sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    June 26

    நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 5

    முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

    ஆறாம் பத்து, ரொம்ப ஆச்சர்யமான பத்து பாசுரங்கள்.

    துவளில் மா மணி மாடம் ஓங்கு *
    தொலைவில்லி மங்கலம் தொழும்
    இவளை * நீர் இனி அன்னை மீர்! *
    உமக்காசை இல்லை விடுமினோ *
    தவள ஒண்சங்கு சக்கரம் என்றும் *
    தாமரைத் தடங்கண் என்றும் *
    குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க *
    நின்று நின்று குமுறுமே

    (திருவாய்மொழி – 6.5.1)

    இதைத் தோழிப் பாசுரமாக தாயாரைப் பார்த்து சொல்லிண்டிருக்கா தோழி.  இனிமே இந்தப் பெண்கிட்டே ஆசையே வைக்காதீங்கோ.  அவ அவ்வளவுதான்.  எப்ப அவ அந்த திருத்தொலைவில்லி மங்கலம் அரவிந்தலோசனுக்குன்னு மனசைப் பறிகொடுத்துட்டாளோ, இனிமே நீங்க என்ன பேசியும் பிரயோஜனமில்லே.  குமுறும் ஓசை விழவொலி தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு – ஆசையில்லாம விடுவதற்கு நீங்கதானே வழி தேடிக் கொண்டீர்?  ஏன்னா, ஏற்கனவே தொலைவில்லி மங்கலத்துக்குப் போகாதேன்னாளாம்.  சின்னக்கதை பார்ப்போம்.  நம்மாழ்வார் பிறந்தார்.  பிறந்தவுடனே ஜோசியக்காராளா கூட்டி ஜாதகம் எழுதினா.  அவர் எல்லாம் நல்லாத்தான் இருக்கும், பொண்ணு நல்லாத்தான் வாழுவோன்னு சொல்லிட்டு, ஆனா இந்த தொலைவில்லி மங்கலம் ரெட்டைத் திருப்பதி பெருமாளை மட்டும் சேவை பண்ணி வைக்காதீங்கோ.  பண்ணி வைச்சா இந்தப் பொண்ணு உங்க பொண்ணே இல்லேன்னு அன்னைக்கே சொல்லிட்டார்.  தாயார் எல்லாரும் கூடி முடிவெடுத்தாளாம்.  இந்த பொண்ணை சேவை பண்ணி வைக்கலாமா, இல்லே நமக்குப் பொண்ணு வேணும்ன்னா சேவை பண்ணி வைக்காம இருந்துடலாமா?  ஆனா அவா குலதெய்வமே அந்தப் பெருமாள்தான்.  யார் குடும்பத்துல பிறந்தாலும் அவரை சேவிச்சுத்தான் ஆகனும்.  அப்போ நம்மாழ்வாரோட தாயார் முடிவெடுக்கறா.  இந்தப் பெண்ணு நம்மளிடத்திலே இருக்கட்டும், இல்லாது போகட்டும், அந்த பெருமாளை சேவிச்சுத்தான் ஆகணும்.  அன்னைக்கு முடிவெடுத்துக் கொண்டு போய் சேவை பண்ணி வைச்சாளோல்லையோ?  அன்னைக்கே அந்தப் பெருமாளுக்குன்னு அந்தப் பொண்ணு ஆயிட்டா.  இது நீங்க எப்பவோ எடுத்த முடிவாச்சே.  இன்னைக்கு வந்து மனசைப் பறிகொடுத்துட்டாளேன்னு சொல்றதுல ஏதானும் அர்த்தம் உண்டா?  குமுறும் ஓசை விழவொலி தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு – இந்தப் பெண்ணை விழா ஒலியோடு இருக்கக்கூடிய தொலைவில்லி மங்கலத்துக்கு அழைச்சுட்டுப் போனீர்கள்.  செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – பிரான், எம்பெருமான் இருக்கறதையும் இவளுக்கு சேவை பண்ணி வச்சீர்கள்.  அன்னிலேர்ந்து இந்தப் பெண் தன் வசத்திலேயே இல்லே, என்று தொலைவில்லி மங்கலத்துக்காக பத்துப் பாசுரம் பாடினார்.  அது தோழிப் பாசுரமாக.

    அதே இன்னொரு பத்துப் பாசுரங்கள்.  மன்னார்குடி இராஜ கோபாலனுக்கு அதிலேர்ந்துதான் ஒரு பாட்டை எடுத்து மணவாள மாமுனிகள் சமர்ப்பித்தார்.

    தீர்ப்பாரையாம் இனி * எங்ஙனம் நாடுதும் அன்னைமீர் *
    ஓர்ப்பால் இவ்வொண்ணுதல் * உற்ற நல் நோய் இது தேறினோம் *
    போர்ப்பாகு தான் செய்து * அன்றைவரை வெல்வித்த * மாயப்போர்த்
    தேர்ப்பாகனார்க்கு * இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே

    (திருவாய்மொழி – 4.6.1)

    பெண்ணுக்குப் பெருமானிடத்தில காதல்.  மூர்ச்சித்துக் கிடக்கறா.  ஏதோ பூதப் பிரேத பிசாசம் பிடிச்சுடுதுன்னுட்டுன்னு அம்மா நினைச்சுனுட்டா.  நினைச்சினுட்டு, குறத்தி எல்லாம் கூப்பிட்டு அவளைக் குறி சொல்லச் சொல்றா.  ஏன்னா என்ன வந்துடுத்துன்னு, மோந்து பார்ப்பாளாம், இப்படி நாடி பிடிச்சுப் பார்ப்பா.  அதுக்கு அவ என்னென்னமோ பண்றா.  சோழியெல்லாம் தூக்கிப் போடறா. முறத்தைக் கொண்டு வந்து வச்சு நெல்லைத் தூக்கி வீசறா.  இதெல்லாம் வரத வச்சிண்டு யார் இவள் பேரில பிடிச்சிண்டிருக்கான்னு அந்தக் குறத்தி சொல்லுவள் போலருக்கு.  அதுக்காக கூப்பிட்டுட்டு பண்ண ஆரம்பிக்கிறா.  அப்போ தோழி வந்தா.  என்னத்துக்கு இதெல்லாம் ஏற்பாடு பண்ணிண்டிருக்கீள்ன்னு கேக்கறா.  இல்லேல்லே, இந்தப் பெண்ணை யார் பிடிச்சிண்டிருக்கான்னு நான் கண்டுபிடிச்சாகனும்ன்னு தாயார் சொல்றா.  என்னமோ பைத்தியக்காரத்தனம் பண்ணிண்டிருக்கேளே இப்போ.  ஏற்கனவே அவ அவனுக்கு மனசை பறிகொடுத்தாச்சு.  நீங்க இதெல்லாம் வேற பண்ண ஆரம்பிச்சேள்ன்னா ஒட்டிண்டிருக்கற உயிரும் போய்டப் போறது.  இதுதான் நடக்கும்ங்கிறதுக்காக அந்தத் தோழி வந்து தடுக்கிறாள்.  இந்தப் பெண்ணினிடத்தில இதெல்லாம் நீங்க பண்ணாதீங்கோ.  யாராரோ வந்து ஏதேதோ தப்புத்தப்பா அர்த்தம் சொல்லிடப்போறா, வேண்டாம்னு மறுத்தாளோல்லையோ?  அதுக்குன்னு ‘சகி வெறிவிலக்குதல்’ன்னு தமிழ் இலக்கியத்திலே ஒரு வழக்கம்.  சகின்னா தோழி, வெறி விலக்குதல்ன்னா, இவா ஏதோ தப்பு பண்ணப்பார்க்கிறாளோல்லையோ, இந்தப் பெண்ணுக்கு வேற ஒரு மாப்பிள்ளை பார்த்துட்டாள்ன்னா, அது கூடாதுன்னு விலக்குவதற்குத்தான் இந்தப் பத்துப் பாசுரங்கள் பாடினார்.

    ஏழாம் பத்துக்குன்னு இருக்கிற தனிச்சிறப்பு, தாய்ப்பாசுரம், திருவரங்கத்துக்குன்னு இருக்கிற பத்துப் பாசுரங்கள் பாடினார்.

    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் *
    கண்ண நீர் கைகளால் இறைக்கும் *
    சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் *
    தாமரைக் கண் என்றே தளரும் *
    எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டென்னும் *
    இரு நிலம் கை துழாவிருக்கும் *
    செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்! *
    இவள் திறத்தென் செய்கின்றாயே

    (திருவாய்மொழி – 7.2.1)

    திருவரங்கத்தானினுடைய திருமணத் தூண்கள் இரண்டு.  அதுக்கு முன்னாடி இந்தப் பராங்குச நாயகியைக் கொண்டு போய் கீழ போட்டுட்டார் தாயார்.  இந்தப் பெண்ணு உன்னையே நினைச்சிண்டு மூர்ச்சையா கிடக்கிறா.  நீ திரும்பிப் பார்த்தாத்தான் உண்டு.  நான் நினைத்து ஒரு பிரயோஜனமும் இல்லே.  இவளைப் பத்தி நீ என்ன நினைத்தாய்ன்னு தாயார் கேக்கறது பத்துப் பாசுரங்கள்.

    அதற்கடுத்தது தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதன், நவதிருப்பதி திவ்யதேசத்துக்குள்ளே தென் திருப்பெரை ஒன்று.

    வெள்ளைச் சுரி சங்கொடாழி ஏந்தித் *
    தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே *
    புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் *
    என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் *
    வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த *
    வேத ஒலியும் விழா ஒலியும் *
    பிள்ளைக் குழா விளையாட்டொலியும் *
    அறாத் * திருப்பேரையில் சேர்வன் நானே

    (திருவாய்மொழி – 7.3.1)

    நீங்க என்ன பேசினாலும் நான் கேக்கறதாயில்லே.  என் நெஞ்சு திருப்பேரை பெருமானிடத்தில போய்டுத்து.  நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கில்லை என் தோழிமீர்காள் – எனக்கினி நாணமில்லை, வெட்கமில்லை.  பகவானைத்தேடி நான் போகத்தான் போகிறேன்னுட்டு பொண்ணு புறப்பட்டுப் போறா.  அதை ஏழாம் பத்தாலே சாதித்தார்.

    இப்படி பல பதிகங்களாலே தூதுவிடுதல் பார்த்தோம், அனுகாரம் பார்த்தோம், மடலெடுத்தல் பார்த்தோம், பிரிவு ஆற்றாமையாலே துடித்தல் பார்த்தோம்.  ஆறாம் பத்தில் ’மின்னிடை மடவார்கள்’ன்னு பத்துப் பாசுரம்.  அதான் ஊடல் பாசுரம்.

    மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் *
              முன்பு நானதஞ்சுவன் *
    மன்னுடை இலங்கை * அரண் காய்ந்த மாயவனே *
              உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் * இனி அது
    கொண்டு செய்வதென் *
              என்னுடைய பந்தும் சுழலும் * தந்து போகு நம்பீ

    (திருவாய்மொழி – 6.2.1)

    வாசல்ல வந்து தோட்டத்துல நிக்கிறார் பெருமாள்.  பராங்குச நாயகியும் தோழியும் பூப்பந்து ஆடிண்டு இருக்கா.  ஒரு பத்து நிமிஷம் நாழி கழிச்சு வந்துட்டார்.  ஆறு மணிக்கு வரேன்னு சொல்லியிருந்தார்.  ஆனா நாழியாக்கி, ஆறு பத்து, ஆறே கால்.  என்ன கோபம் இந்த நாயகிக்குன்னா, ஆறு மணிக்கு வரென்னு சொன்னியோல்லியோ?  நீ ஏன் வரலே?  அப்படிங்கறதுக்காக கதவடைச்சுத் தள்ளிட்டா இப்போ.  இது இங்கே.  ஏன் அவருக்கு நாழியாச்சு?  வரேன்னு சொன்னவர் ஆறு மணிக்கு வந்திருக்கலாமோல்லையோ?  என்னத்துக்கு ஆறு பத்து, ஆறேகால் ஆக்கிட்டார்ன்னா, அதுக்குப் பரகால நாயகி தான் பதில் சொல்லியிருக்கார்.  இங்கே எப்படி கோபத்தாலே, பிரணய ரோஷத்தாலே மின்னிடை மடவார்களோ, அதேபோல அவரும் பத்துப் பாசுரம் பாடினார்.

    காதில் கடிப்பிட்டுக் * கலிங்கம் உடுத்து *
    தாது நல்ல * தண்ணந் துழாய் கொடணிந்து *
    போது மறுத்துப் * புறமே வந்து நின்றீர் *
    ஏதுக்கிதுவென் * இதுவென் இதுவென்னோ

    (பெரிய திருமொழி – 10.8.1)

    இந்தப் பெருமான் என்னத்துக்காக வந்து நிற்கிறார்?  அவர், போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் – கதவோரமா வந்து நின்னுண்டாராம்.  ஆறுக்கு வரேன்னு சொல்லிட்டு ஆறேகாலுக்கு வந்துட்டீரோல்லையோ?  உம்ம யாரு இந்த இடத்தில வரச்சொன்னா இப்போ?  ஏதுக்கிதுவென் இதுவென் இதுவென்னோ – இங்க நீர் வர வேண்டிய தேவையே இல்லே, போம்.  பெருமாள் வாயைத் திறந்து, என்னத்துக்கு கால் மணி அவகாசம் ஆயிடுத்துன்னு கேளேன்.  அதைச் சொல்லுவேனோல்லையோ?  அதைக் கேட்காமலே நீ கோவிச்சுக்கறியேன்னா,

    துவராடை உடுத்து * ஒரு செண்டு சிலுப்பி *
    கவராக முடித்துக் * கலிக் கச்சுக் கட்டி *
    சுவரார் கதவின் புறமே * வந்து நின்றீர் *
    இவரார் இதுவென் * இதுவென் இதுவென்னோ

    (பெரிய திருமொழி – 10.8.2)

    நீ வந்ததெல்லாம் ரொம்ப நன்னா எனக்குத் தெரியும்.  துவராடை உடுத்து, கலிங்கம் உடுத்து – பெருமாள் நிறைய அலங்காரமெல்லாம் பண்ணிண்டு பரகால நாயகியை அனுக்கிரகம் பண்ணக் கிளம்பிட்டார்.  ஆறு மணிக்கு கிளம்பனும்ன்னா அஞ்சரைக்கு அலங்காரம் பண்ணிண்டு வேகமாப் போகணுமோல்லையோ?  எல்லாம் பண்ணினுட்டார்.  அவரோ மாடு மேய்க்கப் போறவர். கண்ணனோல்லையோ?  பகல் பொழுது முழுக்க மாடு மேய்ச்சுட்டுத் திரும்பி வந்தா, எல்லா அலங்காரத்தையும் மாத்திக்கணும்.  மாடு மேய்க்கிற அலங்காரத்தோட போனால் எந்த நாயகி திரும்பிப் பார்ப்பள்?  அதனாலதான் சரின்னு எல்லா அலங்காரத்தையும் மாத்தினுட்டார்.  இப்போ நல்ல ஆடை எல்லாத்தையும் அணிஞ்சிண்டாச்சு.  புஷ்பம் எல்லாம் சூடிண்டாச்சு.  புறப்பட்டுப் போறச்சே இப்படிக் கண்ணாடி வச்சிருந்தது வாசப்படிக்குப் பக்கத்திலே.  அதை ஒரு பார்வை பார்த்துண்டு போக மாட்டாளா?  எல்லாம் சரியா அலங்காரம் பண்ணிண்டு இருக்கமான்னு பார்க்கறதுக்காகப் பார்த்தா, நித்யபடிக்கே மாடு மேய்க்கப் போறச்சே, காதில இருக்கற தங்கக் குண்டலங்களை எல்லாம் யசோதை கழட்டிடுவோ.  ஏன்னா அதிலே இருக்கிற இரத்தினமெல்லாம் கீழே விழுந்துடறது, காட்டில அங்கயிங்க போய்ட்டு வரதுக்குள்ளே.  அதனால அதைக் கழட்டிடு துணித்திரி போட்டுத்தான் அனுப்புவளாம்.  இந்த காது தூந்து போய்டாது இருக்கணும்னா துணித்திரி போடணும்.  அதைக் கழட்டிட்டோம்ன்னா சீக்கிரமே இளம் வயசிலே தூர்ந்து போய்டும்.  அதனால துணித்திரி போட்டு அனுப்பிச்சிருந்தா.  மத்த எல்லாத்தையும் மாத்தினுட்டார் பெருமாள்.  அதை மட்டும் கழட்டலே.  இது இத்தனையும் தங்கம் தங்கமாப் போட்டுகிட்டு, துணித்திரிய மட்டும் கழட்டாம போனா நன்னாயிருக்குமா?  அதனால பார்த்துட்டு, உள்ள போய் பெட்டியைத் திறந்து, நிறைய குண்டலம் வச்சிருந்தார்.  பார்த்து ரெண்டு குண்டலத்தை எடுத்துக் கண்ணாடி முன்னாடி நின்னு அது சரியா இருக்கான்னு பொருத்திட்டு ஒருதரம் பார்த்துட்டு வரணுமோல்லையோ?  பத்து நிமிஷம் ஆய்டுத்து.  ஆறு மணிக்கு போறேன்னு சொன்னவர், ஆறேகால் ஆச்சு.  அதைப் பாட்டிலேயே சொல்லிட்டார்.  காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்து தாது நல்ல தண்ணந் துழாய் கொடணிந்து – இதெல்லாம் பண்ணிக்கறதுக்கு, போது மறுத்து – உனக்கேன் போது (பொழுது) ஆயிடுத்து?  இந்த அலங்காரமெல்லாம் சீக்கிரம் நீ பண்ணிண்டு வந்திருக்கணும்.  அது வராததுனாலதான் உனக்கு போதாயிடுத்து.  நீர் இங்கே வரவேண்டியதேயில்லே.  இவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இதுவென் இதுவென் இதுவென்னோ, என்று பரகால நாயகி பத்துப் பாசுரங்கள்.  ஒரு செண்டு சிலுப்பி – கையில ஒரு மலர் செண்டு பிடித்து, மெதுவா அதை அசைச்சிண்டே வரார்.  யாரேனும் பார்த்து எதுக்குப் போகிறீர்ன்னு கேட்டா, பரகால நாயகியை அனுகிரகிக்கப் போறேன்னு சொன்னா இவர் பெருமை குறைஞ்சு போய்டுமாம்.  அதுக்காக இதை இப்படியே வெறும திருப்பிண்டு, ஒரு செண்டு சிலுப்பி.  கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி – தலையைத் தூக்கி அவர் சீவியிருக்கற அழகைப் பார்த்தாலே யாரும் மனசைப் பறிகுடுத்துடுவர்கள்.  அப்படி ஒரு அழகிய திருக்கோலத்தோடே வந்தீர்.  ஆனா நான் மனசைப் பறிகுடுக்கறதா இல்லே.  நீர் அங்கேயே நில்லும், என்று பரகால நாயகி சொல்லுவதாக ‘காதில் கடிப்பிட்டு’.  நம்மாழ்வார் ஊடினது ‘மின்னிடை மடவார்கள்’.  அதே குலசேகர ஆழ்வாரும் ‘ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்’ன்னு ஊடினார்.  அதனால ஊடல் திறம்ங்கறதுக்காக் இந்த விசயம் பார்த்தோம்.

    இப்படி பல பத்துப் பத்துப் பதிகங்களாக நம்மாழ்வார் 27 பதிகங்களில் நாயகி பாவத்தில் பாடியிருக்கிறார்.  திருமங்கையாழ்வாரும் பல திவ்யப்பிரபந்தகளில், ஆறு திவ்யப் பிரபந்தங்களுக்குள்ளே, பெரிய திருமொழியிலாகட்டும், திருநெடுந்தாண்டகத்திலாகட்டும், இந்த ரெண்டு இடத்திலதான் பிரதானமா நாயகி பாவத்தில் பாடியிருக்கார்.  திருமங்கையாழ்வாருக்கு ஒரு வேறுபாடு என்னன்னா, தாய்ப்பாசுரமும், மகள்ப் பாசுரமும் ஸ்பஷ்டமா இருக்கும்.  ஆனா தோழிப் பாசுரம் ஸ்பஷ்டமா இருக்காது.  ஆனா இந்த மகள் பாடறதப் பார்த்தா ஒரு தோழி இருந்திருந்தாத்தான் பேசியிருக்க முடியும்.  நாம யூகிச்சுக்கணும்.  இப்ப நான் பேசறேன்னு வச்சுக்கங்கோ, நான் தனியா உட்கார்ந்து பேசறேன்னு நினைப்பேளா?  நீங்க யாரோ உட்கார்ந்திருக்கவேதான நான் பேசிண்டிருக்கேன்.  அதேபோல திருமங்கையாழ்வார் பாட்டைப் பார்க்கறச்சே யாரோ தோழி பக்கத்தில இருந்திருக்கான்னு நமக்குப் புரியும்.  அவர் சொல்லியிருக்கற பாட்டு அப்படித்தான் இருக்கு.  ஆனா தோழி பேசியிருக்கறது பாட்டிலே இல்லே.  இப்போ தோழிப்பாட்டாக அதிலே இருக்கணுமோல்லையோ?  அந்த மாதிரி அதிலே இல்லே.  அதனால் நம்மாழ்வாரிடத்திலே மூன்று பாவனையும் ஸ்பஷ்டம்.  திருமங்கையாழ்வாரிடத்திலே ரெண்டு பாவனை.  அதிலே திருநெடுந்தாண்டகங்கிறது ரொம்ப ஆச்சர்யமான பத்துப் பாசுரம்.  மொத்தம் முப்பது பாட்டு அதிலே.  அதில முதல் பத்துப் பாசுரங்கள் ஞான பாவனையோட பாடிட்டார்.  அடுத்த பத்து தாய்ப்பாசுரமாகப் பாடறார்.  கடைசிப் பத்து மகள் பாசுரமாகப் பாடுகிறார்.  இந்தத் தாயர் பெண்ணைப் பார்த்து வருத்தப்டறா.

    பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் *
    பனி நெடுங்கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் *
    எட்டுணைப் போதென் குடங்கால் இருக்ககில்லாள் *
    எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் *
    மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் *
    மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே
    கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்! *
    கடல் வண்ணார் இதுசெய்தார் காப்பார் ஆரே

    (திருநெடுந்தாண்டகம் – 11)

    கட்டுவிச்சியைக் கூப்பிட்டு வந்துட்டு, கடல் வண்ணார் இது செய்தார்.  யார் இந்த மாதிரிப் பண்ணியிருக்க இந்தப் பெண்ணை?  மூர்ச்சையாகி விழறாளே, மயக்கமாக விழுந்துட்டாளே.  பட்டுடுக்கும் – இந்த சின்னப் பெண், பரகால நாயகி, பட்டை எடுத்து உடுத்தி உடுத்திப் பார்த்துக்கறாளாம்.  பாவாடை இடுப்புல நிக்கவே மாட்டேங்கறது இன்னும்.  அயர்த்திரங்கும் – ஆனா அந்தப் பட்டைக் கட்டிக்கறதுக்குள்ள ஆயாசம் ஏற்பட்டுக் கீழே விழுந்துடறா.  பாவை பேணாள் – பொம்மை இல்லாட்டா முன்னாடித் தூங்கவே மாட்டா.  இப்போ பெருமான் இல்லேன்னவுடனே என்ன பொம்மை வாங்கிக் குடுத்தாலும் பிடிக்கறதில்லே.  எட்டுணைப் போதென் குடங்கால் இருக்ககில்லாள் – என் மடியிருந்தாத்தான் முன்னாடி என் பெண் தூங்குவள்.  இப்போ என்னமோ தெரியலே, என் மடியிலே அழுத்தி வைச்சாக்கூட தூங்க மறுக்கிறாள்.  மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை – இந்தப் பெண்ணை யார் இப்படி செய்துட்டார்ன்னு கண்டுபிடிக்கறதுக்காகக் கட்டுவிச்சியைக் கூப்பிட்டா.  கட்டுவிச்சிதான் குறத்தி.  அவள் வந்து பார்த்து, யாருமில்லே, கடல்வண்ணார் இது செய்தார்.  கடல் வண்ணன்னா, நாராயணன் கடல் வண்ணனோல்லையோ?  கடல்வண்ணனே பண்ணிட்டா அப்புறம் யார் காப்பாத்துவா?  பூதப்பிரேதங்கள் பிடிச்சிருந்ததுன்னா பகவானிடத்திலே போய்க் கேட்கலாம்.  பகவானே பிடிச்சிண்டு இருக்காரோல்லையோ.  இதிலே யாரும் மாத்தறதுக்கு வழி கிடையாது.  தாயே, நல்லவேளை இந்தப் பெண்ணுக்கு இந்த வியாதி பிடிச்சதேன்னு சந்தோசப் பட்டுக்கோன்னுட்டாள் அவள்.  அப்படியா, வியாதி பிடித்தா துக்கமில்லையான்னா, இது உற்ற நன்னோய் இது தேறினோம்.  இந்த நோய்தான் பக்தின்னு பேர்.  இது வருமா, வருமான்னுதான் பெரிய பாகவதர்களெல்லாம் பிரார்த்திக்கிறார்கள்.  இது உன் பெண்ணுக்குத் தானே வந்துருக்கு.  கவலைப்படாதேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாள் அவள்.  அதனாலே பத்துப் பாசுரங்களாலே தாய் பாவனையிலேயே பாடி வந்தார்.

    முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை * மூவா
    மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *
    அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
    அந்தணனை * அந்தணர் தம் சிந்தை யானை *
    விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில் *
    வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
    வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக! என்று *
    மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே

    (திருநெடுந்தாண்டகம் – 12)

    என்று ஆச்சர்யமா தெரிவித்தார்.  ஆக இந்தப் பத்துப் பாசுரங்களூம் தாய் பாவனையோடே பாடினது.  கடைசிப் பத்துப் பாசுரம்தான் மகள் பாவனையோடே பாடினார்.  ரொம்ப அழகான பாசுரம்.

    மை வண்ண நறுங்குஞ்சிக் குழல் பின் தாழ *
    மகரம் சேர் குழை இருபாடிலங்கி ஆட *
    எய் வண்ண வெஞ்சிலையே துணையா * இங்கே
    இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் *
    கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் *
    கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே *
    அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ! *
    அவரை நாம் தேவர் என்றஞ்சினோமே

    (திருநெடுந்தாண்டகம் – 21)

    பெருமாள் எப்படியாவது ஆழ்வாரைத் தன் வசப்படுத்திடனும்ன்னு வரனாம்.  ஆனா அவன் என்ன அழகைக் காட்டினாலும் நான் வசப்படறதா இல்லே, என்று பரகால நாயகி சொல்லிக் கொண்டு இருக்கிறாள்.  கடைசில பெருமாள் பாடிப் பார்த்தாராம்.  இவ என்ன பண்ணாலும் வசப்பட மாட்டேங்கறா.  பாட்டுக்குக் கல்லும் இரங்கும், பேயும் இரங்கும்ங்கிறா.  பரகால நாயகி இரங்கமாட்டாளா?  அப்படிங்கறதுக்காக நைவளம் ஒன்றாராயா நம்மை நோக்கா – நைவளம்ன்னா நட்டபாடை நாட்டக்குறிஞ்சி ராகம்.  நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் செய்வளவில் – பெருமான், ஒண்ணும் இந்தப் பெண்ணை ஏமாத்தறதுக்கு முடியலே.  வசப்பட மாட்டேங்கறா.  நாம வேணா அவளுக்குத் தாசன்னு சொல்லிடுவோம், அப்படின்னு அவன் பண்றதுக்குள்ளே, என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய – என் மனசும் கண்ணும் அவனிடத்தில போய்டுத்து தோழி.  இத்தனை நாளும் அவனைப் பார்த்தா திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சிட்டிருந்தேன் பார், நானும் நிறையும் இழந்தேன் – அத்தனையும் பகவானிடத்தில் பறிகொடுத்தேன்னு திருநெடுந்தாண்டகத்திலே சாதித்தார்.  அது கடைசிப் பிரபந்தம் திருமங்கை ஆழ்வாரது.  இருக்கறதுல பிரசித்தி பெற்றதுன்னா சிறிய திருமடல், பெரிய திருமடல்.  இந்த ரெண்டு பிரபந்தமும் திருமங்கையாழ்வார் முழுக்க முழுக்க மடலெடுத்ததே.  நம்மாழ்வாரானும் ஒரு பத்துப் பாசுரத்தில எடுக்கலாமான்னு பார்த்தார்.  ஆனால் திருமங்கையாழ்வார் இரண்டு பிரபந்தங்களாலே.  சிறிய திருமடலாலே,

    காரார் வரைக் கொங்கை கண்ணார் கடல் உடுக்கை *
    சீரார் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேராற்று *
    பேரார மார்வின் பெருமா மழைக் கூந்தல் *
    நீரார வேலி நிலமங்கை என்னும் * இப்
    பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே * அம்மூன்றும்
    ஆராயில் தானே அறம்பொருள் இன்பம் என்று *
    ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார் *
    சீரார் இருகலையும் எய்துவர் * சிக்கென மற்று
    ஆரானும் உண்டென்பார் என்பது தான் அதுவும் *
    ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல் *
    ஓராமை ஆமாறது உரைக்கேன் கேளாமே *
    காரார் புரவியேழ் பூண்ட தனி ஆழி

    ஆழ்வார் எவ்வளவு தைரியமாப் பேசிட்டார் இந்த நாயகி பாவத்திலேன்னா, அறம் பொருள் இன்பம் வீடுன்னு நாலு புருஷார்த்தம்ன்னு சொல்றாளே, பொய்.  வீடுன்னு ஒரு புருஷார்த்தம் கிடையவே கிடையாது.  இருக்கறதே காமம்தான் புருஷார்த்தம்.  அதைத்தான் இந்தப் பிரபந்தத்திலே சொல்றார் ஆழ்வார் இப்போ.  அறம், பொருள், இன்பம், வீடு இல்லே, மூனுதான்.  இப்பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே – புருஷார்த்தம் நாலுன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம்.  தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்.  ஆனா மோக்ஷத்தையே ஒத்துக்காம, காமமே மோக்ஷம்ன்னு ஆழ்வார் தெரிவிக்கிறார்.  ஏன்னா இது நாயகி பாவனையோட பாடறபடியாலே, வைதிக காமமேதான மோக்ஷமா இருக்கணும்?  லௌகிக காமம் வேணா மோக்ஷமா இருக்காது.  ஆனா ஆத்ம, பரமாத்மாவுக்குள்ள காமம் ஏற்பட்டால், அந்த வைதிக காமமேதான் மோக்ஷமென்று திருமங்கையாழ்வார் இந்த பிரபந்தத்தாலே சாதித்தார்.  இதிலே கடைசில வரிசையா திவ்யதேசப் பட்டியலே படிக்கிறார்.  ஒவ்வொரு திவ்ய தேசமாச் சொல்லி, ஒவ்வொரு திவ்ய தேசத்துக்கும் போயாவது இந்தப் பெருமானை அடைந்தே தீருவேன், என்று சிறிய திருமடலாகட்டும், பெரிய திருமடலாகட்டும், ரெண்டாலயும் திருமங்கையாழ்வார் பாடினார்.  கடைசிப் பிரபந்தமான திருநெடுந்தாண்டகத்தாலே பெருமானோடேயே கலந்தார், அனுபவித்தார்ங்கிறது சரித்திரம்.

    இப்போ பராங்குச நாயகியும் சிலது பார்த்திருக்கோம்.  பரகால நாயகியும் சிலது பார்த்திருக்கோம்.  தோழிப்பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம்.  என்ன பாவனையில பாடினா?  சம்பந்தம், உபாயம்.  பகவானுக்கும் நமக்கும் இருக்கிற சம்பந்தம் ஞாபகம் வந்தா தோழிப்பாசுரம்.  ஆறியிருக்கணும், சமாதானத்தோடே இருக்கணும், வரச்சே வருவர்ன்னு தோணினா, தாய்ப்பாசுரம்.  அடைந்து உடனே அனுபவிக்கணும்ன்னு தோணினா, மகள்ப் பாசுரம்.  ஓம், நமஹ, நாராயணாய, இந்த மூன்று சொற்களினுடைய அர்த்தமாகவே ஆழ்வார் இப்படித் தோழிப் பாசுரமாய், தாய்ப் பாசுரமாய், மகள்ப் பாசுரமாய் பாடினார்ங்கிரது சம்ப்ரதாயம். 

    (முற்றும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

    June 25

    நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 4

    முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3

    இரண்டாம் பத்து வந்ததுன்னா, முதல் திருவாய்மொழி,

    வாயும் திரையுகளும் * கானல் மட நாராய் *
    ஆயும் அமர் உலகும் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் *
    நோயும் பயலைமையும் * மீதூர எம்மேபோல் *
    நீயும் திருமாலால் * நெஞ்சம் கோள் பட்டாயே

    (திருவாய்மொழி 2.1.1)

    பெருமானை விட்டுப் பிரிந்த விரகத்திலே ஆழ்வார் துடிக்கிறார்.  விரக தாபத்தை ஆற்றிக்கொள்ள வீட்டை விட்டுட்டு, இங்க இருந்தா ரொம்ப ஞாபகம் வருதுங்கிறதுக்காக வீட்டை விட்டுட்டு தாமிரபரணிக் கரையோரமாப் போனார்.  அவர் திவ்யதேசம் தாமிரபரணிக் கரையிலதான்.  அதனால அங்க போனார்.  சாயங்கால வேளை.  அஞ்சு மணிக்கு வீட்ல விளக்கேத்தி வச்சுட்டார், சாயாங்காலம் அங்க போறார்.  வேகமா ஜலம் ஓடிண்டு இருக்கு.  காத்து அங்கயும், இங்கேயும் ஓடறது.  ஒரு மீன் கிடைக்கற வரைக்கும் நாரை, ஒரு கொக்கு நின்னுண்டு இருக்கு.  அந்தக் கொக்கு வெளுப்பா இருந்ததோல்லையோ, அந்தக் கொக்கைப் பார்த்து ஆழ்வார் கேட்கறார்.  என்னைத்தான் இந்தப் பெருமான் ஏமாத்திட்டார்ன்னா, கொக்கே உன்னையும் ஏமாத்திட்டார் போலருக்கே?  கொக்கு கேட்டது, என்னை என்ன ஏமாத்தினார்ன்னு.  பெருமானையே தெரியாது இந்தக் கொக்குக்கு.  அது ஏதோ வெளுப்பா நின்னுண்டு இருக்கு.  ஏன்னா எப்பவும் நாயகிக்கு நாயகனான பகவானைப் பிரிந்தால் உடம்பு வெளுத்துப் பசலை நோய்ன்னு வரும்.  நீங்க தமிழ் இலக்கியத்தில பார்த்தீள்ன்னா பசலை நோய் காண்பதுங்கிறது முக்கியம்.  அது உடம்பு வெளுத்துப் போய்டும்.  இந்த நாரை உடம்பு வெளுத்திருக்கோல்லையோ, திருமால் இதை வஞ்சிஞ்சிட்டபடியால்தான் இதுக்கு உடம்பு வெளுத்துப் போச்சுன்னு நினைச்சுட்டார் ஆழ்வார்.  நாரை எப்பவுமே வெளுப்பாத்தான் இருக்கும்.  ஆனா அதைப் பார்த்த இவருக்கு என்ன தோண்றது?  நானும் வெளுத்துப் போய்ட்டேன், நாரையும் வெளுத்துப் போச்சு. நாரையோட கழுத்தைக் கட்டிண்டு ‘ஓ’ன்னு அழறார்.  நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே – திருமால் உன்னையும் வஞ்சிஞ்சிட்டார் போலருக்கே.  என்னைத்தான்னு நினைத்தேன், உன்னையுமா வஞ்சித்தான்னு அழுதார்.  பக்கத்துல காத்து வேகமா ஓடிண்டிருந்தது.  காத்தைப் பார்த்துட்டு, நானும்தான் அந்த பகவானை எங்கே எங்கேன்னு தேடி ஓடிண்டிருக்கேன்னா, காற்றே நீயும் தேடி ஓடுகிறாய் போலிருக்கிறது, என்று ‘காற்றும் கழியும் கட்டியழ கொண்ட பெரும் காதலுக்குப் பற்றிய நூல் வரம்பில்லை’ என்று ஒரு நூல் வரம்பு சொல்ல முடியாமல், இன்னதுதான் கிரமம், பக்தி இப்படித்தான் இருக்கும்ன்னு ஆழ்வாரிடத்திலே சொல்லமுடியலே.  இப்போ உபாசனம்ன்னால் ரிஷிகள் இப்படியெல்லாமா அழுவா?  அவாளுக்கு தியானம் தெரியும், உபாசனம் தெரியும், பக்தி தெரியும்.  ஆனா யாரும் காத்தையும், கழியையும் கட்டி அழப் போறதில்லே.  ஆனா இவர் இப்படி அழுகிறாரேன்னு சொன்னா, அது ஞானப்பேச்சைக் காட்டிலும், பிரேமப் பேச்சுக்கு இருக்கற ஏற்றம்.  இதுனால மோக்ஷம் கிடைச்சுடுமா?  தாமிரபரணி ஆற்றங்கரையில போய் நாரை கழுத்தைக் கட்டிண்டு அழுதுண்டிருக்காரே, இதுனால மோக்ஷமான்னு கேட்டால், மேலே சொன்ன ரிஷி மோக்ஷமடைவரான்னு கேட்கணுமே தவிர, இதுல சந்தேகமேபடக் கூடாது.  ஏன்னா ரிஷி ஞானத்தோடே பேசிண்டிருக்கார், அவருக்குண்டானதுதான் கிடைக்குமா, கிடைக்காதான்னு சந்தேகம்.  ஆனால் இங்கே இவர் வேற வழியற்று பக்தி மேலீட்டாலே பேசுகிறபடியால், இதுக்குத்தான் நிச்சயம் மோக்ஷமுண்டுன்னு சொல்லுவர்கள்.

    அதனாலே காற்றாகட்டும், நாரையாகட்டும், குருகாகட்டும், இதெல்லாம் இரண்டாம் பத்து ஆரம்பத்துல அழுதார்.  பார்த்ததுக்கு இங்க இருக்கற எல்லாருமே பெருமாளைப் பிரிஞ்சு கஷ்டப்படறா போலருக்கு.  நான் ஒருத்தி மட்டும்தான்னு நினைச்சிண்டிருந்தேன்.  அது இல்லே.  இந்த ஊரிலே தாமிரபரணியும் கஷ்டம்தான் படறது, நாரையும் கஷ்டம்தான் படறது, குருகும் கஷ்டம்தான் படறது.  இதைவிட நாம இருக்கற இடமே தேவலைன்னு தோணிப்போய்டுத்து ஆழ்வாருக்கு.  வீட்டிலே இருக்க வேண்டாம்னுட்டு சாயங்காலம் கிளம்பி வந்தாரோல்லையோ?  மணி பதினோரு மணி.  திரும்பிப் போனார்.  சாயங்காலம் விளக்கேத்தி வச்சது, திரும்பிப் போய் இப்போ விளக்கைத் தொட்டா கொதிக்காதா?  வெங்கல விளக்கு.  தொட்டவுடனே ஒரே கொதிச்சது.  அதைப் பிடிச்சுட்டு அழுக ஆரம்பிச்சுட்டார். நான்தான் ஜுரத்தில கொதிக்கிறேன்னா, நீயும் ஜுரத்திலே கொதிக்கிறே போலருக்கு.  உன்னையுமா பகவான் வஞ்சித்துவிட்டான்னு அதையும் கட்டி அழுதார்.  இது ரெண்டாம் பத்திலே.  இந்த ரெண்டாம் பத்திலேயே தாயார் பாசுரம் ரொம்ப ஆச்சர்யமான பாசுரம். தாய்ப்பாசுரத்தில்,

    ஆடியாடி * அகம் கரைந்து * இசை
    பாடிப்பாடி * கண்ணீர் மல்கி * எங்கும்
    நாடிநாடி * நரசிங்கா! என்று *
    வாடிவாடும் * இவ்வாள் நுதலே

    (திருவாய்மொழி 2.4.1)

    இது பொண்ணு படற பாட்டைக் கண்டு சகிக்காம தாயார் சொல்றது.  ஏனா இந்த நாயகனை விட்டுப் பிரிந்து நாயகி ரொம்பத் துடிக்கிறா.  பார்த்துண்டிருக்கறதுக்கு தாயாரால முடியலே.  பெண்ணே, வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னேனே, கேட்டியா?  ஆறி இருந்திருக்க வேண்டும்.  நீ சமாதானப் பட்டிருக்க வேண்டாமா?  அப்படின்னு பக்கத்து வீட்டுக்காரிக்கெல்லாம் இந்தப் பொண்ணு படற பாட்டை தாயார் சொல்லிக்கிறா.  இவ நினைவோட இருக்கப்போ எப்படி இருந்திருப்போ.  இப்ப நினைவற்று மூர்ச்சையா கிடக்கா, எப்படி இருக்கா, இதைத் தாயார் சொல்லுகிறாள்.  ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி – பகவன் நாமத்தைப் பாடிப்பாடி கண்கள்லேர்ந்து ஜலம் கொட்டக் கொட்ட, எங்கும் நாடிநாடி நரசிங்கா என்று வாடிவாடும் இவ்வாள் நுதலே.  அடுத்த பாட்டிலே, வாள் நுதல் இம்மடவரல் உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – இம்மடவரவள் உம்மைக் காணும் ஆசையால்தானே நைகின்றாள்.  வேற எதை ஆசைப்பட்டுட்டா?  உம்மைத் தானே ஆசைப்பட்டா.  ஆசைப்பட்டவர் அனுகிரகிக்கறதுதானே ஸ்ரீமந்நாராயணனான உமக்குக் கடமை.  ஆனா இந்தப் பெண்ணை இப்படிப் பண்ணிட்டீரேன்னு தாயார் ரொம்ப வருத்தப்பட்டு பத்துப் பாசுரங்கள்.  இது ரெண்டாம் பத்திலே நடந்தது.

    பத்துப் பத்துக்குள்ளே மூன்றாம் பத்தில் மட்டும் நாயகி பாவம் கிடையாது.  நாலாம் பத்தில் ரொம்ப ஆச்சர்யமான பாசுரம் பாடினார்.

    ஏறாளும் இறையோனும் * திசைமுகனும் திருமகளும் *
    கூறாளும் தனியுடம்பன் * குலம் குலமா அசுரர்களை *
    நீறாகும் படியாக * நிருமித்துப் படைதொட்ட *
    மாறாளன் கவராத * மணி மாமை குறைவிலமே

    (திருவாய்மொழி – 4.8.1)

    அதாவது இந்தப் பெண்ணினுடைய வளையல், அவள் நிறம், அவள் மேலங்கி, அவள் போட்டிருந்த அட்டிகை, அவள் போட்டிட்ருந்த மூக்குத்தி, அவள் தலையில போட்டிட்ருந்தது, அவளுடைய அழகு, அவளுடைய நினைவு, இது இத்தனையும் பெருமாள் பறிச்சிண்டு போய்ட்டாராம்.  அதைப் பார்த்து நான் ஒன்னொண்னையும் இழந்துட்டேன், இழந்துட்டேன்னு, இந்தப் பெண் பாடிக்கொள்ளுகிறாள்.  இது ஏறாளும் இறையோனும் பதிகம்.  இதே போல திருமங்கையாழ்வாரும் பாடி இருக்கார்.  அப்புறம் பார்ப்போம்.  ஏறாளும் இறையோனும் பதிகம் முழுக்க, தான் ஒன்னொண்னையும் இழந்துட்டெங்கிறதைத் தெரிவித்தார்.  அதிலே ரொம்ப ஆச்சர்யமான பதிகம்ங்கிறது, கீழே சொன்னேனோல்லையோ, என்றோ நடந்ததை இன்னைக்கு நடந்ததா நினைச்சுனுடறாள்ன்னுட்டு.  பக்கத்திலே தன்னுடைய மண்ணைத் துழாவி துழாவிப் பார்க்கிறா.  இதுவும் தாயார் சொல்றது இப்போ.  ஆழ்வார் திருநகரியிலே உட்கார்ந்துட்டிருக்கார் நம்மாழ்வார்.  அவர் தான் ஊர் மண்ணைத் துழாவுறாராம்.  துழவிப் பார்த்துட்டு இதுதான் வாமனன் அளந்த மண்ணுங்கிறார்.  அது நடந்தது கிருத யுகத்திலே. ஆழ்வார் இருக்கறது துவாபரயுகம் முடிஞ்சு, கலியுகத்தின் ஆரம்பத்திலே.

    மண்ணை இருந்து துழாவி *
    வாமனன் மண்ணிதென்னும் *
    விண்ணைத் தொழுதவன் மேவு *
    வைகுந்தம் என்று கை காட்டும் *
    கண்ணையுண்ணீர் மல்க நின்று *
    கடல் வண்ணன் என்னும் அன்னே! * என்
    பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு *
    என்செய்கேன் பெய் வளையீரே

    (திருவாய்மொழி – 4.4.1)

    ஆகாசத்தைப் பார்த்துட்டு இதுதான் ஸ்ரீவைகுண்டம், தெரியாதா, அப்படின்னு கைகூப்பிக்கிறாளாம்.  பக்கத்தில இருக்கற மண்ணைத் துழாவித் துழாவி பார்த்துட்டு வாமனன் அளந்த மண் இதுதான்கிறாளாம்.  இதோட எல்லாம் இல்லே.  இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு பைத்தியம் பிடிச்சுடுத்தோ தெரியலே.  அங்க ஓடிண்டிருக்கு ஒரு கன்னுக்குட்டி.  கன்னுக்குட்டியைக் கெட்டியா கட்டிப்பிடிச்சிண்டு கண்ணன் மேய்த்த கன்னுக்குட்டி இதுதாங்கிறா.  பாம்பு ஒன்னு ஓடிண்டிருக்கு.  அது பின்னாலயே ஓடி கண்ணன் சயனிச்சிண்டிருக்கற ஆதிசேஷன் இதுதான்னு சொல்றா.  யாராவது குழல் ஊதிட்டுப் போனா, பகவானே குழல் ஊதுறான்னு சொல்லும்.  எங்கேயாவது வெண்ணையைப் பார்த்தா பகவான் சாப்பிட்ட வெண்ணை இதுதான்னு சொல்றா.  இப்படி ஏறிய பித்தினோட என் பெண்ணோட நான் படறது போறலே, இதை எப்படித் தீர்க்கப் போகிறேன்னு தெரியலேன்னு தாயார் பக்கத்து வீட்டுக்காரியினிடம் சொல்லிக் கொள்ளுகிறாள்.  இதுவும் நாயகி பாவத்திலே நாலாம் பத்திலே பாடினதுதான்.

    ஐந்தாம் பத்திலே பல பதிகங்கள்.  இதிலேதான் மடலெடுத்தார் ஆழ்வார்.  மடலெடுப்பதில் தமிழர்களுக்கு ஒரு மரபு, சம்ஸ்கிருத இலக்கியத்துக்கு ஒரு மரபு.  தமிழ் இலக்கியத்திலே என்னதான் இருந்தாலும் பெண் மடலெடுக்க மாட்டாள்.  ஆண்தான் மடலெடுக்கலாம்.

    கடலென்ன காமத்தராயினும் மாதர் மடலூரார்
    மற்றையார் மேல்.

    கடல் போன்ற காமம் இருந்தாலும் பெண்கள் மடல் ஊர மாட்டார்கள், ஆண்கள்தான் மடலூருவார்கள்ங்கிற்து தமிழர் மரபு.  ஆனால் சம்ஸ்கிருத இலக்கியத்திலே ஸ்திரீ மடலெடுக்கறது, புருஷன் மடலெடுக்கறது ரெண்டுமே ஏத்துக்கறா.  இதுனால திருமங்கையாழ்வார் சிறிய திருமடல், பெரிய திருமடல் ரெண்டு பாடினார்.  அவர் ஒரு பாட்டில சொல்லிட்டார்.  நாங்கள் கண்டிப்பா வடநெறியே வேண்டினோம், தென்னெறி இதுக்கு வேண்டாம்னுட்டார் அவர்.  ஏன்னா தென்னெறிங்கறது தமிழ் பாஷைப் படியோல்லையோ?  தென்னெறிப்படி நான் பாட்டுப் பாடறதா இல்லே.  அப்படின்னா இவர் பெண். பெண் பாவனையிலே மடலெடுக்கறது கூடாது, தமிழ் இலக்கியத்தின்படி.  ஆனா சம்ஸ்கிருத இலக்கியத்தின்படி பெண் பாவனையிலே மடலெடுக்கலாம்.  மன்னு வடநெறியே வேண்டினோம் – நான் இந்தப் பிரபந்தம் பாடற வரைக்கும் சம்ஸ்கிருதனாகவே பாடிட்டுப் போறேன்னுட்டார்.  மடலெடுக்கறது தமிழ்லதான்.  ஆனா தான் நினைச்சிண்டிருக்கறது சம்ஸ்கிருத இலக்கியத்தின்படியே பாடுவேன்னு சாதித்தார்.  என்னத்துக்காக இப்படி நடக்கறதுன்னு சொன்னா, சாதாரணமா லோகத்தில இருக்கற பெண்களெல்லாம் மடலெடுக்கறது இல்லையே.  ஆனா ஆழ்வார்கள் நாயகி பாவத்திலே மடலெடுத்திருக்காளே?  என்ன வித்தியாசம், மரபை மீறலாமாங்கிற சந்தேகம் வரும்.  மரபை மீறுவதற்கு ஒரு காரணமுண்டு.  லோகத்துப் பெண்கள் மடலெடுக்கறதெல்லாம் யாரைப்பத்தி?  ஏதோ ஒரு புருஷனைப்பத்தி.  இங்கிருக்கற யாரையோ பத்தித்தானே மடலெடுத்தாகனும்?  இவாளுக்கெல்லாம் அவ்வளவு பெருமை இல்லே, மடலெடுக்க வைக்கிற அளவுக்கு.  நாயகனுக்கு அத்தனை பெருமை இருந்தா பெண் மடலெடுக்கலாம்.  ஒன்னும் இல்லே அந்த மாதிரி, அதனாலே யாருக்கும் மடலெடுக்கறதில்லே.  ஆனா ஸ்ரீமந் நாராயணன் அப்படியா?  பார்த்தவுடனே மடலெடுக்க வைக்கிறானோல்லையோ?  அதனாலதான் பரகால நாயகியோ, பராங்குச நாயகியோ மடலெடுத்தார்கள்.  இது லௌகீக விஷயமாயிருந்தா புரியாது.  இது பகவத் விஷயமா இருக்கிறபடியாலே பெண் மடலெடுத்தலும் கூடும்ன்னு வைத்துக் கொள்ள வேண்டும்.

    இதைத்தான் ஐந்தாம் பத்தில், மூன்றாம் திருவாய்மொழியில்,

    மாசறு சோதி * என் செய்யவாய் மணிக்குன்றத்தை *
    ஆசறு சீலனை * ஆதி மூர்த்தியை நாடியே *
    பாசறவெய்தி * அறிவிழந்தெனை நாளையம் *
    ஏசறு மூரவர் கவ்வை * தோழீ! என் செய்யுமே

    (திருவாய்மொழி – 5.3.1)

    எத்தனை நாட்களாக அறிவிழந்து கிடந்தேன்.  இந்தப் பெருமானை எப்படியாவது அடைஞ்சுடனும்ன்னு மடலெடுக்கத் தொடங்கினாள்.  அதிலேர்ந்து மூன்று பதிகம், மடலெடுக்கறதுக்காக ஆரம்பிச்சார்.  சாயங்காலம் வந்துடுத்து.  ராத்திரியாயிருந்து மடலெடுத்து என்ன லாபம்?  யார் பார்ப்பா?  அதனால நிறுத்தினுட்டார்.  மறுபடியும் மகள் பாசுரம்தான்.

    ஊர் எல்லாம் துஞ்சி * உலகெல்லாம் நள்ளிருளாய் *
    நீர் எல்லாம் தேறி * ஓர் நீள் இரவாய் நீண்டதால் *
    பார் எல்லாம் உண்ட * நம் பாம்பணையான் வாரானால் *
    ஆர் எல்லே! வல்வினையேன் * ஆவி காப்பார் இனியே

    (திருவாய்மொழி – 5.4.1)

    இந்த ஆவியை இனிமே யாரு காக்கப் போறார்ன்னு தெரியலே.  ராத்திரி வந்துடுத்து.  கண்ணனும் வாரானால், காகுத்தனும் வாரானால் – கண்ணன் இரட்சிக்கறதுக்கு வரலே, காகுத்தன் இரட்சிக்கறதுக்கு வரலே.  இனிமே நான் முடிஞ்சு போய்ட வேண்டியதுதான் போலருக்குன்னு ஐந்தாம் பத்திலே நாலாம் திருவாய்மொழி பாடினார்.  அதுக்கடுத்ததும் மகள் பாசுரம்தான்.  ரொம்ப ஆச்சர்யமான பாசுரம், திருக்குறுங்குடி நம்பிக்காக.  திருக்குறுங்குடி நம்பியை நினைத்தே பத்துப் பாசுரங்கள் பாடினார்.

    எங்ஙனேயோ அன்னைமீர்காள்! * என்னை முனிவது நீர் *
    நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை * நான் கண்டபின் *
    சங்கினோடும் நேமியோடும் * தாமரைக் கண்களோடும் *
    செங்கனி வாய் ஒன்றினோடும் * செல்கின்றதென் நெஞ்சமே

    (திருவாய்மொழி – 5.5.1)

    என் நெஞ்சம் என்னிடத்திலே இல்லை.  அன்னைமீர்காள், எனக்கு நீங்க உபதேசிக்காதீங்கோ.  அவள் பார்த்து இரு, இரு, ஆறியிருங்கறாளோல்லையோ?  இது எதுக்கு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீள் நீங்க இப்போ?  சொன்னா காது எங்கிட்ட இருக்கணும், சொல்லணும்.  மனசு எங்கிட்ட இருக்கணும், சொல்லணும்.  இந்த மனசும், செவியும், கண்ணும் என்றோ நம்பி பின்னே போயிற்று.  நீங்கள் சொல்றது எதுவும் என் காதிலே ஏறப்போறது கூட கிடையாது.  நீங்கள் உங்கள் கோணத்திலேயே பார்க்கிறேளே தவிர, இந்த பாட்டிலே சொல்றார் பாருங்கோ.

    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் * என்னை முனியாதே *
    தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை * நான் கண்டபின் *
    மின்னும் நூலும் குண்டலமும் * மார்வில் திருமறுவும் *
    மன்னு பூணும் நான்கு தோளும் * வந்தெங்கும் நின்றிடுமே

    (திருவாய்மொழி – 5.5.2)

    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் – எந்தப் பொண்ணும் இதைத்தான் முதல்ல சொல்லும்.  என் கோணத்திலேர்ந்து பாருங்கோ.  நீங்க உங்க வயசானவா கோணத்திலேர்ந்தே பார்த்திட்டு இருந்தேள்ன்னா, நாங்க என்ன சொல்றோம்ன்னு பாருங்கோன்னு பொண்ணு சொல்றதோல்லையோ?  இது இன்னைக்கில்லே இவா சொல்றது.  5108 வருஷத்துக்கு முன்னாடி ஆழ்வார் பாடினார்.  ஆனா வித்தியாசம், இது லௌகீகம், அது வைதீகம்.  என் நெஞ்சத்திலேர்ந்து பாருங்கோ.  பகவானிடத்திலே நெஞ்சம் போய்ட்டதுனாலே இனி நீங்க சொல்றது கேட்காதுனுட்டு, ரொம்ப ஆச்சர்யமான பத்துப் பாசுரம், திருக்குறுங்குடி நம்பிக்கு.  திருக்குறுங்குடி நம்பி பெருமானே அழகு.  அந்தப் பெருமானேதான் பராங்குச நாயகியாகப் பிறந்ததாக ஐதீகம்.  ஏன்னா ஆழ்வாருடைய தாயாரும், தகப்பனாரும் திருக்குறுங்குடி நம்பிகிட்டதான் போய் பிரார்த்திச்சிண்டா, நமக்கு குழந்தைப் பேறில்லே, வேணும்ங்கிறதுக்காக.  உடைய நங்கையார், காரி, இவா ரெண்டு பேரும் போய் நம்பியினிடத்திலே கேட்கறா.  யாரைப் போல பிள்ளை வேணும்ன்னு திருக்குறுங்குடி நம்பி கேட்கறார்.  சட்டுன்னு தாயார், உன்னைப் போல வேணும்ன்னார்.  நம்பி யோசித்தார், என்னைப் போல உலகத்திலே யாரும் இல்லே.  நானே பொறந்தாத்தான் உண்டு.  என்னைப் போல இன்னொருத்தர் இருந்தா நான் அனுப்பிச்சு வைக்கலாம்.  இருக்கறது நாம். அதனால நாமே பராங்குச நாயகியாகப் பிறப்போம்ன்னு நம்மாழ்வாராகப் பிறந்தார்ன்னு ஐதீகம்.  அந்த எம்பெருமானுக்காக ஐந்தாம் பத்தில் ஐந்தாம் திருவாய்மொழி பாடினார்.  அப்போ 5.3, 5.4, 5.5 மூன்றுமே நாயகி பாவத்திலே பாடினதுதான்.

    அதுக்கு அப்புறம் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி வந்தது.  அதுலதான் அனுகாரம் பண்றார்.  அனுகாரம்ன்னா பெருமாளாவே தன்னை நினைச்சினுடுவார்ன்னு பார்த்தோமே.  அப்படியாவது பிரிவாற்றாமையைக் குறைச்சுக்கலாமாங்கிறதுக்காக.

    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் *
    கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ *
    கடல் ஞாலத்தீர்க்கிவை என் சொல்லுகேன் *
    கடல் ஞாலத்தென் மகள் கற்கின்றவே

    (திருவாய்மொழி – 5.6.1)

    இது தாய்ப் பாசுரம்.  தாய்ப் பாசுரம்ன்னா, தாயார் மகளைப் பார்க்கிறா.  மகள் இப்படிக் கை வைச்சிண்டு உட்கார்ந்தாளாம்.  நாந்தான் உலகத்தை எல்லாம் சிருஷ்டிச்சேன், நாந்தான் உலகத்தை எல்லாம் அழிச்சேன், நாந்தான் உலகத்தை எல்லாம் காக்கிறேன்னா, இவளுக்கு பயம் இப்போ.  ஓ, பொண்ணுக்கு என்ன புடிச்சுடுத்தோ தெரியலையே இப்போ.  ஏன்னா இவ சிருஷ்டித்தேன், இவ அழிச்சேன்னா, ஏன்னா இதெல்லாம் பெருமாள் பண்றதுன்னான்னா, அப்போ அவனாகவே தன்னை நினைத்துக் கொண்டு பெண் பாடறா.  அப்படிப் பெண் கஷ்டப்படறாளே, பாடறாளேங்கிறதைத் தாயார் சொல்லிக்கிறா இப்போ.  ஏன்னா பாட்டில என்ன இருக்கு?  கடல் ஞாலம் செய்தேனும் யானே, என்னும் - இந்த ‘என்னும்’ன்னு சொன்னா, மகள் சொல்றதா தாய் சொல்றான்னு அர்த்தம்.  கடல் ஞாலம் செய்தேனும் ஞானே – இது மகள் சொல்லுவள்.  என்னும் – தாய்ப் பாசுரம்.  இந்த ‘என்னும்’ எங்க வந்தாலும் அப்ப அங்க தாயார் பாடறாள்ன்னு அர்த்தம்.  ஏன்னா மகள் முதல் வரி வரைக்கும் சொல்லியிருப்போ.  மேற்கொண்டு தாயார் அனுவாதம் பண்ணுகிறாள்.  இப்படி அந்தப் பத்துப் பாசுரங்களிலேயும் பகவானாகவே தம்மை நினைத்துக் கொண்டு நம்மாழ்வார் பாட, அதை தாய் பாவனையிலே வெளியிட்டார்.  இது ஐந்தாம் பத்திலே நடந்தது.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

    நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 3

    முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2

    பராங்குசர் தூதுவிடுதலுக்குன்னு நான்கு பதிகங்கள் பாடினார்.  ஆழ்வார்கள் பறவைகளைத் தூதுவிடுகிறார்கள்.  அப்படின்னா என்னன்னு பார்ப்போம்.  இப்போ இத்தனை நாழி நாயகி பாவம்ன்னு பார்த்ததெல்லாம் பிரேமப் பேச்சுன்னு பார்த்தோமோல்லையோ?  எல்லாத்துக்குமே உள்ளுறைப் பொருள் உண்டு.  உள்ளுறைப் பொருள்ன்னா ‘ஸ்வாபதேசம்’ன்னு சம்ப்ரதாயத்திலே சொல்லுவா.  மேலெழுந்தவாரியாப் பார்த்தா ஒரு அர்த்தம்.  ஆனா அதுக்கு உள்ளூர பார்த்தோம்ன்னா ஆத்ம, பரமாத்ம விஷயமா ஒரு அர்த்தம்.

    தோழிப்பாசுரம், தாய்ப்பாசுரம், மகள்ப் பாசுரம்ன்னு பார்த்தோமோல்லையோ?  இதிலே மகள் எப்போ பாடுவள்?  விரகத்திலே பாடுவள்.  உடனே நாயகனை அடைஞ்சுதான் தீர வேண்டும்ங்கிற துடிப்பு இருந்தா மகள் பாடப் போறா.  தாயார் என்ன சொல்லுவள்?  மகளே, இது உனக்கு ஆகாது.  எந்தத் தாயாராயிருந்தாலும் அதுதானே சொல்லப்போறா?  இது எப்போ துடிக்கும் போதும், மகளே இது என்னத்துக்கு உனக்கு?  அவசரப்படாதே, ஆறியிரு, தானே நல்ல கல்யாணமா நடக்கும்.  இது அவள் சொல்லப் போறா.  தோழி என்ன பண்ணுவள்?  நாயகனும், நாயகியும் சந்திக்கறதுக்கு ஏற்பாடு பண்றதே அவதான்.  இது தோழியினுடைய வேலை.  அப்போ தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம்.  மகள், பகவானை அடைந்தே ஆகவேண்டும்ங்கிற பதற்றப்படுமவள்.  தோழி, பகவானை சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வைக்குமவள்.  தாயார், ஆறியிரு, அவசரப்படாதேன்னு சமாதானம் சொல்லுபவள்.  இந்த மூன்று பாசுரத்தையும் நாம இப்போ நம்மாழ்வார் பாசுரத்திலேயே பார்த்துடலாம்.  இதுக்கு 27 திருவாய்மொழிகள் பாடினார்.  மொத்தம் 100ன்னு பார்த்தோம்.  அந்த 100க்குள்ளே, 27 பதிகங்கள், ஒரு பதிகம்ங்கிறது ஒரு திருவாய்மொழி, ஒரு பதிகம்ங்கிறது 11 பாசுரம்.  அதிலே 27 பதிகங்களாலே ஆழ்வார் நாயகி பாவத்தோடேயே பாடியிருக்கார்.  அதிலே 3, தோழிப் பாசுரத்துக்காக.  7, தாய்ப் பாசுரத்துக்காக.  17, மகள் பாசுரத்துக்காக.  மொத்தம் 27 பதிகங்கள் பெண் பாவனையிலே பாடினார்.  73 பதிகங்கள் ஆண் பாவனையிலே பாடினார்.

    இது என்ன பெரியோர்களெல்லாம் சொல்லியிருக்கான்னா, இது வெறும் நாயகி பாவம் அல்ல.  ‘சம்பந்த, உபாய, பலங்களில், உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற ப்ரக்ஞாவஸ்தைகளுக்கு, தோழி, தாயார், மகள் என்று பேர்’.  இது சூத்திரம்.  தோழி, தாயார், மகள் – இந்த மூன்றுமே ஆழ்வாரினுடைய அறிவின் வெவ்வேறு அவஸ்தை.  ஆழ்வார் ஒருத்தர்தான், அவர் ஆள் மாறிடப் போறதில்லே இப்போ.  அப்போ மனசு மட்டும்தானே மாறது.  தன்னுடைய நினைவு என்னவோ, நினைவின் மாறுதலாலே தன்னையே நாயகியா நினைச்சுக்கறார்.  அந்த மாதிரி நினைச்சுனுட முடியுமான்னு நமக்குத் தோணும்.  இதுல ஒரு முக்கியமான உண்மை புரிஞ்சு போச்சுன்னா ஆழ்வார்களாலே எப்படி முடியறதுன்னு புரிஞ்சுனுடலாம்.  வேதாந்தம் என்ன சொல்லுகிறதுன்னா, ஸ்ரீமந் நாராயணன் ஒருத்தர்தான் புருஷன்.  அவனைத் தவிர மத்த ஆத்மாக்கள் அத்தனை பேரும் ஸ்திரீகள்தான்.  ஆத்மாக்கள் அத்தனை பேரும் பத்தினிகள், புருஷோத்தமன் ஒருத்தன்தான் பர்த்தா.  இதுனாலதான் எப்போ கல்யாணம் பண்ணிக் குடுக்கறாச்சேவும் மந்த்ரத்திலே என்ன தெரியுமா ஆரம்பிப்பா?  இந்தப் பிள்ளை பேரச் சொல்லியே குடுக்க மாட்டார்.  மாமனார் பொண்ணைக் குடுக்கறச்சேவே, விஷ்ணு ரூபாய வராய, விஷ்ணு ரூபத்தில இருக்கற இந்த வரனுக்கு என் பெண்ணைக் குடுக்கிறேன்.  ஒருத்தர் வேடிக்கையாச் சொன்னார், இல்லேன்னா இந்தப் பிள்ளையைப் பார்த்தா யார் பொண்ணு குடுப்பா இப்போ.  ஏதோ விஷ்ணு உட்கார்ந்திருக்கார்ங்கிற நம்பிக்கையிலதான் பொண்ணையே மாமனார் பண்ணிக் குடுக்கிறார் இப்போ.  விஷ்ணுவே இங்க இருப்பராம்.  இந்தப் பிள்ளை ரூபத்தில இருந்து விஷ்ணு கல்யாணம் பண்ணிக்கனுமாம்.  ஏன்னா கல்யாணம்ங்கிறதே விஷ்ணுதான் பண்ணிக்கனும்.  திவ்யதேசத்திலெல்லாம் ‘நித்ய கல்யாணப் பெருமாள்’ன்னு கேள்விப்பட்டிருக்கீளோல்லையோ?  அதைப் போலே எந்த ஆத்மாவா இருந்தாலும், விஷ்ணுவுக்குத்தான் பத்தினி.  அப்போ மொத்தப் பேருமே பெண்தான்.  நமக்குப் பெண் தன்மைங்கிறது புதுசு அல்ல.  சரீரத்திலே சில பேர் பெண் தன்மையோடு இருக்கலாம், சில பேர் ஆண் தன்மையோடு இருக்கலாம்.  ஆனா ஆத்மான்னு பார்த்தா மொத்தப் பேருமே பெண்தான்.  இந்த ப்ரக்ஞை ஆழ்வாருக்கு வந்துடுத்து, நமக்கு வரலை.  அவ்வளவுதான் சொல்லணுமே தவிர, அவருக்கு அந்த உண்மை புரிஞ்சு போய்ட்டபடியால தன்னை நிஜமாகவே பெண்ணா நினைச்சுனுட்டார்.  நமக்கு அந்த உண்மை புரியாததால நாம என்னமோ ஆண், அப்படின்னு நினைச்சிண்டு நாம வாழ்ந்துண்டிருக்கோம்.

    அப்போ பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கு உள்ள தொடர்பைத்தான் இந்த இடத்தில பார்க்கப் போறோம்.  அதிலயே எப்படித் தாயார், எப்படி மகள், எப்படி தோழின்னு பார்க்கணும்.  ’சம்பந்த, உபாய, பலங்களில், உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற ப்ரக்ஞாவஸ்தைகளுக்கு, தோழி, தாயார், மகள் என்று பேர்’ப்ரக்ஞா – நம்முடைய சிந்தனா, ஸ்மிருதி, நினைவு, ஞானம் இதுக்குத்தான் ப்ரக்ஞான்னு பேர்.  ஆழ்வாருடைய வெவ்வேற ப்ரக்ஞைகள், ஆழ்வாருடைய வெவ்வேற தசைகள், வெவ்வேற நினைவின் ஓட்டங்கள், அந்த நினைவு வரச்சேவெல்லாம் தான் அவராகவே நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில ஏதோ ஒரு நினைவு முதிர்றது, மகளா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு முதிர்ச்சி அடைகிறது, தாயா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு முதிர்ச்சி அடைகிறது, தோழியா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு ஏற்படுகிறது, ஆணாகவே பாடிடுறார்.  ஆக மொத்தத்தில நினைவின் மாறுதலாலேதான் வெவ்வேற தசைகளை அவர் அடைகிறார்.  அந்த மாதிரிகூட முடியுமான்னு கேட்டா, இப்போ நான் இருக்கேன்னு வச்சுக்கங்கோ.  என்னைப் ‘பிள்ளை’ன்னு சொல்லிக்கலாமா?  எங்க அப்பாவுக்கு நான் பிள்ளைங்கறதாலே.  என்னைத் ‘தகப்பன்’னு சொல்லிக்கலாமா?  என் பிள்ளைக்கு நான் தகப்பன்ங்கிறதாலே.  என்னைக் ‘கணவன்’னு சொல்லலாமா?  என் மனைவிக்கு நான் கணவனானபடியாலே.  அப்போ நாயகன் மூணு பேரா?  நான் ஒருத்தனா, இல்ல மூணு பேரா இப்போ?  நான் மூணு பேரில்லே, ஒருத்தன்தான்.  ஆனா இந்த மனைவியோடே சம்பந்தப்படுத்தி பார்க்கறச்சே நான் பர்த்தா.  பிள்ளையோடே சம்பந்தப்படுத்திப் பார்க்கறச்சே நான் தகப்பன்.  தகப்பனோட சம்பந்தப்படுத்திப் பார்க்கறச்சே நான் பிள்ளை.  அப்போ என்னுடைய நினைவிலேயே என்னால மூணா இருக்க முடியறதோல்லையோ?  இது எல்லாமே ப்ரக்ஞையின் மாறுதல்கள்.  அதைப்போல நம்மாழ்வாருக்கும் மூணு ப்ரக்ஞை ஏற்படறது.

    நீங்க திருமந்திரம்ன்னு கேள்விப் பட்டிருப்பீள்.  ‘ஓம் நமோ நாராயணாய’ங்கிற எட்டெழுத்து இருக்கோல்லையோ, ஆச்சார்யனிடத்திலே சமாஸ்ரயணம் பண்ணிக் கொண்டு, பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கொள்ளும் போது, ஆச்சார்யன் சொல்லிக் குடுக்கறது அது.  அதிலே மூன்று பதங்கள் இருக்கா?  ஓம், நமஹா, நாராயணாய, அப்படின்னு மூன்று பதங்கள்.  இது மொத்தம் எட்டெழுத்து.  ஓம்ங்கிறது ஓரெழுத்து. நமஹாங்கிறது ரெண்டெழுத்து.  நாராயாணாயங்கிறது ஐந்தெழுத்து.  இதிலே முதல் பதத்தை வாசிக்கறச்சே நமக்கு ஒரு அறிவு வரும்.  ரெண்டாம் பதத்தை வாசிக்கறச்சே ஒரு அறிவு வரும்.  மூன்றாம் பதத்தை வாசிக்கறச்சே ஒரு அறிவு வரும்.  ஆழ்வாருக்கு என்ன ஆச்சர்யம் தெரியுமா?  முதல் பதமான ’ஓம்’மை வாசிக்கறச்சே அவருக்குத் தோழியாத் தோணிடும்.  ‘நமஹா’ங்கிற ரெண்டாம் பதத்தை வாசிக்கறச்சே தாயாகப் பாடிடுவர்.  ‘நாராயணாய’ங்கிற மூன்றாம் பதத்தின் அர்த்தம் தெரியறச்சே மகளாப் பாடிடுவர்.

    என்ன ஸ்வாமி, எங்கயோ சம்பந்தமில்லாத.  இத்தனை நாழி ஏதோ தோழி, தாயார், மகள்ன்னு நாயகி பாவம் பார்த்திண்டிருந்தோம்.  திருமந்திரத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இப்போ?  அது வெறும் ஞானமான்னா இருக்கும் திருமந்திரம்?  இது ப்ரேமமாச்சேன்னா.  ஞானம் முற்றினாத்தான் ப்ரேமம்ன்னு முதல்லயே சொல்லியிருக்கேன்.  ஞானமும் உண்டு, ப்ரேமமும் உண்டு.  ‘ஓம்’ங்கிற அர்த்தத்தில நாம என்ன புரிஞ்சுக்குறோம்ன்னா, பகவானுக்கும் நமக்கும் உண்டான சம்பந்தம் தெரியும்.  அவருக்கும் நமக்கும் நெருங்கின சம்பந்தம் உண்டான்னா, நெருங்கின இல்லே.  அவரில்லாம நாம இல்லே, நாம இல்லாம அவர் இல்லே.  நம்ம ஒரோருத்தருக்குள்ளேயும் பெருமான் நீக்கமற நிறைந்திருக்கிறானோல்லையோ?  அந்த அளவுக்கு பெருமானுக்கும் நமக்கும் நெருங்கின தொடர்பு உண்டு.  அதனாலே இந்த இடத்திலே, அவனுக்கும் நமக்கும் உண்டான சம்பந்தத்தை ஆழ்வார் அவ்வப்போது தெரிந்து கொள்ளுகிறார். 

    ஓம்காரத்திலே யாருக்கும், யாருக்கும் உண்டான சம்பந்தம் தெரியும்ன்னால், ‘அ’காரத்துக்கும், ‘ம’காரத்துக்கும் உண்டான சம்பந்தம் தோன்றும்.  ஓம் என்பதை நீங்கள் பிரித்தால், ‘அ’, ‘உ’, ‘ம’ என்று மூன்றாகப் பிரியும்.  அ, உ சேர்ந்ததுன்னால், ‘ஓ’ என்று ஆகும்.  ‘ம’ சேர்ந்ததுன்னால், ‘ஓம்’ என்று ஆகும்.  இதிலே ‘அ’ என்பது பரமாத்மாவைக் குறிக்கும்.  ‘ம’ என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.  ‘அ’வுக்கும், ‘ம’வுக்கு உண்டான சம்பந்தம், இந்த சம்பந்தத்தைத்தான் ஓம்காரமே சொல்லும்.  பகவானுக்கும் ஜீவாத்மாவுக்கும் உண்டான சம்பந்தத்தை ‘ஓம்’ங்கிற பிரணவம் சொல்லிடும்.

    அடுத்து, ’நமஹா’ – மஹா, ம், ந, மம.  சம்ஸ்கிருதத்திலே அஸ்மத் சப்தம்ன்னு பேர்.  அஸ்மத் சப்தத்திலே, அகம் ஆவாம்யயம், நான் என்னைப்பற்றி சொல்லிக் கொள்ளுவது.  ’மஹா’ன்னு சொன்னா ‘என்னுடையது’ன்னு அர்த்தம்.  ‘மம’ன்னு சொன்னாலோ, ‘மஹா’ன்னு சொன்னாலோ, ‘என்னுடையது’.  ம் – நான், ந – அல்லேன்.  நான் என்னுடையவன் அல்லேன்.  நான் பகவானுடையவன், இப்படிங்கிற ஞானத்துக்காக ஏற்பட்டதுதான் ‘நமஹா’.  அப்போ நமஹாங்கிற சப்தத்திலே இருந்து நாம தெரிஞ்சுக்கறது, நான் என்னுடையவன் அல்லேன், அவருடையவன்.  அவர் பார்த்து எப்போ இரட்சிக்கிறாரோ அப்போ இரட்சிக்கட்டும், இப்படி இருக்கறது நமஹாங்கிற சப்தத்தினுடைய அர்த்தம்.

    நாராயணாய-ன்னு சொல்றது, நான் நாராயணனுக்கு உரியவன்.  எல்லா நேரத்திலேயும், எல்லா காலத்திலேயும் அவருக்குக் கைங்கர்யம் பண்ணிண்டே இருக்கணும்.  இது நாராயணாயங்கிற சப்தத்தினுடைய அர்த்தம்.

    அப்போ பெருமானுக்கும் எனக்கும் சம்பந்தம் உண்டுன்னு பிரணவத்தில தெரிஞ்சிண்டோம்.  அவர்தான் என்னை இரட்சிக்கணும், நானா முயற்சி எடுக்க வேண்டிய தேவை இல்லே, இது நமஹாங்கிற சப்தத்திலே இருந்து தெரிஞ்சிண்டோம்.  நான் அவரை அடைஞ்சு அனுபவிக்கணும், கைங்கர்யம் பண்ணனும், இதை நாராயணாயங்கிறதில இருந்து தெரிஞ்சிண்டோம்.  இப்போ இந்த மூன்று நிலைகள்தான் ஆழ்வாருக்கு மூன்று பாவனை.  பெருமானுக்கும் தனக்கும் இருக்கிற சம்பந்தம் ஞாபகம் வந்தால், தோழியாகப் பாடிடுவர்.  பெருமானேதான் இரட்சிக்கணும், நாம பண்றதுக்கு ஒன்னுமில்லேங்கற நம்பிக்கை வந்தால், தாயாரா பாடிடுவர்.  பெருமானை உடனடியா அடைஞ்சு அனுபவிக்கணும்ன்னு இருந்தா, மகளாப் பாடிடுவர்.  அப்போ திருமந்திரத்தில இருக்கற மூன்று பதங்கள், அதைப்பற்றின ஞானம் எப்பப்போ ஆழ்வாருக்கு ஏற்படறதோ, அதற்கேற்றாப்போலே இந்த மூன்று பாவனைகள்.  இப்போ சம்பந்த ஞானம் ஓம்காரத்திலே இருந்து வருதாதோழி என்ன பண்ணுவள்ன்னு சொன்னேன்?  நாயகியும், நாயகனும் சந்திக்கறதுக்கு அவள்தானே ஏற்பாடு பண்ணிக் குடுக்கிறா?  உனக்கும், அவனுக்கும்தான் தொடர்புன்னு அவள்தானே சொல்லிக் குடுக்கிறா?  அப்போ அந்த பாசுரமா ஆழ்வார் பாட ஆரம்பிச்சுருவர்.  ஓம்காரத்திலெ பெருமானுக்கும், நமக்கும் இருக்கிற சம்பந்தம் இருக்கு.  ஆழ்வாருக்கு அது ஞாபகம் வரச்சே, சந்திக்கணும்ன்னு தோன்றது.  சந்திக்கறதுக்கு ஏற்பாடு பண்ற தோழியாப் பாடிடுவர்.  அடுத்து ‘நமஹா’ங்கிறது நன்னா மனசுல பட்டா, நாம போகவே கூடாதே, ஆறித்தானே இருக்கணும், அடங்கித்தானே இருக்கணும்ன்னா, தாயார் இதைத்தானே சொல்லிண்டிருக்கா.  பெண்ணே நீ போகாதே, வீட்டோட இரு, இருன்னு சொல்லிண்டிருக்காளோல்லையோ?  அப்போ இந்த நமஹா சப்தத்தினுடைய அர்த்தம் பட்டா, தாய்ப்பாசுரமாப் பாடிடுவர்.  அதே நாராயணாயங்கிற சப்தத்திலே, இப்போ பகவானை அடைஞ்சுடனும், அனுபவிக்கனும், இது நாராயணாய சப்தத்துக்கு அர்த்தமோல்லையோ?  இதுதான் மகள்ப் பாசுரம்.  அவளைப் பொறுத்தவரைக்கும் வீட்டோட இருக்கறதெல்லாம் பிடிக்காது.  என்னமோ, இப்பவே நாயகனை அடைஞ்சுடனும்ன்னு துடிக்கிறாளோல்லையோ?  அது மகள் பாசுரத்திலே. இதுனாலதான், சம்பந்தத்திலும் உபாயத்திலும் பலத்திலும் உணர்த்தி, துணிவு, பதற்றம் – சம்பந்த ஞானம் உணர்ந்துட்டார்ன்னால், தோழியாப் பாடறார்.  பகவானே உபாயம், நாம பண்றதுக்கு ஒன்னுமில்லேன்னு துணிஞ்சுட்டார்ன்னா, தாயாராப் பாடிடுவர்.  அதே அவன் கிடைப்பனோ, கிடைப்பனோன்னு துடிச்சார்ன்னா, மகளாகப் பாடுகிறார்.  இந்த மூன்று நிலைகள் ஆழ்வாருக்கே இருக்கிற பேதம், அவஸ்தா பேதம்.  அப்போ ஆண், ஞானத்தோடே பேசிருவர்.  பெண் பிரேமத்தோடே பேசுவர்.  அப்போ உள்ளுறைப் பொருளுண்டோன்னு கேட்டால், இந்தத் திருமந்திரத்தினுடைய அர்த்தம் அவர் மனசிலே படப்பட, அதுக்குத் தகுந்தாற்போலே மூன்று நிலைமையோடே ஆழ்வார் பாடுகிறார்.

    இதிலே தூதுவிடறது எது என்றால், தன் பக்கத்திலே இருக்கிற ஏதோ ஒரு பட்சியைப் பிடிப்பர்.  நீ போய் பகவானிடத்திலே நான் இருக்கேன்னு சொல்லுன்னு தூது விட்டுடுவர்.  இதுக்குன்னு நான்கு பதிகங்கள் பாடினார்.

    அஞ்சிறைய மட நாராய்! * அளியத்தாய்! * நீயும் நின்
    அஞ்சிறைய சேவலுமாய் * ஆவா என்றெனக்கருளி *
    வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு * என் விடு தூதாய்ச் சென்றக்கால் *
    வன்சிறையில் அவன் வைக்கில் * வைப்புண்டால் என்செய்யுமோ

    (திருவாய்மொழி 1.4.1)

    முதல் பத்து, நான்காம் திருவாய்மொழி, முதல் பாசுரத்திலே, பக்கத்திலே இருந்தது ஒரு நாரை.  நாரை, கொக்கு, வண்டு, மகன்றில், குருகு, இதைப்போல நிறைய பறவைப் பேர் வரும்.  ஆழ்வார்கள் அவதாரத்தாலே பட்சி ஜாதிக்கே பெருமைன்னு வச்சுக்கலாம்.  ஏன்னா அடிக்கடி அவா பேசிட்டாளோல்லையோ?  இது என்ன நம்ம பூர்வர்கள் எழுதி வைச்சுருக்காள்ன்னா, இராமாவதாரத்தாலே குரங்கு ஜாதிக்கு ஏற்றம், ஆழ்வார்கள் அவதாரத்தாலே பட்சி ஜாதிக்கு ஏற்றம்.  ஏன்னா அங்கேயும் இராமன் குரங்கைத்தானே தூதா விட்டார்?  ஆழ்வார்களும் பறவையைத்தானே தூதா விடறா?  தூது விடுவதுங்கிறது என்ன?  அதுக்கு ஒரு உள்ளுறைப் பொருள் இருக்கு.  தூது விடுவதுங்கிறது நாம போய் ஆச்சார்யன் திருவடிகள்ல விழுவதுதான் தூதுவிடுதல்.  ஏன்னா இந்தப் பறவை போய் நம்மைப் பற்றி பகவானிடத்தில சொல்லப் போறதுன்னுதானே நாயகிக்கு எண்ணம்?  ஆச்சார்யன்தானே நம்மைப் பற்றி பகவானிடத்திலே சொல்லப் போறார்?  எதுக்கு சமாஸ்ரயணம்ன்னு போறோம்?  என்னைப் பற்றி பெருமானிடத்திலே விண்ணப்பியும்ன்னு சொல்றதுக்குத்தானே?  அப்போ அந்தப் பட்சியேதான் ஆச்சார்யன்.  அந்த ஆச்சார்யன் கால்லே விழறதைத்தான் பட்சி கால்ல விழறார். 

    பட்சி அப்பப்போ ஆழ்வாருக்கு பக்கத்திலே வந்ததுன்னா நீ போய் பகவானிடத்திலே சொல்லுன்னு தூது விட்டுடுவர்.  என்ன சொல்ல வேணும், அவரை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கணும், அங்க ஒரே கூட்டமா இருக்குமே, எனக்கு பயமாயிருக்கேன்னு பட்சி சொல்லும்.  அப்போ இவர் அடையாளம் எல்லாம் சொல்லி அனுப்புவர்.  சங்கு சக்கரம் யார் பிடிச்சிண்டிருக்காரோ, அவர்கிட்ட போய்ச் சொல்லு.  வேற யார்கிட்டயாவது போய்ச் சொல்லிடாதே.  யார் திருமார்பிலே துளசி மணிமாலை தரிச்சிண்டிருக்காரோ, யார் சங்க சக்கரம் பிடிச்சிண்டிருக்காரோ, அவரிடத்திலே நான் சொன்னேன்னு போய்ச் சொல்லு.  பறவை உடனே கேட்கும், என்ன சொல்லணும்?  என்ன சொல்லணுமா, நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம், பராங்குச நாயகின்னு ஒரு வார்த்தை சொல்லு.  அப்புறம் அவர் இருக்காரான்னு பார் அங்கே.  உடனுக்குடன் உன்னோடே கிளம்பி வர ஆரம்பிச்சுருவர்.  ஆழ்வார் நம்மை விட்டு சிரமப்படறாராமே, நான் உடனே வரேன்னு கிளம்பிடுவர்.  பறவைக்கு சந்தேகம், என்னைப் பிடிச்சு சிறையில போட்டுட்டா?  ஏற்கனவே ஹனுமார் இப்படித்தான் போய், வால்லே நெருப்போடே வந்து சேர்ந்தார்.  நீர் என்னைத் தூது விடறீர், நான் போய் என்ன ஆயிடுமோன்னு இந்தப் பறவைக்குக் கவலை.  ஆழ்வார் சொன்னார், ‘வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யும்’ – அவன் கொஞ்ச நாள் சிறையில வச்சுட்டாத்தான், எனக்காக இரேன்.  நான் சீதையாப் பிறந்துருக்கச்சே இருக்கலே?  தேவஸ்தீரிகள் எல்லாரையும் இரட்சிக்கறதுக்காக, தேவர்கள் கஷ்டப்படறாளே, இராட்சசர்கள் துன்புறுத்துராளே, அவர்களை முடிக்கணும்ங்கிறதுக்குத்தானே நான் போய் பத்து மாசம் சிறையில இருந்தேன்.  நம்மாழ்வார் தன்னையே சீதையா நினைச்சிண்டு சொல்லிக்கறார் இப்போ, நானே சிறையில இருந்தேனே அசோகவனத்திலே.  எனக்காக நீ இருந்தா என்னன்னு இந்தப் பறவையைக் கேட்கறார்.  அப்புறம் ஆழ்வார் பாட்டில கொஞ்சம் நிதானமாப் பார்த்தோம்ன்னால், ‘என் விடு தூதாய் சென்னக்கால் வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யும்’,  என் விடு தூதாய் – நான் தூது விடறேன், நீ போறே, ஞாபகம் வச்சுக்கோன்னார்.  தெரியுமே, நீர்தான் தூது விடறீர்.  அதுல சந்தேகமில்லையேன்னா, இல்லே.  இராமனும் ஹனுமாரைத் தூது விட்டான், சீதையும் ஹனுமாரைத் தூதுவிட்டாளோல்லையோ?  அதே ஹனுமானை சீதையும் இராமனிடத்திலே அனுப்பிச்சாளே?  இராமனிடத்திலேர்ந்து ஹனுமார் அக்கரைக்குப் போனார், சீதையினிடத்திலேர்ந்து ஹனுமார் இக்கரைக்கு வந்துட்டார்.  இதுல இராம தூதனாப் போறச்சேவும் ஒரு பரிசு கிடைச்சது.  சீதா தூதனா வரச்சேவும் பரிசு கிடைச்சது.  இராம தூதனா போறச்சே, வாலில் நெருப்பு பரிசு.  இதான் கிடைச்சது.  சீதா தூதனா திரும்பி வரச்சே, திரும்பி வந்த ஹனுமானைப் பார்த்து அணைத்துக் கொண்டு, இதைவிட நான் உனக்குக் குடுக்கறதுக்கு ஒன்றுமில்லே என்று இராமன் நன்றி தெரிவித்தானோல்லையோ?  ஆழ்வார் ஞாபகப்படுத்தறார், சீதா தூதனாப் போறச்சே இராமன் ஆலிங்கனம் கிடைச்சது.  இராம தூதனா போறச்சே வாலில் நெருப்புக் கிடைச்சது, ஞாபகம் இருக்கோல்லையோ?  என் விடு தூதாய் சென்னக்கால், இப்போ நீ போறது பராங்குச நாயகியின் தூதாக.  ஒன்னும் ஆகாது உனக்கு.  உனக்கு பகவான் பார்த்து, சத்காரம் பண்ணி, உன்னை உட்கார்த்தி வைச்சு மரியாதை பண்ணித்தான் பேசுவனே தவிர, ஏன்னா அனுப்பிச்சுருக்கற அதிகாரி அப்படிப்பட்டவர்ன்னு புரிந்து கொள்.  யாரோ உன்னை அனுப்பலே, நாயகி பாவத்தில தலை சிறந்திருக்கற ஆழ்வார் உன்னை அனுப்பிச்சுருக்கார், அதனாலே உனக்கு ஒண்ணும் ஆகாது, போ.

    நேரே இங்கேர்ந்து நாரை கிளம்பிப் போச்சு.  பெருமாளைப் பிடிச்சுடுத்து. பிடிச்சு அவன்கிட்ட விஷயத்தைச் சொல்லணுமோல்லையோ?  என்ன சொல்லணும்ன்னு ஆழ்வார்கிட்ட கேட்டு வச்சிருந்தது.

    நல்கித் தான் காத்தளிக்கும் * பொழில் ஏழும் வினையேற்கே *
    நல்கத் தான் ஆகாதோ * நாரணனைக் கண்டக்கால் *
    மல்கு நீர்ப் புனல் படப்பை * இரை தேர் வண் சிறு குருகே! *
    மல்கு நீர்க் கண்ணேற்கோர் * வாசகம் கொண்டருளாயே

    (திருவாய்மொழி – 1.4.5)

    அந்தப் பொண்ணு அழுதுண்டே இருக்கான்னு போய் ஒரு வார்த்தை சொல்லு.  நீ வேற ஒன்னும் சொல்ல வேண்டாம் என்னைப் பத்தி.  சொல்லிட்டா கிளம்பி வந்துருவரா?  நீ அழுதுண்டே இருக்க வேண்டியதுதான்.  அவர் வருவரா?  நித்ய சூரிகளுக்கு நாயகன், இந்திரனுக்கெல்லாம் இந்திரன், எத்தனை பேர் இருக்கப் போறாளோ, என்னை உள்ள விடுவாளோ, மாட்டாளோ?  யாருன்னே எனக்குத் தெரியலையே, நிக்கறதுக்கே எனக்குப் பயமாயிருக்கே, இத்தனையும் அந்த நாரை சொல்லித்து.  போயேன், நான் சொன்னேன்னு ஒரு வார்த்தை சொல்.

    அருளாத நீர் அருளி * அவர் ஆவி துவராமுன் *
    அருள் ஆழி புட்கடவீர் * அவர் வீதி ஒருநாள் என்று *
    அருள் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி *
    அருள் ஆழி வரி வண்டே! * யாமும் என் பிழைத்தோமே

    (திருவாய்மொழி – 1.4.6)

    சட்டுன்னு வண்டுக்கு மாறிடுவர்.  நாரையைத் தூது விட்டுண்டு இருப்பர்.  மகன்றில் பட்சி, குருகு, வண்டு, ஓரோரு பறவையாக அந்தப் பத்துப் பாசுரத்துக்குள்ள தூது விட்டார்.  நான் போய் பகவான்கிட்ட என்ன சொல்லணும்?  உடனடியா ஆழ்வார் கோவில் வாசலுக்கு வா.  ஆழ்வாருக்கு நீ கருட வாகனத்தோட சேவை சாதிக்கணுமாம்.  உடனே வரச்சொன்னார்ன்னு சொல்லச் சொன்னார்.  போச்சு வண்டு.  போய் பெருமான் முன்னாடி நின்னுண்டு, நான் பராங்குச நாயகி அனுப்பிச்சு வந்திருக்கேன்.  நீர் உடனடியா வாரும், அப்படின்னு சொல்லித்து வண்டு.  பெருமான் பார்த்தார், அவருக்குத் தெரிஞ்சு போச்சு.  இந்த வண்டு வந்ததுன்ன உடனே, கூட்டமா எல்லா தேவர்கள், நித்ய சூரிகளெல்லாம் இருந்தாளோல்லையோ, அங்கேர்ந்து வந்து, ‘நீர் உலகத்தையெல்லாம் இரட்சிக்கிறவராமே, ஆனா ஒருத்தியை மட்டும் இரட்சிக்காம விட்டுருக்கீறாமே?  அதைத்தான் பராங்குச நாயகி சொல்லிட்டு வரச்சொன்னாள்ன்னு சத்தம் போட்டு பேசிச்சு இது.  பெருமான் கிட்டக்க வந்து, ஏன் சத்தம் போடறே, கிட்டக்க வா.  யாரும் சத்தம் போட்டா எனக்குப் பிடிக்காது.  ஏன், போட்டா என்னனுட்டா, அப்போ ஒருத்தனை மட்டும் இரட்சிக்கலேன்னா பேர் தங்குமா?  உலகத்த அத்தனையும் இரட்சித்தாத்தான் நாராயணன்னு பேர்.  உலகத்துல ஒருத்தனை மட்டும் விட்டுட்டு, மத்த எல்லாரையும் இரட்சிச்சா நாராயணன்ங்கிற பேர் இருக்குமோ?  அதைத்தான் இரகசியம் சொல்லி அனுப்பிச்சிருந்தார் ஆழ்வார்.  நீ போய் ஒரே ஒரு கேள்வி கேளு, நாராயணன்ங்கிற பேர் அவனுக்கு வேணும்ன்னா உடனடியா வரச்சொல்லு.  வேண்டாம்ன்னா விட்டுடச் சொல்லு.  இந்த இரகசியத்தைப் போய் அந்த வண்டு பேசிடுத்து.  உமக்கு நாராயணன்னு பேராமே, ஆனா ஆழ்வாரை இன்னும் நீ இரட்சிக்கலையாமே?ன்ன உடனே, சத்தம் போடாதே, உன்னோட வரேன், வா, அப்படின்னு பெருமான் உடனே கிளம்பி வந்துட்டார்ன்னுதான் வியாக்யாதார் தெரிவிக்கிறார்.  ஆக தூதுவிட்டாலும் ஆழ்வார் தூது விடுவது ஸ்ரீதேவி நாச்சியாரே தூதுவிட்டார்ப்போலே.  தன்னையே சீதையாக நினைத்துக் கொண்டுதான் ‘அஞ்சறை மட நாரை’யிலே தூது விடுகிறார் ஆழ்வார்.  இது முதல் பத்திலே நான்காம் திருவாய்மொழியில் நாயகி பாவத்திலே பராங்குச நாயகி பாடினது.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

    நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 2

    முந்தைய பாகம் – பாகம் 1

    ஆழ்வார் நாயகி பாவத்தில பாடறார்ன்னா, அதற்குள்ள பல பேதங்கள் உண்டு.  வெறும பெண் பாவனையில அவர் பாடிடுறதில்லே.  அதிலே மூன்றாகப் பிரிச்சுக்கிறார்கள்.  தாய்ப் பாசுரம், தோழிப் பாசுரம், மகள் பாசுரம்ன்னு மூன்று.  மகள் பாசுரம்தான் தலைவி.  யார் காதலியோ அவள்.  பகவான்தான் காதலன், நாயகன்.  நாயகி, நம்மாழ்வார்.  நம்மாழ்வார் நாயகின்னா அவருக்குப் பேர் மாறிப் போய்டும்.  அவருக்கு ’பராங்குச நாயகி’ன்னு பேர் வரும்.  இதே திருமங்கையாழ்வாருக்கு நாயகி பாவம்ன்னு வச்சுக்கங்கோ, அவருக்குப் ’பரகால நாயகி’ன்னு பேர் வரும்.  ஏன்னா, நம்மாழ்வாருக்குப் பேர் ’பராங்குசர்’.  அவருடைய பாவனை மாறிப் பெண் பாவனை வருதோல்லையோ?  அப்ப பராங்குச நாயகி.  திருமங்கையாழ்வாருக்குப் பேர் பரகாலன்.  அவருடைய பாவனை மாறி பெண் பாவனை வருதோல்லையோ?  அதனால பரகால நாயகின்னு பேர்.  அப்போ பராங்குச நாயகி, பரகால நாயகி.  இந்த ரெண்டு பேரோட பிரபந்தங்கள் ரொம்பத் தெளிவா இருக்கு.  இதிலே குழப்பமே இல்லே.  இதைத் தவிர இன்னும் ரெண்டு ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.  குலசேகர ஆழ்வாரும் பாடியிருக்கார்.  பெரியாழ்வாரும் பாடியிருக்கார்.  குலசேகரர் பாடினதுல ஒரு வேறுபாடு இருக்கு.  பெரியாழ்வார் பாடினதுல ஒரு வேறுபாடு இருக்கு.  மத்த ரெண்டு பேரும் பார்க்கறச்சே, நாயகியா தங்களை வச்சுனுட்டா, பகவானை நாயகனா வச்சுட்டா, பாடிட்டா.  ஆனால் பெரியாழ்வார் அப்படி அல்ல.  தன்னை யசோதையா வச்சிண்டு, பகவானைக் குழந்தையா நினைச்சினுட்டார்.  அப்போ அது தாய் பாவனைதாய்ங்கிறது இங்க, பகவானுக்கே தாய்.  ஆனா நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாசுரங்களில் தாய்ப் பாசுரம்ன்னு சொன்னது, நாயகியான பெண்ணினுடைய தாயார்.  அதேபோல் காதலியினுடைய தோழிப் பாசுரம் மற்றும் காதலியினுடைய பாசுரம்.

    ஆனா பெரியாழ்வார் அப்படிச் சொல்லலை இப்போ.  கண்ணனையே தன் குழந்தையா நினைச்சினுட்டார்.  யசோதை எப்படி தொட்டிலிட்டு இருப்பளோ, தாலாட்டுப் பாட்டு பாடியிருப்பளோ, பாலூட்டி இருப்பளோ, சோறு ஊட்டிவிட்டிருப்பளோ, குளிப்பாட்டி விட்டிருப்பளோ, பூச்சுட்டி விட்டிருப்பளோ, என்னென பண்ணியிருப்பளோ, பத்துப் பத்துப் பாட்டா பெரியாழ்வார் பாடிட்டார்.  இதுல ‘சீதக் கடலுள் அமுதன்ன தேவகி’ங்கிற பதிகத்தில இருந்து ஆரம்பம்.  கண்ணன் பிறந்த உடனே தொட்டில்ல இட்டுட்டா.  ஊர்க்காரார் எல்லாரையும் கூப்பிட்டு, இதோ கண்ணனைப் பாருங்கோன்னு, அவன் திருவடியிலேர்ந்து ஓரோரு அங்கமா காட்டிண்டு வராளாம்.  யசோதை எல்லாருக்கும் காட்டறா.  பக்கத்துல இருக்கிற வயசானவாளுக்கெல்லாம் கவலை.  குழந்தையோ இவ்வளவு அழகா இருக்கு.  ஊர்ல இருக்கறவாள எல்லாம் நீ கூப்பிட்டுக் கூப்பிட்டு காட்டிண்டிருந்தியானா, எல்லார் கண்ணும் ஒன்னா இருக்குமா?  ஒரு கண்ணு நல்லாயிருக்கும், ஒரு கண்ணு நல்லா இருக்காது.  குழந்தையை ஜாக்கிரதையா வச்சிக்கறத விட்டுட்டு இப்படி எல்லாரையும் பார்க்கச் சொல்றியேன்னு வயசானவா கோவிச்சுக்கறா.  இந்தக் குழந்தைக்கு ஒன்னுமே வராது.  இது அப்பேர்ப்பட்ட குழந்தையா இருக்குன்னு யசோதை எல்லாருக்கும் காட்டிண்டு இருக்கா.  அதனாலே யசோதை பாவனையிலேயே பாடினது.  பிள்ளைத் தமிழ்ன்னு கேள்விப்பட்டிருக்கீளோல்லையோ?  தமிழ் இலக்கியத்துல ஒரு வகை.  பிள்ளைத் தமிழ்ங்கறது குழந்தைகள் என்னென்ன பண்ணுமோ, அத்தனையும் பாடுவதுதான் பிள்ளைத்தமிழ்.  அதிலே இனிப் பாட்டு மிச்சம் இருக்க முடியாது.  அப்படித்தான் பெரியாழ்வார் பாடினார்.  கண்ணன்னு ஒருத்தரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும்ன்னால், பெரியாழ்வாருடைய யசோதை பாவனை பாசுரத்தைப் படிக்காமல், என்ன கண்ணனைப் பத்திப் புராணத்தில படிச்சாலும் நாம தெரிஞ்சுக்கவே முடியாது.  ஏன்னா புராணத்தில ரிஷிகள் பாடியிருக்கறதெல்லாம் மறுபடியும் ஆண் பாவனை.  எவ்வளவு பாடிட முடியும் அவாளாலே?  ஆணா இருந்துண்டு எப்படிப் பார்க்க முடியுமோ, அவ்வளவுதான் பாட முடியும்.  ஆனா ஒரு பெண் தன் குழந்தையைப் பார்த்தாப்ல ஆணால பார்க்கறதுக்கே முடியாதோல்லையோ?  அதனால பெரியாழ்வார் பார்த்தார்.  மறுபடியும் என் பாட்டு ரிஷிப்பாட்டா இருக்கறதுக்கு நான் விரும்பலே.  யசோதை எப்படியெல்லாம் அனுபவிச்சிருப்பளோ அப்படி எல்லாம் தானும் பாட வேண்டுமென்று ’பெரியாழ்வார் திருமொழி’யில பாடினார்.  இது ஒரு பக்கம்.

    மற்றொரு பக்கத்துல குலசேகராழ்வார்அவரொரு தனிச்சிறப்போட பாடினார்,  தேவகியாகத் தன்னை நினைத்துக் கொண்டு.  பத்து வருஷம் தேவகி கிருஷ்ணானுபவத்தை இழந்துட்டாளோல்லையோ?  மதுரைப் பட்டணத்தில தேவகிதான் கண்ணனைப் பெற்றாள்.  ஆனா பெத்துக் குடுத்ததோட சரி.  வளர்க்கற பாக்யம் அவளுக்கு கிடைக்கவே இல்லே.  ஏன்னா அன்னைக்கு ராத்திரியே கண்ணன் கிளம்பி யசோதையினுடைய பவனத்துக்குப் போய்ட்டார், அந்தப் பக்கம் கோகுலத்துக்குப் போய்ட்டார்.  வளர்க்க முடியலே.  பத்து வருஷம் கழிச்சு, கம்சனைக் கொன்னுட்டு, தேவகியையும் வசுதேவரையும் சேவிக்கறதுக்காக கண்ணன் ஓடி வரார்.  வந்த சமயத்தில தேவகி கண்ணனைக் கட்டிண்டு அழ ஆரம்பிச்சா.  பத்து வருஷமா எல்லா பாக்யத்தையும் இழந்து போய்ட்டேன்.  எனக்கு மொத்தத்தையும் இப்போ காட்டுன்னா அவள்.  என்ன காட்டணும்ன்னு பத்து வயசு கண்ணன் கேட்கறார்.  நீ தவழ்ந்தது, நீ குளிப்பாட்டினா வர மாட்டேன்னு சொன்னது, நீ பூச்சூடிக் கொண்டது, காளிங்கனை முடித்தது, கோவர்த்தனோர்த்தனம் பண்ணினது, வெண்ணெய் திருடினது, கட்டுப்பட்டது, மொத்துப்பட்ட்து, எல்லாம் பார்க்கணும்.  சொன்னா, வரிசையா ஒன்னொன்னா திரையில ஓடறாப்ல கண்ணன் காட்ட ஆரம்பிச்சுட்டார்.  பத்து வருஷமா தான் என்னென்ன அனுபவங்களை கோகுலத்தில குடுத்தானோ, அது அத்தனையும் தேவகிக்குக் காட்டிண்டு வரார்.  அப்போ அவள் கேட்கறா, நீ பாலுண்டாயாமே?  அதை என்னிடத்தில நீ பாலுண்ணனும், எனக்குக் காட்டனும்ன்னு கேட்கறா.  வயசு கண்ணனுக்குப் பத்து.  தேவகி கடைசிக் குழந்தை பெத்து வருஷம் பத்து ஆச்சு இப்போ.  அவளுக்கு அப்போ பால் சுரந்தது, கண்ணன் குடித்தான்ங்கிறதுதான் சம்ப்ரதாயம். 

    பராசர பட்டர்ன்னு ஆச்சார்யர் இருந்தார்.  அவர் சிஷ்யர் நஞ்சீயர்.  அவர் போய் ஆச்சார்யனிடத்தில கேட்கறார், ’இது நம்பத் தகுந்ததா இல்லையே.  பத்து வருஷம் ஆச்சே குழந்தை பெத்து அவள்.  அவளுக்குப் பால்தான் சுரக்குமா?  இல்லே பத்து வயசுப் பிள்ளைதான் பால்தான் குடிக்குமா?  இது நம்பறாப்ல இல்லையே’ன்னு சிஷ்யன் ஆச்சார்யனைக் கேட்கறார்.  அப்போ அந்த ஸ்வாமி பதில் சொல்றார், ’நீ நினைச்சிண்டு பேசறதெல்லாம் லௌகீக காமத்தைப் பத்தி.  ஆனா நாம பேசிண்டிருக்கறது வைதீக காமத்தைப் பத்தி’.  வேதத்தில இருக்கிற காமம் உண்டு.  நாம லோகத்தில ஆண், பெண் காமம்ன்னு பார்க்கிறோமோல்லையோ?  அது வேதத்திலயும் உண்டு, ஆழ்வார் பாசுரத்திலயும் உண்டு.  ஆனா இந்தக் காமம் உடல் ரீதியான காமமே அல்ல.  பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உண்டான பரிமாற்றம்.  ரெண்டு ஆத்மாக்கள்.  பரமாத்மா ஒருத்தர், ஜீவாத்மா ஒருத்தர்.  கண்ணன் ராசக்கீரீடை பண்ணினார்ன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம்.  அப்போ பல பெண்கள், ஏற்கனவே கல்யாணம் பண்ணின பெண்களெல்லாம் கண்ணனோடே நாட்டியம் ஆடியிருக்கான்னு கேள்விப்படறோம்.  இதை சுகாச்சார்யாரிடத்தில பரீக்ஷித்தே கேட்டான்.  ‘இது ஒன்னும் நியாயமாப் படலையே எனக்கு. தர்ம சம்ஸ்தாபநாத்தார்ய ஸம்பவாமி யுகே யுகேன்னு கண்ணனே சொல்லிட்டு, அதர்மத்தைப் போய் அவர் பண்ணலாமா’ன்னு பரீக்ஷித்து சுகரிடத்திலே கேட்டான்.  அப்போ அவர் சமாதானம் சொல்றார், ’கண்ணனுக்கு வயசு பத்தே ஆகலே கோகுலத்தில இருக்கறச்சே.  மத்த குழந்தைகளுக்கெல்லாம் வயசு அஞ்சு.  பத்து வயசுப் பிள்ளை, அஞ்சு வயசுக் குழந்தையோட என்ன காமத்தை அனுபவிச்சுற முடியும்?  முதல்ல நீ புரிஞ்சு பேசறியா’ன்னு சுகாச்சார்யர், பரீக்ஷித்தினிடத்தில கேட்டார்.  அப்புறம் அவர் பதில் சொல்றார், ’இந்தப் பரிமாற்றமெல்லாம் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் நடக்கறதே தவிர, இதில சரீர ரீதியான தொடர்பே கிடையாதுன்னு புரிஞ்சுக்கோ’, என்று ஆச்சார்யன் சிஷ்யனுக்குச் சொல்லிண்டிருக்கார்.  அதே நிலையை நாம் இங்கே வச்சுப் பார்க்கணும்.  தேவகிக்குப் பால் சுரந்ததே, கண்ணன் குடித்தானேன்னா, நாம நினைச்சிண்டிருக்கற லோகத்துல இருக்கிற காமம் இது அல்ல.  இது வைதீக காமத்தோடே, பகவான், அவரிடத்தே ஒரு சிஷ்யை பிரார்த்திக்கறச்சே பகவான் அனுபவத்தைக் குடுக்கிறார்ன்னுதான் நாம் கொள்ள வேண்டும்.

    குலசேகரர் ஒரு பாசுரத்தில தெரிவிக்கிறார்.

    தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா *
             தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால் *
    மண்ணில் செம் பொடி ஆடி வந்து * என்றன்
             மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ *
    வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் *
             வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் *
    உண்ணப் பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் *
             என்னை என் செய்யப் பெற்றதெம் மோயே

    (பெருமாள் திருமொழி – 7.6)

    - என்று பெருமாள் திருமொழியில் ஒரு ஆச்சர்யமான பாசுரம்.  கண்ணன் ஆங்காங்கு புழுதி அளைவராம்.  ஊர்ல முழுக்கப் புழுதி ப்ருந்தாவனத்துலே.  எல்லா இடத்துலயும் கையை வச்சு அளைஞ்சுட்டு, தவழ்ந்துட்டு, நேரே திரும்பி வந்து, யசோதை நல்ல புடவையா கட்டிண்டிருந்தா அதை வந்து கட்டிண்டு அழுக்காக்கிடுவர்.  மண்ணில் செம் பொடி – ஊர்ல எல்லாம் செம்பொடி, சிகப்பு வேறே, வெறும் மணலா இருந்தாக்கூட தேவலை.  செம்மண், செம்மண்ணோட ஓடிவந்து தாயாரைக் கட்டினுட்டா, அப்போ புடவை முழுக்க வீணாயிடறதோல்லையோ?  இப்போ தேவகி என்ன ப்ரார்த்திக்கிறாள்ன்னா, அப்படி அவன் கட்டிண்டு யசோதைக்கு புடவை வீணாகிற பாக்கியம் கிடைச்சதாமே, எனக்குக் கிடைக்கலையே.  அவ கேக்கறது அப்படி இப்போ.  ஏன்னா ஒரு குழந்தை வந்து கட்டிண்டதுக்காக புடவை வீணாப் போச்சுன்னு யாராச்சும் நினைச்சுப்பாளா?  குழந்தை வந்து கட்டிக்கலையேங்கிற வருத்தம் இருக்குமோல்லையோ?  மேலே சொல்லுகிறாள் தேவகி, வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – குழந்தைக்குச் சோறு ஊட்டிண்டு இருக்கா யசோதை.  அப்போ அந்தப் பாத்திரத்தில தன் கையை வச்சு வச்சு அளைவராம்.  அதை எடுத்து கண்ணனுக்கு வாயில சோறு ஊட்டிடுறா.  பக்கத்தில வழியறது.  இவளுக்கு ஆசை, தன் குழந்தை எல்லாத்தையும் சாப்பிட்டுடணும்னுட்டு.  இவளுக்கோ ரொம்ப நாளா குழந்தை பெறலே.  ஊர் முழுக்க வெண்ணெயும் பாலும்.  எல்லாத்தையும் அது தலையிலேயே அடைச்சுருவோம், அப்படின்னு வாயில போட்டா அது வழியறது இந்தப் பக்கம்.  யசோதை தனித்து சாப்பிடவே மாட்டாளாம்.  இங்க வழிஞ்சத எடுத்து எடுத்து தான் சாப்பிட்டே பசி ஆறிடுவளாம்.  அப்போ அந்தக் குழந்தையினுடைய பிரசாதமா, கிருஷ்ணப் பிரசாதமா கிடைச்சதாகவும் ஆயிடுத்து.  தன் குழந்தையினிடத்தில அன்பால தான் சாப்பிட்டதாகவும் ஆயிடுத்து.  அதைப்போல உன் வாயில வழிஞ்சத எடுத்து சாப்பிடற பாக்யம் எனக்குக் கிடைக்கலையேன்னு தேவகி அழறா இப்போ.  இந்த பாக்யம் எல்லாம் யசோதைக்குக் கிடைச்சுடுத்தே.  நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே.  இந்த வைபவம் எல்லாம் நந்தகோபாலனுக்குக் கிடைச்சுடுத்து.  ஒன்னுகூட உன்னைப் பெற்ற வசுதேவனுக்குக் கிடைக்கலையோல்லையோ?  நாங்கள் இழந்து போனோமேன்னு தேவகி புலம்பிய புலம்பல்.

    எதுக்குச் சொல்ல வந்தேன்னா, குலசேகர ஆழ்வார் ஒரு பெரிய ஷத்ரியர்.  அவர் ஒரு ராஜா.  ராஜா குலசேகரருக்குப் போய், ஒரு தாயார் குழந்தை அனுபவத்தை இழந்தது தோணி, ஒரு ஷத்ரிய ராஜா எப்படி இருப்பர்ன்னு தெரியும்.  அவர் கையில வில்லுதான் பிடிக்கத் தெரியும், கத்திதான் பிடிக்கத் தெரியும், சண்டைதான் தெரியும்.  அப்படி இருக்கறவர் போய் ஒரு தேவகி என்னென்ன புலம்பியிருப்பளோ அதைப் புலம்பியிருக்கணும்ன்னால் அப்போ இந்த நாயகி பாவம் அவா பேர்ல எவ்வளவு தாக்குதலை ஏற்படுத்தி இருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும்.  இதை அவர் குலசேகரரா இருந்து பாடியிருக்க முடியுமா?  நிச்சயமா முடியாது.  குலசேகரரா இருந்தா என்ன பாடுவர்?  இராமனுக்கு யுத்தத்தில சகாயம் வேணும்ன்னா நான் வரேன்னுவர்.  அது வேணா சொல்லிண்டு இருக்கலாமே தவிர, இராமன் இராவணனைக் கொல்லப் போறச்சே ஆளில்லேன்னா நான் வேணா ஜெயிச்சுத் தரேன்னு சொல்லலாம்.  இவ்வளவுதான் பாடமுடியுமே தவிர, குழந்தை கண்ணனிடத்திலே பாலூட்டினதோ, சோறுண்டதையோ பாட முடியாது.  அதனால குலசேகரர் தேவகி புலம்பிய புலம்பலாகப் பத்துப் பாசுரம் பாடினார்.

    இன்னொரு முக்கியப் பத்துப் பாசுரம் அவர் பாடினார்.  கௌசல்யையாத் தன்னை நினைச்சிண்டார்.  நினைச்சினுட்டு திருக்கண்ணபுரம் சவரிப் பெருமாளைப் போய் சேவிச்சார்.  அந்தப் பெருமாளை எப்படி இராமனை தொட்டில்ல போட்டு ஆட்டியிருப்பளோ, அதப்போல தான் தொட்டிலிட்டு தாலாட்டுப் பாடிட்டார்.

    மன்னு புகழ் கௌசலை தன் * மணிவயிறு வாய்த்தவனே *
            தென் இலங்கைக் கோன் முடிகள் * சிந்துவித்தாய்

    - என்று தொடங்குகிற பத்துப் பாசுரங்கள்.

    சுற்றம் எல்லாம் பின் தொடரத் * தொல் கானம் அடைந்தவனே *
          அற்றவர்கட்கரு மருந்தே * அயோத்தி நகர்க்கதிபதியே *
    கற்றவர்கள் தாம் வாழும் * கணபுரத்தென் கருமணியே *
          சிற்றவைதன் சொல் கொண்ட * சீராமா! தாலேலோ

    - (பெருமாள் திருமொழி – 8.6)

    - என்று பத்துப் பாசுரங்களிலும் தாலேலோ, தாலேலோன்னு பாடினார்.  இதுவும் தாய் பாவனை.  பெரியாழ்வார் தாய் பாவனை யசோதையா.  ஆனா இந்த இடத்தில தாய் பாவனை, கௌசல்யையா.  கௌசல்யை இராமனை எப்படித் தொட்டிலிட்டுப் பாடியிருப்பளோ, அதைப்போல பாடினார்.  குலசேகர ஆழ்வாருக்கு இராமன் பேர்லதான் அதீதப் ப்ரீதி.  அவர் வாழ்ந்ததே இராமனுக்காக.  பெருமாள் திருமொழின்னு அவர் பாடியிருக்கிற பிரபந்தத்துக்குப் பேர்.  பெருமாள்ன்னு இராமனுக்குத் திருநாமம்.  அவனைப் பத்தியே பாடினனாலதான் பெருமாள் திருமொழின்னு இந்தத் திவ்யப் பிரபந்தத்துக்கே பேர் வந்தது.  இது குலசேகரரிடத்திலேயும், பெரியாழ்வாரிடத்திலேயும் இருந்த மாறுதல்.  தாய் பாவனையில பாடினா, அப்படிங்கறதுக்காக.  ஏன்னா சாதாரணமா நாயகி பாவம்ன்னால், நாயகியாத்தான் பாடணும்.  ஆனா இந்த இடத்தில மட்டும் தாய்ப் பாசுரமா பாடியிருக்கா.

    முக்கியமா நாம பார்க்க வேண்டியது, பராங்குச நாயகி எப்படி பாடியிருக்கா?  பரகால நாயகி எப்படி பாடியுள்ளார்?  இவா ரெண்டு பேருக்கும்தான் என்னைக்குமே போட்டி, ஆரோக்யமான போட்டி. சண்டையில்லே.  பத்துப் பத்துக்கள் பாடியிருக்காரே.  இதில என்ன நாயகி பாவத்தோட பாடுவர்ன்னா, அதை நாம சில வர்க்கங்களாப் பிரிச்சுனுடலாம்.  ஒன்று, விரக தாபத்திலே துடிப்பர்கள்.  அது ரொம்ப முக்கியமான பதிகங்கள்.  விரக தாபம்ங்கிறது நாயகனை விட்டுப் பிரிந்து, அவனோட அனுபவம் கிடைக்காம நாயகி துடிக்கிறாளோல்லையோ, இந்த விரக தாபத்தில பாடுறது பல பாசுரம்.  தூது விடுதல் பல பாசுரம்.  நாயகன் எங்கேயோ இருப்பர்.  நாயகி எங்கேயோ இருப்பள்.  பறவைகளைப் பிடித்து நீ போய் என் விஷயத்தை பகவானிடத்தில சொல்லு, அப்படின்னு தூது விடறது ரெண்டாவது வகை.  மூன்றாவது வகை, மடலெடுத்தல்.

    மடலெடுத்தல்ங்கிறது அந்த நாள்ல இருந்த ஒரு வழக்கம்.  தமிழ் இலக்கியம் எப்படி இருந்ததுன்னு சொல்றேன், சம்ஸ்கிருத இலக்கியம் எப்படி இருந்ததுன்னு சொல்றேன்.  ஆழ்வார்கள் எப்படிப் பின்பற்றி இருக்காங்கிறதைச் சொல்றேன்.  நம்மாழ்வாரும் மடலெடுத்திருக்கார்.  திருமங்கையாழ்வாரும் மடலெடுத்திருக்கார்.  மடல் எடுத்தல் என்றால், மடல்ங்கிறது பனை மடல்.  பனை ஓலை இருக்கோல்லையோ, அதுல என்ன மடல் இருக்கோ அதை எடுத்துக்கணும்.  எடுத்துட்டு தான் யாரை ஆசைப்பட்டோமோ, அவனுடைய படத்தை வரைஞ்சுக்கணும்.  வரைஞ்சுட்டு, பனை மடலாலேயே ஒரு குதிரை பொம்மை கட்டணும்.  கட்டிட்டு, அந்தக் குதிரைக்கு மேலே ஏறி உட்கார்ந்துட்டு, பொம்மைக் குதிரை, அதை நாலு பிள்ளைகளைப் பிடிச்சு இழுக்கச் சொல்லணும்.  அந்த ஊரில தெருத்தெருவா சுற்றி வந்து, நான் இன்னாரைக் காதலிச்சேன்.  ஆனா அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மறுத்துட்டார்.  அவரை இழந்து நான் இப்படித் துடிக்கிறேன்ங்கிறத அதுக்குரிய பாட்டைச் சொல்லிண்டே போகணும்.  எதுக்கு இதப் பண்ணுவாள்ன்னா, ஒருவேளை அவனுக்கே கண்ணுல பட்டு, ஓ, இவ்வளவு ஆசை இருக்கு போலருக்குன்னு அவனோ, அவளோ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலாம்.  இல்லே, ராஜா கண்ல பட்டுட்டு, ஏன் ஒழுங்கான பெண்ணைப் பிள்ளையோட கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்கறீள், அப்படினுட்டு ராஜா குறுக்க பூந்து சரி பண்ணி வைக்கலாம்.  இல்லே பெற்றோர்களுக்கே மனசு மாறி சரிபடுத்தி வைக்கலாம்.  இது எதானும் ஒன்று நடக்குமாங்கிற ஆசையிலதான் மடல் எடுப்பர்கள்.  இந்த மடல் எடுக்கறதை, நம்மாழ்வாரும் மடல் எடுத்திருக்கார், திருமங்கையாழ்வாரும் மடல் எடுத்திருக்கார்.  இவர் பிரபந்தம் அவர் பிரபந்தம் ரெண்டுமே சொல்றேன்.

    அப்போ விரக தாபத்தில் பாடுவது, தூது விடுவது, மடலெடுப்பது, அடுத்து அனுகாரம் பண்ணுவது.  அனுகாரம்ன்னா, பகவான் இருக்க மாட்டார்.  ஆனா அவர் இல்லேங்கற ஆற்றாமையைத் தனிச்சுக்கணுமோல்லையோ?  விரகதாபத்தைத் தணித்துக் கொள்ளுவதற்கு என்ன பண்ணலாம்?  அவர் இருக்கறாப்லயே நினைச்சுக்கறது.  அப்போ பாட்டு அவர் பக்கத்தில இருக்கறாப்ல நினைச்சிண்டு பாடிடுவா.  இன்னும் ஒரு படி மேல போச்சுன்னா, தங்களையே அவனா நினைச்சிண்டு பாடிடுவா.  தானேதான் பகவான்னு நினைச்சுக்கறது.  அவர் என்னென்ன சேஷ்டிதமெல்லாம் பண்ணியிருப்பரோ, அதெல்லாம் தானே பண்ணினதுன்னு நினைச்சுக்கறது.  இதுக்கு அனுகாரம்ன்னு பேர்.

    அடுத்த வகை, ஐந்தாவது வகை, ஊடல் வகை.  ஊடல்ங்கிறது பொய்க்கோபம்.  ’ப்ரநய ரோஷம்’ன்னு அதுக்குப் பேர்.  ப்ரநயம்ன்னால் காதல், அன்பு.  ரோஷம்ன்னாக் கோபம்.  அன்பின் வெளிப்பாடான கோபம்.  இது ப்ரநய ரோஷம்.  நிஜக்கோபமில்லே.  ப்ரநய ரோஷத்துக்கு மட்டும் இன்னைக்கும் திவ்யதேசங்களிலே நடக்கறது.  அன்னைக்கு ஆழ்வார்கள் எப்படி ப்ரநய ரோஷத்தோட பாடினார்களோ, இன்னைக்கும் அதுக்கு ‘மட்டையடி உத்சவம்’ன்னு கோயில்களிலே பேர்.  பங்குனி உத்திரத்தன்னிக்கு காத்தால போனீள்ன்னா இன்னைக்கும் அந்த உத்சவம் ஸ்ரீரங்கத்தில நடக்கறது.  நம்பெருமாள் எட்டு வீதி எழுந்தருளிட்டு கோவிலுக்குள்ள வருவர்.  நாச்சியார் சன்னிதி வடக்கு வாசல்லே.  நாச்சியார் சன்னிதிக்குள்ள போறதுக்காக பல்லக்கோட வருவர்.  பெரிய கதவை தடால்ன்னு சாத்திடுவா.  சாத்தின உடனே பெருமாளால உள்ள போக முடியாது, பல்லக்கோட திரும்ப வருவர்.  இன்னொருதரம் போகப் பார்ப்பர், கதவை சாத்திடுவா.  இன்னொருதரம் போகப் பார்ப்பர், கதவை சாத்திடுவா.  அதுக்கப்புறம் என்ன நடந்தது பெருமாளுக்குத் தெரியாது, வெளிய நின்னுடுவர்.  நடுவுல அரையர் ஸ்வாமி, அவாளுக்கு ’விண்ணப்பம் செய்தார்’ன்னு பேர்.  தாளம் வைத்துக் கொண்டு ஆழ்வார்களுடைய பாசுரங்களை அவாதான் பாடுவா.  அவா போய்ப் பெருமாள்கிட்ட என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு தாயார் சன்னிதியில போய்ச் சொல்லுவா.  தாயார்கிட்ட உமக்கு என்ன கோபம்ன்னு கேட்டுகிட்டு பெருமாள்கிட்ட வந்து சொல்லுவா.  அப்போ தாயார் பெருமாள்கிட்டே ’நாம் இனி இவரை மன்னிக்கிறதா இல்லே. எங்க போய்ட்டு வந்தார்ன்னு கேளு’ன்னு தாயார் சொல்லுவா.  அப்போ பெருமாள், ‘எங்க போய்ட்டு வருவேன்?  நான் எல்லாரையும், ஆஸ்ருதர்களை இரட்சிக்கறதுக்காக, ஹிரண்யகசிபுவைக் கொல்லணும், ஹிரண்யாட்சனைக் கொல்லணும், சிசுபாலனைக் கொல்லணும், இராவணனைக் கொல்லணும், எவ்வளவு வேலை இருக்கு.  இதுக்காகத்தான் எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்தேன்’னுவர்.  ‘இருக்கட்டும், ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க எழுந்தருளியிருந்தார்ன்னு கேள்’.  இந்தப் பங்குனி உத்திர உத்சவத்திலே இது ஒன்பதாம் உத்சவம்.  இப்ப சொல்றது ஒன்பதாம் திருநாள் அன்னிக்கு நடக்கிற உத்சவம். 

    ஆறாம் திருநாள் அன்னிக்கு, பக்கத்துல உறையூர்ன்னு திவ்யதேசம்.  கமலவல்லி நாச்சியார்ன்னு கேள்விப்பட்டிருப்பீள்.  ரொம்ப ஆச்சர்யமான திவ்யதேசம்.  உறையூருக்கு இன்னொரு சிறப்பு, திருப்பாணாழ்வாருடைய அவதார ஸ்தலம்.  இந்த உறையூருக்கு நாச்சியாருடன் சேர்த்திக்காக இவர் போயிருப்பர்.  நம்பெருமாளுக்கு உறையூர் நாச்சியார் சேர்த்தி ஒருநாள்.  ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி, பங்குனி உத்திரத்தில ஒன்பதாம் திருநாள்சேரகுலவல்லி நாச்சியார், இப்ப குலசேகர ஆழ்வார்ன்னு சொன்னேனே, அவளுக்குச் சேரகுலவல்லின்னு ஒரு மகள்.  அந்த மகளை நம்பெருமாளுக்கு, திருவரங்கநாதனுக்குத்தான் கல்யாணம் பண்ணிக் குடுத்தார்.  அது ஸ்ரீராம நவமி அன்னிக்கு இன்னைக்கும் அவளோட சேர்த்தி நடக்கிறது.  அதனால ஸ்ரீரங்கத்துல நம்பெருமாளுக்கு மூன்று தாயார்களோட சேர்த்தி, வெவ்வேறு நாட்களிலே.  இது ஆறாம் திருநாளன்னிக்கு உறையூர் எழுந்தருளிட்டுத் திரும்ப வருவர்.  அப்போ நாச்சியாருக்குக் கோபம்.  அங்கு போயிருந்தீர், ஏன் போயிருந்தீர், வர வேண்டாம்ன்னு கோபித்துக் கொள்ளுவர்.  அப்போ பதில் சொல்லுவர், ‘அதுக்கப்புறம் எத்தனை வேலை இருந்தது எனக்கு.  நீ என்னமோ என் உடம்பில ரத்தக்கறை தெரியறது, அப்படியே நகக்கீறல் தெரியறதே, புஷ்பத்தினுடைய தாதுக்களெல்லாம் உடம்புல தெரியறது, குங்குமப்பூ தெரியறது.  இது எல்லாம் என்னத்துக்காகன்னு தாயார் கேட்பர்.  அப்போ பெருமான் சொல்லுவர், வழியில எத்தனையோ இராட்சசர்களையும், அசுரர்களையும் முடித்துவிட்டு, நாம் குதிரைநம்பிரான் பேரிலே ஆரோகணித்து உம்மைக் காணவேண்டுமென்ற வேகமான ஆதுரத்தோடே வந்தோம்.  எத்தனை பெண்களெல்லாம் பாரிஜாத புஷ்பம் குடுத்தா தெரியுமா?  பிராட்டி பக்கத்தில இல்லாத அணிஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன்.  எத்தனை பேர் குங்குமப்பூ சமர்ப்பித்தா தெரியுமா?  அவள் இல்லாமல் நான் அலங்காரமே பண்ணிக்கறதில்லேன்னு சொல்லிட்டு வந்தேன்.  அப்படி இருக்கறச்சே உனக்கு இந்தக் கோபம் கூடுமோ?  ஏன் கண் சிவந்திருக்குன்னு கேட்டீரே?  வெகு நாட்களாக இராக்ஷசர்களோட யுத்தம் புரிஞ்சுருக்கேன். கண் சிவந்தது.  உம்மையும், உன் குழந்தைகளையும் இரக்ஷிக்கத்தானே இவ்வளவு பாடும் நாம் படறோம், என்று தாம் பண்ணினதெல்லாத்தையும் பெருமாள் சொல்லுவர்.  அரையர் ஸ்வாமி போய் எல்லாத்தையும் நாச்சியாரிடத்தில சொல்லிட்டு, கொஞ்சம் உள்ளம் இரங்கும் அவளுக்கு.  ஆனாலும் சுலபத்துல ஏத்துனுட மாட்டா. 

    அதுக்கப்புறம்தான் நடுவுல நம்மாழ்வார் விக்ரஹ ரூபத்தில இருக்கறார்.  அவர் குறுக்க வருவர்.  இவா ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டுருந்தா நமக்குன்னா ஆபத்து இப்போ?  இவா சேர்ந்து இருந்தாத்தான் நம்மளை இரட்சிக்க முடியும்.  தாயாருக்கே பெருமாள்கிட்ட கோபம்ன்னா?  பெருமாளுக்குக் கோபம் வந்தா தாயார்கிட்டப் போகலாம்.  தாயாருக்கே கோபம்ன்னா, அப்புறம் யார்கிட்டப் போறது?  வேண்டாம், அனர்த்தத்தில கொண்டு போய் விட்டுடும்னுட்டு, நம்மாழ்வார் நேர பெருமாள்கிட்டப் போகனும், போக மாட்டார்.  தாயார்கிட்டப் போய்ட்டு, ‘அவர்தான் ஏதோ பேசிண்டிருக்கார்ன்னா, தேவரீர் கோபித்துக் கொண்டால் உலகம் தாங்குமா?  நமக்காக தேவரீர் பொறுத்தருள வேண்டும்’, அப்படின்னு பிரார்த்திக்க, அப்ப நாச்சியார், அங்க பெரிய கோஷ்டி இருக்கும்.  ஆயிரக்கணக்கான ஜனங்கள் நின்னுண்டிருப்பா.  ‘நம்முடைய பெரியன் நம்மாழ்வார் சொன்னதுக்காக இந்த நம்பெருமாளைப் பொறுத்தோம்’, அப்படின்னு தாயார் ஒத்துப்பள்.  அதுக்கப்புறம் நம்பெருமாள் சன்னிதிக் கதவைத் திறந்து உள்ளுக்குள்ள போய் மத்தியானம் ஒன்னரை மணிக்கு சேர்த்தி.  ஒரே சிம்மாசனத்தில் தாயாரும், பெருமாளுக்கும் அன்னைக்குத்தான் சேர்த்தி நடக்கும்.  அன்னைக்கு இராத்திரிதான் இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்து கத்யத்ரேயம் சாதித்தார்.  ஏன்னா பிராட்டி பக்கத்தில இருக்கறச்சே சரணாகதி பண்ணினாதான் சுலபமா பலிக்கும்.  அதனாலதான் அன்னைக்குத் தேர்ந்தெடுத்து ஸ்வாமி பண்ணினார்.  அப்போ அன்னைக்கு நடந்ததுதான் பிரணயகலக உத்சவம்.  அதுக்கு மட்டையடி உத்சவம்ன்னும் பேர்.  மட்டையடி உத்சவம்ன்னா இந்தப் பெருமாள் உள்ள வரார் பாருங்கோ, வரச்செ சட்டி நிறைய தயிர், பால், வெண்ணெய் எல்லாத்தையும் இந்த நாச்சியார் சன்னிதிக்காரா வச்சுப்பா.  வச்சுக்கிட்டு வரும் போது வீசி வீசி அவன் பேரில அடிப்பா.  யாரெல்லாம் அந்தப் பல்லக்கைத் தூக்கிட்டு வராளோ, அவா அத்தனை பேரும் அதில் குளிக்க வேண்டியதுதான்.  பெருமான் பேரிலயும் அது படும்.  அங்க இருக்கற எல்லாருமே நனைஞ்சுட்டுத்தான் கிளம்பிப் போயாகணும்.  அப்ப அந்த பிரணய ரோஷத்துக்குத்தான் ஊடல்ன்னு பேர்.  பொய்க்கோபம்தானே, நிஜமான கோபம் அல்ல.  அன்பின் வெளிப்பாட்டாலே, அன்பின் மிகுதியாலே பிறந்த கோபம்.  அந்தக் கோபம் முடிந்த பிற்பாடுதான் சேர்த்தி நடக்கும்.  அன்னைக்கு ஒருநாள் மட்டும்தான் ரெண்டு பேரும் ஒரே சிம்மாசனத்தில எழுந்தருளி இருப்பர்கள்.  மற்ற நாளெல்லாம் நம்பெருமாள் வேற சன்னிதிதான், தாயார் வேற சன்னிதிதான்.

    அதனாலே பிரணய ரோஷ நிலையிலும் ஆழ்வார்கள் பாடுவர்.  பெருமானை வரலையே, வரலையேன்னு தூதுவிட்டுட்டு, அவன் வந்திருக்கச்சே கோவிச்சுனுடுவா.  தூதுவிட்டுப் பறவை போய் பகவான்கிட்டச் சொல்லும்.  அவரும் சரின்னு அலை குலையத், தலை குலைய ஓடி வருவர்.  வந்துட்டுப் பார்த்தா இவர் உள்ளேயே விடமாட்டார், வாசல்லயே நிறுத்தி வச்சுருவர்.  அவர் ஒன்னும் போகல்லாம் மாட்டார்.  அவர் நின்னு எப்படி அனுகிரகிக்கணுமோ, ஆழ்வாரோடே சேர்ந்த பிற்பாடுதான் பெருமாள் புறப்படுகிறார்.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

    நாலாயிரத்தில் நாயகி பாவனை

     

    ஆழ்வார்கள் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி அவதரித்தவர்கள்.  அதில் தலைவராக நம்மாழ்வார் இருந்தார்.  இவர்கள் பன்னிரெண்டு பேருக்குள்ளே ஒருத்தி, ஆண்டாள் மட்டும்தான் பெண்ணாகப் பிறந்தவள்.  மற்ற எல்லா ஆழ்வார்களுமே புருஷர்கள்தான்.  ஆனா அவர்களுக்குள்ள எப்படி நாயகி பாவத்தில பாசுரம் வந்தது?  அவர்கள் எதற்காகப் பெண் பாவனைல பாடினார்கள்ங்கிறது ஒரு முக்கியமான விசாரம்.  அது ஏன்னு தெரிஞ்சுக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்.  ஆனா அந்தப் பாசுரங்கள் எவ்வளவு நன்னாயிருக்கு, எவ்வளவு அனுபவிக்கிறாப்போலே இருக்குங்கிறதுதான் இன்னும் நமக்கு முக்கியம்.

    பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், இவா பத்து ஆழ்வார்கள்.  இதிலே நம்மாழ்வாருக்கு ஒரு சிஷ்யர் இருந்தார், மதுரகவியாழ்வார்னு பேர்.  பெரியாழ்வாருக்கு ஒரு பெண் பிறந்தாள், ஆடி மாசம், பூர நட்சத்திரலே, ஸ்ரீவில்லிபுத்தூரில்.  ஆண்டாள்ன்னு திருநாமம்.  ஆக மொத்தத்தில பன்னெண்டு பேர்.  இதிலே ஒருத்தி மட்டும்தானே பெண்ணாகப் பிறந்தாள்?  மற்ற எல்லாரும் ஆண் தானே?  அப்படியே பாசுரங்களைப் பாடிடுறதுதானேன்னு நமக்குத் தோணும்.  ஆழ்வார்கள் லோகத்தில் பரப்ப வந்தது பக்தி நெறியை.  பக்திங்கறது ஞானத்தினுடைய ஒரு பக்குவமான நிலை.  பல சமயங்களீல் பக்தி முற்றித்தான் ஞானம்ன்னு நாம நினைச்சிண்டிருப்போம்.  அப்படி அல்ல. ஞானம் முற்றினால்தான் பக்தியே பிறக்கும்.  பக்திஸ்ச்ச ஞான விஷேஷஹா, அப்படின்னு அதை விளக்குகிறார்கள்.  பக்திங்கறதே ஞானத்தினுடைய ஒரு விஷேசமான தன்மை.  ஞானத்தினுடைய முதிர்ந்த தன்மை.  இதை பக்தின்னு சொல்லுகிறோம்.  பவ்யம் இருந்தால்தான் பக்தி வரும்.  பவ்யமா இருக்கறதுன்னா விநயமா இருக்கறது; நெகிழ்ந்திருத்தல்; நனைந்திருத்தல்.  இது இத்தனையும் இருந்தாத்தான் பக்தியே பண்ண முடியும்.  ஞானம்ங்கிறது வறட்டுத்தனமா நிறைய அறிவு பெற்று இருப்பது.  பக்திங்கறது நேர் எதிரா இருக்கே?  இதுவோ நனைஞ்சிருக்கறதா இருக்கு, நெகிழ்ந்திருக்கிறதா இருக்கு.  ஆனா பல பண்டிதர்களை நாம பார்க்கிறோமோல்லையோ?  ஒரேயடியா சமஸ்கிருத ஞானம் இருக்கும்.  தெரியாததே இருக்காது.  பேசறதுக்கே கிட்டக்கப் போக முடியாது.  அப்படிப்பட்ட பண்டிதர்களெல்லாம் ஞானவான்களா இருக்கட்டும்.  அப்போ பக்திங்கறது நேர் எதிரா?  பாண்டித்யமே வேண்டாமா?  ஞானம் வேற மார்க்கம், பக்தி வேற மார்க்கமான்னா, அப்படி அல்ல.  ஞானமே பரிபக்குவமான நிலை அடைந்தால்தான் பக்தி ஆகிறது.

    என்னைக்குமே நமக்கே கொஞ்சம் இளரத்தமா இருக்குன்னு வச்சுக்கங்கோ.   இப்பத்தான் 25 வயசு, 30, 35ன்னா, ரத்தம் வேகமாத்தான் இருக்கும்.  அப்போ நம்ம பேச்செல்லாமே வேகமாத்தான் இருக்கும்.  கொஞ்சம் நாளாக, நாளாக நம்ம பேச்சே மாறதோல்லையோ?  நாமே 25 வயசுக்கு எப்படிப் பேசியிருப்போம்?  இப்போ 50 வயசுக்கு எப்படிப் பேசறோம்ன்னு பார்த்தா மாறுதல் நமக்கே தெரியும்.  அப்போ வேகமா பேசியிருப்போம், அறிவு பூர்வமா பேசியிருப்போம்.  தர்க்க ரீதியாப் பேசியிருப்போம்.  இன்ன கேள்வி கேட்டு, இன்ன பதில் கிடைச்சாத்தான் சரின்னுவோம்.  ஆனா வயசாக, வயசாக அப்படி யாரும் வாதம் பண்ணிண்டு இருக்கறதாத் தெரியலே.  இதுதான் உலகம்.  இதுதான்ங்கிறது தெரியறது.  இதுல வாதம் பண்ணி பிரயோஜனம் இல்லே.  இந்தப் பல விஷயங்களை நாம வயசானா தெரிஞ்சுக்குறோம்.  அப்போ சிறு வயசில் ஞானத்தின் அடிப்படையில் பேசினோம்.  வயசாக, வயசாக அனுபவத்தின் அடிப்படையில் பேசுகிறோம்.  ஞானத்தில பேசினதை விட, அனுபவத்தில் பேசுவது என்பது இன்னும் மெருகூட்டுகிறதோல்லையோ?  அதனாலே முதல் நிலைங்கறது ஞானம்.  அது முதிர்ந்தாத்தான் அனுபவம்.  இது வாழ்க்கையில நாம நிச்சலும் பார்க்கிறது.

    அதேபோல சம்ப்ரதாயத்திலே, ஆன்மீகத்திலெ பார்த்தோம்ன்னாலும், முதல் நிலை ஞானம்.  அந்த ஞானமே முதிர்ந்தாத்தான் பக்தி நிலையை அடைகிறோம்.  ஞானத்திலேர்ந்து எப்படி பக்தி நிலைக்குப் போறாள்ன்னா, ஞானத்தாலே தியானம் பண்ணுவோம்.  பகவானைக் குறித்து தியானம் பண்றதோ, ஆத்மாவைக் குறித்து தியானம் பண்றதோ, இதெல்லாம் ஓர் நிலை.  அதுல அன்பு ரொம்ப சேர்ந்திருக்கும்ன்னு சொல்ல முடியாது.  நீங்க பூ தொடுத்துப் பார்த்திருக்கீளோல்லையோ?  புஷ்பங்களை எடுத்து நார்ல வைக்கிறோம்.  கட்டறோம்.  கட்டறச்சே வெறும தொடுத்துற மாட்டா.  பக்கத்துல ஒரு பாத்திரத்துல ஜலம் வச்சிண்டு, தொட்டுத் தொட்டு தொடுக்கறாளோல்லையோ?  ஏன் வெறும் பூவா தொடுத்தாப் போறாதா?  என்னத்துக்கு ஜலத்தைத் தொடணும்ன்னால், அப்பதான் அது ஒழுங்கா கட்ட வரும்.  ஜலத்தைத் தொடாமல் பூவைக் கட்டினோம்ன்னால், அவ்வளவு நன்னாக இனிக்காது, ரசிக்காது.  எப்படிப் புஷ்பத்தைத் தொட்டுக்கறச்சே ஜலத்தை தொட்டுக்கறோமோ, அதைப்போல தியானம் பண்ணிண்டே இருக்கறச்சே அன்பு சேர வேண்டும்.  வெறுமேகூட தியானம் பண்ணலாம்.  பல இடத்துல நீங்களும், யோகா, தியானம் கற்றுக் குடுக்கப்படும்ன்னு போட்டு, கத்துகிறதுக்காக போறோமோல்லையோ?  அங்க இப்படி வட்ட, வட்டமாப் போட்டு, நடுவுல ஒரு புள்ளி குத்தி, அந்தப் புள்ளியையே பார்த்திண்டு இரு.  அங்கயே உன்னுடைய லக்ஷியம் வச்சுக்கோன்னுவா.  எத்தனை நாழி புள்ளியைப் பார்க்க முடியும்?  ஏதோ கொஞ்ச நாழி பார்க்கலாமே தவிர, என்ன பெரிய ரசனையா?  இல்ல ஏதானும் குணம் இருக்கா, சுவை இருக்கா, ஒன்னுமே இல்லே.  இதே ஒரு திருவரங்கநாதன் படமோ, திருக்குடந்தை ஆராவமுதனோட படமோ வச்சுட்டு, கொஞ்ச நாழி பார்த்திண்டிருன்னு சொன்னா, எத்தனை நாழி வேணாலும் பார்த்திண்டிருக்கலாம்.  அதென்ன கருப்புப் புள்ளியா, பார்க்க முடியாத கொஞ்ச நாழி கழிச்சுப் போய்டறதுக்கு.  அப்போ வெறும தியானம் மட்டும் பண்ணிண்டு இருந்தோம்ன்னா, அது பக்தி ஆகாது.  அது தியானத்தோட, ஞானத்தோட நின்னுடும்.  அந்த தியானத்திலேயே நாம் அன்பு கலந்தோம்ன்னால், தியானத்திலேயே பிரேமம் கலந்தோம்ன்னால், அது பக்தி ஆகிறது.  வெறும் தியானம் பண்ணினா ஞான நிலைன்னு அர்த்தம்.  தியானத்தில அன்பைக் கலந்துட்டோம்ன்னால் அது பக்தி நிலைன்னு அர்த்தம்.  இதுனாலதான் ஸ்நேகபூர்வம், அநுதியானம், பக்தித்தய அபிதீயதேன்னு சொல்லுவர்கள்.  தியானம், அநுதியானம். இடைவிடாத தியானம்.  அதிலே ஸ்நேகபூர்வ அநுதியானம்.  ஸ்நேகம்ங்கிறதுதான் பக்தி.  ஸ்நேகத்தோடு கூடியிருக்கிற தியானத்தைப் பக்தின்னு சொல்லுகிறார்கள்.  அதனாலே ஞானம் கனிந்துதான் பக்தியே தவிர, பக்தி கனிந்து ஞானம் அல்ல.  இது கீதையிலே ஆகட்டும், புராணங்களிலே ஆகட்டும், ஞானம் கனிந்த நலமான பக்தியைப் பேண வேண்டும்ன்னு சொல்லுவர்கள்.  சரி, அப்போ பக்திங்கறது ஞானமில்லாம இல்லையோல்லையோ?  ஞானமிருந்தாத்தான் மேல பக்தியே பிறக்கும்.  வெறும் ஞானத்தோட நின்னுட்டாலும் முக்தி கிடைக்காது.  ஞானமில்லாம வெறும் பக்தி மட்டும் பண்ணனும்ன்னாலும், பண்ணவே முடியாது.  ஞானம் இருந்திருந்தாத்தான் பக்தியே வரும்.  அப்போ ஞானம் தேவை, பக்தி தேவை.  அப்போ ஞானம், பக்தி இந்த ரெண்டும் கலந்ததுதான் நமக்கு முக்தி குடுக்கிறது.  இதுக்கு ’பக்தி ரூபாபன்ன ஞானம்’ன்னு பேர்.  இதைத்தான் ‘உபாசனம்’ என்று உபநிஷத்திலே சொல்லுவர்கள்.  உபாசனம் பண்றார்ன்னு சொல்றோமோல்லையோ, அது வெறும் தியானம் பண்றார்ன்னு அர்த்தமல்ல.  தியானமும், பிரேமமும் சேர்ந்தால்தான் உபாசனமே பண்ண முடியும்.  அப்போ யாரும் உபாசனா மார்க்கத்தாலேதான் மோக்ஷம் போக வேண்டும்.  ஆணா இருந்தாலும் அப்படித்தான், பெண்ணா இருந்தாலும் அப்படித்தான்.  யாருமே அப்படித்தான்.

    ஆனா இந்த நிலை யாருக்கு நன்னா வரும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ.  ஆணுக்கு இந்த நிலை சுலபமா வந்துருமா?  இல்லே பெண்ணுக்கு இந்த நிலை சுலபமா வருமான்னா, அவரவர்களுக்குன்னு சில உடல்ரீதியான, மனரீதியான எண்ணங்கள் ஓட்டம் இருக்கோல்லையோ?  ஆணின் எண்ண ஓட்டமும், பெண்ணின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இல்லே.  பெண்களுக்குள்ளேயே ஒரோருத்தரின் எண்ண ஓட்டமும் மாறுபடுகிறது.  ஆண்களுக்குள்ளேயும் மாறுபடும்.  ஒருவேளை ஆண்களெல்லாம் ஒரு எண்ண ஓட்டம், பெண்களெல்லாம் ஒரு எண்ண ஓட்டம்ன்னு வச்சுக்கங்கோ.  அதுக்குள்ள நிறைய வித்தியாசம் இருக்கோல்லையோ?  அநேகமா ஆண் பேசறது ஞான பாவனையோடதான் இருக்கும்.  அநேகமா பெண் பேசறது பிரேம பாவனையோடதான் இருக்கும்.  ஒரு குழந்தைகிட்ட நடந்துக்கிற விதமே பார்ப்போமே.  அப்பா, பொண்ணோ, பிள்ளைகிட்டயோ எப்படி நடந்துப்பர்?  அம்மா பொண்ணு, பிள்ளைகிட்ட எப்படி நடந்துப்பள்ன்னு பார்த்தாலே, ஒன்னு ஹிதத்தைக் குறித்தும், ஒன்னு பிரியத்தைக் குறித்தும்.  நம்ம வாழ்க்கைல ரெண்டு உண்டு, ப்ரியம்ன்னு ஒண்ணு, ஹிதம்ன்னு ஒண்ணு.  ஹிதம்ன்னா எனக்கு நல்லது.  எதெது நல்லதோ அது ஹிதம்.  ப்ரியம்ன்னா எனக்குப் பிடிச்சது.  இந்த ரெண்டும் ஒன்னா இருக்கணும்ன்னு அவசியமே இல்லே.  எனக்கு நன்னா இருக்கறதெல்லாம் பிடிச்சிருக்கணும்ன்னு தேவையில்லே.  பிடிச்சதெல்லாம் நன்னா இருக்கணும்ங்கிற அவசியமும் இல்லே.  எனக்கு எத்தனையோ விஷயம் பிடிக்கும்.  அதெல்லாம் சாப்பிடக்கூடாது.  இது சாப்பிட்டா ரொம்ப நன்னா இருக்கும் தொண்டையிலேன்னா, அது சாப்பிட்டுடலாமா?  கூடாதுன்னா கூடாதுதான்.  நன்னா இருக்கறதெல்லாம் பிடிக்குமா?  வேப்பங்கொழுந்து ரொம்ப நல்லது.  உடம்புக்கு நல்லதுதான், சாப்பிடுன்னா யார் சாப்பிடுவா?  அதுக்கு வயசு வேண்டியிருக்கு பாருங்கோ.  இப்போ நானே பாகற்காயை பதினாறு வயசிலே, சாப்பிடுன்னு எங்க அம்மா சொல்றச்சே, வேண்டாம்னுட்டேன்.  இப்ப 45 வயசிலே அதுதான் உடம்புக்கு நல்லது, சாப்பிடுன்னா சரிங்கறேன்.  அப்ப அப்படி சொன்னீரே, இப்ப இப்படி சொல்றீரேன்னா, அது ஞானம், இது பிரேமம்.  அந்த ஞானதசை மாறிடுத்து.  இனிமெ வாதப் பிரதிவாதங்களுக்கெல்லாம் இடம் இல்லே.  அதனாலே, ஹிதம், பிரியம் ரெண்டிலே, அநேகமா நல்லது எதோ, இந்தப் பிள்ளை இப்படி வரணுமே, இப்படி வரணுமேங்கறதப்பத்திதான் அப்பா பேசுவர்.  இப்படியே கையிலே பிரம்பை வச்சிண்டே பேசிண்டிருந்தா பிள்ளை முன்னுக்கு வரவே போறதில்லே.  அதுக்குப் பிடிச்சதையும் குடுத்தாத்தான் முன்னுக்கு வரும்.  இது அம்மா பேசுவள்.  சரி, பிடிச்சதையே குடுத்திண்டிருந்தியானா கெட்டே போயிடும் பிள்ளை, பிரம்பும் கையில வச்சிக்கணும்.  இது அப்பா பேசுவர்.  அப்போ இவர் பேச்சு, அவள் பேச்சு ரெண்டையும் சேர்த்து ஒரு பிள்ளையை வளர்க்கறதோல்லையோ?  எப்படி பிரியம், ஹிதம்ன்னு ரெண்டையும் தாய், தகப்பனார்கிட்ட பார்க்கறோமோ, அதேபோல, அதையே கொஞ்சம் இழுத்து வைச்சுப் பாருங்கோ.  ப்ரியத்தையே பிரேமமாக்கிக்கங்கோ, ஹிதத்தையே ஞானமாக்கிக்கங்கோ.

    அப்போ ஞானத்தாலே பேசறாள்ன்னா அநேகமா ஆண் பேச்சாக இருக்கும்.  பிரேமத்தோடே பேசறோம்ன்னா பெண் பேச்சாக இருக்கும்.   இது லோகத்துல கண்கூடா நாம பார்க்கறது.   இதையேதான் ஆழ்வார்களும் பின்பற்றினார்கள்.   எப்பப்பெல்லாம் தங்களுக்கு ஞானம் அதிகரிக்கிறதோ, பகவான் புருஷோத்தமன், அவன்தான் முழுமுதற் கடவுள், ஜகத்துக்குக் காரணம், படைக்கிறவர், காக்கிறவர், அழிக்கிறவர், முமூஷுவுக்கு மோக்ஷம் குடுக்கிறவர்ன்னு என்னென்னல்லாம் தோண்றதோ, இதெல்லாம் ஞானத்தின் அடிப்படையில் சம்ஸ்கிருத வேதாந்தத்தின் அடிப்படையில் தோன்றுவது.  அது அத்தனைக்கும் ஆழ்வார்கள் ஆணாகவே பாடிடுவா.  ஆனா இப்படியே பண்ணிட்டு மோக்ஷம் போய்ட முடியுமா?  வெறும் வறட்டுத்தனமா தியானம் பண்றேன்ங்கறதுக்காக, மோட்சம் பகவான் குடுத்துறதில்லே.  அவரிடத்திலே உள்ளம் கனிந்து, உருகி, நைந்தாத்தான் முக்தி.  அப்போ அந்த நிலையை ஏறிட்டுக்கனும்ன்னால், ஆண்களேதான் பக்தியும் பண்ணனும்.  ஆழ்வார்களுக்கு அந்த பக்தியை பண்ணப்பண்ண ஏதோ நாம போட்டிண்டிருக்கற வேஷத்துக்கு ஒத்து போறதில்லேன்னு தோணிப் போய்டறது.  இவர்கள் இருக்கறது ஆண் உடுப்பிலே இருக்கா.  ஆனா பண்றதோ பரமப்ரேமம் கலந்த பக்தி.  ஏதோ ஒரு வேஷம் போட்டுண்டு, ஏதோ ஒரு மாதிரி நடந்திண்டிருந்தா?  இது அப்பப்ப ஒத்து வரமாப் போகவேதான் அந்த நிலையை விட்டுவிட்டு, தங்களையே பெண்ணாகப் பாவித்துக் கொண்டு, நாயகி பாவத்தில் பாடுகிறார்கள்.

    நாயகியாக பாடுகிறார்கள்ன்னு சொல்றச்சேவே, அப்போ பிரேம பாவனையில பாடுகிறார்கள்ன்னு சொல்ல வேண்டும்.  ஆச்சார்ய ஹ்ருதயம்ன்னு ஒரு கிரந்தத்திலே, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்ன்னு ஒரு ஆச்சார்யர், அந்த ஸ்வாமி தெரிவிக்கிறார், ‘ஞானத்தில் தன் பேச்சு, ப்ரேமத்தில் பெண் பேச்சு’. ஞானத்தோடு ஆழ்வார் பாடினா, தன் பேச்சாகப் பேசுவர்.  தன் பேச்சுன்னா, ஆண் பாவனைன்னு அர்த்தம். ப்ரேம பாவனையில் பாடினா, அப்போ நாயகி பாவனையிலே பாடுகிறார்.  இது அடிப்படை.  அப்போ ஆழ்வார்கள் ஏன் நாயகி பாவத்தில் பாடறான்னா, பிரேமம் அதிகரித்தால் நாயகி பாவத்தோடே பாடுவர்கள்.  ஞானத்தோடே பாடினார்களென்னால் ஆண் பாவனையில பாடினார்கள்.  அப்படின்னா பெண் பாவனையில பாடறச்சே ஞானமில்லேன்னு சொல்லக்கூடாது.  ஞானம் முதிர்ந்துதான் பிரேமம்ன்னு இப்பதான் பார்த்தோம்.

    இதிலே நம்மாழ்வார் நாயகி பாவத்திலே பாடியிருக்கார்.  திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் பாடியிருக்கார்.  பத்து ஆழ்வார்களும் பாடவில்லை.  முதல் மூன்று ஆழ்வார்களிடத்தும் நாயகி பாவம் இல்லை.  ஆண் பாவனையோட மட்டும்தான் பாடியிருக்கார்கள்.  திருமழிசையாழ்வார், ஒருவேளை ஓர் பாசுரம் நாயகி பாவத்திலே பாடினாரோன்னு சந்தேகம்.  அவர் ரெண்டு பிரபந்தம் பாடியிருக்கார்.  அதிலே ஒரே ஒரு பாட்டு மட்டும் நாயகி பாவமோன்னு சந்தேகப்பட்டு, அதுவும் ஆராய்ச்சியாளர்கள் இல்லேன்னு முடிவு பண்ணிட்டா.  அதனால முதல் நான்கு ஆழ்வார்களும் நாயகி பாவத்திலே பாடவில்லை.  ஐந்தாவது ஆழ்வார்தான் நம்மாழ்வார்.  வைகாசி மாசத்தில், விசாக நட்சத்திரத்தில், ஆழ்வார் திருநகரி, திருக்குறுகூர்ன்னு திருநெல்வேலிக்குப் பக்கத்திலே திவ்யதேசம்.  அந்த இடத்திலதான் நம்மாழ்வார் திருவவதாரம் பண்ணினார்.

    உண்டோ வைகாசி * விசாகத்துக்கொப்பொரு நாள் *
            உண்டோ சடகோபர்க்கொப்பொருவர் * உண்டோ
    திருவாய்மொழிக்கொப்பு * தென் குருகைக்குண்டோ *
           ஒரு பார் தனில் ஒக்குமூர்

    -(உபதேச ரத்தின மாலை – 15)

     

    ஆழ்வார் திருநகரிக்கு நிகர் அந்த ஊர்தானாம்.  வைகாசி விசாகத்திற்கு நிகர், அந்த நட்சத்திரம்தானாம்.  நம்மாழ்வாருக்கு நிகர் அவர்தானாம்.  அவர் பாடின திருவாய்மொழிக்கு நிகர் அதே பிரபந்தம்தானாம்.  அவ்வளவு உயர்த்தியா பாடியிருக்கார் நம்மாழ்வார்,  அவரிடத்திலதான் நாயகி பாவத்தை முழுமையோடே நம்மால பார்க்க முடியும்.  நாயகியாகவே தன்னை நினைச்சிண்டு பத்து பத்துப் பாசுரங்களாகப் பாடுகிறார்.  நம்மாழ்வார் நாலு பிரபந்தம் பாடியிருக்கார், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.  இந்த நாலும் நான்கு வேதங்களுக்குச் சமம். ரிக் வேதம், சாம வேதம், யஜுர் வேதம், அதர்வண வேதம்.  இதிலே என்ன ஆச்சர்யம்ன்னா, சொல்ல வந்த கருத்துக்களெல்லாம் வேதாந்தத்தினுடைய கருத்து.  ஆனா அதை இவர் பாடிண்டிருக்கறது நாயகி பாவத்தோடே.  சொல்ல வந்திருக்கறது ரொம்ப ஞானத்தினுடைய நிலையைத்தான் சொல்ல வரார்.  ஆனா அதைப் பிரேம தசையில் இருந்து கொண்டு அர்த்தங்களைத் தெரிவிக்கிறார்.  இப்படிச் சேருமான்னு கேட்டா, ரெண்டும் சரியான விகிதத்தில சேர்ந்திருந்தாத்தான் நமக்கும் பக்தி வளரும்.  வெறும் ஞானத்தோட மட்டும் பேசிண்டிருந்தாலும் பிரயோஜனமில்லே.  வெறும் மூடத்தனமான பிரேமத்தோட பேசியும் லாபமில்லே.  அப்போ ஞானமும், பக்தியும் கலக்க வேண்டுமோல்லையோ?  அதைத்தான் முதல் பாசுரத்தாலே நம்மாழ்வார் சாதித்தார்.

    உயர்வற உயர் நலம் * உடையவன் யவன் அவன் *
    மயர்வற மதி நலம் * அருளினன் யவன் அவன் *
    அயர்வறும் அமரர்கள் * அதிபதி யவன் அவன் *
    துயரறு சுடரடி * தொழுதெழன் மனனே!

    (திருவாய்மொழி – 1.1.1)

    - என்று முதல் பாசுரம். அதிலே ’மதிநலம் அருளினன்’னு சாதித்தாரோல்லையோ?  மதி, நலம். மதின்னு சொல்றது ஞானம்.  நலம்ன்னு சொல்றது பிரேமம்.  மதிநலம்ன்னு சொல்றது ஞானமும், பிரேமமும் கலந்தது.  இதைத்தான் பகவான் ஆழ்வாருக்கு அனுகிரகிக்க அது கொண்டே 1102 பாசுரங்களும் பாடினாராம்.  இந்த 1102 பாசுரங்களை 100 திருவாய்மொழியாக பிரிச்சுப்பா.  மொத்தம் 1102 சேர்த்தும் திருவாய்மொழின்னுதான் கிரந்தத்துக்குப் பேர்.  அதற்குள்ளே பத்து, பத்து பாசுரங்களா பிரிவு.  பத்துன்னு சொன்னா பதினொன்னுன்னு வச்சுக்கங்கோ.  பதினோரு, பதினோரு பாசுரங்களா மொத்தம் 100 திருவாய்மொழிகள்.  11 x 100 = 1100 ஆச்சா?  இப்போ 2 பாசுரம் கூட இருக்கோல்லையோ?  ஏன்னா, ‘கேசவன் தமர் கீழ்மேல் எமரேல் எழு பிறப்பும்..’ன்னு ஒரு பத்துப் பாசுரம்.  இரண்டாம் பத்திலே பாடியிருக்கார்.  அதிலே மட்டும் 11 பாசுரத்துக்குப் பதில் 13 பாசுரம் இருக்கு.  எப்பவுமே பத்துப் பத்தா பாசுரம் பாடுவர்.  பத்தாம் பாட்டு வரைக்கும் தான் சொல்ல வந்ததை சொல்லிடுவர்.  பதினோராவது பாசுரத்திலே, நான்தான் நம்மாழ்வார், நான்தான் திருக்குறுகூரில பிறந்தேன், நான்தான் ஆயிரத்துக்குள்ளே இந்தப் பத்துப் பாசுரத்தைப் பாடியிருக்கேன், இந்தப் பத்துப் பாசுரத்தை யார் சொன்னாலும் இந்தப் பலம் கிடைக்கும். அப்படின்னு ‘பலஸ்ருதி’ பாசுரம்ன்னு சொல்றோமோல்லையோ, அதைத்தான் கடைசிப் பாட்டில வச்சுருவர்.  இந்த கேசவன் தமர்ல மட்டும், அதுக்கு ’பன்னிரு திருநாமப் பாடல்’ன்னு பேர்.  ’கேசவாதி த்வாதச நாமங்கள்’ன்னு கேள்விப்பட்டிருப்பீள்.  கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்கிரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேத் ,பத்மநாப, தாமோதர-ன்னு சொல்லுகிறோமோல்லையோ?  அந்த பன்னெண்டு திருநாமத்துக்கும் பன்னெண்டு பாட்டுப் பாடிட்டார்.  அதுக்கப்புறம் தான் பாடினதுன்னு ஒரு பாட்டிலே சொல்லணுமோல்லையோ?  அப்போ 12 + 1, 13 போச்சு.  அதனாலே 1102 பாசுரங்கள்.  இதை திராவிட வேத சாகரம்ன்னு சொல்லுவர்கள்.  சாந்தோக்ய உபநிஷத்துக்குச் சமமான பாசுரம்.  சாம வேதத்தில் என்னென்ன கருத்துக்கள் உண்டோ, அது அத்தனையும் தெள்ளு தமிழிலே, இனிமையான தமிழிலே நம்மாழ்வார் குடுத்தார்.

    இந்த சம்ப்ரதாயத்துக்கு ’உபய வேதாந்தம்’ன்னு பேர்.  உபய வேதம்ன்னா, சமஸ்கிருத வேதம், திராவிட வேதம்.  சம்ஸ்கிருதமும் கற்றிருக்க வேண்டும், தமிழும் கற்றிருக்க வேண்டும்.  உபநிஷத்துக்கள், சம்ஸ்கிருத வேதம், வேதாந்தம்.  அதே ஆழ்வார் பாசுரங்கள் திராவிட வேதம், வேதாந்தம்.  இந்த ரெண்டையும் நாம் ரெண்டு கண்களாகக் கொள்ள வேண்டும்.  ரெண்டு கண் இருந்ததுன்னா விஷயத்தை நன்னாப் பார்க்கிறோமோல்லையோ?  ரெண்டு கண்ணு இருக்குங்கிறதுக்காக வஸ்து ரெண்டாத் தெரியலாமா?  அது ஒன்னாத்தான் தெரியணும்.  அதுபோல சம்ஸ்கிருத வேதாந்தம், திராவிட வேதாந்தம் ரெண்டு கண்ணும் சேர்ந்து பகவானை ஒருவனாகத்தான் காட்டும்.  ரெண்டு அர்த்தம் சொல்லாது.  எம்பெருமான் ஒருத்தன், அவனிடத்திலே பக்தி பண்ண வேண்டும், இந்த அர்த்தத்தைத்தான் சம்ஸ்கிருத வேதாந்தமும் சொல்லும், திராவிட வேதாந்தமும் சொல்லும்.

    அப்போ சம்ஸ்கிருத வேதாந்தம்தானே பழசு?  ரிக் வேதம், யஜுர் வேதம் எல்லாம் எவ்வளவு நாட்களாக இருக்கிறது.  ஆழ்வார் தமிழ்ப் பாசுரம்தானே பாடியிருக்கார்.  முதல்ல தமிழுக்கு சமஸ்கிருதம் சமமாகுமா?  ஒரு கேள்வி.  மேலும் சம்ஸ்கிருதம் ரொம்ப நாள் முன்னாடி இருக்கே.  ஆழ்வார் பாட்டு என்னைக்குன்னு எங்களுக்குத் தெரியுமே.  தேதியிருக்கிற பாசுரம் போய் உசந்த பாசுரமா இருக்க முடியுமா?  ரெண்டாவது கேள்வி.  மேலும் இது பாடினது எல்லாம் பிராமணர்களாகக்கூடத் தெரியலையே?  ஆழ்வார்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்லர்கள்.  ஒரு சிலர், தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியாழ்வார், மதுரகவியாழ்வார், இதைப் போன்றவர்கள்தான்.  குலசேகரர், ஷத்திரியர்.  திருமங்கையாழ்வார், கள்ளர் குலத்திலே பிறந்தார்.  திருப்பாணாழ்வார், பாணர் குலத்திலேயே பிறந்தார்.  இப்போ இந்த மூன்று சந்தேகம் வந்துருச்சு பாருங்கோ.  இது சம்ஸ்கிருதமா, இல்லையே தமிழாச்சே?  இது ரொம்ப பழைய காலம் இல்ல போலருக்கே.  ஆழ்வார்கள் எல்லாம் பிராம்மணாள் இல்ல, போலருக்கே.  இந்த மூன்றையும் ஒன்னுமில்லேன்னு ஆக்கற அளவுக்குத்தான் அந்த பாசுரங்களிலே பக்தி ததும்புகிறது.  ஆழ்வார் பாடினது அத்தனையும், இவ்வளவு ஒசத்தியா, சம்ஸ்கிருத வேதத்துக்கு சமமா திவ்யதேசங்களிலே நாம சேவிச்சுட்டு இருக்கோம்.  இதே ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேள்ன்னா, கோவில்களிலே ஆழ்வார் பாசுரங்களை இப்படி சேவிச்சிண்டு இருக்கலே.  நாதமுனிகள்ங்கிற முதல் ஆச்சார்யன்தான் இதை உள்ளே புகுத்தினார்.  823ம் வருஷத்திலே நாதமுனிகளோட அவதாரம்.  சுமார் 1200 வருஷத்துக்கு முன்னாடி. அவர்தான் இந்த ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு போய் திவ்யதேசங்களிலே பாடவேண்டும் என்று ஏற்படுத்தினார்.  அது என்ன ஆயிடுத்துன்னா, இன்னைக்கு வேதம் பின்னாடி போய்டுத்து, ஆழ்வார் திவ்யப் பிரபந்தம் முன்னாடி வந்துடுத்து.  முன்னாடி காலத்துல சம்ஸ்கிருத வேதம் மட்டும்தான் உண்டு.  ஆனா இன்னைக்குப் பெருமாளுக்கு புறப்பாடு நடக்கறதுன்னா, அருளிச்செயல் கோஷ்டிதான் முன்னாடி வரும்.  வேத பாராயண கோஷ்டி பின்னாடிதான் வரும்.  முன்னாடி இருந்ததை பின்னுக்குத் தள்ளியிருக்கணும்ன்னால், என்னமோ அந்தப் பாட்டில இருக்கணுமோல்லையோ?  இல்லேன்னா இவ்வளவு தூரம் வேதத்தைப் பின்னுக்குத் தள்ளிட்டு, அதாலே முன்னுக்கு வந்திருக்க முடியுமா?  என்ன இருக்குன்னா, ஒன்னுமில்லே, நாயகி பாவம்தான் இருக்கு.  அந்தப் பாசுரங்களுக்கு இவ்வளவு தூரம் ஏற்றம் எதனாலே ஏற்பட்டதுன்னா, வெறும் வேதாந்தம்ன்னு பேசியிருந்தா, அது பெண் பாவனையே பேசாது.  ஆண் பாவனையேதான் வேதம் பேசும்.  ஆனா ஆழ்வார்களைப் பொறுத்தவரை தங்களையும் மீறி, பக்தி ததும்ப பெண் பாவனையோட பாடியிருக்காளோல்லையோ?  அதனாலதான் இந்தப் பாசுரங்களுக்கே ஏற்றம்.

    இது எல்லாமே அனுபவ ரீதியான பாசுரங்கள்.  மேலே சொன்ன மாதிரி தர்க்க ரீதியாக இங்கெ பேச்சில்லே, அனுபவ ரீதியாகத்தான் பேச்சு.  அதனால வாதத்துக்கு இங்க எதுவுமே இல்லே.  ஆழ்வார் நிலைமைலேர்ந்து யோசிக்கணும்.  அந்த பக்தி நிலைமைக்கு நம்மளை உசத்திண்டாத்தான், ஓ, இவர் என்ன சொல்ல வர்றார்ன்னே புரியும்.  நாம பக்தில ஆரம்பப் படிக்கட்டுல நின்னுகிட்டு, கடைசி படிக்கட்டுல நின்னுகிட்டு இருக்கிற ஆழ்வாரைப் பார்த்து, இந்த மாதிரி எல்லாம் நடக்குமான்னால், நடக்கணும், நடந்திருக்கு.  ஆழ்வாருக்கு நடந்திருக்குங்கிறதைத்தான் உண்மையா எழுதி வச்சிருக்கா.  அப்போ என்ன ஆசைப்படலாம்?  இந்த நிலைக்கு நானும் வருவேனா? அப்படிங்கற அளவுக்கு வேணா நாம பகவானிடத்திலே ப்ரார்த்தித்துக் கொள்ளலாம்.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

    June 11

    ஆழ்வார்கள் செய்தி – பாகம் 4

    முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3

    அடுத்து தொண்டரடிப்பொடியாழ்வார்.  இவர் மார்கழிக் கேட்டையில் திருவண்டங்குடியில் அவதரித்தவர்.  சரி, காத்திண்டிருக்கேன். காத்திண்டிருக்கற நாழியிலே இந்த லோகத்துலே என்ன பண்ணனும்?  பொழுது போக வேண்டாமா?  சமாஸ்ரயணம் பண்ணினுட்டேன்.  மோக்ஷம் போய்டுவேன்னு உறுதி இருக்கு.  அப்போ இருக்கற காலத்துல என்ன பண்ணனும்ன்னு தொண்டரடிப்பொடியாழ்வார் சாதிக்கிறார்.  நாம சங்கீர்த்தனம்தான் ஒரே வழி.  திருமாலைன்னு 45 பாசுரங்கள், திருப்பள்ளியெழுச்சின்னு 10 பாசுரங்கள் பாடினார்.  அதிலே இந்த திருமாலையிலே,

    காவலில் புலனை வைத்துக் * கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து *
    நாவலிட்டுழி தருகின்றோம் * நமன் தமர் தலைகள் மீதே *
    மூவுலகுண்டுமிழ்ந்த * முதல்வ! நின் நாமம் கற்ற *
    ஆவலிப் புடைமை கண்டாய் * அரங்க மா நகருளானே!

    (திருமாலை – 1)

    பகவானுடைய திருநாமங்களே நம்மை இரட்சிக்கும்.  நேத்து வரைக்கும் நான் நாமங்களைச் சொல்லலே.  இன்னைக்கு பகவானுடைய திருநாமங்களைச் சொன்னேன்.  நேத்து வரைக்கும் எமனைக் கண்டு பயந்திருந்தேன்.  இன்னைக்கு திருநாமத்தைச் சொன்னேனோல்லையோ, எமனே இங்க வா, உன் தலைல என் காலை வைக்கணும்னுட்டேன்.  எங்கேர்ந்து இவ்வளவு தைரியம் வந்ததுன்னா, வந்தது.  நேத்து வரைக்கும் சுக்ரீவன் வாலின்னு சொன்னாலே பயந்திண்டிருந்தான்.  இன்னைக்கு இராமனைக் கை சேர்த்த உடனே, வாலியை சண்டைக்கு வான்னு போய் கூப்பிடலையா?  அதேபோலத்தான்.  பெருமாள் பார்த்தார்.  ஓ, நாமங்களைப்பத்தி ஆழ்வீர் ரொம்ப நல்லாச் சொல்றீரே, அப்போ உனக்கு மோட்சம் குடுக்கலாம்ன்னு இருக்கேன், அப்படின்னு பெருமாள் சொன்னார்.  நான் வாங்கிக்கறதாவே இல்லையேனுட்டார் ஆழ்வார். 

    பச்சை மா மலை போல் மேனி * பவளவாய் கமலச் செங்கண் *
    அச்சுதா! அமரர் ஏறே! * ஆயர் தம் கொழுந்தே! என்னும் *
    இச்சுவை தவிர யான் போய் * இந்திர லோகம் ஆளும் *
    அச்சுவை பெறினும் வேண்டேன் * அரங்க மா நகருளானே!

    (திருமாலை – 2)

    நாம சங்கீர்த்தனம் சொல்ற இந்த இன்பத்தை விட்டுட்டு நீ மோட்சமே குடுக்கறதா இருந்தாலும் எனக்குத் தேவையில்லே, என்று அவ்வாழ்வார் சாதிக்கிறார்.

    நமனும் முற்கலனும் பேச * நரகில் நின்றார்கள் கேட்க *
    நரகமே சுவர்க்கம் ஆகும் * நாமங்கள் உடைய நம்பி *
    அவனதூர் அரங்கம் என்னாது * அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர் *
    கவலையுள் படுகின்றார் * என்றதனுக்கே கவல்கின்றேனே!

    (திருமாலை – 12)

    நரகத்தைக்கூட சொர்க்கமாக்குற அளவுக்குத் திருநாமங்கள் படைத்தவன் எம்பெருமான்.  அவன் நாமத்தை ஒருதடவையாவது சொல்லுங்கோ.  சொல்லலே, நரகத்துக்குப் போய் நிற்போம்.  அப்போ எமன் கிட்டக்க வந்து கேட்பர், ஒரு தடவை கீழ வாழறச்சே, நீ நாமத்தைச் சொல்லலியா?  ஏன் என் ஊருக்கு வந்து என்னையும் கஷ்டப்படுத்தி, நீயும் கஷ்டப்படறே?  ஒருதடவை பகவன் நாமத்தைச் சொல்லியிருந்தா அத்தனை பாபங்களும் தொலைஞ்சே போயிருக்குமே?, என்று எமதர்மராஜன் கேட்பன்.  அதனால் இங்கு இருக்கும் போதே பகவானுடைய நாமங்களைச் சொல்லி அவனை ஆஸ்ரயிங்கோள்ன்னு தொண்டரடிப்பொடியாழ்வார் தெரிவித்தார்.  அவ்வாழ்வார் பாடினதே திருவரங்கநாதனை மட்டும்தான்.  திருமாலைல முழுக்கவே அரங்கனுக்குன்னுதான் மொத்த பாசுரங்களையுமே சமர்ப்பிச்சார்.  திருவேங்கடமுடையானை ஒன்பது ஆழ்வார்கள் பாடியிருக்கா.  திருவரங்கநாதனை பத்து ஆழ்வார்கள் பாடியிருக்கா. தொண்டரடிப்பொடியாழ்வார் மட்டும் திருவேங்கடமுடையானைப் பாடாது போய்ட்டார்.  அதனால்தான் திருவரங்கநாதனுக்கு ‘பதின்மர் பாடும் பெருமாள்’ன்னு ஏற்றம்.

    அடுத்து திருப்பாணாழ்வார், கார்த்திகை மாசம், ரோகிணி திருநட்சத்திரத்திலே மிசுளாபுரிங்கற உறையூர் திவ்யதேசத்திலே திருவவதாரம் பண்ணினவர்.  அவர் பத்தே பாசுரம்தான் பாடியிருக்கார்.  அமலனாதிபிரான்ங்கற பத்து பாசுரம்.  திருவரங்கநாதனை திருவடியில் இருந்து திருமுடிவரை ஓரோரு அங்கம் அங்கமாக, அவயவம் அவயமாக அனுபவித்தார்.  ஓரோரு அங்கத்துக்கும் ஓரோரு பாசுரம் பாடிட்டார்.  திருவடியிலேர்ந்து, ’திருக்கமலபாதம் என் கண்ணினுள் வந்து ஒக்கின்றதே’ன்னு ஆரம்பிச்சு, ’நீல மேனி ஐயோ! நிறைகொண்டதென் நெஞ்சினையே’, என்று திருமேனி முழுவதுமாக திருப்பாணாழ்வார் அனுபவித்தார்.  அப்ப அவர் சொன்ன கருத்தென்ன?  ’திருக்கமல பாதம் வந்து’ன்னு சொன்னார்.  ’அரைச்சிவந்த ஆடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே’ன்னு சொன்னர்.  ’அயனைப் படைத்ததோர் எழில் உந்தி’ன்னு பாடினார்.  உதரபந்தத்தைப் பற்றிப் பாடினார்.  இப்படி ஓரொரு அவயவத்தையும் ஏன் பாடினார்ன்னா, அவர் ஒரு செய்தி சொல்றார்.  நம்முடைய இந்திரியங்களெல்லாம் நம்ம வசப்படுத்தனும்.  சுலபத்துல அது வசப்படாது.  அதை வசப்படுத்தறதுக்கு ஒரே வழி, பகவானுடைய திருமேனியில கொண்டு போய் அந்த இந்திரியங்களையெல்லாம் வச்சுடனும்.  வச்சுட்டா அது எங்கேயும் ஓடவே ஓடாது.  அதுக்குத்தான் அவர் அழகே இவ்வளவு தூரம் கொட்டி வச்சிண்டிருக்கார்.  பெருமான் திருமேனி எதுக்கு அழகுன்னா, அவர் நமக்கு சாஸ்திரமெல்லாம் குடுத்து நம்மளைத் திருத்தனும்ன்னு பார்ப்பர்.  ஆனா நாம திருந்தவேயில்லைன்னு வச்சுக்கங்கோ, கடைசியா ஒரு பிரம்மாஸ்திரம் வச்சிருக்கார்.  தன் திருமேனியைக் காட்டி நம்மைத் திருத்திருவராம்.  அதுக்கு மயங்காதவன் யாரும் இருக்க முடியாது.  அப்போ திருப்பாணாழ்வார் நமக்குச் சொன்ன செய்தி, இந்திரியங்கள் அடங்க வேண்டுமென்றால், கண்டபடி திரியக் கூடாதென்றால், அவை அத்தனையும் பகவானுடைய திருமேனியிலே வைத்து விடுங்கோள்.  அவன் திருமேனியை அனுபவிக்க, அனுபவிக்க, அது நம்முடைய சந்தேகங்களையெல்லாம் போக்கிடும்.  ஞானத்தை வளர்க்கும். பக்தியை வளர்க்கும்.  பிரேமத்தை வளர்க்கும்.  கைங்கர்யம் செய்யத் தூண்டும்.  அதனால ஒரே வழி, இந்திரியங்கள் அடங்க, பக்தி பெருக, திருமேனியை சேவியுங்கோள்.  இதை அமலனாதிபிரானாலே திருப்பாணாழ்வார் சொல்லிவிட்டுப் போனார்.

    இனி, கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார்.  இவர் கார்த்திகை மாசம், கார்த்திகை நட்சத்திரத்திலே, திருக்குறையலூர், சீர்காழிக்குப் பக்கத்திலே இருக்கற திவ்யதேசம், அங்கே அவதரித்தவர்.  திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்பிரபந்தங்கள் பாடினார்.  அவை எல்லாமே அர்ச்சாவதார ஏற்றத்துக்காக.  ஆங்காங்கே பெருமாள் சேவை சாதிக்கிறாரோல்லையோ, அந்த திவ்யதேசங்களுக்குப் போங்கோ, பெருமாளை சேவியுங்கோ.  அது இல்லாதவர்களுக்கு உய்வே கிடையாது.  இதைத் தன்னுடைய ஆறு பிரபந்தங்களாலேயும் சொல்றார்.  முதல் பிரபந்தம், பெரிய திருமொழி. அடுத்து, திருக்குறுந்தாண்டகம். அடுத்து, திருவெழுகூற்றிருக்கை. அடுத்து, சிறிய திருமடல், பெரிய திருமடல். கடைசியா, திருநெடுந்தாண்டகம்.  அதுல தன்னுடைய மதம் என்னங்கிறத திருக்குறுந்தாண்டகம் கடைசில தெரிவிக்கிறார்.

    பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர் மனை திரிதந்துண்ணும்
    உண்டியான் * சாபம் தீர்த்த ஒருவன் ஊர் * உலக மேத்தும் *
    கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சி பேர் மல்லை என்று
    மண்டினார் * உய்யல் அல்லால் * மற்றை ஆர்க்குய்யல் ஆமே

    (திருக்குறுந்தாண்டகம் – 19)

    திவ்யதேசங்களிலே உங்களுக்குப் ப்ராவண்யம் இல்லையா, அந்த எம்பெருமானுக்குக் கைங்கர்யம் நீங்க பண்ணலையா, அப்போ எங்கேயோ உழல வேண்டியதுதான், மோக்ஷத்துக்கே போக முடியாதுனுட்டார்.  மற்றை ஆர்க்குய்யல் ஆமே – மிச்சப் பேர்க்கு உய்வு, உஜ்ஜீவனம் கிடையாது.  அர்ச்சாவதாரத்துல மண்டினவனுக்குத்தான் உஜ்ஜீவனம் உண்டு.  திருமங்கையாழ்வாருக்குச் சிறப்பே, அர்ச்சா மாகாத்மியத்தை நமக்குச் சொல்லிக் குடுத்தவர்.  ஏன்னா வைகுண்டநாதனை நாம சேவிக்க முடியுமா?  இங்கேர்ந்து முடியாது. திருப்பாற்கடல்? முடியாது.  விபவா அவதாரம்? இராம, கிருஷ்ணா அவதாரம் பாரதத்திலதான் நடந்தது.  அது என்னைக்கோ, நான் என்னைக்கோ.  அந்தர்யாமி எனக்குள்ளேயே இருக்காரேன்னா, நாம என்ன ஹனுமானா, இப்படிக் கிழிச்சா பெருமானெல்லாம் தெரியறதுக்கு?  அந்த சக்தியெல்லாம் நம்மகிட்டே கிடையாது.  அப்போ நாம கண் கொண்டு யாரை சேவிக்க முடியும்?  அர்ச்சையை மட்டும்தான்.  திவ்யதேசங்கள்தோறும், விக்ரஹ ரூபத்தில எழுந்தருளியிருக்கிற பெருமாளைத்தான் நாம சேவிக்க முடியும்.  அதனால அவனையே பற்றிக் கொள்ளுங்கோள்.  ஆகாயத்தில ஏறி எங்கேயும் மோக்ஷத்தைத் தேடிப் போகாதீங்கோ.  இது எதுக்கு இப்போ?  ’ஏறார் முயல் விட்டு காக்கை பின் போவதே’ன்னு சாதித்தார்.  நல்லா முயல் மாமிசம் கைல கிடைக்கறச்சே, எதுக்கு காக்கா மாமிசத்தைத் தேடிண்டு போறீள்ன்னார்.  நமக்குத் தோணும் இந்த உபந்யாசகருக்கு எப்படி முயல் மாமிசம், காக்கா மாமிசம் பத்தியெல்லாம் தெரிஞ்சதுன்னு நமக்குத் தோணும்.  அடியேன் சொல்ல வரலே.  வியாக்யானத்துலே இருக்கு.  வியாக்யானம் எழுதின பெரியவாச்சான் பிள்ளையும் பிராம்மணோத்தமர்.  அப்போ அவருக்கு எப்படித் தெரியும்ன்னா, திருமங்கையாழ்வாருக்குத் தெரியும்.  ஏன்னா அவர் கள்ளர் குலத்தில பிறந்தவரா இருந்தாரோல்லையோ?  அவர் இது எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிண்டிருந்ததால எழுதிட்டார்.  ஒன்னு, காக்கா மாம்சம் ரொம்ப மட்டம், முயல் மாம்சம் ரொம்ப உசத்தி.  இந்த உசத்தியான முயல் மாம்சம் பூமியில கிடைக்கறது சுலபமா.  ஆனா மட்டமான மாம்சம் ஆகாசத்துல தேடிண்டு போகணும்.  அதனாலே இதோடயே இருங்கோன்னார்.  அதைப் போலத்தான் வைகுண்டம்.  அது எங்கேயோ இருக்கு, யார் தேடிண்டு போறது?  போறன்னிக்குப் பார்த்துப்போம்.  இருக்கறன்னிக்கு அர்ச்சாவதார திவ்யதேசத்தையே பற்ற வேண்டும்ன்னு, இதை திருமங்கையாழ்வார் காட்டிக் குடுத்தார்.

    இப்படி பத்து ஆழ்வார்கள் பத்து செய்தி சொன்னார்கள்.  அடுத்து மதுரகவியாழ்வாரும், ஆண்டாளும்.  மதுரகவிகள் நம்மாழ்வாருடைய சத்சிஷ்யராக இருந்தார்.  கண்ணிநுண்சிறுத்தாம்புங்கிற 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.  இவர் திருக்கோளூரில், சித்திரை மாசத்தில், சித்திரை நட்சத்திரத்தில் திருவவதாரம் பண்ணினார்.  அவர் வெளியிட்ட கருத்தென்னன்னா, எங்க முன்னாடி இருந்த பத்து ஆழ்வார்களும் பகவானை தெய்வம், தெய்வம்ன்னு பாடிட்டுப் போனா.  ஆனா நான் அதை சொல்லப் போறதில்லே.  அப்படின்னு சொன்ன நம்மாழ்வாரே எனக்குத் தெய்வம், என்று தன் கண்ணிநுண்சிறுத்தாம்பிலே தெரிவிக்கிறார்.  ‘தேவு மற்றறியேன் குறுகூர் நம்பி பாவி நின்னிசைப் பாடித் திரிவனே’.  தெய்வம்ன்னா ஆச்சார்யன்தான் தெய்வம்.  ’ஆச்சார்யாது இஹ தேவதாம் சமதிஹாம் அந்யாம்ந அந்யாம்நஹே’.  ஆச்சார்யனை தெய்வமென்றே கொண்டிருக்கிற மிக உயர்ந்த சொல், மதுரகவியாழ்வாருடைய சொல்.  அப்போ மத்த பத்துப் பேரும் ஒரு தட்டுன்னா, இவ்வாழ்வார் தனித்தட்டு.  அவர்களைக் காட்டிலும் மிக உயர்ந்த தராசுத் தட்டிலே மதுரகவியாழ்வார் இருந்தார்.  ஏன்னா, இதைச் சரம பர்வ நிஷ்டைன்னு சொல்லுவர்கள்.  ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்.  பகவானைப் பற்றினாக்கூட நடக்குமோ, நடக்காதோ.  ஆச்சார்யனைப் பற்றினா கண்டிப்பா வேலை நடந்து போய்டும்.  இதைத்தான் மதுரகவியாழ்வார் நமக்குச் சொல்லிக் குடுத்தார்.

    கடைசியாக ஆண்டாள்.

    அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய் * ஆழ்வார்கள்
    தன் செயலை * விஞ்சி நிற்கும் தன்மையளாய்ப் * பிஞ்சாய்ப்
    பழுத்தாளை ஆண்டாளைப் * பத்தியுடன் நாளும் *
    வழுத்தாய் மனமே! மகிழ்ந்து

    (உபதேசரத்தின மாலை – 24)

    ஆடிமாசம், பூர நட்சத்திரத்திலே, ஸ்ரீவில்லிபுத்தூரிலே பெரியாழ்வாருக்குத் திருக்குமாரத்தியாக அவதரித்தாள்.  அவள் பாமாலை பாடிக் குடுத்தபடியால், பாடவல்ல நாச்சியார்.  பூமாலை சூடிக்குடுத்தபடியால் சூடிக்குடுத்த நாச்சியார்.  சூடிக்குடுத்த நாச்சியார் பாடினது, திருப்பாவை, நாச்சியார் திருமொழின்னு இரண்டு பிரபந்தங்கள்.  திருப்பாவை 30 பாசுரங்கள். நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள்.  இதுனால ஆண்டாள் தெரிவித்தது என்னன்னா, ஒரு தனிச்சிறப்பான செய்தி.  பாகவத சமாகமம்.  அடியார்களோடே கூடி இருக்க வேண்டும்.  எல்லாரும் ஒத்த மனது படைத்தவர்களாக இருக்க வேண்டும்.  ஒன்னா பகவானை அனுபவிக்க வேண்டும்.  ஆனந்தமாக, திருப்தியாக இருக்க வேண்டும்.  சோகமே கூடாது.  பகவானே நமக்கு ஒரே உய்வு என்று இருக்க வேண்டும், என்று அடியார்களுடைய சேர்க்கை.  பாகவதர்களோடே கூடி இருக்கறது, பாகவதர்கள்தான் சிறப்புப் பெற்றவர்கள்ங்கிறதை ஆண்டாள் தெரிவித்தார்.  இதைக் ’கூடியிருந்து குளிர்ந்து’ என்று தன்னுடைய ஒரே வார்த்தையாலே இந்தப் பதினொரு பேர் சொன்னதையும் சேர்த்துச் சொல்லிட்டுப் போய்ட்டாள் ஆண்டாள்.

    கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! * உன் தன்னைப்
          பாடிப் பறை கொண்டு யாம் பெறு சம்மானம் *
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச் *
          சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே *
    பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம் *
          ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற் சோறு *
    மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் *
          கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    (திருப்பாவை – 27)

    அப்போ பாகவதர்கள் கூடணும்.  அதனாலதான் முதல் பாசுரத்திலேர்ந்தே ஒவ்வொருத்தரையா கூப்பிடறா அவள்.  தான் மட்டும் போய் கண்ணனை அனுபவிக்கறதுக்கு ஆசைப்படலே.  அப்போ இது தனி அனுபவம் அல்ல, துணையாகக் கூட்டமாக இருக்க வேண்டும்.  பாகவதர்களுடைய பிரபாவம், பகவானைக் காட்டிலும் அவனுடைய தொண்டர்களுக்கு உண்டான ஏற்றம், இதைத் தெளிவுபடுத்தி இருப்பதே ஆண்டாள் நமக்குச் செய்த முக்கியமான உபதேசம்.

    ஆழ்வார்களுடைய திருவடிகளுக்குப் பல்லாண்டு.

    (முற்றும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் செய்தி உபந்நியாசம் – Boston)

    ஆழ்வார்கள் செய்தி – பாகம் 3

    முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2

    அடுத்து திருமழிசை ஆழ்வார்.  அவர் அவதாரம் பண்ணினது, தையில் மகத் திங்குதித்தான் வாழியே.  திருமழிசைங்கிற திவ்யதேசத்திலே தை மாசத்தில் மக நட்சத்திரத்தில் திருவவதாரம் பண்ணினார்.  பகவானுடைய சக்கரத்தின் அம்சமாகவே திருமழிசை ஆழ்வார் அவதரித்தார்.  ரொம்ப முக்கியமான ஆழ்வார்.  நம்புவியில் நாலாயிரத்து எழுநூறு இருந்தான் வாழியே.  இந்த லோகத்திலே நாலாயிரத்து எழுநூறு வருஷம் இருந்தார் அவர்.  திருமழிசையாழ்வார் இரண்டு திவ்யப்ரபந்தங்கள் பாடினார்.  ஒன்று நான்முகன் திருவந்தாதின்னு பேர்.  மற்றொன்று திருச்சந்த விருத்தம்ன்னு பேர்.  இதிலே முதல் ஆயிரத்திலே ஒன்று சேர்க்கப்பட்டது.  இயற்பாவில் மற்றொன்று சேர்க்கப்பட்டது.  அவ்வாழ்வாருக்கு ’உறையிலிடாதவர்’ன்னு பேர்.  அப்படின்னா என்னதுன்னா, கத்தியை உறையில போடவே மாட்டார்.  திருமழிசையாழ்வாரை எங்கயுமே கத்தியோடயோ, வேலோடயோ நாம சேவிச்சதே கிடையாது.  திருமங்கையாழ்வார்தான் கையில வேல் வச்சிண்டு இருப்பர்.  போனாப் போறது குலசேகரர், ராஜா, எங்கையாவது வேணா அவர் வச்சிண்டு இருக்கலாமே தவிர, மத்த யாரும், திருமழிசையாழ்வாரெல்லாம் வேல் வச்சிண்டதில்லையே, கத்தி வச்சிண்டதில்லையே?  பின்ன ஏன் உறையிலிடாதவர்ன்னு சொல்றோம்ன்னா, அவருடைய கத்தி அவர் நாக்குதான்.  நாக்கை உறையில அவர் வைக்கவே மாட்டார்.  அவர் பேசுற வேகத்துக்கு யார் கேட்டாலும் பயந்தே போய்டுவா.  அவர் தெரிவிக்கிறார்.

    கல்லாதவர் * இலங்கை கட்டழித்த * காகுத்தன்
    அல்லால் * ஒரு தெய்வம் யான் இலேன் * பொல்லாத
    தேவரை * தேவர் அல்லாரை * திருவில்லாத்
    தேவரைத் * தேறேல்மின் தேவு.

    (நான்முகன் திருவந்தாதி – 53)

    இது திருமழிசையாழ்வாருடைய பாசுரம்.  கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் – இலங்கையைக் கொன்று முடித்த இராமன்.  அந்த இராமனைத் தவிர ஒருதெய்வம் எனக்கு மற்றொருத்தன் கிடையாது.  அந்த இராமனைத்தான் தெய்வமாகப் பற்றினேன்.  ஆக இராமனையே தெய்வமாகப் பற்றுங்கோ.  ஆனால் வெறும் இராமனை இல்லேன்னுட்டார் அவர்.  பின்னே?  சீதா ராமர்களைத்தான் பற்ற வேண்டும்.  வெறும் இராமனைப் பற்றினா கொன்னுண்டே இருப்பர்.  இதுதான் அவருக்குத் தெரியுமே தவிர, பக்கத்திலே சீதை இருக்கறப்போதானே அவன் எப்போதும் இரட்சித்துக் குடுக்கிறான்.  பொல்லாத தேவரை தேவர் அல்லாரை திருவில்லாத் தேவரை தேறேல்மின் தேவு – மத்த பேரெல்லாம் பொல்லாத தேவர்களாம்.  யார் பொல்லாத தேவர்ன்னா, யாருக்கு ஸ்ரீதேவி நாச்சியார் சம்பந்தம் இல்லையோ, அவா எல்லாம் பொல்லாத தேவர்கள்.  யார் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு தன் திருமார்பிலே இடம் குடுத்தானோ அவன்தான் நல்ல தெய்வம்.  மற்ற தேவரெல்லாம் தேவரே அல்லர்கள்.  உங்களுக்கு திரு வேணுமா, திருவுடைய தேவரைப் பற்றுங்கோ.  அப்போ ஸ்ரீமந் நாராயணனே பரதேவதை அப்படிங்கிறத திருமழிசை ஆழ்வார் ரொம்ப ஸ்பஷ்டமா தெரிவித்தார்.

    ஏன்னா முதல் மூன்று ஆழ்வார்களும் ஓர் கருத்தைச் சொன்னார்கள்.  நாராயணனைப் பற்ற வேண்டும் அப்படின்னு அவா சொல்லிடுவா.  ஆனா நாலாவது ஆழ்வார் அதையே கொஞ்சம் மாத்திப்பர்.  எங்க பூர்வர்கள் முன் ஆழ்வார்களெல்லாம் ரொம்ப சாதுக்கள்.  ஆனா நான் அப்படியெல்லாம் இல்லே.  எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும் என்று திருமழிசை ஆழ்வார் சொல்றச்சேவே, அவாள்லாம் சொன்னது என்ன?  நாராயணனைப் பற்றுங்கோள்ன்னுட்டு.  இப்போ நான் சொல்லட்டுமா, அவனைத் தவிர இன்னொருத்தனைப் பற்றக்கூடாது.  இது இவர் பேசினது இப்போ.  அதுக்கு ‘அந்வயம்’, இதுக்கு ’வியதிரேகம்’ன்னு பேர்.  இப்போ ஒரு ஊருக்குப் போறேன். ‘இந்த ஸ்வாமி நல்ல வித்வான்’, அப்படின்னா அவர் நல்ல வித்வான்னுதான் அர்த்தம் கிடைக்கும்.  ஆனாலும் கொஞ்சம் சந்தேகம் இருக்கும்.  அதே இப்படி கேட்டா, ‘இவரைத் தவிர இந்த ஊரிலே வித்வானே இல்லே’.  இப்படிச் சொன்னா இவர் நிச்சயமான வித்வான்னு ஆயிடுச்சோல்லையோ?  அதனாலதான் நாராயணனே பரதேவதைன்னு முதல் மூன்று ஆழ்வார்களும் சொல்ல, அதே ஸ்ரீமந் நாராயணனைத் தவிர மற்றொருத்தர் தேவதையே அல்ல, என்பதைத் திருமழிசையாழ்வார் சாதித்துப் போனார்.

    ஐந்தாவது ஆழ்வார் நம்மாழ்வார்நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர்.  நம்மாழ்வார் நான்கு திவ்யப்ரபந்தங்கள் பாடினார்.  திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.  ரிக், யஜுஸ், அதர்வம், சாமம், இந்த நான்கு வேதங்களுக்குச் சமமாக இந்த நான்கு பிரபந்தங்களைப் பாடியிருக்கார் ஆழ்வார்.  அதிலே முதல் பிரபந்தம் திருவிருத்தம்.  திருவிருத்தத்தின் கடைசியிலே யாரை நாம் பற்ற வேண்டும்?  நாம் பகவானைப் பற்றப் போகிறோமே, நமக்குள் உயர்வு தாழ்வுகள் உண்டா?  இன்னான் பகவானைப் பற்றலாம், இன்னான் பற்றக்கூடாதுன்னு ஏதேனும் உண்டா?  நமக்குள் ஏற்றத்தாழ்வுகளை பகவான் பார்க்கிறாரா?  இதைப் போல பல சந்தேகம் வருமோல்லையோ?  ஐந்தாவது ஆழ்வாரான இவர் முதல் நான்கு ஆழ்வார்கள் சொன்னதையும் சேர்த்துண்டார்.  பகவானையே பற்றுங்கோ, மற்ற பேரைப் பற்றாதீங்கோ.  பற்றப் போறச்சே உங்க மனசிலே ஒரு சந்தேகம் வந்துடலாம்.  நாம தாழ்ந்தவனாச்சே, பணத்தாலேயோ, படிப்பாலயோ, அழகாலயோ, குலத்தாலயோ, எதுனால வேணா நாம தாழ்ந்தவர்களா இருக்கலாம்.  இப்படி ஆச்சேன்னு ஒரு சந்தேகம் வந்தால், கவலைப்பட வேண்டாம்.  நான் ஒரு பெருமானைக் கைகாட்டிக் குடுக்கிறேன். அவர் எல்லாரையும் சமமாகத்தான் ஏற்றுக் கொள்ளுகிறார்.  இதை நான் கண்ட நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள், என்று திருவிருத்தத்திலே சாதிக்கிறார்.

    ஈனச் சொல்லாயினும் ஆக * எறி திரை வையம் முற்றும் *
    ஏனத்துருவாய் இடந்த பிரான் * இருங்கற்பகம் சேர்
    வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும் *
    ஞானப் பிரானை அல்லால் இல்லை * நான் கண்ட நல்லதுவே

    (திருவிருத்தம் – 99)

    ஈனச் சொல்லாயினுமாக – என் வார்த்தை ஏழை சொல்.  ஏழை சொல் அம்பலம் ஏறாதுன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.  இதைச் சொல்றவர் நம்மாழ்வர்.  பரம பக்தாக்ரேசர்.  ஆழ்வார்களுக்குள்ளே தலைவர்.  ஆழ்வார்ன்னா பகவானே உருகிப் போய்டறார்.  அப்படி இருக்கறவர் சொல்லிக்கிறார், நான் ஏழை.  என்கிட்ட நயா பைசா கிடையாது.  இது சொல்லே ரொம்ப தாழ்ந்த சொல்.  அம்பலம் ஏறுமான்னு எனக்குத் தெரியாது.  ஆனா எனக்குத் தெரிஞ்ச நல்லதை நான் சொல்லிடுறேன்.  எடுத்துக்குங்கோ, எடுத்துக்காது போங்கோ.  ஈனச் சொல் – தாழ்ந்த சொல்.  என்ன சொல்லப் போறீர்ன்னு நாம கேட்டோம்.  எரிதிரை வையம் முற்றும் ஏனத் திருவாய் இடந்த பிரான் – வராகப் பெருமான்தான் எல்லாராலயும் பற்றப்பட வேண்டியவன்.  இன்னைக்கும் பூ வராகனாகா, லக்ஷ்மி வராகனாக, பூமிப்பிராட்டியோடே வராகனாக எத்தனை திவ்ய தேசங்களிலே பெருமான் சேவை சாதிக்கிறார்.  அந்த எம்பெருமான்தான் உங்களாலே பற்றத் தகுந்தவன்.  இதுதான் எனக்குத் தெரிஞ்ச நல்லது.  நீங்க இல்லே, அவன் இல்லே, யாருமே இல்லே.  இருங்கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்ற எல்லா எவர்க்கும் – வானத்தில இருக்கட்டும், பூமியில இருக்கட்டும், எந்த லோகத்தில வேணா யார் வேணா இருக்கட்டும்.  ஞானப்பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லது – அவ்வெம்பெருமான் திருவடிகளைத்தான் பற்ற வேண்டும்ன்னு சாதிக்கிறார்.

    இதை ஸ்ரீபராசர பட்டர் ரொம்ப வேடிக்கையா தெரிவிப்பராம்.  ஏன் வராகப் பெருமானைப் பற்ற வேண்டும்?  அவரைப் பற்றினாத்தான் நமக்கு உஜ்ஜீவனம் கிட்டும்.  ஏன் மத்ஸ்ய மூர்த்தியைப் பற்றினா என்ன?  முதல் அவதாரம், மீன் அவதாரம் எடுத்தாரே பகவான்.  அவரைப் பற்றினா என்ன?  அவரே கரையேற முடியாது.  அப்போ சம்சார சமுத்திரல அழுந்திக் கிடக்கிற நம்மளையா கரையேற்றப் போறார்?  அவர் கரையேறினால்ல நம்மளைக் கரையேத்தறதுக்கு?  வேண்டாம் விட்டுடுங்கோ.  கூர்மவாதாரத்தைப் பற்றலாம்ன்னா, அவர் முதுகிலேயே மந்தர மலை அழுத்திண்டு இருக்கு.  ஏற்கனவே சம்சார மலை என்னை அழுத்திண்டு இருக்கு.  அவர் வெளில வர மாட்டார், விட்டுடுங்கோ.  சரி, நரசிம்ஹாவதாரத்தைப் பற்றலாமான்னா, பற்றலாம்.  பிரகலாதனுக்கு ரொம்ப ஆப்தர்தான்.  ஆனா கழுத்துக்கு மேல ஒரு மாதிரி இருக்கார், கழுத்துக்கு கீழ ஒரு மாதிரி இருக்கார்.  சந்தேகமா இருக்கு.  அதனால அதை வேண்டாம்னுட்டார்.  சரி, வாமன மூர்த்தியைப் பற்றலாமோன்னா, சின்னக் காலைக் காட்டிட்டு, பெரிய காலால அளந்துட்டாரோல்லையோ?  ஆரம்பமே வஞ்சனை.  ஏமாத்தத்துலேயே தொடங்கிட்டார்.  வாமனனை விட்டுடுங்கோனுட்டார்.  சரி, கண்ணனைப் பற்றலாமான்னு கேட்டா, பற்றலாம்.  கைப்பிடித்த ஆண்டாளே கண்ணனைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கா.  நமக்குப் பயமாயிருக்கு.  ‘மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே’.  நன்னா பொய் சொல்லக்கூடியவர்.  சாமர்த்தியமே இல்லாமல் குட்டு வெளிப்பட்டுற அளவுக்குப் பொய் சொல்லக் கூடியவர்.  இதெல்லாம் ஆண்டாள் கண்ணனைப்பத்திச் சொல்லியிருக்கா.  பொய் சொல்றவரை நம்பி நாம என்ன பண்ண முடியும் இப்போ?  கீதைன்னு சொன்னா, எல்லாரும் கேட்டு நடங்கோன்னுவா.  கண்ணன் நடந்தபடி நடங்கோன்னு ஒருத்தருமே சொல்லமாட்டா.  கீதைல சொல்லியிருக்கறபடி நடங்கோன்னு சொல்லுவாளே தவிர, அவர் எப்படி நடந்தாரோ அப்படி நாம நடக்க முடியுமா?  இராமனாயிருந்ததுன்னா இராமன் நடந்தபடி நடக்கலாம். கண்ணன்?  சொன்னபடி நடக்கலாம்.  அதனாலே இப்படி ஒருத்தொருத்தருக்கும் ஓரோரு கஷ்டம் இருக்கறச்சே, பூமிப்பிராட்டியை பிரளய சமுத்திரத்துக்குள்ளே மறைத்து வைக்க, அப்போது பூமியை இடர்ந்தெடுத்த வள்ளலே வராகப் பெருமான்தானே?  எப்போ அந்த சமுத்திரத்துலேர்ந்து பூமியை எடுத்துட்டாரோ, அதேபோல சம்சார சாகரத்திலேர்ந்து நம்மையும் இடர்ந்தெடுத்து விடுவார்.  ஆகையால் நான் கண்ட நல்லது வராகப் பெருமானைப் பற்றுவதே.

    வராக அவதாரத்துக்கும் நம்மாழ்வாருக்கும் நெருங்கின தொடர்பு.  அவனைத்தான் ஞானப்பிரான்னு இந்தப் பாசுரத்தாலே கொண்டாடுகிறார்.  இன்னைக்கும் ஆழ்வார் திருநகரிக்குப் போனீள்ன்னா, ஞானப்பிரான் சன்னிதி தனி சன்னிதி.  பொலிந்த நின்ன பிரான் சன்னிதி, பக்கத்துல திருப்புளி ஆழ்வார், திருப்புளியாழ்வார் அடியிலே நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கார்.  இந்தப் பக்கத்துலே பிரதக்ஷணம் வரச்சே ஞானப்பிரான் சன்னிதி.  அந்த திவ்யதேசத்து ஞானப்பிரானுக்குத்தான் இந்தப் பாசுரத்தையே பாடினார் ஆழ்வார்.

    அடுத்தது குலசேகர ஆழ்வார், ஆறாவது ஆழ்வார்.  மாசி புனர்வசுவில் திருவஞ்சிக்களத்தில் அவதரித்தவர்.  பெருமாள் திருமொழிங்கற 105 பாசுரங்கோளேடே கூடின, அற்புதப் பிரபந்தம் பாடியுள்ளார்.  அவ்வாழ்வார் ஒரு முக்கியக் கருத்தை, திருவித்துவக்கோடுங்கிற மலையாள திவ்யதேசம், அதைப்பத்தி வெளிப்படுத்துகிறார்.  எங்க முதல் ஆழ்வார்கள் சரணாகதி பண்ணுன்னு சொன்னா.  அதைப் பண்ணுவது ரொம்ப சுலபம்ன்னும் சொன்னா.  திருமழிசையாழ்வார், அதைப் பண்ணவேண்டியது பரதேவதையான ஸ்ரீமந் நாராயணனிடத்திலதான்னு சொன்னார்.  அதே எம்பெருமான்தான் வராகப் பெருமான், அவனைப் பற்றுங்கோள்ன்னு எங்க ஆழ்வார் சொன்னார்.  ஆனா மக்கள் மனசில ஒரு சந்தேகம் இருந்துண்டிருக்கே.  சரணாகதி பண்ணிட்டா மறுநாள்லேர்ந்து சுகமா இருக்கலாமா?  கஷ்டங்களெல்லாம் போய்டுமா?  பணமாக் கொட்டுமா?  வீடு கிடைக்குமா?  ஆரோக்யக்கேடு போய்டுமா?  கல்யாணமாயிடுமா?  இதெல்லாம் கேட்கறாளேன்னார்.  ஆழ்வார் சொன்னார், இன்னும் கஷ்டம் வரும்.  அதை வேணா நான் சொல்லலாமே தவிர, இருக்கற கஷ்டமெல்லாம் போய்டும்ன்னு நான் சொல்ல மாட்டேன்.  ஏன் ஆழ்வீர் இப்படி சொல்றீர்ன்னா, இப்போ சரணாகதி பண்ணிட்ட பிற்பாடு, ஒருவேளை இந்த வாழ்க்கை ரொம்ப சுகமா அமைஞ்சுடுத்துன்னு வச்சுக்கங்கோ, அப்புறம் அடுத்த ஜன்மம், மோக்ஷம் போவமான்னு தெரியாது.  இவனுக்கு கஷ்டப்படறனால்லதான் வைகுண்டத்துக்கு போய்டலாம்ன்னு தோன்றது.  சம்சாரம் மட்டும் ரொம்ப சுகமா இருந்துடுத்துன்னு வச்சுக்கங்கோ, அப்போ அடுத்த பிறவி ஒன்னு எடுத்து, இந்த சுகத்தை நாம் ஏன் இன்னும் அனுபவிக்கக்கூடாது என்று தேவையற்ற ஒரு ஆசை வந்துடும்.  பெருமாள் இந்தக் கஷ்டத்துல வைச்சிண்டிருக்கச்சேயே, இன்னொரு ஜென்மா எடுக்கலாமான்னு இவன் பார்க்கறானே, அவர் இன்னும் சுகத்துல வேற இவனை இன்னும் வைச்சுட்டார்ன்னு வச்சுக்கங்கோ, வைகுண்டத்தைப் பற்றி இவன் நினைக்கவே மாட்டான்.  அதைத்தான் குலசேகர ஆழ்வார் சாதிக்கிறார்.  நீ கஷ்டத்தைக் குடு. நீ கஷ்டத்தைக் குடுத்தாலும் நான் அதை நல்லதாகத்தான் ஏற்றுக் கொள்ளுவேன்.  ஏன்னா இந்த கஷ்டத்தை நீ குடுக்கறதே, நீ என்னை பக்குவப்படுத்தறேங்கறது எனக்குத் தெரியும்.  எத்தனை இடத்தில நான் கஷ்டத்தை அனுபவிச்சேன், ஆனா அது நல்லதாத்தானே இருக்கு.  எங்கேங்கறதத்தான் இந்தப் பத்துப் பாசுரத்துல சொல்றார்.

    தருதுயரம் தடாயேல் * உன் சரண் அல்லால் சரண் இல்லை *
    விரை குழுவு மலர்ப் பொழில் சூழ் * விற்றுவக்கோட்டம்மானே *
    அரிசினத்தால் ஈன்ற தாய் * அகற்றிடினும் * மற்றவள் தன்
    அருள் நினைந்தே அழும் குழவி * அதுவே போன்றிருந்தேனே

    (பெருமாள் திருமொழி - 5.1)

    ஒரு குழந்தையை ஒரு அம்மா ஒரே கோபத்தால முதுகில ஓங்கி வைச்சு, உன்னை வெட்டிடுறேன் பார், நீ விஷமம் பண்றியாங்கறா.  உடனே நீ எப்ப என்னைக் கோவிச்சிண்டியோ, எப்ப என்னை வெட்டிவேன்னு சொன்னியோ, இனிமே நீ எனக்கு அம்மா இல்லே. நாளைலேர்ந்து பக்கத்து வீட்டுக்காரிதான் எனக்கு அம்மா.  அப்படின்னு அந்தக் குழந்தை எங்கேயாவது போகுமா?  அவளைப் பார்த்து ஒரே கோவமா சத்தம் போட்டு ஒருதரம் அழுதுட்டு, நாலடி கிட்டக்க வந்து அவ காலையே கட்டிண்டு அழும்.  இந்தக் குழுந்தைக்கு அதுதான் வழக்கமே தவிர, அதுக்கு அந்த காலை விட்டு இன்னொரு கால் தெரியவே தெரியாது.  ஆழ்வார் தெரிவிக்கிறார், அதைப்போல பகவன்னு நீ என்ன வேணா துன்பத்தைக் குடு.  நான் அறிந்தது உன் திருவடிகளைத்தான்.  இதைத்தவிர இன்னொரு இடத்தில என் புத்தி போய்டவே போய்டாது, என்று இது ‘அநந்யகதித்வம்’, வேறு கதி எனக்குக் கிடையாது.  புகல் உன் திருவடியே தவிர வேறு எனக்குக் கிடையாது.  பாதுகை, பெருமாள் எத்தனை உதைச்சாலும் அவர் திருவடிகளையே கெட்டியா பிடிச்சிண்டிருக்கு.  பாதுகா சஹஸ்ரத்திலே தேசிகன் தெரிவித்தார், பாருங்க்கோ அந்த பாதுகை எத்தனை உதைச்சாலும் கெட்டியா பிடிச்சிண்டிருக்கதாலே, அதுக்கு பட்டாபிஷேகமே ஆயிடும்.  நாம தெரிஞ்சுக்க வேண்டியது அதுதான் இப்போ.  கடைசில பாதுகைக்கு பட்டாபிஷேகம் ஆச்சு.  பரதனுக்கும் ஆகலே, இராமனுக்கும் ஆகலே.  ரெண்டு பேருக்கும் இல்லே, பாதுகை பட்டாபிஷேகம் பண்ணிட்டுப் போய்டுத்தேன்னா, எதனாலெ இப்போ,  இராமன் திருவடிகளை விடாம பற்றிக் கிடந்ததோ இல்லையோ?  நாமும் பெருமான் திருவடிகளைப் பிடிச்சிருந்தோம்ன்னா, எத்தனை துன்பம் அவர் குடுத்தாலும் அதைத் துன்பமா ஏத்துக்கக்கூடாது.  நம்மளைப் பரீட்சை பண்ணி, இன்னும் பக்குவமாக்குகிறார்ன்னுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இதை எங்கே கண்டோம்ன்னா,

    வாளால் அறுத்துச் சுடினும் * மருத்துவன்பால் *
    மாளாத காதல் * நோயாளன் போல் மாயத்தால் *
    மீளாத் துயர் தரினும் * விற்றுவக்கோட்டம்மா * நீ
    ஆளா உனதருளே * பார்ப்பன் அடியேனே

    (பெருமாள் திருமொழி - 5.4)

    இந்தப் பாசுரம்தான் குலசேகர ஆழ்வாருடைய செய்தி.  வைத்தியன் வந்து நமக்கு ஒரு இடத்தில ரணம் வந்துடுச்சுன்னா, அதை வந்து வெட்டி, அறுவை சிகிச்சை பண்றாரோல்லையோ?  அவர் வெட்டறாரா இல்லையா?  எனக்கு வலிக்கப் போறதா இல்லையா?  வலி குடுக்கறாரேங்கறதுக்காக நான் கோவிச்சுக்கறதே இல்லையே.  பதிலா நான் சம்பாவனை பண்றேன்.  எங்கயாவது யாரனும் லட்ச ரூபாய் குடுத்து, அடியேனை அவசியம் நீங்க வெட்டணும்ன்னு கேள்விப்பட்டிருக்கீளா?  எங்கயுமில்லை.  வைத்தியர் ஒருத்தரிடத்திலதான் இது நடக்கும்.  அப்பன்னா என்ன அர்த்தம்?  இப்ப எனக்கு ஒரு வலி ஏற்பட்டாலும் நாளைக்கு வலி தீர்ந்து போய்டும்ங்கிற நம்பிக்கைதானே?  பகவன்னு நீ என்ன கஷ்டத்தை எனக்குக் குடுத்தாலும், இது இன்னைக்கு இருக்கிற வலி, நாளைக்கு அந்த வலி போய்டும்ன்னு எனக்குத் தெரியும்.  ஆகையால் நீ என்ன துன்பம் குடுத்தாலும் அது கண்டு நான் கலங்குவதாக இல்லை.  திருவடிகளைப் பிடித்தது பிடித்ததே.  அப்படித்தான் சரணாகதன், ப்ரபன்னன் இருக்க வேண்டும் என்பதை குலசேகராழ்வார் தன்னுடைய பெருமாள் திருமொழியாலே சாதித்தார்.

    அடுத்து ஏழாவது ஆழ்வார் பெரியாழ்வார்.  பெரியாழ்வார் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆனி ஸ்வாதியில் அவதரித்தவர்.  சம்ப்ரதாயத்திலேயே மிக முக்கியமான சமாஸ்ரயண வைபவத்தை பெரியாழ்வார்தான் பெரியாழ்வார் திருமொழியிலே தெரிவிக்கிறார்.  குலசேகரர் சரணாகதி பண்ணிண்டவன் விட்டுட்டு போகக்கூடாதுன்னு சொன்னார், வாஸ்தவம்தான்.  கேட்டு பயந்து போய்டாதீங்கோன்னார் பெரியாழ்வார்.  ஓ, பெருமாள் கஷ்டமே குடுத்துட்டு இருப்பார் போலருக்குன்னு நீங்க பயந்துட வேண்டாம்.  உண்டு, எத்தனையோ நன்மைகளைச் செய்கிறான்.  நாம ஒன்னும் பெரிசா கஷ்டப்பட வேண்டிய தேவையே இல்லே.  பகவத் சமாஸ்ரயணம் பண்ணிக் கொள்ள வேண்டும்.  அவனுடைய சங்கத்தையும், சக்கரத்தையும் நம் மேல் தோளிலே ஒத்திக் கொள்ள வேண்டும்.  அதைப் பண்ணிக் கொண்டு, என்னைக்கு பகவானுடைய புருவம் நெறிக்கப் போறது, என்னிக்கு அவர் ஜாடை காட்டப் போறார், அப்ப நான் மோக்ஷம் போய்டலாம், அப்படின்னு காத்துண்டே இருக்கணுமாம்.  வேற ஒண்ணும் நீ கஷ்டப்பட வேண்டிய தேவையே இல்லே.

    சென்னி ஓங்கு * தண் திருவேங்கடம் உடையாய்! * உலகு
    தன்னை வாழ நின்ற நம்பீ! * தாமோதரா! சதிரா! *
    என்னையும் என் உடைமையையும் * உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு*
    நின் அருளே புரிந்திருந்தேன் * இனி என் திருக் குறிப்பே

    (பெரியாழ்வார் திருமொழி - 44.1)

    பெரியாழ்வாருடைய திருமொழியில் ரொம்ப ஆச்சர்யமான பாசுரம்.  சென்னியோங்கு தன் திருவேங்கடம் உடையாய் – திருவேங்கடமுடையானே, ஸ்ரீநிவாசப் பெருமானே, உலகத்தனையும் வாழ்வதற்காக வந்து நிற்கும் நம்பி, உன்னிடத்தில ஒன்னு நான் பண்ணினுட்டேன்.  இனிமே எனக்குக் கவலையே இல்லே.  என்னையும் என் உடைமையையும் – என்னைன்னு சொன்னது ஜீவாத்மாவை.  என் உடைமைன்னு சொன்னது சரீரத்தையும், மத்த பேரையும்.  உன் சக்கரப்பொறி ஒத்திக் கொண்டு – சக்கரப்பொறி ஒத்தி கொள்வதுதான் சமாஸ்ரயணம் பண்ணி வைத்தல்.  என்னத்துக்காக ஸ்ரீவைஷ்ணவர்கள் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கணும், சமாஸ்ரயணம் பண்ணிக்கணும்ன்னு சொல்றோம்?  ஒரு பெண்ணைப் பார்த்தால் கல்யாணம் ஆனவள்ன்னு எப்படிச் சொல்றோம்?  மெட்டி இருக்கா, திருமாங்கல்யம் இருக்கா, குங்குமம் இருக்கா, வளையல் இருக்கா?  அடையாளம் சொல்லிடறோமோல்லையோ?  அப்படின்னா கல்யாணம் ஆனவள்ன்னு அர்த்தம்.  பரமாத்மா ஸ்ரீமந் நாராயணனுக்கும், இந்த ஜீவாத்மாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்குன்னு அடையாளம் வேண்டாமா?  ஒரு பதிவிரதைக்கு, சுமங்கலிக்கு எப்படி அடையாளம் இருக்கிறதோ, அதைப்போல ஓரொரு ஜீவாத்மாவுக்கும் அடையாளம் இருக்கான்னா, சங்க சக்கர லாஞ்சனம்தான் அடையாளம்.  இந்த அடையாளத்தை ஒத்தினுட்டு, நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – எப்ப தேவரீர் அனுக்கிரகிக்கப் போகிறீர்ன்னு அடியேன் காத்திருக்கேன்.  எப்ப புருவத்தை நெறிக்கப் போகிறீர்?  எப்ப கண் ஜாடை காட்டி என்னை மோக்ஷத்துக்கு அழைச்சுட்டுப் போகப்போறீர்?  ரொம்ப சுலபமா கேட்டுட்டார் ஆழ்வார்.  அவ்வளவுதானான்னா, அவ்வளவுதான்.  பெருமாளை நான் எப்போ பற்றியாச்சோ, ரொம்ப பெரியவரை நான் பற்றியிருக்கேன்.  அவர் கண்ஜாடை காட்டினா மோட்சம் கிடைச்சுடப் போறது.  அப்போ பெரியாழ்வார் சொன்னது, சமாஸ்ரயணம் பண்ணிண்டு, பெருமாள் எப்போ மோட்சம் குடுப்பார்ன்னு ஜாடைக்குக் காத்திண்டு இருங்கோ.  அவர் அனுமதிக்குக் காத்திண்டிருங்கோ. சுலபத்துல கிடைச்சுரும்.  இது பெரியாழ்வார் சொன்ன செய்தி.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் செய்தி உபந்நியாசம் – Boston)

    ஆழ்வார்கள் செய்தி – பாகம் 2

    முந்தைய பாகம் – பாகம் 1

    முதல் ஆழ்வார் பொய்கையாழ்வார்.  பொய்கையாழ்வாருக்கு சிறப்பே அவர்தான் முதலில் பூலோகத்தில் அவதரித்தார்.  அவருக்குப் பிற்பாடுதான் இத்தனை ஆழ்வார்களும் பிறந்து, இவ்வளவு பிரபந்தங்களையும் பாடியுள்ளார்கள்.  பொய்கையாழ்வார் ’முதல் திருவந்தாதி’ன்னு பாடினார்.  100 பாசுரங்கள் கொண்டது.  முதலாழ்வார்கள் மூவரும், திருக்கோவலூரில் மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரம இடைகழியில் சந்தித்தார்கள்.  பெருமாளே வந்து சேவை சாதித்தார்.  அதிலிருந்துதான் பிரபந்தம் பாட ஆரம்பித்தார்.

    வையம் தகளியா * வார் கடலே நெய் ஆக *
    வெய்ய கதிரோன் விளக்காக * செய்ய
    சுடர் ஆழியான் அடிக்கே * சூட்டினேன் சொல் மாலை *
    இடர் ஆழி நீங்குகவே என்று.

    (முதல் திருவந்தாதி – 1)

    நம்முடைய இடர்கள் அத்தனையும் நீங்க வேண்டும், அதற்குத்தான் நான் இந்த நூறு பாசுரங்களைப் பாடுகிறேன், என்று தெரிவித்தார்.  வெண்பா பாசுரங்கள்.  பொய்கையாழ்வார் ஒரு பாசுரத்தாலே தெரிவிக்கிறார்.

    பெயரும் கருங்கடலே நோக்குமாறு * ஒண் பூ
    உயரும் * கதிரவனே நோக்கும் * உயிரும்
    தருமனையே நோக்கும் * ஒண் தாமரையாள் கேள்வன் *
    ஒருவனையே நோக்கும் உணர்வு

    (முதல் திருவந்தாதி – 67)

    ஆத்மா, தன் ஞானம் மலர்வதற்காக ஸ்ரீமன் நாரயணனையே எதிர்பார்க்கிறான்.  இதுதான் முதல் கருத்து நாம பார்க்க வேண்டியது.  இந்த ஜீவாத்மாவுக்கு அநேக கால அவித்யா, அஞ்ஞானம்.  அது மூடிண்டு இருப்பதால்தான் நாம் சம்சாரத்திலே உழலுகிறோம்.  நாம் எதுக்கு சம்சாரத்திலே உழலணும்?  ஏன் ஸ்ரீவைகுண்டத்திலே இல்லே?  கர்மம் காரணம்.  அநேக காலமாய் கர்மங்கள், பாப புண்ணியங்களைச் சேர்த்து வைத்துள்ளோம்.  அது திரும்பத் திரும்ப நம்மை சம்சாரத்திலே பிறக்க வைக்கிறது.  பிறக்கும்போது திரும்ப பாப புண்ணியங்களைச் சேமிக்கிறோம்.  அடுத்த ஜன்மம் பிறந்து விட்ட இடத்தில் கர்மங்களைத் தொடருகிறோம்.  இது எங்கேயவாது ஒரு இடத்தில் உடைஞ்சாத்தானே, இந்த சுற்றுச்சுழல்லே இருந்து நாம வெளியே வரணுமோல்லையோ?  என்ன பண்ணலாம்?  யாரை எதிர்பார்க்கலாம்ன்னா, ஜீவாத்மா தேகத்தைக் காட்டிலும் வேறுபட்டவன்ங்கிற ஞானம் வரணும்.  அவனுக்கு சம்சாரம் துக்கமயம், மோக்ஷம்தான் சுகமயம்ங்கிற ஞானம் ஏற்படவேண்டும்.  எப்போ தேக விலக்ஷணன் ஜீவாத்மாவோ, பகவானுக்கு சேஷன் ஜீவாத்மாங்கிற ஞானம் ஏற்பட வேண்டும்.  இந்த ஞானத்துக்கெல்லாம் அவர் யாரை எதிர்பார்ப்பர்?  யாராவது ஒருத்தர் சொல்லிக் குடுக்க வேண்டாமா?  அப்போதானே ஞானமே பிறக்கும்?  யாரைங்கிறதைத்தான் இந்தப் பாசுரத்தாலே பொய்கையாழ்வார் சாதிக்கிறார்.  பெயரும் கருங்கடலே நோக்குமாறு – எந்த நதி ஓடினாலும் அது கடைசில சமுத்திரத்தைத்தான் நோக்கும்.  கருங்கடலே நோக்கும் ஆறு, ஆறு கடலைத்தான் எதிர்பார்க்கும்.  உயிரும் தருமனையே நோக்கும் – ஓர் உடலைவிட்டு உயிர் பிரிந்ததுன்னால், அந்த உயிர் என்ன தரும காரியங்கள் பண்ணியிருக்கு, பாபமா, புண்ணியமா?  இதை அலசிப்பார்த்து முடிவு குடுக்க வேண்டியது யார்?  எமதர்மராஜனைத்தான் அது எதிர்பார்க்கும்.  ஒன்பூ உயரும் கதிரவனையே நோக்கும் – ஒரு தாமரை கீழ இருக்கறது மலரணும்ன்னால் அது யாரை எதிர்பார்க்கும்?   சூரியனைத்தான் எதிர்பார்க்கும்.  சூரியன் எங்க இருக்கார், தாமரை எங்க இருக்கு?  இங்க ஏதோ ஒரு குளத்தில இருக்கு தாமரை.  எங்கேயோ இருக்கார் சூரியன்.  ஆனா அந்த சூரியன் உதித்தால்தான் இந்தத் தாமரை மலருகிறது.  அந்த சூரியன் அஸ்தமிச்சுட்டார்ன்னா தாமரை கூம்பிப் போகிறது.  இதை ஒருத்தன் பார்த்துகிட்டே இருந்தான்.  அவனுக்கு வேடிக்கையா தோணித்து.  இது என்னத்துக்கு எங்கேயோ இருக்கிற சூரியனைப் போய் இந்தத் தாமரை எதிர்பார்க்கணும்?  நான் வேற பண்றேன்னு, ஒரு சட்டி பானையை கொண்டு வந்தான். நிறைய தணலை அதுக்குள்ள போட்டான்.  எப்படியும் சூடு இருந்தாத்தானே தாமரை மலருகிறது?  அதுனால நான் கொண்டுபோய் இந்த பானை சூட்டை பக்கத்துலே வைக்கிறேன். எங்கேயோ இருக்கிற சூரியனுடைய ஒளிக்கே இது மலருகிறதே?  நான் வைத்த சூட்டுக்கு இது மலரட்டும்ன்னு பக்கத்துலே கொண்டு போய் வைத்தால், மலராதது மட்டுமல்ல உலர்ந்தும் போகும்.  இப்போ மூன்று பார்த்திருக்கிறோம்.  நதியாக இருந்தால் கடலையே எதிர்பார்க்கும், உயிராக இருந்தால் எமதர்மராஜனையே எதிர்பார்க்கும், தாமரையாக இருந்தால் சூரியனையெ எதிர்பார்க்கும்.  இந்த மூன்றும் எவ்வாறு உண்மையோ, அதேபோல ஜீவாத்மா, ஜீவாத்மாவினுடைய ஞானமாகிற தாமரை மலர்வதற்கு ஸ்ரீமந் நாராயணனான சூரியனையே எதிர்பார்க்க வேண்டும்.  வேற வழி கிடையாது என்பதைத்தான் ஆழ்வார் இந்த பாசுரத்திலே தெரிவிக்கிறார்.  அப்போ நம்முடைய ஞானம் மலரணும்ன்னுதான் பகவான்கிட்ட பிரார்த்திக்கணும்.

    ஆத்மா தன்னுடைய ஞானம் மலர்வதற்காக ஸ்ரீமந் நாராயணனையே எதிர்பார்க்கும், உண்மை.  ஆனால் நாம அதில் ஒன்றே ஒன்றை மட்டும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

    செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் * செங்கமலம்
    அந்தரம் சேர் * வெங்கதிரோற்கல்லால் அலராவால் *
    வெந்துயர் வீட்டாவிடினும் * விற்றுவக்கோட்டம்மா * உன்
    அந்தமில் சீர்க்கல்லால் * அகம் குழைய மாட்டேனே

    (பெருமாள் திருமொழி – 5.6)

    இது மற்றொரு ஆழ்வாரினுடைய (குலசேகரர்) பாசுரம். கீழ ஒருத்தனைப் பற்றி பார்த்தோமே, தாமரை மலருவதற்காக சட்டியிலே நெருப்பைக் கொண்டு போய் வைத்தான் என்று, இது ஒரு பக்கம்.  அப்போ சூரியன் மலர்த்துவார்ன்னு தெரியறதோல்லையோ?  தாமரையை குளத்துலேர்ந்து எடுத்து நிலத்தில போட்டுடுங்கோ.  அதுக்கப்புறம் அந்த சூரியனுடைய ஒளி தாமரை பேர்ல பட்டா என்ன ஆகும்?  அவர் மலர்த்தமாட்டார், உலர்த்திடுவர்.  சூரியன்தான் மலர்த்தனும், ஆனா ஜலத்திலே இருந்தாத்தான் மலர்த்துவர்.  ரெண்டுமே முக்கியம். ஜலத்தைவிட்டு தாமரை வெளிலே வந்துட்டாலும் சூரியன் மலர்த்தமாட்டார்.  ஜலத்திலே இருக்கறப்பவே சட்டியிலே நெருப்பைக் கொண்டுபோய் வைத்தாலும், அது மலராது, உலர்ந்துதான் போகும்.  அதேபோல பகவான்தான் ஜீவாத்மாவுக்கு ஞானவிகாசத்தை ஏற்படுத்தனும்.  ஆனா அந்த தண்ணீர் சம்பந்தம் எதுன்னா, ஆச்சார்ய சம்பந்தம்.  ஆச்சார்யன்கிற குளத்திலே ஜீவாத்மாங்கிற தாமரை இருக்கிறவரைதான் பகவான்ங்கிற சூரியன் அதை மலர்த்துவர்.  ஆச்சார்ய சம்பந்தத்திலேர்ந்து இந்த ஆத்மா வெளியே வந்துடுத்துன்னால், அப்போ அதே பகவான் மலர்த்தமாட்டார், உலர்த்திடுறார்.  அதனாலே ஆச்சார்ய சம்பந்தமாகிற குளத்திலே நாம எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும்.  இது முதல் திருவந்தாதியினுடைய கருத்து.

    பொய்கையாழ்வாருக்கு அடுத்தாப்போலே பூதத்தாழ்வார்.  அவர் சொல்றார், எங்க பெரியவர் பொய்கையாழ்வார் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போய்ட்டார். ஆத்மா ஞான விகாசத்துக்கு பகவானைத்தான் எதிர்பார்க்கணும்ன்னு சொல்லிட்டார்.  சாதகப்பறவையெல்லாம் ஆகாசத்தையே பார்த்திண்டு இருக்கும்.  மழை மேகத்திலேர்ந்து ஜலம் கொட்டினா சாப்பிடும். அப்படி இல்லையா, பக்கத்திலே இருக்கிற ஜலத்தையெல்லாம் அது தீண்டாது.  மழை பொழியலே, உயிரையே விட்டுடும்.  இதைப்போலத்தான், தம் ப்ரப்பன்ன ஜன சாதகாம்புதம்ன்னு தெரிவிக்கிறார்கள்.  அதேபோலத்தான் சரணாகதன் ப்ரபன்னன், பகவானை மட்டும்தான் எதிர்பார்ப்பர்.  அவர் அனுகிரகத்தைப் பொழியலே, இன்னொருத்தரை அவன் எதிர்பார்க்கவே மாட்டான். உயிரையே விட்டுடுவன் ப்ரபன்னன்.  அதைத்தான் இப்போ பூதத்தாழ்வார் தெரிவிக்கிறார்.  முதல் ஆழ்வார், பகவானைத்தான் ஞானவிகாசத்துக்கு எதிர்பார்க்கணும்ன்னு சொல்லிட்டுப் போய்ட்டார்.  அவ்வெம்பெருமான்தான் பெரிய மேகத்தைப்போலே. குணம் திகழ்க் கொண்டல்ன்னு சொல்லுகிறோமோல்லையோ?  மேகவண்னன், முகில்வண்ணன் என்று மேகத்தைப் போல கருத்திருக்கிறவர்.  மேகத்தைப் போல ஔதார்யம், வாரிக் குடுக்கக்கூடிய தன்மை படைத்தவர். வள்ளல் தன்மை படைத்தவர்.  அவ்வெம்பெருமானிடத்திலே நாம என்ன செய்ய வேண்டும்?  எப்படிச் செய்தால் பகவான் அனுகிரகிச்சுடறார், அப்படிங்கிறதை இரண்டாவது ஆழ்வார் ஒரு பாசுரத்தாலே தெரிவிக்கிறார்.

    தனக்கடிமை பட்டது * தான் அறியானேலும் *
    மனத்தடைய வைப்பதாம் மாலை * வனத் திடரை
    ஏரியாம் வண்ணம் * இயற்றும் இது வல்லால் *
    மாரி யார் பெய்கிற்பார் மற்று

    (இரண்டாம் திருவந்தாதி – 16)

    இது இரண்டாம் திருவந்தாதி பாசுரம்.  தனக்கடிமை பட்டது தான் அறியான் ஏனும், தனக்கு – பகவானுக்கு. அடிமை பட்டது – ஜீவாத்மாக்கள் அடிமைப்பட்டிருப்பது.  தான் அறியான் ஏனும் – அதை ஜீவாத்மா புரிஞ்சுக்கவே இல்லைன்னு வச்சுப்போம், அப்போ விட்டுடலாமா, இழந்து போய்ட வேண்டியதுதானான்னா, வேண்டாம் வேண்டாம், அதுவரைக்கும் நான் சொல்றதைச் செய்யுங்கோ, மனத்தடைய வைப்பதாம் மாலை – மால், திருமால்.  அவனை உங்கள் மனசில வையுங்கோள்.  இந்த அடிமை, கைங்கர்யம் பண்ணனும், அவன் யாரு, நீங்க யாரு, தெரியறதெல்லாம் அப்புறம் பார்த்துப்போம்.  முதல்ல திருமாலைக் கொண்டு வந்து உங்கள் மனசில வச்சுக்கங்கோ.  அப்படின்னா என்ன அர்த்தம்?  பகைமை பாராட்ட வேண்டாம்ன்னு அர்த்தம்.  அவன்கிட்ட நீங்க பக்தனா இருக்கறது, கைங்கர்யம் பண்றதெல்லாம், நாளைக்கு.  அதுக்கு முதல்ல ஒரு வேலை செய்யுங்கோ, பெருமான்னா துவேஷித்து திரும்பிண்டு போறீர்களோல்லையோ, அது வேண்டாம்.  மனத்தடைய வைப்பதாம் மாலை, மனசில கொண்டு போய் திருமாலை வைங்கோ.  வைச்சுட்டு நீங்க பாட்டுக்கு காத்திண்டிருங்கோ.  என்னைக்கு எது நடக்குமோ அன்னைக்கு அது நடக்கும்ங்கிறார்.

    மழை பொழியும் போது ஜலத்தை சேமிக்கணும்ன்னால், குளம் வெட்டணும்.  குளம் வெட்டி வைத்திருந்தால்தான் மழை பொழியும்போது சேமிக்க முடியும்.  ஒருத்தன் என்ன பண்ணினான், கிடுகிடுன்னு ஒரு குளத்தை வெட்டினான்.  வெட்டி முடிச்சுட்டு ஆகாசத்தைப் பார்த்து, நான் குளம் வெட்டியாச்சு, நீ மழை கொட்டலாம்ன்னான்.  அதெல்லாம் கொட்டாது.  நான் குளம் வெட்டி வச்சிருக்கறதால மேகம் மழை பொழியுமா என்ன?  நான் குளம் வெட்டி வச்சிக்கணும், மேகம் என்னைக்கு மழை பொழியுமோ, அன்னைக்குப் பொழியும்.  ஆனா குளம் வெட்டாமயே விட்டுட்டா மழை பொழியறப்போ சேமிக்க முடியாது.  குளம் வெட்டணும், வெட்டினதுக்காக மழை பொழியாது, ஆனா மழை பொழியறச்சே சேமிக்கணும்ன்னா வெட்டித்தான் ஆகணும்.  இது இப்படித்தான்.  அதே போல மனத்தடைய வைப்பதாம் மாலை, பகவானே நீயே சரணம்ன்னு சொல்லிடு, சரணாகதி பண்ணிடு.  பண்ணிட்ட பிற்பாடு காத்துண்டிரு.  சரணகதி பண்ணிட்டு உடனே அவன்கிட்ட போய் ‘எப்போ மோக்ஷம் குடுக்கறே’ அப்படின்னு கேட்டா, தரணும்ங்கிற அவசியம் அவனுக்கில்லே.  இவன் சரணாகதி பண்ணிட்டு காத்திண்டிருக்க வேண்டியதுதான்.  அப்போ ஒருத்தர் கேட்டார், ‘ஸ்வாமி, அடியேன் சரணாகதி பண்ணினதுக்காக அவர் குடுக்கப் போறதில்லையோல்லையோ?  அப்படின்னா நான் பண்ணாமயே விட்டுடறேன்’னார்.  விட்டுட்டா அவர் என்னைக்கு குடுக்கறாரோ அப்போ அதை ஏத்துக்கற மனப்பக்குவமே வராது.  இது குளம் வெட்டினாப்பலதான் இது.

    வனத்திடரை ஏறியாம் வண்னம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிப்பார் மற்று.  ஆக நான் பகவானை உள்ளத்திலே வைக்க வேண்டும்.  சரணம்ன்னு சொல்ல வேண்டும்.  சொல்லிவிட்டு காத்திருக்க வேண்டும்.  நிர்பந்தப்படுத்தறதுக்கு முடியாது.  நான் செஞ்சதுக்காக பகவான் குடுக்கலே.  அவன் கருணை அடியாகக் குடுக்கிறானே தவிர, நான் ஏதோ செய்தேன்கிறதுக்காக பகவான் குடுத்துரலே.  இதை இரண்டாவது ஆழ்வார் தன்னுடைய இரண்டாம் திருவந்தாதியிலே சாதித்தார்.

    அடுத்த ஆழ்வார் பேயாழ்வார்.  மயிலாப்பூரிலே திருவவதாரம் பண்ணினவர்.  அவர் மூன்றாம் திருவந்தாதி பாடினார்.  அவ்வாழ்வார் சொன்னார், சரணாகதி பண்ணனும்ன்னு எங்க பெரியவர் இப்பதானே சொன்னார்.  முதல் ஆழ்வார் ஞான விகாசத்துக்கு பகவானை எதிர்பார்ப்போம்ன்னார்.  அடுத்த ஆழ்வார் சரணாகதி பண்ணிவிட்டு காத்திருன்னு சொன்னார்.  தானே பெருமான் உதாரண், குடுப்பன்னு சொல்லிவிட்டுப் போனார்.  நான் சொல்றேன் கேட்டுக்கங்கோ, அது பண்றது ரொம்ப சுலபம்.  முன் நாட்களிலே எல்லாம் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம்ன்னு ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் பண்ணிண்டு இருந்தா.  ஆயிரமாயிரம் ஆண்டுகள் தபஸ் பண்ணனும்.  இப்படியெல்லாம் ரிஷிகள் கஷ்டப்பட்டு பண்ணிண்டிருந்தாளோல்லையோ, வேண்டவே வேண்டாம்.  மூன்றாம் திருவந்தாதியிலே பேயாழ்வார் வழி சொல்றார்.  நமக்கு கஷ்டமே இல்லாத வகையில் பெருமாளை சுலபமா அடைஞ்சுடலாம், ஸ்வாராதத்துவம்ன்னு பேர்.  பகவானை ஆராதிப்பது வெகு சுலபம்.  ’அரியனவன் ஆரதானைக்கென்று’ன்னு திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரம்.  பகவான் ஆராதனம் பண்ணுவதற்கு கஷ்டமானவரே அல்ல.  ரொம்ப சுலபமாகப் பண்ணிவிடலாம்.  அதை இந்த ஆழ்வார் சொல்லுகிறார்.

    பொருப்பிடையே நின்றும் * புனல் குளித்தும் * ஐந்து
    நெருப்பிடையே * நிற்கவும் நீர் வேண்டா * விருப்புடைய
    வெஃகாவே சேர்ந்தானை * மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால் *
    அஃகாவே தீவினைகள் ஆய்ந்து

    (மூன்றாம் திருவந்தாதி – 76)

    பொருப்பிடையே நின்று – மலைக்கு மேல் நின்று நீங்க தபஸ் பண்ண வேண்டிய தேவை இல்லே.  புனல் குளித்து – அடிக்கடி தீர்த்தமாடி, தீர்த்தமாடி, சமுத்திரத்துக்கு நடுவிலே தபஸ் பண்ணவேண்டிய தேவையும் இல்லே.  ஐந்து நெருப்பிடையே நீர் நிற்கவும் வேண்டா – நெருப்புக்கு நடுவிலே நின்னுண்டு கோரமான தபஸ் பண்ணவேண்டிய தேவையும் இல்லே.  இப்போ இதெல்லாம் ரிஷிகள் ஏற்கனவே பலகாலம் பண்ணியிருக்கா.  பின்ன ஒன்றுமே பண்ண வேண்டாம்ன்னா நாங்க எப்படித்தான் மோக்ஷம் போறதுன்னு ஆழ்வாரைக் கேட்டோம்.  அப்போ சொன்னார், விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை - எம்பெருமானோ தான் ஆசையோடே திருவெஃகா திவ்யதேசத்திலே வந்து சயனித்துக் கொண்டு இருக்கிறார்.  எதுக்கு இப்படி பண்ணியிருக்கார்ன்னா, நீங்க இனிமே எந்த தபஸ்ஸும் பண்ண வேண்டாம்.  உயர்ந்த தபஸ்ஸான நியாஸமான சரணாகதியை என்னிடத்திலே அனுஷ்டியுங்கோள்.  அதுவும் உங்களுக்கு கஷ்டமா இருக்குமா?  மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால் – நல்ல புஷ்பங்களைக் கொண்டு வந்து என் திருவடிகளிலே போட்டுட்டு, அஞ்சலி, கையைக் கூப்புங்கோ போறும்.  அஃகாவே தீவினைகள் ஆய்ந்து – அடுத்த நிமிஷம் தீவினைகள் எதுவும் உங்ககிட்ட வரவே வராது.  இந்தப் பாசுரம் நேரே சரம ஸ்லோகத்தினுடைய தமிழ் மொழிபெயர்ப்புன்ன் வச்சுனுடலாம்.

    ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
    அகம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஸ்யாமி | மாசுச:

    இது கண்ணன் கீதையில சொன்ன சரம ஸ்லோகம்.  எல்லா தர்மங்களையும் விடு.  என்னையே சரணமாகப் பற்று.  நான் உன்னை சகலவிதமான பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.  சோகப்படாதே.  இது சரம ஸ்லோகம்.  இது அப்படியே இந்த பாசுரத்தில் இருக்கு பாருங்கோ.  பொருப்பிடையே நின்னும் புனல் குடித்தும் ஐந்து நெருப்பிடையே நீர் நிற்கவும் வேண்டா – ஸர்வதர்மான் பரித்யஜ்ய; திருவெஃகா எம்பெருமான் – மாம்; மாமேகம் ஸரணம் வ்ரஜ – விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூய் கைதொழுதால்; ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஸ்யாமி – அஃகாதே தீவினைகள் ஆய்ந்து.

    இதனால்தான் ஆழ்வார்கள் அவதரித்ததே சமஸ்கிருத வேதாந்தத்தை தமிழ்படுத்தி சுலபமா குடுக்கறதுக்காக.  புஷ்பங்களைக் கொண்டுபோய் போட்டு, கைகூப்புவது என்ன கஷ்டமான காரியமா?  சுலபமான காரியம்தானே. ஆனா ஆழ்வார் அதுமட்டும் சொல்லிடலே, மெய்ம்மலர்ன்னு சொல்றார்.  அதென்ன மெய் மலர்?  மலர்களிலே மெய்யான மலர், பொய்யான மலர்ன்னு இருக்கா என்ன?  ஒருவேளை காகிதப்பூ போடாதேன்னு ஆழ்வார் சொல்றாரா?  நிஜப்பூ வேணும்ன்னு சொல்றாரான்னா, அப்படி அபிப்ராயம் அல்ல.  இந்த புஷ்ப கைங்கர்யம் பண்ணிட்டு, இதுக்கு பதில் நீ என்ன எனக்குக் குடுப்பேன்னு கேட்காத மலர்.  அது ரொம்ப முக்கியம்.  நான் போய் ஒரு கைங்கர்யம் பண்ணிட்டு, இதுக்குப் பதில் நீ என்ன எனக்குக் குடுப்பேன்னு கேட்டால் அது தூய மலர் அல்ல, அது அழுக்குப் படிந்த மலர்.  அப்படி இல்லாமல் மெய்யான மலர்களைத் தூவி, கை தொழுதால் – கீழ கிடக்கிற கைகளை தூக்கி இப்ப்டி நாம கூப்பணும்.  அஞ்சலி (விபீஷண சரணாகதியில் பார்க்க, 1, 2). அஞ்சலி பரமா முத்திரா தேவப் ப்ரசாதிநின்னு சொல்லுவர்கள்.  இது பரமமான முத்திரை.  இதுக்கு மேலே பகவானுக்கு நாம செய்யக்கூடியது ஒன்றுமே இல்லே.  ஒரு இடம் பார்ப்போம்.

    மஹாபாரதப்போர் நடந்துண்டிருக்கு.  அஸ்திரங்கள் வரிசையா வந்துண்டிருக்கு.  முன்னாடி கீதாசார்யன், பார்த்தசாரதி, தேரோட்டி கண்ணன் உட்கார்ந்துண்டு எல்லாரையும் இரட்சித்துக் கொண்டு இருக்கிறார்.  வரிசையா கர்ணன், பீஷ்மர், துரோணர் எல்லாரும் அஸ்திரங்களை விடுகிறார்கள்.  கண்ணன்தான் முன்னாடி உட்கார்ந்துண்டு எல்லாத்தையும் இரட்சித்துக் குடுத்துண்டிருந்தார்.  அவன் நாகாஸ்திரம் விட்டா, இவர் அதுக்கு கருடாஸ்திரம் விடுறார்.  வருணாஸ்திரம் விட்டா, இவர் அதுக்கு அக்னியாஸ்திரம் விடறார்.  நடந்துண்டு இருக்கு. நாராயணாஸ்திரம் வருது எதிர்ப்பக்கத்திலே இருந்து.  அர்ஜுனனுக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.  ஓ, நாராயாணஸ்திரம் வருதே, நம்மளை என்ன பண்ணிடுமோ, கொன்னுடுமோன்னு பயந்தான்.  பயந்துட்டு கண்ணன்கிட்டே இதுக்கு பிரத்யஸ்திரத்தை நான் எங்க போய்த் தேடணும், சொல்லுன்னு கேட்டான்.  கண்ணன் தலைல கை வச்சுனுட்டார்,  ‘உனக்குப் போய் எழுநூறு ஸ்லோகம் கீதை நான் சொன்னேன் பார்.  ஆரம்பத்திலே இவ்வளவு பெரிய கீதை சொல்லிட்டு, என் அஸ்திரம் வரும்போது எது பிரத்யஸ்திரம்ன்னு நீ யோசிக்கிறியே, எனக்குப் பிரதியிருந்தாலன்னோ என் அஸ்திரத்துக்குப் பிரதியிருக்க?  எனக்கும் பிரதி கிடையாது, என் அஸ்திரத்துக்கும் பிரதி கிடையாது.  ஒன்று செய், உன் தேர்லேர்ந்து இறங்கு, கவசத்தைக் கழட்டு, காண்டீபத்தைக் கீழ வை, கைகூப்பிக் கொண்டு நில்,  அப்பதான் என் அஸ்திரம் ஒன்றும் பண்ணாமல் போகும்’ன்னார்.  அஸ்திரம் வந்தது, ஒரு சுத்து பிரதட்ஷணம் பண்ணிட்டு அர்ஜுனனை ஒன்றுமே பண்ணாம போய்டுத்து.  அப்போ நாராயணாஸ்திரத்தைக் கூட உருக்கிடறோதோல்லையோ, அதனாலதான் அதுக்கு அஞ்சலின்னு பேர்.  அதனாலதான் அஞ்சலிதான் நம்மகிட்ட இருக்கிற ஒரே பிரத்யஸ்திரம்.  பகவான் நிக்ரகம்ங்கிற அஸ்திரத்தைத் தொடுக்க வந்தால், நாம அதை எப்படி சமாளிக்கிறதுன்னா, அஞ்சலிதான்.  கையைக் கூப்பினுட்டோம்ன்னா அவர் நிக்ரகிக்கிறதே கிடையாது, என்பது அந்த இடத்திலே சூஷ்மம்.  அதனாலதான் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் இதைக் காட்டிக் குடுத்துப் போனார்.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் செய்தி உபந்நியாசம் – Boston)

    June 10

    ஆழ்வார்கள் செய்தி

    ஆழ்வார்கள் அவதாரத்துக்கு ஏது பிரயோஜனம்ன்னால், அளவிலடங்காமல் இருக்கக்கூடிய வேதத்தை, புரியாமல் இருக்கக்கூடிய வேதத்தை, சம்ஸ்கிருதத்தில் இருக்கக்கூடிய வேதத்தை, அளவுக்குட்ப்படுத்தி, புரிகிறாப்போலே, தமிழ் பாஷையில் பாடுவதற்காக ஆழ்வார்கள் அவதரித்தார்கள்.  இது அவர்களுடைய அவதாரப் பிரயோஜனம்.  இதைச் சொல்றதுக்கு ஒரு ஆழ்வார் போறாதா?  ஏன் பதின்மர் அவதரிக்க வேண்டும்?  அப்போ பத்துப் பேரும் வெவ்வேறு கருத்துக்கள் சொன்னார்களா?  அல்லது அனைவரும் ஒரே கருத்துடையவர்களா? என்கிற சந்தேகம் வரும்.  ஆழ்வார்களைப்பற்றி ஒரு கொண்டாட்டம் உண்டு.  ‘பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்’, என்று சொல்லுகிறோம்.  அதாவது இவா பத்துப்பேருக்கும் சேர்ந்து குரல் ஒன்று, கருத்து ஒன்று, உடல் மட்டும்தான் பத்து.  சிலசில விஷயங்கள் ஒவ்வொரு ஆழ்வார்களாலும் வெளியிடப்படுகிறது.  இன்ன ஆழ்வார், இன்ன விஷயத்தை நமக்குச் சொல்லுகிறார், என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.  எனவே இந்த பன்னிரெண்டு ஆழ்வார்களிலும், என்னென்ன கருத்தை யார் யார் வெளியிட்டார்கள் என்று பார்ப்போம்.  இதைச் சொல்லுவதினால், இந்த ஆழ்வார் சொன்னதை அந்த ஆழ்வார் சொல்லவில்லை என்பதில்லை.  எல்லா ஆழ்வார்களும் எல்லா கருத்தையும் உடையவர்கள்தான்.  ஆனால் அந்தந்த ஆழ்வார் எதை முக்கியமாகச் சொல்லியிருக்கார்ங்கிறதுக்காக பார்க்கிறோமே தவிர, இப்போ சயனத் திருக்கோலத்துல ஒரு திவ்யதேசத்துல சேவிக்கிறோம், இருந்த திருக்கோலத்தில ஒரு திவ்யதேசத்துல சேவிக்கிறோம், நின்ற திருக்கோலத்துல ஒரு திவ்யதேசத்துல சேவிக்கிறோம். அப்படின்னா அந்தப் பெருமாளுக்கு நிற்கவே தெரியாது, உட்காரவே தெரியாது, இல்ல சயனிச்சுக்கவே தெரியாதுன்னு அர்த்தமா?  எல்லாப் பெருமாளும் எல்லாம் அறிந்தவர்கள்தான்.  நமக்கு ஒரு ஆசைக்காக, ஒரு அனுபவத்துக்காக அப்படிச் சொல்லுவர்கள்.  அதேபோல ஆழ்வார்களிலே இன்னென்னார் இன்னென்ன கருத்தைச் சொல்லியிருக்கார்ன்னு பார்ப்போம்.

    ஆழ்வார்கள் பாசுரத்தைத் தெரிஞ்சுக்கனும்ன்னால், வ்யாக்யான சக்ரவர்த்தியாய், பரம காருணிகர்ன்னு பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை, அந்த ஸ்வாமிதான் நாலாயிரத்துக்கும் வ்யாக்யானம் அனுக்கிரகித்தார்.  அவர் என்ன எழுதி வைத்திருக்கிறாரோ, அதுதான் ஆழ்வார்களுடைய கருத்தாகவே இருக்கும்.  சேங்கனூர் அப்படிங்கிற இடத்துலே அந்த ஸ்வாமி திருவவதாரம் பண்ணியிருக்கிறார்.  சோழதேசத்திலே இருக்கிற திவ்யதேசம்தான்.  அதனாலே அவர் என்ன எழுதியிருக்கார்ங்கிறத முதல்ல பார்ப்போம்.

    “முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்துவத்திலேயே மண்டியிருப்பர்கள். திருமழிசையாழ்வார் அந்தர்யாமித்துவத்திலேயே ஊன்றியிருப்பார்.  நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும், திருமகளாரும் க்ருஷ்ணானுபவத்திலேயே கிடப்பர்கள்.  குலசேகரர் பெருமாளான ஸ்ரீராமச்சந்திரனிடத்திலேயே ஈடுபட்டிருப்பார்.  தொண்டரடிப்பொடிகளும், திருப்பாணாராழ்வாரும் அர்ச்சாவதார விசேஷமான திருவரங்கத்தே ஈடுபட்டிருப்பர்கள்.  திருமங்கையாழ்வார் அர்ச்சா சாமான்யமாய் எல்லா திவ்யதேசத்திலும் ஈடுபட்டிருப்பர்.”

    இது அந்த ஸ்வாமி எழுதி வைத்திருப்பது.  பத்துப்பேருக்கும் எங்கெங்க ஈடுபாடு, எதைப் பிரதானமாகக் கொள்ளுவர்கள்ன்னு சாதிக்கிறார்.

    பரத்துவம் – வைகுண்டநாதனுடைய நிலை.  அந்த எம்பெருமானிடத்திலதான் முதல் மூன்று ஆழ்வார்களுக்குமே ஊற்றம்.  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இவர்கள் பாசுரங்களைப் பார்த்தால் அனேகமா வைகுண்டத்தைப் பற்றியும், வைகுண்டநாதனைப் பற்றியும்தான் பாடுவர்கள்.

    அடுத்து திருமழிசையாழ்வார், நமக்கு உள்ளேயே இருக்கக்கூடிய அந்தர்யாமி எம்பெருமான், அந்த அந்தர்யாமிக்குத்தான் திருமழிசையாழ்வார் பாடுவர்.

    நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும், ஆண்டாளும், கண்ணனுக்குன்னே பிறந்தவர்கள்.  கண்ணனுக்குன்னே வாழ்ந்தவர்கள்.  பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ்லே எல்லாமே கண்ணனைப்பத்திப் பாடிட்டார்.  நம்மாழ்வாருக்கோ, ’கண்ணனல்லால் இல்லை தெய்வம்’, ’நம் கண்ணன் கண் அல்லதில்லையோர் கண்ணே’.   ஆண்டாளோ திருக்கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டதே கண்ணணைத்தான்.  அதனால் இந்த மூன்று பேரும் கிருஷ்ணனுக்குன்னே இருந்தவர்கள்.

    அடுத்து ஆறாவது ஆழ்வார் குலசேகர ஆழ்வார்.  அவர் இராமச்சந்திரனுக்காகவே பிறந்தார், வாழ்ந்தார்.  பிரபந்தத்துக்கே பெருமாள் திருமொழின்னு திருநாமம்.  பெருமாள் – இராமன், பெருமாள் திருமொழி – இராமனைப் பற்றின திருமொழி.  இல்லே, குலசேகரப்பெருமாள், அதனாலே பெருமாள் திருமொழி.  குலசேகர ஆழ்வாருக்கு என்ன பெருமைன்னால், இராமன் சிரிச்சால் இவரும் சிரிப்பர். இராமன் அழுதால் இவரும் அழுவர்.  அது தசரதனுக்கு மகனாகத் தோன்றியது முதலா, தன்னுலகம் புக்க தீரான்னு பெருமாள் திருமொழியில கடைசில தெரிவிக்கிறார்.  அதனால இராமனுக்கு ஒரு ஆபத்துன்னால், தன் சைன்யத்தோட சமுத்திரத்தில இறங்கி, என்னைக்கோ இருந்த இராமனுக்கு ஒத்தாசை பண்ணப்போற அளவுக்கு இராமனிடத்தில் குலசேகரருக்கு ஈடுபாடு.

    திருமங்கையாழ்வார், ஆழ்வார்களிலே கடைசி.  எல்லா திவ்யதேசங்களிலேயும் அவருக்கு ப்ராவண்யம்.  ஒருத்தன் வாழணும், அவன் உஜ்ஜீவனம் அடையனும்ன்னால் திவ்யதேசங்களிலே ப்ராவண்யம் இருந்தால்தான் வாழவே முடியும்.  அதுலே ஆசை இருக்கணும், திவ்யதேசங்ளிலே கைங்கர்யம் பண்ண வேண்டும்.  இதுதான் வாழ்க்கையின் பயன், என்று திருமங்கையாழ்வார் இருந்தார்.  அவர் அதுக்குன்னு 86 திவ்யதேசங்களுக்கு பல்லாண்டு பாடினார்.  நாம மொத்தம் 108 சேவிக்கிறோமே, அதுல 86ஐ திருமங்கையாழ்வார் போய்ப்போய் பாடியிருக்கணும்ன்னால், எத்தனை ஊற்றம் திவ்யதேசங்களிலே அவருக்கு இருந்திருக்கணும்?

    தொண்டரடிப்பொடியாழ்வாரும், திருப்பாணாழ்வாரும், அவர்களுக்குப் பெருமை, திவ்யதேசங்களிலேயே தலைமைப்பீடம், பிரதானமான திவ்யதேசம், வேர்ப்பற்றான திவ்யதேசம், திருவரங்கம். அந்த திருவரங்கத்துக்குன்னே பிறந்தவா இந்த இரண்டு ஆழ்வார்களும்.

    இனி ஒவ்வொரு ஆழ்வாராகப் பார்ப்போம்.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் செய்தி உபந்நியாசம் – Boston)