| sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists | Help |
|
September 17 திருநெடுந்தாண்டகம்ஆழ்வார்களிலே கடைசியாக அவதரித்தவர் திருமங்கையாழ்வார். ’கலியன்’ என்பது அவருடைய இயற்பெயர். ’நீலன்’, அப்படிங்கறது தாயார், தகப்பனார் வைத்த பெயர். ஆனால் பகவானாலே கலியன் என்று, மிடுக்குப் படைத்தவர், சக்தி படைத்தவர் என்று பெயர் சூட்டப்பட்டார். இவர் பாடிய திவ்யப்ரபந்தங்கள் ஆறு. கார்த்திகை மாசம், கார்த்திகை நட்சத்திரத்திலே திருமங்கையாழ்வார் சீர்காழிக்கு அருகிலே திருக்குறையலூர்ங்கிற திவ்யதேசத்தில் அவதரித்தார். இவர் நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களுக்கு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களைப் பாடினார். வேதங்கள் நாலு, ரிக், யஜுஸ், சாம, அதர்வங்கள். இந்த நான்கு வேதங்களுக்குச் சமமாக நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களைப் பாடினார், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. வேதங்களுக்கு அங்கங்கள் ஆறு. शिक्षा (சிக்ஷா), व्याकरणं (வ்யாகரணம்), चन्थ: (சந்தஹா), निरुक्थं (நிருக்தம்), जोथिषं (ஜோதிஷம்), कल्पं (கல்பம்). என்று அந்த ஆறு அங்கங்களுக்குப் பேர். இந்த ஒன்றொன்றும் நமக்கு ஓரொரு படிப்பு சொல்லிக் கொடுக்கும். இந்த ஆறு அங்கங்களுக்குச் சமமாகத்தான் ஆறு பிரபந்தங்களை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். அப்போ அங்கிகளான வேதங்களாக நம்மாழ்வாரும், வேத அங்கங்களான ஆறை திருமங்கையாழ்வாரும், இப்படி அங்கம், அங்கிங்கற பாவத்திலே பாடியுள்ளார்கள். திருமங்கையாழ்வார் பாடிய பிரபந்தங்களிலே முதல்ல பாடப்பட்டது ‘பெரிய திருமொழி’. அடுத்துப் பாடப்பட்டது, திருக்குறுந்தாண்டகம். மேலே, திருஎழுகூற்றிருக்கை பாடினார். அடுத்து சிறிய திருமடல், பெரிய திருமடல். கடைசியாக திருநெடுந்தாண்டகம் பாடினார். இந்த வரிசையில்தான் திருமங்கையாழ்வார் பாடியிருக்கார். அப்போ ஆழ்வார்களிலே கடைசி, திருமங்கையாழ்வார். அவர் பாடின பிரபந்தங்களிலே கடைசி, திருநெடுந்தாண்டகம். அப்போ நாலாயிரம் திவ்யப் பிரப்ந்தங்களிலே காலக்கிரமத்தில் கடைசி பிரபந்தம் என்று பார்த்தால் திருநெடுந்தாண்டகம்தான். எது முதல்வதாக இருக்கும்? பொய்கையாழ்வாருடைய ’முதல் திருவந்தாதி’தான் முதல். திருமங்கையார் பாடின திருநெடுந்தாண்டகம் 30 பாசுரங்கள் கொண்டது. இதில் மிகவும் ஈடுபட்டிருந்தவர் ‘ஸ்ரீபராசர பட்டர்’. கூரத்தாழ்வானுடைய திருக்குமாரராய், பகவானே திரும்பப் பிறந்தான் என்று சொல்லுமளவுக்கு வைபவம் உடையவராய், பகவத் இராமானுஜர் நானேதான் பட்டராகப் பிறந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டவராய், பராசர பட்டருக்குப் பெருமை.
- என்று அவரைப் பத்தின தனியன். ஸ்ரீபராசர பட்டார்யஹா ஸ்ரீரங்கேச புரோகிதஹா – திருவரங்கத்தானுடைய ஆஸ்தானத்துக்கு பௌரோகித்ய கைங்கர்யம், புரோகிதராக பட்டர்தான் இருந்திருந்தார். ஸ்ரீவத்ஸாங்க ஸுதஹா – ஸ்ரீவத்ஸாங்கர், கூரத்தாழ்வான். ஸ்ரீவத்ஸன்னு அவர் திருநாமம். அவருடைய ஸுதஹ, அவருடைய திருக்குமாரர். ஸ்ரீமான் – நல்ல ஸ்ரீ சம்பத்து படைத்தவர். ஸ்ரேயஸே மேஸ்து பூயஸே – அவர் நம்மை அனுக்கிரகிக்கட்டும்ன்னு இந்தத் தனியன் சொல்லுகிறது. இந்த 30 பாசுரங்களை எல்லா பாவத்திலேயும் ஆழ்வார் பாடியிருக்கார். அதாவது, ஞானத்தோடே ஆண் பாவனையிலேயும், பிரேமத்திலே தாய் மற்றும் மகள் பாசுரமாயும் பாடுகிறார். இந்த 30 பாசுரங்களை மூன்று பத்துப் பத்து பாசுரங்களாக பிரித்துக் கொண்டுவிட வேண்டும். முதல் பத்துப் பாசுரங்களும் ஆண் பாவனையில் பாசுரம். அடுத்த இருபது பாசுரங்களூம் பெண் பாவனையோடே நாயகி பாவத்தில் பாடினது. அந்த இருபது பாசுரங்களை மேலும் பிரித்துக் கொண்டோம்னால், 11வது பாசுரத்திலிருந்து 20வது பாசுரம் வரை, தாய் பாவனையில் பாடினது. 21லிருந்து 30வது பாசுரம் வரை மகள் பாவனையில் பாடினது. முதல் பத்துப் பாசுரங்கள் ஆண் பாவனை, நிறைய வேதாந்த அர்த்தங்கள் இருக்கும். ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு. அடுத்த இருபது பாசுரங்கள் நேர்மார். முதல் பத்துப் பாசுரத்திலெ எவ்வளவு கஷ்டப்படுத்தினாரோ அது ஒன்னுமே அடுத்த இருவது பாசுரத்திலே இருக்காது. ஆனா முதல் பத்துப் பாசுரம் புரிஞ்சாலும் புரிஞ்சுடும். அடுத்த இருவது பாசுரம் சுலபத்திலே புரியவே புரியாது. ஏன்னா அந்த நிலை நமக்குப் புரிஞ்சான்னா, அந்த பாட்டு என்னன்னு புரியறதுக்கு. ஆக மூன்று பிரிவுகளையும் சேர்த்துப் பார்த்தால், தானான தன்மை, தாயான தன்மை, மகளான தன்மை. இதிலே என்ன அர்த்தம் சொல்றார்ன்னா,
(பகவத்கீதை – 10.9) இந்த ஸ்லோகத்திலே கண்ணன் மூன்று சப்தங்களைச் சொல்றார். மச்சித்தாஹ, மத்கதப்ராநாஹா, போதயந்தப் பரஸ்பரம். இந்த மூன்று சொற்களுடைய பொருளைத்தான் முதல் பத்துப் பாசுரங்கள், இரண்டாம் பத்துப் பாசுரங்கள், மூன்றாம் பத்துப் பாசுரங்கள். இந்த மூன்று சப்தத்துக்கு உண்டான அர்த்தத்துக்குத்தான் இவ்வளவு தூரம் விரிச்சுட்டார் திருநெடுந்தாண்டகத்திலே. ஸ்வாமி, மூன்று சொல்லுக்கு முப்பது பாட்டான்னா, முந்நூறு பாடினாலும் தகும். மச்சித்தாஹா – என்னிடத்திலேயே நெஞ்சு லயித்தவர்களாய், மத்கதப்ராநாஹா – என்னை விட்டால் பிராணன் தரிக்காதவர்களாய், போதயந்தப் பரஸ்பரம் – என்னைப்பற்றி மற்ற பக்தர்களிடத்திலே பேசிப்பேசி திருப்திப்படுபவர்களாய், என் பக்தர்கள் இருக்கிறார்கள். பக்தர்களுக்கு கண்ணன் அடையாளம் சொல்லிண்டிருக்கார் இப்போ. ஒரு பக்தன் எப்படி இருப்பன்னா, நெஞ்சு என்கிட்டதான் இருக்கும். முதல் அடையாளம். மற்றதைப் பத்தி அவன் நினைக்க மாட்டான். ரெண்டாவது, என்னோட கூடி இருந்தா உயிர் இருக்கும். இல்லேன்னா உயிர் போய்டும். மூனாவது, என் கதையையே ஒருத்தருக்கொருத்தர் பேசிப் பேசி ஆனந்தப்படுகிறான். கதயந்தஸ்ச – என் கதையையே, ஒருத்தருக்கொருத்தர் பேசிப் பேசி, துஸ்யந்திச – ஆனந்தப்படுகிறார்கள், திருப்திப்படுகிறார்கள். இப்படி இருக்கறவந்தான் அர்ஜுனா என் பக்தன், என்று கண்ணன் அடையாளம் காட்டறார். அந்த மூன்று சப்தங்களையும் மூன்று பத்துப் பாசுரங்களாலே பாடிட்டார். இல்லே இன்னொரு விதமாகப் பிரிக்கலாமா? ஓம் நமோ நாராயணாய என்கிற திருமந்திரத்தில் மூன்று பதங்கள் இருக்கோல்லையோ? அதிலே ஓம் என்கிற பிரணவத்தின் அர்த்தத்தை முதல் பத்துப் பாசுரங்களாலேயும், நமஹ என்னும் இரண்டாவது பதத்தின் அர்த்தத்தை இரண்டாவது பத்துப் பாசுரங்களாலேயும், நாராயணாய என்னும் மூன்றாவது பதத்தின் அர்த்தத்தை மூன்றாவது பத்துப் பாசுரங்களாலும், இப்படி ஓம், நமஹா, நாராயணாய இந்த மூன்று சப்தங்களின் அர்த்தத்தைச் சொல்றதுக்காகவே பாடினார் என்றும் கொள்ளலாம். அல்லது ஓம்காரத்தையே எடுத்துண்டோம்னால், ’அ’ ’உ’ ’ம’ என்று மூன்று எழுத்துக்கள். அதிலே ’அ’காரமான பகவானைச் சொல்லுவதற்காக முதல் பத்துப் பாசுரங்கள். ‘உ’காரத்தினுடைய அர்த்தத்தைச் சொல்றதுக்காக இரண்டாவது பத்துப் பாசுரங்கள். ‘ம’கார அர்த்தம் சொல்றதுக்காக மூன்றாவது பத்துப் பாசுரங்கள் என்றும் கொள்ளலாம். அப்படியும் இல்லேன்னா, திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம்ன்னு மூன்று இருக்கோல்லையோ? அதிலே திருமந்திரத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக ஒரு பத்துப் பாசுரம். அடுத்தது சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக பத்துப் பாசுரம். த்வயத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக பத்துப் பாசுரம், என்றும் அர்த்தம் கொள்ளலாம். இப்படி பலவிதங்களிலும் இந்தப் பாசுரங்களுக்கு பூர்வர்கள் வ்யாக்யானம் பண்ணியிருக்கா. என்ன சொல்லியிருக்கான்னு பார்ப்போம். முதல் பாசுரத்தாலே மூன்று தத்வங்களைப் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கிறார். சிது, அசிது, ஈஸ்வரர்கள். எந்த சாஸ்திரமா இருந்தாலும், அது சமஸ்கிருதமோ, தமிழோ முதல்ல இதைத்தான் தெளிவு படுத்துவா. தத்வங்கள் எத்தனை? தத்வம் ஏக தத்வம் அல்ல, தத்வத்ரேயம். மூன்று தத்வங்களுக்கும் ஆழ்வார் பெயர் குடுக்கிறார், ‘மின் உரு’, ‘பின் உரு’, ‘பொன் உரு’. மின் உருன்னு சொன்னால் மின்னலைப் போல அஸ்திரமாக இருக்கக்கூடிய அசிதுன்னு அர்த்தம். மின்னலைப் போலே, ஸ்திரமா இல்லாமல், மாறிக்கொண்டே இருக்கக்கூடியது அசிது. பின் உரு – அந்த அசித் தத்வத்துக்குள்ளேயேதானே ஜீவாத்மா மறைஞ்சு இருக்கார். இப்படி அசிதுக்குள்ளே ஜீவாத்மா இருப்பதாலே, மின் உருவான அசித்துக்குள் பின்னாடி இருக்கக்கூடிய உரு, ஜீவாத்மா, ‘பின் உரு’. ஆக முன் உருன்னு சொன்னதுதான் ‘மின் உரு’. முன்னாடி இருக்கக்கூடிய உருவம்தான் அசிது. அது மின்னலைப் போலே அஸ்திரமாக இருக்கும். அந்த மின் உருவுக்குப் பின்னாடி இருக்கக்கூடியதுதான் பின் உரு. அது நித்யமாக இருக்கும். ஆனால் இந்த ரெண்டு பேருக்கும் உள்ளே இருந்து ஆட்சி செலுத்தக்கூடியது ‘பொன் உரு’. பொன் உருங்கிறது பரமாத்மாவைச் சொல்லும்.
(திருநெடுந்தாண்டகம் – 1) பாசுரத்தில் சாதிக்கிறார், பகவன்னு நீ எப்படி தெரியுமா இருக்கிறாய்? எனக்கு முதமுதல்ல உயர்ந்த அர்த்தத்தைக் காட்டிக் குடுத்தாய். தத்வத்ரேய விவேக ஞானத்தை எனக்கு ஏற்படுத்திக் குடுத்தாய். நான் நினைச்சிருந்தது ஆத்மாவும், தேகமும் ஒன்று என்று. ஆனால் நீதான் பிரித்துக் காட்டினாய் எனக்கு. எம்பெருமானேதான் நெஞ்சகத்தில் நிற்கிறான். நின்றவன் என்ன காட்டிக் குடுத்தானென்றால், இதுதான் மின் உரு, அஸ்திரம், நிற்காது. பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பிலாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது – மின் உருவில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எதுவும் பின் உருவுக்குக் கிடையாது. இறக்காது. அசிது இறக்கும், ஆனால் ஜீவாத்ம தத்வம் இறக்கவே இறக்காதோல்லையோ? அப்போ அசித் தத்வத்துக்கு மாறுபாடு உண்டு. ஆத்ம தத்வத்துக்கு மாறுபாடு கிடையாது. பிணி, மூப்பு எல்லாம் ஆத்மாவுக்குக் கிடையாது. இறப்பில்லை, பிறப்பில்லை, பிணி இல்லை, மூப்பு இல்லை, இது எதுவும் மிக உயர்ந்த உருவமான ஆத்ம தத்வத்துக்குக் கிடையாது. ஆனால் அதுக்கும் மேலே பகவானுக்கு என்ன ஏற்றம்ன்னு பார்த்தால், எண்ணும் பொன் உருவாய் – இதுவாவது (ஜீவாத்மா) சரீரத்தை எடுத்துண்டு பிறந்திருக்கபடியால் கஷ்ட நஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கு. அதுவும் பரமாத்மாவுக்குக் கிடையாது. சாஸ்திரம் சொன்னபடிக்கு,
ஆப்ரநகாத் ஸர்வஏவ ஸ்வர்நஹா – திருவடியிலேர்ந்து திருமுடி ஈறாக, எங்க பார்த்தாலும் ஸ்வர்ண மயமா இருப்பாராம் பகவான். ஹிரண்யஸ்மஸ்ருஹு – நீண்ட பொன் மயமான மீசை வச்சிண்டு இருப்பாராம். ஹிரண்யகேஸஹா – கேஸபாஸம் பொன்மயமாக ஓடிக்கொண்டு இருக்குமாம். இதைத்தான் ஆழ்வார் இப்போ பொன் உருவாய்ன்னார். நமக்கு சந்தேகம் வரும், பகவான் கருமை நிறத்தவன்னா கேள்விப்பட்டிருக்கோம். ஆழ்வார் பொன் உருங்கிறாரே? அதுவும் தங்க வர்ணத்துல தலை மயிர் இருந்தா எப்படி இருக்கும்? தங்க வர்ணத்துல மீசை இருந்தா எப்படி இருக்கும்? அவர் கருப்பாத்தான் இருப்பர், எல்லாம் கருப்பாத்தான் இருக்கும். ஆனால் பொன் உருன்னு சொன்னது வர்ணத்துக்காக அல்ல. முதல் அர்த்தம். வர்ணத்துக்காக அல்லன்னா, சொல்லியிருக்காரேன்னா, தங்கம்ன்னா श्प्र्कणीयथ्वम् (ஸ்ப்ருகணீயத்வம்). அப்படின்னா தங்கம்ன்னு சொல்றச்சேவே ஒரு மதிப்பு நம்ம மனசிலே வர்றது பாருங்கோ. அதுக்குத்தான் தங்கம்ன்னு சொல்றாரே தவிர, தங்க வர்ணத்தவர்ங்கிறதுக்காக சொல்லப்படலே. இல்லேன்ன இன்னொரு அர்த்தம் வச்சுக்கலாம். பகவான் ஓரோரு யுகத்தில் ஓரோரு வர்ணத்தில் இருக்கிறார். ’நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது; பாலின் நீர்மை, செம்பொன் நீர்மை, பாசியின் பசும்புறம் போலும் நீர்மை, பொற்புடைத்தடைத்து வண்டு விண்டுலா நீல நீர்மை’ என்று பகவானுக்கு நான்கு வர்ணங்கள் உண்டு. வெள்ளை, சிகப்பு, கருநீலம் மாந்தளிர் பச்சை, கருப்பு, இப்படி நாலு யுகத்துக்கு நாலு வர்ணத்திலே இருக்காராம். அப்படி ஒரு வர்ணத்தையும் பொன் உருவாய்ன்னு சொல்லியிருக்கலாம். ஆக, என்னும் பொன் உருவாய். பகவான் எப்படி இருக்கிறார்? எல்லா இடத்திலேயும் நீக்கமற நிறைந்திருக்கிறார். பூதம் ஐந்தாய் – பஞ்ச பூதங்களாகவும் அவர்தான் இருக்கிறார். அவ்வெம்பெருமானே எனக்குள்ளேயும் சேவை சாதிக்கிறான். இவர் எனக்குக் காட்டிக்குடுத்த அர்த்தம், தத்வத்ரேய விவேக ஞானத்தை எனக்கு ஏற்படுத்திக் குடுத்தார். அசிது வேறே, சிது வேறே, பரமாத்மா வேறே, என்ற ஞானத்தை எனக்கு ஏற்படுத்தினார்ன்னு சொல்லிட்டார். சொன்னவர் பிற்பாடு ஒவ்வொரு பாசுரங்களால் பெருமானைப் பத்தி விளக்கறதுக்கு ஆரம்பிச்சார். ஆண் பாவனையில ஞானத்தோடே பேசிண்டிருக்காரோல்லையோ? அதனாலே வேதாந்த அர்த்தம் எல்லாம் பாடுவர். அந்தணர் மாட்டைந்தி வைத்த… அந்தணர் மாடு – பிராம்ணர்களுக்கு மாடு. மாடுன்னா தனம்ன்னு அர்த்தம். பிராம்ணர்களுக்கு தனம், ब्राम्ण्णानां दनम् वेत: (ப்ராம்ணானாம் தனம் வேதஹா). வேதந்தான் பிராமணர்களுக்குத் தனமே. அந்தணர் மாட்டந்தி, அந்தின்னா முடிவுன்னு அர்த்தம். அந்தணர் மாடுன்னா வேதம், வேதத்தோட அந்தின்னா, வேதாந்தம், உபநிஷத்துன்னு அர்த்தம். அந்தணர் மாட்டந்தி வைத்த மந்திரத்தை – உபநிஷத்துகளுக்குள்ளே மறைத்துப் பொக்கிஷத்தைப் போலே, பொற்கிழியைப் போலே வைக்கப்பட்டிருக்கிற மந்திரத்தை, மந்திரத்தால் – மந்திரத்தாலே. மறவாதென்னும் வாழ்தியேல் – மந்திரத்தை மந்திரத்தால மறக்காமல் ஞாபகம் வைச்சுக்கோ, வாழலாம், அப்பதான் உனக்கு உஜ்ஜீவனம்ன்னார். மந்திரத்தை மந்திரத்தால மறக்காம இருக்கறதா? எந்த மந்திரத்தைக் கொண்டு போய் உபநிஷத்துக்குள்ள ஒளிச்சு வச்சிருக்குன்னா, இந்த இடத்துல முதல் மந்திரத்தைங்கிறதுக்கு ‘பகவானை’ன்னு அர்த்தம். அடுத்த ‘மந்திரத்தால்’ங்கிறதுக்கு திருமந்திரத்தால்ன்னு அர்த்தம். திருமந்திரத்துக்கு மந்திரம்ன்னுதான் பேர். பகவானுக்கே மந்திரம்ன்னுதான் பேர். मन्थारं त्रयतेति मन्त्र: (மந்தாரம் த்ராயதேதி மந்த்ரஹா). தன்னை நினைப்பவனை எது ரட்சிக்கிறதோ அது மந்திரம். பகவானை நினைக்கிறவரை ரட்சிக்கப் போறார். திருமந்திரத்தைச் சொன்னவனை அது ரட்சிக்கப் போறது. அதனால மந்திரம்ன்னா பகவானேதான். மந்திரம்ன்னா திருமந்திரமேதான். அப்போ, வேதாந்தத்தில் பொக்கிஷத்தைப் போல மறைத்துச் சொல்லப்பட்ட பகவானை, திருமந்திரத்தால், பகவத் சொரூபத்தைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தாயானால் வாழலாம். அப்பதான் உனக்கு உஜ்ஜீவனம். அப்படின்னு ஆழ்வார் நெஞ்சைப் பார்த்துச் சொன்னார். 11லிருந்து 20வரை தாய்ப்பாசுரங்கள். 21லிருந்து 30வரை நாயகி பாவனை பாசுரங்கள். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – திருநெடுந்தாண்டகம் உபந்நியாசம் – Houston) September 15 நாச்சியார் திருமொழிஆழ்வார்கள் அனைவரும் சேர்ந்து பாடினதுதான் ’நாலாயிர திவ்ய ப்ரபந்தம்’ என்று நாம் அறிவோம். அதில் ஆண்டாளின் பங்கு இரண்டு திவ்ய ப்ரபந்தங்கள். இந்த இரண்டுமே முதல் ஆயிரத்தில் சேர்க்கப்பட்டன. ஒன்றனுக்கு ’திருப்பாவை’ன்னு திருநாமம். மற்றொன்றுக்கு ‘நாச்சியார் திருமொழி’ன்னு திருநாமம். அவளே நாச்சியார். அவளுடைய திருவாக்கு, மொழின்னா வாக்கு, திருன்னா அவளே திரு. நாச்சியாருடைய திருவான வாக்கு, நாச்சியார் திருமொழி என்று பேர் பெற்றது. திருப்பாவை – பாவைன்னா பதுமை, பொம்மைன்னு அர்த்தம். திருப்பாவை என்றால், மார்கழி மாசத்தில் கார்த்யாயினி தேவியைப் போல ஒரு பொம்மையைச் செய்து, அவளுக்குப் பூசை செய்து விரதம் இருந்து, கண்ணனையே தனக்குக் கணவனாகக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிப் பாடின பிரபந்தம். அதனாலே திருப்பாவை அப்படின்னு அதுக்குப் பேர் வந்தது. முப்பது பாசுரங்களோடே கூடினது திருப்பாவை. 143 பாசுரங்களோடே கூடினது நாச்சியார் திருமொழி. மார்கழி மாசத்துக்கென்று திருப்பாவை. தை மாசத்துக்கென்று நாச்சியார் திருமொழி. ஏன்னா ரெண்டு ப்ரபந்தமும் மாசப் பேரோடதான் தொடங்கறது. ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ன்னு திருப்பாவை தொடங்கும். ’தையொரு திங்களும் தரை விளக்கி’ன்னு நாச்சியார் திருமொழி தொடங்கும். அதனாலே ஹேமந்த ருதுவினுடைய இரண்டு மாசங்களுக்காக இரண்டு பிரபந்தங்களை ஆண்டாள் அனுகிரகித்தாள். ஆழ்வாருக்கே (பெரியாழ்வார்) பெருமானிடத்தில் பரிவு அதிகம். அதையே என்னான்னு கேட்குமளவுக்கு ஆண்டாளுக்குப் பெருமானிடத்தில் பரிவு அதிகம். ஆண்டாளுக்குன்னு இருக்கற ஏற்றம், ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு வைபவம்ன்னால், ஆழ்வார்கள் ஆண்களாகப் பிறந்துவிட்டுப் பெண் தன்மையை ஏறிட்டுக் கொண்டு பிரபந்தம் பாடினார்கள். ஆனால் ஆண்டாளுக்கோ, ‘ஜென்ம ஸித்த ஸ்த்ரீத்வம்’. அவள் பிறக்கும் போதே பெண்ணாகப் பிறந்துட்டபடியால், செயற்கையா ஒன்றை ஏறிட்டுக்கனும்ங்கிற அவசியமே இல்லையோல்லையோ? ஆண்களாகப் பிறந்துட்டு செயற்கையா ஒன்றை ஏறிட்டுக் கொண்டு ஆழ்வார்கள் பாசுரம். ஆனால் பெண்ணாகப் பிறந்து இயல்பாகவே பெண்ணான தன்மையோடே பாடினது, ஆண்டாளுக்கு உண்டான ஏற்றம். ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய். ஆழ்வார்கள் பாடின பிரபந்தங்களைக் காட்டிலும் இதுக்கு என்ன ஏற்றம்? ஏதோ இருக்கிறதே. என்னதுன்னு பார்த்தால், இது பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ். இவளுக்குக் கோதைன்னு பேர். கோதா என்றால் மாலைன்னு அர்த்தம். இவ்வாண்டாளே தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமானுக்குன்னு சூடினபடியால் இவருக்கு சூடிக் குடுத்த நாச்சியார்ன்னு திருநாமம். இவள் பாடிக் குடுத்தபடியால் பாடவல்ல நாச்சியார்ன்னு திருநாமம். இவளே கோதா. கோதாம்பான்னு சொல்லுகிறார்கள்.
கோதாஸ்துதியினுடைய ஆரம்பத்துல ஸ்ரீவேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார். ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் – பெரியாழ்வாருடைய குலத்துக்கு பெருமை சேர்ப்பதற்காகவே அவதரித்தாள். என்ன அவர் குலம்? என்ன பெருமை சேர்த்துட்டாள்ன்னா, பகவானுடைய திருமேனிக்குப் பரிந்து பல்லாண்டு பாடுவது அவர் குலம். மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவுதானன்றிப் பொங்கும் பரிவாலே வில்லிப்புத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர். பொங்கும் பரிவு பெரியாழ்வாருக்கு. அதைப்போலத்தான் பரிவு ஆண்டாளுக்கு. இவள் பெண்ணாகப் பிறந்துட்டபடியால், அவளுடைய ஒரே குறிக்கோள், நாம் மானிடவர்கென்று பேச்சுப்படுவதில்லை. லோகத்தில் இருக்கிற மனுஷ்யர்களுக்கு வாழ்க்கைப்படப் போவதில்லை. பராத்பரனான சர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணன் திருவரங்கநாதனாக இருக்கிறான். அவனே கண்ணனாக அவதரித்தான். அந்தக் கண்ணனுக்கே வாழ்க்கைப் படுவோம். அரங்கனுக்கே வாழ்க்கைப் படுவோம், என்று தன் உள்ளத்திலே உறுதி பூண்டாள். அந்த உறுதி ஆண்டாளுக்கு எப்படி ஏற்பட்டதுன்னால், பெரியாழ்வார் சொல்லிக் குடுத்திருக்கிற கதைகள். பகவானுடைய வைபவத்தை நன்னா சொல்லி வைத்தார். அவனுடைய அவதார சேட்டிதங்களையெல்லாம் சொன்னார். அவனே பரதெய்வம்ங்கிறதைப் புரிய வைத்தார். புரிஞ்சவுடனே, அப்போ எந்த ஆத்மாவுமே இன்னொருத்தனுக்கு ஈடுபடக்கூடாது. யார் ஜெகத்துக்கே காரணமோ, எவன் என்னைப் படைத்தானோ, காத்தானோ, எவன் எனக்கென்றே காத்திருக்கிறானோ, எவன் ஒருத்தனாலேதான் மோக்ஷத்தையே குடுக்க இயலுமோ, அவனைத்தவிர மற்றொருத்தன் இடத்தே நாம் கண் வைக்க மாட்டோம். அதனாலே திருவரங்கநாதனுக்குத்தான் ஆட்பட வேண்டும்ன்னு மனசிலே உறுதி கொண்டாள். ஆனா அது உடனே நடந்துடுமா? நடந்துட்டா ஆண்டாள் பிரபந்தமே பாடமாட்டாளோல்லையோ? பகவான் ஆண்டாளைப் பிறப்பிச்சிருக்கறது எதுக்கு? உலகோரைத் திருத்த வேண்டும்ங்கிறதுக்காக. நிறையப் பாசுரங்களைப் பாடும், பாட்டை சொத்தா விட்டுட்டு வாரும். இது கொண்டு மக்கள் நம்மைப் புரிந்து கொள்வர்கள். இதுக்குன்னு பெருமாள் அவளை அவதாரம் பண்ண வைச்சிருக்கச்சே, ஆசைப்பட்டாள்ன்ன உடனே அவரும் அழைச்சிட்டுப் போய்ட்டார்ன்னு வச்சிக்கங்கோ, அப்புறம் பாட்டே வராதோல்லையோ? அதனால இந்தப் பிரபந்தங்களைப் பாடுவிக்கனும்ங்கிறதுக்காகத்தான் ஆண்டாள் வைக்கப்பட்டாள். ஆனால் அவளுக்கோ பகவானை விட்டுப் பிரிவு, துடிப்பு, விரக தாபம். தாபத்தோடதான் தனக்குள்ள இருக்கற தாபத்தைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக இரண்டு பிரபந்தங்கள் பாடினார், திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும். அதிலே திருப்பாவை ரொம்ப பிரசித்தம். இப்போ பார்க்கப் போறது நாச்சியார் திருமொழி. நாச்சியார் திருமொழியில் மொத்தம் 143 பாசுரங்கள். அதிலே மொத்தம் 14 பதிகங்கள் உண்டு. என்னிக்கும் ஒரு பிரபந்தம்ன்னு எடுத்துட்டா அதை பத்துப் பத்துப் பாசுரங்களாக அனேகமா பிரிச்சுருவா. பத்துப் பாசுரங்கள் கொண்டது ஒரு திருமொழி. நாச்சியார் கோவில், நாச்சியார் திருமாளிகைன்னு ரெண்டு திவ்யதேசம் இருக்கு. இப்போ இந்தப் பிரபந்தத்தினுடைய பேர் நாச்சியார் திருமொழின்னு இருக்கறதுனால முதல்ல பெயர்க்காரணம் பார்ப்போம். நாச்சியார்ன்னா ஆண்டாள். இன்னிக்கு அவள் அவதாரம் பண்ணி எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ‘நாச்சியார் திருமாளிகை’ன்னு பேர். ’நாச்சியார் கோவில்’ன்னு ஒரு ஊர் உண்டு. அது திருநரையூர், சோழ தேசத்திலே இருக்கு. ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பாண்டிய தேசத்திலே உள்ளது. மூன்று திவ்ய தேசங்கள் மூன்று நாச்சியார்களுக்குப் பெருமை. ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி. ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’. பூதேவி நாச்சியாருக்கு ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’. நீளாதேவி நாச்சியாருக்கு ‘திருநரையூர்’. இந்த மூன்று இடத்திலே இந்த மூன்று நாச்சிமார்களுக்குப் பெருமை. இந்த மூன்று இடத்திலேயும் புறப்பாடு ஆகறச்சே நாச்சியார் பல்லக்கு முன்னாடி போகும், பெருமாள் பல்லக்கு பின்னாடி போகும். வேற எங்கேயும் இதைப் பார்க்க முடியாது. முன்னாடிதான் பெருமாள் ஏழுவர், பின்னாடிதான் நாச்சியார் ஏழனும். ஆனால் இந்த மூன்று சன்னிதிகளில் முன்னாடி பிராட்டிக்கு வைபவம், பின்னாடி பெருமாள் எழுந்தருளுகிறார். நாச்சியார் திருமொழி மூன்று பிரகரணங்களாக (கட்டங்களாக) பிரிக்கப்படுகிறது. முதல் ஐந்து பதிகங்களும் ஒரு பிரகரணம். ஆறாம் பதிகம் இரண்டாவது பிரகரணம். 7,8,9,10,11,12,13,14 பதிகங்கள் மூன்றாவது பிரகரணம். முதல் பிரகரணம் திருக்கல்யாணக் கனவு காண்பதற்கு முன்பாக. இரண்டாம் பிரகரணம் திருக்கல்யாணக் கனவு. மூன்றாவது பிரகரணம், கல்யாணம் ஆன பிறகு நடப்பவை. முதல் பதிகம், காம தேவனிடத்தும் சாம தேவனிடத்தும் காலிலே விழுந்து எப்படியாவது கண்ணனை எனக்குக் கணவனாக பெற்றுக் குடுங்கோள் என்று பிரார்த்திக்கிறாள். இரண்டாம் பதிகம், நாமம் ஆயிரம் ஏத்த நின்றங்கிற பதிகம். இதாலே சிற்றில் வந்து சிதையேலே என்று கண்ணனுடைய பால்ய சேட்டிதம் ஒன்றைச் சொல்லி, எங்களுடைய சிந்தனையை இப்படி சிதைத்து விடாதே. உன்னை அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனா அந்த ஆசை நடக்காதபடிக்கு சிதைச்சுடாதே என்று ஆண்டாள் கண்ணனிடத்தே பிரார்த்திக்கிறாள். மூன்றாம் பதிகத்தாலே, கோழி அழைப்பதன் முன்னம்ன்னு பாசுரம். கவர்ந்த துணிகளை வேண்டி கன்னியர் கண்ணனை இரத்தல். அதில் இந்திரியங்கள் நம்மை துன்புறுத்துகின்றன, மனசு நம்மை அடக்கப் பார்க்கிறது, கண்ணனே நீ நம்மை அடக்கி ஆட்கொள்ள வேண்டும், என்று பிரார்த்தித்தது மூன்றாவது பதிகத்தினுடைய கருத்து. அடுத்து நாலாவது பதிகம், நீ கூடிடு கூடலேன்னு பிரார்த்திக்கிறாள். சம்ப்ரதாயத்திலே வடக்குத் திருமலை, திருவேங்கடம். தெற்குத் திருமலை திருமாலிருஞ்சோலைமலை. கீழவீடு திருக்கண்ணபுரம். மேலவீடு திருவரங்கம். இவை நான்கையும் இந்த நாலாம் பதிகத்தின் முதல் இரண்டு பாசுரங்களில் சேர்க்கிறாள் ஆண்டாள். ஐந்தாம் பதிகம் குயில் பாட்டு. மென்னடை அன்னம் என்று பெரியாழ்வாரையே குறிக்கிறாள். நடை என்பது நடத்தை, ஆச்சாரத்தை குறிக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்கமன்னார் சன்னிதியில் எங்குமே காண முடியாத ஆச்சர்யமாய், வலப்பக்கம் ஆண்டாள், நடுவில் பெருமாள், இடப்பக்கம் கருடன், என்று சேவை சாதிக்கிறார்கள். இது அ, உ, ம என்ற பிரணவ தத்துவத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஆறாம் பதிகம், வாரணம் ஆயிரம் என்று தொடங்கும் திருக்கல்யாண வைபவம். வாரணமாயிரம் – ஆயிரம் யானைகள். எப்படி கண்ணனுக்கு ஆயிரம் யானைகள்? அவர்கிட்ட மாடுதானே இருக்கும்? கண்ணன் பிறந்தது ஷத்ரிய குலம், வளர்ந்தது வைசிய குலம். பிறந்த குலத்திலேர்ந்து அவருக்கு ஆயிரம் யானைகள். வளர்ந்த குலத்திலேர்ந்து கறவைக் கணங்கள். சரி, எதற்கு ஆயிரம் யானைகள்? அவர் ஒருத்தர்தானே வரார்? அவருடைய தோழர்கள் ஆயிரம் பேர்கள். ஒவ்வொருவரையும் ஒரு யானை மேல் ஏற்றி அழைத்து வருகிறார். பொதுவாக கல்யாண மாப்பிள்ளை மட்டும்தான் சிறப்பு வாகனத்தில் வருவர். ஆனால் பகவானுக்கு இருக்கிற குணம், அவனிடம் சரணம் என்று சொல்லியவர்களை தனக்குச் சமமாக உயர்த்தி அமர வைக்கிறான். பெரியவாச்சான் பிள்ளை இதன் உட்கருத்தாக சாம்யாபத்தி மோக்ஷத்தைக் கூறுகிறார். பகவானிடத்தில் ஒருத்தன் சரணம் என்று சொல்லி, அவன் மோக்ஷம் அடையும் போது, பகவானுடைய எட்டு கல்யாண குணங்களை அடைந்து ‘சாம்யாபத்தி மோக்ஷம்’ அடைகிறான். அந்த எட்டு கல்யாண குணங்களாவன, अपकतपाप्मा विजर: विमुर्ति: विसोक: विजकिक्स: अपिपाश: सत्यकाम: सत्यसङल्प: [ அபகதபாப்மா விஜரஹா விமுர்த்திஹு விசோகஹா விஜகிக்ஸஹா அபிபாஸஹா சத்யகாமஹா சத்யசங்கல்பஹா ] அபகதபாப்மா – பாபம் தீண்டாத தன்மை; விஜரஹா – மூப்பு கிடையாது; விமுர்த்திஹு – மரணம் கிடையாது; விசோகஹா – சோகமே கிடையாது; விஜகிக்ஸஹா – பசி கிடையாது; அபிபாஸஹா – தாகம் கிடையாது; சத்யகாமஹா – ஆசைப்படக்கூடிய குணங்கள் படைத்தவர்; சத்யசங்கல்பஹா – எடுத்த செயல் அத்தனையும் முடிக்கிற தன்மை. ஏழாம் பதிகம், கல்யாணம் ஆன பிறகு உண்டான வைபவம். கற்பூரம் நாறுமோ பாசுரம். சக்கரத்தாழ்வானுக்கு இல்லாத பெருமை சங்கத்தாழ்வானுக்கு உண்டு. சங்கத்தாழ்வான் பகவானுடைய இடக்கையை விட்டு நீங்குவதே இல்லை. சக்கரத்தாழ்வார் எதிரிகளை அழிக்க பகவானுடைய கையை விட்டு நீங்கி திரும்பவும் வருகிறார். சங்கத்தாழ்வானுக்கு பகவானுடைய திருவாயமிர்தம் கிடைக்கும். சக்கரத்தாழ்வானுக்கு அது கிடைக்காது. அதனாலே சக்கரத்தாழ்வானைவிட சங்கத்தாழ்வானுக்கு வைபவம் அதிகம். எட்டாம் பதிகம், திருவேங்கடவனுக்காக ஆண்டாள் விட்ட தூது. ஒன்பதாம் பதிகம், தெற்குத் திருமலை, திருமாலிருஞ்சோலைமலை அழகருக்காக அமைத்தாள் ஆண்டாள். நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்கார அடிசல் இந்த பதிகத்தினாலே சமர்ப்பித்தாள். அவள் பாடினதை, அவள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவது நமது பொறுப்பு எனக்கொண்டு, பகவத் இராமனுசர் வந்து நேரடியாக சமர்ப்பித்து நிறைவேற்றி வைத்தார். இதனாலே இராமனுசர் ‘கோயில் அண்ணனாக’ ஆண்டாளால் பாவிக்கப்படுகிறார். அந்த அக்கார அடிசில் இன்னைக்கும் சமர்ப்பிக்கலாம். பத்தாவது பதிகம், இராமசந்திரனுடைய ’சொல்’, கண்ணனுடைய ’வார்த்தை’, வராகனுடைய ’பேச்சு’, அதாவது இராம சரம ஸ்லோகம், கண்ணனின் சரம ஸ்லோகம், வராக சரம ஸ்லோகம் இவற்றைக் குறித்து பாடியது. பதினோராவது பதிகம், திருவரங்கநாதனுக்கென்று பாடியது. பனிரெண்டாவது பதிகம், இனி நம்மால் தாங்க முடியாது என்று பிருந்தாவனத்துக்கு என்னை உய்த்திடுமின், மதுரைக்கு என்னை உய்த்திடுமின், யமுனை நதி தீரத்துக்கு என்னை உய்த்திடுமின் என்று, இங்கிருந்தால் என் உயிர் தரிக்காது, சீக்கிரம் என்னை கண்ணன் இருக்குமிடத்துக்கு கொண்டு போங்கோள் என்று பாடியது. பதிமூன்றாவது பதிகம், கண்ணனுடைய வஸ்திரத்தை கொண்டு வந்து வீசுங்கோள், அவன் தரித்த துளசியைக் கொண்டு வந்து வீசுங்கோள். அப்போதுதான் நாம் தரிப்போம் என்று தெரிவித்தாள். பதினாலாவது பதிகம், ரெண்டு பேர் சேர்ந்து பாடற பாட்டு. ஆண்டாள், மற்றும் இன்னொரு கோபிகைன்னு வச்சுக்கங்கோ. ஆண்டாள் கண்ணன் எங்கே, எங்கேன்னு தேடறா. இந்த மாதிரி பிள்ளை ஒருத்தர் இந்த அடையாளத்தோட போறத பார்த்தீளோ? அப்படின்னு ஒருத்தர் கேப்பா. அந்தப் பிள்ளைதானே, பார்த்தேனே, அப்படின்னு இன்னொருத்தி பதில் சொல்லுவோ. இப்படி நாச்சியார் திருமொழி பாடப்பட்டிருக்கிறது. -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாச்சியார் திருமொழி உபந்நியாசம் – Houston) |
|
|