sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    April 25

    விபீஷண சரணாகதி - பாகம் 2

    முந்தைய பாகம், பாகம் 1

    விபீஷணன் ஆசையோட வந்தான்.  இராமனைப் பற்ற வேண்டும்ங்கிற எண்ணத்தோட வந்தான்.  எத்தனை சந்தேகப்பட்டிருக்கணும்?  ஒரு இராஜா தன் நாட்டைவிட்டு இன்னொரு இடத்தில போகணும்ன்னால், முதல்ல வெள்ளைக்கொடியை அனுப்பனுமோல்லையோ?  போய் என்னன்ன நடக்கிறதுன்னு பார்த்துட்டு வந்துதானே பற்றுவர்கள்?  ஒண்ணுமே பண்ணலையே விபீஷணன்.  நாலு பேரோடே கிளம்பினான், நேர வந்துட்டான்.  அதுதான் சரணாகதிக்கு வேண்டிய மஹா விஸ்வாஸம்.  விஸ்வாஸம்ன்னா என்னான்னு பார்ப்போம்.  சரணம்ன்னு ஒருத்தர் வரவேணும்ன்னால்,

    அநுகூல்யஸ்ய சங்கல்பஹா பிராதிகூல்யஸ்ய வர்ஜனம்
    ரக்ஷ்ஸிஸ்யதீதி விஸ்வாஸஹா கோத்ருத்தவர்நந்ததா
    தார்ப்பண்யம் ஆத்மநிக்ஷ்யேபே ஷட்விதா சரணாகதிஹி

    இந்த ஸ்லோகம் ரொம்ப முக்கியம். இது சம்ஹிதா வாக்யம்.  அஹிபுத்ஹிதை சம்ஹிதை, விஹஹேஸ்வர சம்ஹிதை, இதிலெல்லாம்தான் நிறைய சரணாகதியைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும்.  அதுல சொல்றது, நான் சரணம்ன்னு சொல்லணும்ன்னா, இந்த ஆறும் தேவை.  அநுகூல்யஸ்ய சங்கல்பஹா – பகவானுக்கு எது பிடித்தமோ அது மட்டும் செய்வேன்.  பிராதிகூல்யஸ்ய வர்ஜனம் – அவருக்கு எது பிடிக்காதோ அதைக் கண்டிப்பாக தவிர்த்துவிடுவேன்.  ரக்ஷ்ஸிஸ்யதீதி விஸ்வாஸஹா – எப்படியும் பகவான் என்னை இரட்சிப்பன்ங்கிற உறுதியான நம்பிக்கையோடே இருப்பேன்.  கோத்ருத்தவர்நந்ததா – தேவரீரே அடியேனுக்கு இரட்சகனாக இருக்கவேண்டும் என்று வேண்டுவேன்.  தார்ப்பண்யம் – அடியேன் கையில் ஒன்றுமில்லை என்பதை வெளியிட்டுக் கொள்வேன்.  ஆத்மநிக்ஷ்யேபம் – நம் ஆத்மா அவனது என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.  இந்த ஆறும் சரணாகதிக்கு ரொம்ப முக்கியம்.

    இதில சலிச்சு எது முக்கியமா வேண்டும்ன்னு கேட்டா, ரக்ஷ்ஸிஸ்யதீதி விஸ்வாஸஹா – கண்டிப்பா இரட்சிப்பன்ங்கிற நம்பிக்கை.  அந்த நம்பிக்கை இருந்தது விபீஷணனிடத்தே.  இல்லேன்னா, ஆள் அனுப்பிச்சுப் பார்த்துட்டு இராமன் ஏத்துப்பரான்னு கேட்டுட்டுன்னா வரணும்?  அவனுக்கு நம்பிக்கை இராமனிடத்திலே.  ஒருநாளும் கைவிடமாட்டான்னு.  அதனால நேர புறப்பட்டானே தவிர, யாரிடத்திலேயும் விசாரிக்கவே இல்லே.

    அநுகூல்யஸ்ய சங்கல்பஹா – இராமனுக்குப் பிடிச்சததான் பண்ணுவேன்.  இதை விபீஷணன் பண்ணிண்டே இருக்கான். என்ன செய்தான் பாருங்கோ.  இராமனுக்குப் பிடித்தது சீதா ரக்ஷணம்.  சீதை கொண்டு போய் சமர்ப்பிச்சுரு, சமர்ப்பிச்சுருன்னு பேசிண்டே இருக்கானோல்லையோ?  அப்போ இராமனுக்குப் பிடிச்சத பண்ணார்ன்னு அர்த்தம்.

    பிராதிகூல்யஸ்ய வர்ஜனம் – இராமனுக்குப் பிடிக்காததைப் பண்ணவே கூடாது.  யாரிடத்திலயும் மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் துன்புறுத்தக்கூடாது.  இது இராமனுக்குப் பிடிக்காது.  அதை விபீஷணன் செய்யவே மாட்டார்.  இராவணனை விட்டுட்டு வந்தாரே தவிர, வேறொன்னும் அவனுக்குத் தீங்கு நினைக்கலையோல்லையோ?  அப்படியே விட்டுட்டான்.

    வந்தவன் ப்ரார்த்திக்கிறானா, தேவரீர்தான் எனக்கு ரட்சகமா இருக்கணும்ன்னு?  ப்ரார்த்திக்கிறான், ஒருதடவை இல்லே, மூணுதடவை ப்ரார்த்திக்கிறான்.  ராகவம் சரணங்கதஹா – ராகவனிடத்திலே சரணாகதி பண்ணுவதற்கு வந்தேன்.  பவந்தம் சரணங்கதஹா – உன் திருவடியைப் பற்ற வந்தேன்.  பாதயோஹோ நிபபாத சரணாம்வேஷி – உன் திருவடிகளை இதோ பற்றுகிறேன், என்று சரணம், சரணம்ன்னு பெருமானிடத்தே ப்ரார்த்தித்து இருக்கிறான்.

    ஆத்பநிக்ஷேபம் – நானும் என் அடிமைகளும் அத்தனை பேரும் உனக்கே சொத்து என்று சொல்லிக் கொண்டே வந்தான்.  எத்வா புத்ராஞ்ச தாராஞ்ச பவத்கதம்மே ராஜ்யஞ்ச ஜீவீதஞ்ச சுகாநிச – என்னுடைய புத்திரர்கள், தாரம், ராஜ்யம், சொத்து, சுகம் மொத்தத்தையும் விட்டேன் இராமா.  இனி எனக்கு எதுவாக இருந்தாலும் உன்னுடைய திருவடி மட்டுமே.  இந்த நிழலை விட்டு அங்கிங்கு செல்ல மாட்டேன்னு விபீஷணன் வந்தானோல்லையோ?  இந்த ஆறு லக்ஷணங்களும் அவனிடத்தே பொருந்தி இருந்தனங்கிறது முக்கியம்.

    அப்போ அவர் ஆகாசத்தில வந்துட்டார்.  நாலு இராக்ஷசர்களோட வர்றார்.  பயந்திருக்கான் சுக்ரீவன், இவன் வேற கையைக் கூப்பிண்டு வந்துட்டானேன்னு.  வேதாந்த தேசிகன் அஞ்சலி வைபவம்ன்னே ஒரு ஸ்தோத்திரம் பண்ணியிருக்கார்.  பகவானைப் பார்த்து நாம அஞ்சலி பண்ணிட்டோம்ன்னால், அதுக்கு அவர் உருகிடுறாராம்.  அஞ்சலின்னா எப்படி அர்த்தம் தெரியுமா?  அம் ஜலையதீதி அஞ்சலிஹி – பகவான், அம் – பகவானை, ஜலையதீ – உருக்கக்கூடியது, அஞ்சலி.  ஓ, இப்படி வந்துட்டானே, என்ன ஆயிடுமோன்னு பயந்துதான் சுக்ரீவன், ஆகாசத்தில ராக்ஷசன் வந்துட்டான்னு தூண்டிவிட்டுட்டான் இவாளை.

    விபீஷணன் கீழே இறங்கவேயில்லே.  அவன் கீழ என்ன நடக்கறதுங்கிறத பார்த்துட்டான்.  ஆகாசத்தில நின்று கொண்டு கீழ இருக்கிற சுக்ரீவாதிகளைப் பார்த்துட்டு கலங்கவேயில்லை.  சரணம்ன்னு வருபவன் எதைக் கண்டும் கலங்கமாட்டான்.  யார் எதிர்த்தாலும் கலங்கமாட்டான்.  ரொம்ப ஆச்சர்யமான ஸ்லோகம்.

    நிவேதயத மாம் ஸிப்ரம் விபீஷண உபஸ்திதம்
    ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மகாத்மநே

    நிவேதயத – நான் வந்திருக்கேன்னு எல்லாரும் சொல்லுங்கோள்.  கீழ இருக்கிற மொத்தப் பேரைப் பார்த்தும் பொதுவாச் சொல்றான்.  மாம் – நான்;  ஸிப்ரம் – சீக்கிரம் (போய்ச் சொல்லுங்கோள்);  விபீஷண உபஸ்திதம் – விபீஷணனான நான் வந்திருக்கேன்னு சொல்லுங்கோள்;  யாரிடத்திலே போய் சொல்ல வேண்டுமென்றால், ராகவாய – ரகுகுல திலகமான இராமனிடத்தே;  மகாத்மநே – மகாத்மாவான இராமனிடத்தே;  ஸர்வலோக ஸரண்யாய – சர்வலோகத்துக்கும் சரண்யனான இராமனிடத்தே, என்று பிரார்த்திக்கிறான்.

    நிவேதயத. சுக்ரீவனைப் பார்த்து மட்டும் சொல்றதுதானே?  ஹனுமானைப் பார்த்து மட்டும் சொல்றதுதானே?   பரிச்சயம் வேறு இருக்கோல்லையோ?  ஏற்கனவே ஹனுமானைப் பார்த்திருக்கார் அவர்.  அப்போ அவரைப் பார்த்து நீ போய்ச் சொல்லுன்னு சொல்லலாமே, ஏன் பொதுவாக எல்லாரையும் பார்த்து நிவேதயதன்னு சொல்றார்ன்னா, என்றைக்கும் பாகவதர்கள் பலபேர் இருக்கும் போது, ஒருத்தரை நமஸ்கரிக்கக் கூடாது.  மொத்தப் பேரைச் சேர்த்துத்தான் நமஸ்கரிக்க வேண்டும்.  அதனால மொத்தப் பேரை சேர்த்துச் சொல்லிட்டான்.  ஆனா அதிலேயே சாமர்த்தியமும் இருக்குன்னு வச்சுக்கங்கோ.  நான் யாராவது ஒருத்தரைப் பார்த்துச் சொல்ல, அவருக்கு என்னைப் பிடிக்காமப் போய்டுச்சுன்னு வச்சுக்கங்கோ, அவர் போய்ச் சொல்லவேமாட்டார்.  கோஷ்டில மொத்தமாச் சொல்லி வைச்சா, யாராவது ஒருத்தருக்குப் பிடிக்காதா?  அவன் போய் இராமனிடத்திலே சொல்லமாட்டானா?  இந்த சாமர்த்தியத்துக்காக நிவேதயத.  மூன்றாவது அர்த்தம் சொன்னார், பாகவதோத்தமர்கள் அத்தனை பேருக்கும் ஒரு பேர் கிடைக்கணும்.  விபீஷணனை இராமனோடு சேர்த்து வைத்தார்கள்ங்கிற பெருமை மொத்த பாகவதர்களுக்கும் கிடைக்க வேண்டாமா?  அது ஏன் ஒருத்தருக்கு மட்டும் கிடைக்கணும்?  அதனாலதான் நிவேதயத.

    சுக்ரீவன் பார்க்கிறார், ‘சொல்லுங்கோள்ன்னா என்ன அர்த்தம்?’.  என்ன சொல்ல வேண்டும், யாரிடத்தில சொல்ல வேண்டும்ன்னு சுக்ரீவன் கேட்கிறார்.  மாம் – நான் வந்திருக்கிறேன்னு போய்ச் சொல்லுங்கோள்.  ’சரி சொல்றேன், நாலு நாள் ஆகட்டும்.  இப்பதானே வந்திருக்கே. என்ன அவசரம்?  உடனே உடனே போய்ச் சொல்லிடமுடியுமா என்ன?’  ஸிப்ரம் நிவேதயத – சீக்கிரம் போய்ச் சொல்லு;  மாத்திட்டான் ஸ்லோகத்தை.  ஏன்னா, முதல் வ்யாக்யானம் பண்ணார், ‘இப்போ இராமனுக்கே என்னை அங்கீகாரம் பண்றதுக்கு நினைவு இருக்கு. ஆசை இருக்கு. ஒருவேளை நீ எங்கேயாவது மெதுவா, நாலு நாள் கழிச்சுப் போய்ச் சொல்றதுக்குள்ள மனசு மாறிப்போய் அங்கீகாரம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டா?’  இது முதல் அபிப்ராயம் சொன்னார்.  யோசித்துப் பார்த்தார், இராமன் கூடவா மாறுவன்?  லோகத்தார் மாறுவர்களே தவிர, இராமன் ஒருநாளும் மாறமாட்டான்.  என்னைக்கும் சரணம்ன்னு யார் வந்தாலும் இராமனுக்கு அங்கீகரிக்கத்தான் தெரியும். அப்பன்னா விபீஷணன் என்ன தெரியுமா நினைக்கிறான்?  ‘இன்னைக்கு இராமனைப்பற்றி சரணாகதி பண்ணனும்ங்கிற எண்ணம் என்கிட்ட இருக்கு, சுக்ரீவா.  நீ அரைமணி காலதாமதப்படுத்திட்டியானா, இந்த இராக்ஷச புத்தி எப்படிப் போகும்ன்னு எனக்குத் தெரியாது.  இந்த நிமிஷம் அவன் திருவடிகளைப் பற்றணும்ன்னு ஆசை. சீக்கிரம் போய்ச் சொன்னியானா என் காரியமும் நடந்துரும், சரணாகதனை ஏத்துண்டான்னு எனக்குக் கிடைச்சுரும்.  இராமனுக்கு சரண்யன்ங்கிற பட்டம் கிடைச்சுரும்.  உங்களுக்கு சேர்த்து வைச்சவாங்கிற பட்டம் கிடைச்சுரும்.  எல்லாருக்கும் நன்மை உடனே நடக்கும், காலதாமதப்படுத்தாதே’.  ஸிப்ரம் நிவேதயத.

    விபீஷண உபஸ்திதம் – இராமபிரானுடைய பத்தினியான சீதாவைப் பிரித்த இராவணனுடைய தம்பி விபீஷணன் வந்திருக்கேன்னு சொல்லுங்கோள்.  உபஸ்திதம் – எங்கிருந்தோ நான் கேட்கலை.  இதோ இராமபிரான் இருக்கும் இடத்துக்கே, ஏற்கனவே ஆசையோடு வந்திருக்கிறேன்னு சொல்லுங்கோள்.

    யாரிடத்தில சொல்லணும்ன்னு சுக்ரீவன் கேட்டான்.  இது நல்ல கதையா இருக்கே?  இத்தனை நாழி நான் என்ன சொல்லிண்டிருக்கேன், யாரிடத்தில சொல்லணும்ன்னு கேட்கறியே?  ராகவாய மகாத்மநே ஸர்வலோக ஸரண்யாய நிவேதயத.  ரகுகுலத்திலே பிறந்த இராகவனிடத்திலே சொல்லுங்கள்.  மகாத்மாவிடத்தில் சொல்லுங்கள்.  சர்வலோக சரண்யனிடத்தில் சொல்லுங்கள்.  இந்த இடத்தில் சரண்யனுக்குண்டான விதிகளை வைத்துப் பார்க்க வேண்டும்.  ராகவாய – ரகுகுலத்தில் பிறந்தவன் என்பதனாலே, சௌலப்யம், எளிமை சொல்லப்பட்டது.  மகாத்மநே – எப்போ மகாத்மான்னு இருக்கோ, ரொம்பப் பெரியவர், பரத்வம் உடையவர்.  யாருக்கு பரத்வமும், சௌலப்யமும் இருக்கோ அவர்தான் ‘ஸர்வலோக சரண்யன்’.

    சுக்ரீவன் நேர இராமனிடத்திலே வந்தான்.  சுக்ரீவன், ஹனுமான், லக்ஷ்மணன், மற்ற எல்லாரும் பேசறதுக்கு ஆரம்பித்தார்கள்.  ‘நான்கு இராக்ஷசர்களோடு வந்திருக்கிறான் விபீஷணன்.  அவனைப் பேசாமல் கொன்றுவிட வேண்டும்’, இதுதான் முதல் பேச்சு, சுக்ரீவன் ஆரம்பிச்சான்.  இப்படி ஒரு சுடுசொல் சொல்லுவான்னு இராமன் எதிர்பார்க்கவேயில்லை.  சரி, மற்றப்பேர் அபிப்ராயம் என்னன்னு கேட்டான்.  ஜாம்பவான், நலன், நீலன், முதலான மற்றப்பேர்கள் எல்லாரும் பேசினார்கள்.  எல்லாரும் சொன்னது, கண்டிப்பா கொன்னுட வேண்டியதுதான்.  என்ன காரணம்ன்னு இராமன் கேட்கிறான்.  அதற்கு இரண்டே பேர்தான் காரணம் சொன்னார்கள். ஜாம்பவானும், சுக்ரீவனும்.  ’வரக்கூடாத இடத்தில், வரக்கூடாத காலத்தில், கூடப்பிறந்த தமையனை விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது.  ஆனாலும் வந்தான்.  இவன் நம்மைவிட்டுப் போய்விடமாட்டான்ங்கிறது என்ன நிச்சயம்?  ஆகையாலே அவனை அங்கீகாரம் பண்ணக்கூடாது’.  இது ஒருத்தர் சொன்னார்.  இன்னொருத்தர் சொல்லுகிறார், ‘என்னத்துக்கு இராமா அந்த கோஷ்டியிலேர்ந்து ஒருத்தரை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்?  இது ஏதோ சூதாக, சதித்திட்டமாகப் படுகிறதே தவிர, இவனை ஏற்றுக்கொள்ளுதல் கூடாது.’  ஆஞ்சநேய ஸ்வாமி அதுவரைக்கும் வாயைத் திறக்கலே.  எழுந்திருந்தார்.  ’அதசம்ஸ்ஹார சம்பந்நஹா ஹனுமான் சசியோத்தமஹா’.  மந்திரிமார்களுக்குள்ளே தலைவனாய், சம்ஸ்ஹார சம்பத்துப் படைத்து, எதைப் பேச வேண்டுமோ, வார்த்தை மாறாமல் பேசக்கூடிய சத்யசந்தனான ஹனுமான் எழுந்திருந்தார்.  ரொம்ப ஆனந்தம் சுக்ரீவனுக்கு.  ‘ஹனுமன்னு, நீதான் சரியான ஆள்.  நாங்கள்லாம் சொன்னா இந்த இராமன் ஏத்துக்கமாட்டார்.  நீர்தான் விபீஷணனைப் பார்த்துட்டு வந்திருக்கீர்.  அதனால நாங்க பேசிப் பிரயோஜனமில்லே.  அங்கீகாரம் பண்ணிக்கக்கூடாதுன்னு நீர் சொல்லும்.’, அப்படின்னு அவரைச் சொன்னா, அவர் சொன்னார், ‘விபீஷணஸ்து அங்கீகார்யஹா’, விபீஷணனை அங்கீகாரம் பண்ணியே தீரவேண்டும், நல்லவனானபடியாலே. ஹனுமான் சொல்லி முடித்தார்.  விபீஷணனைக் கொன்னுடனும், தீயவனானபடியாலே, சுக்ரீவன் சொல்லிட்டார்.  ரெண்டு பேருடைய வாதத்தையும், பிரதிவாதத்தையும் இராமன் கேட்டுட்டார்.  அதற்கப்புறம் இராமன் ப்ரார்த்திக்கிறார், ‘விபீஷணனைப்பற்றி எனக்கும் சொல்லுவதற்கு ஒரு வார்த்தை உளது, கேட்கிறீர்களா’ன்னார் இராமன்.  அப்பதான் குரங்குகளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  இராமன் ஆணையிட்டுத்தான் பிரஜைகளுக்குப் பழக்கமே தவிர, இந்த குரங்குகளைப் பார்த்து, மாமபிச – என்னாலயும் சொல்ல வேண்டியது சிறிது உள்ளது, அதை நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறீர்களா?  அப்படின்னு இராமன் சொன்னவுடனே, ‘இராமா, ஆணையிடு. இந்த மாதிரி கேட்டுக்கிறியான்லாம் கேட்காதே.’

    அப்போ திரும்ப ரெண்டு பேருடைய வாதத்தையும் இராமன் சொல்றார்.  சுக்ரீவன் பேசினான், தீயவனானபடியாலே கொன்றுவிட வேண்டும், கைப்பற்றக்கூடாதுன்னுட்டு.  ஹனுமான் சொன்னார், நல்லவனானபடியாலே கைக்கொள்ள வேண்டும்னுட்டு.  நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ரெண்டு பேருடைய முடிவையும் ஏத்துக்கப் போறதில்லேனுட்டார்.  புரியலை யாருக்கும்.  ஒன்னு இப்படிப் போகலாம், இல்லை அப்படிப் போகலாம்.  ஆனா ரெண்டு முடிவும் இல்லேங்கிறியே இராமா, என்னன்னு சுக்ரீவன் கேட்டான்.  ’உன் முடிவிலேர்ந்து ஒரு பாதி எடுத்துண்டேன்.  ஹனுமான் முடிவிலேர்ந்து ஒரு பாதி எடுத்துண்டேன்.  உன் முடிவிலிருந்து ‘தீயவனானாலும்’ங்கிறத எடுத்துண்டேன்.  ஹனுமானுடைய முடிவிலிருந்து அங்கீகாரம் பண்ணனும்ங்கிறத எடுத்துண்டேன்.  அதை ரெண்டையும் சேர்த்தேன்,  அவன் தீயவனானாலும் அங்கீகாரம் பண்ணனும்ங்கிற முடிவுக்கு வந்துட்டேன்.’  இப்போ இராமன் மட்டும் ஹனுமான் சொன்னமாதிரி, நல்லவனானபடியாலே அங்கீகாரம் பண்ணனும்ன்னு சொல்லிட்டா, அப்போ யாரானும் தீயவன் வரச்சே நீங்களே கேள்வி கேட்பேள், அன்னைக்கு நல்லவனைத்தானே சொன்னாய், இன்னைக்கு தீயவன் வந்திருக்கானேனுட்டு.  எனக்கு அந்த அபிப்ராயமே கிடையாது.  அவன் தீயவனோ, நல்லவனோ, வந்தவனை அங்கீகாரம் பண்ணுவோம்.  இதுதான் இராமனுக்குத் தெரியும்.  அவன் எந்தத் தீயவனா இருந்தாலும் நாம் அங்கீகாரம் பண்ணுவோம், என்று இராமன் சொல்ல அப்பதான் பேச்சுவார்த்தை ஆரம்பிச்சது.

    ’இராமா, இப்படிச் சொல்றியே, நாளைக்கு அவனால நமக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன ஆகும்?’, சுக்ரீவன் பயந்து பேசறார், ஜாம்பவான் பயந்து பேசறார், ஹனுமானானால் ஒன்று பேசறார்.  சுக்ரீவன் வாதப்பிரதிவாதத்தைத் தொடங்கினான்.  விபீஷணனுடைய சரணாகதி பலிக்கவே கூடாது, அப்படின்னு ஆரம்பிக்கிறான் அவன்.  ஏன்னு இராமன் கேட்கிறார்.  ’ஏனெனில் இவன் உன்னுடைய கைங்கர்யத்தைப் ப்ரார்த்தித்து வரலே.  தமையனைக் கொன்று இராஜ்யம் வேணும்ங்கிற தாழ்ந்த இன்பத்துக்காக வந்திருக்கிறான்.  அதனால் இந்த சரணாகதி பலிக்கக்கூடாது.’, என்று எடுத்துச் சொல்லுகிறார் சுக்ரீவன்.  ’அபயப்பிரதானசாரம்’ன்னு வேதாந்த தேசிகன் ஒரு கிரந்தம் எழுதியிருக்கார்.  அதில இந்த வாதப்பிரதிவாதங்களெல்லாம் நிறைய இருக்கும்.  இந்த ஸ்வாமி எடுத்துக்காட்டறார்,  ரெண்டு வார்த்தை. இராஜ்யத்தை எதிர்பார்த்து விபீஷணன் வந்திருக்கிறான்.  இது ஒருத்தர் வார்த்தை.  இராஜ்யத்தை ப்ரார்த்தித்து புத்திபூர்வமாக விபீஷணன் வந்திருக்கிறார், இது மற்றொருத்தர் வார்த்தை.  இது ரெண்டும் சொல்லலாமா? இராஜ்யத்தைப் ப்ரார்த்தித்தா விபீஷணன் வந்தார்?  இராம கைங்கர்யத்தைக் கேட்டு வந்தானே தவிர, கேவலம் இராஜ்யத்தைக் கேட்டு அவன் வரவே இல்லே.  ஆனா இந்த மாதிரி ரெண்டு பேரும் சொல்லிண்டிருக்காளே, என்ன அர்த்தம்ன்னா, தேசிகன் விசாரிச்சுச் சொன்னார்.  ஹனுமான் சொல்றதுலே ஒரு அபிப்ராயம் உண்டு.  என்னவெனில், நான் ஒன்னும் இவர் ராஜ்யத்தை ஆசைப்பட்டு வந்தார்ன்னு சொல்லவே வரலே.  ஆனா இவருக்கு மனசுக்குள்ள ஒரு ஆசையாம்.  நான் இங்கேர்ந்து அங்க போயிருக்கச்சே என்னை இவர்தான் காப்பாத்திவிட்டார்.  இல்லேன்னா கொன்னுருப்பனோ இல்லையோ அவன்?  இவருக்கு வால்ல நெருப்பு வைக்கணும்ன்னு சொல்லி காப்பாற்றிவிட்டது அவன்தான்.  இப்ப அவர் நம்ம வீட்டைத்தேடி வந்திருக்கார்.  அவருக்கு ராஜ்யமாவது பெற்றுக் குடுக்கணும்.  அவர் ராஜ்யத்தைக் கேட்டு வந்தார்ன்னு சொல்லலே.  அவர் இராம கைங்கர்யத்தைக் கேட்டு வந்திருக்கார்.  நமக்கு பண்ணின நல்லதுக்கு நாம ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டாமா?  அதுக்காக இராஜ்யத்தைப் பெற்றுக் குடுப்போம்ன்னு சொல்லிண்டாரே தவிர, அவன் இராஜ்யத்தைக் கேட்டு வந்தான்கிற அபிப்ராயம் இல்லை.

    இராமன் திரும்பச் சொல்றார், ‘சுக்ரீவா உன் பேச்சென்ன?  அவன் இராஜ்யத்தை எதிர்பார்த்தான், தமையனைக் கொல்லுவதற்காக வந்திருக்கிறான், ஏற்றுக்கொள்ளக்கூடாது.  இதுதான உன் அபிப்ராயம்?  இதன்படி என்கிட்ட இருந்திருக்கனும்ன்னால், நான் முதல்ல உன்னைக் கைவிட்டிருக்கனும்.  ஏன்னா நீ வந்ததே அதுக்குத்தானே?   உன் அண்ணனைக் கொன்று கிஷ்கிந்தா இராஜ்யம் வேணும்ங்கிறதுக்குத்தானே என்கிட்ட வந்தே?  அப்போ அவனை மட்டும் குற்றம் சொல்லுகிறாயே?  அப்போ அவனை விடணும்ன்னால் உன்னையும் விட்டாக வேண்டும். சொல்லாதே’, என்று அதையும் தவிர்த்தான்.

    சுக்ரீவன் அப்பவும் சமாதானமடையலே.  இராமன் அவருக்கு சில கதைகள் சொல்ல ஆரம்பிக்கிறார்.  எந்த கட்டம்?  அந்த பக்கம் இராவணன் காத்துண்டிருக்கான், சீதையை ஒரு பக்கம் காணோம், இங்க விபீஷணன் வந்து நிற்கிறான், சுக்ரீவன் கொதிச்சுண்டு இருக்கான், இதுக்குள்ள கதை சொல்றார் இராமன்.  அவசரமே இல்லாமல், ரெண்டு கதைகளை எடுத்துரைத்து சுக்ரீவன் மனசை சமாதானப்படுத்தப் பார்க்கறார்.

    ’சுக்ரீவா, குரங்குக்கதை தெரியுமா’ன்னு கேட்டார்.  ’நானே குரங்குதான். இதென்ன குரங்குக்கதை தெரியுமான்னா’.  ‘உன்னுடைய மூதாதையர் ஒரு குரங்கைப்பற்றி நான் சொல்றேன்.  ஒரு மனுஷனைப் புலி துரத்திண்டு வந்தது.  தப்பிக்கணும்ங்கிறதுக்காக மனுஷன் வேகமா ஓடி ஒரு மரத்து மேல ஏறிட்டான்.  ஏறிக்கிட்டக்கப் போறப்பதான் தெரிஞ்சது, ஒரு மனுசக்குரங்கு உட்கார்ந்திருந்தது.  ஓ, இதென்ன புலிக்குத் தப்பிக்கப் போய் மனுசக்குரங்கு வாயில விழுந்துருவோம் போலருக்கே.  குரங்கு அவனைக் கூப்பிட்டு, நீ என் மரம் தேடி வந்துட்டே. உன்னைக் கைவிட்டுட மாட்டேன் உட்கார்.  நான் உன்னைக் காப்பாத்தி விடறேன், அப்படின்னு மனுஷனை உட்கார்த்தி வைச்சுடுத்து.  புலி வந்து மரத்தடில காத்துண்டு இருக்கு.  இவன் என்ன இறங்காது போய்டப் போறானா, நாம சாப்பிட்டுக்குவோம், அப்படினுட்டு.  ராத்திரி வந்தது,  கொஞ்ச நேரம் குரங்கு தூங்குது, கொஞ்ச நேரம் மனுஷன் தூங்கறான்.  ஒருத்தருக்கொருத்தர் காவல் காத்திண்டிருந்தா.  இந்த மனுஷன் முழிச்சுண்டு இருக்கற சமயமா புலி தேர்ந்தெடுத்தது.  மனுஷன்கிட்ட பேச ஆரம்பிச்சு மனசைக் கலக்க ஆரம்பிச்சது.  அது சொல்லித்து, ‘குரங்கு புத்தியை நம்பி, உன்னைக் காப்பத்தறேன்னு சொன்னதை நம்பி உட்கார்ந்திருக்கியே, குரங்கு புத்தி எப்பவாவதும் ஒருமாதிரி இருந்திருக்கோ?  சபல சித்தம், அப்படியே மாறிண்டே இருக்கும்.  திடீர்ன்னு உன்னை அது சாப்ட்டாலும் சாப்ட்டுரும்.  அதனால நான் உனக்கு ஒரு வழி சொல்றேன்.  குரங்கு தூங்கிண்டிருக்கோல்லையோ?  அதைப்பிடிச்சுத் தள்ளிவிட்டுரு.  தள்ளிவிட்டுட்டியானா, நான் அதைச் சாப்பிட்டுட்டு உன்னை விடுதலை பண்ணிடறேன்.  இதுதான் உனக்கு நியாயம்’ன்னது புலி. எல்லாரைவிட மனுஷ புத்தி என்னன்னு நமக்குத் தெரியும்.  அந்த மனுஷன் இப்ப யோசிக்க ஆரம்பித்தார்.  இந்தப் புலி சொல்றது வாஸ்தவம்தான்.  நாம அந்தக் குரங்கைப் பிடிச்சுத் தள்ளிவிட்டுருவோம், அப்படின்னுட்டு காப்பாற்றின குரங்கைத் தள்ளிவிட்டுட்டான் அவன்.  அந்த குரங்கு உருண்டு கீழவந்து விழப்போறது.  குரங்கு முழிச்சுனுடுத்து.  புரிஞ்சு போச்சு.  புலிக்கிட்ட போய் உட்கார்ந்து பேசறதுக்கு ஆரம்பிச்சது.  புலி சொல்லுச்சு, ‘குரங்கே உன் மாமிசத்துல எனக்கு ஆசையே கிடையாது.  நர மாமிசம் ருசிக்கிறாப்போலே வானர மாமிசம் ருசிக்காது.  எனக்கு அதுதான் பிடிக்கும்.  பின்ன எதுக்குத் தெரியுமா உன்கிட்ட இந்த மாதிரிப் பேசினேன்?  அந்த மனுஷன் எப்படின்னு உனக்குப் புரியவைக்க வேண்டாமா?  அதுக்காகத்தான் உன்கிட்ட இப்படிப் பேசினேன்.  இப்ப உன்னை நான் விட்டுடறேன், மேல போ, மனுஷனைப் பிடிச்சுத் தள்ளிவிடு.  நீ தப்பிச்சுக்கோ.  மனுஷனை நான் சாப்பிடுறேன்’னுது.  அதுக்கென்ன, இனிமே நான் மனுஷனைக் காப்பாத்துவேனா என்ன, நிச்சயமாத் தள்ளிவிட்டுடறேன்னு குரங்கு ஒத்துனுடுத்து.  மேல ஏறி வருது.  மனுஷன் நடுங்கறார்.  குரங்கு வந்துடுத்துன்னா தன்னைப் பிடிச்சுத் தள்ளிவிட்ருமோல்லையோ?  குரங்கு நேர ஏறிப்போய் மனுஷன் பக்கத்துல உட்கார்ந்து, அவன் தோள்லே கைவைத்தது. ‘மனுஷ்யனே, கவலைப்படாதே.  நீ எப்ப என் மரத்தைத் தேடி வந்துட்டியோ, உன்னை ஒரு நாளும் நான் காட்டிக் குடுக்க மாட்டேன்’.  அப்ப மனுஷன் சொன்னான், ’அங்க உருட்டி விட்டுருவேன்னு சொன்னியே’ன்னான்.  ’அப்பதான் புலி என்னை விடும்.  அதுக்காக நான் சொல்லிட்டு வந்தேன்.  உன்னைத் தள்ளணும்ங்கிற அபிப்ராயமே எனக்குக் கிடையாது.  எப்போதும் காலிலே விழுந்தவர்களை இரட்சிப்பதற்குத்தான் குரங்குகளுக்குத் தெரியும்.’  இது அந்தக் குரங்கு சொல்லித்தாம்.  இராமன் சுக்ரீவனைப் பார்த்துச் சொல்றார், ‘அந்தக் குரங்கு ஜாதிலதான சுக்ரீவா நீயும் பிறந்தாய்?  கால்ல விழுந்தவனை இரட்சிக்கணும்ங்கிறது தெரியாம நீ பேசலாமா?  இதையாவது புரிந்து கொள்.  இராமன் கண்டிப்பா இரட்சித்தான்னு பேர் இருக்கணுமே தவிர, கைவிட்டுவிட்டான்னு வால்மீஹி எழுதிடக்கூடாது.’  ஒரு கதை இது.

    அடுத்த கதை சொன்னார்.  ‘சாஸ்திரத்தில புறாவைப்பத்தி கதை சொல்லியிருக்கே சுக்ரீவா, உனக்குத் தெரியாது?  ரெண்டு ஆண், பெண் புறா.  ரெண்டும் சௌக்யமா இருந்தது.  அந்த சமயத்தில ஒரு வேடன் வந்து, பெண் புறாவை அடிச்சுக் கொன்னு தூக்கிண்டு போய்ட்டான்.  ஆண் புறா மட்டும் தனியாத் தவிக்கிறது.  இது நடந்தது வெய்யில் காலத்திலே.  அப்புறம் மழைக்காலம் வந்துடுத்து.  மழைக்காலத்தில வேடர்களுக்கு ஒன்னுமே கிடைக்காதோல்லையோ?  தனியா தவிச்சிண்டு, குளிரிலே வெடவெடத்துப் போய், ஆண் புறா தனியா எந்த மரத்தில உட்கார்ந்திண்டிருக்கோ, அந்த மரத்துக்குக் கீழே வரான்.  பசி, ஒண்ணும் கிடைக்கலே.  வெளிலே வேற மழை, குளிரு.  என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுண்டு உட்கார்ந்திருக்கான்.  நாலு சுள்ளியைப் பொறுக்கி வைச்சு, அதில தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருக்கான் வேடன்.  மேல இருந்த புறா பார்த்தது.  நம்ம வீடு தேடி வந்திருக்கானே, நம்ம மரத்துக்கு கீழேன்னா வந்திருக்கான்.  அப்ப அவனுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டியது நம்ம பொறுப்பாச்சே?  அப்படின்னு ஆண் புறா யோசித்து என்ன பண்ணலாம்ன்னா, அது என்ன பண்ணமுடியும் இப்போ?  அவனுடைய பசியைப் போக்கணும்.  சரணம்ன்னு அவன் சொல்லவே இல்லே.  அவனுக்கு மேல புறா இருக்கறது தெரியவே தெரியாது.  ஆனா இந்தப் புறாவா இவன் சரணம்ன்னு சொல்லிட்டான்னு நினைத்துக் கொண்டு, புறா நேரப்போய் அந்தச் சுள்ளில தன்னைத்தானே மாய்த்துக் கொண்டது.  அது விழுந்து தன் உயிரைப் போக்கி, நீ என்னை ஆகாரமா வச்சுக்கோ. என் வீடு தேடி வந்தியோல்லையோ?  அதனால என்னையே உனக்கு ஆகாரமாக்குகிறேன்’னு புறா குடுத்துடுத்து.

    இந்த புறாக்கதையைச் சொல்லிட்டு இராமன் சுக்ரீவனிடத்தே, ‘கதை புரிஞ்சுதா சுக்ரீவா’ன்னார்.  ‘எனக்கு ஒண்ணும் புரியலே.  விபீஷணன் நிக்கறான்னு ஒன்னுதான் எனக்குத் தெரியுது.  இது தவிர் நீர் சொல்றது எதுவுமே என் புத்தியிலே ஏறலே’ன்னான் சுக்ரீவன்.  இராமன் தெரிவிக்கிறார், ‘ஆணும் பெண்ணும் புறாவும்தான் நானும் சீதையும்.  பிரித்தான்னு ஒரு வேடனைச் சொன்னேனே அவன்தான் இராவணன்.  என்ன தெரியுமா நடந்திருக்கணும் சுக்ரீவா?  நாங்க ரெண்டு பேரும் இருக்கறச்சே, இராவணன் சீதையைக் கொன்னுருக்கணும்.  ஏன்னா அந்த இடத்தில புறாவைக் கொன்னுட்டானோல்லையோ வேடன்?  அதப்போல இந்த இடத்தில கொன்னுருக்கணும்.  யார் கொன்னானோ இராவணன், அவனே திரும்பி வந்திருக்கணும்.  ஏன்னா வேடனே திரும்பி வந்தான்.  ஆனா இந்த இடத்தில அவன் திரும்பி வரலே.  இராவணன் திரும்பி வரலே, தம்பி விபீஷணன்தான் வந்திருக்கிறான்.  வந்த வேடன் சரணம்ன்னு ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லே.  ஆனா இங்க தம்பி விபீஷணன் சரணம், சரணம்ன்னு அழுதுண்டே இருக்கான்.  அதுக்கும் குறைவில்லே.  அப்படி இராவணனே சீதையைக் கொன்னுருக்கனும். இராவணனே திரும்பி வந்திருக்கணும், சரணம்ன்னு சொல்லியிருக்கக்கூடாது, அப்படி சொல்லாத இராவணனுக்காக என் உயிரையே குடுத்திருக்கணும்.  ஏன்னா ஆண் புறா உயிரையே குடுத்ததோ இல்லையோ?  அதப்போல இராமன் உயிரையே குடுத்திருக்கணும்.  குடுத்தாலும் வால்மீஹி என்ன தெரியுமா எழுதி வைப்பர்?  ஒரு புறா பண்ணினத இராமன் பண்ணார்ன்னு எழுதி வைப்பர்.  எனக்கு ஒன்னும் தனிப்பேரே குடுக்கமாட்டார் வால்மீஹி.  இப்படி இருந்ததுன்னா எனக்கு எப்படிப் பேர் கிடைக்கப்போறது சுக்ரீவா?  இதையாவது புரிந்துகொள்.  அப்போ புறாவைப் பார்த்துத் தெரிந்துகொள், குரங்கைப் பார்த்துத் தெரிந்துகொள்’.  மனுஷனைப் பார்த்துத் தெரிந்துகொள்ன்னு அவர் சொல்லவே இல்லை.

    இத்தனை சொல்லியும் சுக்ரீவனுக்கு மனசு சமாதானமாகலை.  இராமன் யோசிக்கிறார், ‘என்ன காரணமாயிருக்கும்?  அனேகமா ஒரு காரணம். எனக்கு என்ன வந்துருமோ, என்ன வந்துருமோன்னு சுக்ரீவன் பயப்படறான்.’  அந்தப் பயத்தைப் போக்க வேண்டும்ங்கிறதுக்காக இராமன் மாற்றி மூன்று ஸ்லோகங்கள் தெரிவிக்கிறார்.  அது விபீஷண சரணாகதியின்போது இருக்கிற ஸ்லோகம்.

    பிசாசான் தானவான் யக்‌ஷான் ப்ரித்வ்யாஞ்சைவ ராக்ஷசான்
    அங்குள்யக்ரைந தான்தந்யான் இச்சந்நு ஹரிகணேஷ்வர

    மித்ரபாவேந சம்ப்ராப்தம் நத்கதேஜம் கதஞ்சந
    தோஷோயப்பதி தஸ்யஸ்யாது சதாமேதது அதர்ஹிதம்

    சக்ருதேவப் ப்ரபந்னாய தவாஸ்மீதிச யாசதே
    அபயம் சர்வபூதேப்யாஹ ததாம் ஏதத்வ்ரதம் மம

    உடனே வால்மீஹி தெரிவித்தார், ‘இரண்டு வார்த்தை பேசாதவன் மூன்று வார்த்தை பேசினான்’னார்.  இராமனுக்கு ரெண்டாவது வார்த்தையே தெரியாது.  ஆனா அவர் மூனு ஸ்லோகம் சொல்லிட்டாரோல்லையோ?  மூன்று ஸ்லோகங்களுமே மணிமணியான ஸ்லோகங்கள்தான்.  முதல் ஸ்லோகத்துல சொல்றார், ‘சுக்ரீவா, கவலைப்படாதே.  இவன் வந்து என்னை என்ன பண்ணிடமுடியும்ன்னு நீ பயப்படறே?  உன் பயம் என்ன?  எனக்கு விபீஷணனாலே என்ன ஆபத்து வந்துருமோன்னுதான பயம்?’  நாம சுக்ரீவனைப் பத்தி தப்பாவே நினைப்போம்.  அப்படி அல்ல.  இராமனாகட்டும், சுக்ரீவனாகட்டும், தங்கள் கால்லே விழுந்தவர்களை இரட்சிக்கணும்ன்னு பார்க்கிறார்கள்.  சுக்ரீவன் கால்லே இராமன் விழுந்திருக்கார், அவரை இரட்சிக்கணும்ன்னு இவர் பார்க்கிறார்.  இராமன் கால்லே விபீஷணன் விழுந்திருக்கான், அவனை இரட்ச்சிக்கணும்ன்னு இராமன் பார்க்கிறார்.  ரெண்டு பேருமே சரணாகதர்களை இரட்ச்சிக்கத்தான் பாடுபடுகிறார்கள்.  ‘உலகத்தில இருக்கிற பிசாசம், தானவன், யக்‌ஷன், இராக்ஷசன், அசுரன், மொத்தப்பேரும் தனித்தனியே வரட்டும், கூட்டம் கூட்டமாக வரட்டும்.  சுக்ரீவா, நான் வேண்டாம், என் கை வேண்டாம், என் விரல் வேண்டாம், அங்குள்யக்ரைந தாந்தந்யான் இச்சந்நு ஹரிகணேஷ்வர – விரல் நுனியால அத்தனை பேரையும் அழித்துவிடுவேன், கவலைப்படாதே.’  உடனே வ்யாக்யாதார் தெரிவித்தார், ‘ஓ, பூர்வ அவதாரத்தோட நினைவு போலருக்கு. நரசிம்ஹா அவதாரத்தில விரல் நுனியால நகத்தாலயே முடிச்சுட்டாரோல்லையோ?

    மித்ரபாவேந சம்ப்ராப்தம் – என்னிடத்தே உண்மையான நட்போடே வரவேண்டாம்.  நண்பன் என்று வேஷமிட்டுக் கொண்டு வந்தால் கூடப்போதும்.  நத்கதேஜம் கதஞ்சந – அவன் ஒருநாளும் என்னால் கைவிடத்தகுந்தவன் அல்லன்.

    தோஷோயப்பதி தஸ்யஸ்யாது – அவன் தோஷங்களோடேயே வந்தாலும் சரி, சதாமேதது அதர்ஹிதம் – ‘நான் மட்டும் இவனைக் கைவிட்டுவிட்டால், நாளைக்கு என்ன தெரியுமா ஆகும்?  எல்லாம் முடிஞ்சு சீதையை மீட்டுக்கொண்டு ஊருக்குப் போய்டுவேன்.  போனப்புறம் வசிஷ்டர் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிச்சுருவர்.  பதினாலு வருஷம் காட்டுக்குப் போய்ட்டு வந்தியே இராமா, என்னென்ன பண்ணினாய்ன்னு கேட்பர்.  நான் ஒன்னொன்னா சொல்லிண்டு வருவேன்.  விபீஷணன்னு ஒருத்தர் சரணாகதிக்காக வந்தார், ஆனா சுக்ரீவன் வேண்டானுட்டான்.  அதனால நான் விட்டுட்டேன்னு சொன்னா, வசிஷ்டர் என்ன தெரியுமா கேட்பர்?  இஷ்வாகு வம்சத்துல பிறந்துட்டு சரணாகதனை இரட்சிக்கத் தெரியாத நீ ஒரு இராஜாவா?  உன்னுடைய தகப்பனார், தாயார் சொல்றது இருக்கட்டும்.  இப்ப நான் சொல்றேன், இந்தத் தப்புக்காக பதினாலு வருஷம் காட்டுக்குப் போய்ட்டு வான்னுடுவர்.  அதனால நான் திரும்பப் பதினாலு வருஷம் எல்லாம் போறதா இல்லே சுக்ரீவா.  ஒரு தடவை போனதே போறும்.  அதனால தோஷமோடு வந்தாலும் விடேன்’னு சொல்ல, கடைசி ஸ்லோகம், சக்ருதேவப் ப்ரபந்னாய – ஒருதடவை சரணம் என்று யார் சொல்லுகிறானோ, த்வய மஹாமந்த்ரத்தின் பொருளும் அதேதான். ஒரு தடவை சரணம்ன்னு எவன் சொல்லுகிறானோ, தவாஸ்மீ – நான் உன்னுடையவன் என்று எவன் வேண்டுகிறானோ, யாசதே அபயம் சர்வபூதேப்யாஹ ததாமி – அவனுக்கு எல்லா ஜீவராசிகளிடத்திலிருந்தும் அபயம் வழங்குகிறேன்.  அவனை விடுதலை பண்ணுகிறேன்.  ஏதத்வ்ரதம் மம – இது இராமனுடைய விரதம்.  அவர் எடுத்த செயலிலிருந்து மாறமாட்டோம்ன்னு உறுதியாக நின்னார்.  மொத்தத்தையும் கேட்டு முடிச்சப்புறம்தான் சுக்ரீவனுக்குத் தோணித்து, இந்த இராமனுக்கு எதிர் நிற்க யாரும் கிடையாது.  சரணாகதனை ஒரு நாளும் இராமன் கைவிடமாட்டான்.  இந்த உண்மை புரிஞ்சது, ‘சரி இராமா, நீ சொல்றதுதான் சரி. ஏற்றுக்கொள்ளுகிறேன்’னு சுக்ரீவனும் ஏற்றான்.

    சரின்னு போய் சுக்ரீவன் விபீஷணனை கூட்டிட்டு வரணுமோல்லையோ?  அப்போ சுக்ரீவன் மூலமாகத்தான் விபீஷணன் வர்றார்.  இராமன் விபீஷணனை நேரக்கூப்பிடலை.  அதே சுக்ரீவனை அனுப்பறார்.

    ஆநயேநும் ஹரிஷ்ரேஷ்ட தத்தவஸ்யாபயம்மயா
    விபீஷநோவா சுக்ரீவஎதிவா ராவணஸ்வயம்

    ஏ சுக்ரீவனே, குரங்கு கூட்டத்தலைவனே, ஆநய – போய் அழைத்துக் கொண்டு வா.  தத்த அஸ்ய அபயம் மயா – என்னாலே விபீஷணன் அபயம் குடுக்கப்பட்டான், போ.  போன்ன உடனே சுக்ரீவன் கிளம்பினார். நிறுத்தினார் இராமன். ‘அவசரப்படாதே சுக்ரீவா, நாம ஒரு பதினைஞ்சு நிமிசமாப் பேசிண்டு இருக்கமா, நீ இங்கேர்ந்து போறதுக்குள்ளே ஒருவேளை இராவணன் மனசு மாறி வந்திருந்தான்னு வச்சுக்கோ, திரும்பப் பேசறதுக்கு வராதே.  ஒருதரம் பேசினதே போறும் இப்போ.  ஒரு விபீஷணன் மட்டும் வந்திருந்தா, நாலு இராக்ஷசர்களுக்கு வாழ்ச்சி.  இராவணன் வந்தால் ஊருக்கே வாழ்ச்சி.  விபீஷணன் வந்தால் திருப்தி. இராவணன் வந்தால் பரம திருப்தி.  போ, உடனடியாகக் கூட்டிவா’ன்னு போக, அவனும் போய் விஷயத்தைச் சொல்ல விபீஷணன் ஓடோடி வந்தான்.  இராமன் திருவடிகளிலே விழுந்தான்.  பாதயோஹோ நிபபாத சரணாந்வேஷி, என்று திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.  அப்போ இராமன், உனக்கு இராஜ்யத்தைப் பெற்றுக் குடுக்கறேன்னு சூளுரைக்கிறான்.  விபீஷணன் ப்ரார்த்திக்கிறான், ’இராமா இதைக் கேட்டு நான் வரலே.  இதைக் குடுத்து என்னைக் கேவலப்படுத்தி விடக்கூடாது.  எனக்கு இருக்கிற ஒரே சொத்து உன்னுடைய திருவடி.  சித்திரகூடத்துக்கு பரதன் வந்து திரும்ப வான்னு கூப்பிட்டபோது, அவனுக்கு உன் பாதுகைகளைக் குடுத்து, உன் திருவடியை எடுத்து அவன் தலையிலே அணியாக விளக்கினாய். அதேபோல எனக்கும், இதோ குனிகிறேன்.  உன்னைத் தண்டனிடுகிறேன்.  உன் இளையவர்க் கவித்த மௌலி என்னையும் கவித்தி.  உன்னுடைய தம்பி பரதனுக்கு உன் திருவடித் தாமரைகளை வைத்தாயே, அதையேதான் நானும் ப்ரார்த்திக்கிறேன்னு குனிய, இராமனும் தன் திருவடிகளைத் தூக்கி விபீஷணன் தலையிலே வச்சுட்டு, அவனை வார்த்தையால மயிலிறகால தடவிக் குடுக்கறாப்ல குடுத்தானாம் இராமன்.

    இராமன் நினைச்சுக்கிறார், ’சுக்ரீவன் கொஞ்ச நாழியாக்கிட்டான் இல்லே, காலதாமதப்படுத்திட்டான்.  நானே உன்னை இலங்கைல வந்து அங்கீகாரம் பண்ணியிருக்கணும்.  அது பண்ணாததுக்கே எனக்கு ரொம்ப வருத்தம்.  உன்னைப் போய் அக்கரையிலேர்ந்து இக்கரைக்கு வரவச்சுட்டேன் பார், சரணாகதனை நடக்க வைக்கிறது எனக்குப் பழக்கம் இல்லே.  நான் போய் ஏற்றுக்கொண்டுதான் எனக்குப் பழக்கம்.  அயோத்தியிலிருந்து கிளம்பினதே உன்னை ஏற்றுக்கொள்ளுவதற்காகத்தான்.  அதில் ஒரு பாதி தூரம், உன்னை நடக்க வைத்ததை நினைத்து ரொம்ப வெட்கப்படுகிறேன்.  அதிலேயும் ஒரு கால் மணி உன்னைக் காக்க வைச்சுட்டேனே, நாளைக்கு சாஸ்திரம் என்ன தெரியுமா சொல்லும்?  சரணம்ன்னு ஒருத்தன் வந்தான், ஆனா யாராரோ தடுத்தபடியால இராமன் அவனை கால்மணி காக்க வச்சுட்டான்னு சொல்லிட்டா, வர்ற நாலு பேரும் சரணாகதிக்கு வரமாட்டான்.  அது எனக்கும் தெரியும் விபீஷணா. இருந்தாலும் வேறு வழியற்றுப் போயிற்று’, என்று நல்வார்த்தைகள் சொல்லி மயிலிறகாலே தடவிக்குடுக்கறாப்போலே, கண்களாலே விபீஷணனைப் பாரித்துக் குளித்துக் கொண்டு இராமன் இருந்தான், என்று வால்மீஹி பகவான் தெரிவிக்கிறார்.

    அதனாலே விபீஷணன் சர்வத்தையும் துறந்து, இராமனே சரண், இராமனே புகல் என்று சரணாகதி பண்ணினான். சரணாகதி பலித்தது.  இராமனும் விபீஷணனை ஏற்றுக்கொண்டான்.  அவனும் அவனுமாக, ஸ்வாமியும் தாசனுமாக, சேஷியும் சேஷனுமாக, சுதந்திரனும் பரதந்திரனுமாக, பிதாவும் புத்திரனுமாக, பர்த்தாவும் பத்தினியுமாக, சேஷி எம்பெருமான், சேஷபூதன் விபீஷணன், இருவரும் என்றும் நித்யகைங்கர்யத்திலே இருந்தார்கள் என்பது முக்கியமானச் சரித்திரம்.

    விபீஷணன் திருவடிகளுக்கும், இராமன் திருவடிகளுக்கும், எழுதி வைத்த வால்மீஹி பகவானுக்கும், வியாக்யாதாவான பெரியவாச்சான் பிள்ளைக்கும் பல்லாண்டு.

     -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – இராமாயணத்தில் சரணாகதி (2) உபந்நியாசம் – Toronto)

    விபீஷண சரணாகதி - பாகம் 1

    ஸ்ரீராமாயணத்தில் 24,000 ஸ்லோகங்கள், 500 ஸர்க்கங்கள், 6 காண்டங்கள்.  இது இத்தனையும் தேடித் திரட்டிப் பிடித்தால் என்ன கிடைக்கும்ன்னால், கடைசியா விபீஷண சரணாகதி கிடைக்கும்.  அந்த விபீஷணன் எப்படி சரணாகதி அனுஷ்டிக்கிறான் அப்படின்னு பார்ப்போம்.

    இராவணன் தம்பி விபீஷணன்.  இராவணன்தான் இராமனின் மனைவியான சீதையைப் பிரித்தான்.  பிரித்து அசோகவனத்திலே கொண்டு போய் அடைத்து வைத்தான்.  விபீஷணன் ரொம்ப நாளா பேசிப்பேசிப் பார்த்தான். அவன் முதல் நாள்லேர்ந்தே சும்மா இருக்கலே.  திரும்பத் திரும்ப இராவணனிடத்திலே நீ பண்றது தப்பு, தப்புன்னு சொல்லிண்டுதான் இருந்தான்.  ’ப்ரதீயதாம் தாசரதாய மைதிலி’, மைதிலியைக் கொண்டுபோய் தாசரதியிடத்திலே திருப்பிக் குடுத்துரு.  அபசாரப்படாதே.  அவனிடத்திலே அபசாரப்பட்டால், நாம கூண்டோட அழிஞ்சு போயிருவோம்.  யாருமே மிச்சமிருக்க முடியாது.  ராமேதிதாஹா வாயு சமாந வேதாஹா வஜ்ரூபமாஹா – வஜ்ரத்தை ஒத்த பாணங்கள் இராமனுடையவை.  ஒன்னொன்னும் அக்னிக் கங்குகள் போலே வரும்.  ஒன்னொன்னும் நாகாஸ்திரத்தைப் போல வந்து நம் அத்தனை பேரையும் அழித்துவிடும்.  வேண்டாம். இலங்கை இருக்க வேண்டும்.  நம் நாடு நன்றாகக் குடிகுடியுமாக இருக்க வேண்டும்.  கொண்டு போய் சமர்ப்பிச்சுரு’ன்னு சொல்லுகிறான்.  ஆனா ஒன்னும் இராவணன் காதிலே ஏறுவதாகவே தெரியலே.

    கடைசியா ஒருநாள் இராஜசபை கூடித்து. ஹனுமான் வந்துட்டு, திரும்பிப் போய்ட்டார். இந்தமாதிரி ஹனுமான் வந்தாரே, எல்லாத்தையும் எரிச்சுட்டார், புறப்பட்டுப் போய்ட்டார். அப்போ எதிர்கட்சியினுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? இந்த விஷயத்தை ஆராய்வோம்ங்கிறதுக்காக எல்லாரும் கூடி உட்கார்ந்துள்ளார்கள். இந்திரஜித்தும் இருக்கிறான். மற்றுமுள்ள மந்திரிமார்களும் இருக்கிறார்கள். அப்போ விபீஷணன் எடுத்துரைத்தான், ‘நாம பண்ணுவது சரியல்ல. நாம மைதிலியைக் கொண்டுபோய் உடனே இராமனிடத்திலே சமர்ப்பித்துவிட வேண்டும். இல்லையென்றால் நம் இலங்கையும் தப்பிக்காது. நம் இராட்சச ஜாதியும் தப்பிக்காது. நாம பண்ணுவது கூடாதுன்னு இராவணனிடத்திலே பேசுகிறான்.

    அப்ப வால்மீஹி பகவான் ரொம்ப அழகாத் தெரிவிக்கிறார்.  விபீஷணன் எடுத்துச் சொல்லும் போதே, ‘யாரெல்லாம் நல்லது சொல்லுவர்களோ இராவணா, அவர்கள் சுலபத்திலே கிடைக்க மாட்டார்கள்’. அப்ரியஸ்யத வக்தா வக்தா ஸ்ரோதாஸ்ச துர்லபஹா – எல்லா இடத்தில போய்த் தேடித்தேடிப் பார்த்தாலும், சததம் ப்ரியவாதிநஹா, பிரியமாப் பேசறதுக்கு உலகம் முழுக்க நிறைய பேர் கிடைப்பர்கள்.  ஆனால், அப்ரியஸ்யச – அப்ரியமா இருந்தாலும் இதுதான் நல்லதுன்னு எடுத்துச் சொல்வதற்கு, வக்தா ஸ்ரோதாஸ்ச துர்லபஹா – சொல்றதுக்கும் ஆள் கிடைக்காது, கேட்டுக்கறதுக்கும் ஆள் கிடைக்காது.  நான் உனக்கு நல்லது சொல்றேன், கேட்டுக்கொள்’, என்று விபீஷணன் சொல்ல, அது இராவணனுடைய காதிலே ஏறலே.  ஏறாமல் அவனை ரொம்ப ஏசத் தொடங்கினான்.

    சுநிவிஷ்டம் ஹிதம்வாக்யம் உக்தவந்தம் விபீஷணம்
    அப்ரவீத் பருஷம்வாக்யம் ராவணஹா காலசோதிதஹா

    சுநிவிஷ்டம் ஹிதம்வாக்யம் – நல்ல வாக்யமாத்தான் சொன்னான். பிடிக்கறாப்லதான் சொன்னான்.  ரெண்டு விஷயம் நாம பார்க்கணும்.  ஒன்னு, சொல்றவாளப் பார்க்கணும்.  இல்லே, என்ன சொல்லப்பட்டதுன்னு பார்க்கணும்.  எனக்கு ரொம்ப வேண்டியவர் சொல்றாரா, கொஞ்சம் ஏத்துக்க முடியாம இருந்தாக்கூட அதை ஏத்துக்கணும்.  ஏன்னா என்னுடைய நலத்தில அக்கறை இருக்கறவரோல்லையோ?  அப்ப எடுத்துக்கணும்.  என் விரோதியே சொல்றானா, விஷயம் ரொம்ப உசந்ததா இருக்குன்னு வச்சுக்கங்கோ, விரோதி சொன்னாலும் ஏத்துக்கணும்.  இப்போ தம்பி சொல்றான்னு பார்த்தாலும் ஏத்துண்டிருக்கலாம்.  நல்லது சொல்றான்னு பார்த்தாலும் ஏத்துண்டிருக்கலாம்.  ரெண்டுத்துல எதுக்காகவான்னாலும் விபீஷணன் சொன்னதை ஏத்துகலாமோல்லையோ?  ரெண்டையுமே பார்க்கலே.  தம்பி சொல்றான்கிறதையும் பார்க்கலே, நல்லது சொல்றான்கிறதையும் பார்க்கலே.

    உக்தவந்தம் விபீஷணம் – விபீஷணன் ஒன்னும் மென்னு முழுங்கலே, நன்னாத்தான் சொன்னான்.  எப்போதுமே ஒருத்தர் தவறான வழியிலே போறார்ன்னு வச்சுக்கங்கோ, பார்த்துக் கொண்டு நாம சும்மா இருக்கமுடியாது. சொல்லிடணும்.  சொல்லிடணும்ன்னா, ஏதோ ரெண்டுங்கெட்டானா மென்னு முழுங்கவும் கூடாது.  ஏன்னா அப்புறம், இதை நீங்க ஒழுங்காச் சொல்லியிருந்தீள்ன்னா நான் கேட்டிருப்பேனே, அப்படின்ன் அவாளே திருப்பிச் சொல்லிடுவா.  அதனால சொல்லும்போது நன்றாக எடுத்துச் சொல்ல வேண்டும்.  அதைத்தான் உக்தவந்தம்ன்னு தெரிவிக்கிறார்.

    சுநிவிஷ்டம் – நன்னா காதுக்கு இனிமையாத்தான் இருக்கு கேக்கறதுக்கு.  அவன் ஒன்னும் தப்பு சொல்லலே. ஹிதம்வாக்யம் – நன்மையைத்தான் எடுத்துரைத்தான்.  உக்தவந்தம் – நன்றாகத்தான் எடுத்துரைத்தான்.  விபீஷணம் – கூடப்பிறந்த தம்பி.  வால்மீஹி இராமாயணம்ன்னால், ஸ்லோகத்திலே சப்தம் சப்தமா அர்த்தம் பார்த்தால்தான் புலப்படும்.

    பின்ன ஏன் இராவணன் ஏசறதுக்குத் தொடங்கினான்?  அப்ரவீத் பருஷம்வாக்யம் ராவணஹா காலசோதிதஹா, அப்ரவீத் – சொன்னான், பருஷம்வாக்யம் – காதாலே கேட்க முடியாத அளவுக்கு வைதான்.  ராவணஹா – இராவணன், பேரே இராவணனோல்லையோ, இராவயதேதி இராவணஹா, எல்லாரையும் அழப் பண்ணுபவன், அதனாலே இராவணன்னு அவனுக்குப் பேர்.  அதனால அவனே அழப் பண்றவன், கேட்கற வார்த்தை நல்ல வார்த்தையா இருக்குமா?  காலசோதிதஹா – காலதேவன் வந்து இராவணன் காது முனைல உட்கார்ந்துண்டு நல்வார்த்தை இராவணன் காதிலே ஏறவேண்டாம்ன்னு தடுக்கறாராம்.  ஒருத்தனுக்கு மட்டும் கெட்ட காலம் வருதுன்னால், அப்போ சாதுக்களோட வார்த்தை காதில போகாத அளவுக்கு எமதர்மராஜனோ, காலதேவனோ வந்து தடுத்துருவா.  நல்வார்த்தைகள் காதிலே போகலேன்னா, நம்மால நல்ல முடிவுகளை எடுக்கவே முடியாது.  அதனாலே காலதேவனாலே தூண்டப்பட்ட இராவணன் நல்வார்த்தைகளை கேட்காமலே போனான்.

    அப்போ இந்திரஜித் கேவலமாக சில வார்த்தைகள் பேசினான்.  இராவணன் அதை ஏற்றுக்கொண்டு, ‘நீ குலத்துக்கே கோடரிக் காம்பாக பிறந்தாய் விபீஷணா.  நம்குலம் இராட்சச குலம்.  எதிர்த்து நின்று ஜெயிப்பதுதான் பௌருஷ்யம், வீரம்.  அதை விட்டுவிட்டு பேடியைப் போல பேசுகிறாயே.  இதை நான் எதிர்பார்க்கவில்லை.’, என்று காலாலே நெட்டித் தள்ளிவிட்டான் விபீஷணனை.  நீ இனி இந்த இடத்திலே இருக்க வேண்டிய தேவை கிடையாது, என்று இராவணனாலே அவமானப்படுத்தப்பட்டு, தாசவச்ச அவமானிதஹா, ஒரு தாசனைப்போலே நான் அவமானப்படுத்தப்பட்டேன்.

    அப்ப விபீஷணன் முடிவெடுத்தாக வேண்டும்.  இந்த பக்கம் இருக்கணுமா, அந்த பக்கம் போகணுமா, எங்கு போகணும்?  இந்த முடிவெடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் விபீஷணன் இருந்தான்.  அப்போது சுற்றுமுற்றும் எல்லாரையும் ஒருதடவை பார்த்தான்.  ‘நான் லங்கையை விட்டுத் துறந்து நேரே இராமச்சந்திரன் இருக்கும் இடத்துக்குப் போகப் போகிறேன்.  இராமன் திருவடிகளே சரணம்ன்னு பற்றப் போகிறேன்.  இங்கிருப்பவர்களில் யாருக்கேனும் அதையே செய்வதற்கு எண்ணமிருந்தால், என்னோடுகூட வரலாம்’, அப்படின்னு விபீஷணன் திறந்த இராஜ சபையில அறிவிக்கிறான்.  அதுக்கு தைரியம் வேணும்.  ஏன்னா இவனே ஓடிண்டு இருக்கான் நாட்டைவிட்டு.  அந்த சமயத்தில போய் அங்க இருக்கறவாளுக்குச் சொல்லணும்ன்னால், நாம எடுத்திருக்கிற முடிவு சரி, பெருமானே சரணம்ன்னு பற்றப் போகிறோம்ன்னா, தைரியத்தோடதான் யாரையுமே கூப்பிடணும்.  இதிலே போய் பயத்துக்கு இடமே குடுக்கக்கூடாது.  ஒருத்தன் தர்மத்தின் வழி பேசுகிறான்னால் சுணங்க வேண்டிய அவசியமே இல்லை.

    நாலு இராட்சசாள் வரேன்னு ஏத்துண்டா.  அவன் தனியாகப் போகலை.  அதோடு ஒரு மூலைல கதை ஒன்று இருந்தது.  அந்த கதையை எடுக்கறதுக்காகப் போனான் விபீஷணன்.  கதை, நான் வரலேன்னு சொல்லலே.  அதனால அதையும் எடுத்துனுட்டான்.  வால்மீஹி உடனே விசாரிச்சிண்டார்,  உத்பபாத கதாபாநிஹி, கதாபாநியாய் கதையும் கையுமாக, உத்பபாத – ஆகாசத்திலே எழுந்தான்.  யாரவன்னா, ஸ்ரீமான் – வால்மீஹி உடனே பட்டம் குடுக்கிறார்.  உத்பபாத காதாபாநிஹி சதுர்த்திஷ் ராட்சஸைஹி ஸ்ரீமான், ஆகாசத்திலே ஸ்ரீமானான விபீஷணன் தாவினான்னு வால்மீஹி எழுதினார்.  பெரியவாச்சான்பிள்ளைன்னு ஒரு ஆச்சார்யர். அந்த ஸ்வாமி விசாரிச்சிண்டார், நேத்தி வரைக்கும் கொஞ்சமாவது நப்பாசை இருந்திருக்கும். இராஜ்யத்தில ஒரு மடங்கு பங்கு உண்டுனுட்டு.  ஏன்னா தம்பிகள்ல ஒருத்தர்.  இனிமே ஆசைக்கு இடமே இல்லே.  விட்டாச்சு எல்லாத்தையும்.  அவனும் காலாலே உதைச்சுட்டான்.  இப்ப இராமனைப்பற்றிப் போறச்சே, வெறும் பிச்சை. அவ்வளவுதான் இருக்கே தவிர, இவன்கிட்ட ஒண்ணுமே கிடையாது.  இராஜ்யத்திலே பங்கு இருக்கறச்சே ’ஸ்ரீமான்’னு சொல்றதா, ஒண்ணுமே இல்லேன்னு விட்டுட்டு கிளம்பிண்டிருக்கச்சே ஸ்ரீமான்னு சொல்றதா?  இது வேணும்ன்னு ஒருவேளை கேலி பண்றாப்லே, பரிகாசமா ஏதானும் எழுதியிருக்காரா?  நேத்திவரைக்கும் ஸ்ரீமான், இப்போ ஒண்ணுமே இல்லே, இராஜ்யமே போய்டுத்து.  இப்பபோய் ஸ்ரீமான்னு சொல்லலாமான்னா, இப்பத்தான் சொல்ல வேணும்ன்னு வ்யாக்யானம் பண்ணினார்.

    இதுவரை ஆபாச பந்துவை பந்துவாக நினைத்தான்.  இப்போது ப்ராப்த பந்துவை பந்துவாக முடிவெடுத்துவிட்டான்.  இந்த பந்துக்களெல்லாம் ஆபாச பந்துக்கள்.  அண்ணன்ங்கிறதுக்காக பார்த்துட்டு நின்னுண்டுருந்தானோல்லையோ, அதுவரைக்கும் அவனுக்கு ஸ்ரீமத்துவம் இல்லே.  சொத்து ஸ்ரீமத்துவம் இருந்திருக்கலாமே தவிர, இராமனுடைய திருவடிங்கற தனம் நேத்துவரைக்கும் இல்லையே.  அந்த முடிவு இப்பதான எடுத்திருக்கிறான்.  இப்பதான் ஸ்ரீமத்துவம்.  இப்பதான் விபீஷணனை ஸ்ரீமான்னே கூப்பிடலாம் அப்படின்னு தெரிவிக்கிறார்கள்.

    இதிலேர்ந்து நாம புரிஞ்சுக்க வேண்டியது, உறவு என்பது எப்போதும் பகவானகத்தான் இருக்கிறான்.  திருமங்கையாழ்வார் தன்னுடைய பெரிய திருமொழியில், முதற் பத்து, ஒன்பதாம் திருமொழி திருவேங்கடமுடையானுக்காகச் சமர்ப்பித்தார்.  அதிலே சாதிக்கிறார், தாயே தந்தையென்னும் தாரமே கிளை மக்களென்னும் நோயே பட்டொழிந்தேன்.  இதுநாளும் தாய், தந்தை, தாரம், கிளை, மக்கள் இந்த நோயேதான் பட்டொழிந்தேன்.  இப்போது உன் திருவடிகளே சரணம்ன்னு வந்துவிட்டேன்.  நீயும் இங்கே வராதேன்னு சொல்லிட்டியானா, எனக்குப் போக்கிடமே யாரும் கிடையாது.  ப்ராதா நாராயணஹா, பிதா நாராயணஹா, மாதா நாராயணஹா என்று சகலவிதமான பந்துவும் நாரயணனோல்லையோ?  ஆழ்வார் சாதிக்கிறார், ‘சேலை கண்ணிரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே’ன்னு பாசுரம்.  அந்த உறவுமுறை தெரியாமல் யாரோ உறவுன்னு இதுநாள்வரை நினைத்திருந்தான்.

    நாம நினைச்சிண்டிருப்போம், யாராரோ உறவுக்காரால்லாம் நம்மை ஆபத்திலேர்ந்து காப்பாத்துவான்னுட்டு.  அதெல்லாம் அவாள்லாம் பண்றதில்லே.  அப்படி ஒருவேளை பண்ணனும்ன்னு வச்சுக்கங்கோ, தாராளமா அந்தந்த அப்பா அம்மா காப்பாத்தியிருக்கலாம்.  கைகேயி பிள்ளை பரதனைக் காப்பாத்தி இருக்கக்கூடாதா?  எது வேண்டாமோ அதைப் பண்ணிவச்சாளோ இல்லையோ?  தகப்பனார் ஹிரண்யகசிபு, பிரகலாதானை இரட்சிக்கக்கூடாதா?  அவரேதான் மலைமுகட்டிலேர்ந்து பிடிச்சுத் தள்ளிவிட்டார்.  அவரேதான் யானை கால்லே இடற வச்சார்.  அண்ணன் தம்பியைக் காப்பாற்றலாம்ன்னா, வாலி சுக்ரீவனை இரட்சிச்சு இருக்கலாமோல்லையோ?  நடந்ததாத் தெரியலே.  இராவணன் விபீஷணனை இரட்சிச்சிருக்கலாமோல்லையோ?  நடந்ததாத் தெரியலே.  அதனாலே இந்த உறவுக்காரர்களெல்லாம் இரட்ச்சிக்கப் போறதில்லே.  ஆனா இன்னொரு ஆச்சர்யம், இவா ஒரோருத்தராலேயும் கைவிடப்பட்டவர்களை பகவான்தான் காப்பாற்றி இருக்கார்.  அதனாலே ஆபாச பந்துக்கள் பந்துக்களாக மாட்டார்கள், ப்ராப்தனான பகவானே பந்து.  இந்த ஞானம் ஏற்பட்டாத்தான் சரணாகதிக்கு வருவோம்.  பகவானுக்கும் எனக்கும் உறவுங்கிற ஞானம் ஏற்பட வேண்டும்.  அப்போதான் நீயே உபாயம்ன்னு ஓடி வந்து விழுவோம்.  இதைப் புரிஞ்சுனுட்டான் விபீஷணன்.  இனி இந்த உறவுக்காரர்களிடத்திலே இருக்கறதில்லே.

    இதை ஏற்கனவே லக்ஷ்மணன் ஒரு இடத்திலே ரொம்ப ஆச்சர்யமா விளக்கினான்.  குகன் இருக்கும் ஸ்ருங்கிபேரபுரத்துக்கு இராமனும், சீதையும், லக்ஷ்மணனும் வந்து சேர்ந்துள்ளார்கள்.  ஓடத்திலே ஏத்திண்டு கங்கையைக் கடந்து அக்கரையிலே கொண்டுபோய் விடப்போகிறான்.  சுமந்திரன் இதுவரைக்கும் கூட வந்திருக்கார்.  அவர்தான் தேரோட்டி, மந்திரி இராமனுக்கு.  இதுவரைக்கும் வந்தவர் விடைபெற்றுண்டு திரும்பிப் போகணும்.  நான்கூட வரேனே தேர் எடுத்துண்டுன்னு சொன்னார் அவர்.  இராமன் விலக்கிட்டான்,  ’இல்லே, நீர் திரும்பப்போம்.  இராஜ்யத்தை பாத்துக்கறதுக்கு ஆளில்லே.  நான் புறப்பட்டுட்டேன்ங்கிற துக்கம் தசரதனுக்குத் தாங்காது.  அவனால எவ்வளவு தூரம் வாழமுடியும்ன்னு தெரியாது.  நீர் போம், நான் அனுமதி குடுத்துட்டேன்’, என்று இராமன் திருப்பி அனுப்பிச்சுட்டான்.  அப்போ உன்கிட்ட ஏதாவது செய்தி வாங்கிட்டுப் போறேன்னு நிக்கறார் சுமந்திரர்.

    இராமனைப் பார்த்து, நாட்டுக்கு என்ன செய்தின்னு கேட்டார்.  ‘நான் என்ன சொல்லப் போறேன், நான்தான் இந்த நாட்டைப் பார்த்துண்டிருக்கணும். ஆனா பிதுர்வாக்யப் பரிபாலனுத்துக்காக கிளம்பி வந்துட்டேன். தகப்பனாரை ஜாக்ரதையாப் பார்த்துக்கோ, தாயாரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ’. நல்ல வார்த்தையெல்லாம் சொல்லிட்டார்.  அடுத்து சீதையினடத்திலே வந்து, ’உன் நாட்டுக்கும், உன் மாமனார் மாமியாருக்கும் என்ன செய்தி? என்று கேட்கிறார் சுமந்திரர்.  அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது.  எங்க பிறந்தோம், எங்க வளர்ந்தோம், வாழ்க்கைப்பட்டோம், எங்க வந்து உட்கார்ந்துண்டிருக்கோம்.  பிறந்த குலத்துக்கு குறைவில்லே, ஜனக குலத்துக்கு சுந்தரி.  புகுந்த குலத்துக்கு குறைவில்லே, தசரத குலத்துக்கு நாட்டுப்பெண்.  இந்த ரெண்டு பெருமையும் இருக்கறச்சே ஒரு காட்டுக்கு நடுவிலே வந்து உட்கார்ந்திருக்கணும்ன்னால், அவளுக்குத் துக்கத்திலே பேசறதுக்கு வரலே.  ஒண்ணுமே சொல்லலை அவள்.

    அடுத்து லக்ஷ்மணனிடத்திலே வந்தான் சுமந்திரன்.  ’லக்ஷ்மணா உன் தந்தைக்கு என்ன செய்தி சொல்ல’ன்னு கேட்டான்.  அவன் திரும்பி பதில் சொல்றான், ‘நீ கேள்வியே தப்பாக் கேட்கிறே, ஒழுங்காக் கேளு’ன்னான்.  ’ஏன், உன் தந்தைக்கு என்ன பதில் சொல்லணும்ன்னுதானே கேட்டேன்’.  ‘தசரத சக்ரவர்த்திக்கு என்ன சொல்லணும்ன்னு கேள்.  என் தந்தைக்கு என்ன சொல்லணும்ன்னு கேட்காதே.’  ‘ஏன் ரெண்டு பேரும் ஒருத்தர்தானே, அதனாலதானே கேட்டேன்’னா,  ‘இல்லே, நான் சொல்ற ஒரே ஒரு வார்த்தையைப் போய்ச்சொல். அவனைத் தந்தையாக மதிக்கவில்லைன்னு போய்ச்சொல்.’  லக்ஷ்மணன் நேர சுமந்திரனைப் பார்த்துச் சொல்றான், ’பிதுர்த்வம் நோபலக்ஷயே – தசரதனைப் பிதாவாக நான் மதிக்கவில்லைன்னு சொல்’.  வாங்கினுட்டான், சுமந்திரன் நேர நாட்டுக்கு வந்தான்.  ’உன் நாட்டு மக்கள் அத்தனை பேரும் பரிதவிக்கிறா.  ஆடு, மாடு, கோழி, குதிரை அழறது.  மொத்தச் செடி,கொடிகளும் பட்டுப்போய்க் கிடக்கின்றன.  இது ஒருபக்கம் தசரதா, உன் பிள்ளை லக்ஷ்மணன் சொன்னதைச் சொல்றேன், கேட்டுக்கோ.  எனக்கேத் தாங்கலே.  உனக்கு நெஞ்சு வெடிச்சு பிராணன் போய்டுமோ என்னமோ, சொல்றேன் கேட்டுக்கோ’ன்னான்.  ‘சொல்லு’ன்னான் தசரதன்.

    அப்ப சுமந்திரன் தெரிவிக்கிறான்.  ’ஒரோருத்தரையா செய்தி கேட்டேன். லக்ஷ்மணனிடத்திலே கேட்டேன். அப்போ ஒரு வார்த்தை சொன்னான். தசரதனை தந்தையாக மதிக்கவில்லைன்னு சொல்லச் சொன்னான்’.  தசரதனுக்கு ஒண்ணும் ஆகலே.  இவன் எதிர்பார்த்தபடி அவன் ஒண்ணும் துடிச்சுப் போய்டலே.  தசரதன் எழுந்து உட்கார்ந்துண்டான்.  இதுவரைக்கும் படுத்து இருந்தவர் எழுந்து உட்கார்ந்துண்டு, ’இவ்வளவுதான் சொன்னானா சுமந்திரா, இல்லே இதுக்கு மேலே ஏதானும் சொன்னானா’ன்னு கேட்டான்.  அப்போ, ’ஆமா, இன்னொரு வரி சொன்னான்.  அதை நாந்தான் விட்டுட்டேன்.  பிதுர்த்வம் நோபலக்ஷயேன்னு சொன்னவன், ப்ராதா பர்த்தா பந்துஸ்ச பிதாச மம ராகவா.  ராகவனே எனக்குப் ப்ராதா, ராகவனே பந்து, ராகவனே பிதா, ராகவனே மாதா. எல்லாமாக ராகவனை வச்சுனுட்டேன்னு சொல்லு.  தசரதனை தந்தையாக மதிக்கவில்லைன்னு சொல்லு.’  இதைக் கேட்டவுடனே தசரதனுக்கு சிரிப்பு மலர்ந்து, சுமந்தரனைப் பார்த்துச் சொல்லுகிறான், ’நான் இராமனைப் பெற்று பெருமிதம் அடையவில்லை சுமந்திரா, லக்ஷ்மணனைப் பெற்றதால் ஆனந்தப்படுகிறேன்.  இராமனை பெற்றுக்கூட எனக்கு மகிழ்ச்சி இல்லை.  ஏன்னா நான் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இராமன் போயிருக்க வேண்டாம்.  அப்படியே தந்தை சொல்லுதான் இருக்கட்டுமே, தந்தை சொல்லு முக்கியமா, தந்தை மனசு என்னாகும்ங்கிறது முக்கியமா?  என் சொல்லே இருக்கட்டும், கூட இருந்தா நான் உயிரோட இருப்பேனோல்லையோ?  அதைப் பார்க்காமே என்ன இப்போ இவனுக்கு தந்தை சொல்லு முக்கியமா போச்சு?  நான் நினைக்கிறபடி இராமன் நினைக்கலே.  ஆனா நான் நினைக்கிறபடி இலக்குவன்தான் நடந்தான்.  அவனன்றோ இராமனே எல்லாம்ன்னு பற்றியிருக்கிறான்?’.  ஆகவே லக்ஷ்மணன் அப்பவே காட்டிக் குடுத்தது, பந்து என்றால் பகவான்தான் பந்து.  மத்த பேரெல்லாம் வருவா, கிளம்பிப் போய்டுவா.  இதைத்தான் மனுபகவான் தெரிவித்தார்.  இந்த உலகத்திலே, இந்த ஜென்மத்தில் யாராரோ உறவுக்காரர்களோடு இருக்கோமே தவிர, இவ்வாத்மாவுக்கு கடந்த ஜென்மத்தில யார் உறவுன்னு தெரியாது.  அதற்கு முன் ஜென்மத்துல யார் உறவுன்னு தெரியாது.  ஆனா ஒன்று தெரியும்.  இத்தனை ஜென்மங்களைத் தாண்டி ஒருத்தர் மட்டும் உறவா இருந்திருக்கார்.  அதிலே சந்தேகமேயில்லையோல்லையோ?  அதனால அந்த ஓர் உறவைப் பற்ற வேண்டியது முக்கியமே தவிர, அதை விட்டுவிட்டு இந்த அண்ணன் சொன்னார், தம்பி சொன்னார்ன்னு பார்த்துட்டு இருந்தோம்னா.  இருக்கிற காலத்தில எல்லா உறவுக்காரர்களுக்கும் நல்லதா நடந்துக்கணும். நம்மாலான எல்லா உதவிகளையும் செய்யனுமே தவிர, பகவானுடைய உறவா, இவர்களுடைய உறவான்னு முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்துடுத்துன்னால், அப்போ கண்டிப்பா மற்றதைத் துறந்து பகவான் உறவைத்தான் பற்றியாக வேண்டும்.  இந்த விஷயத்திலே விபீஷணன் எடுத்தது உயர்ந்த முடிவு.

    ஏன் அப்படிச் சொல்றேன்னா, இந்த இடத்துல தப்பான முடிவு இன்னொருத்தர் எடுத்துட்டார்.  அவரைப்பத்தி பட்டிமன்றங்களெல்லாம் நாம நடத்திக்கிட்டிருக்கோம்.  ஆனா அதை சாஸ்திரக்காரா ஒத்துக்கவே மாட்டா.  கர்ணன் எடுத்த முடிவு சரியான முடிவு அல்ல.  கண்ணன் பேசின பிற்பாடும் கர்ணன் இடம் மாறாமல் இருந்திருக்கான்னால், அப்போ பகவானை விட்டுட்டு என்னமோ, யாரையோ பற்றுவதற்கு அவனுக்குத் தோணித்தே தவிர, அப்போ பிறந்துண்டே இருக்க வேண்டியதுதான், சம்சாரத்திலே உழண்டுண்டே இருக்க வேண்டியதுதான்.  இதெல்லாம் சாமான்ய தர்மம்.  சாமான்ய தர்மத்துக்கும், விசேஷ தர்மத்துக்கும் வேறுபாடு உண்டு.  ரெண்டும் பண்ண முடியும்ன்னு இருந்தா, ரெண்டையுமே பண்ணிக்கனும்.  ஆனா சாமான்ய தர்மத்துக்கும், விசேஷ தர்மத்துக்கும் போட்டி வந்துடுத்துன்னால் சாமான்யத்தை விட்டுடணும், விசேஷத்தைத்தான் பற்ற வேண்டும்.

    ஓரே ஒரு இடம் பார்ப்போம்.  ஸ்ரீரங்கத்திலே பெருமாள் புறப்பாடு நடந்துண்டிருக்கு.  ஸ்ரீபராசரபட்டர்ன்னு ஒரு ஆச்சார்யார்.  அவர் கோஷ்டியோடே பெருமாளுக்குப் பின்னாடி நடந்துண்டிருக்கார்.  மணி ஐஞ்சே முக்கால், சந்தியாவந்தனத்துக்கு நாழியாயிடுத்து.  பக்கத்திலே இருக்கற சிஷ்யர் ஞாபகப்படுத்தறார், ‘ஸ்வாமி, சந்தியாவந்தனத்துக்கு நாழியாயிடுத்து, போவேண்டாமா?’ன்னு.  அவர் அப்போ சொன்னார், ‘நாம பெருமாளுக்குப் பின்னாடி போகற கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கோம்.  இது விசேஷ தர்மம்.  நான் பிராமணனாப் பிறந்தேங்கறதுக்காக நீ சந்த்யாவந்தனம் ஞாபகப்படுத்தறே.  அது சாமான்ய தர்மம்.  இப்போ நான் அதைப் பார்த்துட்டு, பெருமாளை விட்டுட்டுப் போய்ட்டேன்னா?  இவர் ஜாக்கிரதையா உள்ள போய்ச் சேருகிற வரைக்கும் என் பொறுப்புத்தான்.  அதனால அவர் உள்ள போறதுக்கு ஏழு மணியானா அப்பதான் நான் போய் சந்தியாவந்தனம் பண்ண முடியும்.  இன்னைக்கு ஒருநாள் சந்தியாவந்தனம் நாழி கழித்ததை சித்திரகுப்தன் கணக்கெழுத மாட்டான், போ.’, அப்படின்னு பராசரபட்டர் தன் சிஷ்யனுக்குச் சொன்னாராம்.

    விபீஷணன் சாமான்ய தர்மமான அண்ணனை விட்டுப்பிரிந்து, விசேஷ தர்மமான இராமனைப் பற்றுவதற்குப் புறப்பட்டான்.  ஆஜகாம முகூர்த்தேந யத்ரராம ஸலக்ஷ்மணஹாஆஜகாம – வந்தான்.  யாராவது ஒருத்தர், தான் வீட்லேர்ந்து புறப்பட்டு இன்னொரு இடத்துக்குப் போறார்ன்னு வச்சுக்கங்கோ. அப்போ அவர் போறார்ன்னு சொல்லுவமா, வந்தார்ன்னு சொல்லுவமா?  என் இடத்துக்கு வரேன்னா வந்தார்ன்னு சொல்லுவோம்.  என் இடத்தைவிட்டு இன்னொரு இடத்துக்குப் போறேன்னா, போறேன்னு சொல்லுவோம்.  இதான வழக்கம்?  அதேபோல விபீஷணன் லங்கையிலேர்ந்து புறப்படுறாரோ இல்லையோ?  அப்படின்னா என்ன சொல்லியிருக்கணும்?  இராமன் இருக்குமிடம் சேரப் போனார், அப்படின்னு சொல்லணுமா? அல்லது, லங்கையிலேர்ந்து இராமன் இருக்குமிடத்துக்கு வந்தார்ன்னுவாளா?  லங்கையிலேர்ந்து ஸ்லோகம் சொல்றதுன்னா போனார்ன்னுதான் சொல்லுவா.  ஆனா இந்த இடத்திலே, ‘ஜகாம’ன்னு இல்லே, ‘ஆஜகாம’ன்னு இருக்கு.  எதை வந்தார்ன்னு சொல்லணும்?  ஸ்வஸ்தானத்தை வந்தார்ன்னு சொல்லணும்.  என் இடம் எதோ அது ’வந்தார்’.  பரஸ்தானம் எதோ, அதுதான் ’போனார்’.  அப்போ விபீஷணனுடைய அபிப்ராயத்தாலே, இராமன் எங்கிருக்கிறானோ அதைத்தான் ஸ்வஸ்தானமாக நினைத்திருக்கிறான்.  அவன் மனசு மற்றொரு இடத்திலே இல்லே.  இராமன் திருவடி நிழல் எங்கேயோ, அதுதான் என் ஸ்தானம்.  அப்போ திரும்ப வீட்டுக்கு வரமாதிரிதான அர்த்தம்.  அதனாலதான் ‘ஜகாம’ன்னு சொல்லாமல், ‘ஆஜகாம’ன்னு தெரிவித்தார்.  முகூர்த்தேந – ரொம்ப சீக்கிரமாக.  ஏன் சீக்கிரமாக வந்தார்ன்னு கேட்டால், சரணம் பண்ணனும் புத்தி வந்துட்டால் சீக்கிரமாக பண்ணிடனும்.  அதுக்கு நாள், நட்சத்திரம் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியதில்லே.  ஆச்சார்யனிடத்தில போய் சமாஸ்ரயணம் பண்ணிக்கிறதுக்கோ, பகவானிடத்தில போய் சரணாகதி பண்ணிக்கிறதுக்கோ, செவ்வாய், வெள்ளி, அஷ்டமி, ராகுகாலம், எமகண்டம், எதுவுமில்லை.  பகவானை ஆச்ரயிக்கப் போறோம்னால், அதை உடனடியா செய்துடனுமே தவிர, அதுல காலம் தாழ்த்தினோம்னால், நம்ம புத்தியே மாறிப் போய்டும்.  அதனாலதான் ‘முகூர்த்தேந’, ரொம்ப சீக்கிரமாக வந்தான்.

    எத்ரராமஹா – எங்கு இராமன் இருந்தானோ அங்கு வந்தான்.  இராமனிடம் வந்தான்னு மட்டும் சொல்லாமல், எத்ரராமாஹான்னு போடணுமா?  ’எத்ர’ங்கிற சொல்லு இடத்தைக் குறிக்கறதோல்லையோ?  இராமன் எங்கிருந்தானோ, அங்கு வந்தான்னால், பகவானைக் காட்டிலும் அவன் இருக்கிற திவ்யதேசம் உத்தேசம்.  இந்த விஷயத்தை வால்மீஹி தெரிவிக்கிறார்.  பெருமாள் இருப்பர்.  அவர் எந்த திவ்யதேசங்களிலே ஆசையோடே இருக்காரோ, அந்த இடங்களிலே நமக்கும் ஆசை இருக்கணும்.  பெருமாளிடத்திலே சரணாகதி பண்ணனும்ன்னா எங்க போய் பண்ண முடியும்?  ‘இதில் ப்ரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர்’ன்னு பிள்ளை லோகாச்சார்யர் தெரிவிக்கிறார்.  ஆச்சார்யர்கள் சரணாகதி பண்ணுவதோ, ஆழ்வார்கள் சரணாகதி பண்ணுவதோ, நாம் சரணாகதி பண்ணுவதோ, அத்தனையுமே திவ்யதேசங்கள்லேதான்.  ஏன்னா நம்மால பரரூபத்தை சேவிக்கவே முடியாது.  வியூக ரூபம் எங்க இருக்கோ தெரியாது.  அந்தர்யாமி எங்கேயோ உள்ள இருக்கார்.  விபவ அவதாரம் என்னைக்கோ நடந்திருக்கு.  நாம இன்னைக்குச் சரணம்ன்னு போய் பெருமாளிடத்தில நிற்கணும்ன்னால், அதற்கு ஒரே வழி அர்ச்சாவதாரத்திலதானே.  அதனாலதான் எத்ரராம ஸலக்ஷ்மணஹான்னு தெரிவிக்கிறார்.

    அதுக்கடுத்தது ‘ஸலக்ஷ்மணஹா’ன்னு இருக்கோல்லையோ?  லக்ஷ்மணனோடு கூட இருக்கும் இராமன் இருக்குமிடத்துக்கு வந்தான்.  என்ன ஸ்வாமி, இராமனைத்தான நேர வரணும்?  இப்ப குறுக்க லக்ஷ்மணன் எதற்காக?  லக்ஷ்மணன் இருக்கறது ஒரு இன்றியமையாதது.  பகவானிடத்தில சரணம்ன்னு போறோம்ன்னாலே, அவர் தனியா இருக்கறச்சே போனா காரியம் நடக்குமா, நடக்காதா தெரியாது.  சிபாரிசு பண்றதுக்கு ஆள் கூட இருக்கணும்.  அப்பதான் போனா நம்ம காரியமே நடக்கும்.  அதாவது பாகவதோத்தமர்களைப் பற்றியே பகவானைப் பற்ற வேண்டும்.  இது இந்த ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தினுடைய ரொம்பப் பிரதானமான கருத்து. அவனைவிட அவன் அடியார்களுக்குத்தான் ஏற்றம்.  அவனைப் பற்றுவது ஓர் படி, பகவத் பக்தர்களைப் பற்றுவது இன்னும் மேல்படி.  மற்ற ஆழ்வார்களெல்லாம் ஒரு நிலைன்னா, மதுரகவியாழ்வார் தனி நிலை.  நம்மாழ்வார்தான் அவருக்குத் தெய்வமே. ’தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவி நின்னிசைப் பாடித் திரிவனே’ன்னு கண்ணிநுண்சிறுத்தாம்புங்கிற பிரபந்தத்தில பாடினார்.  தேவு மற்றறியேன் – எனக்கு வேறு தெய்வம் தெரியாது.  குருகூர் நம்பி பாவி நின்னிசைப் பாடித் திரிவனே – குருகூர் நம்பியான நம்மாழ்வாரே எனக்குத் தெய்வம்.  எனவே ‘எத்ரராம ஸலக்ஷ்மணஹா’ன்னா ‘நாம் பாகவதர்களை முன்னிட்டுக் கொண்டு, பெருமானைப் பற்றிவிடலாம்’, இந்த ஆசையோடு வந்திருக்கிறான் விபீஷணன்.  இன்னொரு அர்த்தம் வேடிக்கையாகச் சொல்லுவர்கள். அதாவது, தம்பி வார்த்தை கேளாத கோஷ்டியைத் துறந்து, தம்பி வார்த்தை கேட்கும் கோஷ்டிக்குப் புகுந்தான்னார்.

    ஒரு கோயிலுக்குப் போறாம்னாலே, முதல்லே கருடன் சன்னிதி, அனுமார் சன்னிதி, ஆழ்வார்கள் சன்னிதி, ஆச்சார்யர்கள் சன்னிதி, இதெல்லாத்தையும் சேவிச்சுட்டு, தாயார் சன்னிதியைச் சேவிச்சுட்டுத்தான் பெருமாள் சன்னிதிக்குப் போகணும்.  அதனால முதல்ல பாகவதர்களை முன்னிட்டு, அடுத்து மஹாலக்ஷ்மியை முன்னிட்டு, அதற்கப்புறம்தான் பகவத் ஆஸ்ரயணம்.  அந்த முறையெல்லாம் சரியா விபீஷணனுக்குத் தெரியும்.  அதனாலதான் பாகவதனை முன்னிட்டுக் கொள்ளுவோம்ன்னு லக்ஷ்மணன் இருக்கும் இடத்துக்கு வந்தான். இவர் சிபாரிசு பண்ணுவர்னுட்டு.

    அப்ப ஒரு சந்தேகம் வரும், ‘ஸ்வாமி, பிராட்டி பக்கத்துலேயே இல்லையே?  நீர் சொன்னபடி பார்த்தா தாயாரிடத்திலே சரணாகதி பண்ணிட்டு, அவள் புருஷகாரபூதையாக இருந்துதானே பெருமானைப் பற்றி இருக்க வேண்டும்?  இப்போ சீதையே பக்கத்தில இல்லையே?  அப்போ இராமன் ஒரேயடியா கோவிச்சுட மாட்டாரா’ன்னா, இந்த மொத்த விபீஷண சரணாகதிக்கு அடிப்படையே சீதா அனுக்கிரகம்தான்.  அது இல்லாம இது நடந்தே இருக்காது.  எவ்வளவு தூரம் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சீதை என்னத்துக்காக இராவணனாலே தூக்கப்பட்டு, அசோகவனத்தை அடைந்தாள்?  அவள் அடைந்ததற்கு காரணம் உண்டு.  விபீஷணனை அனுக்கிரகித்து, தயார்படுத்தி சரணாகதிக்கு அனுப்பி வைக்கத்தான்.  அவ அந்த ஊருக்குள்ள போனதுக்கே இதுதான் காரணம்.  அதனால அவள் அனுக்கிரகம் இல்லாம விபீஷணன் வந்துடவே இல்லே.

    ஒரு சந்தேகம் ஏற்படும், எப்பவும் இராமன் அனுக்கிரகிக்கனும்ன்னா கூட சீதை இருக்கணுமே?  ரெண்டே ரெண்டு இடத்தில மட்டும் சந்தேகம்.  சுக்ரீவாதிகளை இராமன் சீதை இல்லாத போது தோழனாக ஏற்றுக்கொண்டான்.  விபீஷணனை இராமன் சீதை அருகில் இல்லாத போது தனக்கு சரணாகதனாக ஏற்றுக்கொண்டான்.  இந்த ரெண்டு இடத்தில மட்டும் சந்தேகம் வரும். மத்த எல்லா இடத்திலேயும் சீதை கூட இருந்தாத்தான்.

    இந்த சந்தேகம் சீதைக்கே வந்துடுத்து.  வந்ததாலதான், அசோகவனத்துக்கு ஹனுமார் வந்துருக்கச்சே, ஹனுமாரைப் பார்த்துக் கேட்கிறாள்.  ’கீதுருஸம் வத்ஸுஸம்ஸ்தாநம் ரூபம் இராமஸ்ய கீதுருஸம்’, ’என் இராமனுடைய அங்க அடையாளங்களையெல்லாம் சொல்லு. நீ அவரைத்தான் பார்த்திருக்கியான்னு நான் கண்டுபிடிச்சாகனும்’. அப்படின்னு அனுமான்கிட்ட கேட்டுட்டு, அவனுக்கும் இவனுக்கும், வானரானாம் நரானாஞ்ச கதமாஸீ ஸமாகமஹா, வாரணத்துக்கும் நரத்துக்கும் என்னமா தோழமை ஏற்பட்டது?  ரொம்ப ஆச்சர்யமா இருக்கே.  குரங்கும் குரங்கும் கைகுலுக்கிப் பார்த்திருக்கேன். மனுஷனும், மனுஷனும் கைகுலுக்கிப் பார்த்திருக்கேன்.  மனுஷனும் குரங்கும் கைகுலுக்கி நான் பார்த்ததேயில்லே.  எப்படி இவா ரெண்டு பேருக்கும் நட்பு ஏற்பட்டதுன்னு சீதை கேட்கறா.

    ஹனுமார் சட்டுன்னு புரிஞ்சுனுட்டார்.  ’சீதை, இதுதான் உன் கேள்விக்கு அபிப்ராயமா, இல்லே எதைக் கேட்க நினைச்சு எதைக் கேட்கறே?’ன்னார் அவர்.  சீதை சொன்னா, ’நான் எதைக் கேட்க நினைக்கறேன்னு தெரியறதோல்லையோ? அப்ப அதுக்கே பதில் சொல்லு’, அப்படின்னுட்டாள்.  சீதை எதைக் கேட்க நினைக்கிறாள்?  எப்படி வானரத்துக்கும், நரத்துக்கும் நட்பு ஏற்பட்டதுங்கிறது அவ சந்தேகமே இல்லே.  ஏன்னா இராமன் யாரோடும் தோழமை கொள்ளுவன்னு அவளுக்குத் தெரியும்.  இராமன் உயர்வு, தாழ்வு பாராமல் எல்லாரையும் நண்பனாக ஏற்றுக் கொள்ளுகிற சுசீலன்.  சீதைக்கு இது நன்னாவே தெரியும்.  ஆனா அவள் சந்தேகம் என்னன்னா, நான் பக்கத்திலே இல்லாது இருக்கச்சே எப்படி சுக்ரீவனை நண்பனா ஏத்துண்டான்?  இதுதான் அவள் கவலை இப்போ.  நான்கூட இல்லையே, அசோகவனத்திலேன்னா இருந்தேன்.  அப்போ நீங்கள்லாம் கூடப்போய் இராமனுடைய திருவடிகளைப் பற்றிட்டீர்களே, என்னமா இராமன் உங்களை ஏற்றுக்கொண்டான்?

    ஹனுமான் ரொம்ப ஆச்சர்யமா சமாதானம் சொன்னார்,  ‘தேவி, தேவரீர் அனுக்கிரகத்தோடதான் இராமனே எங்ககிட்ட வந்தான்.  ஞாபகமில்லையா?  நாங்களெல்லாம் கிஷ்கிந்தையிலே ரிஷ்யமுக பர்வதத்தில உட்கார்ந்திண்டிருந்தோம்.  இராவணன் உம்மை ஆகாச மார்க்கத்தில தூக்கிண்டு போயிண்டிருந்தான்.  தேவரீருடைய ஆபரணங்களை மூட்டையாகக் கட்டி எங்களுக்கு நடுவிலே போட்டது.  நீர் எங்களை கீழ பார்த்து கடாக்ஷித்த பிற்பாடுதான், இராமனே வந்தான்.  உம் அனுக்கிரகம் இல்லாத இராமன் எங்க வரப்போறார்?  உம்மை பிடிச்சுக்காம இராமன் எங்க எங்களை அனுக்கிரக்கப் போறார்?  உம்ம ஆபரணங்கள் மூலமா உங்கள் அனுக்கிரகத்தை வாங்கினுட்டு, அப்புறம்தான் இராமன் திருவடிகளை நாங்கள் பற்றினோம்.  அதனால நீங்கள் கவலையே படவேண்டாம், உம்ம சம்பந்தத்தோடதான் இராம அனுக்கிரகம்.  ஹனுமார் சொன்னப்புறம்தாம் மூச்சே வந்தது சீதைக்கு.  சீதா அனுக்கிரகம் இருந்தாலே இராமா அனுக்கிரகம் கிட்டும்.  அது திண்ணம்.

    அடுத்த சந்தேகம், விபீஷணன் எப்படி நேரே போய் பற்றிட்டாரேன்னா, விபீஷணனைக் கிளப்பி அனுப்பிச்சதே அவதான்.  இங்க இருந்து கிளம்பி இலங்கைக்குப் போனது இராவணனை முடிக்கறதுக்கெல்லாம் இல்லே.  இந்த இராவணனைக் கொல்றதுக்காக இதெல்லாம்ன்னு நினைச்சிண்டா ஏதோ மேலெழுந்தவாரியா கதை கேட்கறோம்ன்னு அர்த்தமே தவிர, இராமாயணத்தினுடைய ஆழ்ந்த பொருள் புரியவே புரியாது.  ஒரு சரணாகதனைத் தயார்ப்படுத்த வேண்டியது, பிராட்டியினுடைய முக்கியப் பொறுப்பு.  அதனாலதான் அந்த ஊருக்குப் போய் விபீஷணனைத் தயார்படுத்தி அனுப்பி வைத்தாள்ன்னு சொல்லுவர்கள்.  அப்போ சீதையை முன்னிட வேண்டும், லக்ஷ்மணனை முன்னிட வேண்டும்.  இதைச் செய்தே விபீஷணன் இராமன் திருவடிகளைப் பற்றுகிறான்.

    பகவானைப் பற்றனும்ன்னால் இருவரையும் சேர்த்தேதான் பற்ற வேண்டும்.  சீதையினடத்தில மட்டும் ஆசை? கூடாது. இராமனிடத்தில மட்டும் ஆசை? கூடாது.  இராமனிடத்தில மட்டும் ஆசைப்பட்டாள் சூர்ப்பனகா. காது, மூக்கு போய்டுத்து.  சீதையினடத்தில மட்டும் ஆசைப்பட்டான் இராவணன். தலையே போய்டுத்து.  சீதையை முன்னிட்டுக் கொண்டு, இராமனைப் பற்றினான் விபீஷணன், பேரின்ப வாழ்வே பெற்றான்.

    விபீஷணன் ஆகாயத்தில வந்தானே, ஒருவேளை, கீழ இவ்வளவு பெரிய சமுத்திரம் இருக்கே, இறங்கி ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துருப்பனா?  ஒரு முழுக்குப் போட்டு, நீராடி, ‘இனிமே இலங்கைக்கும் எனக்கும் தொடர்பில்லை.  இனிமே இராமனுக்கு எனக்கும்தான் தொடர்பு’, அப்படின்னு சொல்லியிருப்பனா?  அல்லது, சரணாகதி பண்ணப்போறோமே, தீர்த்தமாடிட்டுப் போகவேண்டாமா?  சரணாகதி பண்றது எவ்வளவு பெரிய காரியம்?  நீராடிட்டாவது போக வேண்டாமான்னால், வ்யாக்யாதார் தெரிவித்தார், இதை அவன் பண்ணவே இல்லை.  சமுத்திரத்தில இறங்கவே இல்லே, நீராடவே இல்லே. நேரயே வந்துட்டான்.  ஏன் அப்படி எனில், சரணாகதிக்கு நேரமோ, இடமோ, நியமங்களோ, எதுவுமே கிடையாது.  எப்போது வேண்டும்னாலும் பண்ணலாம்.  யார் வேணும்ன்னாலும் பண்ணலாம்.  எந்த பலத்துக்காகவும் பண்ணலாம்.  எங்கு வேணும்ன்னாலும் பண்ணலாம்.  எதைப் பண்ணாவிட்டாலும் பண்ணலாம்.  சரணாகதிக்கு எது யோக்யதை?  ரொம்ப சுலபமாச் சொல்லணும்ன்னா, வேறு யோக்யதை இல்லாமலிருத்தல் யோக்யதை.

    ஆகாயத்தில பறந்து வர்றார்.  வரும்போது பின்னாடியே நாலு இராட்ஷசாளும் பறந்து வர்றா.  கையைக் கூப்பிண்டு, அதுக்கு நடுவுலே கதையை கீழ்நோக்கி வைச்சுனுட்டான்.  இப்போ இக்கரை,  திருப்புல்லாணிக்கரையிலே மொத்த வானரோத்தமர்களும் ஜாக்கிரதையா இராமனைப் பாதுகாத்துண்டிருக்கா.  ஆகாயத்தில பார்த்தா மேகநாதத்தைப் போன்ற ஒலியுடன் வேகமா விபீஷணன் வந்துண்டிருக்கான்.  கீழ இருந்து சுக்ரீவன் பார்த்துட்டான்.  அவனைப் பார்த்த உடனே சுக்ரீவனுக்குக் கொதிக்க ஆரம்பிச்சுடுத்து.  வானரோத்தமர்களைப் பார்த்துச் சொல்லுகிறான், ராக்ஷஷோத்வேதி பக்ஷத்வம் அஸ்மாந் ஹம்தும் நஸம்ஸயஹா.  ’ஹே, வானரோத்தமர்களே பாருங்கள்.  ஆகாயத்தில் ராக்ஷசன் வருகிறான்.  நம் அத்தனை பேரையும் கொல்லுவதற்காக வருகிறான்ங்கிறதில சந்தேகமில்லை.’ அப்படின்னு ஒரு வார்த்தை சுக்ரீவன் சொல்லுகிறான்.  அத்தனை குரங்கும் அடுத்தது எழுந்ததுதான்.  ஒரே சத்தம், கூச்சல், குழப்பம் எல்லாம்.  ஒன்னொன்னும் ஒரு கையில ஒரு மலையைப் பேர்த்துண்டது, ஒரு கையில ஒரு மரத்தை எடுத்துண்டது.

    வால்மீஹி சொல்றார், சுக்ரீவஸ்ய வஸஸ்ருத்வா சர்வேதே வானோரோத்தமாஹா, சுக்ரீவனுடைய வார்த்தை காதில பட்டதோ இல்லையோ, சர்வேதே வானோரோத்தமாஹா – அத்தனை வானரோத்தமர்களும், சாலாஞ் சைலாஞ்ச உத்தம்ய – ஒரு கையில் மரம், ஒரு கையில் மலை. இந்த ரெண்டையும் கையில ஏந்திண்டு, விபீஷணன் கீழ இறங்கட்டும் அப்படிங்கறதுக்காக காத்துண்டிருந்ததாம்.  அப்ப ஆகாசத்துல பார்த்த சுக்ரீவன் சொல்லுகிறான்,

    ஏஷ சர்வாயுதோ பேதஹா சதுர்த்திஷா ராக்ஷசைஹி
    ராக்ஷஷோத்வேதி பக்ஷத்வம் அஸ்மாந் ஹம்தும் நஸம்ஸயஹா
    .

    ’ராக்ஷசன் வருகிறான்; நம் அத்தனை பேரையும் கொல்லுவதற்கு வருகிறான், சந்தேகமில்லை.’  இவா இத்தனை லட்சம் பேர் இருக்கறச்சே ஒரு இராட்சசன் வந்தா கொன்னுடப் போறான்?  மேலும் சுக்ரீவன் என்ன பயந்தாங்கொள்ளியா?  ஆனா மத்த அத்தனை பேரையும் கொல்றதுக்கு வர்றான்னு ஏன் சொல்றான்னா, அவன் வருவது எங்கள் யாரையும் கொல்றதுக்கு அல்ல, இராமனைக் கொல்றதுக்குன்னு அவன் நினைச்சினுட்டான்.  இராமனுக்கு என்ன வருமோன்னு அவனுக்கு பயம்.  இராமனுக்கு ஏதானும் ஆகிவிட்டால் நாம மொத்தப் பேரையும் கொல்லுவதற்குச் சமம்தானே?  எங்க யாரையும் அவன் தனித்தனியா அவன் அடிக்கவே வேண்டாம், கொல்லவே வேண்டாம்.  இராமனுடைய திருமேனியில ஒரு கீறல் விழுந்துடுத்துன்னா நான் இருந்தே லாபமில்லே.  விபீஷணன் வர்றான்ன உடனே, மொத்தப் பேரையும் கொல்றதுக்குத்தான் வருகிறான்.

    ‘வர்றவன் எப்படி வருகிறான் பார்த்தீர்களா வானரோத்தமர்களே, ஏஷ சர்வாயுதோ பேதஹா – அத்தனை ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு வந்தான்’.  இந்த இடத்துல உடனே ஒரு சந்தேகம் வரும். உத்பபாத காதாபாநிஹி சதுர்த்திஷ் ராட்சஸைஹி, இப்பதான் நாலு ஸர்க்கத்துக்கு முன்னாடி கதையும் கையுமாகப் புறப்பட்டான்னு எழுதியிருக்கார்.  இந்தப்பக்கம் வர்றதுக்குள்ளே நடுவுல என்ன ஆயுதக்கடை வச்சிருந்தாளா, இறங்கி வாங்கிண்டு வர்றதுக்கு?  சர்வாயுதோ பேதஹாங்கிறாரே, மொத்த ஆயுதமும் எங்கேர்ந்து வரும்? இருக்கிறது ஒரு கதை.  ஒரு கதையைச் சொல்லிட்டு ஏன் இத்தனை ஆயுதம்ன்னு சொல்றார்ன்னா, பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்தில தெரிவித்தார், அந்த ஒரு கதையைப் பிடிச்சிண்டிருக்க அழகைப் பார்த்தா, மொத்த ஆயுதத்தையும் பிடிப்பன்னு நினைக்கத் தோண்றதாம்.  அதனால எல்லாம்ன்னு சொல்லிட்டாராம்.

    அடுத்தது சொன்னார். அவன் கதையை எப்படிப் பிடிச்சிருந்தாலும் எனக்குக் கவலை கிடையாது.  ஆனால் யாரோ இராமனைப் பற்றின இரகசியத்தை விபீஷணனுக்குச் சொல்லிக் குடுத்திருக்கா.  அதுதான் பயந்து போய்ட்டான் சுக்ரீவன்.  கையை கூப்பினுட்டு, கூப்பின கைக்கு நடுவில கதையை வச்சுனுட்டான்.  எங்க இராமன் கதைக்குப் பயப்படமாட்டான், வில்லுக்குப் பயப்படமாட்டான், கத்திக்கு பயப்படமாட்டான். ஆனால் யாரேனும் கைகூப்பினார்களேயானால் அதை எதிர்த்து இராமனால் எதுவுமே செய்ய இயலாது.  இந்த இரகசியத்தை யாரோ விபீஷணனுக்குச் சொல்லிக் குடுத்துட்டாள்ன்னா.  அப்போ அஞ்சலிதான் எல்லா ஆயுதமும்.  நாம பெருமாளை நோக்கிக் கையைக் கூப்பிடறோம் பாருங்கோ.  அவன் கையைக் கூப்பிண்டு, கதையைக் குறுக்க வச்சுண்டானோல்லையோ?  கதை ஆயுதமாவே சுக்ரீவனுக்குப் படலே, அஞ்சலிதான் ஆயுதமாப்படறது.  ‘ஓ, இவன் இராமனைக் கொன்னுடறதுன்னு வந்துட்டான் போலருக்கே.  இந்தக் கூப்பின கையோடு முன்னாடி வந்தால், இராமன் வில்லு கையில இருந்து நழுவி விழுந்துடும்.  பார்த்து அம்பு விடுவதற்கு அவரால முடியாது.’  நடக்கப் போறதே, இது முடிஞ்சுட்டு சமுத்திர ராஜனிடத்தே சரணாகதி பண்ணப் போறார்.  அவன் வரமாட்டான்.  நீ வில்லைக் கொண்டா, அம்பைக் கொண்டான்னு தூக்கிட்டார்.  பயந்துபோய் அங்கேர்ந்து சமுத்திரராஜன் வந்துருவன்.  வந்தவுடனே இராமன் என்னமா மாத்தினார், தெரியுமா?   அவனைக் கொல்றதுக்காக வில்லை வளைச்சு அம்பைப் பூட்டியாச்சு.  அவன் சரணம்ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தவுடனே, ‘சமுத்திரராஜனே, உன் விரோதிகள் யாராவது இருந்தாச் சொல்லு. அவாளைக் கொல்றதுக்காகத்தான் வில்லையே வளைச்சேன்’னுட்டார் அவர்.  வால்மீஹி பார்த்தார், ‘இராமனும் மாற்றிப் பேசுவன்னு இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன்’ன்னார் அவர்.  ஏன்னா மாற்றிப் பேசறதுக்கே தெரியாது இராமனுக்கு,  ராமோ த்விர்நாபிபாஷதே.  இரண்டாவது வார்த்தையே இராமனுக்குத் தெரியாது.  ஆனா அங்கயும் அவர் மாத்தறார்ன்னா, சரணம்ன்னு சொல்லிட்டா மொத்தத்தையுமே அவர் விட்டுக்குடுத்துடுவர்.

    ஆஸ்ருத பக்ஷபாதி’ன்னு பகவானுக்குப் பேர்.  நாம வந்து அவர் நடுநிலைமையாளர்ன்னு நினைச்சிண்டு இருக்கோம்,  அல்ல.  அவன் நடுநிலைமையாளன் அல்லன்.  அவன் ஒரு பக்கமாகத்தான் சாய்வன்.  தன் திருவடிகள்ல யாரு சரணம்ன்னு சொல்லிட்டானோ, அவன் பக்கம்தான் அவர் பேசுவர்.  மற்றொருத்தர் பக்கம் பேசமாட்டார்.  பின்ன சமோஹம், சமோஹம்ன்னு கீதைல சொல்லிண்டே இருப்பர் அவர்.  சமோஹம் சர்வபூதேஸு ஞ்யாத்வாமாம் சாந்திமிர்ச்யதி, நான் மொத்தப் பேருக்கும் சமம்ங்கிறாரேன்னா, சரணாகதி பண்ண வர்றவாளுக்குள்ள சமம்ன்னு சொல்றார்.  யாரெல்லாம் சரணம் வர்றானோ, அது பசுவா இருக்கட்டும், மனுஷனா இருக்கட்டும், பட்சியா இருக்கட்டும், சமம்.  இதைத்தான் அவர் சொல்றாரே தவிர, துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் நான் சமம்ன்னு அவர் சொல்லவேமாட்டார்.  அப்படி இருந்தா அவனை ஜெயிக்க வச்சுருக்கணுமோல்லையோ?

    இப்படிப்போய் பெருமாள் சொல்லலாமா, ஒருதலைப் பட்சமா பெருமாள் நடந்துக்கலாமா, ஒரு பக்கம் சாயறாரேன்னா, அவர் ஒருபக்கம் சாயறவன் நான்னு சொல்லிட்டாரோல்லையோ?  இனிமே நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமோ?  அது என்னமா நீ அவர்கள் பக்கம் நடக்கலாம்ன்னு கேட்டுண்டுருந்து, வாழ்க்கையை வீணே கழிச்சுட்டு, அடுத்த பிறவி எடுக்கறதுன்னா தாராளமா எடுத்துக்கலாம்.  அதை விட்டுட்டு, அவரோ ஆஸ்ருதர்கள் பக்ஷபாதம்ன்னு சொல்லிட்டார்.  அந்த ஆஸ்ருதர்கள் கோஷ்டிக்குள்ள ஒரு இடம் கிடைக்கிறதுக்கு வழியைப் பார்த்துட்டு நிம்மதியாப் போய்டலாம்.  இதை விட்டுட்டு, அதெப்படி அவர் இந்த மாதிரி சட்டம் போடலாம்ன்னு கேட்டுண்டு இருக்கணும்ன்னா, அவர் சட்டத்தை எல்லாம் மாத்தவே போறதில்லே.  நம்ம கேள்விக்கு அவர் பதில் சொல்லவும் போறதில்லே.  அப்போ கேட்டுக் கேட்டு பொழுதை வீணாக்கறதவிட, பெருமாள் இதான் ஆட்டம்ன்னு சொல்லிட்டா. ‘என் திருவடிகளைப் பற்று.  ஏன்னு என்னைக் கேள்வி கேட்காதே.  பற்றினவனுக்கு மோக்ஷம் தரேன்.  ஏன் குடுத்தே, இன்னாருக்குக் குடுத்தே, கேட்காதே.  நான் ஆசைப்பட்டவனுக்குக் குடுப்பேன்.’  இதுதான் அவருடைய சட்டதிட்டம்.  இந்த விளையாட்டுக்கு உட்பட்டு ஆடறதா இருந்தா ஆடலாம்.  ஆடி ஜெயிச்சு கோப்பையை வாங்கிட்டுப் போகலாம்ன்னா போகலாம்.  இல்லே, இதென்னமா இந்த விளையாட்டு நடக்கலாம்ன்னா, கேட்டுண்டே இருக்கலாம்.  இவ்வளவுதான் நடக்கும்.  பதில் வராது.  கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு அடுத்த பிறவி வருமே தவிர, பதில் மட்டும் வரவே வராது.  ஒரு மனுஷன் ஏற்படுத்தியிருக்கிற எத்தனையோ சட்டதிட்டங்களை நம்பிக்கையோடு, கேள்வி கேட்காமல் ஒத்துக்கொள்கிறோம்.  ஆனால் பகவான் இதுதான் சரணாகதின்னு சட்டதிட்டம் ஏற்படுத்தி இருந்தா, அதைப் பற்றிட்டு போறதை விட்டுட்டு ஆயிரம் கேள்வி கேட்டுட்டு இருந்தோம்ன்னா, கேட்டுட்டே இருக்க வேண்டியதுதான்.  இது ஸ்வாதந்திரியத்தினால நாம பேசுகிறோமோ தவிர, ஏத்துக்கறதுக்கு மனசில்லாம நாம பேசுகிறோமே தவிர, உண்மை உறைச்சுதுன்னா ஒருநாளும் கேள்வி கேட்கவே மாட்டோம்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – இராமாயணத்தில் சரணாகதி (2) உபந்நியாசம் – Toronto)

    April 16

    இராமாயணத்தில் சரணாகதிகள்

    ஸ்ரீஇராமாயணத்தில் இருக்கும் சரணாகதிகளில் 1,3,5 சரணாகதிகள் பலித்தது; 2,4,6 பலிக்கலை.  முக்கியமா ஆறு சரணாகதிகள் நடந்திருக்கு.

    முதல் சரணாகதிங்கறது தேவர்கள் ஸ்ரீநாராயணனிடத்தில் பண்ணினது.  ’இராவணனுடைய துன்பம் தாளவில்லை, தேவரீர் பிறந்து எங்களை இரட்சிக்க வேண்டும்.’  இது முதல் சரணாகதி, பலித்தது.

    அதற்கு அடுத்த சரணாகதி, இராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம் பண்ணி தசரதன் ஊருக்கு அழைச்சிண்டு வந்துண்டு இருக்கார்.  அப்போ பரசுராமர் கோபத்தோடே வந்தார்.  என் பிள்ளைகளை விட்டுடு, ஒன்னும் பண்ணாதேன்னு தசரதன் பரசுராமரிடத்திலே சரணாகதி பண்ணுகிறான். பலிக்கலை.  பரசுராமர் ஒன்னும் விட்டுடலை.  தசரதன் பண்ணின இந்த சரணாகதி பலிக்காமப் போய்டுத்து.  இரண்டாவது பலிக்கலை.

    மூன்றாவது இராமன் காட்டுக்கு கிளம்பிப் போகும் போது, லக்ஷ்மணன் கூட வருவேன்னு பிரார்த்தித்தான்.  கூடாதுன்னு இராமன் சொன்னார்.  அப்போ லக்ஷ்மணன் இராமனிடத்திலே சரணாகதி பண்ணி, அவசியம் தேவரீர் நம்மை அழைத்துப் போக வேண்டும் என்கிறார்.  பலிச்சுடுத்து.

    நான்காவது சரணாகதி, பரதன் சித்திரகூடத்துக்கு வந்து, இராமனிடத்திலே வேண்டி திரும்ப நாட்டுக்கு வரவேண்டும் என்று இரைஞ்சினான்.  அப்போ சரணாகதி பண்ணுகிறான்.  ஆனா இராமன் திரும்பி வரலை.  அந்த சரணாகதி பலிக்கலையோல்லையோ?

    ஐந்தாவது சரணாகதி, விபீஷணன் இராமனிடத்திலே பண்ணின சரணாகதி.  அது பலித்தது.

    ஆறாவது சரணாகதி, இராமனே சமுத்திர ராஜனிடத்திலே பண்ணின சரணாகதி.  சமுத்திரமே எனக்கு வழிவிடு, இங்கேர்ந்து நான் அக்கரைக்குப் போகணும்ன்னு இராமன் கேட்டாரோ இல்லையோ?  ஆனா அது பலிக்கவே இல்லை.  வில்லை எடுத்து, இந்த அடி உதவராப்போலேன்னு சொல்லுவாங்க பாருங்கோ, அந்த மாதிரிப் பண்ணினதும்தான் வந்தானே தவிர சமுத்திர ராஜன், ஒழுங்கா காலப்பிடிச்சுண்டு கேக்கறச்சே அவன் வரவே இல்லே.  வில்லை எடு, இவனை இப்படியே வற்றடிச்சிருவோம்ன்னு இராமன் கோபப்பட்டார்.  அப்போதான் சமுத்திரம் வந்தது.  அப்போ இராமன் சமுத்திரராஜனிடத்திலே சரணாகதி பண்ணினது, ஆறாவது சரணாகதி.  அதுவும் பலிக்கவில்லை.

    குறிப்பிட்ட சரணாகதிகள் பலிப்பதற்கும், மற்றவை பலிக்காததற்கும் ஏது காரணம்?  இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், சரணாகதி என்றால் என்ன?  சரணாகதிக்கு என்ன தேவை?  சரணாகதி பண்ணுபவனுக்கு என்ன தேவை?  யார்கிட்ட சரணாகதி பண்ணப்படுகிறதோ, அவனுக்கு என்னென்ன தேவை?  பண்ணப்படும் செயலுக்கு என்னென்ன தேவை?  இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    சரணாகதாள் – சரணாகதி பண்ணுபவர்கள்; சரண்யன் – யார்கிட்ட சரணாகதி பண்ணப்படுகிறதோ, அவன்; சரணாகதி – பண்ணப்படும் செயல்.  மூன்று பேருக்கும் லக்ஷணம் சொல்ல வேண்டுமோல்லையோ?  Definition-ங்கிறது வேறே, Explanation-ங்கிறது வேறே.  இங்க Definition வேணும்.  இந்த மூன்றுக்கும் அடையாளம் (சொரூப நிரூபக தர்மம்) வேணும்.

    சரணாகதி என்கிற சொல்லுக்கு பொருள் பார்ப்போம்.  ‘சரணமிதி ஆகதிஹி சரணாகதிஹி’. சரணம் என்று வருதல் சரணாகதி.  ஆகதிஹி – வருதல்.  அப்போ சரணம் என்றால் என்ன என்று கேள்வி வரும்.  சரணம் என்பது மூன்று பொருள்களில் வரும்.  உபாயம், க்ருகம், ரக்ஷணம், இந்த மூன்று பொருள்களிலே சரணம்ங்கிற சொல் வரும்.  உபாயம்ன்னா வழின்னு அர்த்தம்.  க்ருகம்ன்னா வீடுன்னு அர்த்தம் (உ-ம்) பறவைகள் சரணாலயம்.  ரக்ஷணம்ன்னா காத்தல்ன்னு அர்த்தம்.  இவற்றைப் பார்க்கும் போது, ‘உபாயம்’ என்ற அர்த்தத்திலேயே இங்கு சரணம் வருகிறது.  அப்போ சரணாகதி என்றால், ‘உபாயம் என்று வருதல்’.  இப்போ உபாயம்ன்னா என்னன்னு பார்க்கணும்.  ’உப அயதே இதி உபாயஹா’.  உப – சமீபத்தில்; அயதே – அழைத்துச் செல்லுகிறது, எதுவோ அது உபாயம்.  அப்போ எதற்கு சமீபத்தில் அழைத்து செல்லுவது?  எங்கு, எப்படி, யாரை, யாருக்கு சமீபத்தில், இந்தக் கேள்விகளெல்லாம் பிறக்கும்.  பலத்துக்கு சமீபத்தில்.  பலத்துக்குன்னா எந்தப் பலத்துக்கு?  பலம் (புருஷார்த்தம்) மூன்று வகை, ஐஸ்வர்யம், கைவல்யம், பகவல்லாபம்.  இதிலே ஐஸ்வர்ய, கைவல்ய பலத்துக்கு அழைத்துச் செல்லாமல், பகவல்லாபமான மோட்ஷ பலத்துக்கு அருகில் எது அழைத்துச் செல்கிறதோ, அது உபாயம்.  அப்போ மோட்ஷமாகிற பலத்துக்கு அருகில் அழைத்துப் போவது உபாயம்.  அப்போ மோட்ஷத்துக்கு அருகில் அழைத்துச் செல்லுவான் என்ற நம்பிக்கையோடு வருதல் சரணாகதி.

    சரண்யன் – மோட்ஷமாகிற பலத்துக்கு அருகிலே அழைத்துப் போபவன் யாரோ அவன் சரண்யன்.

    சரணாகதன் – மோட்ஷமாகிற பலத்தை அடைய வேணும் என்று ஆசைப்படுபவன் யாரோ அவன் சரணாகதன்.

    சரணாகதி – மோட்ஷமாகிற பலத்தை அடைவிக்கும் செயல் யாதோ அது சரணாகதி.

    அப்போ என்ன தோன்றுமென்றால், சரண்யன் யாராக இருக்க வேண்டும்?  சரணாகதன் யாராக இருக்க வேண்டும்?  அவர்களுக்குண்டான லக்ஷணங்கள் எவை?

    சரணாகதியின் முக்கிய பொருளைப் பார்ப்போம்.

    அநந்யசாத்யே ஸ்வாபிஷ்டே மஹாவிஸ்வாஸ பூர்வகம்
    ததேக உபாயதாயாஞ்சா ப்ரபத்தி ஸரணாகதிஹி

    ப்ரபத்தி என்றாலும், சரணாகதி என்றாலும், ந்யாஸம் என்றாலும் ஒரே பொருளைத்தான் குறிக்க வந்தது.  நான் வந்து ஒன்றை அடையணும்ன்னு ஆசைப்படுறேன்.  அதாவது மோட்ஷம் அடையணும்ன்னு ஆசைப்படுறேன்.  அதை அடைவதற்கு என்கிட்ட ஏதானும் இருக்கான்னு தேடிப்பார்க்கிறேன்.  ஒன்னும் வழியில்லேன்னு புரிஞ்சு போச்சு. ஏதேதோ வழி இருக்கறதா நினைச்சிண்டேன்.  ஒன்னொன்னையும் பத்து பத்து வருஷம் பண்ணிப் பார்த்தேன்.  ஒன்னும் பிரயோஜனமில்லேன்னு தெரிஞ்சுனுட்டேன்.  அநந்யசாத்யே ஸ்வாபிஷ்டே; ஸ்வ – தன்னுடைய, அபிஷ்டம் – ஆசைப்பட்டது, அநந்யசாத்யே – வேறு எந்த வழியாலும் சாதிக்க இயலாது, என்கிற எண்ணம் வந்து விட்டால், மஹாவிஸ்வாஸ பூர்வகம் – பெருத்த விஸ்வாஸத்தோடே, உறுதியான நம்பிக்கையோடேகூட, ததேக உபாயதாயாஞ்சா – அதை அடைவிக்கும் உபாயமாக தேவரீரே இருப்பீர், என்று பெருமானிடத்திலே பிரார்த்திக்கும் எண்ணம் சரணாகதி.

    அப்போ முதல் சந்தேகம் என்ன வரும்ன்னால், அப்போ பக்தி மார்க்கத்திலேயோ, கர்ம யோக மார்கத்திலேயோ, ஞான யோக மார்க்கத்திலேயோ, பெருமானே மோட்க்ஷம் குடுன்னு கேக்கறதில்லையான்னா, உண்டு, பெருமான்தான் மோட்க்ஷம் குடுக்கப் போறார்.  ஆனா அதிலே ஒரு வித்தியாசம் இருக்கு.  என்ன வித்தியாசம்ன்னால், உபாயம் என்பதும், பலத்தை குடுப்பவரும் எப்போதும் வேறு வேறாக இருக்கும்.  உதாரணம் பார்ப்போம். நான் ஒரு நூலகத்துக்கு போக வேண்டும், வழி தெரியாது.  ஒருத்தர் வந்தார், ‘வா, உன்னைக் கூட்டிப் போகிறேன்’னுட்டு கூட்டிட்டுப் போனார்.  கூட்டிடுப் போய் நூலகத்து வாசல்ல விட்டுட்டார்.  அவர் உபாயம்.  இப்போ நூலகத்து அதிகாரி கதவைத் திறந்து, எனக்கு புஸ்தகம் குடுத்து ‘இந்தா படி’ன்னு சொல்லணும்.  அவர் பலத்தைக் குடுப்பவர்.  நூலகத்து அதிகாரி கதவை சாத்திட்டார்ன்னா, அழைச்சிட்டுப் போனவர்னாலே எனக்கு எந்த ப்ரயோஜனமும் இல்லே.  அதேபோல் அந்த அழைச்சிட்டுப் போறவர் இல்லேன்னா, நான் நூலகத்துக்கு அருகிலேயே போயிருக்க முடியாது.

    இதேபோல் பக்தி மார்க்கம் உபாயம், பகவான் மோட்சத்தைக் குடுப்பவர் (அதிகாரி).  பக்தி மார்க்கம் மோட்சத்துக்கு அருகிலே அழைத்துச் செல்லும், அவ்வளவே.  அதுவே மோட்சம் குடுத்துராது.  பகவான்தான் குடுக்க வேண்டும்.

    இதுவே சரணாகதியில் என்ன ஆகிறதென்றால், மோட்சத்தை குடுப்பவர் அவர்தான்.  உபாயமும் அவரேதான்.  இங்க ரெண்டு வேலையையும் அவரே பார்க்கிறார்.

    சாத்யோபாயம், சித்தோபாயம்.  ’சாத்ய உபாயம்’ன்னால், என்னாலே சாதிக்கப்படுவது.  என்னாலே சாதிக்கப்படுகிற உபாயம், பக்தி.  அப்போ பக்தி மார்க்கம், சாத்யோபாயம்.  என் ப்ரயத்தனத்தாலே சாதிக்கப்படுகிற உபாயம் சாத்யோபாயம்.

    சித்தோபாயம்.  சரணாகதி என்பது சித்தோபாயம்.  ஏனெனில் இங்கு உபாயம் ஏற்கனவே இருக்கிறது.  என் ப்ரயத்தனத்தாலே சாதிக்கப்படுவது கிடையாது.  அதனாலே ‘சித்தம்’.  என் ப்ரயத்தனத்தாலே சாதிக்கப்படாமல், தானே இருப்பது சித்தம்.

    சாத்யோபாயம்ங்கிறது சிரமம்.  சித்தோபாயம்ங்கிறது சுலபம்.  ஏனென்றால் சாத்ய உபாயம்ன்னாலே பொறுப்பு என் தலைல விழுந்துடுத்தோல்லையோ?  அப்போ நான் கஷ்டப்பட்டுத்தான் சாதிச்சாகனும்.  ஆனா சித்தோபாயம்ன்னால், ஒரு பொறுப்பும் இல்லையே, அவர்தான் காத்திண்டே இருக்காரே.  அதனாலே சித்தோபாயம் சுலபம்.

    அப்போ சரணாகதர்கள் எல்லாரும் பக்தர்கள் இல்லையான்னா, உண்டு.  அவர்களும் பக்தர்களே.  பக்தி என்றால் என்ன?

    மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
    மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பாராயண:

    (பகவத்கீதை - 9.34)

    நெஞ்சும், வாக்கும், உடலும் பகவானிடத்திலேயே லயித்திருப்பது பக்தி.  அவ்வளவுதானே?  சரணாகதன் ஒவ்வொருத்தனுக்கும் நெஞ்சும், வாக்கும், உடலும் பகவானிடத்திலேயேதான் லயித்திருக்கும்.  அப்போ அவருக்கும் பக்தி உண்டு.  அப்போ என்ன வித்தியாசம்ன்னால், சரணாகதன் பக்தி மார்க்கத்தை உபாயமா ஏத்துக்கமாட்டார்.  பகவானை உபாயமா ஏற்றுண்டு பற்றிண்டுவர்.  அப்போ பக்தி எதுக்கு பண்ணுவர்ன்னா, பகவானை உபாயமாகப் பற்றி, மோட்ஷம் குடுன்னு கேட்டுட்டு, தரேன்னு பெருமாள் ஒத்துண்டுடராரோ இல்லையோ?  ஆனா ஒத்துண்ட அடுத்த நிமிசம்லாம் மோட்க்ஷம் தரமாட்டார்.  சரணாகதின்னு பண்ண பிற்பாடு இந்த வாழ்க்கையினுடைய முடிவில மோட்க்ஷம் குடுப்பர்.  இன்னொரு பிறவி தரமாட்டார்.  அந்தத் திருப்திக்குத்தான் வருகிறோமே தவிர, பண்ணின உடனேயே முக்தின்னு சொன்னால் யாரும் வர மாட்டா. அப்போ சரணாகதி பண்ணினால், தேகத்தின் முடிவில் முக்தி கிடைக்கிறது.  அப்போ சரணாகதி பண்ணினதிலேர்ந்து, வாழ்க்கை முடியற வரையிலான இடைப்பட்ட காலத்தில் என்ன பண்றது?  அப்ப பண்ணுவதுதான் பக்தி.  அதைப் பண்ணினதுனால நான் மோட்சம் போகப் போறதில்லே.  பகவானிடத்தில சரணாகதி பண்ணிட்டேன், அவர் அனுக்கிரகத்தால மோட்சத்துக்குப் போகப் போறேன்.  போற வரைக்கு நல்ல பொழுதை நான் போக்கியாகனும்.  அதற்காக பக்தி பண்றேன்.  இப்படி இருக்கும் போது, அந்த பக்தி உபாயமாக ஆகவே போறதில்லே.  இதிலே என்ன லாபம்ன்னால், இந்த பக்தியை நான் கொஞ்சம் பண்ணலாம், பண்ணாம விடலாம், ஒரு குற்றமுமே வராது.  ஏன்னா, நான் ஒன்னும் இதை உபாயமாக்கி பெருமாள்கிட்ட கேக்கலையோ இல்லையோ?

    பக்தி மார்க்கம், கரணம் தப்பினால் மரணம்.  தப்பு நேர்ந்தா போச்சு, அவ்வளவுதான். பலம் கிடைக்கப் போறதில்லே.  ஆனா சரணாகதியில் இந்த அபாயம் இல்லை.  அதனாலே பக்தியைச் சரணாகதன் வெகு சுலபமாகப் பண்ணுகிறான்.  மேலும் கண்ணன் கீதையில சொல்லியிருக்கிற பக்தி யோகம், உபநிஷத்துக்களிலே சொல்லப்பட்டிருக்கிற பக்தி மார்க்கம், ரெண்டும் ஒன்றுதான்.  இவற்றை பிராம்மண, ஷத்திரிய, வைசிய, இந்த மூன்று குலத்தார்தான் செய்ய இயலும்.  நான்காவது வர்ணத்தவர்களாலே அது செய்வதற்கு இயலாது.  பின்ன எப்படி நான்காவது வர்ணத்தவர்கள் மோட்க்ஷம் போலாமா, வேணாமான்னா, தாராளமாகப் போகலாம்.  அது அவர் சொல்லவே இல்லை.  ஆனால் பக்தி மார்க்கத்தினால மோட்க்ஷம் கிடைக்காது.  சரணாகதி மார்க்கத்தாலே மோட்க்ஷம் கிடைக்கும்.  அப்போ சரணாகதி நாலு வர்ணத்தவர்களுக்கும் பொது.  பக்தி மூன்று வர்ணத்தவர்களுக்குத்தான் பொது.  ஏன் அந்த மாதிரி ஆயிடுத்துன்னு சொல்றேன் கேளுங்கோ.  காரணம் தெரியணுமோல்லையோ?  பெருமாளிடத்திலே ஒரு குறை நாம சொல்லிடவே முடியாது.  இன்னார் மோட்க்ஷத்துக்கு வரவே கூடாதுன்னு அவர் சொல்லவே மாட்டார்.  இன்னன்னார் இந்தந்தப் பாதையில வாங்கோன்னு சொல்லுவர்.  அதைத்தான் அவர் சொல்லுவரே தவிர, யாருக்கும் முக்தி தரேன்.  ஆனா அவன் போற பாதையிலதான் நான் போவேன்னு பிடிவாதம் பிடிக்காதே.  இதைத்தான் அவர் சொல்றார். இன்னொன்னும் உண்டு, ஸ்த்ரீகள் வேத மந்திரங்களையோ, உபநிஷத்துக்களையோ, காயத்ரி உட்பட, சொல்லுவது கூடாது.  சொன்னால் குடும்பத்துக்கு ஆகாது. இதை பெரிய, பெரிய ஆச்சார்யர்களெல்லாம் ரொம்ப விசாரம் பண்ணி பார்த்துட்டு, சொல்லியிருக்கிறார்கள்.  காரணம் என்னன்னா, பக்தி யோகம் பண்ணனும்ன்னால், கர்ம, ஞான யோகங்களைப் பண்ணினால்தான் பக்தி மார்க்கத்துக்கே வரமுடியும்.  கர்ம, ஞான யோகங்களைப் பண்ணனும்ன்னா சாஸ்திரம் கற்க வேண்டும்.  அப்போ வேதம் கற்பதற்கு எவனுக்கு யோக்யதை இருக்கிறதோ, அவன்தான் பக்தியோகத்தைப் பண்ணவே முடியும்.  இது அங்க போக முடியும்.  வேதத்தை கத்துண்டவனாலதான் கர்ம, ஞான யோகங்களைப் பண்ண முடியும்.  கர்ம, ஞான யோகங்கள் இருந்தால்தான் பக்தியே வரும்.  பக்தி, அப்போ இன்னன்னார் மட்டும்தாம் பண்ண முடியும்ன்னு ஆயிடறது.

    ஆனால் சரணாகதி மார்க்கத்தில் இந்த பேச்சுக்கே இடமில்லை.  ஆணும் பற்றலாம், பெண்ணும் பற்றலாம். நான்கு வர்ணத்தவர்களும் பற்றலாம், மனிதரும் பற்றலாம், விலங்கும் பற்றலாம், பறவையும் பற்றலாம். ஜடாயு மோட்ஷத்துக்குப் போச்சு, பறவைக்கு மோட்ஷம்.  கஜேந்திரன் மோட்ஷம் எய்தினான், யானைக்கு மோட்ஷம்.  திரௌபதி மூன்று நாட்களின் போது சரணாகதி பண்ணியிருக்கா.  திரௌபதி ஸ்நதயாயன்னே சரணாகதி பண்ணுத்துன்னு பிள்ளை லோகாச்சார்யர் தெரிவிக்கிறார்.  ஸ்நதயாயன்னேன்னால், தான் குளிக்காமல் இருக்கும் நாட்களில் சரணாகதி பண்ணியிருக்கிறாள்.  அப்படிங்கிற அளவுக்கு எடுத்துட்டு போய்ட்டா இப்போ.  அப்போ யாரும் பண்ணலாம், எப்போதும் பண்ணலாம், எந்த நிர்பந்தமும் கிடையாது.  எந்த நியமமும் தேவையில்லை.  அது சரணாகதிக்கு உண்டான ஏற்றம்.

    இப்போ ஒரு பதினெட்டு மாடி கட்டடம்ன்னு வச்சுக்கங்கோ.  படிக்கட்டு கட்டி வைச்சுருக்கா.  பக்கத்துலே ‘Elevator / Lift’ அப்படின்னு ஒன்னு வச்சுருக்காளோல்லையோ?  அதுல ஏறி உக்காந்துண்டு பொத்தான அமுக்கினாப் போதும், கிடுகிடுன்னு என்னை மாடிக்குக் கொண்டு போய் விட்டுடும்.  நான் வேணும்ன்னா, அது பிடிக்காம மாடிப்படில மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஏறி வரலாம்.  இப்போ இந்த ரெண்டு பேரும் மொட்டைமாடில பேசிக்கிறா.  நீ வந்த மார்க்கம் பதினெட்டு மாடியை ப்ரயத்தனப்பட்டு நீ ஏறிக் கடந்தது. சாத்யோபாயம்.  நான் வந்தது சுலபமா வண்டில ஏறி உட்கார்ந்துண்டு வந்து சேர்ந்தது. சித்தோபாயம்.  ரெண்டு மார்க்கம். அடைந்தது ஒரே இடம்.  இதில் ஒரே ஒரு இடைஞ்சல். என்னன்னா, நாம வந்து அந்த Liftக்குள்ள ஏறி உட்கார்ந்துட்டோம்ன்னு வச்சுக்கங்கோ, உட்கார்ந்தப்புறம் நம்ம கையில ஒன்னுமே கிடையாது.  கதவை சாத்தியாச்சு. கதவை சாத்தினப்புறம் அது விட்ட வழி.  குறுக்க நின்னா நின்னது; கதவைத் திறக்க முடியாது; வெளிய வரதுக்கு முடியாது; அப்போ நம்மை மொத்தமா அதுகிட்ட சமர்ப்பிச்சுடணும்.  சமர்ப்பிச்சாத்தான் மேல நாம போயி சேரது நடக்கும்.  அதேபோல பகவானிடத்தில நம்மைச் சமர்ப்பித்து, அவனிடத்தில விஷ்வாஸம் இருந்தாத்தான் சரணாகதி பலிக்கும்.  ஏன்னா இது மொத்தமும் அங்க போயிடுத்து.  ஏன் போகணும்ன்னு கேட்டா, என்னால வேற எந்த வழியின் மூலமாகவும் இதை (மோட்ஷத்தை) அடைய முடியாதுங்கிற முடிவுக்கு வந்துட்டேனோல்லையோ?  அதனாலதான சரணாகதிக்கே வரேன்.  இப்ப பகவான்கிட்ட வந்துட்டு, நான் ஒரு கை குடுக்கறேன், நீ ஒரு கை குடுன்னா அவர் ஒத்துக்கமாட்டார். அப்படின்னா நீயே கை வச்சுக்கோ, என்னைக் கூப்பிடாதே.  என்னை ரட்சிக்கணும்ன்னு கூப்பிட்டியானா உன் கையை விட்டுடணும். உன் கை ஒன்று, என் கை ஒன்றுன்னு இந்த கூட்டு வியாபாரம் எல்லாம் பகவானுக்கு எண்ணமே கிடையாது.  என்னைக்கும் அவரது தனி வியாபாரம் தானே தவிர, ஒன்னு நீ பண்ணனும்ன்னா, உன் பாட்டை நீ பார்த்துக்கோ. இல்லே உன் பாட்டை என்கிட்ட விட்டுடு.  நீ பாதி, நான் பாதின்னா கடைசில எந்தப்பக்கம் போறோம்னே தெரியாது.  அதனாலே பெருமானுடைய திருவடிகளே சரணம், அதுவே உபாயம்ன்னு பற்றினால், நம்முடைய முயற்சி அதில் இருக்கவே கூடாது.

    ஒரு யானை மேல ஏத்தி என் குழந்தையை ஒரு சுத்து சுத்திட்டு வரணும்ன்னு ஆசை.  இப்போ எங்கேயாவது மக்கள் கூடுகிற இடத்துல பார்க்கலாம்.  யானையை யானைப் பாகன் ஓட்டிண்டு வருவர்.  அதுல குழந்தை ஏறணும்ன்னு அடம்பிடிக்கும்.  இப்போ யானை மேல குழந்தையை எப்படி ஏத்தறது?  நான் வந்து கீழே இருந்து குழந்தையை மேல தூக்கிவிட்டு, யானைப்பாகன் மேலேர்ந்து குழந்தையைத் தூக்கி, இதுக்குள்ள குழந்தை வீர்,வீர்ன்னு அலறி, அது கை,காலெல்லாம் உதறி, இது இத்தனை பாடு நடந்துரும்.  கடைசில ஏறி உட்கார்ந்த உடனே, அது அழுது பயந்து ரெண்டே நிமிஷத்துல கீழ இறங்கிரும்.  இது பல தரம் பார்த்திருக்கோம்.  மற்றொரு வழி என்னன்னா, இந்த ஒரு கஷ்டமுமே வேண்டாம்.  நான் தூக்கிக் குடுக்கற முயற்சியும் வேண்டாம்; பாகன் கையை நீட்டற முயற்சியும் வேண்டாம்; யானை நகர்ந்துடுமோங்கிற பயமும் வேண்டாம்.  குழந்தை கை,கால உதைச்சுடுமோங்கற பயமும் வேண்டாம்.  இது ஒன்னுமே வேண்டாம். பாகனிடத்திலே சொல்லிட்டீள்ன்னு வச்சுக்கங்கோ, அவர் காலைத் தொங்கப் போட்டிருக்கற இடத்திலே, யானையினுடைய காதுக்குப் பக்கத்திலே, ஒரு குத்து குத்துவர்.  குத்தினா, யானை முழங்காலை மடிச்சிண்டு கீழ உக்காரும்.  கொஞ்சம் தன்னையே தாழ்த்திக்கும்.  தாழ்த்திண்டு தன் தும்பிக்கையால இடுப்புல ஒரு சுத்து சுத்தி, அப்படியே மேலே தூக்கி உக்கார வச்சுரும்.  இதுல அப்பாவும் ஒண்ணும் பண்ண வேண்டாம், பாகனும் ஒண்ணும் பண்ண வேண்டாம், குழந்தையும் ஒண்ணும் பண்ண வேண்டாம்.  எதுவுமே பண்ண வேண்டாம். அவ்வளவு லாவகமா குழந்தையைத் தூக்கி உட்கார வச்சுருமோல்லையோ?  ஆனா அதுலே ஒரே ஒரு ஆபத்து.  வேற எந்த கஷ்டமமுமே இல்லே, ஒண்ணே ஒன்னு, அது தூக்கற சமயத்துக்கு யானை ஒழுங்கா தூக்குமான்னு சந்தேகப்பட்டு, நான் குறுக்க கையைக் கொண்டுபோய் வச்சாலோ, இல்ல பாகன் சந்தேகப்பட்டு கையை வச்சாலோ, இல்ல குழந்தை திடீர்ன்னு கையைக் காலை உதைச்சு கீழ வரணும்ன்னு பார்த்தாலோ, தூக்கின வேகத்துல சுத்தி அடிச்சுரும்.  அப்படியே தூக்கின வேகத்துல சுழட்டி அடிச்சரதோல்லையோ?  அதனால் அந்தக் குழந்தை யானையினிடத்தில சமர்ப்பிக்கப்பட்டால்தான் அது தூக்கும்.  இல்லேன்னா அது வேலைக்கு வரவே வராது.  இல்லேன்னா நீங்களாப் பார்த்து எப்படி மேலே வர்ரீளோ, மேல ஏறிக்கங்கோ. இதேபோல் சரணாகதிங்கிறது முதல் படியாக இல்லாமல், யானையினிடத்திலே சமர்ப்பிக்கப்பட்டு, யானை மேல ஏறி உட்கார்ந்துக்கிறோமோல்லையோ?  அது சரணாகதி மார்க்கம்.  ஏன்னா, பகவானுடைய திருவடிகளைப் பற்றி, அதன் மூலமாகவே மோட்க்ஷத்துக்குப் போதல்.

    இன்னொரு திருஷ்டாந்தம் பார்ப்போம். ரெண்டு பெரிய மலை இருக்கு.  சாளக்கிராமம் திவ்யஷேத்திரம் இருக்கு.  இந்தப்பக்கம் அன்னபூர்ணான்னு ஒரு மலை, அந்தப்பக்கம் தௌலகிரின்னு ஒரு மலை.  இது ரெண்டுத்துக்கும் நடுவுலதான் உலகத்திலேயே ஆழமான பள்ளத்தாக்கு இருக்கு.  அதுலதான் கண்டகி நதி ஓடறது.  இதுலே ஒரு பெரிய சிங்கம்.  அந்த சிங்கம் இந்த மலை முகட்டிலேர்ந்து அந்த மலை முகட்டுக்குத் தாவும்.  அவ்வளவு சக்தி படைத்த சிங்கம்.  இந்த மலை முகட்டிலே ரெண்டு புழு நின்டிண்டிருக்கு.  ஒரு புழு இன்னொரு புழுகிட்ட பேசறது.  ஒரு புழு சொல்லித்து, ‘நான் அந்த மலை உச்சிக்குப் போறதா இருக்கேன்’னது. இந்த இன்னொரு புழுவுக்கு ஒரே சிரிப்புத் தாங்கலே.  ஏன்னா ஒரு புழுவுக்கு ஆயுசு பத்து நாள். அவ்வளவுதான் இருக்கப்போறது.  அது ஒரு நாள் முழுக்க ஊர்ந்ததுன்னா பத்தடி போகும்.  அப்போ ஒரு புழு ஆயுசுல நகர்ந்தா நூறடி நகரலாம்.  இந்த மலையோட உசரம் 24,000 அடி. அந்த மலையோட உசரம் 25,000 அடி. இப்படி இருக்கறச்சே இந்தப் புழு என்னைக்கு இறங்கி, என்னைக்கு இன்னொரு பக்கம் ஏறிட முடியும்?  ‘நீ என்ன வேடிக்கை பண்றே?’ அப்படின்னு பக்கத்துப் புழு கேட்டுது.  ‘நீ வேணா பாரேன், நான் அந்த மலை உச்சிக்குப் போறேனா இல்லையான்னு பார்’, இந்தப் புழு சொல்லித்து.  ரெண்டும் வேடிக்கை பார்த்துண்டே இருக்கறச்சே, இந்த சிங்கம் இங்கேர்ந்து அங்க தாவறதுக்குத் தயாராச்சு.  அப்போ இந்த சாமர்த்தியக்காரப் புழு என்ன தெரியுமா பண்ணித்து?  ஓரடி நகர்ந்து போய், சிங்கத்தினுடைய கால்ல ஏறி உட்கார்ந்துடுத்து.  உட்கார்ந்த உடனே உறுமிண்டு, சிங்கம் தாவிடுத்து.  இந்த மலையிலேர்ந்து அந்த மலைக்கு தாண்டியாச்சு.  தாண்டி அங்க போய்ட்டு, புழு கால்லே இருந்து ஓரடி கீழ இறங்கிடுத்து.  இறங்கிட்டு அந்தப்பக்கம் இருக்கிற புழுவைப் பார்த்து, ‘நான் வந்துடுவேன்னு சொன்னேன், நம்பினியா?  இப்போ நான் வந்துட்டேன் பார்’ அப்படின்னு கேட்டது. அந்தப்புழு சொன்னது, ‘இது என்ன தப்பாட்டமா இருக்கு. நீ இறங்கி, அந்தப்பக்கம் போறதா நான் நினைச்சிண்டு இருந்தேன். இதென்ன நீ இப்படி போய்ட்டியே’ன்னு கேட்டது.  ‘நான் அப்படி சொல்லவேயில்லையே. அந்த மலை உச்சிக்குப் போகப்போறேன்னு சொன்னேனே தவிர, நான் இறங்கிப் போகப் போறேன்னு உன்கிட்ட எப்பவாவது சொன்னேனா?’

    இப்போ நான் இறங்கி அடுத்த மலை உச்சிக்குப் போயிருந்தால் அது சாத்யோபாயம்.  அது பக்தியோகத்தைப் போலே.  இந்த சிங்கம் இருக்கே, அதுதான் நரசிம்ஹப் பெருமாள்.  அவருடையை திருவடித் தாமரைகளையே உபாயம்ன்னு பற்றினால், அது சித்த உபாயத்தைப் போலே.  அதனாலே இது உன் ப்ரயத்தனத்தாலே நடக்கறதா, இல்லே அவன் ப்ரயத்தனத்தாலே நடக்கறதா.  நாம ப்ரயத்தனப்பட்டால் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். அவர் அனுக்கிரகிச்சார்ன்னா, நடந்தே தீரும்.  அதனாலதான் சுலபமா அவனையே பற்றுவோம்ன்னு சொல்லுகிறார்கள்.

    இதுல ‘மர்க்கடகிஷோர நியாயம்’, ’மார்ஜ்ஜார கிஷோர நியாயம்’ன்னு ரெண்டு.  ஸ்வகதஸ்வீகாரம், பரகதஸ்வீகாரம்ன்னு சொல்லுவர்கள்.  ஸ்வகதஸ்வீகாரம், நாம போய் பகவானைப் பற்றுதல்.  பரகதஸ்வீகாரம், அவன் நம்மைப் பற்றிக் கொள்ளுதல்.  இது குரங்கு-குரங்குகுட்டி, பூனை-பூனைக்குட்டி.  குரங்குகுட்டி தாய்க்குரங்கைப் பிடிச்சுக்கும்.  தாய்க்குரங்கு தன் உடம்பைப் பிடிச்சிருக்கிற குட்டிக்குரங்கோடே, இந்த மரக்கிளையிலேர்ந்து அந்த மரக்கிளைக்குத் தாவும்.  இது ஒரு பக்கம்.  இன்னொன்னு, பூனை குட்டி போடும். அந்த பூனைக்குட்டியை தன் வாயிலே கவ்விக்கும்.  நமக்கு பயமாயிருக்கும், ஆனா அந்தக்குட்டிக்கு ஒன்னுமே பண்ணாது.  ஒரு பக்கம் உடம்பு கிடக்கும், ஒரு பக்கம் தலை கிடக்கும்.  இப்போ இது ரெண்டிலே எது நழுவுவதற்கு வாய்ப்பு தெரியுமா?  இந்தக் குரங்குக்குட்டி குரங்கைப் பிடிச்சிண்டிருக்கோல்லையோ, அது எப்பவாவது நழுவினா, தாவிண்டிருக்கிற குரங்கால ஒன்னுமே பண்ண முடியாது.  இது கீழ விழுந்தது விழுந்ததுதான்.  அது தாவுற வேகத்தில இதைப் பிடிச்சிக்கவே முடியாது அதாலே.  அதே இந்த தாய்ப்பூனை, குட்டிப்பூனையைப் பிடிச்சிண்டிருக்கு பாருங்கோ, பிடியை விடவே விடாது.  ஏன்னா அதுங்கிட்ட இருக்கோல்லையோ பிடி?  குழந்தைக்கு வேலையே கிடையாது.  இப்போ முதல்ல சொன்னது நாமா பகவானைப் பற்றிக் கொள்வதற்குப் போறது.  ஆனா அடுத்துச் சொன்னது, பகவான் நம்மை அனுக்கிரகிக்க வருதல்.  அதிலே எப்போதும் கை நழுவவே நழுவாது, என்று சரணாகதிக்குண்டான ஏற்றத்தைச் சொல்லுகிறார்கள்.

    சரணாகதி பண்ணுபவனுக்கு என்ன தேவை?  ஏது முக்கியமான தேவைன்னா, மோட்க்ஷத்துக்குப் போறதுக்கு என்கிட்ட ஒன்னுமில்லையேங்கற சோகம் இருக்கணும்.  இருந்தாத்தான் சரணாகதி பண்ணுவதற்கு வரவே முடியும்.  ஏன்னு யோசிச்சு பாருங்கோ.

    ஸர்வதர்மாந் பரித்யஜ்ய
    மாமேகம் ஸரணம் வ்ரஜ
    அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ
    மோக்ஷ்யயிஷ்யாமி மா ஸுச:

    (பகவத்கீதை – 18.06)

    -என்று கண்ணன் சொல்றாரோல்லையோ?  மா ஸுச: - சோகப்படாதே.  இப்போ ஒரு ஸ்லோகத்துல ஒருத்தரைப் பார்த்து சோகப்படாதேன்னு சொல்லணும்ன்னு வச்சுக்கங்கோ, அவன் சோகப்பட்டிருக்கணும். அப்போதானே நான் சோகப்படாதேன்னு சொல்லுவேன்.  அர்ஜுனன் சோகப்பட்டிருக்கிறான். அவனைப் பார்த்துக் கண்ணன் சோகப்படாதேன்னு தெரிவிக்கிறார்.  அப்போ என் திருவடிகளிலே சரணாகதி அனுஷ்டிப்பாய், சோகப்படாதே, அப்படின்னா என்ன பொருள்?  அப்போ, சரணாகதி பண்ணுவதற்கு முன்பாக சோகம் இருக்க வேண்டும், சரணாகதி பண்ண வேண்டும், பண்ணின பின்பு சோகம் விலகிவிட வேண்டும்.  இந்த மூன்றுதான் அந்த ஸ்லோகத்திலேர்ந்து நாம் தெரிஞ்சுக்க வேண்டியது.  இன்னொன்னு முக்கியம், இந்த ஸ்லோகத்தை நாம எப்படி அர்த்தம் பண்ணிடுவோம்ன்னா, ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – எல்லா தர்மங்களையும் விடு; மாமேகம் ஸரணம் வ்ரஜ – என்னையே எல்லா தர்மமாகவும் பற்று; அஹம் – நான்; த்வா – உன்னை; ஸர்வபாபேப்யஹா – என்னை அடைவதற்கு தடங்கலாக உள்ள எல்லாப் பாபங்களிலிருந்தும்; மோக்ஷ்யயிஷ்யாமி – விடுவிக்கிறேன்; மா ஸுச: - சோகப்படாதே.  இந்த ஸ்லோகத்தைப் பார்த்தால் எப்படித் தோணும்ன்னால், பெருமானுடைய திருவடிகளிலே சரணாகதி பண்ணிடலாம், மற்ற எல்லா தர்மத்தையும் விட்டுடலாம், சோகப்படாதேன்னு பகவான் சொல்றார்.  வாஸ்தவம்.  ஆனா இந்த ‘சோகப்படாதே’ன்னு சொல்றது ஒரு அபிப்ராயம் சொல்றாப்லேன்னு நாம நினைச்சிண்டு இருக்கோம்.  அப்படி அல்ல.  மாமேகம் ஸரணம் வ்ரஜ, அப்படிங்கறது விதி.  விதின்னா பண்ணித்தான் ஆகணும்ங்கிறது.  அவர் நம்மைப் பார்த்து, ‘என்னுடைய திருவடிகளை பற்றுவதானால் பற்று’, இப்படியெல்லாம் அவர் சொல்லலை.  இதில் மூன்று விதிகள் இருக்கு. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய – எல்லா தர்மங்களையும் விடு.  முதல் விதி.  நீ ஏதேதோ மார்க்கங்களைப் பற்றிக் கொண்டு, என்னையும் பற்ற முடியாது.  நீ எந்தெந்த மார்க்கங்களை உபாயம்ன்னு நினைச்சிண்டு இருக்கியோ, அது அத்தனையும் விட்டுடணும்.  மாமேகம் ஸரணம் வ்ரஜ – என் திருவடிகளை உபாயமாகப் பற்று.  இது இரண்டாவது விதி.  இந்த ஸ்லோகத்திலே ரெண்டு விதி இருக்கறதா நினைச்சிண்டு இருப்போம்.  மூன்றாவது விதி இருக்கு.  மா ஸுச: - சோகப்படாதே, அப்படிங்கறது அபிப்ராயமில்லே, அது விதி.  பகவான் சொல்லுவது, ‘என் திருவடிகளைச் சரணமாகப் பற்றிட்டால், அர்ஜுனா நீ எக்காரணம் கொண்டும் சோகப்படக் கூடாது’. கூடாதுன்னா சொல்றார், படவேண்டாம்ன்னு சொல்றார்ன்னு நினைச்சேன்னா, இல்லே, கூடாதுன்னு சொல்றார்.  ஏன்னா, சரணாகதி பண்ணுவதற்கு எது யோக்யதை?  சோகம். சோகம் இருக்கறவன் சரணாகதி பண்ணிடலாம்.  சரணாகதி பண்ணிட்டா எது பலம்? சோக நிவிர்த்தி.

    இந்த சோகம் என்ன சோகம்?  கல்யாணம் ஆகலையேங்கற சோகமா, இல்லை வேலை கிடைக்கலேங்கற சோகமா? இல்லை.  மோட்க்ஷத்தை அடைவதற்கு என்னிடத்தில் ஒரு உபாயமும் இல்லையேங்கற சோகம்.  என்னிடத்தில் கர்ம யோகமோ, ஞான யோகமோ, பக்தி யோகமோ, ஒன்றுகூட இல்லையே, என்னிடத்தில் சாதிக்கப்படக்கூடிய உபாயங்கள் ஒன்றுகூட இல்லையே, அப்படிங்கற சோகம்.  அந்த சோகம் இருக்கிறவன்தான் சரணாகதிக்கே வருகிறான்.

    அதனால் சரணாகதனுக்கு இருக்க வேண்டிய இரண்டு லட்க்ஷணங்கள், ஒன்று, ஆகிஞ்சண்யம், மற்றொன்று, அநந்யகதித்வம்.  ஆகிஞ்சணயம், கிஞ்சிது – சிறிது; கிஞ்சண – சிறிது இருக்குமவர்; அகிஞ்சண – சிறிதும் அற்றவர்;  அப்போ சிறிதும் கர்மயோக, ஞானயோக, பக்தியோகம் அற்றவர்.  அவனுக்கு அகிஞ்சனன்னு பேர். என்னிடத்தில் கைமுதல் ஒன்றுமில்லை, அப்படின்னு பெருமாளிடத்தில கையைக் கூப்பிடறோம் பாருங்கோ. நமஹா சொல்றதுக்கு அர்த்தமே, உள்ள ஒன்னுமில்லேன்னு அர்த்தம்.  அது ஆகிஞ்சண்யம்.  இந்தக் கையில் ஒன்றுமில்லை.  ‘ஒன்றுமில்லேன்னா என்கிட்ட ஏன் வரே’னுட்டு அவர் கேட்பர்.  ‘ஏன்னா நீ இருக்கிறாய்ங்கிறதுக்காக வரேன்.  என்னிடத்தில் என் பிரயத்தனத்தாலே ஒன்றுமில்லே.  ஆனால் நான் பிரயத்தனப்படாத நீ இருக்கிறாய்.  அந்த நம்பிக்கையில வந்தோம்’ன்னு சொல்றோம்.  இது ஆண்டாள் திருப்பாவையில்,

    கறவைகள் பின் சென்று கானஞ்சேர்ந்துண்போம் *
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து * உன் தன்னைப்
    பிறவி பெருந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் *
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா * உன் தன்னோ
    டுறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது *
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் * உன் தன்னை
    சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே *
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    (திருப்பாவை – 28)

    ஆண்டாள் சொல்லும்போது, ‘நாங்கள்லாம் ஏதோ கறவை மாட்டுக்குப் பின்னாடி போயிண்டிருக்கறவா.  எங்களுக்கெல்லாம் ஒன்னும் ஞானமும் கிடையாது, பக்தியும் கிடையாது.  ஒன்றுமில்லே’ன்னா.  பெருமாள் உடனே சொன்னார், ‘உன்கிட்ட ஒன்னும் கிடையாதுன்னா, என்கிட்டயும் கொடுக்கறதுக்கு ஒன்னும் கிடையாது. போய்ட்டு வா’ன்னுட்டார் அவர்.  அப்ப ஆண்டாள் திரும்பச் சொல்றா, ‘நான் பிரயத்தனப்பட்டது ஒன்றுமில்லேன்னு சொன்னேன்.  நீ இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே.  ’உன் தன்னைப் பிறவி பெருந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்’.  எங்களிடத்திலே நாங்களாகத் தேடின புண்ணியம் கிடையாது.  ஆனால் நீயே எங்களுக்கு நடுவில் புண்ணியமாகப் பிறந்திருக்கிறாய் அல்லவா?’.  அதனால நான் புண்ணியத்தை சம்பாரிக்கணும்ன்னா, பக்தி.  அவரே புண்ணியம்னுட்டா சரணாகதி.

    அநந்யகதித்வம். அப்படின்னா, வேறு போக்கிடமில்லை.  கதி – போக்கிடம்; அந்யகதி – வேறு போக்கிடம்; அநந்யகதி – வேறு போக்கிடமில்லை.  நீ இல்லேனுட்டியானா எனக்கு வேறு போக்கிடம் இல்லை.  இதுவும் சரணாகதன் சொல்லிக் கொள்ள வேணும்.

    ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் – என்னிடத்தில் ஏதுமில்லை, உன்னையே நம்பி வந்தேன். நீ இல்லேன்னுட்டியானா எனக்குப் போக்கிடமும் இல்லை. இது ரெண்டும் சரணாகதனுக்கு இன்றியமையாதது. கையில கர்ம,ஞான,பக்தி யோகங்கள் இருந்துட்டா, அவர் வரமாட்டார். அதையே பிடிச்சுக்கோன்னுடுவர். உன்னைத்தவிர வேறொருத்தர் இருக்கார்ன்னு பேசினா, அப்பவும் அவர் வர மாட்டார். அவரையே போய் கேட்டுக்கோன்னுடுவர். இந்த இரண்டும் இல்லேன்னு சொன்னாத்தான் சரணாகதன்.

    சரி, சரண்யனிடத்தில என்ன இருக்கணும்?  இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும்.  ஒன்று பரத்வம், மற்றொன்று சௌலப்யம்.  இந்த இரண்டும் இருந்தாத்தான் சரண்யன், அவரை நாம பற்றவே முடியும்.  பரத்வம் – அவர் ரொம்பப் பெரியவரா இருக்கணும்.  அதாவது மோட்க்ஷம் குடுக்கிற சக்தி உடையவரா இருக்கணும்.  அப்போதான் நான் சரணாகதி பண்ணினா மோட்க்ஷம் கிடைக்கும்.  சௌலப்யம் – எளிமை.  நான் பற்றும்படி சௌலப்யம் இருக்க வேண்டும்.  அப்போ ஒரு பக்கத்தில மேன்மை இருக்க வேண்டும், மற்றொரு பக்கத்தில சௌலப்யம் இருக்க வேண்டும்.

    சௌலப்யம் பல பேருகிட்ட இருக்கும்.  என் பக்கத்து வீட்டுக்காரர்கிட்டகூட இருக்கு.  அவரை நான் எப்ப வேணாலும் கதவைத் திறந்து பார்க்கலாம்.  ஆனா அவர் மோட்க்ஷம் குடுக்க மாட்டாரே.  அவர்கிட்ட பரத்வம் இல்லையோல்லையோ?  பரத்வம் இருந்தா சௌலப்யம் இருக்காது, சௌலப்யம் இருந்தா பரத்வம் இருக்காது.  இந்த இரண்டும் இருந்தாத்தான் சரண்யன்.

    இப்போ ரொம்ப சுலபமாக நாம் மேலே சொன்ன இராமாயண சரணாகதிகளில் சில ஏன் பலித்தது, சில ஏன் பலிக்கலைன்னு இந்த லக்ஷணங்களை வைத்து சொல்லிடலாம்.

    முதல் சரணாகதி, தேவர்கள் போய் நாரயணனிடத்தில சரணாகதி பண்ணினார்களா?  தேவர்களிடத்திலே ஆகிஞ்சந்யம் உண்டா?  உண்டு.  தங்களை இரட்க்ஷிக்கறதுக்கு அவாள்ட்ட ஒன்றுமே இல்லையே.  அநந்யகதித்வம்?  பெருமாள் இல்லேனுட்டா இராவணனை யாரும் கொல்லப் போறதில்லே.  அவர் மட்டும்தான் வழி.  அப்போ தேவர்களிடத்தில் சரணாகதனுக்கு வேண்டிய இரண்டு இலக்கணங்களும் பொருந்தி இருந்தன.  பகவான்தானே இப்ப சரண்யன்.  அவரிடத்தில சரண்யனின் இரண்டு இலக்கணங்களும் இருந்ததா?  அவர் பரத்வம் உடையவர்தான், சௌலப்யம் உடையவர்தான்.  சந்தேகமேயில்லை.  ஆகவே சரணாகதன் லக்ஷணமும் சரியாயிருந்தது, சரண்யன் லக்ஷணமும் சரியாயிருந்தது.  இந்த சரணாகதி பலித்தது.

    இரண்டாவது சரணாகதி, தசரதன் பரசுராமரிடத்திலே சரணாகதி பண்ணுகிறான்.  அது இரண்டு இடத்திலயுமே கோளாறு.  தசரதன் சரணாகதனோல்லையோ. அவன்கிட்ட ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் இருந்ததான்னா, தசரதன் ரொம்பப் பெரிய வீரன்.  அவன் சரணாகதி இன்னொருத்தரிடத்தில போய்ப் பண்ணியிருக்கவே கூடாது.  அவன் வீரத்துக்குத் தகுந்த ஷத்திரிய தர்மத்தோடே நடந்திருக்க வேண்டுமே தவிர, ஒருத்தர் காலைப் போய் பிடிக்கலாமா?  குழந்தைகளைக் கண்டு பயந்து போய் காலைப் பிடிச்சுட்டான்.  அதனால அவனை ஆகிஞ்சந்னு சொல்லிடமாட்டா.  சரணாகதனிடத்திலயும் கோளாறு.  பரசுராமர்? பரசுராமரிடத்தில பரத்வம், சௌலப்யம் ரெண்டும் உண்டான்னா, உண்டு, பரத்வம் நன்னா உண்டு.  குறைவில்லே.  ஆனா சௌலப்யமே இல்லை. ரோஷ ராமர்.  எப்பப் பார்த்தாலும் கோபம் இருக்கும்.  சௌலப்யம் இருக்கறவர்கிட்ட காருண்யம் இருக்கணுமோல்லையோ?  காருண்யம் இருந்தாத்தான் சரண்யனே சரணாகதி ஏத்துக்க முடியும்.  பரசுராமருக்கு கருணை கிடையாது.  அப்போ அவர் சரண்யன் ஆக மாட்டார்.  இரண்டாவது சரணாகதி பலிக்கலே.

    மூன்றாவது சரணாகதி, லக்ஷ்மணன் இராமனிடத்திலே பண்ணினது.  அருகில இருக்கிற சீதை திருவடிகளைப் பற்றி, ‘இராமா, என்னை அவசியம் காட்டுக்கு அழைத்துப் போக வேண்டும். விட்டுவிட்டுப் போகாதே.  என்னை என் தாய் பெற்றதே உன்னோடு வந்து கைங்கர்யம் பண்ணுவதற்குத்தான்.’  லக்ஷ்மணனைப் பார்த்து சுமித்ரை போய்ட்டு வான்னுட்டா.  தவிக்கிறான் லக்ஷ்மணன் இராமன்கூடப் போகணும்னுட்டு.  இராமன் மாட்டேங்கறார்.  அப்போ சரணாகதி பண்ணின லக்ஷ்மணனுக்கு ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் உண்டு.  என்ன இருக்கு லக்ஷ்மணன் கையிலே?  இராமன்தான் இருக்கார்.  போக்கிடம் என்ன இருக்கு?  இராமன்தான் போக்கிடம். இராமனுக்கு பரத்வம், சௌலப்யம் உண்டா?  நன்னாவே உண்டு.  குறைச்சலில்லே.  அதனாலே இந்த சரணாகதி பலித்தது.

    நாலாவது சரணாகதிதான் பெரிய கேள்விக்குறி.  ஏன்னா, லக்ஷ்மணன் – இராமன் மாதிரித்தானே பரதன் – இராமன்?  பரதன் இராமனிடத்தில சரணாகதி பண்றார்.  லக்ஷ்மணனுக்கு இருக்கிற லக்ஷணம் பரதனுக்கு இல்லையா?  அதே இராமன்தானே இப்பவும் இருக்கிறார்.  அப்போ தானே பலிச்சுடனுமில்லையான்னு தோணும்.  பரதன், சரணாகதனிடத்திலேயும் ஒரு குற்றமுமில்லை.  அவனிடத்திலே அநந்யகதித்வம், ஆகிஞ்சந்யம், ரெண்டுமே இருந்தது.  இராமனிடத்திலேயும் ஓரு குற்றமும் இல்லே.  அவர் கருணையே வடிவெடுத்தவர்தான், மேன்மை படைத்தவர்தான்.  இது ஒரு விதிவிலக்கு.  சரணம்ன்னு சரணாகதன் போய் சரண்யனிடத்தில போய் நிக்கறச்சே, அந்த சமயத்தில் சரண்யனுக்கு இதை ஏற்றுக் கொள்ளலாம்ன்னு மனசு இருக்கணும்.  ஏத்துண்டுதான் ஆகணும்ன்னு நாம நிர்பந்தப் படுத்த முடியாது.  ஏன் முடியாதுன்னா, வேறு வழியில்லேன்னுதானே இங்க வந்துருக்கோம்.  அப்போ அவர் எப்ப வழி விடுறாரோ, அதுவரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.  இதைத்தான் ஆழ்வார் சாதிக்கிறார், ‘இன்றாக நாளையேயாக இனிச்சிறிது நன்றாக’, ‘நீ இன்னைக்கு குடு, நாளைக்குக் குடு, பத்து நாள் கழிச்சுக் குடு, ஆனாக் குடுத்துதான் ஆகணும்.  அதைத்தான் நான் சொல்ல வந்தேனே தவிர, நீ என்று வேணும்னாலும் குடு.  அது கேள்வியல்ல.  இன்னைக்குக் குடுன்னு நான் உன்னை நிர்பந்தப்படுத்த மாட்டேன்.  நான் யாரு? நீசன்.  இந்த நீசன் உன்கிட்ட வந்து இன்னைக்கு குடு, அன்னைக்கு குடுன்லாம் சொல்ல முடியுமா?’  இப்போ பகவான் இராமனுக்கு எதிலயோ எண்ணம் இருக்கறச்சே, இவன் வந்து நாட்டுக்கு வான்னு கூப்பிட்டுட்டான்.  இப்போ இராமன் சரண்யன். சரண்யனோடே ஹ்ருதயம் எதிலே இருக்கு?  தந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு ஸ்தாபிக்கிறதுல இருக்கு.  அப்போ போய் அதற்கு நேர் மாறா, ‘நான் கூப்பிடுறேன், வீட்டுக்கு வா, வா’ன்னா, அதை அவர் ஏத்துக்க மாட்டார்.  சரணாகதி பண்ணப்போறச்சே அவன் திருவுள்ளத்துக்கு உகந்ததைத்தான் நாம பண்ணனுமே தவிர, நம்ம இஷ்டத்துக்கு வேண்டியது எல்லாத்தையும் அவர் செய்யமாட்டார்.  அப்போ பரதன் போய்க் கேட்டபோது அவர் திருவுள்ளம் நாட்டுக்கு வரதில இல்லை.  அதனால அது பலிக்காமல் போச்சு.

    ஐந்தாவது சரணாகதி, விபிஷண சரணாகதி.  இது பூர்ணமான சரணாகதி.  விபீஷணனும் அகிஞ்சனன், அகதி. இராமனும் பர்த்வம், சௌலப்யம் வடிவெடுத்தவர்.  நன்றாகவே பலிச்சுப் போச்சு.

    கடைசி சரணாகதி, சமுத்திர ராஜனிடத்தில்.  இங்க என்ன ஆபத்துன்னால், மறுபடியும் ரெண்டு பேரிடத்திலேயும் குணமில்லே.  இராமன் அகிஞ்சனன், அகதியா?  யாருமே ஒத்துக்கப் போறதில்லே.  எப்பவும் இராமன் சரண்யனாத்தான் இருக்கணுமே தவிர, அவர் சரணாகதன் ஆனாக்கூட வேலை நடக்காது.  பெருமாள்தானே, அப்படின்னு இது நடக்காது.  சரணாகதி பலிக்கணும்ன்னா லக்க்ஷணத்தின்படி இருந்தாத்தான் பலிக்கும்.  சரி, இங்க சரண்யன் சமுத்திரராஜன்.  அவனிடத்திலேயும் சரண்யனுக்குண்டான லக்ஷணங்கள் இல்லை.  ஆகையால் இராமன் சமுத்திரராஜனிடத்தில் பண்ணின சரணாகதி பலிக்காமல் போச்சு.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – இராமாயணத்தில் சரணாகதி (1) உபந்நியாசம் – Toronto)

    April 13

    பக்தியை எவ்வாறு செய்வது?

    பிரகலாதன் பக்தின்னா என்னன்னு தன் தந்தை ஹிரண்யகசிபுவுக்கு உபதேசிக்கிறார்.

    ஸ்ரவநம் கீர்த்தநம் விஷ்ணோஹோ
    ஸ்மரநம் பாதஸேவநம் அர்ச்சநம் வந்தனம் தாஸ்யம்
    ஸக்யம் ஆத்மநிவேதநம் இதிபும்ஸாத்பிதா விஷ்ணோ
    பக்திஸ்சே நவலக்ஷ்நா.

    பக்தி என்பது ஒன்பது வகைப்படுகிறது.  பக்தன் இதைச் செய்ய வேண்டும்.  இதைக்கண்டு பெருமான் மிக உகக்கிறான், ஆனந்தப்படுகிறான்.  என்னான்னு ஹிரண்யகசிபு கேட்கப் போறதில்லே. நாமதான் கேட்டுக்கணும் இப்போ.

    பக்தனுக்கு முதல் தேவை, ஸ்ரவநம். தன் பகவானைப் பற்றி நிறையக் கேட்க வேண்டும்.  கேட்க கேட்க கேட்கத்தான் பக்தி முற்றும்.  அதுக்குத்தான் நம்ம சம்ப்ரதாயத்திலே இத்தனை எழுதி வைச்சுருக்கா.  ஒரே ஒரு இடம் பார்ப்போம்.

    வைசம்பாயனர், ஜனமேஜயர் கதை தெரிஞ்சிருக்கும்.  வைசம்பாயனர் ரிஷி, ஆச்சார்யர்.  ஜனமேஜயர் அரசன், பரீட்சித்து வம்சத்தில் வந்தவன்.  அர்ஜுனன், அவர் பிள்ளை அபிமன்யு, அவர் பிள்ளை பரீட்சித்து. அந்த பரீட்சித்தை அழிச்சுடனும்ன்னுதான் யுத்தத்தின் முடிவில் அஸ்வத்தாமா அபாண்டவாஸ்திரப் பிரயோகம் பண்ணினான்.  அப்போ உத்தரையினுடைய கர்பத்துக்குள்ள கண்ணனே போய், காத்து, பரீட்சித்தை வெளில கொண்டு வந்து போட, பரீட்சித்து ஒரு கரிக்கட்டையாட்டம் வந்து விழ, அதை தன் திருவடிகளால தீண்டி பெருமான் உயிர்ப்பித்தார்.  இந்தக் கதை பாகவதத்தினுடைய ஆரம்பத்திலயே கேள்விப்பட்டிருக்கோம்.  இந்தப் பரீட்சித்துக்கு அப்புறம்தான் ஜனமேஜயர்.  ஜனமேஜயர்தான் ராஜ்ஜியத்தை ஆண்டுண்டு இருக்கான்.  வைசம்பாயனர் அவனுக்கு மஹாபாரதக் கதையைச் சொல்லிடனும்ன்னு, பாட்டனார் கதையோல்லையோ, ஆசைப்படறார்.  நடையா நடக்கிறார்.  ஆனா அவன் கேட்டுக்கவே மாட்டேங்கிறான்.  அவன் ராஜா, நாழியே இல்லேங்கிறான்.  அவர் சொன்னார், ‘மொத்தம் ஒன்னேகால் லட்சம் ஸ்லோகம் இருக்கு மஹாபாரதம். அத்தனை எல்லாம் நீ கேட்டுக்க வேண்டாம். ஒரே ஒரு பருவம் சொல்லட்டுமா? பதினெட்டு பருவங்கள் இருக்கோல்லையோ? அதில் ஒரு பருவம்?’.  ‘முடியாது, நேரமில்லை’.  ‘சரி, ஒரு அத்தியாயம்?’  ’இல்லை, நேரமே இல்லை’ன்னுட்டான்.  ‘ஒரே ஒரு ஸ்லோகம்? அதையாவது நீ கேட்டுக்குவியா?’ன்னார்.  சரி, பெரிய ரிஷி, ரொம்பக் கெஞ்சறார், கேட்டுட்டுப் போவோம்’,  அப்படின்னு ஜனமேஜயன் ஒத்துணுட்டான்.  வைசம்பாயனர் ஆசனத்துல உட்கார்ந்துண்டு ஒரே ஒரு ஸ்லோகம்தான் சொன்னார்.  ரெண்டே விசயம்.  ஒரு ஸ்லோகத்திலே ரெண்டு விஷயம்தான் இருக்கு.  ‘வனபங்கத்திலும் கோக்கிரகனத்திலும் வைபவத்தைப் பார்த்தவர்கள், மறுபடியும் யுத்தத்துக்கு வந்தார்கள். அறிவிலிகள்.  ராஜன்னு ஒரு ஸ்லோகம் முடிஞ்சு போச்சு. நான் போய்ட்டு வரேன்’னார்.  அப்போ ஜனமேஜயன் பார்த்தான், ‘நீர் என்ன சொன்னீர் இப்போ? அர்த்தம் என்ன’ன்னு கேட்கிறான்.  அப்போ அவர் சொன்னார், ‘கோக்கிரகணத்தின் போது அர்ஜுனனின் வைபவத்தை துரியோதனன் கண்டான்.  விராட பருவத்திலே எல்லா பசு மாடு கன்றுகளையும் துரியோதனன் ஓட்டிண்டு போனான்.  அப்போ அர்ஜுனன் வந்து கர்ணன், துரியோதனன், பீஷ்மர் அத்தனை பேரையும் ஜெயித்து மயக்கமா கட்டி வைச்சுட்டார்.  அப்போ அர்ஜுனனுடைய வைபவத்தை கோக்கிரகணத்தின் போது துரியோதனன் பார்த்தானோல்லையோ?  அந்த வைபவம் தெரிஞ்சும் திரும்ப மஹாபாரத யுத்தத்துக்கு வந்தானோல்லையோ? அறிவிலி.  வனபங்கம்ங்கிறது அசோக வனத்தினுடைய பங்கம்.  அசோக வனத்தில ஹனுமான் மொத்தத்தையும் அழிச்சாரோல்லையோ?  நெருப்பே வைச்சுட்டார் அசோக வனத்தை, எல்லாமே போச்சு.  அந்த சமயத்திலே தொண்டனுடைய வைபவத்தை இராவணன் பார்த்தான்.  பார்த்துட்டும், ‘இவனுடைய ஸ்வாமி இராமன் எவ்வளவு பெரியவரா இருப்பர்?’, அப்படின்னுகூட கணக்குப் போடாம திரும்ப ஒருதடவை சண்டைக்கு வந்தான் பார், இராவணன் அறிவிலி.  இதைச் சொல்லிட்டு, ‘ராஜன், நான் போய்ட்டு வரட்டுமா’ன்னார்.  அவன் கேட்டான், ‘துரியோதனன்னு சொன்னீர், இராவணன்னு சொன்னீர். துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் என்ன விரோதம்? இராவணனுக்கும் இராமனுக்கும் என்ன விரோதம்? அதைச் சொல்லவே இல்லையே’ன்னார்.  அடியைப்பிடிடா பாரத பட்டான்னு சொல்லுவா பாருங்கோ, முதல் ஸ்லோகத்திலே இருந்து ஆரம்பிச்சார், மொத்த ஒன்னேகால் லட்ச ஸ்லோகங்களையும் சொல்லி முடிச்சார்.  மொத்தத்தையும் கேட்டுண்டான்.  யார் ஒரு ஸ்லோகம் கேட்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சானோ, அவன் மொத்தக் கதையையும் கேட்டு முடிச்சான்.  முகம் மாறக்கூட இல்லே, அத்தனை அர்த்தங்களையும் குடுத்துட்டார்.

    குடுத்துட்டு கடைசியா வைசம்பாயனர் சொல்றார், ‘தர்ம அர்த்த காம மோட்சம்ன்னு நாலு புருஷார்த்தம். அத்தனையும் உனக்கு மஹாபாரத்தில சொல்லியிருக்கேன்.  உனக்கு ரெண்டு நிமிசம் அவகாசம்.  யோசித்துப் பார்.  தர்ம அர்த்த காம மோட்சங்களுக்குள்ளே சிறந்த புருஷார்த்தம் எது?  உன் முடிவைச் சொல்லு’ அப்படின்னு கேட்டார்.  ஒரே நிமிசம் யோசிச்சான், ‘எனக்கு ரெண்டாவது நிமிசம் தேவை கிடையாது.  முதல் நிமிசத்திலயே அர்த்தம் புரிஞ்சு போச்சு,  சொல்லட்டுமா’ன்னான்.  சொல்லுன்னார்.  ‘இந்த நாலுமே புருஷார்த்தம் இல்லே’ன்னான் அவன்.  ’இந்த நாலுதான் சாஸ்திரக்காரா சொல்லியிருக்கா.  நீ என்ன புதுசா கண்டுபிடிக்கப் போறே இப்போ?  அறம், பொருள், இன்பம், வீடு. நாலுதான் உள்ளது.  மேல என்ன இருக்கு’ன்னா, ‘இருக்கு ஸ்வாமி.  எனக்கு இந்த நாலும் புருஷார்த்தமாப் படலே.  பின்ன என்ன வேண்டும் தெரியுமா?  கண்ணனுடைய கதையை நீர் இப்படியே சொல்லிக்கொண்டே இருக்கணும்.  நான் காலம் முழுக்கக் கேட்டுண்டே இருக்கணும். அதுதான் என் புருஷார்த்தம்.  இதுக்கு மேலே தர்மமும் வேண்டாம், அர்த்தமும் வேண்டாம், காமமும் வேண்டாம், மோட்சமும் வேண்டாம்.  நீர் பகவத் கதையைச் சொல்றதைத் தவிர எனக்கு மற்றொரு புருஷார்த்தம் தோணலே.’  யார் சொல்றா இதை?  ஒரு ஸ்லோகம் கேட்க மாட்டேன்னு யார் சொன்னானோ, அவன் கடைசில உள்ளம் நெக்குருகிப் போய், இனி இதையே கேட்டுண்டு இருக்கேன்னானோல்லையோ?  அந்த ஸ்ரவநம் ரொம்ப முக்கியம்.

    அடுத்தது கீர்த்தநம்.  கீர்த்தநம்ன்னால் நாம சங்கீர்த்தநம்.  பகவானுடைய நாம சங்கீர்த்தநத்தை நாம் பண்ண வேண்டும்.  நம்மாழ்வார் தெரிவிக்கிறார், எப்படி கீர்த்தநம் பண்ணனுமாம்?  கீர்த்தநம் பண்றதுன்னா வெறும உட்கார்ந்த இடத்திலேர்ந்தெல்லாம் நாமம் சொல்லாதீங்கோ.  நல்லா ஆடணும்ன்னார்.

    ஆடியாடி * அகம் கரைந்து * இசை
    பாடிப் பாடிக் * கண்ணீர் மல்கி * எங்கும்
    நாடி நாடி * நரசிங்கா! என்று *
    வாடி வாடும் * இவ்வாள் நுதலே.

    திருவாய்மொழி (2-4-1)

    நம்மாழ்வாருடைய தாயார் சொல்றார்.  பராங்குச நாயகின்னு ஆழ்வாருக்குப் பெயர். நாயகி பாவத்திலே பாடுகிறார்.  அந்தப் பெண் பெருமாளுடைய நாமத்தை மேற்கண்டவாறு சொல்றாளாம்.  தேகம் படைத்த பயன் ஏதுன்னு தெரியுமா?  யாரொருத்தன் பகவத் கதையைச் சொல்லி, உடம்பு நடுங்க, மயிர் கூச்செரிய, பேச்சு தழுதழுக்க, கண்ணில் நீர் மல்க இருக்கிறானோ, அவனைப் பார்ப்பதுதான் இவ்வுடம்பு படைத்ததின் ஒரே பயன், என்று சாஸ்திரக்காரர்களெல்லாம் சொல்றார்கள்.  அதனாலே பெருமானைப் பற்றிப் பாடறோம்னால், ‘கும்பிடு நட்டம் இட்டாடி கோகுகட்டுண்டுழலாதார் தம்பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே’.  நல்லா ஆடணும். எப்படி ஆடணும்ன்னால், ‘தலையினோடாதனம் தட்டத் தடுகுட்டமாய் பறவாதார்’, தலை வந்து கால்ல இடிக்கணுமாம், கால் போய் தலைல இடிக்கணுமாம்.  அந்த மாதிரி தலைகீழா ஆடுங்கிறார்.  அதென்னமோ நமக்கு இதற்கு ரொம்ப லஜ்ஜை வந்துவிடுகிறது.  லஜ்ஜை எதற்கு இப்போ?  என்னை பெற்றவருடைய பெயரைச் சொல்லுவதற்கு பிள்ளை லஜ்ஜைப்பட்டால், அப்போ அது கேவலமில்லே?  யாரு உங்க அப்பான்னு கேட்டால், பேர் என்னன்னு சொல்றதுக்கு வெட்கமாயிருக்கு, இப்படினுட்டால் அது ரொம்பக் கேவலம்.  அப்போ பகவானுடைய நாமத்தை சொல்றதுக்கு வெட்கப்படறேன்னு சொன்னால், அப்போ தந்தை பேரைச் சொல்றதுக்கு வெட்கப்படறேன்னு ஆயிடாதா?  அதைத்தான் கூடாதுன்னு ஆழ்வார் சொல்லி, உன் கால் தலைல வந்து படணும், தலை கால்ல் போய்ப் படணும், வாசல்ல போய் ஆடுன்னார்.  ஆழ்வாரைப் போய் நாம் கேட்டோம், ‘நீர் பிறந்தது குக்கிராமம், நல்லா ஆடலாம். ஒண்ணும் சொல்ல மாட்டா. நாங்க அங்கேயில்லே.  மகா நகரத்திலே இருக்கோம்.  இங்க எல்லாரும் கை தட்டுவா, கேலி பண்ணுவாளே’ன்னா,  ஆழ்வார் பிடிச்சிண்டார். ‘உலோகர் சிரிக்க நின்றாடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழுவப்படுவாரே’,  ‘அந்த நாஸ்திகன் கை தட்டட்டும். அதானே உன் கவலை இப்போ?  அவன் கை தட்டட்டும்.  அவன் கை தட்டறதை தாளமா வச்சிண்டு நீ ஆடு’ன்னார்.  ‘ஆடினா என்ன ஆகும்’ன்னு நாம கேட்டோம்.  ‘நாலு நாள் கழிச்சு அவனும் உன்னோடே சேர்ந்து ஆடுவான், கவலைப்படாதே’ன்னார்.  ’நீ ஏன் இன்னொருத்தன் என்ன நினைப்பானோன்னு நினைச்சு கவலைப்படறே, உன் பிதாவினுடைய பேரை நீ சொல்லு.  இன்னைக்கு இல்லையா, நாளைக்கு உன்னோடே சேருவன்.  நாளைக்கு இல்லையா, அதற்கு அடுத்த நாள் சேருவான்’.  இப்படித்தான் ஒரோருத்தனும் கண்ணனுடைய பேரைச் சொல்லி ஆடணும்ன்னு ஆழ்வார் ஆசைப்படறார்.  பெரியாழ்வார் ஒரு இடத்துல சொன்னார். என்றைக்கு பகவானுடைய நாமங்களை ஒரு தடவை சொல்லலையோ, அன்று எனக்கு அவை பட்டினி நாளே.  இதைத்தான் ‘கீர்த்தநம்’ன்னு சொன்னார்.

    அடுத்தது ‘ஸ்மரணம்’. நினைவு.  பகவானைப் பற்றி நினைக்க வேண்டும்.  ’நினைவின் நெடியானை’ன்னு ஆழ்வார் சொன்னார்.  நினைக்கறதுன்னா தியானம், யோகத்தைப்பற்றி எல்லாம் இங்கே சொல்லலே.  அதெல்லாம் ரொம்ப கஷ்டம்.  பின்னே? வெறும நினையுங்கோள்.  ஒரு நாளைக்கு எத்தனை தடவை முடியுமோ, அத்தனை தடவை வெறுமே நினையுங்கோளேன்.  ’நான்’ங்கிற நினைவு எப்படி எப்போதும் இருக்கோ, அதேபோல ‘நான் அவன் அடிமை’ங்கிற நினைவு எப்போதும் இருக்க வேண்டும்.  அந்த நினைவோடே எல்லா வேலைகளையும் செய்யலாம்.  உபநிஷத்து சொல்றது, ப்ரம்மத்தைப் பற்றி நீ அடிக்கடி நினைத்தே, நெருக்கத்தில் இருக்க இருக்க, சம்சார பயமே வராது.  அவரைவிட்டு விலக விலக பயம் பீடிக்கும்.  அதனாலே அவனைப் பற்றி நினைப்பது முக்கியம்.  நினைப்பது கஷ்டமோன்னால், ஆழ்வார் சொன்னார்,

    மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும்
    சிற்றவேண்டா சிந்திப்பே அமையும்

    -ன்னார்.  சிந்தியுங்கோ போறும்.  ஆழ்வார் சொன்னார், ‘எண்ணிலும் வரும்’, நினைச்சா வந்துடுவன்னார்.  இந்த நினைச்சாங்கிறத எப்படி வச்சுக்கணுமாம்?  எண்ணிலும் – ஒன்று, ரெண்டு, மூணு, நாலுன்னு எண்றோமோல்லையோ?  அப்படி எண்றச்சே வந்துடுவர்.  பகவானுக்கு ஒரு எண்ணிக்கை உண்டு.  26.  அசித் தத்வங்கள் 24, ஜீவாத்ம தத்வம் 25, பரமாத்மா 26.  அதனால நாம பணம் எண்ணிண்டு இருக்கோம், 1,2,3,4,..23, 24, 25, 26.  அப்படினச்செ இங்கே அவர் இருப்பர். என்ன திடீர்ன்னு பெருமாள் இங்க வந்துட்டாரே, எதுக்கு வந்தார்ன்னு கேட்டா, ‘நீ இருவத்தாறுன்னு சொன்னியே, அதனாலதான் நான் வந்தேன்’னுடுவர்.  நான் 26ன்னு பணத்தை எண்ணினேன்னா, ‘நான் அப்படி எல்லாம் நினைக்கறதில்லே. நீ என்னைக் கூப்பிட்டதா நினைச்சிண்டேன்.  நீ எப்போ என்னைக் கூப்பிடுவேன்னு காத்திண்டிருந்தேன்.  நீ இருவத்தாறுன்னு சொன்னியோல்லையோ?  நாந்தான் இருவத்தாறு’.  இப்படி ‘எண்ணிலும் வரும்’ங்கிறதுக்கு ‘நீ எண்ணினியான வரும்’ன்னு வ்யாக்யானம் பண்ணியிருக்கார்கள் பெரியோர்.  எண்ணினால்ங்கிறதுக்கு ரெண்டு அர்த்தம், ’நினைத்தால்’ன்னு ஒரு அர்த்தம், ‘எண்ணினாக்கூட’ன்னு இன்னொரு அர்த்தம்.  அவ்வளவு பரம சுலபனா காத்துண்டு இருக்கான் என்று சொல்லுவர்கள்.

    அடுத்து, பாதசேவநம். பகவானுடைய திருவடிகளை அடிக்கடி சேவை பண்ணுதல். அவன் திருவடிகளுக்கு சேவை பண்ணுவதென்றால், நேர திருவடிகளுக்கு சேவை. மேலும் அவன் திருவடியாயிருக்கிற பாகவதோத்தமர்கள். அவன் திருவடி என்பது அவனது அடியார்கள்தானே. அடி = திருவடி = அடியார்கள். நம்ம சம்ப்ரதாயமே உசந்தது எப்படின்னா, பகவானைவிட அவனது அடியார்களுக்கே ஏற்றம். பாகவதர்களோடே சேர்ந்து இருக்க வேண்டும். இராமானுசர் தன் காலக்ஷேபத்துல ஒருநாள் உட்கார்ந்திருந்தார். இது ஒரு ஸ்லோகம்.

    சம்சார விஷவ்ருக்‌ஷஸ்ய த்வேபலேஹி அமிர்தோபமே
    கதாசிது கேசவே பக்திஹி தத்பக்தைர்வா ஸமாகமா:

    சம்சாரம்ங்கிறது பெரிய விஷ மரம்.  அந்த மரத்துல ரெண்டே ரெண்டு நல்ல பழம் இருக்காம்.  ஒரு பழம் கேசவ பக்தி.  இன்னொரு பழம் அவன் அடியார்களுடைய சேர்க்கை.  இந்த ரெண்டுல எது வேணும்ன்னு கேட்டால், அடியார்களுடைய சேர்க்கை வேணும்.  கிடைக்கலேன்னா, கேசவ பக்தி தேவலைன்னு இராமானுசர் சொன்னாராம்.  கேசவ பக்தி அப்புறம் வச்சுப்போம், அடியார்கள் சேர்க்கைதான் வேணும்.  கிடைக்கலையா, சரி பகவான்கிட்டப் போறேன்.  ஏன்னா, என்னதான் இருந்தாலும் பகவான் வேற ஜாதி.  அது பரமாத்மா ஜாதி, இது ஜீவாத்மா ஜாதி.  நம்ம கஷ்டம் அவருக்கு எங்கயாவது புரியப்போறதா?  அவருக்கென்ன, அவர் பாட்டுக்கு அவதாரம் பண்ணுவர்,  எதையாவது சொல்லிட்டு கிளம்பிப் போய்டுவர்.  நமக்கு அதெல்லாம் தெரியாது.  ஆழ்வார், ஆச்சார்யார்கள்ன்னு சொன்னா நம்ம ஜாதியோல்லையோ?  நாம படற கஷ்டம் அவாளுக்குத்தானே தெரியும்?  அதனாலதான் பாகவதர்களோடே எப்போதும் சேர்ந்து இருக்க வேண்டும்.  என்ன பாவம் இருந்தாலும், பாகவத ஸ்ரீபாததூளியைத் தலையாலே தரித்து, அவனது பாததீர்த்தத்தை உண்டோம்னால், அத்தனை பாவமும் தொலைந்து போகிறது.  அடியார்களோடே சேர்க்கை, ‘அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே’ என்று ஆழ்வார் சாதிக்கிறார்.  பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து இருக்க வேண்டும்.  அவர்கள் சேரச் சேரத்தான் இன்பமே.  பெருமாளைப் பத்தி பேசணுமா, இன்னும் நாலு பேர் நாலு கதை சொல்லுவா.  இன்னும் சந்தோசம்.  பிரிஞ்சு ஏதானும் துக்கத்துல இருக்கமா, ‘கவலைப்படாதே, நாளைக்குப் பெருமாள் சரிப்படுத்திடுவர்’, அப்படின்னு அவந்தான் சொல்லணும்.  இந்த துக்கத்தை சரிப்படுத்தறதுக்கும் அவந்தான் வேணும், சுகத்தை வளர்த்துவிடறதுக்கும் அவந்தான் வேணும்.  அதனாலே அடியார்கள் சேவையே பாதசேவநம்ன்னு கொள்ள வேண்டும்.

    அர்ச்சநம், புஷ்பங்களைக் கொண்டு பெருமான் திருவடிகளுக்குத் தூவி வழிபடுதல்.  புஷ்பமாலைங்கிறதே பெருமாளுக்கு ரொம்பவே இஷ்டம்.  ஆண்டாள் அதைத்தான் பிடிச்சிண்டா.  சூடிக்குடுத்த நாச்சியார்ன்னு சொல்றோமோல்லையோ?  பெரியாழ்வார் கைங்கர்யம் பண்ணினது, புஷ்ப கைங்கர்யம்.  தொண்டரடிப்பொடியாழ்வார் பண்ணினது, புஷ்ப கைங்கர்யம்.  திருவேங்கடமுடையானிடத்திலே ‘தோமாலை சேவை’ன்னு ஒன்னு சொல்லுவா.  அதுக்கு சீட்டு கிடைக்கறது ரொம்பவே கஷ்டம்.  தோமாலை – தோள் மாலை, தோளிலிருந்து திருவடிவரைக்கும் தொங்குகின்ற மாலை.  பகவானுக்கு ரொம்ப பிடித்தமானது புஷ்பம்.  அது ஒரு நிர்துஷ்டமான கைங்கர்யம்.  ஆனா அந்தப் புஷ்பத்தை சமர்ப்பிக்கிறதுல ஒன்னே ஒன்னு ஜாக்கிரதையா இருக்கணும்.  அதை சமர்ப்பிச்சுட்டு, இதுக்கு பதிலாக ஒன்னை எதிர்பார்த்தேன்னு மட்டும் சொல்லிடவே கூடாது.

    சூட்டு நன் மாலைகள் * தூயன வேந்தி * விண்ணோர்கள் நன்னீர்
    ஆட்டி * அந்தூபம் தராநிற்கவே அங்கு * ஓர் மாயையினால்
    ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமில் ஏற்று வன் கூன் *
    கோட்டிடை ஆடினை கூத்து * அடல் ஆயர் தம் கொம்பினுக்கே.

    (திருவிருத்தம் – 21)

    -ன்னு ஆழ்வார் சாதித்தார். ’தூயமாமாலை கொண்டு சூட்டுவன்’. தூய்மையான புஷ்பம்.  மாலாகாரன்னு ஒருத்தன் மதுரைப் பட்டினத்திலே இருந்தான்.  கண்ணன் மதுரைக்குள்ள வரார்.  பத்து வயசு இப்போ கண்ணனுக்கு.  கம்சனை ஒழிக்கணும்ங்கிறதுக்காக வரார்.  மூன்று பேரிடத்திலே போனார்.  இத்தனை நாளும் இடைப்பிள்ளே, அலங்காரம் பண்ணிண்டாலும் கேட்கறதுக்கு ஆளில்லே, பண்ணிக்காட்டாலும் கேட்கறதுக்கு ஆளில்லே.  இப்போ நகரம், மதுராங்கிறது பெரிய நகரமோல்லையோ?  நகரம்னாலே அலங்காரப் ப்ரியன்.  அதனாலே அவருக்கு ஆசை. மூன்று பேரை பிடிச்சார்.  முதலில் வஸ்திர அலங்காரத்துக்காக ரஜகன், ஒரு வண்ணானைப் பிடிச்சார்.  அடுத்தது புஷ்ப அலங்காரத்துக்காக மற்றொருத்தன், மாலாகாரனைப் பிடிச்சார்.  சந்தன அலங்காரத்துக்காக கூனி திருவக்கராவைப் பிடித்தார்.  இந்த மூன்று பேரிடத்திலே போய் முன்று அலங்காரம்.

    முதல்ல வஸ்திர அலங்காரம் ஆயிடுத்து. அடுத்தது மாலாகாரன் வீட்டுக்குப் போறார். அவன் விதிர்த்துப் போய்ட்டான். கண்ணனா வந்துருக்கார்? எங்க இருக்கறவர், நம்ம குடிசையைத் தேடி வந்திருக்காரே!

    ப்ரஸாத பரமவ் நாதவ்
    மம ஏகம் உபதாதவ்
    தந்யோஹ அர்ச்சைஷ்யாமி
    இத்யாஹ மால்யோப ஜீவநஹா

    ’நான் என்ன எதிர்பார்த்திருக்கேன், நான் என்ன யோக்யதைன்னு கண்ணனே என் வீடு தேடி வந்தீர்?  என்கிட்ட இருக்கிற ரெண்டு புஷ்பத்தைச் சமர்ப்பிக்கிறேன், அதுதான் என்னால முடியும்’ன்னான்,  ‘அதுக்குத்தான் வந்தேன், உன்கிட்ட வேற எதை நான் எதிர்பார்த்து வந்துட்டேன்?  அந்தப் புஷ்பம் நிர்துஷ்டமான புஷ்பம், எதையும் எதிர்பார்க்காமல் நீ என்கிட்ட சமர்ப்பிச்ச புஷ்பம்.  குடு’ என்று பெருமாள் வாங்கி மாலையைச் சார்த்தினுட்டு, அவனுக்கு சேவை சாதிச்சு, ‘மாலை நன்னாயிருக்கா? நீ தானே சார்த்தியிருக்கே? மாலை நன்னாயிருக்கா?’ன்னா,  ‘நான் யாரு, உன் மாலை நல்லாயிருக்கு, இல்லைன்னு சொல்றதுக்கு?  இது என் மாலையே அல்ல, நீ குடுத்த கை, நீ குடுத்த சொத்து, இதைக் கொண்டு உனக்கு மாலை சமர்ப்பிச்சதுக்கு, என்னமோ நான் குடுத்துட்டாப்ல வேற பேர் வைச்சுக்கறயே’ன்னா,  ‘உனக்குத்தான் பக்தி, நீதான் என் கைங்கர்யபரன், நீ குடு, நான் வாங்கிக்கறேன்’ என்று திருப்தியா அவனுக்கு அனுக்கிரகம் பண்ணிட்டு பெருமாள் புறப்பட்டுப் போனார்.

    பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
    ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்ந்நாமி ப்ரயதாத்மந:                   (9.26)

    கண்ணனே கீதைல தெரிவிக்கிறார்.  ‘நீ வேற எதைக் குடுக்கிறாயோ, குடுக்காமப் போறியோ, பத்ரம் - ஒரு இலை கிடைக்காதா?  பகவானுக்கு ஒரு இலை சமர்ப்பிக்கக் கூடாதா?  புஷ்பம் – ஏதானும் ரெண்டு புஷ்பத்தைப் பறிச்சு சமர்ப்பிக்கக் கூடாதா?  பலம் – ஒரு பழம் கிடைக்காது போயிடுமா?  தோயம் – தண்ணீர் கிடைக்காது போயிடுமா?  பூர்ணகும்பம் குடுத்து அவர் வந்தா அவர் திருவடிகளை விளக்கி, இந்தத் திருவடி பாததீர்த்தத்தை வாங்கிக்கறதுக்கு என்ன பாக்யம் பண்ணியிருக்கேனோ?  இது நமக்குக் கிட்டாது, என்று அடிபணிந்து சொல்லிக் கொள்ளுவதுதான் பக்தனுக்கு லக்ஷணம்.  இதுக்கு மேல பகவான் ஒண்ணும் பணம், காசெல்லாம் எதிர்பார்க்கறதில்லே.  உள்ளத்தில் தூய்மையான அன்பு இருக்கான்னு கண்டிப்பாப் பார்ப்பர்.

    இது நடந்தது.  சஞ்சயன், விதுரன், திருதராஷ்டிரன், துரியோதனன் எல்லாம் நின்டுண்டு இருக்கா.  நாளைக்கு கண்ணன் பாண்டவ தூதனா வரப்போறார்.  நீங்க கேள்விப் பட்டிருக்கேளோல்லையோ?  துரியோதனாதிகளோடே அரண்மணைக்குப் போனார், பாண்டவ தூதனா நடந்தார்.  வரப்போறார். இந்தக் கண்ணிழந்தானே திருதராஷ்டிரன், அவனுக்குப் புத்திக் கோளாறு வேற வந்துடுத்து.  அவன் பக்கத்துல இருக்கவாளப் பார்த்துப் பேச ஆரம்பிச்சான்.  ‘நாளைக்குக் கண்ணன் வரப்போறார். ரொம்ப பலசாலியா இருக்கார்.  பலசாலிகள் எதிர்கட்சியில இருந்தாலே ஏதாவது குடுத்து நம்ம கட்சிக்குக் கூப்பிட்டுடனும்.  எத்தனை கிராமம் குடுத்தால் கண்ணன் நம்ம பக்கத்தில சேர்வர்?  என்ன குடுத்தால் பாண்டவர்கள் பக்கத்திலிருந்து, நம்ம பக்கத்தில் சேர்வர்’ன்னு திருதராஷ்டிரன் கேட்டான்.  சஞ்சயனுக்கு என்ன சொல்றது, சிரிக்கறதா அழறதான்னு தெரியலை.  அவன் பதில் சொன்னான், ‘உனக்கு வெளிக் கண்ணு மட்டும்தான் தெரியாதுன்னு நினைச்சிட்டிருந்தேன் திருதராஷ்டிரா, உனக்கு உள்கண்ணும் தெரியாதுன்னு இப்பதான் நான் தெரிஞ்சிண்டேன்.  யாருக்கு என்ன லஞ்சம் குடுத்து உன் பக்கம் இழுக்கணும்ன்னு பார்க்கறே?  என்ன குடுத்துருவே?’ன்னு கேட்டான் அவன்.  திருதராஷ்டிரன் சொன்னான், ‘ஒரு பத்து கிராமம் குடுத்துடலாமா?  அவர் இடைப்பிள்ளைதானே, ரொம்பத் தெரியாது.  பத்து கிராமம் குடுத்தா வந்துடுவரா?’ன்னு கேட்டான்.  ‘இன்னும் என்ன குடுப்பே?’’ன்னு கேட்டான்.  ‘ஒரு லட்சம் வராகன், தங்கக்கட்டி குடுக்கறேன். வந்துடுவரா?’ன்னு கேட்டான்.  சஞ்சயன் திருப்பிக் கேட்டான், ‘இதுல பத்துல ஒரு பங்கு பாண்டவர்களுக்குக் குடுன்னு கேட்டுட்டுத்தான் கண்ணன் வரார்.  அதக்குடுக்கறதுல உனக்கு எண்ணமில்லே.  அதை விட்டுட்டு பத்து மடங்கு கண்ணனுக்குக் குடுக்கறேன்னு நீ சொல்ற பார்,  இதுலயே தெரிஞ்சு போச்சு உன் ஞானம் எவ்வளவுனுட்டு,  ஒண்ணுமில்லே, அஞ்சு குத்தூசி நிலம் கேட்டான் பாண்டவன்.  அதைக் குடுத்திருந்தியானா கண்ணன் நடந்திருக்க வேண்டிய தேவையே இல்லே.  சர்வேஸ்ரனைப் போய் ஒரு தூதனாக நடக்க வைக்கிற அளவுக்கு நீ தாழ்த்தினுட்டாய்.  ஆனா அதுக்கு மேலும் கண்ணன் என்ன குடுத்தா மயங்குவர்ன்னு சொல்றியே, இப்ப சொல்றேன் கேட்டுக்கோ, கண்ணன் என்ன குடுத்தா மயங்குவர்ன்னு சொல்றேன்.  அன்யக்கூர்நா தபாம்பூம்பா அன்யப்பாதாவரைச் சேதநாது அன்யக்குசல சம்வஸ்தநாது, கண்ணன் வரும் போது விழுந்து நமஸ்கரித்து, ’கண்ணனே! நீ இந்த ஏழைக் குடிசையைத் தேடி வருவதற்கு என்கிட்ட எந்த யோக்யதையும் கிடையாது.’, அப்படிங்கறதைச் சொல்லி, வாசல்லே கதவைத் திறந்து, விளக்குப் போட்டு, பூர்ண கும்பம் ஏத்தி வைச்சு, விளக்கேத்தி வைச்சு, அவன் திருவடிகளை விளக்கி, குடும்பத்தோட அந்த தீர்த்தத்தை எடுத்து தலையில புரோச்சிச்சிண்டு, நீ எப்போதும் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால், பல்லாண்டு பல்லாண்டு இருக்க வேண்டும், இது பாடுவதற்கு பகவான் மயங்குகிறானே தவிர,  இதைத்தவிர நீ குடுக்கிற எத்தையும் அவன் எதிர்பார்க்கிறதே கிடையாது.  இது இருக்கா திருதராஷ்டிரா உன்னிடத்திலே?’.  யோசித்தான். ‘இது என்னதுன்னே புரியலையே நீ சொன்னது எனக்கு.  நீ என்னென்னமோ சொல்லிண்டிருக்கே.  இதெல்லாம் பண்ணித்தான் பெருமாள் வருவரா?’ன்னா,  ‘இதைப் பண்ணாலே வந்துடுவர் திருதராஷ்டிரா.  நீ என்ன நினைச்சிண்டிருக்கே, இதெல்ல்லாம் பண்ணாத்தான் வருவராங்கிறே.  ஆனா சஞ்சயன் சொன்னது, ‘இது பண்ணினாலே வந்துடுவர்’.  ரெண்டுத்துக்கு வித்தியாசம் இருக்கு.  ஒன்றே ஒன்றுதான் தெரிஞ்சிக்கணும்.  அவர் மற்ற எதையும் எதிர்பார்க்கறதில்லே,  நம்மை எதிர்பார்க்கிறார்.  அவருக்குத் தேவை ஆத்மா, ஆத்மாவின் தூய அன்பு.  அதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லே.  அதனாலதான் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி – யாரொருத்தன் பக்தியோடே இதை என்கிட்ட சமர்ப்பிக்கிறானோ, அவனிடத்தில அதை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

    இதே விசயத்தைத்தான் விதுரர் செய்தே காட்டினார்.  விதுரர் வீட்டுக்குக் கண்ணன் வந்துட்டார்.  விதுரர் மனைப்பலகை போட்டார்.  போட்டுட்டு தடவித்தடவிப் பார்த்தாராம்.  என்ன மதி, என்ன மதின்னு வியாசர் மஹாபாரதத்தில கொண்டாடுறார்.  தன் வீட்டு மனையைத் தடவித் தடவிப் பார்த்தாராம்.  கண்ணன் கேட்கறார், ‘நீரே ஆசனம் போட்டுட்டு எதுக்கு தடவிப் பார்க்கறீர்?’.  ‘இல்லேல்லே, நேத்திக்கு ராஜ சபையில ஒரு அனர்த்தம் நடந்ததோல்லையோ?  அத எங்கானும் நானும் பண்ணிடப் போறேனோன்னு எனக்குப் பயம்.’  ஏன்னா பாண்டவ தூதனா வரச்சே, இந்தத் துரியோதனன் ஒரு அறிவிலி.  அவன் ஒரு பள்ளம் வெட்டி வைச்சான்.  பள்ளம் வெட்டி, அதுலே ஒரு ரத்தின கம்பளத்தைப் போட்டு, அதன் மேலே ஒரு ஆசனத்தைப் போட்டுட்டு, அதுல கண்ணனை வந்து உட்காரச் சொல்லி, அது முறிஞ்சு கண்ணன் கீழ விழுவர், பத்துப் பேரை கீழ நிறுத்தி வைச்சு விழும் போது பிடிச்சு, சிறையில அடைச்சுடலாம்னுட்டு.  வெறும் அறிவில்லாத காரியம்.  இதை அப்பவே சொன்னார்கள், சஞ்சயனும் விதுரனும், ‘நீ என்னமோ பண்றே துரியோதனா, இதுக்கெல்லாம் கட்டுப்படறவர் அவரில்லே.’  ‘ஹ, இடைச்சி கையால கட்டுப்பட்ட கண்ணனை நானா பிடிக்க முடியாது’ன்னு கேட்டான் துரியோதனன்.  ‘அவ கட்டலை துரியோதனா, அவள் கட்டும்படி நின்றான்; அவள் கட்டினாள். அவளாக் கட்டலே.  இங்க நீயா கட்டணும்ன்னு பார்க்கறே, அவனைக் கட்டுவதற்கு முடியாது.’, என்று அப்பவே சொன்னார், கேக்கலே.  கண்ணன் உள்ள நுழையறார் பாண்டவ தூதனா வரச்சே. இந்த ஆசனத்துல உட்கார்ந்துக்கோன்னா, கண்ணனுக்குப் புரிஞ்சு போச்சு.  என்னமோ ஆபத்து இருக்கு இந்த ஆசனத்திலே.  ‘நான் இடைப்பிள்ளே, நான் ஓரமா இந்த சின்ன நாற்காலியிலே உட்கார்ந்துக்கிறேன்.  சிம்மாசனமெல்லாம் நமக்கு வேண்டாம்’ன்னார்.  ‘இல்லேல்லே ஸ்வாமி கண்டிப்பா அதிலேதான் உட்காரணும்னான்.  சரின்னு உட்கார்ந்தார். அதென்ன சின்னத் திருமேனியா?  யசோதை குடுத்த பாலும், தயிரும், வெண்ணையும் சாப்பிட்டு, சாப்பிட்டு பருத்த திருமேனியோல்லையோ?

    அரவினிற் கொடியோன் அவையுள் ஆசனத்தை
    அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மாமேனி
    அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்

    திருக்கண்ணங்குடின்னு நாகப்பட்டினத்துக்கு அருகில திவ்யதேசம்.  அதுக்குப் பத்துப் பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பாடினார்.  அதுலே சாதிக்கிறார்.  அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட – என்ன, ஒரு துளி நெஞ்சத்துல பயம் இல்லையே இந்தத் துரியோதனனுக்கு?  யார்கிட்ட என்ன காரியம் பண்றோம்ன்னு ஒரு துளி பயம் இருந்ததா?  அதற்குப் பெரிய மாமேனி அண்டமூருவ – பெருமான் வந்து அந்த ஆசனத்தில உட்கார்ந்திண்டார்.  உட்கார்ந்த உடனே அது முறிய ஆரம்பிச்சது.  வில்லிப்புத்தூரார் பாரதத்திலே சொல்றார்,

    தவிசு பொருத்திய மணிகள் அழுத்திய ஆசனம்
    நெறுநிறநக் கொடு நிலவரையில் புக நெடியவன் அப்பொழுதே

    நெறுநெறுன்னு முறிஞ்சது, கண்ணன் கீழ போறார்.  அதே சமயத்திலே விஸ்வரூபத்தை எடுத்து, திருவடி பாதாளத்துக்குப் போக திருமுடி அண்ட கடாகங்களைத் தாண்டி நிற்க, ‘துரியோதனா, என்னைப் பிடிக்கணும்ன்னு பார்த்தாய்.  முடியுமானால் செய்து பார்.’, என்று சொல்லி அதே ராஜ சபையில இருந்து வெளியேறிட்டார் கண்ணன்.

    இது முதல் நாள் பாண்டவ தூதனா வரச்சே இதுதான் நடந்தது.  இதை விதுரர் பார்த்திண்டிருந்தாரோல்லையோ?  இவன் போட்ட சோற்றைத்தான இத்தனை நாளும் நான் சாப்பிட்டுண்டு இருக்கேன்.  அதனால என் வீட்டுக்குக் கண்ணன் வந்துருக்கச்சே, இதெல்லாம் பண்ணலே, ஆனா ஒருவேளை மனைல குண்டூசி வச்சிருந்தா?  இதுதான் அவர் பயம் இப்போ.  அதனால தான் வீட்டு மனையை தடவித்தடவிப் பார்க்கறார்.  ஒரே பதட்டம்.  நாமளா இருந்தா நினைப்போம்.  இதென்ன கலக்கம்? தெளிவ்வா தெரிஞ்சிருக்க வேண்டாமான்னா,  தெளிவ்வா இருக்கற நாமெல்லாம் பக்தியே இல்லேன்னு அர்த்தம்.  கலங்கி இருக்கிற விதுரருக்குத்தான் பக்தி இருக்குன்னு அர்த்தம்.  பக்தி என்பது தெளிவில் இல்லை, கலக்கத்தில் உள்ளது.  கண்ணனைப்பத்தி யோசிக்கறச்சே எவன் கலங்குகிறானோ, அவனிடத்திலேதான் பக்தி இருக்குன்னு அர்த்தம்.

    தடவித்தடவி பார்த்தார், உட்கார்த்தி வைச்சார்.  நாலு வாழைப்பழம் கொண்டு வந்தார்.  கொண்டு வந்துட்டு ஞாபகமா வாழைப்பழத்தைக் குடுக்கணுமோல்லையோ?  வாழைப்பழமா கீழ போட்டுட்டு, ஒரோரு தோலா எடுத்து கண்ணன்கிட்ட குடுக்கறார்.  பதற்றம், என்ன பண்றார்ங்கிறது அவருக்குத் தெரியலே.  கண்ணன் பேசறார், இவர் விழுந்து சேவிக்கிறார். பக்கத்திலே உட்கார்த்தி வைச்சுக்கறார்.  கண்ணனிடத்திலே பேசிண்டிருக்கோம்ங்கிற பதட்டம்.  பழமா கீழ போட்டுட்டு தோலா கைல குடுக்கிறார்.  ஆனந்தமா தோலை சாப்பிட்டுண்டே அவன் கதை பேசிண்டிருக்கான்.  அவனுக்குத் தேவை பேசணும்.  இதுதான் பகவானுக்கு. திண்ணைப் பேச்சில்லே.  பகவானைப் பத்தின பேச்சு.  அவனைப் பற்றி யார் பேசினாலும் அவன் அவ்வளவு இஷ்டப்படுகிறான்.  அதனால தோல், தோலா வாங்கி சாப்பிட்டுட்டு, ஆறு தோல் சாப்பிட்டாச்சு.  பழம் ஆறு கீழ கிடக்கறது.  அப்பதான் விதுரருடைய தர்ம பத்தினி வந்தார்.  ‘பெரிய அபச்சாரம் பண்ணிண்டு இருக்கேளே. இந்தாங்கோ நல்ல பழமா எடுத்துண்டு போய் சமர்ப்பிங்கோ’ன்னாள்.  ‘ஓ, தப்பு பண்ணிட்டேன்’ன்னு பதறி, திரும்ப விழுந்து கண்ணை சேவிச்சுட்டு, புதுசா பழத்தை எடுத்து, ஞாபகமா தோலை கீழ போட்டுட்டு, இப்ப பழமா எடுத்து கைல குடுத்தார்.  போறும், பசி ஆறிடுத்துனுட்டார் கண்ணன்.  இத்தனை நாழி நான் பழமே குடுக்கலையே, தோல்ன்னா குடுத்தேன், பசி ஆறித்தான்னா, சிரிச்சிண்டே கண்ணன் கேட்டார்.  ‘விதுரா, இப்போ நீ குடுக்கற பழத்திலே எனக்கு பசி ஆறப்போறதுன்னு நினைச்சிண்டு இருக்கியா?  இல்லே. நான் உலகத்தை அத்தனையும் என் வயிற்றிலே வைத்தது ஓர் நாள்.  அதுக்கே என் பசி ஆறதில்லே. நீ குடுத்த தோலுக்கும் பசி ஆறாது,  நீ குடுத்த பழத்துக்கும் பசி ஆறாது.  பின்ன எதுக்குத் தெரியுமா ஆறும்?  நான் வந்துட்டேன்னு தெரிஞ்சதும், என்ன பண்றதுன்னு தெரியாம பதறிப்போய் தோலைக் குடுத்த பார், அந்தப் பதறின பக்திக்கு என் பசி ஆறுமே தவிர, வேறு எதற்கும் பசி ஆறாது’.  பெருமானுக்குப் பசியே அந்தப் பதற்றம், அந்தத் துடிப்பு, அந்த பக்தி.  அதைத்தான் பழமாக அவன் சாப்பிடுகிறானே தவிர, மற்றொன்றை அவர் எதிர்பார்க்கறதே கிடையாது.

    அதனாலதான் விதுரனுடைய குடிசையிலும் பெற்றுக் கொண்டார்.  மாலாகாரனிடத்திலும் பெற்றுக் கொண்டார். திருவக்கரா கூனியிடத்திலும் பெற்றுக் கொண்டார்.  அவள் பெருமாளுக்கு சந்தன அலங்காரம் பண்ணி வச்சா.  அவள் பண்ணதுன்னா, அவர் அப்படியே தெருவோரமா போயிண்டிருந்தார்.  திருவக்கராவைக் கூப்பிட்டார். அவள் கம்சனுக்கு சந்தனம் எடுத்துண்டு போயிண்டிருக்கறவள்.  அவளைப்  பார்த்துட்டு எனக்குச் சந்தனம் குடுன்னார்.  இதென்ன இடைப்பிள்ளே, கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமோன்போமோல்லையோ? அதைப்போலே, இதுக்கு வெண்ணை நாற்றம்தான் தெரியும், இதுக்குப் போய் என்ன சந்தனம் தெரியப் போறதுன்னு, சுமார் சந்தனமாக் குடுத்தாள்.  ஆனா அதை இவர் ஏத்துக்கவேயில்லே.  முதல்ல எங்க திருமேனி முழுக்கப் பார்,  பலராமனையும் என்னையும் முழுசா பார். பார்த்துட்டு என் உடம்பு அழகுக்கு ஏற்ற சந்தனத்தைக் குடு, அப்படின்னார்.  அப்பதான் ஒரு தடவை ஏற இறங்க திருவக்கரா பார்த்தா. கைல இருக்கற பாத்திரத்தைக் கீழ வைச்சா.  விழுந்து சேவிச்சா.  இதுக்குச் சந்தனம்ங்கிறது என் நெஞ்சத்தைத்தான் நான் குடுக்கணும்.  இதற்கு ஏற்ற சந்தனம் என்கிட்டே இல்லை.  இதற்கு ஏற்ற சந்தனம் நாமே.  ஆத்மாவைத்தான் சந்தனமா பூசிவிடலாமே தவிர, இதற்கேற்ற மற்றொரு சந்தனம் என்கிட்ட இல்லை.  ஆழ்வார் சாதித்தார்,

    பூசும் சாந்தென் நெஞ்சமே * புனையும் கண்ணி எனதுடைய *
    வாசகம் செய் மாலையே * வான் பட்டாடையும் அஃதே *
    தேசம் ஆன அணிகலனும் * என் கை கூப்புச் செய்கையே *
    ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த * எந்தை ஏக மூர்த்திக்கே.

    (திருவாய்மொழி – 4.3.2)

    உனக்குச் சந்தன அலங்காரம் பண்ணனும், என்கிட்ட இல்லை.  என் நெஞ்சு இருக்கு, தரேன்.  உனக்குப் புஷ்ப அலங்காரம் பண்ணனும், என்கிட்ட இல்லை.  1102 பாசுரம் பாடியிருக்கேன், தரேன்.  உனக்கு தூப, தீப ஹாரத்தி காட்டணும், என்னிடத்திலே இல்லே.  கை கூப்பரேன். அதான் என்கிட்ட இருக்கறது.

    அப்போ பக்தின்னு சொல்லுவதற்கு இந்த அடிப்படைத் தகுதிகளைத்தான் பகவான் எதிர்பார்க்கிறாரே தவிர, இதைவிட்டுட்டு, லட்சமோ, பத்து லட்சமோ ஏதோ பண்ணிட்டு, என்னைக்கு என்னை சேவிச்சுட்டு பார்க்கறியாங்கறது பக்தி அல்ல.  ஒன்றைச் சமர்ப்பித்துவிட்டுத் திரும்ப எதிர்பார்ப்பது பக்தி அல்ல.  அநந்யப் ப்ரயோஜனமாய், ஸ்வயம் ப்ரயோஜனமாய், அவன் திருமுகம் மலருமாங்கறதுதான் பக்தி.  அது ஒன்றுதான் இங்கே லட்சியாமாக இருக்க வேண்டும்.

    வந்தனம், அடிக்கடி நமஸ்கரித்தல். பெருமானை வந்தனம் செய்தல்.

    தாஸ்யம், கைங்கர்யம்.

    ஒழிவில் காலம் எல்லாம் * உடனாய் மன்னி *
    வழுவிலா * அடிமை செய்ய வேண்டும் நாம் *
    தெழி குரல் அருவித் * திருவேங்கடத்துத் *
    எழில் கொள் சோதி * எந்தை தந்தை தந்தைக்கே.

    (திருவாய்மொழி – 3.3.1)

    என்று ஆழ்வார் தெரிவித்தார்.

    ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்.  நாம் எல்லாரும் தாசர்கள்தான்.  யாரும் ராஜாவா இருக்க யோக்யதை கிடையாது.  பகவானுக்குக் கொண்டு போய் புஷ்ப கைங்கர்யம் சமர்ப்பிக்கிறோம்னா, இந்தக் கை பண்ணியிருக்கிற காரியத்தை யோசிச்சுப் பார்த்தா, இந்தக் கையால் புஷ்பத்தை அவர் வாங்கிக்க வேண்டிய அவஸ்யம் இல்லை.  நித்யசூரிகள் புஷ்பம் குடுக்கக் காத்திண்டிருக்கா, விதுரனும், சஞ்சயனும் காத்திண்டிருக்கச்சே, இந்தத் தாழ்ந்த கையிலிருந்து பகவான் எதுக்கு வாங்கிக்கணும்?  இந்த மட்டுமாவது வாங்கிக்கிறாரோல்லையோ?  இப்போ நம்மகிட்ட ஒரு பத்து ரூவா, அந்த பத்து ரூபாவை வைத்து ஒரு புஷ்பம் சமர்ப்பிச்சோம், என்னன்னு நினைச்சுக்கணும் தெரியுமா?  லட்சம் பேர் உனக்கு சமர்ப்பிக்கனும்ன்னு காத்திண்டிருக்கச்சே, நல்லவேளை இந்தப் பத்து ரூபாவை நீ ஸ்வீகரிச்சியோ இல்லையோ, உனக்கு நன்றி.  அதனாலே நம்மகிட்ட வாங்கிண்டதுக்கு அவர் நன்றி சொல்ல மாட்டார்.  அவர்கிட்ட குடுத்ததுக்கு நாம நன்றி சொல்லணும்.

    இதைத்தான் ஆண்டாளும் தெரிவித்தாள். ’நூறு தடா அக்கார அடிசில் நூறு தடா வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்’,  நூறு கங்காளம் நிறைய வெண்ணையாம், நூறு கங்காளம் நிறைய அக்கார அடிசில். பெருமாளே வா, வந்து சாப்பிடு.  சாப்ட்டார் எல்லாத்தையும்.  ‘இப்ப நான் என்ன பண்ணனும்’ன்னு கேட்டார்.  ‘ஒண்ணுமில்லே, இன்னொரு தரம் வந்து சாப்பிடணும்’.  அதான் நான் பிரார்த்திப்பேனே தவிர, இந்த நூறு தடா முடிஞ்சு போச்சா, அடுத்தது இன்னொரு நூறு தடா பண்ணி வைப்பேன்.  இப்போ, வந்து சாப்பிடு. சாப்பிட்டதுக்கு உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமான்னா, நீ ஏதாவது எனக்கு செய்யணும்ன்னா, அடுத்த தரம் வந்து சாப்பிடு.  இதைத்தான் உன்கிட்ட பிரார்த்திப்பேன்னாள்.  அப்போ வேற ஒன்றையும் கேட்காத தன்மை பக்தி ஆகிறது.

    ஸக்யம் - நட்பு. சிறந்த நண்பனாக, பெருமானை விட்டுப் பிரிந்து நான் இல்லைங்கிற அளவுக்கு நட்புப் பாராட்ட வேண்டும்.  அந்த நண்பனாக குகப்பெருமான் இருந்தானோல்லையோ?  இராமனிடத்திலே போய் எல்லாத்தையும் சமர்ப்பிக்கிறோம்.  இராமன் சிருங்கிபேரபுரத்துக்கு வந்தார்.  கங்கைக்கரையோரத்துல இருக்கு. இராமன் வந்துட்டார்ன உடனே, பதறிப்போய் தன்னிடமிருந்த காய், கனி எல்லாத்தையும் கொண்டு போய் சமர்ப்பிச்சான்.  ஒதுக்கிட்டார்.  ’நான் இவற்றுக்காக வரலை குகா, நான் வந்தேன்ன உடனே நீ பதறி ஓடி வந்தாய் பார், அதற்குத்தான் எனக்கு ஆசை’.  குகனோடு தோள் போட்டுக் கொண்டு, ‘நின்னொடும் ஐவரானோம்’. ஊர்ல இருக்கற யாருக்கோ போய் தொண்டன்னா, தொண்டனாவேதான் வச்சிண்டிருப்பா.  முன்னுக்கு வரவே விட்டுர மாட்டா. நம்மள முன்னாடிப் போய் அடிவாங்க விடுவா.  அவா பின்னாடி வருவா.  இப்படித்தான் தொண்டர்கள், ஸ்வாமிகள் எல்லாம் ஊரிலே.  ஆனா பகவானிடத்திலே போய் தொண்டன்னு நாம குனிஞ்சோம், அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டு, மடியிலே அமர்த்திக் கொண்டு, ‘தம்பி’ன்னுட்டார்.  இவன் யார், ஒரு வேடர் ஜாதியிலே பிறந்த குகன்.  அவனைப் போய்த் தனக்குத் தம்பின்னு, ஷத்திரியகுல திலகமான, சக்ரவர்த்தித் திருமகனான இராம சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால், ஒரு பக்தனை அத்தனை நெருக்கமாகக் கொள்ளுகிறான்னு அர்த்தம்.

    ஆத்மநிவேதநம் – இந்த ஆத்மா உன்னது, என்னதல்ல.  இந்த ஆத்மா உன்னதுங்கிற நினைவு எப்போதும் இருக்க வேண்டும்.  ஆத்மா என்னது, நானேன்னு நினைச்சுனுட்டோம்னால், அப்போ நாம் திருடர்கள்ன்னு அர்த்தம்.  ஏன்னா, ஒருத்தர் சொத்தை இன்னொருத்தர் எடுத்துனுட்டால் திருட்டுதானே?  பகவானுடைய சொத்தான ஆத்மாவை என்னுதுன்னு நினைத்தால், பெரிய திருட்டோல்லையோ?  அந்த திருட்டு நாம செய்யக்கூடாது.  ஆத்மா அவனதுங்கிறத நாம புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த விசயங்களை ஒரு அசுரக் குழந்தை (பிரகலாதன்), அசுர நாஸ்திகத் தகப்பனாருக்கு (ஹிரண்ய கசிபு) சொல்லிண்டிருக்கான். அப்படின்னா யாரும் பண்ணலாம்ன்னு தெரிந்து கொள்ள வேண்டும். பக்தி ஒன்றினாலயே அவனை அறிய முடியும். பக்தி ஒன்றினாலேயே அவனைக் காண முடியும். பக்தி ஒன்றினாலேயே அவனை அடைய முடியும்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto)

    பாவம், புண்ணியம்.

    கூரத்தாழ்வான் தெரிவிக்கிறார்.

    எத்வத்ப்ரியம் ததிக புண்யம் அபுண்யமந்யது
    நாந்ம்யத்தயோர் பவதி லக்ஷநம் அத்ரஜாது
    தூர்த்தாஹிதம் தவஹி யத்கில ராஸகோஷ்ட்யாம்
    தத்கீர்த்தநம் பரம பாவன மாமநந்தி.

    ’நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துட்டேன். எது பாவம், எது புண்ணியம்ன்னு யோசிச்சேன். எதெதெல்லாம் உனக்குப் பிடிக்கறதோ, அதெல்லாம் நான் பண்ணினா புண்ணியம். எதெது நான் பண்ணினா உனக்குப் பிடிக்காதோ, அதெல்லாம் பாபம். அவ்வளவுதான் நான் முடிச்சுட்டேன். இதைத்தவிர நான் சாஸ்திரத்தையும் தேடறதா இல்லே, எதையும் தேடறதா இல்லே.’ நான் ஒன்றைச் செய்றேனா, பெருமாளுக்கு அதனால முகம் மலரப் போறதா, அவ்வளவுதான் புண்ணியம். நான் ஒன்றைச் செய்றேனா, பெருமாளுக்குப் பிடிக்கப் போறதில்லையா, அவ்வளவே பாவம்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto)

    பக்தி என்பது என்ன? பாகம் 3

    முந்தைய பாகம், பாகம் 1, பாகம் 2

    பக்தர்களின் வகைகள் மற்றும் பக்தனின் உயர்வு

    உசத்தியான பக்தியைச் சொல்லுவதற்கு முன்னாடி, நாலு விதமான் பேர்கள் என்னை வந்து ஆஸ்ரயிக்கிறார்கள் என்று தொடங்கினான் கண்ணன்.

    சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
    ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப (7.16)

    ஆர்த்தஹா, ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தீ, ஞாநி, இந்த நாலு பேர் என்னை வந்து அடைகிறார்கள் என்று தெரிவித்தான் எம்பெருமான்.  இது பேர் நாலா இருந்தாக்கூட இவா வகையை மூன்றாகப் பிரிச்சுடலாம். ஐஸ்வர்யார்த்தி, கைவல்யார்த்தி, பகவல்லாபார்த்தி.

    ஐஸ்வர்யார்த்தி, அசிதுனுடைய அனுபவத்தை எதிர்பார்ப்பவர். கண்டு, கேட்டு, உத்து, மோந்து, உண்டு உழலும் தெரிவறிய அளவிலா சிற்றின்பம், ஒழிந்தேன்னு ஆழ்வார் தெரிவித்தார்.  அதனால இவ்வுலக இன்பத்தை மட்டுமே எதிர்பார்த்துண்டு இருக்கறவன் ஐஸ்வர்யார்த்தி.  இந்த வகையை மட்டும் கண்ணன் ரெண்டா பிரித்தார்.  ஒருத்தனை ‘ஆர்த்தன்’னு பேர் வைச்சார்; மற்றொருத்தனுக்கு ‘அர்த்தார்த்தி’ன்னு பேர் வைச்சார்.  இருக்கற சொத்தை தொலைச்சுட்டு திரும்ப மீட்டுக்குடுன்னு கேட்க வரவன் ஒரு வகை.  இல்லாத சொத்தை புதுசா குடுன்னு கேட்க வரவன, இது மற்றொரு வகை.

    அடுத்தது கைவல்யார்த்தி. இவர் சித்தை அனுபவிக்கிறவர்.  அவருக்கு சரீர இன்பத்தில ஆசை கிடையாது. இந்த சரீரத்தை விட்டுடனும். ஜனா மரண மோட்சம் ஏற்பட வேண்டும்.  பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, இது அவருக்குப் பிடிக்கறதில்லே. அது அத்தனையும் துறந்து இந்த சரீரத்தை விட்டு ஆத்மா புறப்பட்டு, மீளாத இடத்தைப் போய்க் கிட்ட வேண்டும்.  அப்படி ஒரு இடத்தில போய், அசரீரியாய், சரீரமே இல்லாமல் ஆத்மாமட்டும் தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  இதைத்தான் கைவல்யா அனுபவம்ன்னு சொல்லுகிறார்கள். கேவல – தாழ்ந்தது; கைவல்யம் – தாழ்ந்த அனுபவம்.  ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டால் அது தாழ்ந்த அனுபவம்.  அவனைத்தான் இந்த ஸ்லோகத்திலே ஜிஜ்ஞாஸு-ன்னு கண்ணன் சொல்றார்.

    மூன்றாவது பகவல்லாபார்த்தி. இவர் ஈஸ்வரனை அனுபவிக்கிறவர்.  இவர் ஞாநி.  ஞாநின்னு சப்தம் இருந்தாலும், பக்தனைப் பற்றித்தான் இந்த இடத்தில் சொல்லுகிறார்.  ஞாநி என்பது இங்கே ஞானயோக நிஷ்டனைக் குறிக்காது.  பக்தி மார்க்கத்திலே இருக்கிற பக்தனைப் பற்றித்தான் இங்கே பேச்சு.

    இந்த ஸ்லோகத்திலே இருந்து தெரிஞ்சுக்க வேண்டியது, பக்தியை இந்த மூன்று பயனுக்க்காகவும் பண்ணலாம். ஐஸ்வர்யத்தை வேண்டியோ, கைவல்யத்தை வேண்டியோ, பகவானை வேண்டியோ பக்தி பண்ணலாம்.  ஆனால் எதை நோக்கிப் பண்ண வேண்டும் என்று அடுத்த ஸ்லோகத்தில் சொல்றார்.

    தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஸிஷ்யதே
    ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:               (7.17)

    தேஷாம் – அந்த நாலு பேருக்குள்ளே, ஞாநீ – நாலாவதா ஞாநீன்னு சொன்னேனே அவன்தான் சிறந்தவன். விஸிஷ்யதே – ரொம்ப உசந்தவன். நித்யயுக்தஹா – அவன் ஒருத்தந்தான் என்னைவிட்டுப் பிரியமாட்டேன்னு சொல்றான். ஏகபக்திஹி – என்னிடத்திலதான் பக்தி, இன்னொருத்தரை அவன் திரும்பிப் பார்க்கவே மாட்டான்.

    மூன்று வகைப்பட்டவர்களும் திருமலையிலே ஸ்ரீநிவாசனைச் சேவிக்க வருகிறார்கள். ஆழ்வார் சொல்றார்.

    எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
    வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார்
    வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே – வானோர்
    மனச் சுடரைத் தூண்டும் மலை.

    (பொய்கையாழ்வார் – 2107)

    எழுவார் – யாரெல்லாம் ஐஸ்வர்யத்தைக் கேட்டுண்டு வராளோ, அவனுக்குப் பெருமாள் குடுப்பர்.  ஏன், மாட்டேன், பகவத் அனுபவம்தான் குடுப்பேன். நீ ஐஸ்வர்யம் கேட்டா குடுக்க மாட்டேன்னு சொல்லிடறதுதானேன்னா, அடுத்த தடவை வரவே மாட்டானே, அந்த பயத்திலதான் பெருமாள் குடுக்கறாராம்.  இந்த தடவை குடுத்தாலும் சரி, அடுத்த தடவைக்குள்ளே இதை அனுபவிச்சுப் பார்த்துட்டு பிரயோஜனம் இல்லேன்னு தெரிஞ்சிண்டு, என் அனுபவத்தைக் கேட்டு வரமாட்டானா? அப்படிங்கற ஆசையிலே பெருமான் குடுக்கிறான்.  ஆனா நாம அதைவிட சாமர்த்தியக்காரா. அந்த ஆசையை பகடைக்காயா வைச்சே, எத்தனை தடவை போய் என்னென்ன அவரிடத்திலே வாங்கிண்டு வரணுமோ, எல்லாத்தையும் வாங்கிண்டு வந்துடுவோம்.  சரி, போனாப் போறது, சொல்லிணுட்டு ஒரு நாலு நாளாவது இருந்து கைங்கர்யம் பண்ணிட்டு, ‘சரி, போய்ட்டு வரேன். நீர் குடுத்த ஐஸ்வர்யத்தை அனுபவிக்கணும். போய்ட்டு வரேன்’னு சொல்லிட்டு கிளம்பலாமோல்லையோ?, எழுவார், சொல்லவேயில்லையாம்.  கையில பொருள் விழுந்தது பாருங்கோ, எழுவார்.  ஆழ்வார் சொன்னார், அதுக்கப்புறம் அங்க அவன் ஆளையே காணோம்.  பெருமாள் திரும்பிப் பார்க்கிறார், ‘எங்க வந்தானே, நாலு பேர் நின்னுண்டு இருந்தானே’ன்னா, போயாச்சு. எப்ப கையில பொருள் விழுந்ததோ, புறப்பட்டுப் போயிட்டான்.

    அடுத்தது கைவல்யார்த்தி, அவன் கொஞ்சம் தேவலை. ஐஸ்வர்யார்த்தி அளவுக்கு மோசமில்லே.  விடைகொள்வார் – நான் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனானாம். இரண்டாவது வகை. அவனும் போய்ட்டான், இருக்கலே.  ஆனாப் போனாப் போறதுன்னு சொல்லிண்டாவது போனானோ இல்லையோ?

    மூன்றாவது வகை, வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார். பெருமானுடைய திருவடிகளுக்கு வந்தான், என்ன வேணும்ன்னு கேட்டார்.  கைங்கர்யத்தை வேணும்ன்னு கேட்டான்.  கைங்கர்யத்தையும் குடுத்தார் பெருமாள்.  நாலு நாளாச்சு, நாப்பது நாளாச்சு, அங்கேயே உட்கார்ந்துண்டிருக்கான்.  ’என்ன இங்கேயே இருக்கியே’ன்னா, ‘இருக்கறதுக்குத்தானே கேட்டேன்.  நான் உன்கிட்ட கேட்டதே உன்னோடகூட இருக்கணும்ங்கிறதுக்காகத்தான்.  அதை நீயும் குடுத்துட்டே. இனி இந்தத் திருவடிகளைவிட்டு எங்கும் போறதில்லே’, அப்படின்னு இருக்கறவந்தான் மூன்றாவது வகை.  வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்.  வைகல்ன்னா, எப்போதும் தொழுகிறான்.  எப்போதும் கைங்கர்யம் பண்ணுகிறான், அதைத்தவிர அவனுக்கு உள்ளத்திலே சிந்தனை இருக்கறதே இல்லை.

    அர்ஜுனன் கேட்டான், ‘அந்த பக்தி எப்போ ஏற்படும்?’.  நேத்திக்கு வந்துருக்குமா, நாளைக்கு வந்துடுமா, அந்த பக்தி எப்போ வரும்ன்னு கேட்கிறார்.

    பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே
    வாஸூதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:                   (7.19)

    பஹூநாம் ஜந்மநாம் – ஒரு பிறவி, ரெண்டு பிறவிகளல்ல, எத்தனையோ ஜன்மங்கள் போயிருந்தால், அந்தே – மெதுவா கர்ம ஞான யோகங்கள் முற்றி முற்றி, பல பிறவிகளுக்குக் கடைசியிலே, நம்முடைய பாவ புண்ணியங்கள் அத்தனையும் தொலைந்து, என்னென்ல்லாம் தடுத்துக் கொண்டிருக்கிற கர்மங்களோ, அது அத்தனையும் தொலைந்து, ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே – அப்படிப்பட்ட ஞானி முற்றித்தான் என்னை வந்து அடைகிறான்.  சுலபத்துல அது கிடைச்சுராது அர்ஜுனா, நாளாகும்.  எவ்வளவு நாள் காத்துண்டு இருக்கணும்னா, ’உன் ஆசை அளவுக்குக் காத்துண்டிருக்கணும். உடனே சேரணும்ன்னு ஆசை இருந்ததுன்னா, அதுக்குத் தகுந்தது செய்யப் போறேன், குடுத்துடப் போறேன்.  உனக்கு, சரி, அடுத்த வருஷம் போதும், அடுத்த வருஷம் போதும்ன்னு இருந்தா அப்பதான் குடுக்கப் போறேன்.’  அடுத்த வருஷம்ன்னு பேச்சுக்கு, பயப்படுத்த வேண்டாம்ன்னு சொன்னேன்.  ஆனா கீதையில இருக்கறது ‘அடுத்த ஜென்மா’.

    அந்த ஞாநி எப்படி இருக்கார்ன்னு அர்ஜுனன் கேட்கிறார். ‘அவனா? வாஸூதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸ்துர்லப:’  அப்படி ஒருத்தனைத்தான் நானும் ரொம்ப நாளாத் தேடிண்டே இருக்கேன் அர்ஜுனா, கிடைக்கவேயில்லேன்னார் அவர்.  ரொம்ப நாழியாச் சொல்லிண்டு இருக்கியே, பக்தி பக்தி, பக்தனுட்டு, அது யாருன்னு உனக்குத் தெரியாதான்னா, அப்படி ஒருத்தன் இருப்பனான்னு தேடிண்டு இருக்கேன்.  வாஸுதேவ ஸர்வம் – வாஸுதேவனே சர்வமும், எல்லாம்ன்னு சொல்றதுக்கு, இதி ஸ மஹாத்மா ஸ்துர்லபஹா – துர்லபன் = கிடைப்பதற்கு அரியவன்; ஸ்துர்லபன் = மிக மிக அரியவன். தேடித்தேடிப் பார்த்தாலும் பத்துக் கோடியில ஒருத்தன் கிடைப்பனாங்கிறது தெரியாது.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto)

    April 07

    பக்தி என்பது என்ன? பாகம் 2

    முந்தைய பாகம், பாகம் 1

    கீதையில் மொத்தம் 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்கள்.  முதல் ஆறு அத்தியாயங்களாலே ஆத்ம சாட்‌ஷாத்காரத்தைப் பற்றி கண்ணன் பேசுகிறார்.  இரண்டாவது ஆறு அத்தியாயங்களாலே பரமாத்ம சாட்‌ஷாத்காரத்தைப் பற்றி பேசினார்.  மூன்றாவது ஆறு அத்தியாயங்களாலே விடுபட்டுப் போன பொருள்களைச் சொல்லி முடித்தார்.  இதற்கு ஷட்கம் என்று பெயர், ஆறு அத்தியாயம் சேர்ந்தா ஒரு ஷட்கம். பிரதம ஷட்கம், மத்யம ஷட்கம், சரம ஷட்கம் என்று சொல்லுவர்கள்.  பிரதம ஷட்கத்திலே ஆத்ம சாட்ஷாத்காரம், அதுதான் பயன்.  இது முதல் படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.  மத்யம ஷட்கத்திலே பரமாத்ம சாட்ஷாத்காரம், இது மேல்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.  முதலில் நான் யார் என்பது புரிந்தால்தான், என்னை உடையவர் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பிறக்கும்.  நானே யார் என்று தெரியவில்லையெனில், பரமாத்மாவைப் பற்றி அறிந்து கொள்ள இயலாது.  ஆத்ம சாட்ஷாத்காரம் என்றால், நான் ஆத்மா என்று முழுமையுமாகப் புரிந்து கொண்டு, அந்த ஆத்மாவையே அனுபவிக்கிற அளவுக்குப் போய்டுவோம், இதுதான் லட்சியம்.  லட்சியம்ன்னு சொல்லிட்டாலே அதை அடையறதுக்குப் பாதை சொல்லணுமோல்லையோ?  அப்போ ஆத்ம சாட்ஷாத்காரமான லட்சியத்துக்கு எது பாதை?  கர்ம யோகம், ஞான யோகம் பாதை.  அந்தப் பாதைதான் முதல் ஆறு அத்தியாயங்களாலே சொல்லப்பட்டது.

    கண்ணன் இந்த ஆத்மாவைப்பற்றி ரொம்ப தூரம் உசத்தியா பேசிட்டார்.  தேகம் ரொம்ப மட்டம், ஆத்மா ரொம்ப உயர்ந்தவர், அழிவே இல்லாதது, ஆத்மா சுதந்திரன், அவனுக்கு இருக்கிற ஞானம் ஏது, அவனுக்கு இருக்கிற ஆனந்தம் ஏது, துக்கப்படறதுக்கு பிறந்தவரே இல்லே அவர்,  அவர் இந்த முக்குணங்களுக்கு உள்ளே அகப்படவே கூடாது, என்னென்ன பெருமை ஆத்மாவுக்கு உண்டோ, சொல்லிட்டாரோல்லையோ?  ஆனா இதைச் சொல்லிண்டே போறச்சே முடிக்கிறதுக்குள்ளே ஒரு ஆபத்து வந்துடுத்து.  அந்த ஆபத்தை மாற்ற வேண்டிய முக்கிய நிர்பந்தம் ஆறாவது அத்தியாயக் கடைசியில வந்தது.  இதுவரைக்கும் ஆத்ம சாட்சாத்காரத்தைப் பற்றி சொல்லிட்டு வந்தாரோல்லையோ, அர்ஜுனன் என்ன நினைச்சுண்டானா, முதல் படிக்கட்டு நூறு படிக்கட்டு ஏறினோமோல்லையோ, எதுக்கு?  அடுத்த நூறு படி ஏறணும்ங்கிறதுக்காகத்தானே ஏறியிருக்கோம்?  ஆனா இந்த முதல் நூறு படியிலேயே முடிவு வந்துடுத்துன்னு நினைச்சுனுட்டான். ஆத்மாவைப்பற்றித் தெரிஞ்ச உடனேயே, ‘ஓ, ஆத்மாவைப் பற்றிச் சொல்லிட்டார் கண்ணன், நாந்தான் ஆத்மா, நாந்தான் சிறந்தவன் போலருக்கு உலகத்திலேயே’, அப்படிங்கற முடிவுக்கு வந்துட்டான்.  ஆத்மாவினுடைய பெருமையைப்பற்றித் தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்க, ‘சுதந்திரன் ஜீவாத்மா’ அப்படிங்கிற தப்பான அபிப்ராயத்துக்கு வந்துடுவோம்.

    ஒரு விசயத்தை நல்லா அடிக்கோடு போட்டு ஞாபகம் வச்சுக்கோங்கோ.  ’ஆத்மா ஞானமயன்’ங்கிறது உண்மை, தேகத்தைக் காட்டிலும் மிக உயர்ந்தவர்ங்கிறது உண்மை, ஆனந்தமயன்ங்கிறது உண்மை,  ஆனந்தத்துக்குன்னேதான் பிறந்திருக்கார், சுக, துக்கம் தேவையில்லே, சுகத்துக்குன்னேதான் இருக்கார், மிக உயர்ந்தவர், அழிவே அற்றவர், எந்தச் சரீரத்துக்குள்ளும் போகக்கூடிய சக்தி படைத்தவர், இப்படி எல்லாம் இருக்கோல்லையோ?  இந்த மாதிரி ஒருத்தரை நான் உசத்தியாக் கொண்டாடிண்டே இருந்தா என்ன தெரியுமா ஆகும்?  அப்போ, ‘நானே’ங்கிற எண்ணம் வந்துரும்.  ஆத்மாதான் எல்லாம், ஆத்மா சுதந்திரன், இந்த மாதிரி எண்ணத்துக்குத்தான் ‘அகங்காரம்’ன்னு பெயர்.

    தான் அல்லாத, தேகம் அல்லாத ஆத்மாவைத் ’தான்’னு நினைச்சிண்டேன், அடுத்தது ‘சுதந்திரன்’னு புரிஞ்சிண்டேன்.  நான் யாருக்கும் அடிமைப்படவே வேண்டாம். ’நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ங்கிறாளோல்லையோ?  நாமார்க்கும் குடியல்லோம்னெல்லாம் சொல்ல முடியாது.  அவன் கண்டிப்பா கண்ணனுக்கு குடிதான்.  கண்ணனுக்கு அடிமைப்பட்டவர்கள்தாம் நாம்.  ஜீவாத்மா தன்னைத்தானே சுதந்திரன்னு நினைச்சுக்கிறான், அப்படி அல்ல, ஜீவாத்மா பகவானுக்கு அடிமை, இப்படிங்கிற ஞானம் இவனுக்கு ஏற்படணுமோல்லையோ?

    ஆத்மா சுதந்திரனா இருந்துட்டா, பெரிய கேள்வி வந்துருமே? அப்போ நான் நினைச்சதை எல்லாம் நடத்த முடியணுமே? நான் எத்தையோ நினைச்சிண்டிருக்கேன், வேற ஏதோ நடந்துண்டிருக்கு. எது நடக்காதுன்னு நினைச்சமோ அது நடக்கிறது, எது நடக்கும்ன்னு நினைச்சமோ அது நடக்கறதேயில்லே. இது இத்தனையும் வைச்சிண்டு, நான் சுதந்திரன் நினைத்திருப்பதிலே ஏதானும் லாபம் உண்டா? இது நிச்சயமா என்னுடைய முடிவில் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு, ஆனா அதை ஒத்துக்க மாட்டேங்கிறான்.

    பகவான் ஆண்டான், நான் அடிமை; அவன் ஸ்வாமி, நான் தாசன். இதைப் புரியவைக்க வேண்டிய நிர்பந்தம் கண்ணனுக்கு ஏற்பட்டது. ஏன்னா ஆறாவது அத்தியாயம் நெருங்க, அர்ஜுனன் ஆத்மாவைப் பற்றி, நான் சுதந்திரன்னு ஓகோன்னு புரிஞ்சுனுட்டான். கண்ணன் ரொம்ப அவசரமா மாத்திட்டார், ‘அர்ஜுனா, நீ எத்தையோ புரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காக நான் சொல்லப்போனா, கடைசிலே நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்ட போலருக்கு. இல்லே நான் சொல்றேன் கேட்டுக்கோ. கர்ம யோகம், ஞான யோகம்ன்னு இவ்வளவு நேரம் பேசிட்டு வந்தேன் பார்,

    யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேந அந்தராத்மநா |
    ஸ்ரத்தாவாந் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: || (6.47)

    எனக்கு இத்தனை நேரம் நான் சொன்ன கர்ம, ஞான யோகிகளைப் பிடிக்காது அர்ஜுனா’ன்னுட்டான்.

    இதை முதல்லயே சொல்லியிருக்கலாம்.  இதை இத்தனை நாழி ஆறு அத்தியாயங்களில், நூற்றுக்கணக்கான ஸ்லோகங்களைச் செலவழிச்சுப்புட்டு அவன் புரிஞ்சுதோ, புரியலையோன்னு தவிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுனுட்டு, ஏழாவது அத்தியாயத்துக்கு முன்னாடி, ‘இவா இத்தனை பேரையும் எனக்குப் பிடிக்காது, யாரைப் பிடிக்குமோ இனிமே சொல்றேன்’னா, அதை முதலிலேயே ஏன் சொல்லலைன்னு கேட்டா, ‘அவனைப் பற்றி நேரச் சொல்ல முடியாது அர்ஜுனா, கீழ இருக்கறவன நீ தெரிஞ்சிண்டாதான், மேல இருக்கறவனை ‘இன்னான்’னு நான் சொல்லவே முடியும்’.  இப்போ நாம் ஒரு விசயத்தைத் தெரிஞ்சுக்கறதுக்காகப் போறோம், அதை நேராவே சொல்லிடலாம், ஆனா சொல்ல முடியாது.  அதை ஏத்துக்கறதுக்கு மனசை முதலில் பக்குவப்படுத்தனும்.  பக்குவப்படுத்திட்டு வந்தாத்தான் நாம என்ன சொல்லப்போறோம்ங்கிறது மனசு ஏற்கும். அதுவே இல்லேன்னு நேரடியா விசயம் சொன்னா, அது மனசிலே நிற்கவே நிற்காது.

    கண்ணன் இப்ப சொல்லப் போறது பக்தி யோகத்தை.  பக்தி யோகத்தை ஏழாவது அத்தியாயத்திலேர்ந்து விரித்துரைக்கப் போகிறான்.  அதை நேர ஏத்திடலாமா?  முதலில் அதை நேர ஏற்றுவதற்கு முடியாது.  ஏன்னா ஆத்மாவைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டாதான் பரமாத்மாவைப்பற்றி தெரியும்.  அதனாலே முதல் நிலையில் ஆத்மாவைப்பற்றிச் சொல்லி, ஆத்ம சாட்ஷாத்காரத்தின் பெருமைகளை உரைத்து, அதை அடைவதற்கு கர்ம, ஞான யோகங்களே வழி, அப்படிங்கறதையும் பெருமாள் எடுத்துச் சொல்லிட்டார்.  அந்த கடைசி ஸ்லோகம் வரும் போது, அந்த கர்ம, ஞான யோகங்கள் யார் பண்ணுகிறானோ, அவன் உயர்ந்தான் அல்லன்.  பின்னே யார் உயர்ந்தவன்னு அர்ஜுனன் கேட்கிறார்.  ‘மத்கதேந அந்தராத்மந ஸிரத்தாவான் பஜதே யஹா மாம்’ – யார் ஒருத்தன் சிரத்தையோடே என்னிடத்திலேயே நெஞ்சு செலுத்தி என்னை அடைவதற்காக முயற்சிக்கிறானோ அவன்தான் சிறந்த யோகி. அவன்தான் சிறந்த ஞானி.’

    அப்போ முதலிலே கர்ம யோகத்தைச் செய்து, ஆத்ம சாட்ஷாத்காரம் பெற்று, அந்த ஆத்மா எப்படிப்பட்டதுங்கிற விசாரம் வந்து, வெறும் ஞானமயன், ஆனந்தமயன், சுதந்திரன் மட்டுமல்ல, பகவானுக்கு அடிமை, அவனுக்கும் இவனுக்கும் நெருங்கின தொடர்பு, அவனன்றி இவனில்லை, இவனன்றி அவனில்லை, அவன் ஆத்மா, இவன் சரீரம், இவன் இருப்பதே அவனுக்காக, இவனுடைய வாழ்க்கையே அவனுக்காக, இவன் அவனுக்குத் தொண்டு புரிவதற்கே இருக்கிறான், அதை என்று புரிந்து கொண்டு செய்கிறானோ, மறுபிறவி எடுக்க வேண்டிய தேவையில்லை.  அவன் இருக்கும் இடம் ஏதோ, அதை அடைவதுதான் இவனுக்கு இருக்கும் கடைசியான லட்சியம்.  இந்த அர்த்தங்களெல்லாம் இவன் புரிஞ்ச்சுக்கணுமோல்லையோ?  அதனாலதான் ஏழாவது அத்தியாயத்திலே பேசறதுக்கு ஆரம்பிச்சார்.  இவ்வளவு நேரம் ஆத்மாவைப் பற்றிச் சொல்லிண்டு வந்தவர், அப்படியே விட்டுட்டார்.  விட்டுட்டு ஏழாவது அத்தியாயம் தொடங்கித்து, தன்னைப் பற்றி ‘ஓகோ’ன்னு பேசிக்க ஆரம்பிச்சுட்டார்.  அர்ஜுனன் பார்த்தார், ‘என்ன திடீர்ன்னு உன்னைப் பத்தி பேசிக்கறயே’ன்னா, ‘ஆச்சு, உன்னைப் பத்தி ரொம்ப நேரம் பேசிட்டேன், இனிமே என்னைப் பத்தி பேசிண்டாதான உண்டு. எவ்வளவு நேரம் ஆத்மாவைப் பத்தியே சொல்லிண்டு இருக்கறது?  இந்த உயர்ந்த ஆத்மான்னு புரிஞ்சிண்டியே அர்ஜுனா, அந்த ஆத்மாக்கள் கோடி, கோடி, கோடி, கோடிப் பேர்கள்.  இந்த இத்தனை ஆத்மாக்களையும் என்னுடைய திருமேனியின் ஒரே ஒரு சிறு மயிர்க்காலாலே தாங்குகிறேன்.  எத்தனை உலகங்கள் உண்டோ, எத்தனை தேவதைகள் உண்டோ, எத்தனை ஆத்மாக்கள் உண்டோ, அவர்கள் அத்தனை பேரையும் நான் தாங்குகிறேன் அர்ஜுனா.  ’விஷ்டப்யாகம் இதம் க்ருஷ்ணம் ஏகாம்ஸேன ஸ்திதோ ஜகது’, என்று தன்னுடைய பெருமைகள் அத்தனையும் ஏழாவது அத்தியாயத்திலே சொல்ல ஆரம்பிக்கிறார்.

    இது எதுக்கு இப்போ?  ஏனெனில் யாரொருத்தருடைய பெருமைகளைப் பற்றி நாம நிறையத் தெரிஞ்சிக்கிறமோ, தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்கத்தான் அவரிடத்திலே நமக்கு ஈடுபாடு வரும்.  இது உண்மைதானே?  இப்போ ஒருத்தரிடத்திலே எனக்கு ஈடுபாடு வரணும்ன்னு வச்சுக்கங்கோ, அவர் எவ்வளவு உயர்ந்தவர், எவ்வளவு வேண்டியவர், எனக்கு எத்தனை நல்லதுகள் பண்ணியிருக்கார், நமக்குன்னே இருக்கார். அப்போ அவருக்குன்னே நாம இருக்கணும்ன்னு தோண வேண்டாமா?  அதைப்பற்றி முதல்ல அர்ஜுனன் புரிஞ்சுக்கணுமோல்லையோ?  அதனால தான் அன்றி லோகத்திலே அணுவும் அசையாது, தானேதான் அத்தனையும், அப்படிங்கறத ஏழாவது அத்தியாயத்திலேர்ந்து பேச ஆரம்பித்தார்.

    மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்த்திநா |
    மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித: || (9.4)

    ந ச மத்ஸ்தாநி பூதாநி பஸ்ய மே யோகமைஸ்வரம் |
    பூதப்ருந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந: || (9.5)

    இந்த உலகம் அத்தனையும் என்னுதான் அர்ஜுனா. அப்படியா, நீ என்ன தேரோட்டியா தானே உட்கார்ந்திட்டிருக்கே, திடீர்ன்னு என்னமோ உலகம் அத்தனையும் உன்னுதுன்னு சொல்றியே? நீ யாரு, உலகம் யாரு, எப்படி சம்பந்தம், என்று அர்ஜுனன் கேட்க, முதல் சில ஸ்லோகங்கள் ரொம்ப ஆச்சர்யமான ஸ்லோகங்கள். இதன் அர்த்தம் புரிஞ்சாத்தான் நாம ஏன் பகவான்கிட்ட பக்தி பண்ணனும்னே தெரியும்.

    பூமிராபோ நலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச |
    அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா || (7.4)

    அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
    ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் || (7.5)

    ஏ மஹாபாஹோ அர்ஜுனா, உண்மையைத் தெரிந்து கொள்.  பூமி, ஆபஹா, அனலஹா, வாயுஹு, புத்தி, என்னென்ன உண்டோ, லோகத்தில உள்ள அத்தனைத் தத்வங்களும் என்னுடையவை.  இதெல்லாம் என்னுடைய சொத்து.  அசித் தத்வம் முழுக்க என் சொத்து.  சித் ஆன ஆத்மா அத்தனையும் என் சொத்து.   அவை அத்தனையும் நான் இன்றி அசைவதற்குக்கூட இயலாது.  இவற்றைப் படைப்பதோ, காப்பதோ, அழிப்பதோ, நான்.  இவற்றை இத்தனையும் தாங்குவது நான்.  இதற்குக் காரணமே நான்.

    அப்போ சித் ஆகட்டும், அசித் ஆகட்டும், அவனுடைய சொத்துன்னால், சொத்து ஸ்வாமிக்காகத்தானே இருக்கணும்?  அதை விட்டுட்டு நான் சுதந்திரன்னு நினைத்தால், அது கூடாது,  நீ பரதந்திரன். சேஷத்துவம், பாரதந்திரியம், இந்த ரெண்டு சொல் அவசியம் நாம தெரிஞ்சுக்கணும்.  கீதை புரியணும்னா, இந்த ரெண்டு சொல் தெரியணும்.  சேஷத்துவம்ன்னால், பகவான் சேஷி, நான் சேஷன்.  சேஷன்னால் அடிமைன்னு அர்த்தம். அடிமைன்னு தெரிஞ்சுண்டால் என்ன செய்ய வேண்டும்?  கைங்கர்யம் பண்ண வேண்டியதுதான் ஒரே பயன். ஆத்மா தவிக்கிறதுக்குக் காரணம், ஆண்டானுக்கு அடிமை தொண்டு புரிவதை விட்டுவிட்டு, ஏதேதோன்னு சுத்திண்டு இருக்கிறபடியாலே, இவனால ஆனந்தத்தை அனுபவிக்கவே முடியறதில்லே.  நம்ம ஸ்வாமி பகவான், அவனுக்கு நான் தாசன், தாசன் ஸ்வாமிக்கு கைங்கர்யம் பண்ணப் போறார், அப்படிங்கற எண்ணம் நமக்கு எப்பவாவது வரணுமோல்லையோ?  அது வந்ததுன்னாத்தான் பக்தி பிறக்கிறதுன்னே அர்த்தம். அதனாலே பக்தி, பக்தின்னு கைங்கர்யம் இல்லாத பக்தியைப்பத்தி பேசவே கூடாது.

    கண்ணன் தெரிவித்தார், ‘உலகமே என்னுடையது என்று தெரிந்து கொண்டு, என்னைப்பத்தி சிந்திக்க ஆரம்பி. உன்னுடைய ஸ்வாமின்னு தெரிந்து கொள்.  எனக்குக் கைங்கர்யம் பண்றதுதான் உனக்குப் புருஷார்த்தம்ன்னு தெரிந்து கொள்.’, என்று ஏழாவது அத்தியாயத்தினுடைய ஆரம்பத்திலே சொல்ல ஆரம்பிக்கிறார். அப்ப ஒரு ஸ்லோகம் சொல்லியிருக்கார்.

    மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே |
    யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்த்வத: || (7.3)

    ’மனுஷர்கள் ஆயிரம் பேருக்குள்ள அர்ஜுனா, ஒருத்தன்தான் என்னை அறியனும்ன்னு முற்படுகிறான். அந்த அறிய முற்பட்டுத் தேடுதலில் இருக்கும் ஆயிரம் பேருக்குள்ள ஒருத்தன்தான், தேடுதல் வேட்டைல என்னைக் கண்டுபிடிக்கிறான். கண்டுபிடிச்சதில ஆயிரம் பேருக்குள்ள ஒருத்தன்தான் என்னை நெருங்குகிறான். நெருங்கினதில ஆயிரம் பேரில ஒருத்தன்தான் என்னை அடைகிறான்.’

    அவ்வளவுதான். அப்படின்னா சல்லடையைப் போட்டு நாம பார்க்க வேண்டியதுதான் இப்போ. அவரு சொல்லியிருக்கதிலே, 1000-ல், 1000ல், 1000ல், 1000. இத்தனை பேரில் ஒருத்தன் என்னை அடையப் போகிறான் என்று சொன்னால், அந்த பக்தி எவ்வளவு துர்லபமானது? எவ்வளவு உயர்ந்தது? இதைப் புரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காகத்தான் கண்ணன் பேசவே ஆரம்பித்தார்.

    ஒன்பது விதமான சம்பந்தங்கள் பகவானுக்கும் நமக்கும் உண்டு. பிள்ளை லோகாச்சார்யர் நவவித சம்பந்தம்ங்கிற இடத்திலே தெரிவித்தார்.

    பிதாச ரக்சஹஸேஷி பர்த்தாக்ஞேயோ ரமாபதிஹி
    ஸ்வாம்யாதாரோ மமாத்மாச போக்தாச்சாத்ய மனூதிதஹா

    பிதாச – அவர் தகப்பன், நான் பிள்ளை; ரக்சஹஹா – அவர் காப்பவர், நான் காக்கப்படுபவன்; சேஷி – அவர் ஆண்டான், நான் அடிமை; பர்த்தா – அவன் கணவன், நான் மனைவி; ஞேயஹா – அவன் அறியப்படுவன், நான் அறிபவன்; ரமாபதிஹி – அவர் ஸ்வாமி, நான் தாசன்; ஆதாரஹா – அவர் எல்லாம் தாங்கறவர், நான் தாங்கப்படுபவன்; ஆத்மா – அவர் ஆத்மா, நான் சரீரம்; போக்தா – அவர் அனுபவிப்பவர், நான் அனுபவிக்கப்படுபவன்;  இப்படி ஒன்பதுவிதத் தொடர்பு ஒழிக்க ஒழியாத தொடர்பு.  இந்த தொடர்பை யாராலும் வெட்டிவிடவே முடியாது.  ஏன் பகவானாலே ஒன்று முடியாதென்றால், அது இதுதான்.  அவரால்கூட இந்தத் தொடர்பை வெட்டிவிட முடியாது.  இதைத் தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்கத்தான் பக்தியே வளரும்.

    அப்போ நமக்கும் அவருக்கும் தொடர்பு போகாது.  நம்மைத் தாங்குபவர் அவர், படைப்பவர் அவர், ஜகத்துக்கே காரணம் அவர், ஸ்ரீயப்பதி அவர், நித்ய சேஷ சாயி அவர், உலகத்துக்கெல்லாம் படைப்பும், அழிப்பும் காரணமாய் இருக்கறவர் அவர், அழகான திருமேனி படைத்தவர் அவர், சௌந்தர்யம், மாதுர்யம், லாவண்யம், காம்பீர்யம், ஸ்தைர்யம், வீர்யம், பராக்ரம், வாத்ஸல்யம், சௌசில்யம், ஸ்வாமித்வம், சௌலப்யம், இப்படி என்னென்ன கல்யாண குணங்கள் உண்டோ, அத்தனை குணங்களும் படைத்தவர் அவர், என்று மேலும், மேலும், மேலும் அவன் எங்கே, எங்கே, எங்கே, எங்கேன்னு உயர இருக்கிறதைத் தெரிஞ்சிண்டாதான், ஓ, நான் இங்கே, இங்கே, இங்கேன்னு கீழ இருக்கிறதே தெரியும்.  அவர் எங்கு இருக்கிறார் மேலேன்னு நாம தெரிஞ்சுக்கலே, நாம மேல இருக்கறதா நினைச்சுடுவோம்.  ஆண்டான் எவ்வளவு உயரத்துல இருக்கார்ன்னு தெரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்கத்தான் அடிமை எவ்வளவு கீழ இருக்கார்ன்னு தெரியும்.  ஒண்ணும் பயப்படறதுக்காகச் சொல்லலை இப்போ.  ஆண்டாள் தெரிவித்தாள், ‘நீ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன், நாங்கள் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம்.’  நீ குறை ஒன்று இல்லாத கோவிந்தனா இரு, நாங்கள் அறிவே இல்லாதவாளா இருக்கோம்.  நாங்கள் இப்படியே இருந்து உனக்கு கைங்கர்யம் பண்ணிண்டே இருக்கோம். ரொம்ப சுலபமா முடிச்சுடலாம் இதை.  இந்தப்பக்கம் மேடு, இந்தப்பக்கம் பள்ளம்.  நடுவுல ஒரு பாதை பண்ணனும்னா என்ன பண்ணலாம்?  மேட்டை வெட்டி பள்ளத்துல போட்டுட்டா பாதையாயிடாது?  கண்ணன் மலையாட்டம் குணங்களோடு இருக்கார், நான் மடுவாட்டம் ஒன்றும் இல்லாம, தோஷங்களோடு இருக்கேன்.  அவர் குணங்ள்ல ரெண்டு எடுத்து என் தலையில போட்டுட்டார்ன்னா, நான் அவருக்கு கைங்கர்யம் பண்ண ஆரம்பிச்சுருவேன். எவ்வளவு சமமாகக்கூட கண்ணனை அழைத்து வரலாம்.

    ஆக தான் யார்ங்கிறதை ஏழாவது அத்தியாயத்தில் சொல்லி, இந்த பரமாத்மாவை அறிந்து, அடைந்து, கைங்கர்யம் பண்ணுவதே ஜீவாத்மாவுக்குப் புருஷார்த்தம், என்று சொன்னார்.  புருஷார்த்தங்கள் நாலு.  தர்ம, அர்த்த, காம, மோட்சம்.  இதில் கடைசியாச் சொன்ன மோட்சம்தான் உயர்ந்த புருஷார்த்தம்.  அது ஏதெனில், பகவானை அறிந்து, அடைந்து, அவனுக்குக் கைங்கர்யம் பண்ணுதல்.  இதை அடைவதற்கு ஏது வழி?  கீழே ஆத்ம சாட்ஷாத்காரத்துக்கு ஏது வழி என்று கேள்வி கேட்டுண்டு, கர்ம, ஞான யோகங்களே வழின்னு பார்த்துட்டோம்.  இப்போ அடுத்த நிலைக்கு போகனுமோல்லையோ? பரமாத்ம சாட்ஷாத்காரத்துக்கு. ஆத்மாவுக்குள்ளும் இருந்து, அவரை இரட்சிக்கக்கூடிய பரமாத்மா, அவரை அடைவதற்கு ஏது வழியென்றால், பக்தியோகம் வழி, என்று ஏழு, எட்டு, ஒன்பதாகிற மூன்று அத்தியாயங்களாலே தெரிவிக்கிறார்.

    கர்ம, ஞான யோகங்களை அங்கமாக் கொண்டு பக்தி பிறக்கும். பக்தியை உபாயமாகக் கொண்டு மோட்சம் பிறக்கும். பரமாத்ம சாட்ஷாத்காரம்ங்கிறது உயர்ந்த நிலை. அதை அடைவதற்க்கு பக்தி யோகம். பக்தி யோகம் பண்ணுவதற்கு ஆத்ம சாட்ஷாத்காரம் வேணும், ஆத்ம சாட்ஷாத்காரம் அடையணும்ன்னா, கர்ம, ஞான யோகங்களைச் செய்ய வேண்டும்.

    இப்போ ஒரு முக்கியமான கேள்வி. பக்தி முற்றி ஞானமா? ஞானம் முற்றி பக்தியா?  இப்ப நீர் சொன்னதைப் பார்த்தா ஞானயோகத்துக்கு அப்புறம்ன்னா பக்தின்னு சொல்றீர்ன்னா, ஆமாம், கண்ணன் அப்படித்தான் சொல்லியிருக்கார்.  கண்ணன் கீதையிலே ஆறு அத்தியாயங்கள் வரைக்கும் கர்ம ஞான யோகங்களைச் சொல்லிட்டார்.  அதுக்கு அப்புறம் ஏழாவது அத்தியாயத்திலிருந்துதான் பக்தியைப் பற்றியே பேசுகிறார்.  அதனாலே ஞானமோ, கர்மமோ தாழ்ந்தவை.  அதைவிட பக்தி மிக, மிக உயர்ந்தது.  ஞானத்தைவிட பக்தி உசந்ததா, ஞானமார்க்கம் வேறயா, பக்தி மார்க்கம் வேறயான்னா, ஒண்ணும் வேற இல்லே.  ரெண்டும் ஒண்ணுதான்.  ஏன் அப்படிச் சொல்றான்னா, பக்திச்ச ஞான விஷேஷஹா, பக்திங்கறது ஞானமே முதிர்ந்த நிலை, கனிந்த நிலை.

    முதல்ல நாம இது இத்தனையும் தெரிஞ்சிண்டாதான், இந்த மூடத்தனமான பாவனையே (பகவானைப் பற்றி பாடுதல், ஆடுதல், நாம சங்கீர்த்தனம் பண்ணுதல்) வரும்.  ஞானமார்க்கத்தைக் கடந்தோம்னாத்தான் பக்தி பாவனையே நமக்குக் கிட்டும்.  ஆக முதலில் கர்மங்களைச் செய்து, ஞானத்தோடு கர்மங்களைச் செய்து, ஞானம் முற்றி பக்தி பிறந்து, பிற்பாடு பக்தியோகத்தாலே பகவானை அடைகிறோம்.  நமக்கு சந்தேகம் வரும், சாஸ்திரம் என்ன சொல்லியிருக்கு?  பகவானைப்பற்றித் தெரிந்து கொள், அந்தத் தெரிகையினால உனக்கு மோட்சம்.  ‘ததா வித்வான் தத் ப்ரம்யேதி ஸதபோதப்யத ப்ரம்மமிது ஆப்நோதி பரம்’ – ப்ரம்மத்தை எவன் ஒருத்தன் அறிந்து கொள்கிறானோ, பரம் ஆப்நோதி - அவன் ப்ரம்மத்தையே அடைந்து விடுகிறான்.  அப்போ அறிகை, வேதனம், உபாசனம், த்யானம், இந்த அறிதலாகிற ஞானம்தானே மோட்சத்துக்கு மார்க்கமாகச் சொல்லப்பட்டிருக்குன்னா, வாஸ்தவம்.  முதல்ல ஒரு விஷயத்தைப் பத்தின ஞானம் ஏற்படும்.  அந்த ஞானமே முற்றுவதற்கு ஆரம்பிக்கும்.  ஞானம் முற்ற, முற்ற, அந்த விசயத்தைப்பற்றி நிறையத் தெரிய, தெரிய என்ன ஆகும்?  அதைப்பத்தியே நினைக்க ஆரம்பிப்பமா?  ஒருத்தரை ரொம்ப பிடிச்சுருக்குன்னு வைச்சுக்கங்கோ, அவரைப் பத்தி என்னென்ன நன்மையோ எல்லாத்தையும் நான் தெரிஞ்சுக்கணும்.  தெரிஞ்சிண்ட பிற்பாடு அவர் பாடுல ஒரு ஈடுபாடு, ஈர்ப்பு ஏற்படுகிறது.  அந்த ஈர்ப்பு விடாம இருக்க இருக்க, அவரைப்பத்தியே பேசுவென், அவரைப் பத்தியே நினைப்பேன், அவரைப் பத்தியே என்ன வேணுமோ முயற்சி எடுப்பேன், இது நாம பேசறச்சேகூடத் தெரியும்.  ஒருத்தரை ரொம்ப எனக்குப் பிடிச்சிருக்குன்னு வச்சுக்கங்கோ, எதப்பத்தி பேசிண்டிருந்தாலும் அவர்கிட்ட கொண்டுபோய் முடிச்சிடுவா.  அதைப்போலத்தான் இங்கேயும்.  முதல்ல ஒரு விஷயத்தில ஈடுபாடு ஏற்பட்டது.  அப்போ திரும்பத் திரும்ப அதைப்பத்தியே நினைச்சேன்.  இந்த நினைவுங்கிறதுதான் தியானம்.  அறிவு இருந்தாத்தான் நினைவே வரும்.  அறிவுங்கிறது, இப்போ இது ஜமக்காளம், அப்படின்னு தெரிஞ்சுக்கிறது அறிவு.  இது ஓஹோன்னு காஷ்மீரத்துல பண்ணப்பட்டிருக்கு, இந்த ஒரு சதுர அடியே ஒரு இரண்டு லட்ச ரூபாய் இருக்கும், இதுல உட்கார்ந்துண்டிருக்கவாளுக்கெல்லாம் கீதை தெரிஞ்சுரும், இப்படியெல்லாம் ஏதானும் எனக்கு இதைப்பத்தி தெரிஞ்சு போச்சுன்னு வைச்சுக்கங்கோ, அதன் பேரில் எனக்கு ஈடுபாடு ஜாஸ்தியாப் போய்டும்.  வீட்டுக்குப் போன பிற்பாடும், அந்த கம்பளம் எப்பக் கிடைக்குமோ, அந்தக் கம்பளம் எப்பக் கிடைக்குமோ, இப்படின்னு நினைச்சிண்டே இருப்பேன்.  யாராவது வேற ஏதானும் பேச வந்தா, பேசாம இரும், நானே கம்பளத்தைப் பத்தி நினைச்சிண்டு இருக்கேன், நீ எதுக்கு என்னை இப்போ கூப்பிடறேன்னா, இது ஒரு உதாரணம்.

    அதேபோல இப்போ கண்ணனுடைய வைபவங்களைத் தெரிஞ்சுனுட்டோம்னால், அப்ப மனசு அவனிடத்தில ஈடுபடுகிறது.  ஈடுபடுவது நினைவாகத் தொடருகிறது.  நினைவின் தொடர்ச்சி தியானமாக ஆகிறது.  அந்த தியானம்ங்கிறது மெதுமெதுவே நீடித்து எந்தவித இடையூரும் இல்லாமல், தைலதாராவது அவிச்சின்ன ஸ்மிருதி சந்தான ரூபமாகும்.  இது பக்திக்குண்டான நேர் விளக்கம்.  தைலதாராவது அவிச்சின்ன ஸ்மிருதி சந்தான ரூபம். ஸ்மிருதி – நினைவு, நினைவின் தொடர்ச்சி (நினைவு, நினைவு, நினைவு). நினைவின் தொடர்ச்சி மட்டுமல்ல, இடையூறு இல்லாமல் நினைக்க வேண்டும்.  வேற யாராவது குறுக்க வந்து என்னைத் தட்டினாக்கூடத் தெரியாது. ஒரே நினைவு.  அப்போ பகவான் அங்கேயிருக்கார், நாம இங்கேயிருக்கோம், ஒரு பாலமிட்டாற்போல நினைவு.  அந்தப் பாலம் எப்படி இருக்கணுமாம்?  தைல தாரையைப் போல இருக்கணும்ங்கிறா. ஒரு பாத்திரத்தில ஜலத்தை ரொப்புங்கோ, இன்னொரு பாத்திரத்திலே எண்ணையை ரொப்புங்கோ.  ரெண்டு பாத்திரத்துக்கும் குழாய் வைங்கோ.  ஜலக்குழாயைத் திறங்கோ. பிசிறு பிசிறா, இங்க ஒரு கோடு, அங்க ஒரு கோடுமாய் ஜலம் பாயும்.  அதே எண்ணைக் குழாயைத் திறங்கோ. பிசிறே இல்லாது விழும்.  ஒரு ஆற்றொழுக்குப் போலே விழும்.  இதைப் போல இடையூறாது இல்லாத தியானம் வேண்டும்.  அது மட்டும் இருந்தாப் போறாது, பக்திக்கு இன்னும் கொஞ்சம் வேணும்.  பகவானைப் பத்தி வெறும் தியானம் பண்ணிட்டாப் போறாது, அதிலே ஸ்நேகத்தைச் சேர்க்க வேண்டும்.  ஸ்நேகம்ங்கிறது, அன்பு, காதல், வேட்கை, அவா, பிரதிபக்தி, ஈடுபாடு, நினைவு, எப்படி வேணும்னாலும் வைச்சுக்கங்கோ. அவனிடத்தில இருக்கிற அன்பும், காதலும், வேட்கையும், அதைக் கலக்கணும்.

    அப்போ, நினைவு, நீடித்த நினைவு, ஒரே நினைவு, இடைவிடாத நினைவு, நினைவில் அன்பு கலக்கிறது, அது பக்தியாக ஆகிறது. அந்த பக்தன் எப்படி இருப்பனாம்?

    ஸததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:
    நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே. (9.14)

    அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே
    தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகஷேமம் வஹாம்யஹம் (9.22)

    ’ஹே அர்ஜுனா, அந்த பக்தன் யாரொருத்தன் என்னைத் தியானிக்கிறானோ, அவன் நெஞ்சு என்கிட்டதான் இருக்கும்.  அவன் வாய் என்னைத்தான் பேசும், அவன் கண் என்னைத்தான் பார்க்கும், காது என்னைத்தான் கேட்கும், அவன் கை என்னைத்தான் தொழும், அவன் கால்கள் என்னுடைய சன்னிதானத்தை நோக்கித்தான் நடக்கும், வேறு சிந்தனை அவனுக்கு இருக்காது.  சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும், கண்ணனேன்னு இருக்கிறான்.  வேறே அவனுக்கு தாரகமோ, போஷகமோ, போக்யமோ கிடையாது. நான் இல்லாவிடில் அவன் வாழ மாட்டான்.  ஒரு நிமிஷம் நான் இல்லைன்னு அவனுக்குத் தெரிந்தால் அடுத்த நிமிஷம் உயிரையே விட்டுவிடுகிறான்.  இந்த பக்தன் எனக்கு ரொம்ப நெருங்கினவன்.  இது ஒரு ஜென்மம், ரெண்டு ஜென்மத்திலே வராது அர்ஜுனா, ஜென்மாந்திர சஹஸ்ரங்கள் போக வேண்டும்.  ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கழித்து என்றோ என்னிடத்தில் வருகிறான்.  அந்த பக்தன் என்னிடத்தில எத்தனை அன்பைக் காட்டறானோ அர்ஜுனா, அதிலே பத்திலே ஒரு பங்கை திருப்பனும்ன்னு நான் நினைக்கிறேன், என்னாலே அது முடியலே.  அவன் காட்டுற பக்தி மிக உயர்ந்ததா இருக்கு, ஆனா நான் காட்டும் சிநேகம் ரொம்ப சாதாரணமா இருக்கு’, என்று கண்ணன் தானே ஆசைப்பட்டு, தன்னை மறந்து போய் ஏழு, எட்டு, ஒன்பதாவது அத்தியாயத்திலே, தன் பக்தன் எப்படி தன்கிட்ட நடந்துக்கிறான், எப்படி ஒன்றும் எதிர்பார்க்காம பக்தன் நடந்துக்குறான்னுட்டு ஸ்லோகம், ஸ்லோகமா பண்ணிப்பண்ணித் தெரிவிக்கிறார்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto)

    பக்தி என்பது என்ன? – பாகம் 1

    அப்போ உடம்பு வேறே, ஆத்மா வேறே. இந்த முதல் தேடுதலை முடிச்சுட்டோம்னா, ஓ, அப்ப இந்த தேகத்தைவிட ஆத்மா உசந்ததா இருந்தா, இந்தப் பிறவில இந்த சரீரத்துக்குள்ள இருக்கார்ன்னா, அப்போ முன்னாடி நான் எங்கிருந்தேன்? அப்புறம் எங்கு இருக்கப் போகிறேன்? இந்த சரீரம் முடிஞ்சு போச்சுன்னா, அப்போ ஆத்மா எங்க போவர்? அவர் திரும்பி வருவரா, போவரா, மாட்டாரா?  இந்த முதல் கேள்வி நம்மளைப் பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சுரும்.

    அடுத்த கேள்வி, இந்த உடம்பேதான் நான்னு நினைச்சிண்டிருக்க வரைக்கும் சரி, ஆனா இந்த உடம்பைக் காட்டிலும் நான் வேறயாமே?  அப்படின்னா, நான் ஏன் உயர்ந்தவனா பிறந்தேன்?  நான் ஏன் தாழ்ந்தவனா பிறந்தேன்?  நான் ஏன் படிச்சவனா இருக்கேன்?  அவர் ஏன் படிக்காதவரா இருக்கார்?  அவர் ஏன் பணக்காரரா இருக்கார்?  நான் ஏன் ஏழையா இருக்கேன்?  இந்த வித்தியாசமே நமக்குப் புரியாது.  அப்போ ஏதோ காரணத்தினாலே ஒருவர் உயர்த்தியாகவும், மற்றொருத்தர் தாழ்ந்தவராகவும் பிறக்கிறார்.  இதற்கு ஏது காரணம்ன்னு தெரியலே.  ஒரு பக்கம் உடம்பிலேர்ந்து ஆத்மா வேறேன்னு தெரிஞ்சுகிட்டோம்.  ஆத்மா அழியாததுன்னு தெரிஞ்சுகிட்டோம்.  சரீரம் அழியக்கூடியதுன்னு தெரிஞ்சுகிட்டோம்.  அழியாத ஆத்மா எங்கு செல்லுகிறார்?  நேற்று எங்கு இருந்தார்?  நாளை எங்கு செல்லுவார்?  அந்த ஆத்மா இந்த உடம்பை எடுத்துண்டு இருக்காரே,  ஏன் வேற ஒரு உடம்பை எடுத்துக்கலே?  இப்ப சிங்கமா பிறந்திருக்காரே, ஏன்? புலியாப் பிறந்திருக்காரே, ஏன்?  மனிதனாப் பிறந்திருக்காரே, ஏன்?, அப்படிங்கற கேள்வி ஏற்படறது.

    இல்லேல்லே, ஏனோ பிறந்தார் அப்படின்னு சொல்லிட்டோம்னால், இந்த ‘ஏனோ’ங்கிறதுக்கு உலகத்திலே மதிப்பே கிடையாது.  காரிய, காரணம்ங்கிறது சேர்ந்தேதான் இருக்கணும்.  ஒரு காரணம் இருந்தால்தான் காரியம் பிறக்கும்.  காரணமும் காரியமும் தொடர்பாக இருக்க வேண்டும்.  காரணமே இல்லாம காரியம் நடக்கும்ன்னு வச்சுக்கங்கோ, காரணத்துக்கும் காரியத்துக்கும் தொடர்பே இல்லேன்னா, உலகத்துல என்ன தெரியுமா ஆகும்?  எனக்கு இப்ப தொண்டை கட்டித்துன்னால், நீங்க மருந்து சாப்பிட்டா எனக்கு சரியாகனும்.  ஆனா அப்படி ஆகறதா தெரியலே.  ஏன்னா காரணத்துக்கும், காரியத்துக்கும் தொடர்பில்லையோல்லையோ? காரணம், நீங்க மருந்து சாப்பிட்டது. காரியம், என்னோட தொண்டை வலி சரியாப் போறது.  நான் மருந்து சாப்பிட்டாத்தான் எனக்குத் தொண்டை வலி சரியாப் போகனும்.  அப்பதான் காரணமும், காரியமும் ஓர் இடத்திலே இருக்குன்னு அர்த்தம்.  அதை விட்டுட்டு, காரணம் எங்கயோ இருக்கும், காரியம் எங்கயோ இருக்கும்ன்னு இருக்கக்கூடாதோல்லையோ?

    அப்போ எனக்கு என்ன தோன்றதுன்னா, இந்தப் பிறவியில நான் உயர்ந்ததா பிறந்ததுக்கும், தாழ்ந்ததாப் பிறந்ததுக்கும் காரணம் வேற யாரோ ஒருத்தரா இருக்க முடியாதோல்லையோ?  நாந்தானே காரணமா இருக்கனும். நாந்தான் காரணம்ன்னால், நன்னாத்தானே இருந்தார் தர்மபுத்திரர், அவ்வளவு கஷ்டப்பட்டாரே? அப்போ அவர் காரணம்ன்னால், அவர் நல்லவரா இருந்ததுக்கு நன்னான்னா சுகமா இருந்திருக்கனும்?  அவர் ஏன் இந்த மாதிரி கஷ்டப்படறார்?  வாழ்நாள் முழுக்க எவ்வளவோ சுகப்பட்டானே துரியோதனன, அவன் நல்லவனாவே இருக்கலையே, துரியோதனன் கெட்டதா நடந்துண்டதுக்கு துரியோதனன் கஷ்டத்தை அல்லவோ அனுபவிச்சிருக்கனும்?  அப்போ, காரணமும் காரியமும் ஒத்துப்போகலையா? அப்படிங்கற கேள்வி ஏற்படும்.

    அதுக்கு சமாதானம், எப்படியும் ஆத்மா நித்யம், உடம்பைவிட வேறேன்னு முடிவு பண்ணிட்டோம், ஒருவேளை ஏற்கனவே ஏதாவது அவர் பண்ணின கஷ்டத்துக்காக இப்ப கஷ்டம் அனுபவிக்கிறாரோ?  ஏற்கனவே அவன் பண்ணின நல்லதுக்காக துரியோதனன் இப்போ சுகத்தை அனுபவிக்கிறானோ?  அந்த ‘ஏற்கனவே’ங்கிறது என்னதுன்னு நமக்கு நினைக்கத் தோணும்.  நான் இந்தப் பிறவியில் இந்த சரீரத்தை எடுத்து காரியங்கள் செய்வதைப் போலே, கடந்த காலத்தில் வேறு சரீரம் எடுத்திருக்கலாம், காரியங்கள் செய்திருக்கலாம். அதனுடைய தாக்குதல், நல்லதாகவோ, கெட்டதாகவோ இப்போ இந்த சரீரத்தோடு அனுபவிக்கிறேன்.  இதை நாம ஏற்றுக்கொள்ளவே இல்லேன்னு வைச்சுக்கங்கொ, நான் ஏன் இந்த மாதிரி பிறந்தேன்ங்கிறதுக்குக் காரணமே இல்லாம போய்டும்.  உலகத்தில் உள்ள எல்லா விசயங்களுக்கும் காரணம் உண்டு.  அந்த காரணம் இன்னொருத்தராகவும் இருக்கக் கூடாது.  அப்போ வேற வழியே கிடையாது, ‘பூர்வ ஜென்மம்’ங்கிறதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

    ஆத்மா மிகச்சிறியவர் என்று பார்த்தோம்.  எனவே அந்த ஆத்மா செயல்பட வேண்டுமென்றால், ஏதோ ஒரு சரீரம் இருந்திருந்தாத்தான். ஆத்மா ஏதோ செயல்பட்டிருக்கார்.  அதனாலதான் நான் இந்தப் பிறவியில கஷ்டப்படறேன், இல்ல, நல்லதா இருக்கேன்.  அப்போ அவர் செயல்பட்டிருக்கனும்ன்னா, ஏதோ ஒரு உடம்பை அவர் எடுத்திண்டு இருந்திருக்கனும்.  அப்போ ஆத்மா ஏதோ ஒரு உடம்பை எடுத்துட்டு, என்னத்தையோ சம்பாதிச்சுட்டு, அதனுடைய தாக்குதலினால நான் இந்தப் பிறவியிலே, நானேதான் அப்பவும் நானேதான் இப்பவும், அதே நான் அந்தக் கர்மத்தின் குணமாக இன்ப, துன்பங்களை அனுபவிக்கிறேன், அப்படிங்கிற முடிவுக்கு நாம வருகிறோம்.  இதான் நம்ம சம்ப்ரதாயப்படி, ‘கர்மா’ என்று சொல்லப்படுகிறது.

    நான் எத்தத்தனையோ பிறவி எடுத்திருக்கலாம், இது ஒரு பிறவிங்கறதே அல்ல.  இது ஏன் பல பிறவிகள் நாம முடிவு பண்ண வேண்டியிருக்குன்னா, இப்போ இந்த பிறவிக்குக் காரணம் போன பிறவின்னு பார்த்தோம்.  அப்போ போன பிறவிக்கு காரணம், கேள்வி வருமே?  அப்படின்னு கேட்டா, அதற்கு முன்பிறவி, அந்த முன்பிறவிக்குக் காரணம், அதற்கு முன்பிறவி, இப்படி போய்ட்டே இருக்கும்.  இதேபோல போய்ட்டு ‘முதல் பிறவி’ன்னு ஒன்று உண்டான்னு கேட்டால், இல்லை. அனாதிகாலம்.  ஏன் முதல் பிறவி என்று ஒன்று இல்லைன்னு கேட்டால், ஆத்மா என்னைக்காவது உருவாக்கப்படுபவர், ஆத்மா ஒருநாள் பிறக்குமவர்ன்னு இருந்தா, அப்போ அன்னிலேர்ந்துன்னு சொல்லலாம்.  இப்போதான் ஆத்மா நித்யம்ன்னு பார்த்திருக்கோம். எப்போ ஆத்மா நித்யமா இருக்காரோ, அப்போ அவர் பிறந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.  அவர் ஒருநாளும் புதுசா உருவாயிருக்க முடியாது.  அப்போ அனாதிகாலமான கர்மங்கள், அனாதிகாலமான திரும்பத் திரும்பப் பிறவிகள், இந்த துன்பத்திலதான் ஆத்மா கிடந்து தவிக்கிறார்.  இன்பமும் இருக்கு, துன்பமும் இருக்கு.  மாறி, மாறி இன்ப துன்பங்கள் வருகின்றன.  இதோடுகூட ஆத்மா பிறந்துண்டே இருக்கார்.  அப்போ இந்தச் சுழல் மாறுமா, மாறாதா?

    இந்த தேகத்திலேர்ந்து ஆத்மா வேறுபட்டவர் என்ற அடிப்படை ஞானத்தோடு ஏதோ செய்ய வேண்டியிருக்கு.  அதைச் செய்ய செய்யத்தான், இந்த தேகத்திலிருந்து ஒருதிரியாக விடுதலை ஏற்பட்டு, திரும்பி வராத இடத்துக்கு ஆத்மா செல்கிறார்.  முதல்ல அந்த மாதிரி ஒரேயடியா புறப்பட முடியுமா?  போனா போய்ச் சேருவதற்கு ஏதாவது இடம் இருக்கா?  நாம திரும்பி வரமாட்டோம்ன்னு எங்கயாவது சொல்லியிருக்கா?  இதைப்பத்தி யாரேனும் ஆராய்ந்திருக்கிறார்களா? எது பிரமாணம்?  ஏன்னா இப்போ போய் பார்த்துட்டு வந்தவன், ‘ஆமா, நான் வைகுண்டம்ன்னு ஒரு இடத்துக்கு நேத்திக்கு கார்த்தால போயிருந்தேன். ரொம்ப நன்னா இருந்தது எல்லாம் அந்த இடத்திலே.  அவசியம் அடுத்த வருஷம் நீங்களும் வாங்கோ’, அப்படின்னு சொல்றதுக்கெல்லாம் யாரும் போய்ட்டு வந்ததாத் தெரியலே.

    ஆனால் அதைச் சொல்லுவதற்கு பாரத தேசத்துக்கே சொத்தாக இருக்கிற வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவான் எம்பெருமானே அனுக்கிரகித்த பகவத் கீதை, இதைப் போன்ற எத்தனையோ சாஸ்திரங்கள், இதைக் கொண்டுதான் ஆத்மா யாரு, தேகம் யாரு, தேகமே ஆத்மாவா, தேகத்தைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவரா, இந்த விஷயங்கள் அத்தனையும் நாம தெரிஞ்சுக்கறதுக்கு எது பிரமாணம்?  பிரமாணம்ன்னால், எது கொண்டு உண்மை ஞானம் நமக்கு ஏற்படுமோ, அது பிரமாணம்.  அதன் அடிப்படையிலதான் உண்மையான ஞானம் ஏற்படும்.  ஒரு குழந்தை பிறக்கிறது, அதற்கு கொஞ்சம் வயசு வந்தவுடன் அதன் தாயார், ‘இதோ இவர் உன் தந்தை’ என்று சொல்லிக் குடுக்கிறார்.  அந்தக் குழந்தை மிகச்சிறியது, ஒன்னும் தெரியாது, பள்ளிக்கூடம் எல்லாம் போகலே.  அப்போ அந்தக் குழந்தை தந்தையைத் தெரிஞ்சிண்டதுக்கு தாயோட சொல்லுதான் பிரமாணம்.  அது மட்டுமல்ல, அவள் ஒருத்தியேதான் பிரமாணம். அவளைத்தவிர வேறு யாரிடத்திலிருந்தும் அந்த உண்மையை அந்தக் குழந்தை தெரிஞ்சுக்க முடியாது.  அதேபோல, இந்த தேகத்தைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவர், இந்த ஆத்மா யாரோ ஒருத்தருக்கு அடிமை, அவர் இருக்கிற இடத்துக்கு நாம போகப் போறோமா?  எப்படிப் போகும்?  பிறக்குமா, பிறக்காதா?  இது இத்தனையும் அறிவிக்கிறதுக்கு ஒரு பிரமாணம் வேண்டுமோல்லையோ?  அந்த பிரமாணத்தைத்தான் வேதங்கள், உபநிஷத்துக்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்று சொல்லுகிறோம்.

    எது சத்தியமான பிரமாணமோ, எது அசைக்கமாட்டாத பிரமாணமோ அது கொண்டு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  பகவானே தானே சொன்ன பிரமாணங்கள்தான் வேதங்களும், உபநிஷத்துக்களும்.  அவற்றுக்கு ‘அபௌருஷேயங்கள்’ங்கிற பெருமை, ’அனாதி’ங்கிற பெருமை.  வேதம் எதுவும் இன்ன தேதியில பிறந்தது என்கிற பேச்சே இல்லே.  பல ஆராய்ச்சியாளர்களெல்லாம் ரிக் வேதம் நாலு வேதங்களிலும் முதல், அது பிறந்து ஏழாயிரம் வருஷம் ஆச்சு, இப்படியெல்லாம் எழுதி வைச்சுருக்கா பாருங்கோ, அது அத்தனையும் தேவையற்ற வாதம்.  ரிக், யஜுஸு, சாம, அதர்வங்களுக்குள்ளே, ஒன்று முன்னது, ஒன்று பின்னதுங்கிறது தப்பான வாதம்.  இது ஏழாயிரம் வருஷம் முன்னதுங்கிறது அதைவிடத் தப்பான வாதம்.  இது எதுக்கும் காலக்கணக்கே கிடையாது.  அனாதி. இது ஒருத்தர் இல்லே, நாலு பேர் இல்லே, நானுறு பேர் இல்லே. அது சங்கரர் ஆகட்டும், மத்வர் ஆகட்டும், இராமானுஜர் ஆகட்டும், ஆழ்வார் அனைவரும் ஆகட்டும், பிரம்ம சூத்திரத்தையே எழுதின வேத வியாசர் ஆகட்டும், இவர்களைவிட மகா ஞானிகளைத் தேடிண்டு நாம போக முடியாது.  இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து சொல்லியிருக்கிறது, வேதம் அபௌருஷேயம், அனாதி.

    இதிகாச புராணாப்யாம் வேதம் சௌபப்ரம்மயேது
    விபேத்யல்பத்ஸ்ருதா வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி

    - வேதங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அதை மட்டும் படிச்சால் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்ன்னால், இதிகாச புராணங்களைச் சேர்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.  இவற்றைப் பிரமாணமாகக் கொண்டு உண்மை அறிவு ஏதுங்கிறதை நாம் பெற்றுவிடலாம, அப்படிங்கிறதுதான் நம்முடைய பெரியோர்கள் சாதித்து வைத்திருக்கிறது.

    இப்போ இந்த வேத, வேதாந்தங்கள் என்ன சொல்லியிருக்கு. அதை எப்படி கண்ணன் எம்பெருமான் கீதாச்சார்யனாக கீதையாகக் குடுத்தான் என்று பார்ப்போம்.  வேதங்கள் இருந்தாலும், அதன் அர்த்தத்தைச் சரிவரச் சொல்லுவதுதான் இதிகாச, புராணம்.  வேதம்ங்கிறது நாம இப்போ புஸ்தகத்திலே படிக்கிற மாதிரி. படிச்சுட்டா எல்லாம் பண்ணிப் பார்க்க வேண்டாமா?  பெருமாள் பார்த்தார், வேதத்தை மட்டும் குடுத்தா இவன் தெரிஞ்சுக்கப் போறதில்லே.  அதனால நானே பிறந்து நடந்து காட்டப் போறேன் என்று சொல்லி, பல பல அவதாரங்கள் பண்ணுகிறார்.  அந்தந்த அவதாரங்களைப் பண்ணி பல விஷயங்களை நடத்திக் காட்டுவர். நடத்தினதை அப்படியே எழுதி வைச்சதுதான், இதிகாசமும், புராணமும்.

    இதிகாசங்கள் இரண்டு, ஸ்ரீஇராமாயணம், மகாபாரதம். புராணங்கள் பதினெட்டு.  இதிகாசம் என்பது கதை நடக்கும் காலத்திலேயே எழுதப்பட்டது.  கதை மாந்தர்கள் உயிரோடு இருப்பர்.  வால்மீஹி பகவான் ஸ்ரீராமன் இருக்கும் போதே, அவரைப் பார்த்து ஸ்ரீராமாயணம் எழுதினார்.  வேத வியாசர் மகாபாரதத்தை அந்தக் கதை நடந்து கொண்டு இருக்கும் போதே எழுதினார்.  எனவெ இவை இதிகாசங்கள் எனப்படும்.  புராணம் என்பது கதை நடந்து முடிந்தபின், பின்னொரு காலத்தில் எழுதப்பட்டது.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto)

    ஜீவாத்மா

    நான்’ என்று சொல்லும்போதே அது ஆத்மாவைக் குறிக்கிறது. அதனாலே யாரும் ‘என்னுடைய ஆத்மா’ என்று சொல்லாதீங்கோ. ‘நான் ஆத்மா’வே தவிர, ‘என்னுடைய ஆத்மா’ அல்ல. ’என்னுடைய’ங்கிற சொல்லு வந்தாலே அது அசித்தாதான் இருக்கனும். என்னுடைய புத்தகம், என்னுடைய கை, என்னுடைய கால், இப்படி எல்லாமே அசிதாதான் இருக்கும். ’நான்’ என்று சொல்வது மட்டும் சித்தாக இருக்கும். நான் என்கிற ஆத்மாவுக்கு மட்டும் ஞானம் உண்டு, மற்ற அசிதுக்கெல்லாம் ஞானமில்லை.

    சித்தான ஜீவாத்மா எப்படி இருப்பர்? நான் ஜீவாத்மா என்று சொன்னீரே, நான் எப்படி இருப்பர் என்று கேட்டால், மிக மிக சூட்சுமமாக இருப்பர். சூட்சுமம்னால் மிகச்சிறியது. பெயரோ, உருவமோ சூட்டுவதற்கு இயலாது. எவ்வளவு சின்னவரா இருப்பர்ன்னு உபநிஷத்து சொல்றது. வாலாக்ர சதபாகஸ்ய சதபா கல்பிதஸ்யச. ஒரு நெல்லை எடுத்துக் கொண்டு நெல்லோட நுனியை மட்டும் சீவி எடுத்துவிட்டு, அந்த நுனியை நூறாக வெட்டி, அதில் ஒன்றை எடுத்து அதை நூறாக வெட்டினால், அது எவ்வளவு சின்னதாக இருக்குமோ, ஆத்மா அதைவிடச் சின்னதாக இருப்பர்.

    ஆத்மா எதாலே பண்ணப்பட்டிருப்பர்? நம்ம உடம்பு பஞ்ச பூதங்களாலே பண்ணபபட்டிருக்கு. ஆனால் ஆத்மா? ஞானமயன் ஜீவாத்மா. ஞானமே வடிவெடுத்தவராக இருப்பர். அவரே ஞானமயமாக இருப்பர், அதோடில்லாமல் அவருக்கு ஞானம் இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு விளக்கேத்தி வைச்சேள்ன்னு வச்சுக்கங்கோ, அதோட நெருப்போட ஜ்வாலை எரியறோதோல்லையோ, அது எதாலே பண்ணப்பட்டிருக்கு? நெருப்பாலே, ஒளியாலே பண்ணப்பட்டிருக்கு. அது எதை உமிழ்கிறது? ஒளியை உமிழ்கிறது. அதுவே ஒளியா இருக்கு, அது ஒளி குடுக்கிறதோல்லையோ? அப்போ அதுவே ஒளியா இருக்குங்கிறாப்போலே, ஆத்மாவே ஞானமா இருப்பர். விளக்கு ஒளி குடுக்கிறதுன்னு சொல்றாப்போலே, ஆத்மாவுக்கு ஞானம் இருக்கும். அப்போ ஆத்மாவிடத்திலே ரெண்டு ஞானம் இருக்குன்னு அர்த்தம். தானகவே இருக்கிற ஒரு ஞானம், தனக்கு இருக்கிற ஒரு ஞானம். இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னா, ஆத்மாங்கிற ஞானம், ‘நான், நான், நான்’ அப்படின்னு மட்டுமேதான் சொல்லும். வேற எதையுமே அது சொல்லிக் குடுக்காது. நான், நான், நான்னு அடிப்படையாச் சொல்லும். ஆத்மாவிடத்திலே இருக்கிற ஞானம், இது மண்டபம், இது ஆள், இது மரம் அப்படின்னெல்லாம் ஆத்மாவுக்கு உணர்த்தும். அப்போ உலகத்திலிருக்கிற எதைப்பத்தி ஆத்மா தெரிஞ்ச்சுக்கணும்னாலும், ஆத்மாவுடைய ஞானத்தாலே தெரிந்து கொள்ளும். இப்போ விளக்கு இருக்கு, அதனுடைய வெளிச்சத்தாலே ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக் கொள்ள முடியறது. ஆனால் அந்த விளக்கு எப்பவாவது தனக்குத்தானே, ‘நான் விளக்கு’ன்னு சொல்லிண்டிருக்குமா? அந்த சக்தி அதுக்குக் கிடையாதோல்லையோ? விளக்கின் வெளிச்சத்தாலே நாம் பொருளை அறியலாமே தவிர, விளக்கு தனக்கே காட்டும் சக்தி கிடையாதோல்லையோ? ஏன், அதுக்கு ஞானமே இல்லையே, இருந்தாத்தானே அது தனக்குத்தானே விளக்குன்னு சொல்லிக்க முடியும். ஆனால் ஆத்மாவுக்குப் பெருமை, மற்ற விசயத்தையும் அறிவிப்பர், தான் தான் என்று தனக்கே அறிவித்துக் கொள்ளுவர்.

    நான் நேற்று ராத்திரி படுத்துத் தூங்கினேன், இன்னைக்கு கார்த்தாலே எழுந்திருக்கிறேன். அகம் சுகமவாப்ஸம், நான் நன்னா சுகமாத் தூங்கினேன் அப்படின்னு ஒருத்தர் சொன்னார். எனக்கு ஒரே குறுகுறுப்பாப் போச்சு, இவரே நன்னா தூங்கிப் போய்ட்டார், அப்புறம் நான் சுகமாத் தூங்கினேன்னு எப்படி தெரியும்? நாந்தான் தூங்கிப் போய்ட்டேனோல்லையோ, நான் முழிச்சிண்டிருந்தாதான் சுகமா இருந்தேனா, துக்கமா இருந்தேனான்னு சொல்ல முடியும். நானே தூங்கி கார்த்தால எழுந்துட்டு, நான் சுகமாகத் தூங்கினேன்னு சொன்னா? சுகம், துக்கம் தெரியறதுக்கே வாய்ப்பில்லே, அவர் தூங்கிண்டிருக்காரே! வெடி வெடிச்சாலே தெரியலே தூங்கறச்சே, அப்படி இருக்கறப்போ, நான் சுகமா தூங்கினேனா, துக்கமா தூங்கினேனான்னு எப்படித் தெரியும்? எப்படித் தெரியறதுன்னால், ஆத்மா எப்போதும் ஞானத்தோடு இருக்கறதோல்லையோ? ஆத்மாவே ஞானம், ஏனைய விஷயங்கள், கண்ணைத் திறந்து பார்க்கற மற்ற விசயங்கள் மறைஞ்சு போய்டறது, தெரியலையே தவிர, நான், நான்னு உள்ளுக்குள்ள இருக்கிற எண்ணம் மட்டும் மறையவே மறையாது. இதுக்கு ‘அனுகூல ஞானம்’ன்னு பெயர். ஆத்மா எப்போதும் தனக்கு அனுகூலமாகத்தான் இருப்பர்.

    இதேபோல மற்றொரு சமயத்தில், ஏதோ நமக்கு அடிபடறது, விழுந்துட்டோம், ஆஸ்பத்திரில கொண்டு போய் நம்மளைச் சேர்த்துட்டா. எழுந்திருக்கிறோம். எழுந்திருக்கச்சே என்ன கேட்போம், ‘நான் எங்கிருக்கேன்?’ அப்படின்னு கேட்கறாரோல்லையோ? அப்போ எங்க இருக்கேன்னு தெரியறதில்லே, எப்படி இருக்கேன்னு தெரியறதில்லே, ஒண்ணும் தெரியறதில்லே. ’நான்’னு மட்டும் எப்படி சொன்னார் அவர்? நான் எங்கிருக்கிறேன்னு கேட்கறச்சே, எங்கிருக்கிறேன்னு கேட்கட்டும், ஆனா நான்-னு ஒரு வார்த்தை அங்க வந்ததோல்லையோ? அப்ப நான்–னு மட்டும் எப்படித் தெரிஞ்சது? எங்கிருக்கிறேங்கிறது தெரியறதுக்குத் தேவை, ஆத்மாவினுடைய ஞானம். நான்-னு தெரியறதுக்குத் தேவை ஆத்மாவான ஞானம்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – பக்தி உபந்நியாசம் – Toronto)