க வேண்டும். அப்போ ஒரு பக்கத்தில மேன்மை இருக்க வேண்டும், மற்றொரு பக்கத்தில சௌலப்யம் இருக்க வேண்டும். சௌலப்யம் பல பேருகிட்ட இருக்கும். என் பக்கத்து வீட்டுக்காரர்கிட்டகூட இருக்கு. அவரை நான் எப்ப வேணாலும் கதவைத் திறந்து பார்க்கலாம். ஆனா அவர் மோட்க்ஷம் குடுக்க மாட்டாரே. அவர்கிட்ட பரத்வம் இல்லையோல்லையோ? பரத்வம் இருந்தா சௌலப்யம் இருக்காது, சௌலப்யம் இருந்தா பரத்வம் இருக்காது. இந்த இரண்டும் இருந்தாத்தான் சரண்யன். இப்போ ரொம்ப சுலபமாக நாம் மேலே சொன்ன இராமாயண சரணாகதிகளில் சில ஏன் பலித்தது, சில ஏன் பலிக்கலைன்னு இந்த லக்ஷணங்களை வைத்து சொல்லிடலாம். முதல் சரணாகதி, தேவர்கள் போய் நாரயணனிடத்தில சரணாகதி பண்ணினார்களா? தேவர்களிடத்திலே ஆகிஞ்சந்யம் உண்டா? உண்டு. தங்களை இரட்க்ஷிக்கறதுக்கு அவாள்ட்ட ஒன்றுமே இல்லையே. அநந்யகதித்வம்? பெருமாள் இல்லேனுட்டா இராவணனை யாரும் கொல்லப் போறதில்லே. அவர் மட்டும்தான் வழி. அப்போ தேவர்களிடத்தில் சரணாகதனுக்கு வேண்டிய இரண்டு இலக்கணங்களும் பொருந்தி இருந்தன. பகவான்தானே இப்ப சரண்யன். அவரிடத்தில சரண்யனின் இரண்டு இலக்கணங்களும் இருந்ததா? அவர் பரத்வம் உடையவர்தான், சௌலப்யம் உடையவர்தான். சந்தேகமேயில்லை. ஆகவே சரணாகதன் லக்ஷணமும் சரியாயிருந்தது, சரண்யன் லக்ஷணமும் சரியாயிருந்தது. இந்த சரணாகதி பலித்தது. இரண்டாவது சரணாகதி, தசரதன் பரசுராமரிடத்திலே சரணாகதி பண்ணுகிறான். அது இரண்டு இடத்திலயுமே கோளாறு. தசரதன் சரணாகதனோல்லையோ. அவன்கிட்ட ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் இருந்ததான்னா, தசரதன் ரொம்பப் பெரிய வீரன். அவன் சரணாகதி இன்னொருத்தரிடத்தில போய்ப் பண்ணியிருக்கவே கூடாது. அவன் வீரத்துக்குத் தகுந்த ஷத்திரிய தர்மத்தோடே நடந்திருக்க வேண்டுமே தவிர, ஒருத்தர் காலைப் போய் பிடிக்கலாமா? குழந்தைகளைக் கண்டு பயந்து போய் காலைப் பிடிச்சுட்டான். அதனால அவனை ஆகிஞ்சந்னு சொல்லிடமாட்டா. சரணாகதனிடத்திலயும் கோளாறு. பரசுராமர்? பரசுராமரிடத்தில பரத்வம், சௌலப்யம் ரெண்டும் உண்டான்னா, உண்டு, பரத்வம் நன்னா உண்டு. குறைவில்லே. ஆனா சௌலப்யமே இல்லை. ரோஷ ராமர். எப்பப் பார்த்தாலும் கோபம் இருக்கும். சௌலப்யம் இருக்கறவர்கிட்ட காருண்யம் இருக்கணுமோல்லையோ? காருண்யம் இருந்தாத்தான் சரண்யனே சரணாகதி ஏத்துக்க முடியும். பரசுராமருக்கு கருணை கிடையாது. அப்போ அவர் சரண்யன் ஆக மாட்டார். இரண்டாவது சரணாகதி பலிக்கலே. மூன்றாவது சரணாகதி, லக்ஷ்மணன் இராமனிடத்திலே பண்ணினது. அருகில இருக்கிற சீதை திருவடிகளைப் பற்றி, ‘இராமா, என்னை அவசியம் காட்டுக்கு அழைத்துப் போக வேண்டும். விட்டுவிட்டுப் போகாதே. என்னை என் தாய் பெற்றதே உன்னோடு வந்து கைங்கர்யம் பண்ணுவதற்குத்தான்.’ லக்ஷ்மணனைப் பார்த்து சுமித்ரை போய்ட்டு வான்னுட்டா. தவிக்கிறான் லக்ஷ்மணன் இராமன்கூடப் போகணும்னுட்டு. இராமன் மாட்டேங்கறார். அப்போ சரணாகதி பண்ணின லக்ஷ்மணனுக்கு ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் உண்டு. என்ன இருக்கு லக்ஷ்மணன் கையிலே? இராமன்தான் இருக்கார். போக்கிடம் என்ன இருக்கு? இராமன்தான் போக்கிடம். இராமனுக்கு பரத்வம், சௌலப்யம் உண்டா? நன்னாவே உண்டு. குறைச்சலில்லே. அதனாலே இந்த சரணாகதி பலித்தது. நாலாவது சரணாகதிதான் பெரிய கேள்விக்குறி. ஏன்னா, லக்ஷ்மணன் – இராமன் மாதிரித்தானே பரதன் – இராமன்? பரதன் இராமனிடத்தில சரணாகதி பண்றார். லக்ஷ்மணனுக்கு இருக்கிற லக்ஷணம் பரதனுக்கு இல்லையா? அதே இராமன்தானே இப்பவும் இருக்கிறார். அப்போ தானே பலிச்சுடனுமில்லையான்னு தோணும். பரதன், சரணாகதனிடத்திலேயும் ஒரு குற்றமுமில்லை. அவனிடத்திலே அநந்யகதித்வம், ஆகிஞ்சந்யம், ரெண்டுமே இருந்தது. இராமனிடத்திலேயும் ஓரு குற்றமும் இல்லே. அவர் கருணையே வடிவெடுத்தவர்தான், மேன்மை படைத்தவர்தான். இது ஒரு விதிவிலக்கு. சரணம்ன்னு சரணாகதன் போய் சரண்யனிடத்தில போய் நிக்கறச்சே, அந்த சமயத்தில் சரண்யனுக்கு இதை ஏற்றுக் கொள்ளலாம்ன்னு மனசு இருக்கணும். ஏத்துண்டுதான் ஆகணும்ன்னு நாம நிர்பந்தப் படுத்த முடியாது. ஏன் முடியாதுன்னா, வேறு வழியில்லேன்னுதானே இங்க வந்துருக்கோம். அப்போ அவர் எப்ப வழி விடுறாரோ, அதுவரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான். இதைத்தான் ஆழ்வார் சாதிக்கிறார், ‘இன்றாக நாளையேயாக இனிச்சிறிது நன்றாக’, ‘நீ இன்னைக்கு குடு, நாளைக்குக் குடு, பத்து நாள் கழிச்சுக் குடு, ஆனாக் குடுத்துதான் ஆகணும். அதைத்தான் நான் சொல்ல வந்தேனே தவிர, நீ என்று வேணும்னாலும் குடு. அது கேள்வியல்ல. இன்னைக்குக் குடுன்னு நான் உன்னை நிர்பந்தப்படுத்த மாட்டேன். நான் யாரு? நீசன். இந்த நீசன் உன்கிட்ட வந்து இன்னைக்கு குடு, அன்னைக்கு குடுன்லாம் சொல்ல முடியுமா?’ இப்போ பகவான் இராமனுக்கு எதிலயோ எண்ணம் இருக்கறச்சே, இவன் வந்து நாட்டுக்கு வான்னு கூப்பிட்டுட்டான். இப்போ இராமன் சரண்யன். சரண்யனோடே ஹ்ருதயம் எதிலே இருக்கு? தந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு ஸ்தாபிக்கிறதுல இருக்கு. அப்போ போய் அதற்கு நேர் மாறா, ‘நான் கூப்பிடுறேன், வீட்டுக்கு வா, வா’ன்னா, அதை அவர் ஏத்துக்க மாட்டார். சரணாகதி பண்ணப்போறச்சே அவன் திருவுள்ளத்துக்கு உகந்ததைத்தான் நாம பண்ணனுமே தவிர, நம்ம இஷ்டத்துக்கு வேண்டியது எல்லாத்தையும் அவர் செய்யமாட்டார். அப்போ பரதன் போய்க் கேட்டபோது அவர் திருவுள்ளம் நாட்டுக்கு வரதில இல்லை. அதனால அது பலிக்காமல் போச்சு. ஐந்தாவது சரணாகதி, விபிஷண சரணாகதி. இது பூர்ணமான சரணாகதி. விபீஷணனும் அகிஞ்சனன், அகதி. இராமனும் பர்த்வம், சௌலப்யம் வடிவெடுத்தவர். நன்றாகவே பலிச்சுப் போச்சு. கடைசி சரணாகதி, சமுத்திர ராஜனிடத்தில். இங்க என்ன ஆபத்துன்னால், மறுபடியும் ரெண்டு பேரிடத்திலேயும் குணமில்லே. இராமன் அகிஞ்சனன், அகதியா? யாருமே ஒத்துக்கப் போறதில்லே. எப்பவும் இராமன் சரண்யனாத்தான் இருக்கணுமே தவிர, அவர் சரணாகதன் ஆனாக்கூட வேலை நடக்காது. பெருமாள்தானே, அப்படின்னு இது நடக்காது. சரணாகதி பலிக்கணும்ன்னா லக்க்ஷணத்தின்படி இருந்தாத்தான் பலிக்கும். சரி, இங்க சரண்யன் சமுத்திரராஜன். அவனிடத்திலேயும் சரண்யனுக்குண்டான லக்ஷணங்கள் இல்லை. ஆகையால் இராமன் சமுத்திரராஜனிடத்தில் பண்ணின சரணாகதி பலிக்காமல் போச்சு. -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – இராமாயணத்தில் சரணாகதி (1) உபந்நியாசம் – Toronto) April 13 பக்தியை எவ்வாறு செய்வது?பிரகலாதன் பக்தின்னா என்னன்னு தன் தந்தை ஹிரண்யகசிபுவுக்கு உபதேசிக்கிறார்.
பக்தி என்பது ஒன்பது வகைப்படுகிறது. பக்தன் இதைச் செய்ய வேண்டும். இதைக்கண்டு பெருமான் மிக உகக்கிறான், ஆனந்தப்படுகிறான். என்னான்னு ஹிரண்யகசிபு கேட்கப் போறதில்லே. நாமதான் கேட்டுக்கணும் இப்போ. பக்தனுக்கு முதல் தேவை, ஸ்ரவநம். தன் பகவானைப் பற்றி நிறையக் கேட்க வேண்டும். கேட்க கேட்க கேட்கத்தான் பக்தி முற்றும். அதுக்குத்தான் நம்ம சம்ப்ரதாயத்திலே இத்தனை எழுதி வைச்சுருக்கா. ஒரே ஒரு இடம் பார்ப்போம். வைசம்பாயனர், ஜனமேஜயர் கதை தெரிஞ்சிருக்கும். வைசம்பாயனர் ரிஷி, ஆச்சார்யர். ஜனமேஜயர் அரசன், பரீட்சித்து வம்சத்தில் வந்தவன். அர்ஜுனன், அவர் பிள்ளை அபிமன்யு, அவர் பிள்ளை பரீட்சித்து. அந்த பரீட்சித்தை அழிச்சுடனும்ன்னுதான் யுத்தத்தின் முடிவில் அஸ்வத்தாமா அபாண்டவாஸ்திரப் பிரயோகம் பண்ணினான். அப்போ உத்தரையினுடைய கர்பத்துக்குள்ள கண்ணனே போய், காத்து, பரீட்சித்தை வெளில கொண்டு வந்து போட, பரீட்சித்து ஒரு கரிக்கட்டையாட்டம் வந்து விழ, அதை தன் திருவடிகளால தீண்டி பெருமான் உயிர்ப்பித்தார். இந்தக் கதை பாகவதத்தினுடைய ஆரம்பத்திலயே கேள்விப்பட்டிருக்கோம். இந்தப் பரீட்சித்துக்கு அப்புறம்தான் ஜனமேஜயர். ஜனமேஜயர்தான் ராஜ்ஜியத்தை ஆண்டுண்டு இருக்கான். வைசம்பாயனர் அவனுக்கு மஹாபாரதக் கதையைச் சொல்லிடனும்ன்னு, பாட்டனார் கதையோல்லையோ, ஆசைப்படறார். நடையா நடக்கிறார். ஆனா அவன் கேட்டுக்கவே மாட்டேங்கிறான். அவன் ராஜா, நாழியே இல்லேங்கிறான். அவர் சொன்னார், ‘மொத்தம் ஒன்னேகால் லட்சம் ஸ்லோகம் இருக்கு மஹாபாரதம். அத்தனை எல்லாம் நீ கேட்டுக்க வேண்டாம். ஒரே ஒரு பருவம் சொல்லட்டுமா? பதினெட்டு பருவங்கள் இருக்கோல்லையோ? அதில் ஒரு பருவம்?’. ‘முடியாது, நேரமில்லை’. ‘சரி, ஒரு அத்தியாயம்?’ ’இல்லை, நேரமே இல்லை’ன்னுட்டான். ‘ஒரே ஒரு ஸ்லோகம்? அதையாவது நீ கேட்டுக்குவியா?’ன்னார். சரி, பெரிய ரிஷி, ரொம்பக் கெஞ்சறார், கேட்டுட்டுப் போவோம்’, அப்படின்னு ஜனமேஜயன் ஒத்துணுட்டான். வைசம்பாயனர் ஆசனத்துல உட்கார்ந்துண்டு ஒரே ஒரு ஸ்லோகம்தான் சொன்னார். ரெண்டே விசயம். ஒரு ஸ்லோகத்திலே ரெண்டு விஷயம்தான் இருக்கு. ‘வனபங்கத்திலும் கோக்கிரகனத்திலும் வைபவத்தைப் பார்த்தவர்கள், மறுபடியும் யுத்தத்துக்கு வந்தார்கள். அறிவிலிகள். ராஜன்னு ஒரு ஸ்லோகம் முடிஞ்சு போச்சு. நான் போய்ட்டு வரேன்’னார். அப்போ ஜனமேஜயன் பார்த்தான், ‘நீர் என்ன சொன்னீர் இப்போ? அர்த்தம் என்ன’ன்னு கேட்கிறான். அப்போ அவர் சொன்னார், ‘கோக்கிரகணத்தின் போது அர்ஜுனனின் வைபவத்தை துரியோதனன் கண்டான். விராட பருவத்திலே எல்லா பசு மாடு கன்றுகளையும் துரியோதனன் ஓட்டிண்டு போனான். அப்போ அர்ஜுனன் வந்து கர்ணன், துரியோதனன், பீஷ்மர் அத்தனை பேரையும் ஜெயித்து மயக்கமா கட்டி வைச்சுட்டார். அப்போ அர்ஜுனனுடைய வைபவத்தை கோக்கிரகணத்தின் போது துரியோதனன் பார்த்தானோல்லையோ? அந்த வைபவம் தெரிஞ்சும் திரும்ப மஹாபாரத யுத்தத்துக்கு வந்தானோல்லையோ? அறிவிலி. வனபங்கம்ங்கிறது அசோக வனத்தினுடைய பங்கம். அசோக வனத்தில ஹனுமான் மொத்தத்தையும் அழிச்சாரோல்லையோ? நெருப்பே வைச்சுட்டார் அசோக வனத்தை, எல்லாமே போச்சு. அந்த சமயத்திலே தொண்டனுடைய வைபவத்தை இராவணன் பார்த்தான். பார்த்துட்டும், ‘இவனுடைய ஸ்வாமி இராமன் எவ்வளவு பெரியவரா இருப்பர்?’, அப்படின்னுகூட கணக்குப் போடாம திரும்ப ஒருதடவை சண்டைக்கு வந்தான் பார், இராவணன் அறிவிலி. இதைச் சொல்லிட்டு, ‘ராஜன், நான் போய்ட்டு வரட்டுமா’ன்னார். அவன் கேட்டான், ‘துரியோதனன்னு சொன்னீர், இராவணன்னு சொன்னீர். துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் என்ன விரோதம்? இராவணனுக்கும் இராமனுக்கும் என்ன விரோதம்? அதைச் சொல்லவே இல்லையே’ன்னார். அடியைப்பிடிடா பாரத பட்டான்னு சொல்லுவா பாருங்கோ, முதல் ஸ்லோகத்திலே இருந்து ஆரம்பிச்சார், மொத்த ஒன்னேகால் லட்ச ஸ்லோகங்களையும் சொல்லி முடிச்சார். மொத்தத்தையும் கேட்டுண்டான். யார் ஒரு ஸ்லோகம் கேட்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சானோ, அவன் மொத்தக் கதையையும் கேட்டு முடிச்சான். முகம் மாறக்கூட இல்லே, அத்தனை அர்த்தங்களையும் குடுத்துட்டார். குடுத்துட்டு கடைசியா வைசம்பாயனர் சொல்றார், ‘தர்ம அர்த்த காம மோட்சம்ன்னு நாலு புருஷார்த்தம். அத்தனையும் உனக்கு மஹாபாரத்தில சொல்லியிருக்கேன். உனக்கு ரெண்டு நிமிசம் அவகாசம். யோசித்துப் பார். தர்ம அர்த்த காம மோட்சங்களுக்குள்ளே சிறந்த புருஷார்த்தம் எது? உன் முடிவைச் சொல்லு’ அப்படின்னு கேட்டார். ஒரே நிமிசம் யோசிச்சான், ‘எனக்கு ரெண்டாவது நிமிசம் தேவை கிடையாது. முதல் நிமிசத்திலயே அர்த்தம் புரிஞ்சு போச்சு, சொல்லட்டுமா’ன்னான். சொல்லுன்னார். ‘இந்த நாலுமே புருஷார்த்தம் இல்லே’ன்னான் அவன். ’இந்த நாலுதான் சாஸ்திரக்காரா சொல்லியிருக்கா. நீ என்ன புதுசா கண்டுபிடிக்கப் போறே இப்போ? அறம், பொருள், இன்பம், வீடு. நாலுதான் உள்ளது. மேல என்ன இருக்கு’ன்னா, ‘இருக்கு ஸ்வாமி. எனக்கு இந்த நாலும் புருஷார்த்தமாப் படலே. பின்ன என்ன வேண்டும் தெரியுமா? கண்ணனுடைய கதையை நீர் இப்படியே சொல்லிக்கொண்டே இருக்கணும். நான் காலம் முழுக்கக் கேட்டுண்டே இருக்கணும். அதுதான் என் புருஷார்த்தம். இதுக்கு மேலே தர்மமும் வேண்டாம், அர்த்தமும் வேண்டாம், காமமும் வேண்டாம், மோட்சமும் வேண்டாம். நீர் பகவத் கதையைச் சொல்றதைத் தவிர எனக்கு மற்றொரு புருஷார்த்தம் தோணலே.’ யார் சொல்றா இதை? ஒரு ஸ்லோகம் கேட்க மாட்டேன்னு யார் சொன்னானோ, அவன் கடைசில உள்ளம் நெக்குருகிப் போய், இனி இதையே கேட்டுண்டு இருக்கேன்னானோல்லையோ? அந்த ஸ்ரவநம் ரொம்ப முக்கியம். அடுத்தது கீர்த்தநம். கீர்த்தநம்ன்னால் நாம சங்கீர்த்தநம். பகவானுடைய நாம சங்கீர்த்தநத்தை நாம் பண்ண வேண்டும். நம்மாழ்வார் தெரிவிக்கிறார், எப்படி கீர்த்தநம் பண்ணனுமாம்? கீர்த்தநம் பண்றதுன்னா வெறும உட்கார்ந்த இடத்திலேர்ந்தெல்லாம் நாமம் சொல்லாதீங்கோ. நல்லா ஆடணும்ன்னார்.
திருவாய்மொழி (2-4-1) நம்மாழ்வாருடைய தாயார் சொல்றார். பராங்குச நாயகின்னு ஆழ்வாருக்குப் பெயர். நாயகி பாவத்திலே பாடுகிறார். அந்தப் பெண் பெருமாளுடைய நாமத்தை மேற்கண்டவாறு சொல்றாளாம். தேகம் படைத்த பயன் ஏதுன்னு தெரியுமா? யாரொருத்தன் பகவத் கதையைச் சொல்லி, உடம்பு நடுங்க, மயிர் கூச்செரிய, பேச்சு தழுதழுக்க, கண்ணில் நீர் மல்க இருக்கிறானோ, அவனைப் பார்ப்பதுதான் இவ்வுடம்பு படைத்ததின் ஒரே பயன், என்று சாஸ்திரக்காரர்களெல்லாம் சொல்றார்கள். அதனாலே பெருமானைப் பற்றிப் பாடறோம்னால், ‘கும்பிடு நட்டம் இட்டாடி கோகுகட்டுண்டுழலாதார் தம்பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே’. நல்லா ஆடணும். எப்படி ஆடணும்ன்னால், ‘தலையினோடாதனம் தட்டத் தடுகுட்டமாய் பறவாதார்’, தலை வந்து கால்ல இடிக்கணுமாம், கால் போய் தலைல இடிக்கணுமாம். அந்த மாதிரி தலைகீழா ஆடுங்கிறார். அதென்னமோ நமக்கு இதற்கு ரொம்ப லஜ்ஜை வந்துவிடுகிறது. லஜ்ஜை எதற்கு இப்போ? என்னை பெற்றவருடைய பெயரைச் சொல்லுவதற்கு பிள்ளை லஜ்ஜைப்பட்டால், அப்போ அது கேவலமில்லே? யாரு உங்க அப்பான்னு கேட்டால், பேர் என்னன்னு சொல்றதுக்கு வெட்கமாயிருக்கு, இப்படினுட்டால் அது ரொம்பக் கேவலம். அப்போ பகவானுடைய நாமத்தை சொல்றதுக்கு வெட்கப்படறேன்னு சொன்னால், அப்போ தந்தை பேரைச் சொல்றதுக்கு வெட்கப்படறேன்னு ஆயிடாதா? அதைத்தான் கூடாதுன்னு ஆழ்வார் சொல்லி, உன் கால் தலைல வந்து படணும், தலை கால்ல் போய்ப் படணும், வாசல்ல போய் ஆடுன்னார். ஆழ்வாரைப் போய் நாம் கேட்டோம், ‘நீர் பிறந்தது குக்கிராமம், நல்லா ஆடலாம். ஒண்ணும் சொல்ல மாட்டா. நாங்க அங்கேயில்லே. மகா நகரத்திலே இருக்கோம். இங்க எல்லாரும் கை தட்டுவா, கேலி பண்ணுவாளே’ன்னா, ஆழ்வார் பிடிச்சிண்டார். ‘உலோகர் சிரிக்க நின்றாடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழுவப்படுவாரே’, ‘அந்த நாஸ்திகன் கை தட்டட்டும். அதானே உன் கவலை இப்போ? அவன் கை தட்டட்டும். அவன் கை தட்டறதை தாளமா வச்சிண்டு நீ ஆடு’ன்னார். ‘ஆடினா என்ன ஆகும்’ன்னு நாம கேட்டோம். ‘நாலு நாள் கழிச்சு அவனும் உன்னோடே சேர்ந்து ஆடுவான், கவலைப்படாதே’ன்னார். ’நீ ஏன் இன்னொருத்தன் என்ன நினைப்பானோன்னு நினைச்சு கவலைப்படறே, உன் பிதாவினுடைய பேரை நீ சொல்லு. இன்னைக்கு இல்லையா, நாளைக்கு உன்னோடே சேருவன். நாளைக்கு இல்லையா, அதற்கு அடுத்த நாள் சேருவான்’. இப்படித்தான் ஒரோருத்தனும் கண்ணனுடைய பேரைச் சொல்லி ஆடணும்ன்னு ஆழ்வார் ஆசைப்படறார். பெரியாழ்வார் ஒரு இடத்துல சொன்னார். என்றைக்கு பகவானுடைய நாமங்களை ஒரு தடவை சொல்லலையோ, அன்று எனக்கு அவை பட்டினி நாளே. இதைத்தான் ‘கீர்த்தநம்’ன்னு சொன்னார். அடுத்தது ‘ஸ்மரணம்’. நினைவு. பகவானைப் பற்றி நினைக்க வேண்டும். ’நினைவின் நெடியானை’ன்னு ஆழ்வார் சொன்னார். நினைக்கறதுன்னா தியானம், யோகத்தைப்பற்றி எல்லாம் இங்கே சொல்லலே. அதெல்லாம் ரொம்ப கஷ்டம். பின்னே? வெறும நினையுங்கோள். ஒரு நாளைக்கு எத்தனை தடவை முடியுமோ, அத்தனை தடவை வெறுமே நினையுங்கோளேன். ’நான்’ங்கிற நினைவு எப்படி எப்போதும் இருக்கோ, அதேபோல ‘நான் அவன் அடிமை’ங்கிற நினைவு எப்போதும் இருக்க வேண்டும். அந்த நினைவோடே எல்லா வேலைகளையும் செய்யலாம். உபநிஷத்து சொல்றது, ப்ரம்மத்தைப் பற்றி நீ அடிக்கடி நினைத்தே, நெருக்கத்தில் இருக்க இருக்க, சம்சார பயமே வராது. அவரைவிட்டு விலக விலக பயம் பீடிக்கும். அதனாலே அவனைப் பற்றி நினைப்பது முக்கியம். நினைப்பது கஷ்டமோன்னால், ஆழ்வார் சொன்னார்,
-ன்னார். சிந்தியுங்கோ போறும். ஆழ்வார் சொன்னார், ‘எண்ணிலும் வரும்’, நினைச்சா வந்துடுவன்னார். இந்த நினைச்சாங்கிறத எப்படி வச்சுக்கணுமாம்? எண்ணிலும் – ஒன்று, ரெண்டு, மூணு, நாலுன்னு எண்றோமோல்லையோ? அப்படி எண்றச்சே வந்துடுவர். பகவானுக்கு ஒரு எண்ணிக்கை உண்டு. 26. அசித் தத்வங்கள் 24, ஜீவாத்ம தத்வம் 25, பரமாத்மா 26. அதனால நாம பணம் எண்ணிண்டு இருக்கோம், 1,2,3,4,..23, 24, 25, 26. அப்படினச்செ இங்கே அவர் இருப்பர். என்ன திடீர்ன்னு பெருமாள் இங்க வந்துட்டாரே, எதுக்கு வந்தார்ன்னு கேட்டா, ‘நீ இருவத்தாறுன்னு சொன்னியே, அதனாலதான் நான் வந்தேன்’னுடுவர். நான் 26ன்னு பணத்தை எண்ணினேன்னா, ‘நான் அப்படி எல்லாம் நினைக்கறதில்லே. நீ என்னைக் கூப்பிட்டதா நினைச்சிண்டேன். நீ எப்போ என்னைக் கூப்பிடுவேன்னு காத்திண்டிருந்தேன். நீ இருவத்தாறுன்னு சொன்னியோல்லையோ? நாந்தான் இருவத்தாறு’. இப்படி ‘எண்ணிலும் வரும்’ங்கிறதுக்கு ‘நீ எண்ணினியான வரும்’ன்னு வ்யாக்யானம் பண்ணியிருக்கார்கள் பெரியோர். எண்ணினால்ங்கிறதுக்கு ரெண்டு அர்த்தம், ’நினைத்தால்’ன்னு ஒரு அர்த்தம், ‘எண்ணினாக்கூட’ன்னு இன்னொரு அர்த்தம். அவ்வளவு பரம சுலபனா காத்துண்டு இருக்கான் என்று சொல்லுவர்கள். அடுத்து, பாதசேவநம். பகவானுடைய திருவடிகளை அடிக்கடி சேவை பண்ணுதல். அவன் திருவடிகளுக்கு சேவை பண்ணுவதென்றால், நேர திருவடிகளுக்கு சேவை. மேலும் அவன் திருவடியாயிருக்கிற பாகவதோத்தமர்கள். அவன் திருவடி என்பது அவனது அடியார்கள்தானே. அடி = திருவடி = அடியார்கள். நம்ம சம்ப்ரதாயமே உசந்தது எப்படின்னா, பகவானைவிட அவனது அடியார்களுக்கே ஏற்றம். பாகவதர்களோடே சேர்ந்து இருக்க வேண்டும். இராமானுசர் தன் காலக்ஷேபத்துல ஒருநாள் உட்கார்ந்திருந்தார். இது ஒரு ஸ்லோகம்.
சம்சாரம்ங்கிறது பெரிய விஷ மரம். அந்த மரத்துல ரெண்டே ரெண்டு நல்ல பழம் இருக்காம். ஒரு பழம் கேசவ பக்தி. இன்னொரு பழம் அவன் அடியார்களுடைய சேர்க்கை. இந்த ரெண்டுல எது வேணும்ன்னு கேட்டால், அடியார்களுடைய சேர்க்கை வேணும். கிடைக்கலேன்னா, கேசவ பக்தி தேவலைன்னு இராமானுசர் சொன்னாராம். கேசவ பக்தி அப்புறம் வச்சுப்போம், அடியார்கள் சேர்க்கைதான் வேணும். கிடைக்கலையா, சரி பகவான்கிட்டப் போறேன். ஏன்னா, என்னதான் இருந்தாலும் பகவான் வேற ஜாதி. அது பரமாத்மா ஜாதி, இது ஜீவாத்மா ஜாதி. நம்ம கஷ்டம் அவருக்கு எங்கயாவது புரியப்போறதா? அவருக்கென்ன, அவர் பாட்டுக்கு அவதாரம் பண்ணுவர், எதையாவது சொல்லிட்டு கிளம்பிப் போய்டுவர். நமக்கு அதெல்லாம் தெரியாது. ஆழ்வார், ஆச்சார்யார்கள்ன்னு சொன்னா நம்ம ஜாதியோல்லையோ? நாம படற கஷ்டம் அவாளுக்குத்தானே தெரியும்? அதனாலதான் பாகவதர்களோடே எப்போதும் சேர்ந்து இருக்க வேண்டும். என்ன பாவம் இருந்தாலும், பாகவத ஸ்ரீபாததூளியைத் தலையாலே தரித்து, அவனது பாததீர்த்தத்தை உண்டோம்னால், அத்தனை பாவமும் தொலைந்து போகிறது. அடியார்களோடே சேர்க்கை, ‘அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே’ என்று ஆழ்வார் சாதிக்கிறார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து இருக்க வேண்டும். அவர்கள் சேரச் சேரத்தான் இன்பமே. பெருமாளைப் பத்தி பேசணுமா, இன்னும் நாலு பேர் நாலு கதை சொல்லுவா. இன்னும் சந்தோசம். பிரிஞ்சு ஏதானும் துக்கத்துல இருக்கமா, ‘கவலைப்படாதே, நாளைக்குப் பெருமாள் சரிப்படுத்திடுவர்’, அப்படின்னு அவந்தான் சொல்லணும். இந்த துக்கத்தை சரிப்படுத்தறதுக்கும் அவந்தான் வேணும், சுகத்தை வளர்த்துவிடறதுக்கும் அவந்தான் வேணும். அதனாலே அடியார்கள் சேவையே பாதசேவநம்ன்னு கொள்ள வேண்டும். அர்ச்சநம், புஷ்பங்களைக் கொண்டு பெருமான் திருவடிகளுக்குத் தூவி வழிபடுதல். புஷ்பமாலைங்கிறதே பெருமாளுக்கு ரொம்பவே இஷ்டம். ஆண்டாள் அதைத்தான் பிடிச்சிண்டா. சூடிக்குடுத்த நாச்சியார்ன்னு சொல்றோமோல்லையோ? பெரியாழ்வார் கைங்கர்யம் பண்ணினது, புஷ்ப கைங்கர்யம். தொண்டரடிப்பொடியாழ்வார் பண்ணினது, புஷ்ப கைங்கர்யம். திருவேங்கடமுடையானிடத்திலே ‘தோமாலை சேவை’ன்னு ஒன்னு சொல்லுவா. அதுக்கு சீட்டு கிடைக்கறது ரொம்பவே கஷ்டம். தோமாலை – தோள் மாலை, தோளிலிருந்து திருவடிவரைக்கும் தொங்குகின்ற மாலை. பகவானுக்கு ரொம்ப பிடித்தமானது புஷ்பம். அது ஒரு நிர்துஷ்டமான கைங்கர்யம். ஆனா அந்தப் புஷ்பத்தை சமர்ப்பிக்கிறதுல ஒன்னே ஒன்னு ஜாக்கிரதையா இருக்கணும். அதை சமர்ப்பிச்சுட்டு, இதுக்கு பதிலாக ஒன்னை எதிர்பார்த்தேன்னு மட்டும் சொல்லிடவே கூடாது.
(திருவிருத்தம் – 21) -ன்னு ஆழ்வார் சாதித்தார். ’தூயமாமாலை கொண்டு சூட்டுவன்’. தூய்மையான புஷ்பம். மாலாகாரன்னு ஒருத்தன் மதுரைப் பட்டினத்திலே இருந்தான். கண்ணன் மதுரைக்குள்ள வரார். பத்து வயசு இப்போ கண்ணனுக்கு. கம்சனை ஒழிக்கணும்ங்கிறதுக்காக வரார். மூன்று பேரிடத்திலே போனார். இத்தனை நாளும் இடைப்பிள்ளே, அலங்காரம் பண்ணிண்டாலும் கேட்கறதுக்கு ஆளில்லே, பண்ணிக்காட்டாலும் கேட்கறதுக்கு ஆளில்லே. இப்போ நகரம், மதுராங்கிறது பெரிய நகரமோல்லையோ? நகரம்னாலே அலங்காரப் ப்ரியன். அதனாலே அவருக்கு ஆசை. மூன்று பேரை பிடிச்சார். முதலில் வஸ்திர அலங்காரத்துக்காக ரஜகன், ஒரு வண்ணானைப் பிடிச்சார். அடுத்தது புஷ்ப அலங்காரத்துக்காக மற்றொருத்தன், மாலாகாரனைப் பிடிச்சார். சந்தன அலங்காரத்துக்காக கூனி திருவக்கராவைப் பிடித்தார். இந்த மூன்று பேரிடத்திலே போய் முன்று அலங்காரம். முதல்ல வஸ்திர அலங்காரம் ஆயிடுத்து. அடுத்தது மாலாகாரன் வீட்டுக்குப் போறார். அவன் விதிர்த்துப் போய்ட்டான். கண்ணனா வந்துருக்கார்? எங்க இருக்கறவர், நம்ம குடிசையைத் தேடி வந்திருக்காரே!
’நான் என்ன எதிர்பார்த்திருக்கேன், நான் என்ன யோக்யதைன்னு கண்ணனே என் வீடு தேடி வந்தீர்? என்கிட்ட இருக்கிற ரெண்டு புஷ்பத்தைச் சமர்ப்பிக்கிறேன், அதுதான் என்னால முடியும்’ன்னான், ‘அதுக்குத்தான் வந்தேன், உன்கிட்ட வேற எதை நான் எதிர்பார்த்து வந்துட்டேன்? அந்தப் புஷ்பம் நிர்துஷ்டமான புஷ்பம், எதையும் எதிர்பார்க்காமல் நீ என்கிட்ட சமர்ப்பிச்ச புஷ்பம். குடு’ என்று பெருமாள் வாங்கி மாலையைச் சார்த்தினுட்டு, அவனுக்கு சேவை சாதிச்சு, ‘மாலை நன்னாயிருக்கா? நீ தானே சார்த்தியிருக்கே? மாலை நன்னாயிருக்கா?’ன்னா, ‘நான் யாரு, உன் மாலை நல்லாயிருக்கு, இல்லைன்னு சொல்றதுக்கு? இது என் மாலையே அல்ல, நீ குடுத்த கை, நீ குடுத்த சொத்து, இதைக் கொண்டு உனக்கு மாலை சமர்ப்பிச்சதுக்கு, என்னமோ நான் குடுத்துட்டாப்ல வேற பேர் வைச்சுக்கறயே’ன்னா, ‘உனக்குத்தான் பக்தி, நீதான் என் கைங்கர்யபரன், நீ குடு, நான் வாங்கிக்கறேன்’ என்று திருப்தியா அவனுக்கு அனுக்கிரகம் பண்ணிட்டு பெருமாள் புறப்பட்டுப் போனார்.
கண்ணனே கீதைல தெரிவிக்கிறார். ‘நீ வேற எதைக் குடுக்கிறாயோ, குடுக்காமப் போறியோ, பத்ரம் - ஒரு இலை கிடைக்காதா? பகவானுக்கு ஒரு இலை சமர்ப்பிக்கக் கூடாதா? புஷ்பம் – ஏதானும் ரெண்டு புஷ்பத்தைப் பறிச்சு சமர்ப்பிக்கக் கூடாதா? பலம் – ஒரு பழம் கிடைக்காது போயிடுமா? தோயம் – தண்ணீர் கிடைக்காது போயிடுமா? பூர்ணகும்பம் குடுத்து அவர் வந்தா அவர் திருவடிகளை விளக்கி, இந்தத் திருவடி பாததீர்த்தத்தை வாங்கிக்கறதுக்கு என்ன பாக்யம் பண்ணியிருக்கேனோ? இது நமக்குக் கிட்டாது, என்று அடிபணிந்து சொல்லிக் கொள்ளுவதுதான் பக்தனுக்கு லக்ஷணம். இதுக்கு மேல பகவான் ஒண்ணும் பணம், காசெல்லாம் எதிர்பார்க்கறதில்லே. உள்ளத்தில் தூய்மையான அன்பு இருக்கான்னு கண்டிப்பாப் பார்ப்பர். இது நடந்தது. சஞ்சயன், விதுரன், திருதராஷ்டிரன், துரியோதனன் எல்லாம் நின்டுண்டு இருக்கா. நாளைக்கு கண்ணன் பாண்டவ தூதனா வரப்போறார். நீங்க கேள்விப் பட்டிருக்கேளோல்லையோ? துரியோதனாதிகளோடே அரண்மணைக்குப் போனார், பாண்டவ தூதனா நடந்தார். வரப்போறார். இந்தக் கண்ணிழந்தானே திருதராஷ்டிரன், அவனுக்குப் புத்திக் கோளாறு வேற வந்துடுத்து. அவன் பக்கத்துல இருக்கவாளப் பார்த்துப் பேச ஆரம்பிச்சான். ‘நாளைக்குக் கண்ணன் வரப்போறார். ரொம்ப பலசாலியா இருக்கார். பலசாலிகள் எதிர்கட்சியில இருந்தாலே ஏதாவது குடுத்து நம்ம கட்சிக்குக் கூப்பிட்டுடனும். எத்தனை கிராமம் குடுத்தால் கண்ணன் நம்ம பக்கத்தில சேர்வர்? என்ன குடுத்தால் பாண்டவர்கள் பக்கத்திலிருந்து, நம்ம பக்கத்தில் சேர்வர்’ன்னு திருதராஷ்டிரன் கேட்டான். சஞ்சயனுக்கு என்ன சொல்றது, சிரிக்கறதா அழறதான்னு தெரியலை. அவன் பதில் சொன்னான், ‘உனக்கு வெளிக் கண்ணு மட்டும்தான் தெரியாதுன்னு நினைச்சிட்டிருந்தேன் திருதராஷ்டிரா, உனக்கு உள்கண்ணும் தெரியாதுன்னு இப்பதான் நான் தெரிஞ்சிண்டேன். யாருக்கு என்ன லஞ்சம் குடுத்து உன் பக்கம் இழுக்கணும்ன்னு பார்க்கறே? என்ன குடுத்துருவே?’ன்னு கேட்டான் அவன். திருதராஷ்டிரன் சொன்னான், ‘ஒரு பத்து கிராமம் குடுத்துடலாமா? அவர் இடைப்பிள்ளைதானே, ரொம்பத் தெரியாது. பத்து கிராமம் குடுத்தா வந்துடுவரா?’ன்னு கேட்டான். ‘இன்னும் என்ன குடுப்பே?’’ன்னு கேட்டான். ‘ஒரு லட்சம் வராகன், தங்கக்கட்டி குடுக்கறேன். வந்துடுவரா?’ன்னு கேட்டான். சஞ்சயன் திருப்பிக் கேட்டான், ‘இதுல பத்துல ஒரு பங்கு பாண்டவர்களுக்குக் குடுன்னு கேட்டுட்டுத்தான் கண்ணன் வரார். அதக்குடுக்கறதுல உனக்கு எண்ணமில்லே. அதை விட்டுட்டு பத்து மடங்கு கண்ணனுக்குக் குடுக்கறேன்னு நீ சொல்ற பார், இதுலயே தெரிஞ்சு போச்சு உன் ஞானம் எவ்வளவுனுட்டு, ஒண்ணுமில்லே, அஞ்சு குத்தூசி நிலம் கேட்டான் பாண்டவன். அதைக் குடுத்திருந்தியானா கண்ணன் நடந்திருக்க வேண்டிய தேவையே இல்லே. சர்வேஸ்ரனைப் போய் ஒரு தூதனாக நடக்க வைக்கிற அளவுக்கு நீ தாழ்த்தினுட்டாய். ஆனா அதுக்கு மேலும் கண்ணன் என்ன குடுத்தா மயங்குவர்ன்னு சொல்றியே, இப்ப சொல்றேன் கேட்டுக்கோ, கண்ணன் என்ன குடுத்தா மயங்குவர்ன்னு சொல்றேன். அன்யக்கூர்நா தபாம்பூம்பா அன்யப்பாதாவரைச் சேதநாது அன்யக்குசல சம்வஸ்தநாது, கண்ணன் வரும் போது விழுந்து நமஸ்கரித்து, ’கண்ணனே! நீ இந்த ஏழைக் குடிசையைத் தேடி வருவதற்கு என்கிட்ட எந்த யோக்யதையும் கிடையாது.’, அப்படிங்கறதைச் சொல்லி, வாசல்லே கதவைத் திறந்து, விளக்குப் போட்டு, பூர்ண கும்பம் ஏத்தி வைச்சு, விளக்கேத்தி வைச்சு, அவன் திருவடிகளை விளக்கி, குடும்பத்தோட அந்த தீர்த்தத்தை எடுத்து தலையில புரோச்சிச்சிண்டு, நீ எப்போதும் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால், பல்லாண்டு பல்லாண்டு இருக்க வேண்டும், இது பாடுவதற்கு பகவான் மயங்குகிறானே தவிர, இதைத்தவிர நீ குடுக்கிற எத்தையும் அவன் எதிர்பார்க்கிறதே கிடையாது. இது இருக்கா திருதராஷ்டிரா உன்னிடத்திலே?’. யோசித்தான். ‘இது என்னதுன்னே புரியலையே நீ சொன்னது எனக்கு. நீ என்னென்னமோ சொல்லிண்டிருக்கே. இதெல்லாம் பண்ணித்தான் பெருமாள் வருவரா?’ன்னா, ‘இதைப் பண்ணாலே வந்துடுவர் திருதராஷ்டிரா. நீ என்ன நினைச்சிண்டிருக்கே, இதெல்ல்லாம் பண்ணாத்தான் வருவராங்கிறே. ஆனா சஞ்சயன் சொன்னது, ‘இது பண்ணினாலே வந்துடுவர்’. ரெண்டுத்துக்கு வித்தியாசம் இருக்கு. ஒன்றே ஒன்றுதான் தெரிஞ்சிக்கணும். அவர் மற்ற எதையும் எதிர்பார்க்கறதில்லே, நம்மை எதிர்பார்க்கிறார். அவருக்குத் தேவை ஆத்மா, ஆத்மாவின் தூய அன்பு. அதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லே. அதனாலதான் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி – யாரொருத்தன் பக்தியோடே இதை என்கிட்ட சமர்ப்பிக்கிறானோ, அவனிடத்தில அதை ஏற்றுக் கொள்ளுகிறேன். இதே விசயத்தைத்தான் விதுரர் செய்தே காட்டினார். விதுரர் வீட்டுக்குக் கண்ணன் வந்துட்டார். விதுரர் மனைப்பலகை போட்டார். போட்டுட்டு தடவித்தடவிப் பார்த்தாராம். என்ன மதி, என்ன மதின்னு வியாசர் மஹாபாரதத்தில கொண்டாடுறார். தன் வீட்டு மனையைத் தடவித் தடவிப் பார்த்தாராம். கண்ணன் கேட்கறார், ‘நீரே ஆசனம் போட்டுட்டு எதுக்கு தடவிப் பார்க்கறீர்?’. ‘இல்லேல்லே, நேத்திக்கு ராஜ சபையில ஒரு அனர்த்தம் நடந்ததோல்லையோ? அத எங்கானும் நானும் பண்ணிடப் போறேனோன்னு எனக்குப் பயம்.’ ஏன்னா பாண்டவ தூதனா வரச்சே, இந்தத் துரியோதனன் ஒரு அறிவிலி. அவன் ஒரு பள்ளம் வெட்டி வைச்சான். பள்ளம் வெட்டி, அதுலே ஒரு ரத்தின கம்பளத்தைப் போட்டு, அதன் மேலே ஒரு ஆசனத்தைப் போட்டுட்டு, அதுல கண்ணனை வந்து உட்காரச் சொல்லி, அது முறிஞ்சு கண்ணன் கீழ விழுவர், பத்துப் பேரை கீழ நிறுத்தி வைச்சு விழும் போது பிடிச்சு, சிறையில அடைச்சுடலாம்னுட்டு. வெறும் அறிவில்லாத காரியம். இதை அப்பவே சொன்னார்கள், சஞ்சயனும் விதுரனும், ‘நீ என்னமோ பண்றே துரியோதனா, இதுக்கெல்லாம் கட்டுப்படறவர் அவரில்லே.’ ‘ஹ, இடைச்சி கையால கட்டுப்பட்ட கண்ணனை நானா பிடிக்க முடியாது’ன்னு கேட்டான் துரியோதனன். ‘அவ கட்டலை துரியோதனா, அவள் கட்டும்படி நின்றான்; அவள் கட்டினாள். அவளாக் கட்டலே. இங்க நீயா கட்டணும்ன்னு பார்க்கறே, அவனைக் கட்டுவதற்கு முடியாது.’, என்று அப்பவே சொன்னார், கேக்கலே. கண்ணன் உள்ள நுழையறார் பாண்டவ தூதனா வரச்சே. இந்த ஆசனத்துல உட்கார்ந்துக்கோன்னா, கண்ணனுக்குப் புரிஞ்சு போச்சு. என்னமோ ஆபத்து இருக்கு இந்த ஆசனத்திலே. ‘நான் இடைப்பிள்ளே, நான் ஓரமா இந்த சின்ன நாற்காலியிலே உட்கார்ந்துக்கிறேன். சிம்மாசனமெல்லாம் நமக்கு வேண்டாம்’ன்னார். ‘இல்லேல்லே ஸ்வாமி கண்டிப்பா அதிலேதான் உட்காரணும்னான். சரின்னு உட்கார்ந்தார். அதென்ன சின்னத் திருமேனியா? யசோதை குடுத்த பாலும், தயிரும், வெண்ணையும் சாப்பிட்டு, சாப்பிட்டு பருத்த திருமேனியோல்லையோ?
திருக்கண்ணங்குடின்னு நாகப்பட்டினத்துக்கு அருகில திவ்யதேசம். அதுக்குப் பத்துப் பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பாடினார். அதுலே சாதிக்கிறார். அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட – என்ன, ஒரு துளி நெஞ்சத்துல பயம் இல்லையே இந்தத் துரியோதனனுக்கு? யார்கிட்ட என்ன காரியம் பண்றோம்ன்னு ஒரு துளி பயம் இருந்ததா? அதற்குப் பெரிய மாமேனி அண்டமூருவ – பெருமான் வந்து அந்த ஆசனத்தில உட்கார்ந்திண்டார். உட்கார்ந்த உடனே அது முறிய ஆரம்பிச்சது. வில்லிப்புத்தூரார் பாரதத்திலே சொல்றார்,
நெறுநெறுன்னு முறிஞ்சது, கண்ணன் கீழ போறார். அதே சமயத்திலே விஸ்வரூபத்தை எடுத்து, திருவடி பாதாளத்துக்குப் போக திருமுடி அண்ட கடாகங்களைத் தாண்டி நிற்க, ‘துரியோதனா, என்னைப் பிடிக்கணும்ன்னு பார்த்தாய். முடியுமானால் செய்து பார்.’, என்று சொல்லி அதே ராஜ சபையில இருந்து வெளியேறிட்டார் கண்ணன். இது முதல் நாள் பாண்டவ தூதனா வரச்சே இதுதான் நடந்தது. இதை விதுரர் பார்த்திண்டிருந்தாரோல்லையோ? இவன் போட்ட சோற்றைத்தான இத்தனை நாளும் நான் சாப்பிட்டுண்டு இருக்கேன். அதனால என் வீட்டுக்குக் கண்ணன் வந்துருக்கச்சே, இதெல்லாம் பண்ணலே, ஆனா ஒருவேளை மனைல குண்டூசி வச்சிருந்தா? இதுதான் அவர் பயம் இப்போ. அதனால தான் வீட்டு மனையை தடவித்தடவிப் பார்க்கறார். ஒரே பதட்டம். நாமளா இருந்தா நினைப்போம். இதென்ன கலக்கம்? தெளிவ்வா தெரிஞ்சிருக்க வேண்டாமான்னா, தெளிவ்வா இருக்கற நாமெல்லாம் பக்தியே இல்லேன்னு அர்த்தம். கலங்கி இருக்கிற விதுரருக்குத்தான் பக்தி இருக்குன்னு அர்த்தம். பக்தி என்பது தெளிவில் இல்லை, கலக்கத்தில் உள்ளது. கண்ணனைப்பத்தி யோசிக்கறச்சே எவன் கலங்குகிறானோ, அவனிடத்திலேதான் பக்தி இருக்குன்னு அர்த்தம். தடவித்தடவி பார்த்தார், உட்கார்த்தி வைச்சார். நாலு வாழைப்பழம் கொண்டு வந்தார். கொண்டு வந்துட்டு ஞாபகமா வாழைப்பழத்தைக் குடுக்கணுமோல்லையோ? வாழைப்பழமா கீழ போட்டுட்டு, ஒரோரு தோலா எடுத்து கண்ணன்கிட்ட குடுக்கறார். பதற்றம், என்ன பண்றார்ங்கிறது அவருக்குத் தெரியலே. கண்ணன் பேசறார், இவர் விழுந்து சேவிக்கிறார். பக்கத்திலே உட்கார்த்தி வைச்சுக்கறார். கண்ணனிடத்திலே பேசிண்டிருக்கோம்ங்கிற பதட்டம். பழமா கீழ போட்டுட்டு தோலா கைல குடுக்கிறார். ஆனந்தமா தோலை சாப்பிட்டுண்டே அவன் கதை பேசிண்டிருக்கான். அவனுக்குத் தேவை பேசணும். இதுதான் பகவானுக்கு. திண்ணைப் பேச்சில்லே. பகவானைப் பத்தின பேச்சு. அவனைப் பற்றி யார் பேசினாலும் அவன் அவ்வளவு இஷ்டப்படுகிறான். அதனால தோல், தோலா வாங்கி சாப்பிட்டுட்டு, ஆறு தோல் சாப்பிட்டாச்சு. பழம் ஆறு கீழ கிடக்கறது. அப்பதான் விதுரருடைய தர்ம பத்தினி வந்தார். ‘பெரிய அபச்சாரம் பண்ணிண்டு இருக்கேளே. இந்தாங்கோ நல்ல பழமா எடுத்துண்டு போய் சமர்ப்பிங்கோ’ன்னாள். ‘ஓ, தப்பு பண்ணிட்டேன்’ன்னு பதறி, திரும்ப விழுந்து கண்ணை சேவிச்சுட்டு, புதுசா பழத்தை எடுத்து, ஞாபகமா தோலை கீழ போட்டுட்டு, இப்ப பழமா எடுத்து கைல குடுத்தார். போறும், பசி ஆறிடுத்துனுட்டார் கண்ணன். இத்தனை நாழி நான் பழமே குடுக்கலையே, தோல்ன்னா குடுத்தேன், பசி ஆறித்தான்னா, சிரிச்சிண்டே கண்ணன் கேட்டார். ‘விதுரா, இப்போ நீ குடுக்கற பழத்திலே எனக்கு பசி ஆறப்போறதுன்னு நினைச்சிண்டு இருக்கியா? இல்லே. நான் உலகத்தை அத்தனையும் என் வயிற்றிலே வைத்தது ஓர் நாள். அதுக்கே என் பசி ஆறதில்லே. நீ குடுத்த தோலுக்கும் பசி ஆறாது, நீ குடுத்த பழத்துக்கும் பசி ஆறாது. பின்ன எதுக்குத் தெரியுமா ஆறும்? நான் வந்துட்டேன்னு தெரிஞ்சதும், என்ன பண்றதுன்னு தெரியாம பதறிப்போய் தோலைக் குடுத்த பார், அந்தப் பதறின பக்திக்கு என் பசி ஆறுமே தவிர, வேறு எதற்கும் பசி ஆறாது’. பெருமானுக்குப் பசியே அந்தப் பதற்றம், அந்தத் துடிப்பு, அந்த பக்தி. அதைத்தான் பழமாக அவன் சாப்பிடுகிறானே தவிர, மற்றொன்றை அவர் எதிர்பார்க்கறதே கிடையாது. அதனாலதான் விதுரனுடைய குடிசையிலும் பெற்றுக் கொண்டார். மாலாகாரனிடத்திலும் பெற்றுக் கொண்டார். திருவக்கரா கூனியிடத்திலும் பெற்றுக் கொண்டார். அவள் பெருமாளுக்கு சந்தன அலங்காரம் பண்ணி வச்சா. அவள் பண்ணதுன்னா, அவர் அப்படியே தெருவோரமா போயிண்டிருந்தார். திருவக்கராவைக் கூப்பிட்டார். அவள் கம்சனுக்கு சந்தனம் எடுத்துண்டு போயிண்டிருக்கறவள். அவளைப் பார்த்துட்டு எனக்குச் சந்தனம் குடுன்னார். இதென்ன இடைப்பிள்ளே, கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமோன்போமோல்லையோ? அதைப்போலே, இதுக்கு வெண்ணை நாற்றம்தான் தெரியும், இதுக்குப் போய் என்ன சந்தனம் தெரியப் போறதுன்னு, சுமார் சந்தனமாக் குடுத்தாள். ஆனா அதை இவர் ஏத்துக்கவேயில்லே. முதல்ல எங்க திருமேனி முழுக்கப் பார், பலராமனையும் என்னையும் முழுசா பார். பார்த்துட்டு என் உடம்பு அழகுக்கு ஏற்ற சந்தனத்தைக் குடு, அப்படின்னார். அப்பதான் ஒரு தடவை ஏற இறங்க திருவக்கரா பார்த்தா. கைல இருக்கற பாத்திரத்தைக் கீழ வைச்சா. விழுந்து சேவிச்சா. இதுக்குச் சந்தனம்ங்கிறது என் நெஞ்சத்தைத்தான் நான் குடுக்கணும். இதற்கு ஏற்ற சந்தனம் என்கிட்டே இல்லை. இதற்கு ஏற்ற சந்தனம் நாமே. ஆத்மாவைத்தான் சந்தனமா பூசிவிடலாமே தவிர, இதற்கேற்ற மற்றொரு சந்தனம் என்கிட்ட இல்லை. ஆழ்வார் சாதித்தார்,
(திருவாய்மொழி – 4.3.2) உனக்குச் சந்தன அலங்காரம் பண்ணனும், என்கிட்ட இல்லை. என் நெஞ்சு இருக்கு, தரேன். உனக்குப் புஷ்ப அலங்காரம் பண்ணனும், என்கிட்ட இல்லை. 1102 பாசுரம் பாடியிருக்கேன், தரேன். உனக்கு தூப, தீப ஹாரத்தி காட்டணும், என்னிடத்திலே இல்லே. கை கூப்பரேன். அதான் என்கிட்ட இருக்கறது. அப்போ பக்தின்னு சொல்லுவதற்கு இந்த அடிப்படைத் தகுதிகளைத்தான் பகவான் எதிர்பார்க்கிறாரே தவிர, இதைவிட்டுட்டு, லட்சமோ, பத்து லட்சமோ ஏதோ பண்ணிட்டு, என்னைக்கு என்னை சேவிச்சுட்டு பார்க்கறியாங்கறது பக்தி அல்ல. ஒன்றைச் சமர்ப்பித்துவிட்டுத் திரும்ப எதிர்பார்ப்பது பக்தி அல்ல. அநந்யப் ப்ரயோஜனமாய், ஸ்வயம் ப்ரயோஜனமாய், அவன் திருமுகம் மலருமாங்கறதுதான் பக்தி. அது ஒன்றுதான் இங்கே லட்சியாமாக இருக்க வேண்டும். வந்தனம், அடிக்கடி நமஸ்கரித்தல். பெருமானை வந்தனம் செய்தல். தாஸ்யம், கைங்கர்யம்.
(திருவாய்மொழி – 3.3.1) என்று ஆழ்வார் தெரிவித்தார். ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லாரும் தாசர்கள்தான். யாரும் ராஜாவா இருக்க யோக்யதை கிடையாது. பகவானுக்குக் கொண்டு போய் புஷ்ப கைங்கர்யம் சமர்ப்பிக்கிறோம்னா, இந்தக் கை பண்ணியிருக்கிற காரியத்தை யோசிச்சுப் பார்த்தா, இந்தக் கையால் புஷ்பத்தை அவர் வாங்கிக்க வேண்டிய அவஸ்யம் இல்லை. நித்யசூரிகள் புஷ்பம் குடுக்கக் காத்திண்டிருக்கா, விதுரனும், சஞ்சயனும் காத்திண்டிருக்கச்சே, இந்தத் தாழ்ந்த கையிலிருந்து பகவான் எதுக்கு வாங்கிக்கணும்? இந்த மட்டுமாவது வாங்கிக்கிறாரோல்லையோ? இப்போ நம்மகிட்ட ஒரு பத்து ரூவா, அந்த பத்து ரூபாவை வைத்து ஒரு புஷ்பம் சமர்ப்பிச்சோம், என்னன்னு நினைச்சுக்கணும் தெரியுமா? லட்சம் பேர் உனக்கு சமர்ப்பிக்கனும்ன்னு காத்திண்டிருக்கச்சே, நல்லவேளை இந்தப் பத்து ரூபாவை நீ ஸ்வீகரிச்சியோ இல்லையோ, உனக்கு நன்றி. அதனாலே நம்மகிட்ட வாங்கிண்டதுக்கு அவர் நன்றி சொல்ல மாட்டார். அவர்கிட்ட குடுத்ததுக்கு நாம நன்றி சொல்லணும். இதைத்தான் ஆண்டாளும் தெரிவித்தாள். ’நூறு தடா அக்கார அடிசில் நூறு தடா வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்’, நூறு கங்காளம் நிறைய வெண்ணையாம், நூறு கங்காளம் நிறைய அக்கார அடிசில். பெருமாளே வா, வந்து சாப்பிடு. சாப்ட்டார் எல்லாத்தையும். ‘இப்ப நான் என்ன பண்ணனும்’ன்னு கேட்டார். ‘ஒண்ணுமில்லே, இன்னொரு தரம் வந்து சாப்பிடணும்’. அதான் நான் பிரார்த்திப்பேனே தவிர, இந்த நூறு தடா முடிஞ்சு போச்சா, அடுத்தது இன்னொரு நூறு தடா பண்ணி வைப்பேன். இப்போ, வந்து சாப்பிடு. சாப்பிட்டதுக்கு உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமான்னா, நீ ஏதாவது எனக்கு செய்யணும்ன்னா, அடுத்த தரம் வந்து சாப்பிடு. இதைத்தான் உன்கிட்ட பிரார்த்திப்பேன்னாள். அப்போ வேற ஒன்றையும் கேட்காத தன்மை பக்தி ஆகிறது. ஸக்யம் - நட்பு. சிறந்த நண்பனாக, பெருமானை விட்டுப் பிரிந்து நான் இல்லைங்கிற அளவுக்கு நட்புப் பாராட்ட வேண்டும். அந்த நண்பனாக குகப்பெருமான் இருந்தானோல்லையோ? இராமனிடத்திலே போய் எல்லாத்தையும் சமர்ப்பிக்கிறோம். இராமன் சிருங்கிபேரபுரத்துக்கு வந்தார். கங்கைக்கரையோரத்துல இருக்கு. இராமன் வந்துட்டார்ன உடனே, பதறிப்போய் தன்னிடமிருந்த காய், கனி எல்லாத்தையும் கொண்டு போய் சமர்ப்பிச்சான். ஒதுக்கிட்டார். ’நான் இவற்றுக்காக வரலை குகா, நான் வந்தேன்ன உடனே நீ பதறி ஓடி வந்தாய் பார், அதற்குத்தான் எனக்கு ஆசை’. குகனோடு தோள் போட்டுக் கொண்டு, ‘நின்னொடும் ஐவரானோம்’. ஊர்ல இருக்கற யாருக்கோ போய் தொண்டன்னா, தொண்டனாவேதான் வச்சிண்டிருப்பா. முன்னுக்கு வரவே விட்டுர மாட்டா. நம்மள முன்னாடிப் போய் அடிவாங்க விடுவா. அவா பின்னாடி வருவா. இப்படித்தான் தொண்டர்கள், ஸ்வாமிகள் எல்லாம் ஊரிலே. ஆனா பகவானிடத்திலே போய் தொண்டன்னு நாம குனிஞ்சோம், அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டு, மடியிலே அமர்த்திக் கொண்டு, ‘தம்பி’ன்னுட்டார். இவன் யார், ஒரு வேடர் ஜாதியிலே பிறந்த குகன். அவனைப் போய்த் தனக்குத் தம்பின்னு, ஷத்திரியகுல திலகமான, சக்ரவர்த்தித் திருமகனான இராம சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால், ஒரு பக்தனை அத்தனை நெருக்கமாகக் கொள்ளுகிறான்னு அர்த்தம். ஆத்மநிவேதநம் – இந்த ஆத்மா உன்னது, என்னதல்ல. இந்த ஆத்மா உன்னதுங்கிற நினைவு எப்போதும் இருக்க வேண்டும். ஆத்மா என்னது, நானேன்னு நினைச்சுனுட்டோம்னால், அப்போ நாம் திருடர்கள்ன்னு அர்த்தம். ஏன்னா, ஒருத்தர் சொத்தை இன்னொருத்தர் எடுத்துனுட்டால் திருட்டுதானே? பகவானுடைய சொத்தான ஆத்மாவை என்னுதுன்னு நினைத்தால், பெரிய திருட்டோல்லையோ? அந்த திருட்டு நாம செய்யக்கூடாது. ஆத்மா அவனதுங்கிறத நாம புரிந்து கொள்ள வேண்டும். இந்த விசயங்களை ஒரு அசுரக் குழந்தை (பிரகலாதன்), அசுர நாஸ்திகத் தகப்பனாருக்கு (ஹிரண்ய கசிபு) சொல்லிண்டிருக்கான். அப்படின்னா யாரும் பண்ணலாம்ன்னு தெரிந்து கொள்ள வேண்டும். பக்தி ஒன்றினாலயே அவனை அறிய முடியும். பக்தி ஒன்றினாலேயே அவனைக் காண முடியும். பக்தி ஒன்றினாலேயே அவனை அடைய முடியும். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto) பாவம், புண்ணியம்.கூரத்தாழ்வான் தெரிவிக்கிறார்.
’நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துட்டேன். எது பாவம், எது புண்ணியம்ன்னு யோசிச்சேன். எதெதெல்லாம் உனக்குப் பிடிக்கறதோ, அதெல்லாம் நான் பண்ணினா புண்ணியம். எதெது நான் பண்ணினா உனக்குப் பிடிக்காதோ, அதெல்லாம் பாபம். அவ்வளவுதான் நான் முடிச்சுட்டேன். இதைத்தவிர நான் சாஸ்திரத்தையும் தேடறதா இல்லே, எதையும் தேடறதா இல்லே.’ நான் ஒன்றைச் செய்றேனா, பெருமாளுக்கு அதனால முகம் மலரப் போறதா, அவ்வளவுதான் புண்ணியம். நான் ஒன்றைச் செய்றேனா, பெருமாளுக்குப் பிடிக்கப் போறதில்லையா, அவ்வளவே பாவம். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto) பக்தி என்பது என்ன? பாகம் 3முந்தைய பாகம், பாகம் 1, பாகம் 2 பக்தர்களின் வகைகள் மற்றும் பக்தனின் உயர்வு உசத்தியான பக்தியைச் சொல்லுவதற்கு முன்னாடி, நாலு விதமான் பேர்கள் என்னை வந்து ஆஸ்ரயிக்கிறார்கள் என்று தொடங்கினான் கண்ணன்.
ஆர்த்தஹா, ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தீ, ஞாநி, இந்த நாலு பேர் என்னை வந்து அடைகிறார்கள் என்று தெரிவித்தான் எம்பெருமான். இது பேர் நாலா இருந்தாக்கூட இவா வகையை மூன்றாகப் பிரிச்சுடலாம். ஐஸ்வர்யார்த்தி, கைவல்யார்த்தி, பகவல்லாபார்த்தி. ஐஸ்வர்யார்த்தி, அசிதுனுடைய அனுபவத்தை எதிர்பார்ப்பவர். கண்டு, கேட்டு, உத்து, மோந்து, உண்டு உழலும் தெரிவறிய அளவிலா சிற்றின்பம், ஒழிந்தேன்னு ஆழ்வார் தெரிவித்தார். அதனால இவ்வுலக இன்பத்தை மட்டுமே எதிர்பார்த்துண்டு இருக்கறவன் ஐஸ்வர்யார்த்தி. இந்த வகையை மட்டும் கண்ணன் ரெண்டா பிரித்தார். ஒருத்தனை ‘ஆர்த்தன்’னு பேர் வைச்சார்; மற்றொருத்தனுக்கு ‘அர்த்தார்த்தி’ன்னு பேர் வைச்சார். இருக்கற சொத்தை தொலைச்சுட்டு திரும்ப மீட்டுக்குடுன்னு கேட்க வரவன் ஒரு வகை. இல்லாத சொத்தை புதுசா குடுன்னு கேட்க வரவன, இது மற்றொரு வகை. அடுத்தது கைவல்யார்த்தி. இவர் சித்தை அனுபவிக்கிறவர். அவருக்கு சரீர இன்பத்தில ஆசை கிடையாது. இந்த சரீரத்தை விட்டுடனும். ஜனா மரண மோட்சம் ஏற்பட வேண்டும். பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, இது அவருக்குப் பிடிக்கறதில்லே. அது அத்தனையும் துறந்து இந்த சரீரத்தை விட்டு ஆத்மா புறப்பட்டு, மீளாத இடத்தைப் போய்க் கிட்ட வேண்டும். அப்படி ஒரு இடத்தில போய், அசரீரியாய், சரீரமே இல்லாமல் ஆத்மாமட்டும் தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும். இதைத்தான் கைவல்யா அனுபவம்ன்னு சொல்லுகிறார்கள். கேவல – தாழ்ந்தது; கைவல்யம் – தாழ்ந்த அனுபவம். ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டால் அது தாழ்ந்த அனுபவம். அவனைத்தான் இந்த ஸ்லோகத்திலே ஜிஜ்ஞாஸு-ன்னு கண்ணன் சொல்றார். மூன்றாவது பகவல்லாபார்த்தி. இவர் ஈஸ்வரனை அனுபவிக்கிறவர். இவர் ஞாநி. ஞாநின்னு சப்தம் இருந்தாலும், பக்தனைப் பற்றித்தான் இந்த இடத்தில் சொல்லுகிறார். ஞாநி என்பது இங்கே ஞானயோக நிஷ்டனைக் குறிக்காது. பக்தி மார்க்கத்திலே இருக்கிற பக்தனைப் பற்றித்தான் இங்கே பேச்சு. இந்த ஸ்லோகத்திலே இருந்து தெரிஞ்சுக்க வேண்டியது, பக்தியை இந்த மூன்று பயனுக்க்காகவும் பண்ணலாம். ஐஸ்வர்யத்தை வேண்டியோ, கைவல்யத்தை வேண்டியோ, பகவானை வேண்டியோ பக்தி பண்ணலாம். ஆனால் எதை நோக்கிப் பண்ண வேண்டும் என்று அடுத்த ஸ்லோகத்தில் சொல்றார்.
தேஷாம் – அந்த நாலு பேருக்குள்ளே, ஞாநீ – நாலாவதா ஞாநீன்னு சொன்னேனே அவன்தான் சிறந்தவன். விஸிஷ்யதே – ரொம்ப உசந்தவன். நித்யயுக்தஹா – அவன் ஒருத்தந்தான் என்னைவிட்டுப் பிரியமாட்டேன்னு சொல்றான். ஏகபக்திஹி – என்னிடத்திலதான் பக்தி, இன்னொருத்தரை அவன் திரும்பிப் பார்க்கவே மாட்டான். மூன்று வகைப்பட்டவர்களும் திருமலையிலே ஸ்ரீநிவாசனைச் சேவிக்க வருகிறார்கள். ஆழ்வார் சொல்றார்.
(பொய்கையாழ்வார் – 2107) எழுவார் – யாரெல்லாம் ஐஸ்வர்யத்தைக் கேட்டுண்டு வராளோ, அவனுக்குப் பெருமாள் குடுப்பர். ஏன், மாட்டேன், பகவத் அனுபவம்தான் குடுப்பேன். நீ ஐஸ்வர்யம் கேட்டா குடுக்க மாட்டேன்னு சொல்லிடறதுதானேன்னா, அடுத்த தடவை வரவே மாட்டானே, அந்த பயத்திலதான் பெருமாள் குடுக்கறாராம். இந்த தடவை குடுத்தாலும் சரி, அடுத்த தடவைக்குள்ளே இதை அனுபவிச்சுப் பார்த்துட்டு பிரயோஜனம் இல்லேன்னு தெரிஞ்சிண்டு, என் அனுபவத்தைக் கேட்டு வரமாட்டானா? அப்படிங்கற ஆசையிலே பெருமான் குடுக்கிறான். ஆனா நாம அதைவிட சாமர்த்தியக்காரா. அந்த ஆசையை பகடைக்காயா வைச்சே, எத்தனை தடவை போய் என்னென்ன அவரிடத்திலே வாங்கிண்டு வரணுமோ, எல்லாத்தையும் வாங்கிண்டு வந்துடுவோம். சரி, போனாப் போறது, சொல்லிணுட்டு ஒரு நாலு நாளாவது இருந்து கைங்கர்யம் பண்ணிட்டு, ‘சரி, போய்ட்டு வரேன். நீர் குடுத்த ஐஸ்வர்யத்தை அனுபவிக்கணும். போய்ட்டு வரேன்’னு சொல்லிட்டு கிளம்பலாமோல்லையோ?, எழுவார், சொல்லவேயில்லையாம். கையில பொருள் விழுந்தது பாருங்கோ, எழுவார். ஆழ்வார் சொன்னார், அதுக்கப்புறம் அங்க அவன் ஆளையே காணோம். பெருமாள் திரும்பிப் பார்க்கிறார், ‘எங்க வந்தானே, நாலு பேர் நின்னுண்டு இருந்தானே’ன்னா, போயாச்சு. எப்ப கையில பொருள் விழுந்ததோ, புறப்பட்டுப் போயிட்டான். அடுத்தது கைவல்யார்த்தி, அவன் கொஞ்சம் தேவலை. ஐஸ்வர்யார்த்தி அளவுக்கு மோசமில்லே. விடைகொள்வார் – நான் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனானாம். இரண்டாவது வகை. அவனும் போய்ட்டான், இருக்கலே. ஆனாப் போனாப் போறதுன்னு சொல்லிண்டாவது போனானோ இல்லையோ? மூன்றாவது வகை, வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார். பெருமானுடைய திருவடிகளுக்கு வந்தான், என்ன வேணும்ன்னு கேட்டார். கைங்கர்யத்தை வேணும்ன்னு கேட்டான். கைங்கர்யத்தையும் குடுத்தார் பெருமாள். நாலு நாளாச்சு, நாப்பது நாளாச்சு, அங்கேயே உட்கார்ந்துண்டிருக்கான். ’என்ன இங்கேயே இருக்கியே’ன்னா, ‘இருக்கறதுக்குத்தானே கேட்டேன். நான் உன்கிட்ட கேட்டதே உன்னோடகூட இருக்கணும்ங்கிறதுக்காகத்தான். அதை நீயும் குடுத்துட்டே. இனி இந்தத் திருவடிகளைவிட்டு எங்கும் போறதில்லே’, அப்படின்னு இருக்கறவந்தான் மூன்றாவது வகை. வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார். வைகல்ன்னா, எப்போதும் தொழுகிறான். எப்போதும் கைங்கர்யம் பண்ணுகிறான், அதைத்தவிர அவனுக்கு உள்ளத்திலே சிந்தனை இருக்கறதே இல்லை. அர்ஜுனன் கேட்டான், ‘அந்த பக்தி எப்போ ஏற்படும்?’. நேத்திக்கு வந்துருக்குமா, நாளைக்கு வந்துடுமா, அந்த பக்தி எப்போ வரும்ன்னு கேட்கிறார்.
பஹூநாம் ஜந்மநாம் – ஒரு பிறவி, ரெண்டு பிறவிகளல்ல, எத்தனையோ ஜன்மங்கள் போயிருந்தால், அந்தே – மெதுவா கர்ம ஞான யோகங்கள் முற்றி முற்றி, பல பிறவிகளுக்குக் கடைசியிலே, நம்முடைய பாவ புண்ணியங்கள் அத்தனையும் தொலைந்து, என்னென்ல்லாம் தடுத்துக் கொண்டிருக்கிற கர்மங்களோ, அது அத்தனையும் தொலைந்து, ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே – அப்படிப்பட்ட ஞானி முற்றித்தான் என்னை வந்து அடைகிறான். சுலபத்துல அது கிடைச்சுராது அர்ஜுனா, நாளாகும். எவ்வளவு நாள் காத்துண்டு இருக்கணும்னா, ’உன் ஆசை அளவுக்குக் காத்துண்டிருக்கணும். உடனே சேரணும்ன்னு ஆசை இருந்ததுன்னா, அதுக்குத் தகுந்தது செய்யப் போறேன், குடுத்துடப் போறேன். உனக்கு, சரி, அடுத்த வருஷம் போதும், அடுத்த வருஷம் போதும்ன்னு இருந்தா அப்பதான் குடுக்கப் போறேன்.’ அடுத்த வருஷம்ன்னு பேச்சுக்கு, பயப்படுத்த வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனா கீதையில இருக்கறது ‘அடுத்த ஜென்மா’. அந்த ஞாநி எப்படி இருக்கார்ன்னு அர்ஜுனன் கேட்கிறார். ‘அவனா? வாஸூதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸ்துர்லப:’ அப்படி ஒருத்தனைத்தான் நானும் ரொம்ப நாளாத் தேடிண்டே இருக்கேன் அர்ஜுனா, கிடைக்கவேயில்லேன்னார் அவர். ரொம்ப நாழியாச் சொல்லிண்டு இருக்கியே, பக்தி பக்தி, பக்தனுட்டு, அது யாருன்னு உனக்குத் தெரியாதான்னா, அப்படி ஒருத்தன் இருப்பனான்னு தேடிண்டு இருக்கேன். வாஸுதேவ ஸர்வம் – வாஸுதேவனே சர்வமும், எல்லாம்ன்னு சொல்றதுக்கு, இதி ஸ மஹாத்மா ஸ்துர்லபஹா – துர்லபன் = கிடைப்பதற்கு அரியவன்; ஸ்துர்லபன் = மிக மிக அரியவன். தேடித்தேடிப் பார்த்தாலும் பத்துக் கோடியில ஒருத்தன் கிடைப்பனாங்கிறது தெரியாது. -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto) April 07 பக்தி என்பது என்ன? பாகம் 2முந்தைய பாகம், பாகம் 1 கீதையில் மொத்தம் 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்கள். முதல் ஆறு அத்தியாயங்களாலே ஆத்ம சாட்ஷாத்காரத்தைப் பற்றி கண்ணன் பேசுகிறார். இரண்டாவது ஆறு அத்தியாயங்களாலே பரமாத்ம சாட்ஷாத்காரத்தைப் பற்றி பேசினார். மூன்றாவது ஆறு அத்தியாயங்களாலே விடுபட்டுப் போன பொருள்களைச் சொல்லி முடித்தார். இதற்கு ஷட்கம் என்று பெயர், ஆறு அத்தியாயம் சேர்ந்தா ஒரு ஷட்கம். பிரதம ஷட்கம், மத்யம ஷட்கம், சரம ஷட்கம் என்று சொல்லுவர்கள். பிரதம ஷட்கத்திலே ஆத்ம சாட்ஷாத்காரம், அதுதான் பயன். இது முதல் படி என்று வைத்துக் கொள்ளுங்கள். மத்யம ஷட்கத்திலே பரமாத்ம சாட்ஷாத்காரம், இது மேல்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் நான் யார் என்பது புரிந்தால்தான், என்னை உடையவர் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பிறக்கும். நானே யார் என்று தெரியவில்லையெனில், பரமாத்மாவைப் பற்றி அறிந்து கொள்ள இயலாது. ஆத்ம சாட்ஷாத்காரம் என்றால், நான் ஆத்மா என்று முழுமையுமாகப் புரிந்து கொண்டு, அந்த ஆத்மாவையே அனுபவிக்கிற அளவுக்குப் போய்டுவோம், இதுதான் லட்சியம். லட்சியம்ன்னு சொல்லிட்டாலே அதை அடையறதுக்குப் பாதை சொல்லணுமோல்லையோ? அப்போ ஆத்ம சாட்ஷாத்காரமான லட்சியத்துக்கு எது பாதை? கர்ம யோகம், ஞான யோகம் பாதை. அந்தப் பாதைதான் முதல் ஆறு அத்தியாயங்களாலே சொல்லப்பட்டது. கண்ணன் இந்த ஆத்மாவைப்பற்றி ரொம்ப தூரம் உசத்தியா பேசிட்டார். தேகம் ரொம்ப மட்டம், ஆத்மா ரொம்ப உயர்ந்தவர், அழிவே இல்லாதது, ஆத்மா சுதந்திரன், அவனுக்கு இருக்கிற ஞானம் ஏது, அவனுக்கு இருக்கிற ஆனந்தம் ஏது, துக்கப்படறதுக்கு பிறந்தவரே இல்லே அவர், அவர் இந்த முக்குணங்களுக்கு உள்ளே அகப்படவே கூடாது, என்னென்ன பெருமை ஆத்மாவுக்கு உண்டோ, சொல்லிட்டாரோல்லையோ? ஆனா இதைச் சொல்லிண்டே போறச்சே முடிக்கிறதுக்குள்ளே ஒரு ஆபத்து வந்துடுத்து. அந்த ஆபத்தை மாற்ற வேண்டிய முக்கிய நிர்பந்தம் ஆறாவது அத்தியாயக் கடைசியில வந்தது. இதுவரைக்கும் ஆத்ம சாட்சாத்காரத்தைப் பற்றி சொல்லிட்டு வந்தாரோல்லையோ, அர்ஜுனன் என்ன நினைச்சுண்டானா, முதல் படிக்கட்டு நூறு படிக்கட்டு ஏறினோமோல்லையோ, எதுக்கு? அடுத்த நூறு படி ஏறணும்ங்கிறதுக்காகத்தானே ஏறியிருக்கோம்? ஆனா இந்த முதல் நூறு படியிலேயே முடிவு வந்துடுத்துன்னு நினைச்சுனுட்டான். ஆத்மாவைப்பற்றித் தெரிஞ்ச உடனேயே, ‘ஓ, ஆத்மாவைப் பற்றிச் சொல்லிட்டார் கண்ணன், நாந்தான் ஆத்மா, நாந்தான் சிறந்தவன் போலருக்கு உலகத்திலேயே’, அப்படிங்கற முடிவுக்கு வந்துட்டான். ஆத்மாவினுடைய பெருமையைப்பற்றித் தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்க, ‘சுதந்திரன் ஜீவாத்மா’ அப்படிங்கிற தப்பான அபிப்ராயத்துக்கு வந்துடுவோம். ஒரு விசயத்தை நல்லா அடிக்கோடு போட்டு ஞாபகம் வச்சுக்கோங்கோ. ’ஆத்மா ஞானமயன்’ங்கிறது உண்மை, தேகத்தைக் காட்டிலும் மிக உயர்ந்தவர்ங்கிறது உண்மை, ஆனந்தமயன்ங்கிறது உண்மை, ஆனந்தத்துக்குன்னேதான் பிறந்திருக்கார், சுக, துக்கம் தேவையில்லே, சுகத்துக்குன்னேதான் இருக்கார், மிக உயர்ந்தவர், அழிவே அற்றவர், எந்தச் சரீரத்துக்குள்ளும் போகக்கூடிய சக்தி படைத்தவர், இப்படி எல்லாம் இருக்கோல்லையோ? இந்த மாதிரி ஒருத்தரை நான் உசத்தியாக் கொண்டாடிண்டே இருந்தா என்ன தெரியுமா ஆகும்? அப்போ, ‘நானே’ங்கிற எண்ணம் வந்துரும். ஆத்மாதான் எல்லாம், ஆத்மா சுதந்திரன், இந்த மாதிரி எண்ணத்துக்குத்தான் ‘அகங்காரம்’ன்னு பெயர். தான் அல்லாத, தேகம் அல்லாத ஆத்மாவைத் ’தான்’னு நினைச்சிண்டேன், அடுத்தது ‘சுதந்திரன்’னு புரிஞ்சிண்டேன். நான் யாருக்கும் அடிமைப்படவே வேண்டாம். ’நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ங்கிறாளோல்லையோ? நாமார்க்கும் குடியல்லோம்னெல்லாம் சொல்ல முடியாது. அவன் கண்டிப்பா கண்ணனுக்கு குடிதான். கண்ணனுக்கு அடிமைப்பட்டவர்கள்தாம் நாம். ஜீவாத்மா தன்னைத்தானே சுதந்திரன்னு நினைச்சுக்கிறான், அப்படி அல்ல, ஜீவாத்மா பகவானுக்கு அடிமை, இப்படிங்கிற ஞானம் இவனுக்கு ஏற்படணுமோல்லையோ? ஆத்மா சுதந்திரனா இருந்துட்டா, பெரிய கேள்வி வந்துருமே? அப்போ நான் நினைச்சதை எல்லாம் நடத்த முடியணுமே? நான் எத்தையோ நினைச்சிண்டிருக்கேன், வேற ஏதோ நடந்துண்டிருக்கு. எது நடக்காதுன்னு நினைச்சமோ அது நடக்கிறது, எது நடக்கும்ன்னு நினைச்சமோ அது நடக்கறதேயில்லே. இது இத்தனையும் வைச்சிண்டு, நான் சுதந்திரன் நினைத்திருப்பதிலே ஏதானும் லாபம் உண்டா? இது நிச்சயமா என்னுடைய முடிவில் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு, ஆனா அதை ஒத்துக்க மாட்டேங்கிறான். பகவான் ஆண்டான், நான் அடிமை; அவன் ஸ்வாமி, நான் தாசன். இதைப் புரியவைக்க வேண்டிய நிர்பந்தம் கண்ணனுக்கு ஏற்பட்டது. ஏன்னா ஆறாவது அத்தியாயம் நெருங்க, அர்ஜுனன் ஆத்மாவைப் பற்றி, நான் சுதந்திரன்னு ஓகோன்னு புரிஞ்சுனுட்டான். கண்ணன் ரொம்ப அவசரமா மாத்திட்டார், ‘அர்ஜுனா, நீ எத்தையோ புரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காக நான் சொல்லப்போனா, கடைசிலே நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்ட போலருக்கு. இல்லே நான் சொல்றேன் கேட்டுக்கோ. கர்ம யோகம், ஞான யோகம்ன்னு இவ்வளவு நேரம் பேசிட்டு வந்தேன் பார்,
எனக்கு இத்தனை நேரம் நான் சொன்ன கர்ம, ஞான யோகிகளைப் பிடிக்காது அர்ஜுனா’ன்னுட்டான். இதை முதல்லயே சொல்லியிருக்கலாம். இதை இத்தனை நாழி ஆறு அத்தியாயங்களில், நூற்றுக்கணக்கான ஸ்லோகங்களைச் செலவழிச்சுப்புட்டு அவன் புரிஞ்சுதோ, புரியலையோன்னு தவிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுனுட்டு, ஏழாவது அத்தியாயத்துக்கு முன்னாடி, ‘இவா இத்தனை பேரையும் எனக்குப் பிடிக்காது, யாரைப் பிடிக்குமோ இனிமே சொல்றேன்’னா, அதை முதலிலேயே ஏன் சொல்லலைன்னு கேட்டா, ‘அவனைப் பற்றி நேரச் சொல்ல முடியாது அர்ஜுனா, கீழ இருக்கறவன நீ தெரிஞ்சிண்டாதான், மேல இருக்கறவனை ‘இன்னான்’னு நான் சொல்லவே முடியும்’. இப்போ நாம் ஒரு விசயத்தைத் தெரிஞ்சுக்கறதுக்காகப் போறோம், அதை நேராவே சொல்லிடலாம், ஆனா சொல்ல முடியாது. அதை ஏத்துக்கறதுக்கு மனசை முதலில் பக்குவப்படுத்தனும். பக்குவப்படுத்திட்டு வந்தாத்தான் நாம என்ன சொல்லப்போறோம்ங்கிறது மனசு ஏற்கும். அதுவே இல்லேன்னு நேரடியா விசயம் சொன்னா, அது மனசிலே நிற்கவே நிற்காது. கண்ணன் இப்ப சொல்லப் போறது பக்தி யோகத்தை. பக்தி யோகத்தை ஏழாவது அத்தியாயத்திலேர்ந்து விரித்துரைக்கப் போகிறான். அதை நேர ஏத்திடலாமா? முதலில் அதை நேர ஏற்றுவதற்கு முடியாது. ஏன்னா ஆத்மாவைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டாதான் பரமாத்மாவைப்பற்றி தெரியும். அதனாலே முதல் நிலையில் ஆத்மாவைப்பற்றிச் சொல்லி, ஆத்ம சாட்ஷாத்காரத்தின் பெருமைகளை உரைத்து, அதை அடைவதற்கு கர்ம, ஞான யோகங்களே வழி, அப்படிங்கறதையும் பெருமாள் எடுத்துச் சொல்லிட்டார். அந்த கடைசி ஸ்லோகம் வரும் போது, அந்த கர்ம, ஞான யோகங்கள் யார் பண்ணுகிறானோ, அவன் உயர்ந்தான் அல்லன். பின்னே யார் உயர்ந்தவன்னு அர்ஜுனன் கேட்கிறார். ‘மத்கதேந அந்தராத்மந ஸிரத்தாவான் பஜதே யஹா மாம்’ – யார் ஒருத்தன் சிரத்தையோடே என்னிடத்திலேயே நெஞ்சு செலுத்தி என்னை அடைவதற்காக முயற்சிக்கிறானோ அவன்தான் சிறந்த யோகி. அவன்தான் சிறந்த ஞானி.’ அப்போ முதலிலே கர்ம யோகத்தைச் செய்து, ஆத்ம சாட்ஷாத்காரம் பெற்று, அந்த ஆத்மா எப்படிப்பட்டதுங்கிற விசாரம் வந்து, வெறும் ஞானமயன், ஆனந்தமயன், சுதந்திரன் மட்டுமல்ல, பகவானுக்கு அடிமை, அவனுக்கும் இவனுக்கும் நெருங்கின தொடர்பு, அவனன்றி இவனில்லை, இவனன்றி அவனில்லை, அவன் ஆத்மா, இவன் சரீரம், இவன் இருப்பதே அவனுக்காக, இவனுடைய வாழ்க்கையே அவனுக்காக, இவன் அவனுக்குத் தொண்டு புரிவதற்கே இருக்கிறான், அதை என்று புரிந்து கொண்டு செய்கிறானோ, மறுபிறவி எடுக்க வேண்டிய தேவையில்லை. அவன் இருக்கும் இடம் ஏதோ, அதை அடைவதுதான் இவனுக்கு இருக்கும் கடைசியான லட்சியம். இந்த அர்த்தங்களெல்லாம் இவன் புரிஞ்ச்சுக்கணுமோல்லையோ? அதனாலதான் ஏழாவது அத்தியாயத்திலே பேசறதுக்கு ஆரம்பிச்சார். இவ்வளவு நேரம் ஆத்மாவைப் பற்றிச் சொல்லிண்டு வந்தவர், அப்படியே விட்டுட்டார். விட்டுட்டு ஏழாவது அத்தியாயம் தொடங்கித்து, தன்னைப் பற்றி ‘ஓகோ’ன்னு பேசிக்க ஆரம்பிச்சுட்டார். அர்ஜுனன் பார்த்தார், ‘என்ன திடீர்ன்னு உன்னைப் பத்தி பேசிக்கறயே’ன்னா, ‘ஆச்சு, உன்னைப் பத்தி ரொம்ப நேரம் பேசிட்டேன், இனிமே என்னைப் பத்தி பேசிண்டாதான உண்டு. எவ்வளவு நேரம் ஆத்மாவைப் பத்தியே சொல்லிண்டு இருக்கறது? இந்த உயர்ந்த ஆத்மான்னு புரிஞ்சிண்டியே அர்ஜுனா, அந்த ஆத்மாக்கள் கோடி, கோடி, கோடி, கோடிப் பேர்கள். இந்த இத்தனை ஆத்மாக்களையும் என்னுடைய திருமேனியின் ஒரே ஒரு சிறு மயிர்க்காலாலே தாங்குகிறேன். எத்தனை உலகங்கள் உண்டோ, எத்தனை தேவதைகள் உண்டோ, எத்தனை ஆத்மாக்கள் உண்டோ, அவர்கள் அத்தனை பேரையும் நான் தாங்குகிறேன் அர்ஜுனா. ’விஷ்டப்யாகம் இதம் க்ருஷ்ணம் ஏகாம்ஸேன ஸ்திதோ ஜகது’, என்று தன்னுடைய பெருமைகள் அத்தனையும் ஏழாவது அத்தியாயத்திலே சொல்ல ஆரம்பிக்கிறார். இது எதுக்கு இப்போ? ஏனெனில் யாரொருத்தருடைய பெருமைகளைப் பற்றி நாம நிறையத் தெரிஞ்சிக்கிறமோ, தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்கத்தான் அவரிடத்திலே நமக்கு ஈடுபாடு வரும். இது உண்மைதானே? இப்போ ஒருத்தரிடத்திலே எனக்கு ஈடுபாடு வரணும்ன்னு வச்சுக்கங்கோ, அவர் எவ்வளவு உயர்ந்தவர், எவ்வளவு வேண்டியவர், எனக்கு எத்தனை நல்லதுகள் பண்ணியிருக்கார், நமக்குன்னே இருக்கார். அப்போ அவருக்குன்னே நாம இருக்கணும்ன்னு தோண வேண்டாமா? அதைப்பற்றி முதல்ல அர்ஜுனன் புரிஞ்சுக்கணுமோல்லையோ? அதனால தான் அன்றி லோகத்திலே அணுவும் அசையாது, தானேதான் அத்தனையும், அப்படிங்கறத ஏழாவது அத்தியாயத்திலேர்ந்து பேச ஆரம்பித்தார்.
இந்த உலகம் அத்தனையும் என்னுதான் அர்ஜுனா. அப்படியா, நீ என்ன தேரோட்டியா தானே உட்கார்ந்திட்டிருக்கே, திடீர்ன்னு என்னமோ உலகம் அத்தனையும் உன்னுதுன்னு சொல்றியே? நீ யாரு, உலகம் யாரு, எப்படி சம்பந்தம், என்று அர்ஜுனன் கேட்க, முதல் சில ஸ்லோகங்கள் ரொம்ப ஆச்சர்யமான ஸ்லோகங்கள். இதன் அர்த்தம் புரிஞ்சாத்தான் நாம ஏன் பகவான்கிட்ட பக்தி பண்ணனும்னே தெரியும்.
ஏ மஹாபாஹோ அர்ஜுனா, உண்மையைத் தெரிந்து கொள். பூமி, ஆபஹா, அனலஹா, வாயுஹு, புத்தி, என்னென்ன உண்டோ, லோகத்தில உள்ள அத்தனைத் தத்வங்களும் என்னுடையவை. இதெல்லாம் என்னுடைய சொத்து. அசித் தத்வம் முழுக்க என் சொத்து. சித் ஆன ஆத்மா அத்தனையும் என் சொத்து. அவை அத்தனையும் நான் இன்றி அசைவதற்குக்கூட இயலாது. இவற்றைப் படைப்பதோ, காப்பதோ, அழிப்பதோ, நான். இவற்றை இத்தனையும் தாங்குவது நான். இதற்குக் காரணமே நான். அப்போ சித் ஆகட்டும், அசித் ஆகட்டும், அவனுடைய சொத்துன்னால், சொத்து ஸ்வாமிக்காகத்தானே இருக்கணும்? அதை விட்டுட்டு நான் சுதந்திரன்னு நினைத்தால், அது கூடாது, நீ பரதந்திரன். சேஷத்துவம், பாரதந்திரியம், இந்த ரெண்டு சொல் அவசியம் நாம தெரிஞ்சுக்கணும். கீதை புரியணும்னா, இந்த ரெண்டு சொல் தெரியணும். சேஷத்துவம்ன்னால், பகவான் சேஷி, நான் சேஷன். சேஷன்னால் அடிமைன்னு அர்த்தம். அடிமைன்னு தெரிஞ்சுண்டால் என்ன செய்ய வேண்டும்? கைங்கர்யம் பண்ண வேண்டியதுதான் ஒரே பயன். ஆத்மா தவிக்கிறதுக்குக் காரணம், ஆண்டானுக்கு அடிமை தொண்டு புரிவதை விட்டுவிட்டு, ஏதேதோன்னு சுத்திண்டு இருக்கிறபடியாலே, இவனால ஆனந்தத்தை அனுபவிக்கவே முடியறதில்லே. நம்ம ஸ்வாமி பகவான், அவனுக்கு நான் தாசன், தாசன் ஸ்வாமிக்கு கைங்கர்யம் பண்ணப் போறார், அப்படிங்கற எண்ணம் நமக்கு எப்பவாவது வரணுமோல்லையோ? அது வந்ததுன்னாத்தான் பக்தி பிறக்கிறதுன்னே அர்த்தம். அதனாலே பக்தி, பக்தின்னு கைங்கர்யம் இல்லாத பக்தியைப்பத்தி பேசவே கூடாது. கண்ணன் தெரிவித்தார், ‘உலகமே என்னுடையது என்று தெரிந்து கொண்டு, என்னைப்பத்தி சிந்திக்க ஆரம்பி. உன்னுடைய ஸ்வாமின்னு தெரிந்து கொள். எனக்குக் கைங்கர்யம் பண்றதுதான் உனக்குப் புருஷார்த்தம்ன்னு தெரிந்து கொள்.’, என்று ஏழாவது அத்தியாயத்தினுடைய ஆரம்பத்திலே சொல்ல ஆரம்பிக்கிறார். அப்ப ஒரு ஸ்லோகம் சொல்லியிருக்கார்.
’மனுஷர்கள் ஆயிரம் பேருக்குள்ள அர்ஜுனா, ஒருத்தன்தான் என்னை அறியனும்ன்னு முற்படுகிறான். அந்த அறிய முற்பட்டுத் தேடுதலில் இருக்கும் ஆயிரம் பேருக்குள்ள ஒருத்தன்தான், தேடுதல் வேட்டைல என்னைக் கண்டுபிடிக்கிறான். கண்டுபிடிச்சதில ஆயிரம் பேருக்குள்ள ஒருத்தன்தான் என்னை நெருங்குகிறான். நெருங்கினதில ஆயிரம் பேரில ஒருத்தன்தான் என்னை அடைகிறான்.’ அவ்வளவுதான். அப்படின்னா சல்லடையைப் போட்டு நாம பார்க்க வேண்டியதுதான் இப்போ. அவரு சொல்லியிருக்கதிலே, 1000-ல், 1000ல், 1000ல், 1000. இத்தனை பேரில் ஒருத்தன் என்னை அடையப் போகிறான் என்று சொன்னால், அந்த பக்தி எவ்வளவு துர்லபமானது? எவ்வளவு உயர்ந்தது? இதைப் புரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காகத்தான் கண்ணன் பேசவே ஆரம்பித்தார். ஒன்பது விதமான சம்பந்தங்கள் பகவானுக்கும் நமக்கும் உண்டு. பிள்ளை லோகாச்சார்யர் நவவித சம்பந்தம்ங்கிற இடத்திலே தெரிவித்தார்.
பிதாச – அவர் தகப்பன், நான் பிள்ளை; ரக்சஹஹா – அவர் காப்பவர், நான் காக்கப்படுபவன்; சேஷி – அவர் ஆண்டான், நான் அடிமை; பர்த்தா – அவன் கணவன், நான் மனைவி; ஞேயஹா – அவன் அறியப்படுவன், நான் அறிபவன்; ரமாபதிஹி – அவர் ஸ்வாமி, நான் தாசன்; ஆதாரஹா – அவர் எல்லாம் தாங்கறவர், நான் தாங்கப்படுபவன்; ஆத்மா – அவர் ஆத்மா, நான் சரீரம்; போக்தா – அவர் அனுபவிப்பவர், நான் அனுபவிக்கப்படுபவன்; இப்படி ஒன்பதுவிதத் தொடர்பு ஒழிக்க ஒழியாத தொடர்பு. இந்த தொடர்பை யாராலும் வெட்டிவிடவே முடியாது. ஏன் பகவானாலே ஒன்று முடியாதென்றால், அது இதுதான். அவரால்கூட இந்தத் தொடர்பை வெட்டிவிட முடியாது. இதைத் தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்கத்தான் பக்தியே வளரும். அப்போ நமக்கும் அவருக்கும் தொடர்பு போகாது. நம்மைத் தாங்குபவர் அவர், படைப்பவர் அவர், ஜகத்துக்கே காரணம் அவர், ஸ்ரீயப்பதி அவர், நித்ய சேஷ சாயி அவர், உலகத்துக்கெல்லாம் படைப்பும், அழிப்பும் காரணமாய் இருக்கறவர் அவர், அழகான திருமேனி படைத்தவர் அவர், சௌந்தர்யம், மாதுர்யம், லாவண்யம், காம்பீர்யம், ஸ்தைர்யம், வீர்யம், பராக்ரம், வாத்ஸல்யம், சௌசில்யம், ஸ்வாமித்வம், சௌலப்யம், இப்படி என்னென்ன கல்யாண குணங்கள் உண்டோ, அத்தனை குணங்களும் படைத்தவர் அவர், என்று மேலும், மேலும், மேலும் அவன் எங்கே, எங்கே, எங்கே, எங்கேன்னு உயர இருக்கிறதைத் தெரிஞ்சிண்டாதான், ஓ, நான் இங்கே, இங்கே, இங்கேன்னு கீழ இருக்கிறதே தெரியும். அவர் எங்கு இருக்கிறார் மேலேன்னு நாம தெரிஞ்சுக்கலே, நாம மேல இருக்கறதா நினைச்சுடுவோம். ஆண்டான் எவ்வளவு உயரத்துல இருக்கார்ன்னு தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்கத்தான் அடிமை எவ்வளவு கீழ இருக்கார்ன்னு தெரியும். ஒண்ணும் பயப்படறதுக்காகச் சொல்லலை இப்போ. ஆண்டாள் தெரிவித்தாள், ‘நீ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன், நாங்கள் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம்.’ நீ குறை ஒன்று இல்லாத கோவிந்தனா இரு, நாங்கள் அறிவே இல்லாதவாளா இருக்கோம். நாங்கள் இப்படியே இருந்து உனக்கு கைங்கர்யம் பண்ணிண்டே இருக்கோம். ரொம்ப சுலபமா முடிச்சுடலாம் இதை. இந்தப்பக்கம் மேடு, இந்தப்பக்கம் பள்ளம். நடுவுல ஒரு பாதை பண்ணனும்னா என்ன பண்ணலாம்? மேட்டை வெட்டி பள்ளத்துல போட்டுட்டா பாதையாயிடாது? கண்ணன் மலையாட்டம் குணங்களோடு இருக்கார், நான் மடுவாட்டம் ஒன்றும் இல்லாம, தோஷங்களோடு இருக்கேன். அவர் குணங்ள்ல ரெண்டு எடுத்து என் தலையில போட்டுட்டார்ன்னா, நான் அவருக்கு கைங்கர்யம் பண்ண ஆரம்பிச்சுருவேன். எவ்வளவு சமமாகக்கூட கண்ணனை அழைத்து வரலாம். ஆக தான் யார்ங்கிறதை ஏழாவது அத்தியாயத்தில் சொல்லி, இந்த பரமாத்மாவை அறிந்து, அடைந்து, கைங்கர்யம் பண்ணுவதே ஜீவாத்மாவுக்குப் புருஷார்த்தம், என்று சொன்னார். புருஷார்த்தங்கள் நாலு. தர்ம, அர்த்த, காம, மோட்சம். இதில் கடைசியாச் சொன்ன மோட்சம்தான் உயர்ந்த புருஷார்த்தம். அது ஏதெனில், பகவானை அறிந்து, அடைந்து, அவனுக்குக் கைங்கர்யம் பண்ணுதல். இதை அடைவதற்கு ஏது வழி? கீழே ஆத்ம சாட்ஷாத்காரத்துக்கு ஏது வழி என்று கேள்வி கேட்டுண்டு, கர்ம, ஞான யோகங்களே வழின்னு பார்த்துட்டோம். இப்போ அடுத்த நிலைக்கு போகனுமோல்லையோ? பரமாத்ம சாட்ஷாத்காரத்துக்கு. ஆத்மாவுக்குள்ளும் இருந்து, அவரை இரட்சிக்கக்கூடிய பரமாத்மா, அவரை அடைவதற்கு ஏது வழியென்றால், பக்தியோகம் வழி, என்று ஏழு, எட்டு, ஒன்பதாகிற மூன்று அத்தியாயங்களாலே தெரிவிக்கிறார். கர்ம, ஞான யோகங்களை அங்கமாக் கொண்டு பக்தி பிறக்கும். பக்தியை உபாயமாகக் கொண்டு மோட்சம் பிறக்கும். பரமாத்ம சாட்ஷாத்காரம்ங்கிறது உயர்ந்த நிலை. அதை அடைவதற்க்கு பக்தி யோகம். பக்தி யோகம் பண்ணுவதற்கு ஆத்ம சாட்ஷாத்காரம் வேணும், ஆத்ம சாட்ஷாத்காரம் அடையணும்ன்னா, கர்ம, ஞான யோகங்களைச் செய்ய வேண்டும். இப்போ ஒரு முக்கியமான கேள்வி. பக்தி முற்றி ஞானமா? ஞானம் முற்றி பக்தியா? இப்ப நீர் சொன்னதைப் பார்த்தா ஞானயோகத்துக்கு அப்புறம்ன்னா பக்தின்னு சொல்றீர்ன்னா, ஆமாம், கண்ணன் அப்படித்தான் சொல்லியிருக்கார். கண்ணன் கீதையிலே ஆறு அத்தியாயங்கள் வரைக்கும் கர்ம ஞான யோகங்களைச் சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் ஏழாவது அத்தியாயத்திலிருந்துதான் பக்தியைப் பற்றியே பேசுகிறார். அதனாலே ஞானமோ, கர்மமோ தாழ்ந்தவை. அதைவிட பக்தி மிக, மிக உயர்ந்தது. ஞானத்தைவிட பக்தி உசந்ததா, ஞானமார்க்கம் வேறயா, பக்தி மார்க்கம் வேறயான்னா, ஒண்ணும் வேற இல்லே. ரெண்டும் ஒண்ணுதான். ஏன் அப்படிச் சொல்றான்னா, பக்திச்ச ஞான விஷேஷஹா, பக்திங்கறது ஞானமே முதிர்ந்த நிலை, கனிந்த நிலை. முதல்ல நாம இது இத்தனையும் தெரிஞ்சிண்டாதான், இந்த மூடத்தனமான பாவனையே (பகவானைப் பற்றி பாடுதல், ஆடுதல், நாம சங்கீர்த்தனம் பண்ணுதல்) வரும். ஞானமார்க்கத்தைக் கடந்தோம்னாத்தான் பக்தி பாவனையே நமக்குக் கிட்டும். ஆக முதலில் கர்மங்களைச் செய்து, ஞானத்தோடு கர்மங்களைச் செய்து, ஞானம் முற்றி பக்தி பிறந்து, பிற்பாடு பக்தியோகத்தாலே பகவானை அடைகிறோம். நமக்கு சந்தேகம் வரும், சாஸ்திரம் என்ன சொல்லியிருக்கு? பகவானைப்பற்றித் தெரிந்து கொள், அந்தத் தெரிகையினால உனக்கு மோட்சம். ‘ததா வித்வான் தத் ப்ரம்யேதி ஸதபோதப்யத ப்ரம்மமிது ஆப்நோதி பரம்’ – ப்ரம்மத்தை எவன் ஒருத்தன் அறிந்து கொள்கிறானோ, பரம் ஆப்நோதி - அவன் ப்ரம்மத்தையே அடைந்து விடுகிறான். அப்போ அறிகை, வேதனம், உபாசனம், த்யானம், இந்த அறிதலாகிற ஞானம்தானே மோட்சத்துக்கு மார்க்கமாகச் சொல்லப்பட்டிருக்குன்னா, வாஸ்தவம். முதல்ல ஒரு விஷயத்தைப் பத்தின ஞானம் ஏற்படும். அந்த ஞானமே முற்றுவதற்கு ஆரம்பிக்கும். ஞானம் முற்ற, முற்ற, அந்த விசயத்தைப்பற்றி நிறையத் தெரிய, தெரிய என்ன ஆகும்? அதைப்பத்தியே நினைக்க ஆரம்பிப்பமா? ஒருத்தரை ரொம்ப பிடிச்சுருக்குன்னு வைச்சுக்கங்கோ, அவரைப் பத்தி என்னென்ன நன்மையோ எல்லாத்தையும் நான் தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சிண்ட பிற்பாடு அவர் பாடுல ஒரு ஈடுபாடு, ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்பு விடாம இருக்க இருக்க, அவரைப்பத்தியே பேசுவென், அவரைப் பத்தியே நினைப்பேன், அவரைப் பத்தியே என்ன வேணுமோ முயற்சி எடுப்பேன், இது நாம பேசறச்சேகூடத் தெரியும். ஒருத்தரை ரொம்ப எனக்குப் பிடிச்சிருக்குன்னு வச்சுக்கங்கோ, எதப்பத்தி பேசிண்டிருந்தாலும் அவர்கிட்ட கொண்டுபோய் முடிச்சிடுவா. அதைப்போலத்தான் இங்கேயும். முதல்ல ஒரு விஷயத்தில ஈடுபாடு ஏற்பட்டது. அப்போ திரும்பத் திரும்ப அதைப்பத்தியே நினைச்சேன். இந்த நினைவுங்கிறதுதான் தியானம். அறிவு இருந்தாத்தான் நினைவே வரும். அறிவுங்கிறது, இப்போ இது ஜமக்காளம், அப்படின்னு தெரிஞ்சுக்கிறது அறிவு. இது ஓஹோன்னு காஷ்மீரத்துல பண்ணப்பட்டிருக்கு, இந்த ஒரு சதுர அடியே ஒரு இரண்டு லட்ச ரூபாய் இருக்கும், இதுல உட்கார்ந்துண்டிருக்கவாளுக்கெல்லாம் கீதை தெரிஞ்சுரும், இப்படியெல்லாம் ஏதானும் எனக்கு இதைப்பத்தி தெரிஞ்சு போச்சுன்னு வைச்சுக்கங்கோ, அதன் பேரில் எனக்கு ஈடுபாடு ஜாஸ்தியாப் போய்டும். வீட்டுக்குப் போன பிற்பாடும், அந்த கம்பளம் எப்பக் கிடைக்குமோ, அந்தக் கம்பளம் எப்பக் கிடைக்குமோ, இப்படின்னு நினைச்சிண்டே இருப்பேன். யாராவது வேற ஏதானும் பேச வந்தா, பேசாம இரும், நானே கம்பளத்தைப் பத்தி நினைச்சிண்டு இருக்கேன், நீ எதுக்கு என்னை இப்போ கூப்பிடறேன்னா, இது ஒரு உதாரணம். அதேபோல இப்போ கண்ணனுடைய வைபவங்களைத் தெரிஞ்சுனுட்டோம்னால், அப்ப மனசு அவனிடத்தில ஈடுபடுகிறது. ஈடுபடுவது நினைவாகத் தொடருகிறது. நினைவின் தொடர்ச்சி தியானமாக ஆகிறது. அந்த தியானம்ங்கிறது மெதுமெதுவே நீடித்து எந்தவித இடையூரும் இல்லாமல், தைலதாராவது அவிச்சின்ன ஸ்மிருதி சந்தான ரூபமாகும். இது பக்திக்குண்டான நேர் விளக்கம். தைலதாராவது அவிச்சின்ன ஸ்மிருதி சந்தான ரூபம். ஸ்மிருதி – நினைவு, நினைவின் தொடர்ச்சி (நினைவு, நினைவு, நினைவு). நினைவின் தொடர்ச்சி மட்டுமல்ல, இடையூறு இல்லாமல் நினைக்க வேண்டும். வேற யாராவது குறுக்க வந்து என்னைத் தட்டினாக்கூடத் தெரியாது. ஒரே நினைவு. அப்போ பகவான் அங்கேயிருக்கார், நாம இங்கேயிருக்கோம், ஒரு பாலமிட்டாற்போல நினைவு. அந்தப் பாலம் எப்படி இருக்கணுமாம்? தைல தாரையைப் போல இருக்கணும்ங்கிறா. ஒரு பாத்திரத்தில ஜலத்தை ரொப்புங்கோ, இன்னொரு பாத்திரத்திலே எண்ணையை ரொப்புங்கோ. ரெண்டு பாத்திரத்துக்கும் குழாய் வைங்கோ. ஜலக்குழாயைத் திறங்கோ. பிசிறு பிசிறா, இங்க ஒரு கோடு, அங்க ஒரு கோடுமாய் ஜலம் பாயும். அதே எண்ணைக் குழாயைத் திறங்கோ. பிசிறே இல்லாது விழும். ஒரு ஆற்றொழுக்குப் போலே விழும். இதைப் போல இடையூறாது இல்லாத தியானம் வேண்டும். அது மட்டும் இருந்தாப் போறாது, பக்திக்கு இன்னும் கொஞ்சம் வேணும். பகவானைப் பத்தி வெறும் தியானம் பண்ணிட்டாப் போறாது, அதிலே ஸ்நேகத்தைச் சேர்க்க வேண்டும். ஸ்நேகம்ங்கிறது, அன்பு, காதல், வேட்கை, அவா, பிரதிபக்தி, ஈடுபாடு, நினைவு, எப்படி வேணும்னாலும் வைச்சுக்கங்கோ. அவனிடத்தில இருக்கிற அன்பும், காதலும், வேட்கையும், அதைக் கலக்கணும். அப்போ, நினைவு, நீடித்த நினைவு, ஒரே நினைவு, இடைவிடாத நினைவு, நினைவில் அன்பு கலக்கிறது, அது பக்தியாக ஆகிறது. அந்த பக்தன் எப்படி இருப்பனாம்?
’ஹே அர்ஜுனா, அந்த பக்தன் யாரொருத்தன் என்னைத் தியானிக்கிறானோ, அவன் நெஞ்சு என்கிட்டதான் இருக்கும். அவன் வாய் என்னைத்தான் பேசும், அவன் கண் என்னைத்தான் பார்க்கும், காது என்னைத்தான் கேட்கும், அவன் கை என்னைத்தான் தொழும், அவன் கால்கள் என்னுடைய சன்னிதானத்தை நோக்கித்தான் நடக்கும், வேறு சிந்தனை அவனுக்கு இருக்காது. சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும், கண்ணனேன்னு இருக்கிறான். வேறே அவனுக்கு தாரகமோ, போஷகமோ, போக்யமோ கிடையாது. நான் இல்லாவிடில் அவன் வாழ மாட்டான். ஒரு நிமிஷம் நான் இல்லைன்னு அவனுக்குத் தெரிந்தால் அடுத்த நிமிஷம் உயிரையே விட்டுவிடுகிறான். இந்த பக்தன் எனக்கு ரொம்ப நெருங்கினவன். இது ஒரு ஜென்மம், ரெண்டு ஜென்மத்திலே வராது அர்ஜுனா, ஜென்மாந்திர சஹஸ்ரங்கள் போக வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கழித்து என்றோ என்னிடத்தில் வருகிறான். அந்த பக்தன் என்னிடத்தில எத்தனை அன்பைக் காட்டறானோ அர்ஜுனா, அதிலே பத்திலே ஒரு பங்கை திருப்பனும்ன்னு நான் நினைக்கிறேன், என்னாலே அது முடியலே. அவன் காட்டுற பக்தி மிக உயர்ந்ததா இருக்கு, ஆனா நான் காட்டும் சிநேகம் ரொம்ப சாதாரணமா இருக்கு’, என்று கண்ணன் தானே ஆசைப்பட்டு, தன்னை மறந்து போய் ஏழு, எட்டு, ஒன்பதாவது அத்தியாயத்திலே, தன் பக்தன் எப்படி தன்கிட்ட நடந்துக்கிறான், எப்படி ஒன்றும் எதிர்பார்க்காம பக்தன் நடந்துக்குறான்னுட்டு ஸ்லோகம், ஸ்லோகமா பண்ணிப்பண்ணித் தெரிவிக்கிறார். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto) |
|
|