sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    May 13

    விஸ்வாமித்திரருக்கும் பரசுராமருக்கும் உள்ள தொடர்பு

    ப்ரம்மா, அவருக்குப் பிள்ளை குசர், அவருக்குப் பிள்ளை குசநாபர், அவருக்குப் பிள்ளை காதி.  அந்த காதியோட பிள்ளைதான் விஸ்வாமித்திரர்.  காதிக்கு சத்யவதி அப்படிங்கற பொண்ணு பிறந்தா.  காதியினுடைய மனைவிக்கு நமக்கு பிள்ளை பிறந்தா தேவலைன்னு ஒரு ஆசை இருந்தது.  இவர்களோ ஷத்ரியர்கள், காதி ஷத்ரியர்.  காதியினுடைய பெண்ணுக்கு, சத்யவதிக்கு, ரிசீகர்ன்னு ஒரு பிராமண ரிஷியைக் கல்யாணம் பண்ணி வைச்சா.  சத்யவதிக்கும் குழந்தை பெற வேண்டும்ங்கற ஆசை இருந்தது.  காதியினுடைய மனைவி, தன் மாப்பிள்ளையினிடத்தில போய்ப் பிரார்த்திக்கிறா, அவர் பெரிய ரிஷியாச்சே.  அதனால அவரிடத்தில் பெண்ணை விட்டுப் பிரார்த்திக்கிறாள். 

    சத்யவதி, எனக்கு என் தாய்க்கும் புத்ரபாக்யம் வேணும். அதற்கு ஏதானும் குடும்ன்னு கேட்கறா.  அவர் ஒரு உயர்ந்த சரு, பாயசம், தயார் பண்ணி, இது உனக்கு, இது அவளுக்குன்னு ரெண்டு பேருக்கும் வச்சுட்டார்.  அவர் பிராமணரோல்லையோ?  அதுக்குத் தகுந்த குழந்தை பிறக்கறதுக்கு ஒரு சரு.  மாமியார் சத்ரியர்களோல்லையோ?  அவர்களுக்குத் தகுந்த குழந்தை பிறக்கறதுக்கு மற்றொரு சரு தயார் பண்ணினார்.  ஆனா இந்தப் பெண்ணோட அம்மா வந்தவள், என்னதான் இருந்தாலும் ரிஷி, தன் பிள்ளைதான் உசத்தியாப் பிறக்கணும்ன்னு உயர்ந்த சரு பண்ணி வச்சிருப்பர்.  அதை நாம எடுத்துச் சாப்பிட்டுடுவோம்ன்னு சாப்டுட்டா. 

    இது மாறிப் போன விஷயம் அப்புறம்தான் பெண்ணுக்கே தெரிய வந்து போய் கணவனிடத்தில மன்றாடறா. ’தப்பு நடந்து போச்சு, அடியேனுக்குத் தெரியாது, நான் காரணமில்லே. இப்படி அவள் பண்ணிட்டாள்’ன்னா, ’ஒண்ணும் பண்ண முடியாது பெண்ணே, நான் எப்ப பகவானைப் பிரார்த்திச்சுண்டு எடுத்து வச்சேனோ, அதுக்குத் தகுந்தாப்லதான் குழந்தை பிறக்கும். இனி உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ரொம்ப கோபிஷ்டனாகப் பிறக்கப் போகிறான். அவனுக்கு ஷாத்ரவ தேஜஸ் இருக்கும், ஷத்ரியனுக்குரிய கோபம் இருக்கும்’ன்ன உடனே, அவ நடுங்கிப் போய்ட்டா.  அப்போ விழுந்து பிரார்த்திக்கிறா, ’இல்லேல்லே கூடாது’ன்னு.  ’கூடாதுன்னு நான் தள்ளிப்போட முடியாது.  ஒன்னு வேணா செய்யறேன். அடுத்த குழந்தைக்கு வேணா சொல்றேன்.  அப்படின்னால், இந்தப் பிள்ளைக்கு பிள்ளை பிறக்குமோல்லையோ? அப்போ நான் சொன்ன சாபம் நடந்துதான் தீரும்’ன்னுட்டார் அவர். 

    அதனாலதான் முதல்ல ரிசீகருக்கும், சத்யவதிக்கும், ஜமதக்னி பிறந்தார்.  ஜமதக்னியே அந்தக் கோபத்தோடே இருந்திருக்கணும்.  ஆனா இவர் சாபத்தைக் கொஞ்சம் மாத்திவிட்டாரோல்லையோ?  அதனாலதான் ஜாமதக்னியன் என்று பேர் பெற்ற பரசுராமன் அந்தக் கோபத்தோடே பிறந்தான்.  அதனால பரசுராமர் ரிசீகருக்குப் பேரன், பிராமண வம்சத்திலே பிறந்தவர், ஆறி இருந்திருக்கணும்.  ஆனா அவ்வளவு கோபத்தோடே இருந்தாரேன்னா, சரு ஷத்ரிய சரு.  அதனால அங்க அந்த மாதிரி ஆச்சு.  அதே மாதிரி காதியினுடைய மனைவிக்கு பிறந்த குழந்தைதான் விஸ்வாமித்திரர்.  விஸ்வாமித்திரர் பிறப்பால ஷத்ரியராக இருந்திருந்தாலும் பிராமணரா இருக்கணும்ங்கிற ஆசை அவருக்கு ஏற்பட்டுப் போச்சு பாருங்கோ.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta)

    தசரதன் பதில் - விஸ்வாமித்திரர் இராமனைக் கேட்கும் போது

    நின் மக்களுள் கரிய செம்மல் ஒருத்தனைத் தருதி என்று விஸ்வாமித்திரர் கேட்கறார்.  ’உன் மூத்த பிள்ளை இராமனை என்னோடு அனுப்பி வை’, அப்படின்னு விஸ்வாமித்திரர் கேட்கிறார்.  ஆனா தசரதன் மனசு தாங்காமல் அதெப்படி பன்னிரெண்டு வயசுப் பிள்ளையை உம்மோடு நான் அனுப்பி வைக்க முடியும்?  நீர் ஆனா ராக்ஷசர்களோடு சண்டை போடுவதற்கு கேட்கறீர், சின்ன பிள்ளைகளை யாரானும் சண்டை போடுவதற்கு அனுப்பி வைப்பர்களா, என்று மனசு வருத்தப்பட்டு தசரதன் பேசினான்.  அப்போ விஸ்வாமித்திரர் சொல்றார்,

    அஹந்தே ப்ரதிஜாநாமி ஹதௌதௌ வித்திராக்ஷசௌ
    அஹம்வேத்மி மகாத்மாநம் ராமம் சத்யபராக்ரமம்
    வசிஷ்டோபி மஹாதேஜாஹா ஏசேமே தபஸிஸ்திதாஹா

    அஹம்வேத்மி மகாத்மாநம் ராமம் சத்யபராக்ரமம் – மகாத்மாவான இராமனை நான் அறிவேன். தசரதா, நீ என்னமோ உன் குழந்தைக்கு ஒண்ணும் தெரியாது, பன்னெண்டு வயசுதான் ஆச்சு, சண்டையே போடத்தெரியாதுன்னு பயப்பட்டியோல்லையோ, பயப்படாதே. அஹம்வேத்மி – எனக்கு இராமன் இன்னார்ங்கிறது தெரியும். மகாத்மாநம் – அவனை மகாத்மான்னு தெரியும். ராமம் – உன் பிள்ளை ராமன் மகாத்மான்னு தெரியும்.  சத்யபராக்ரமம் – உண்மையான பராக்ரமம் படைத்தவன் இராமன், அப்படின்னு தசரதனுக்கு விஸ்வாமித்திரர் சொல்லிண்டிருக்கார்.

    தசரதன் பார்த்தார், பெற்றவன் நான்.  ஆனா என் பிள்ளை எப்படிப்பட்டவன்னு இவர் எங்கேர்ந்தோ வந்து நமக்குச் சொல்லிக்கிட்டிருக்காரே இப்போ?  எனக்குத்தானே தெரியும், இவருக்கு எப்படித் தெரியும்ன்னு தசரதன் நினைக்கிறான்.

    ஆச்சார்யர் பெரியவாச்சான்பிள்ளை தெரிவிக்கிறார், இந்த விஸ்வாமித்திரர் தசரதனைப் பார்த்து சொல்றாராம். ‘உனக்குத்தான் உன் பிள்ளையைப்பத்தித் தெரியும்ன்னு நினைச்சுக்காதே தசரதா.  எனக்குத்தான் தெரியும், உனக்குத் தெரியாது’ங்கறார்.  ‘இல்லையே, நாந்தானே பெற்றேன்’ என்று தசரதன் சொல்லுகிறான்.  அப்போ விஸ்வாமித்திரர் சொல்றார், ‘இல்லேல்லே, உனக்கு ஏன் தெரியாதுன்னு சொல்றேன் தெரியுமா?  நீ நினைச்சிண்டிருக்கறது, நீ இருக்கறது, உன் ஆசை, எல்லா நிலையும் வேறே.  நீயோ வில்லும் கையுமாக இருக்கிறாய், நானோ புல்லும் கையுமாக இருக்கிறேன்.  புல் பிடித்த எனக்குத்தான் இராமனைத் தெரியுமே தவிர, வில் பிடித்த உனக்கு இராமனைத் தெரியாது.  நீ ஆசனத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கறே, உனக்கு இராமனைத் தெரியாது.  ஆனா நான் பகவானுடைய ஆசனத்துக்கு கீழ் உட்கார்ந்திருக்கிறேன், எனக்குத்தான் தெரியும்.  உன்னுடைய ஆசையெல்லாம், அர்த்தத்திலேயும் (செல்வம்), காமத்திலேயும் உனக்கு ஆசை.  தர்மத்திலேயும், மோக்ஷத்திலேயும் எனக்கு ஆசை.  தர்ம, மோக்ஷ பராயணனான எனக்கு இராமனைத் தெரியுமே தவிர, அர்த்த, காம பராயணனான உனக்கு இராமனைத் தெரியவே தெரியாது.  இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ தசரதா, இராமனை உன்னுடைய கர்ப்பம்ன்னு நீ நினைச்சிண்டிருக்கே.  ஆனா நான் புரிஞ்சிண்டது, உலகமே இராமனுக்கு கர்ப்பம்னுட்டு.  உன் கர்ப்பம்ன்னு நினைச்சிண்டியானா அவன் பெருமை தெரியாது.  லோகமே பகவானுடைய கர்ப்பம்ன்னு புரிஞ்சாதான் அவனுடைய பெருமை தெரியும்.

    அதுக்கு மேலே அவர் சொல்றார், ’இந்த ஒரு விஷயத்தை யோசிச்சுப் பார், உன்னுடைய ராஜசபையில நிறையப் பேர் ரிஷிகளெல்லாம் உட்கார்ந்திட்டு இருக்காளோல்லையோ?  அங்க வசிஷ்டர்ன்னு ஒருத்தர் இருக்கார் பார், உன் குலகுரு,  எனக்கும் அவருக்கும் ரொம்ப பொருத்தம்.  எத்தனை நாளா நாங்க ரெண்டு பேரும் என்ன சண்டை போடணுமோ, மொத்தமும் போட்டுண்டிருக்கோம்.  ஆனா இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ யோசிச்சுப் பார்.  நான் ஒன்னை உண்டுன்னு சொன்னா, தலைப்பொறுப்பா அவர் அதை இல்லேன்னுடுவர்.  அவர் ஏதாவது ஒன்னை இருக்குன்னு சொன்னா, தலைப்பொறுப்பா நான் அதை இல்லேன்னுடுவேன்.  இப்படித்தான் இன்னைக்குவரைக்கும் ரெண்டு பேரும்.  உனக்கு ஒரே ஒரு பரீட்சை இப்போ, நான் சொல்றேன், இராமன் சத்யபராக்ரமன், இராமன் மகாத்மானுட்டு.  தைரியம் இருந்தா வசிஷ்டரை இல்லேன்னு சொல்லச் சொல்லிப்பார்.  இந்த ஒன்னுலதான் எனக்கு வாய்ப்பு இப்போ.  வசிஷ்டோபி மஹாதேஜாஹா – இந்த வசிஷ்டரும்கூட, நான் எதைச் சொன்னாலும் மறுக்கற வசிஷ்டரும்கூடன்னு அர்த்தம்.  அப்படிப்பட்ட வசிஷ்டரும்கூட நான் இப்போ சொன்னதை மறுத்துப் பேசமாட்டார்.  ஏசேமே தபஸிஸ்திதாஹா – அதோடு அல்ல, பக்கத்துல இத்தனை ரிஷிகள் உட்கார்ந்திருக்கிறார்களே, அத்தனை பேரும் ஒத்துக்கொள்ளுவர்கள்.  இவர்கள் ஒவ்வொருத்தரும் தபஸ் பண்ணி, தபஸ் பண்ணி ப்ரம்மத்தைத் தேடி வச்சிண்டிருக்கவா.  நீ இராமனைப் பெற்றதாக நினைக்கிறாய்.  ஆனா பெற்றது ப்ரம்மத்தைங்கிறது இவர்களுக்குத்தான் தெரியும்.  ப்ரம்மம் தேர்ந்தெடுத்து உன்னைத் தாயார், தகப்பனாராச் சொல்லியிருக்கு.  அதனால உனக்குத் தெரியாது தசரதா, சொன்னதைக் கேள். உன் மூத்தபிள்ளை இராமனைக் குடு’, அப்படின்னு விஸ்வாமித்திரர் கேட்கிறார்.

    இருந்தாலும் தசரதனுக்கு மனசு ஏற்கலே. தசரதன் மேல பதில் சொல்றான்,

    தச்ருத்வா ராஜஸாத்ரூலஹா விஸ்வாமித்ரஸ்ய பாஷிதம்
    முகூர்த்தமிவ நிஹ்ஸ்ஸங்யஹா ஸங்யாவான் நிதம் அப்ரமீது
    ஊநஷோடஸ வருஷஹா மே ராமோ ராஜீவ லோசநஹா
    நயுத்த யோக்ய தாமஸ்ய பஷ்யாமி சக ராக்ஷசைஹி

    ஒரு முகூர்த்தம் பேசவேயில்லையாம்.  இதைக் கேட்டவுடனே தசரதனுக்கு அதிர்ச்சி இப்போ.  ஒரு முகூர்த்தகாலம் சும்மா இருந்துட்டு இப்போ பேசறான்.  ஊநஷோடஸ வருஷஹா மே ராமோ ராஜீவ லோசநஹா – என் ராமன் தாமரைக்கண்ணன், ராஜீவ லோசநஹா. ஊநஷோடஸ வருஷஹா – ஷோடஸம்ன்னா பதினாறு; ஊந – குறைவு; பதினாறு வயசுக்குக் குறைவுங்கிறததான் ஊநஷோடஸ வருஷஹான்னு சொல்லுகிறான்.  பன்னெண்டுன்னு சொல்லலே இவன்.  பதினாறு நிரம்பப் பெறாத இராமன். பன்னெண்டை ’த்வாதச’ன்னு சொல்லத் தெரியாதா தசரதனுக்கு?  என்னத்துக்கு என்னமோ சொல்லிண்டிருக்கானேன்னா?  ஏன்னா அந்த நாள்ல ஒரு வழக்கம், பதினாறு வயசு நிரம்பினாத்தான் போர்க்களத்துக்கு அனுப்ப முடியும்.  இது சட்டம், யுத்த நீதி.  இப்ப இவனுக்கு, விஸ்வாமித்திரரோட அனுப்பிச்சு வைக்க மாட்டேன்னு சொல்றதுக்கு, பதினாறு நிரம்பலேன்னு சொல்லனுமோல்லையோ?  அதனால பன்னெண்டுன்னு சொல்றதுல அவனுக்கு நோக்கம் இல்லே.  பதினாறு ஆகலேன்னு சொல்றதுலதான் நோக்கம்.  மே ராமஹா – ஆச்சர்யமா பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் பண்ணினார், மே ராமஹா – என்னுடைய ராமன். அப்படின்னா, இருக்கட்டுமே, உன் ராமனாவே இருக்கட்டும், அதைத்தான் கேட்கறேன்னா, ’ஏதோ பரசுராமர்ன்னு நினைச்சுட்டு இங்க வந்துட்டீர் போலருக்கு.  இது என் இராமன்.  நீர் பார்கவ ராமனைத் தேடிண்டு வந்திருக்கீர்.  இவன் தசரத ராமன்.  தசரத ராமனுக்கு இந்த சண்டை, பூசல்லெல்லாம் தெரியாது.  நீர் ஏதோ கோடாரி வச்சிருக்கவரைத் தேடிப் போயிருக்கணும்.  ஏதோ முகவரி மாறி இங்க வந்துட்டீர்ன்னு நினைக்கிறேன்’.  மே ராமஹா – என்னுடைய இராமன்.

    இன்னொரு ஆழ்ந்த கருத்து உண்டு.  நாம ஒரு பொருளை ’நம்மது’ ன்னு சொல்லிட்டா, பெரியவர்கள் அதை வாங்கிக்க மாட்டா.  அவாள்ட்ட கொடுக்கணும்ன்னு வச்சுக்கங்கோ, ‘இதந் நமம’, இது என்னுதல்ல. உன்னைக் குறித்து இதைக் குடுக்கறேன்.  இது என்னுதல்ல.  ஒரு பொருளை என்னுது, என்னுதுன்னு நாம சொந்தம் கொண்டாடினா, பெரியவர்கள் அதை வாங்கிக்கவே மாட்டா.  அது நம்மது அல்லங்கிற எண்ணத்தோடதான் அவர்கள்கிட்ட கொடுக்கணும்.  குடுத்த பிற்பாடு தப்பித்தவறி நம்மதுங்கிற எண்ணமே வச்சுக்கக்கூடாது.  தசரதனுக்கு இந்த சாஸ்திரமெல்லாம் தெரியுமோல்லையோ?  அதனால வேணும்ன்னு ‘மே ராமஹா’, என்னுடைய இராமன்ங்கிறான்.  கோபம் வந்து விட்டுட்டுப் போய்டட்டுமே!  ஏன்னா என்னுடையன்னு நான் சொல்லிட்டேனோல்லையோ?  நீ உன்னோடதுன்னுட்டே இனிமே நான் வாங்கிக்க மாட்டேன், அப்படின்னு சொல்லிட்டுப் போய்டட்டுமேன்னு எதிர்பார்த்தா, நீ உன்னோடதுன்னு சொன்னியோல்லையோ, அதனாலயே வேணும்ங்கிறார் அவர்.

    ராஜீவ லோசநஹா – தாமரைக் கண்கள் படைத்த இராமன்.  இப்ப என்ன இராமனுடைய தாமரைக் கண்ணைப்பத்தி, விஸ்வாமித்திரர்கிட்ட சொல்லியாகணும்?  இப்ப சண்டைக்கு வான்னு அவர் கூப்பிட்டுண்டு இருக்கறச்சே, இராமன் தாமரைக் கண்ணனா இருந்தா என்ன, தடந்தோளனா இருந்தா என்ன, இல்லே கொவ்வைவாய் இதழனாய் இருந்தா என்ன?  இது ஒண்ணும் அழகைப் பாடற பாசுரமே இல்லே.  எதுக்குச் சொல்றார்ன்னா காரணம் இருக்கு அந்த இடத்திலே.  ராஜீவ லோசநன்னா தாமரைக்கண்ணனோல்லையோ?  தாமரை எத்தனை நாழி முழிச்சுண்டு இருக்கும்?  அஞ்சே முக்கால் ஆனா மொட்டிச்சுப் போயிருமா?  சூரிய அஸ்தமனம் ஆறச்சே, தாமரை எல்லாம் மலராது, மொட்டிச்சுரும்.  மறுநாள் காத்தால சூரியோதயம் ஆறப்போதான் மலரும்.  ராக்ஷசர்களுக்கு ‘ரஜநீசராள்’ன்னு பேர்.  ரஜநீசராள்ன்னா, ராத்திரி வேளைலேயே சஞ்சரிக்கிறவாள்ன்னு அவாளுக்கு பேர்.  அப்போ ராக்ஷசாளுக்கெல்லாம் ராத்திரிலதான் பலம்.  இராமனோ தாமரைக்கண்ணன்.  அப்படின்னா அவர் எத்தனை மணிக்கு தூங்கிப் போய்டணும்?  அஞ்சே முக்காலுக்குத் தூங்கிடனுமோல்லையோ?  ’இராமன் எவ்வளவு சுகுமாரன், செல்லப்பிள்ளைன்னா, அஞ்சரை, அஞ்சே முக்காலுக்குத் தூங்கிப் போய்டுவர்.  நீர் ஆனா, அப்புறம் எழுந்திருக்கறவாளோட சண்டை போடறதுக்காக கூப்பிடுண்டிருக்கீர்.  இது நடக்கவே போறதில்லே.’

    நயுத்த யோக்ய தாமஸ்ய – இவனுக்கு யுத்தம் பண்ணுகிற யோக்யதையை நான் இன்னும் பார்க்கவில்லை.  பஷ்யாமி சக ராக்ஷசைஹி – அதுவும் யாரோட சண்டை போட கூப்பிடுறீர்?  ராக்ஷசர்களோடே. மனுஷர்களோடயா சண்டை போட கூப்பிடுறீர்?  கண்டிப்பா இராமனை அனுப்பறதுக்கு இல்லை, என்று தசரதன் முடிவெடுத்துட்டான்.

    இதுவரைக்குமாவது முன்னபின்ன பேசிண்டிருந்தான்.  எப்போ இவன் இல்லேன்னு சொல்லிட்டானோ, அப்போதான் சுருக்குன்னு கோவம் வந்தது விஸ்வாமித்திரருக்கு.  நித்யாபிரதிக்ஞஹா காகுஸ்த சுகீபவசபாந்தபஹா.  பொய் சத்யம் பண்ணவனே, உன் குடும்பத்தோட நன்னா இரு.  நேர சொல்லிட்டார் ஒரே வார்த்தைல.  இஷ்வாகு குலத்துல பிறந்தேன்னு பேர் வேற வச்சிண்டிருக்கியே தசரதா நீ. இப்படியா மாற்றிப் பேசுவாய்?  அந்தக் குலத்தில இருக்கிற யாரும் சொன்ன சொல் மீறினதே கிடையாது.  ரகுகுலத்தில பிறந்தவர்களுக்கு ஏற்காத வார்த்தை நீ பேசிவிட்டாய்.  பொய் சத்யம் பண்ணினாய்.  சுகீபவ சபாந்தபஹா – உன் குடும்பத்தோட சுகம்ம்மா இரு.  இங்க ’சுகம்ம்ம்மா இரு’ங்கறதுக்கு அர்த்தம் என்னன்னு நமக்குச் சொல்ல வேண்டியதில்லே.  இது ஆசீர்வாதமே இல்லே, ‘நீ எப்படி சுகமா இருந்துரேன்னு பார்த்துரேன்’ன்னு அர்த்தம்.

    சொல்லிட்டு வேகமா புறப்பட்டார்.  அந்த சமயம்தான் வசிஷ்டாச்சார்யர் தடுக்கிறார்.  இதுவரைக்கும் என்ன நடக்கறதுங்கிறத மேற்பார்வை பார்த்துட்டிருந்தார்.  சரி, இவன் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான்,  விஸ்வாமித்திரர் கோபமா போறார்ன்ன உடனே, ஜாடை காட்டறார் அவர். ‘ தசரதா, தப்புச் செய்கிறாய். அவர் உள்ள வரும் போது எது கேட்டாலும் குடுக்கறேன்னு சொல்லிட்டாய்.  இப்ப குடுக்க மாட்டேன்னு சொன்னால் உனக்குப் பாபம்.  அதைப்பத்திக்கூட ரொம்பப் பேச வரலே இப்போ.  ஆனா உன்னுடைய பிள்ளையினுடைய நன்மைக்காகத்தான் இவர் கூப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொள்.  அது தெரியாமல் நீ பேசுகிறாய்.’

    ’என் பிள்ளைக்கு என்ன நல்லது நடக்கணும்’ன்னு தசரதன் கேட்டிருக்கணுமோல்லையோ?  அவனுக்கு என்ன குருபக்தின்னா, எப்போ இந்த வார்த்தை வசிஷ்டர் சொன்னாரோ, பேசவேயில்லே அனுப்பிச்சுட்டான் இராமனை.  இத்தனை நாழி மாட்டேன் மாட்டென்னு இவ்வளவு தூரம் பேசிண்டிருந்தானோல்லையோ?  வசிஷ்டர் சொன்னவுடனே, அவன் திரும்பச் சொல்றான் தசரதன்.  ‘என் பிள்ளைக்கு நல்லதா, தீயதாங்கிற கவலையில்லே. நீ அனுப்புன்னு சொல்றீரா இல்லையாங்கிறதுதான் பேச்சு’.  அனுப்புன்னு சொல்லிட்டார் வசிஷ்டர்.  அடுத்த நிமிஷம், ‘ததௌ குசிகபுத்ராய சுப்ரீதேந அந்தராத்மநஹா’.  தங்கத் தாம்பாளத்துல வைச்சுப் பொருளைத் தூக்கிக் குடுக்கறாப்ல குடுத்துட்டார்.  ததௌன்னா குடுத்தான்னு அர்த்தம்.  பொருளைக் குடுக்கறச்சேதான் ததாதின்னு சொல்லுவா.  இப்போ ஒரு குழந்தையை அவாளோடே அவா வீட்டுக்கு அனுப்பறோம்ன்ன் வச்சுக்கங்கோ, அப்போ இப்படி பேச மாட்டோம்.  குழந்தையை கூட அனுப்பிச்சு விட்டுருக்கான்னுவா.  ஒரு பழத்தைக் குடுத்தா, பழத்தை கூட அனுப்பிச்சு வைச்சுருக்கான்னா சொல்லுவா? பழத்தைக் குடுத்துவிட்டார்ன்னுதான சொல்லுவா?  குழந்தையைக் குடுத்துவிட்டார்ன்னு சொல்லமாட்டா.  அப்போ அந்த அளவுக்கு தசரதனுக்கு இராமன் அடங்கி இருந்தானாம்.

    அறுபதனாயிரம் வருஷம் குழந்தைப் பேறில்லாமல், அதற்கப்புறம் பிறந்த குழந்தை.  நாமே ஒரு அஞ்சு வருஷம் குழந்தை இல்லாமல், அதற்கப்புறம் பிறந்த குழந்தைன்னா எப்படி பார்த்துப்போம்?  அதுவும் இவர் சக்ரவர்த்திக்குப் பிறந்த குழந்தை.  செல்வச் சீமானுடைய பிள்ளை, சாமான்யனோட பிள்ளையில்லே.  தசரதன் எப்படியெல்லாம் போற்றிப் பாதுகாத்து வளர்த்திருப்பர்?  அப்படிப்பட்ட பிள்ளைகளை ஒரு ரிஷியின் பின்னால், காடு மேடெல்லாம் அலைந்து, ராக்ஷஷர்களோட சண்டை போட அனுப்ப வேண்டுமென்றால்?  அவ்வளவு குருபக்தி தசரதனுக்கு வசிஷ்டரினிடத்தில்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta)

    இராமன் ஏன் இஷ்வாகு குலத்திலே பிறந்தான்?

    பெருமாள் இராமனாக அவதாரம் பண்ணினார் சரி.  ஆனால் ஏன் அவர் தசரத மகாராஜாவுக்குப் புதல்வனாக, இஷ்வாகு குலத்தின் வழித்தோன்றலாக பிறக்க வேண்டும்?  அவர் அவதார காரணத்தை நிறைவேற்றுவதற்கு அவர் எங்க வேணும்னாலும், வேறு எந்த ராஜாவுக்கு வேணும்ன்னாலும் பிள்ளையாப் பிறந்திருக்கலாமே?  காரணம் இருக்கு.  இஷ்வாகு வம்சத்தில் ஒரு பெருமாள் ரொம்ப நாளா அரண்மனைக்குள்ள இருந்தார்.  இன்னைக்கு அவர் ஸ்ரீரங்கத்திலே படுத்திண்டிருக்கார்.  எந்த எம்பெருமான் திருவரங்கத்தில் சயனித்திருக்கிறானோ, அவர் முதமுதல்ல திருபாற்கடல்ல பிரணவாகார விமானத்தோடே தோன்றினார்.  அந்தப் பெருமாளை பிரம்மாவினுடைய சத்யலோகத்திலே எழுந்தருளப்பண்ணி, பிரம்மா நெடுநாட்கள் திருவாராதனம் பண்ணிண்டு வந்தார்.  அதற்கப்புறம் இஷ்வாகு, அவன் பிரம்மாவினுடைய சத்ய லோகத்துக்கு போய்ட்டு வரக்கூடிய அளவுக்கு யோகபலம் படைத்தவன்.  அவன் அங்க போய் விழுந்து சேவிச்சு, ‘தேவரீர் லோகத்துல இருந்து என்ன லாபம்? எங்க லோகத்துக்குன்னா இந்தப் பெருமாள் வரணும்?’, அப்படின்னு கேட்கிறார்.  இதே பெருமாள்தான், இன்னைக்கு ஸ்ரீரங்கத்துல போய் சயனத்திருக்கோலத்துல சேவிக்கறமே, 16 அடி அந்தப் பெருமாள்.  அந்தப் பெருமாளையேதான் அங்க வச்சிண்டிருந்தா.  இஷ்வாகு போய்ப் பிரார்த்தித்த உடனே, பார்த்தா ப்ரம்மா, சரி, கீழ்லோகத்துக்குப் போகட்டும்.  அயோத்திக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போ என்று சொன்னார்.  இஷ்வாகு அங்க இருந்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து சரயு நதிக்கரையில பிரதிஷ்டை பண்ணிட்டார்.  ரொம்ப வருஷம் அங்க இருந்தார் இந்தப் பெருமாள்.

    சூர்ய வம்சத்திலே, மனு குலத்திலே, இராமன் 35வது இராஜாவாகப் பிறக்கிறார். இவருக்கு முன்னாடி, சூர்யன், மனு, இஷ்வாகு, கட்வாங்கன், அஜமகாராஜன், திலீபன், மாந்தாதா, அம்ஸுமான், பகீரதன், ககுஸ்தன், போன்ற பல ராஜாக்கள் மிகச்சிறப்பாக ஆண்டு வந்திருந்தார்கள். இதில் அஜமகாராஜனுக்கு புத்திரன் தசரதன். இத்தனை இராஜாக்களும் திருவாராதனம் பண்ணியிருக்கா. அப்போ ஓரோரு இராஜாவும் அர்ச்சகர், இந்தப் பெருமாள்தான் அர்ச்சனையை வாங்கிண்டு இருக்கறவர். எல்லாரும் பண்ணினாலும், இந்தப் பெருமாள் திருப்திக்குத் தகுந்தாப்போலே ஒருத்தருமே பண்ணலயாம். எல்லாரும் பண்றாளே தவிர, அவ்வளவு திருப்தி ஏற்படலே பகவானுக்கு, என் பெருமைக்குத் தகுந்தாப்போலே பண்ணலேனுட்டு.

    நாமளும்தான் நித்ய பூஜை பண்றோம். கடைசில என்ன சொல்லிடுவோம்.

    உபசாரபதேசேந க்ருதாந் அகரகம்நயா
    அபசாரம்நிமாம் ஸர்வாந் ஸமஸ்வ புருஷோத்தம

    நான் ஏதோ பதினாறு உபசாரம் பண்ணலாம்ன்னு ஆரம்பிச்சேன்.  அது முப்பத்திரெண்டு அபசாரமா முடிஞ்சு போச்சு. ஷமித்தருள வேண்டும்.  இவ்வளவுதான் எனக்குத் தெரிஞ்சது.  அப்படின்னு சொல்லி விழுந்து சேவிச்சுருவோம்.  ரொம்ப நாளா இது நடந்திண்டு இருக்கறது.  பெருமாள் யோசிச்சுப் பார்த்தார், நம்ம பெருமைக்குத் தகுந்தாப் போல ஒருத்தனும் பண்ண மாட்டேங்கறானேன்னு ஆசை.  யார் பண்ணப்போறா இப்போ?  அவர் பெருமைக்குத் தகுந்தாப்போல அவரே பண்ணிண்டாதான் உண்டு.  இந்த முடிவுக்குத்தான் அவர் வந்தார்.  அப்போ அர்ச்சகனாகவும் அவர் பிறந்தாகனும், அர்ச்சிக்கப்படுபவனாகவும் அவன் இருந்தாக வேண்டும்.  அர்ச்சிக்கப்படுபவனா பெரிய பெருமாள், திருவரங்கநாதன் உள்ள இருக்கார்.  இவர் எங்கயாவது போய் மனுஷ ஜாதில பிறந்திருந்தா இராவணனைக் கொன்னுருக்கலாம்.  ஆனா இந்தப் பெருமாளுக்கு ஆராதனம் பண்ணியிருக்க முடியாது.  இந்தக் குலத்தில பிறந்தாத்தானே இவருக்கு பூஜை பண்றதுக்கு யோக்யதை கிடைக்கும்.  அதனாலதான் தசரதனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta)

    May 12

    நாரத வால்மீஹி சம்வாதம் – ஸங்க்ஷேப இராமாயணம்

    இராமன்னு எடுத்துக்கொண்டால் எத்தனையோ கல்யாண குணங்கள் நிரம்பியவன்.  இராமனுக்கு அயோத்யா சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் ஒரு பெரிய விஷயம் அல்ல.  ஏன்னா ஜகத்துக்கே சக்ரவர்த்தியான எம்பெருமானுக்குப் போய், ஒரு சின்ன நாட்டுக்குத் தலைவன், அப்படின்னு சொல்றதுலே என்ன பெரிய வைபவம் வந்துடப் போறது?  அதனாலே இராமனுக்குப் பட்டாபிஷேகம்ன்னால் குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்.  அவனுடைய கல்யாண குணங்கள், மங்கலமான குணங்களே ஒரு இராஜ்யம்.  அந்த இராஜ்யத்துக்கு யார் மன்னன்னால், எப்போதும் இராமச்சந்திரன்தான் மன்னன்.  இதை முதமுதல்லே இராமாயணம் துவங்கும்போதே, வால்மீஹி நாரதரிடத்தே விசாரித்தார்.  நாரதர் வால்மீஹியினுடைய ஆஸ்ரமத்துக்கு வருகை தந்தார்.

    தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாத்வீதாம்பரம்
    நாரதம் பரிபப்ரச்ச வால்மீஹிர் முநிபுங்கவம்

    முநிபுங்கவரான நாரதரை வால்மீஹி வேண்டுகிறார்.  நாரதருக்கு இருக்கிற பெருமைகளைச் சொல்றார், தபஸ்வாத்யாய நிரதம் – தபஸ்ஸாலே பூரித்தவர்; ஸ்வாத்யாயம் – வேத அத்யயநம் பண்ணுதல்; ஸ்வாத்யாய நிரதம் – வேதங்களை முழுவதுமாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்; தபஸ்வீ வாத்வீதாம்பரம் – நல்ல வாக்கு சாதுர்யம் உள்ளவர். ஒரு ஆச்சார்யனாக இருந்தால் இந்த மூன்றும் வேண்டும்.  சாஸ்திரத்தை நல்லா அத்யயனம் பண்ணியிருக்கணும், அனுஷ்டானம் இருக்கணும் (தபஸ்).  இந்த ரெண்டும் இருந்தா அவர் மோக்ஷத்துக்குப் போய்டுவர்.  நாம எப்படிப் போறது?  அதுக்காகத்தான் வாக்வீதாம்பரம்.  அவருக்கு வாக்குச் சாதுர்யம் இருந்தாத்தான் நமக்குச் சொல்லிக் குடுப்பர்.  இந்த மூன்றும் நாரதரிடத்திலே இருந்ததாம்.  அவரை விழுந்து நமஸ்கரித்து வால்மீஹி பிரார்த்திக்கிறார்.

    வால்மீஹி பதினாறு கேள்விகள் கேட்கிறார்.  ரொம்ப ஆச்சர்யமான கேள்விகள்.  பதினாறு குணங்களைப் பற்றிச் சொல்லி, இந்தப் பதினாறும் யாரிடத்தில் உள்ளன, என்று கேட்கிறார்.

    கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான், கஸ்யவீர்யவான், தர்மஞையஸ்ச, கிருதஞையஸ்ச, சத்ய வாக்யோ திடவ்ரதஹா, சாரித்ரேனச கோயுக்தஹா, சர்வபூதேஸு கோகிதஹா, ஆத்மவான்கஹா, ஜிதக்குரோதஹா, துதிமான், கோனசூர்யகஹா, வித்வான்கஹா, கஸ்ஸமர்த்தஸ்ச, கஸ்ஸைகப் பிரியதர்சநஹா, கஸ்யவிப்பதி தேவாஸ்ச ஜாதரோசஸ்ச சங்யுகே

    பதினாறு கேள்வி.  இந்தப் பதினாறு கல்யாண குணங்களும் ஒரு நேரத்தில் ஒருத்தனிடத்தில் உண்டா? இதுதான் கேள்வி.  பதினாறும் பதினாறு பேரிடத்தில் இருக்கலாம், அது வேறே.  இந்தப் பதினாறும் ஒருத்தனிடத்தில் இருக்கான்னு கேட்கிறார்.  பதினாறுங்கிறதே ரொம்ப உசத்தியான எண்ணிக்கை.  ஷோடஸகலா பரிபூர்ணமான சந்திர மண்டலம்ன்னு சொல்லுவர்கள்.  பூர்ணசந்திரனுக்கு பதினாறு கலைகள் நிரம்பி இருக்கும்.  கிருஷ்ணபக்ஷத்தின் போது அந்த கலை ஒன்றொன்றா குறைஞ்சுகிட்டே வரும்.  சுக்லபக்ஷத்தின் போது கலை நிரம்பிண்டே போகும்.  இதைப் பண்ணுவது சூர்யன்.  பதினாறு கலைகளும் நிரம்பி இருந்ததுன்னா பூர்ணசந்திரன் அப்படின்னு நாம கொண்டாடறோம்.  அதேபோல் ராமசந்திரனுக்கு எது பூர்த்தி?  இந்தப் பதினாறு குணங்களான கலைகள்.  இவர் பதினாறுன்னு கேட்டாலும், பதினாறுதான் என்று வைத்துக் கொள்ளக்கூடாது.  பதினாறுங்கிறது புரிஞ்சுக்கிறதுக்காக.  அவருக்கு இருப்பது எண்ணிலடங்கா கல்யாண குணங்கள்.

    கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே – இந்த இப்போதிருக்கிற உலகத்திலே, குணவான் – யாரு சுஸீலன்? சௌஸீல்யம் உடையவன் யார்?  குணம் சப்தம் பொதுவாக இருந்தாலும், விசேசித்து சௌஸீல்யம் என்பது பொருள்.  சௌஸீல்யம்தான் இராமாவதாரத்திற்கே முக்கியமான குணம்.  சௌஸீல்யம்ன்னால், மகதகா மந்தைஸ்யஹ நீரந்திரேந சம்ஸ்கிலேஷ சுபாவம் – சௌஸீல்யம்மகதகா - மிகப்பெரியவன் ஒருத்தன், மந்தைஸ்யஹ – ரொம்ப சாமான்யன் இன்னொருத்தன்.  நான் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்னு வேறுபாடு பார்க்காமல் யார் தோளோடு தோள் கைகோர்த்துக் கொள்கிறானோ, அவன்தான் சுசீலன்.  இராமன் அப்படித்தான் பண்ணினார்.  கஸ்யவீர்யவான் – வெறுமே சுசீலனா இருந்தாப் போதுமா? வீரம் இருக்கணுமோல்லையோ?  யார் மெய்யே பேசுபவன்?  யார் பார்ப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டுபவன்?  யார் கோபமே இல்லாதவன்?  யாருக்குக் கோபம் வந்தால் தெய்வங்கள்கூட நடுங்கும்?  யாரைப்பற்றி எழுதுவதற்கு ரிஷிகள் அத்தனை பேரும் ஆசைப்படுவர்கள்?  யாரொருத்தன் செய்த நன்றியை ஒரு துளிக்கூட மறக்கமாட்டான்?  யாரொருத்தன் என்ன அபகாரம் செய்யப்பட்டாலும் அதை மறந்தே போய்விடுகிறான்?  யார் வித்வான்?  யார் ஆத்ம தத்வத்தை அறிந்தவன்?  யார் அனைத்து ஜீவராசிகளிடத்தும் கருணையே வடிவெடுத்தவன்?  யார், யார், யார், விடாம கேட்டுட்டார்.  அவர் யார்?  அவரை மட்டும் எனக்கு அடையாளம் காட்டும்.’ என்று வால்மீஹி நாரதரைக் கேட்க, நாரதர் ஒரு நிமிஷம் அவகாசம் எடுத்துண்டார்.  அப்போ அவரைப் பார்த்துச் சொல்றார்.

    பகவோதுர்லபாஸ்ச்சைவ ஏத்வயா கீர்த்திதா குணாஹா
    குணே வக்ஸ்யாம்யஹம் புத்வா தைர்யுக்த ஸுர்யதாம்வரஹா

    உன்னாலே பாடப்பட்ட இக்குணங்களெல்லாம் தேடித்தேடிப் பார்த்தாலும் யாரிடத்திலேயும் கிட்டாது.  நீர் ஆனா சட்டுன்னு கேட்டுட்டீர்.  இருந்தாலும் நீர் கேட்டதற்கு யோசித்துச் சொல்லுகிறேன்.  எனக்கு சந்தேகமில்லே யாரிடத்தில இந்த குணங்கள் இருக்குங்குறது.  நிச்சயமாத் தெரியும்.  ஆனா ஏன் யோசித்துச் சொல்றேன்னார்ன்னால், இன்னாரிடத்தில இருக்குங்கிறதை நான் நினைத்த உடனே, அவனைப் பற்றி நினைத்து உள்ளம் உருகுகிறது.  உடல் நிற்கத் தயங்குகிறது.  கால் தடுமாறுகிறது.  வாய் தழுதழுக்கிறது.  அதானாலே எனக்கு ரெண்டு நிமிஷம் அவகாசம் கொடும்.  இராமனைப்பத்தி யோசிச்சு, மனசைத் தேத்திண்டு உமக்கு பதில் சொல்றேன்.

    குணே வக்ஸ்யாம்யஹம் புத்வா, அஹம் புத்வா-ன்னால், நான் புதுசா தெரிஞ்சிண்டுன்னு அர்த்தமல்ல.  இனிமேலெயா நாரதர் தெரிஞ்சுக்கப் போறார். இராமன்தான் கல்யாண குணாதி இராமன்னுட்டு.  ஆனா அந்தக் கல்யாண குணங்களோடு கூடிய இராமனை நினைத்த உடனே, கால் ஆளும் நெஞ்சழியும் கண் சுழலும்.  கண்களிலேர்ந்து நீர் சொரிய, மயிர்க்கூச்செரிய, உடம்பு தள்ளாட, நா தழுதழுக்க, மேல இராமனைப்பற்றி சொல்ல மாட்டாமல் நின்று போய், யோசித்து சொல்றதுக்கு ஆரம்பிச்சார்.

    ’நீர் பதினாறு கேள்வி கேட்டுட்டீர்.  என்கிட்ட ஒரே பதில்தான் இருக்கு.  நான் பதினாறு பதில் சொல்லப் போறதில்லே.  ஒரே பதில்.  ‘இஷ்வாகு வம்ஷப்ரபவஹா ராமோ நாம ஜனைஸ்ருதஹா’.  இஷ்வாகு குலத்திலே தோன்றினவனாய், இராமன் என்று பெயர் பெற்றவன்தான் நீர் கேட்ட அத்தனை கல்யாண குணங்களுக்கும் ஒரே இருப்பிடம்.  அவனைப்போல் இன்னும் பார்த்ததில்லை, நாளையும் யாரும் பார்க்கப் போவதில்லை.  அந்த இராமனைப்பற்றி மேலே சொல்லுகிறேன்’னுட்டு, சங்க்‌ஷேப இராமயணம் தொடங்கி, இராமாயணக்கதை அத்தனையும் 32 ஸ்லோகங்களுக்குள்ளே சுருக்கமாச் சொன்னார்.

    இந்த இடத்திலே வால்மீஹி பகவான் ராமனுடைய உருவ அழகைப்பத்தி ரொம்பக் கேட்கலே.  குணங்களைப்பற்றித்தான் நிறையக் கேட்டார்.  ஆனா நாரதர் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் பாருங்கோ, உருவத்தைப்பற்றி 8 ஸ்லோகம் சொல்லிட்டு, அப்புறம் குணங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார்.  ’ஏன்னா என்னை ஈர்த்தது அதுதான் வால்மீஹி.  உமக்கு இன்னும் அது தெரியாது.  நீர் பார்த்துட்டீர்ன்னா நீர் இதெல்லாம் கேட்க மாட்டீர்.  இராமனுடைய அழகைப் பத்தித்தான் பேசுவீர்’.

    இப்போ பெருமாளைச் சேவிக்கிறோம். அவர் ப்ரம்மம், காரணம், எங்கேயோ இருக்கிறார், எல்லாத்தையும் படைக்கிறார், இதெல்லாம் இருக்கட்டும். உசத்திதான்.  ஆனா அதைப்பற்றி எத்தனை நாழி சொல்லியிருந்தா நமக்கு மனசு ஈர்க்கப்போறது சொல்லுங்கோ?  நாம பார்த்ததே இல்லே. பார்க்காத ஒரு விஷயத்தைப்பற்றி என்னதான் யோகம், தியானம்ன்னாலும், மனசு ஈடுபடவே படாது.  இராமன்ன உடனே, கருநீல வர்ணம், எட்டடி உசரம், அழகில அழகே வடிவெடுத்த சீதை, இந்தப்பக்கம் அதுக்குத் தகுந்த லக்ஷ்மணன், கையிலே பிடித்த வில், கருணையே ததும்பும் விழிகள், இதை ஞாபகம் வச்சிண்டாதான் நமக்கு பக்தியே.  இதை விட்டுட்டு அவரே ப்ருத்வி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம், உண்மைதான்.  சாஸ்திரம் சொல்றது ஒன்னுமே பொய் கிடையாது.

    நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய்
    சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய்

    ஆழ்வார் பாசுரத்திலே சொல்றார், நீயே நீர், நீயே தீ, நீயே கால், நீயே அயன்.  எல்லாமே நீதான்.  பெருமாள் உடனே சொன்னார், ’எல்லாம் நாந்தான்னு புரிஞ்சுனிட்டீரோல்லையோ, அப்போ என்னை வரணும், வரணும்ன்னு சொல்லாதேயும்.  உம்ம ஊர்லயே ப்ருத்வி, அப்பு, தேஜஸ் எல்லாம் இருக்கோல்லையோ, அதையே பார்த்து என்னை சேவிச்சதா வச்சுக்கும்’னுட்டார் பெருமாள்.  ஆழ்வார் சொன்னார், ‘அதெல்லாம் எனக்கு திருப்தி கிடையாது.  அதுக்குன்னு குளத்தைப் போய் பார்த்தா உன்னைப் பார்க்கிற அளவுக்கெல்லாம் ஞானம் எனக்கு இல்லே.  அது யாரானும் நாலு ரிஷிகளுக்கு இருந்திருக்கலாமே தவிர, நீ எனக்கு வேண்டியபடி, கூரார் ஆழி வெண்சங்கேந்தி கொடியேன்பால் வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.  சங்க சக்கரங்களை ஏந்திண்டு, நான்கு தோள்களோடே எனக்குப் பிடிச்ச வடிவத்தோடே வந்தாத்தான என் மனசு ஈடுபடும்?  நீ ப்ருத்வி, அப்பு, தேஜஸ்ஸுன்னு இருந்தா எனக்கு மனசு ஈடுபடுமா?  அதனால ராமன்ன உடனே, குணங்கள் எத்தனையோ இருந்தாலும், ரூப குணங்கள்தான் நாரதரை ஈர்க்கிறது.  பெருமாளுக்கு சொரூப குணங்கள்ன்னு பல, ரூப குணங்கள்ன்னு பல.  சொரூபம்ங்கிறது அவருடைய இயற்கை.  அதைப்பத்தி சொல்லக்கூடிய குணங்கள் எத்தனையோ.  அதை எல்லாத்தையும் கொஞ்சம் பின்னாடி தள்ளிட்டார் நாரதர்.  தள்ளிட்டு அவனுடைய ரூபத்தைப் பத்திதான் முதல்ல சொல்றார்.

    மஹோரஸ்கஹா மகேஸ்வாஸஹா கூட சத்ரு அரிந்தமஹா
    ஆஜானுபாகுஹு ஸுஸிராஹ ஸுலலாடஹா ஸுவிக்ரமஹா
    சம பக்த விபக்தாங்க ஸ்நிக்த வர்ணஹா ப்ரதாபவான் பீநவக்ஸாஹா
    விசாலக்ஷஹா லக்ஷ்மீவாந் சுபலக்ஷநஹா
    ரக்‌ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரிரக்‌ஷிதா
    ரக்‌ஷிதா தர்மஸ்ய சுவஜநஸ்ய ரக்‌ஷிதா
    ஸர்வதா விகத ஸத்விஹி சமுத்ரைவ சிந்துபிஹி
    ஆர்ய ஸர்வ ஸமசைவ ஸதைவ ப்ரியதர்ஸநஹா
    சஸர்வ குணோபேதஹா கௌசல்யா நந்தவர்த்தநஹா
    விஷ்ணுநா சதுர்ஸோ வீர்யே சோமவப்ரியதர்சநஹா
    காலக்னி சதுர்ஸக்ரோதே ஸமயாப் ப்ருத்வீஸமஹா
    தநதேந சமத்யாஹே ஸத்யே தர்மைவாபரஹா
    தமேவம் குணசம்பந்நம் ராம சத்ய பராக்ரமம்

    மஹோரஸ்கஹா – எட்டடி உசரம், மகேஸ்வாஸஹா – அந்த அடி உயரத்துக்குத் துளி குறைச்சலான உயர அளவுக்கு வில்லு இராமன் கையிலே இருக்கும்.  சார்ங்கம்ங்கிற வில், அவர் நிற்கிறாரா, வில்லு நிற்கிறதான்னு இருக்குமாம்.  ஆஜானுபாகுஹு – தன்னுடைய முழந்தாள் அளவு நீண்ட கைகளோடே, சம பக்த விபக்தாங்க – அவனுடைய தோள்கள்லேர்ந்து, இடையிலேர்ந்து, தொடையிலேர்ந்து, திருவடிவரைக்கும், தகுந்த சமனான சீரிலே இருக்ககூடிய வடிவழகு.  ஸ்நிக்த வர்ணஹா – நிகுநிகுன்னு மனசை ஈர்க்கக்கூடிய கருநீல வர்ணம்.  பீநவக்ஸாஹா – நல்லா அகன்று இருக்கிற திருமார்புகளோடே, விசாலக்ஷஹா – ரொம்ப நீளமான திருக்கண்கள்.  ரக்‌ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரிரக்‌ஷிதா ரக்‌ஷிதா தர்மஸ்ய சுவஜநஸ்ய ரக்‌ஷிதா - இராமனுக்குப் பெருமையே தன்னுடைய அந்தப்புரத்தையும் விட்டுக் குடுக்கமாட்டார், நாட்டையும் விட்டுக் குடுக்க மாட்டார்.  இந்த ரெண்டையும் அவருக்குச் சமமா பார்த்துக்கத் தெரியும்.  ஆனா கண்ணன் ஸ்வஜனத்தை விட்டுக்குடுத்துருவர்.  லோக ரக்ஷனத்துக்கு நிறையவே பாடுபடுவர்.  ஆண்டாள் ஒரு பாசுரத்திலே கண்ணனுக்கு பேர் குடுக்கிறாள், ‘பெண்ணின் வருத்தம் அறியாப் பெருமாள்’.  பெண்களோட வருத்தம் என்னதுன்னே இவருக்குத் தெரியாது.  அதனால எங்களை இவர் கண்டுகொள்ளவே மாட்டார்.  அதே ஆண்டாள் இராமனுக்குப் பேர் குடுக்கிறாள், ‘மனத்துக்கினியான்’.  எங்க மனசுக்கு ரொம்ப இனிமையானவர் இராமன்.  ஆண்டாள் பிறந்ததே கண்ணனுக்கு, அதை ஞாபகம் வச்சுக்கணும்.  ஆனா அவ பாடும்போது கண்ணனைக் கொண்டாட மாட்டேங்கறா.  இராமனைத்தான் ‘மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்’ன்னு திருப்பாவை பாசுரமோல்லையோ?  அதனாலே இராமன் எல்லாருக்கும் மனத்துக்கினியான்.  யார் மனத்தையும் ஈர்க்கக்கூடியவர்.  சத்ருக்கள்கூட விதிவிலக்கல்ல.

    ரெண்டு கேள்வி சேர்த்துக் கேட்டார் வால்மீஹி. ஜிதக்குரோதஹா – யாருக்குக் கோபமே வராது?  கோபத்தை ஜெயித்தவன் யார்?  கடைசிக் கேள்வி கேட்டார், கஸ்யவிப்பதி தேவாஸ்ச ஜாதரோசஸ்ச சங்யுகே – யாருக்குக் கோபம் வந்துடுத்துன்னா தேவர்கள்கூட பயந்து போய்டுவா?  உடனே இவர் என்ன சந்தேகப்படணும்?  இவர் என்ன கோபத்தை ஜெயித்தவர் யாருன்னு இவரே கேட்கறார், யாருக்கு கோபம் வந்துடுத்துன்னா தேவர்கள்கூட பயப்படுவான்னு கேட்கறார்.  ஒன்னு கோபம் வரணும், இல்லே வரப்படாது.  ரெண்டும் ஒருத்தரிடத்திலே இருக்குமான்னா, கோபமே வராது.  ஆனா எப்போ தெரியுமா வரும்?  தன் அடியவர்களிடத்திலே யாரேனும் அபசாரப்பட்டால் மட்டும் வரும்.  தன்னிடத்தில எத்தனை அபசாரப்பட்டாலும் கோபம் வராது.  தன் பக்தனிடத்தே எங்கு, யார் அபசாரப்பட்டாலும், அப்ப வர்ற கோபத்தைப் பார்க்கணுமே, தெய்வங்கள்கூட நடுங்கிப் போய்டும்.  யாரும் எதிர் நிற்க மாட்டார்கள்.  தன்னை இராவணன் அடியா அடிச்ச வரைக்கும் இராமனுக்குக் கோபமே வரலே.  சிரிச்சிண்டே அத்தனையும் ஏத்திண்டிருந்தார்.  இராவணன் ஹனுமார் பேர்ல முதல் அம்பு விட்டான்.  அப்பதான் இராமனுக்குக் கோபமே வந்தது.  இனி இவனை உயிரோடு விட்டு வைப்பதில்லை, என்று கோபப்பட்டாரோல்லையோ?

    நாரதர் புறப்பட்டுப் போனவுடனே வால்மீஹி போய் தீர்த்தமாடிட்டு வரலாம்ன்னு புறப்பட்டார்.  அவர் சிஷ்யர் பரத்வாஜ மகரிஷி. அவரைக் கூட்டிட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் போகணும் கங்கை நதிக்கு.   நாழியாயிடுத்தே, சீக்கிரம் பக்கத்துல போய்ட்டு வந்துரலாம்னுட்டு, பக்கத்துலே தமஸான்னு ஒரு நதி, அங்க தீர்த்தமாடுவதற்குப் போனார். இன்னிக்கும் இருக்கு, பிட்டூர்ன்னு அந்த இடத்துக்குப் பேர். உத்தர பிரதேசத்திலே கான்பூருக்குப் பக்கத்திலே வால்மீஹியினுடைய ஆஸ்ரமம் இருக்கு.  அந்த இடத்துக்கு ஐம்பது மைல் தொலைவிலே பிட்டூர்ன்னு ஒரு இடம்.  அங்க தீர்த்தமாடிட்டு வெளில வந்தார்.  விசித்ரமான பகவத் சங்கல்பத்தாலே திரும்ப நேர ஆஸ்ரமத்துக்கு வந்துடாமல், பக்கத்துல இருக்கிற தோட்டத்துக்குள்ள போனார்.  அங்க ஒரு மரத்தில் இரு பறவைகள் அமர்ந்திருந்தன.  ஆணும் பெண்ணுமாக சுகத்திலே ஈடுபட்டிருந்தன.  இவர் பார்த்துண்டே இருக்கறச்சே ஒரு வேடன் குறுக்க வந்தான். அம்பு எய்தான், ஒரு பறவையை அடித்து வீழ்த்திவிட்டான்.  துடித்துப் போன மற்றொரு பேடை விரக தாபத்தாலே சிரமப்பட்டுக் கொண்டு இருந்தது.  பார்த்த வால்மீஹிக்கு உள்ளம் முழுக்க சோகம்.  நன்னா இருந்த ரெண்டு பறவையைப் போய் ஒன்னை அடிச்சுட்டானே.  இதுனாலே உள்ளுக்குள்ள இருந்த சோகம், வேகமா ஸ்லோகமா வாயாலே வெளியே வந்தது.  சோகமே ஸ்லோகமாக வந்ததுதான் வால்மீஹி இராமாயணம்ன்னு சொல்லுவர்கள். உடனே அவனுக்கு சாபம் குடுத்துட்டார்.

    மாநிஷாத ப்ரதிஷ்டாந்து மகமஸ்ஸாஸ்வதீஸமாஹா
    எக்க்ரவுஞ்ச மிதுநாதேகமவதீ காமமோகிதம்

    இந்த ரெண்டு க்ரௌஞ்சங்களுக்குள்ள ஒன்றை அடித்து வீழ்த்தினாயே, உனக்கு எல்லா அமங்களங்களும் உண்டாகுக. உனக்கு நன்மை ஏற்படாது, அப்படின்னு சபிச்சார்.  ஆஸ்ரமத்துக்கு வந்துட்டார்.  இதான் முதல்முதல்ல ஒரு ஸ்லோகமே பண்ணியிருக்கது.  இதுவரைக்கும் வால்மீஹி ஸ்லோகம் பண்ணதில்லே.  வாயால் வந்த முதல் ஸ்லோகம் இது.  ஆஸ்ரமத்துக்கு வந்து யோசிச்சுப் பார்த்தா, எல்லா எழுத்து, சீர், அடி, தொடை, யாப்பிலக்கணம் எல்லாமே சரியா இருக்கு.  ஆனா முதல் ஸ்லோகம் போய் சாபமா இருக்கலாமா? மங்களமா பாட ஆரம்பிக்க வேண்டாமா?  அதை விட்டுட்டு சாபமா பாடிட்டோமேன்னு வருத்தம்.

    அப்போ ப்ரம்மா வால்மீஹி ஆஸ்ரமத்துக்கு வருகிறார்.  ப்ரம்மா ஏன் ஏதோ வருத்தமா இருக்கிறீர்ன்னு கேட்க, இவர் இப்படி ஒரு முதல் ஸ்லோகம் பாடினேன், ஆனா அமங்களமா போச்சு, என்று சொல்லுகிறார். ’கவலைப்படவேண்டாம், அந்த ஸ்லோகத்தையே நல்ல வார்த்தையா நான் மாத்தி தரேன்’னார் அவர்.  ப்ரம்மா இப்போ இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்றார். ‘ஆணும் பெண்ணுமா ரெண்டு பறவைகள் உட்கார்ந்திருந்ததே, அதுதான் சீதா இராமர்கள்.  அதை இராவணன்ங்கிற வேடன் வந்து குறுக்க பிரிச்சுட்டான். அதை ஒழித்தது யார் தெரியுமோ?  மா நிஷாத. மா – உண்டாகமல் போகட்டும். வால்மீஹி இந்த அர்த்தத்திலதான் ஸ்லோகம் பண்ணியிருக்கார்.  ஆனா ப்ரம்மா, மா என்ற சப்தத்துக்கு ‘மாதா லக்ஷ்மி’ என்று வைத்துக் கொண்டார். மா நிஷாத – அந்த லக்ஷ்மி அமர்ந்திருக்கக்கூடிய இடம், ஸ்ரீநிவாசப் பெருமாளுடைய திருமார்பு.  அதனாலே, ஸ்ரீநிவாசப் பெருமாள், லக்ஷ்மியை தன் திருமார்பிலே இருத்திக் கொண்டவர், இந்த ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டுட்ட இராவணனை, தான் அம்பு விட்டு கொன்னுட்டார்.  அவனுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகுக.  மா என்ற சப்தத்தை இடம் மாற்றினால் எல்லா அர்த்தமும் மாறிப் போகிறது. ஏனென்றால் மாநிஷாத என்றால், ஏ நிஷாத (வேடனே) உனக்கு எந்த நல்லதும் ஏற்படாமல் போகட்டும், என்று விலக்கித்து.  ஆனால் மா என்பதற்கு பிராட்டி என்று அர்த்தம் வைத்தால், ஸ்ரீநிவாசனே உனக்கு, ஸாஸ்வதீஸ்ஸமாஹா – எத்தெத்தனை நாட்கள் உண்டோ, அத்தனை நாட்களுக்கும் உனக்கு நல்லதே உண்டாகட்டும், அப்படின்னு இந்த ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு மேலே நீர் பாடலாம், என்று ப்ரம்மா அனுகிரகித்தார்.  என்ன பாட வேண்டும் என்று வால்மீஹி கேட்கிறார்.  ப்ரம்மா சொல்றார், நாரதரை அனுப்பி வைத்தேனே, வரலையான்னார்.  அப்போதான் வால்மீஹிக்கு என்ன கேட்டோம் என்றே தெரிகிறது.  ப்ரம்மா சொல்றார், ’நாம்தான் சரஸ்வதியை உன் நாவில் அமர்த்தி இந்த ஸ்லோகமே பாட வைத்தோம்.  நாம்தான் நாரதரை அனுப்பி உமக்கு ராம கதையை சொல்லச் சொன்னோம்.  நமக்கு இராமனுடைய ஆணை, அவசியம் இராம சரித்திரத்தை எழுத வேண்டுமென்று.  அதற்காகத்தான் உம்மிடத்தே நாம் வந்தோம், இப்போது உம்மை அனுக்கிரக்கிறேன்’ன்னு சொல்லுகிறார்.  இனி எத்தனை நாட்கள் காடுகள் இருக்குமோ, எத்தனை நாட்கள் மலைகள் இருக்குமோ, அதுவரைக்கும் இராமாயணமும் இருக்கும்.  இராமாயணம் இருக்கும்வரையிலும் உம்முடைய வைபவமும் உலகத்திலே இருக்கும்.  எதுவரைக்கும் கங்கை ஓடிண்டிருக்கோ, எதுவரைக்கும் ஜோதிஷ்சக்கரங்களெல்லாம் இருக்குமோ, யாவதாவர்த்ததே சக்கரம்ன்னு சொல்லுவர்கள், அதுவரைக்கும் இராமாயணத்தின் பெருமையும் இருக்கும், உம்முடைய வைபவமும் இருக்கும்ன்னு வால்மீஹிக்கு ப்ரம்மா அனுகிரகித்தார்.  அது தொடங்கித்தான் ஸ்ரீஇராமாயணத்தைப் பாட ஆரம்பிச்சார்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta)

    ஸ்ரீராம அவதார காரணம்

    பகவான் செய்தருளிய அவதாரங்களிலே சரணாகதி சாஸ்திரத்தை உலகோருக்குப் புரிய வைப்பதற்காகவே ஸ்ரீஇராமச்சந்திரன் அவதரித்தான்.  ரகுகுல திலகனாய் இராகவன் என்றும், ககுஸ்தனுடைய வம்சத்தில் அவதரித்தபடியால் காகுத்தன் என்றும், இஷ்வாகு வம்சத்திலேயே அவதரித்து, நம் பாரத தேசத்தினுடைய தர்ம சாஸ்திரங்களை எடுத்துரைத்தும் நடத்தியும் காட்டியவன், மரியாதா புருஷோத்தமனான இராமன்.  தசரதனுக்கு குமாரனாகப் பிறந்தபடியால் தாசரதி என்று பெயர் பெற்றான்.  அண்ணனிடத்தே தம்பி எப்படி நடக்க வேண்டும், தந்தையிடத்தே தமையன் எப்படி நடக்க வேண்டும், ஆச்சார்யனிடத்தே சிஷ்யன் எப்படி நடக்க வேண்டும், பொதுவாக பெரியோர்களிடத்தே சிறியோர்கள் எப்படி நடக்க வேண்டும், இந்த முறையெல்லாம் மாறிக் கிடந்ததாம்.  அதை சரிப்படுத்தி, இதுதான் எல்லாரும் நடக்க வேண்டிய முறை என்று உணர்த்துவதற்காகவே இராமனுடைய அவதாரம்.  அது பிரதானமான பிரயோஜனம்.  அதோடுகூட அவதரித்தபோது வேறு சிலவற்றையும் பகவான் செய்து காட்டினான்.  அதிலே ஒன்று இராவணனை முடித்தது.  கொல்லுவதற்காக பகவதவதாரம் அல்ல.  அது பிரதானமான காரணமோ, பிரயோஜனமோ அல்ல.  ஏன்னா ஒரு சாதாரணனான இராவணனைக் கொல்றதுக்குப்போய், சர்வேஸ்வரன் கீழ வரணும்ங்கிற அவசியம் இல்லை.  அதனால அவர் கீழ வரவேண்டுமென்றால், மக்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியாக இருப்பதற்குத்தான்.

    பெயர்க் காரணம்

    தசரதனுக்கு குழந்தைகள் பிறந்தவுடன், அவரது குலகுருவான வசிஷ்டர் பெயர் வைக்கிறார்.

    இராமன் – ரமையதீதி ராமஹா.  காண்பவர்களின் கண்ணையும், மனத்தையும் பறிக்கும்படி அழகை வழங்குவதால், ரமையதீ – ஆனந்தத்தைக் குடுப்பதால், இராமன்னு பெயர்.

    லக்ஷ்மணன் – லக்ஷ்மணஹா லக்ஷ்மி சம்பந்நஹா, லக்ஷ்மி வர்த்தநஹா.  நல்ல லக்ஷ்மி செல்வம் இருக்கப் போறது.  நாடே போய்டப் போறது, இவருக்கு என்ன லக்ஷ்மி சம்பந்தம்ன்னா?  கைங்கர்ய லக்ஷ்மின்னு அர்த்தம்.  ஏன்னா பதினான்கு வருஷம் உண்ணாது, உறங்காது சகல கைங்கர்யங்களையும் பண்ணினாரோ இல்லையோ?  அதுதான் லக்ஷ்மணனுக்கு இருக்கற லக்ஷ்மியே.  ஒரு சம்சாரி, ஜீவாத்மாவுக்கு இருக்கிற லக்ஷ்மின்னா, கைங்கர்யம்தான் லக்ஷ்மி.  கைங்கர்யம்ங்கிறது என்றைக்கும் விட்டுப் பிரியாமல் இருக்ககூடிய லக்ஷ்மி.

    பரதன் – பரதைதி ராஜ்ய பர்நாத்.  இராஜ்யத்தை இவன்தான் பரிக்கப் போகிறான், அதனால பரதன் என்று பெயர்.  பரதன் எத்தனை வருஷம் ஆண்டார்?  பதினாலு வருஷம், மத்தபடி இராஜ்யத்தை அவன் ஆளவே இல்லே.  அவருக்கு ஏன் அப்புறம் பரதன்னு பேர்?  இராஜ்ய பாரத்தை சுமக்கப் போறார், அதனால பரதன்னா, இராமனுக்கு சொல்லியிருக்கலாம், தசரதனுக்கு சொல்லியிருக்கலாம், அஜமகா ராஜாவுக்கு சொல்லியிருக்கலாம், எந்த ராஜாவுக்கும் சொல்லியிருக்கலாம்.  அத்தனை பேரையும் விட்டுட்டு பரதனுக்கு ஏன் வைச்சார்ன்னா, பரதன் ஒருத்தன்தான் இராஜ்யத்தை பாரம்ன்னு நினைச்சிண்டு சுமந்தான். மற்ற யாரும் பாரம்ன்னு நினைக்கவே இல்லையோல்லையோ?  இதைப் போய் என் தலையில வைச்சுட்டாளேங்கிற வருத்தம் பரதனுக்குத்தான் உண்டு.  அதனாலதான் இராஜ்யத்தைப் பரித்தவன் பரதன்.

    சத்ருக்கணன் – நித்ய சத்ருக்கநஹா.  சத்ருக்களை ஜெயித்தவன், சத்ருக்கணன்.  எந்த சத்ருவை? இராம பக்திங்கிற சத்ருவைத் தாண்டி, பரத பக்தில நின்னானோல்லையோ?  ஏன்னா இவர் சண்டை போட்டே நாம பார்த்ததில்லே. லவனாசுரனை ஒருதரம் போய் சண்டை போட்டு முடிச்சுட்டு வந்தார்.  மற்றபடி அவர் எல்லாம் சண்டைக்கே வரலை.  அப்போ இராமனை சத்ருக்கணன்னு பேர் வைக்கிறத விட்டுட்டு, சத்ருக்கணனுக்கு வைச்சுருக்காளேன்னா, இராம பக்தின்னு பகவானுக்கு அடிமையா இருக்கறதவிட, அதைத்தாண்டி பக்தனுக்கு அடிமையா இருக்கணும்ன்னு நினைச்சானோ இல்லையோ?  அதனாலதான் சத்ருக்கணஹா நித்ய சத்ருக்கணஹான்னு பேர் வைத்தார்.

    அவதார நோக்கம்

    இராமனுடைய அவதாரத்துக்குப் பிரயோஜனம், மூத்தவன் சொல்லை இளையவன் கேட்க வேண்டும்.  இது லோகத்துல மாறிப் போச்சு.  முறைமாறிப் போனதை சரிப்படுத்துவதற்காக ஸ்ரீராமாவதாரம். தகப்பனார் சொன்னா பிள்ளை கேட்கணும்; குரு சொன்னா சிஷ்யன் கேட்கணும்; அண்ணன் சொன்னா தம்பி கேட்கணும்.  இதைப் போல மூத்தவன் சொன்னால் இளையவன் கேட்க வேண்டும்.  இதை நிலைநிறுத்துவதற்காக இராமன் பிறந்துட்டார்.

    லக்ஷ்மணனுடைய அவதாரத்துக்குப் பிரயோஜனம், சேஷத்துவம்.  சேஷத்துவத்தை அறிவிப்பதற்காக லக்ஷ்மணனுடைய அவதாரம்.  சேஷத்துவம்ன்னால் என்ன?  பகவானுக்கு அடிமையாக இருக்கும் தன்மை.  பகவானுக்கு கைங்கர்யம் பண்ண வேண்டிய தேவை.  ஒரு ஆத்மா எவ்வாறு ஞானமயன், ஆனந்தமயனோ, அதோடு அவர் பகவானுக்கு அடிமை என்பதும் இயல்பு.  ஆண்டானுக்கு அடிமை கைங்கர்யம் செய்வதே, தொண்டு புரிவதே கடமை.  இதை உணர்த்துபவர் லக்ஷ்மணன்.  இதைப்பற்றி சாஸ்திரமே சொல்லுகிறது,

    விசித்ரா தேகசம்பத்திஹி ஈஸ்வராய நிவேதிதுதும்
    பூர்வமேவ கிதாப்ரம்மந்நு அஸ்தபாதாதி சங்யுதா

    நம்முடைய கை, கால்கள் முதலானவற்றையெல்லாம் பரப்ரம்மமான எம்பெருமான் படைத்து ‘இது எனக்காக உபயோகப்படட்டும்’, அப்படின்னு சொல்லிக் குடுத்துருக்கார்.  அவருக்கு உபயோகமே படுத்தாது விட்டுட்டோம்ன்னா?  நமக்காக நிறைய உபயோகப்படுத்திக்கிறோம், கொஞ்சமாவது அவருக்காக உபயோகப்படுத்த வேண்டுமோல்லையோ?  அதைச் செய்யணும்ங்கிறதுக்குத்தான் லக்ஷ்மணன் பிறந்து, கைங்கர்யமே வாழ்க்கை, தொண்டு புரிதலேதான் வாழ்க்கைன்னு வாழ்ந்து காட்டினான்.  இதைத்தான் சேஷத்துவம்ன்னு சொல்லுகிறோம்.

    பரதனுடைய அவதாரத்துக்குப் பிரயோஜனம், பகவத் பாரதந்திரியமே சொரூபம்ன்னு சொல்வது.  சொரூபம்ன்னா இயற்கைத் தன்மை.  பாரதந்திரியம்ன்னால், பெருமானையே சார்ந்து இருத்தல்.  நமக்கு நாம் சுதந்திரர் அல்லர்கள், பரதந்திரர்கள்.  யாருக்கு தானே பிரதானமோ, அவன் சுதந்திரன்.  யாருக்கு பரனான பகவான் பிரதானமோ, அவன் பரதந்திரன்.  பரதன் இருந்த நிலை, ‘பகவானுக்கு அடியேன் பரதந்திரன்.  அவர் காட்டில வைச்சாலும் இருக்கேன்.  நாட்டிலே வைச்சாலும் இருக்கேன்.  நாட்டை ஆளுன்னு சொன்னாலும் ஆளுவேன், வேண்டாதே சொன்னாலும் விட்டுடுவேன்.  எப்படியாயிருந்தாலும் தயார்’.  லக்ஷ்மணன் அந்த அளவு ஒத்துக்கமாட்டார்.  இராமன் நாட்டிலே இருன்னு சொன்னால், வருவேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டுப் போனானோல்லையோ?  அப்போ அடிமைத்தனத்திலதான் அவருக்கு ஊற்றம்.  ஆனா பரதன் இந்தப் பிடிவாதம் பிடிக்கவில்லை.  அப்போ லக்ஷ்மணனுக்கு ’தான் தொண்டு புரியவேண்டும்’ங்கிறது முக்கியம்.  பரதனுக்கு ‘அவன் மனம்படி நடக்க வேண்டும்’ங்கிறது முக்கியம்.  அதனாலதான் லக்ஷ்மணனைக் காட்டிலும் பரதனுக்கு ஓர் படி உயர்வுண்டுன்னு சொல்லுவர்கள்.

    சத்ருக்கணனுடைய அவதாரம், அவரும் சேக்ஷத்துவம், பாரதந்திரியம்தான் சொன்னார். ஆனா பகவானிடத்தில் அல்ல. பாகவதனிடத்தில்.  பகவானைக் காட்டிலும் அவன் அடியவனுக்கு அடியவனாக இருப்பேன்.  அவன் அடியவனே எனக்கு முக்கியம்.  இதைச் சொல்லுவதற்காக சத்ருக்கணனுடைய அவதாரம்.

    இதனால்தான் பரதாழ்வான், சத்ருக்கணனாழ்வான்னு எழுதுவர்கள்.  லக்ஷ்மண ஆழ்வான்னு ரொம்ப பேர் கிடையாது.  ஏன் அந்த இருவருக்கு மட்டும் இப்படி உயர்வாகப் பேர்ன்னா, சேஷத்துவத்தைவிட பாரதந்திரியத்துக்கு ஏற்றம்.  அதனாலதான் பரதாழ்வான்.  பகவத் சேஷத்துவத்தைவிட பாகவத சேஷத்துவம் ஏற்றம். அதனாலதான் ஸ்ரீசத்ருக்கணனாழ்வான்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta)

    எவ்வாறு மஹாபாரதத்தைவிட ஸ்ரீராமாயணம் பிரபலம்?

    மஹாபாரதம் கண்ணனைப்பற்றி பதினெட்டு பர்வங்களிலும் சொல்லவில்லை.  எங்கேயோ, யாராரோ பிறந்து, எப்படியெப்படியோ வளர்ந்து, அத்தனை கதையும் மஹாபாரதத்திலே உண்டு.  ஆனால் இராமாயணத்தை எடுத்துக் கொண்டால், முதல் ஸர்க்கத்திலே இருந்து கடைசி ஸர்க்கம் வரைக்கும் இராமன் உண்டு.  அதுல குறைவில்லே.  வியாஸாச்சாரியருக்கே, ஓ, நாம இப்படிப் போய் ஒரு மஹாபாரதம் எழுதிட்டோமேன்னு, ஏன்னா, மஹாபாரதம் எழுதிட்டு, யார் யார் கதையோ எழுதிட்டேன், சொல்ல வந்த கதையை விட்டுட்டேன்னு ஒரு வருத்தம், அதனாலதான் வருத்தம் தீர பாகவதமே எழுதினார் அவர்.  அவருக்கே தோணிப்போச்சு, இத்தனை கதையை எதுக்குச் சொன்னேன்?  இதை வச்சிண்டு யாரும் மோட்சம் போகப் போறதில்லே.  நான் எதுக்கு அதைச் சொன்னேன்னுட்டு, மாற்றி பாகவத மஹா புராணத்தை இயற்றினார்.  அந்தக் குறைபாடு இராமயணத்துக்கு இல்லை.  என்ன சொல்ல வந்தாரோ, அதை முதல்லே இருந்து கடைசி வரைக்கும் அப்பழுக்கில்லாம சொல்லிட்டுப் போய்ட்டாரோல்லையோ வால்மீஹி பகவான்?  இராமயணத்தை இராமன்னு தொடங்கினார், இராமனோடேயே முற்றுப்பெற்று வைத்தார்.

    இன்னொன்னு, ரெண்டுமே பகவத் அவதாரந்தான், இராமனாகட்டும், கண்ணனாகட்டும். ரெண்டு பேருக்கும் ஒற்றுமையும் நிறைய உண்டு, வேற்றுமையும் நிறைய உண்டு.  இராமன் சூர்ய குலத்தில பிறந்தார். சந்திர வம்சத்தில பிறந்தவன் கண்ணன்.  இராமனோ அரண்மனையில பிறந்தார், கண்ணனோ சிறைச்சாலையில பிறந்தார்.  இராமன் பகல்வேளையிலே பிறந்தார், கண்ணன் ராத்திரி வேளையிலே பிறந்தார்.  இராமன் நவமியிலே அவதரித்தார். கண்ணன் அஷ்டமியிலே அவதரித்தான்.  இராமனுக்கு எப்போதும், எல்லாமே ஒன்று. பிறந்த இடம், வளர்ந்த இடம், ஆண்ட இடம், புறப்பட்டுப் போன இடம், எல்லாமே ஒன்று.  கண்ணனுக்கு அத்தனையுமே வேறே. பிறந்த இடம் மதுரை, வளர்ந்தது கோகுலம், வாழ்ந்தது துவாரகை, புறப்பட்டது பிரபாஸ தீர்த்தம். ஓரிடத்தில அவர் இருக்கவேமாட்டார்.  நாலும் வெவ்வேறே.  எல்லாம் ரெண்டு ரெண்டா இருந்தா, வார்த்தையும் ரெண்டு.  இராமனுக்கு சொல்லு ஒன்றுதான் எப்பவுமே.  ரெண்டாவது சொல்லு பேசமாட்டார்.  ஆனா கண்ணனோ, ‘மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக்கண்டீரே’ன்னு ஆண்டாள் பாசுரம்.  அவளுக்குத்தான் உண்மை தெரியும், கைப்பிடித்த மனைவி ஆண்டாள்.  அதனால அவ சொன்னபடிதான் நாம கேட்கணும்.  இந்தப் பொய் சொல்ற பிள்ளை கண்ணனை எங்கேயாவது பார்த்தீளா, அப்படின்னு ஆண்டாளே பாசுரத்திலே கேட்கறாளோல்லையோ?  போட்டி ஒன்றுமில்லை இப்போ, ரெண்டும் அனுபவம்.

    அதோடு மட்டுமல்ல, கண்ணனைப்பற்றி இருந்ததுன்னாக்கூட ருக்மிணிப் பிராட்டியைப்பற்றி நிறைய இருக்கா என்ன? இல்லையே, மஹாபாரதத்தில பெரிய கதை இல்லை.  இல்லே, கண்ணனுடைய சிஷ்யர்கள், கண்ணனுடைய பக்தர்களைப்பற்றி ஏதாவது நிறைய எழுதியிருக்கா?  இல்லே. அந்தமாதிரி எல்லாம் குறைபாடுகள்.  ஆனா ஸ்ரீராமாயணம்ன்னு எடுத்துண்டா, இராமனைவிட ஒருபடி மேல சீதாதேவியினுடைய சரித்திரம் இருக்கோல்லையோ?  அவளைப்பற்றி சேர்த்து இருக்கறபடியாலே ‘ஸ்ரீராமாயணம்’. மஹாபாரதம்ங்கிறோம், அப்படி ஒன்னும் ‘ஸ்ரீமஹாபாரதம்’ன்னு வார்த்தையிலே இருக்கறதாத் தெரியலே.  ஆனா இராமயணம்ன்னா, ஸ்ரீமத்ராமாயணம், ஸ்ரீராமாயணம்ங்கிறோமே, ஏன்னா ‘ஸ்ரீ’ இருக்காளே.  சீதை முழுக்க அதிலே இருக்கறபடியாலேதான் ஸ்ரீமத்ராமாயணம், ஸ்ரீராமாயணம்ன்னு சொல்றோம்.

    இதைக்காட்டிலும் சொல்லனும்ன்னா, இராமன் எங்கேயும் இருக்கட்டும், சீதை எங்கேயும் இருக்கட்டும். ஆனா அவாள்லாம் இப்போ இங்கே இல்லே.  இப்போ இந்த மேடையிலே, இந்த மண்டபத்துக்குள்ளே இராமாயண கதாபாத்திரத்திலேர்ந்து ஒருத்தர்தான் இருக்கார்.  வேற யாரும் வரமாட்டா நம்மகிட்டே.  ஆனா அவர்மட்டும் போகவேமாட்டார்.  அவர், ஆஞ்சநேயரான ஹனுமார். (உபந்நியாச மண்டபத்தில்) பக்கத்தில போட்டிருக்கிற ஆசனம் வேற யாருக்குமல்ல, அவருக்குத்தான்.  அவர் செய்தது,

    யத்ரயத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ரதத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்
    பாஷ்பவாரி பரிபூர்ந லோசநம் மாருதிம் நமத ராக்ஷசாந்தஹம்

    கண்ணும் கண்ணீருமாக, கைகளைக் கூப்பிக்கொண்டு, தலையைக் குனிந்து கொண்டு, எந்தக் குழந்தை இராமாயணம் படிச்சாக்கூட கேட்டுண்டு இருப்பர்.  வால்மீஹி சொன்னதையே அவர் கேட்டாச்சு.  அவரே ஒருதரம் சொல்லியாச்சு.  லவ குசர்கள் கானம் பண்ணினதைக் கேட்டாச்சு.  அப்படிக் கேட்ட செவிக்கு நாம பேசறதெல்லாம் முதல்ல ஏற்கவே ஏற்காது.  ரொம்ப உசத்தியான சொல்லுக்கு காதைக் குடுத்திருந்தீள்ன்னு வச்சுக்கங்கோ, சாதாரண சொல்லு அந்தக் காதில ஏறவே ஏறாது.  இது ஒன்னுமில்லாத நமக்கே வழக்கம்.  அப்படியிருக்கச்சே ஹனுமானுக்கு, வால்மீஹீயினிடத்திலேர்ந்து இராமாயணத்தைக் கேட்டவர் போய், இன்னைக்கு நாம உளறிண்டு இருக்கோம், அவ்வளவுதான் சொல்லணும், ஆனா அந்த உளறலைக்கூடே?  கேட்கட்டும், ஆனா பலபேர் சும்மா மோட்டுவளையைப் பார்த்துண்டு கேட்டுண்டு இருப்பா. அப்படி இல்லையாம்.  கண்ணும் கண்ணீருமாக கேட்டுக் கொண்டு இருக்கிறார்.  யத்ரயத்ர ரகுநாத கீர்த்தநம் – எங்கெங்கு இராம கதை பாடப்படுகிறதோ, தத்ரதத்ர – அங்கங்கு, க்ருதமஸ்தகாஞ்சலிம் – தன்னுடைய கைகளைக் கூப்பி, தலையை வணங்கிக் கொண்டு, பாஷ்பவாரி பரிபூர்ந லோசநம் – கண்ணு முழுக்கக் குளமாக, கண்ணீர் தேங்கி ஹனுமார் கேட்டுண்டு இருக்காரேன்னா, யாரு சொல்றாங்கிறது அவருக்கு முக்கியமில்லே.  சொல்லப்பட்டது ராம கதையா?  சொல்லப்பட்டது ராமனுடைய திருநாமமா, அப்படிங்கிறதுலேயே நிரதராக இருக்கிறார்.  இப்படி பல பெருமைகள் நிறைந்ததுதான் ஸ்ரீமத் இராமாயணம்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta)

    May 07

    ஸ்ரீமத் இராமாயணம் - ஸ்துதி

    கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
    ஆருக்ய கவிதாஸாஹாம் வந்தே வால்மீஹி கோகிலம்

    வால்மீஹேர் முநிசிம்ஹஸ்ச கவிதா வநசாரிநஹா
    ஸ்ருந்வந்ராம கதாநாதம் கோநயாதி பராங்கதிம்

    யவ்ப்விவந் சததம் ராம சரிதா அம்ருத சாகரம்
    அதிர்ப்தஸ்த்தம் முநிம் வந்தே ப்ராஜேதச மகல்மஸம்

    கோஸ்பதி க்ருதவாராஸிம் மசகீகிருத ராக்ஷஸம்
    ராமாயண மகாமாலா ரத்னம் வந்தே அநிலாத்மஜம்

    அஞ்சனாநஞ்சனம் வீரம் ஜானகி சோகநாஸநம்
    கபீஸமக்ஸகந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

    மனோஜவம் மாருததுல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
    வாதாத்மஜம் வாநர யூதமுக்யம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி

    உல்லங்யஸிந்தோ ஸலிலம்ஸலீலம் யஸ்ஸோகவந்நிம் ஜநகாத்மஜாயாஹா
    ஆதாயதேநைவ தாதாஹ லங்காம் நமாமிதம் ப்ராஞ்சலிர் ஆஞ்சநேயம்

    ஆஞ்சநேயம் அதிபாடலாநநம்
    காஞ்சனாத்ரி கமநீய விக்ரஹம்
    பாரிஜாததரு மூலவாஸிநம்
    பாவயாமி பவமாநநந்தனம்

    யத்ரயத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ரதத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்
    பாஷ்பவாரி பரிபூர்ந லோசநம் மாருதிம் நமத ராக்ஷசாந்தஹம்

    வேதவேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே
    வேதப்ராஜேதச தாஸீத் சாக்‌ஷாத் ராமாயணாத்மநா

    ததுஉபகதஸமாஸ ஸந்தியோகம் ஸமமதுரோபநதார்த்த வாக்யபத்தம்
    ரகுவரசரிதம் முநிப்ரநீதம் தசஸிரஸஸ்த வதம் நிஸாமயத்வம்

    ஸ்ரீராகவம்

    தசரதாத்மஜம் அப்ரமேயம் ஸீதாபதிம் ரகுகுலாந்வய ரத்னதீபம்
    ஆஜானுபாகும் அரவிந்த தலாயதாக்ஷம் ராமம் நிஷாசர விநாசகரம் நமாமி

    வைதேஹி சஹிதம் ஸுரத்ருமதலே ஹைமேமஹாமண்டபே
    மத்யே புஷ்பஹமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்திதம்

    அக்ரே வாசயதிப் ப்ரபஞ்சநஸுதே தத்வம் முநிப்யவ்ப்பரம்
    வ்யாக்யாந்தம் பரதாதிவிப் பரிவிருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஸ்ரீஇராமாயணம் உபந்நியாசம் – Altlanta)