sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    December 15

    பிராட்டி பெருமானை பிரியாமலிருக்கும் தன்மை

    அழகு இருக்கு, இனிமை இருக்கு, போக்யத்துவம் இருக்கு, உரிமை இருக்கு.. சரி சுவாமி.. அவள் எப்பவாவது பிறந்த இடத்துக்கு போய்ட்டான்னா?  நான் சரணம்ன்னு போய் பெருமானிடத்தே நிக்கிறச்சே, அன்னைக்கு இல்லே. ’ஒரு பத்துநாள் கழிச்சு நாச்சியார் கோயிலுக்கு எழுந்தருளுவர், நீங்கள்லாம் அப்ப சரணாகதி பண்ண வாங்கோ’, அப்படின்னு எந்த கோயில்யாவது வாசல்ல பலகை போட்டு வைக்கிறாளோ?  நம்ம போறோம்.. அதததுக்கு இன்னென்ன காலம், திருவாராதன காலம், திருமஞ்சன காலம் அப்படின்னு கோயில் காலம்னு எழுதறாளோல்லையோ, எங்கயாவது பத்துநாள் வருஷத்துக்கு, அவரவர் தாய் வீட்டுக்கு சீராடப் போக மாட்டாளா? இது ஒண்ணுமில்லாத தாய் வீட்டுக்கே எல்லாரும் போறா.  அப்படி இருக்கறச்சே, அவளுக்கு ஜனனி சமுத்திரராஜனுக்கு பெண்ணாகப் பிறந்தாள்.  அப்ப அந்த இடத்துக்குப் போய் ஒரு பத்து, பதினைஞ்சு நாள் சீராடிட்டு வரமாட்டோளோ?  போறதேயில்லை. 

    இல்லாமப் போனா என்னாகும்?  பிராட்டிக்கு இருக்கும் முக்கியமான பெருமை, ‘விட்டுப் பிரியாமலிருக்கை’.   ஏன்னா, ஒருத்தர் சிபாரிசு பண்றதுக்கு இருக்கணும்னா, எப்ப, யார் வந்தாலும் சிபாரிசு பண்றதுக்கு கூடவே இருக்கணுமோல்லியோ?  இதற்குத்தான் ‘நித்ய யோகம்’னு சொல்லுவர்கள்.   இதை எங்கும் தேடிக்கொண்டு போக வேண்டாம்.  த்வய மகா மந்திரத்தின் முதல் சப்தம், அதுல சேர்ந்திருக்கிற ப்ரத்யேயமே அதைத்தான் காட்டிக் கொடுக்கும்.  ‘ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே’ என்று சொல்லுகிறோம்.  அதுல ’ஸ்ரீஹி’, ‘நாரயண’, ரெண்டு சொல் இருக்கு.  ‘ஸ்ரீஹி’ என்றால் பிராட்டி, ‘நாராயண’ என்றால் நாராயணன்.  ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்று சொல்லுகிறோமில்லையோ, இந்த, ‘மந்’, மதுபூ என்பது எது?  இது விட்டுப் பிரியாத நித்ய யோகத்தைக் காட்டும்.  எக்காரணம் கொண்டும், என்னைக்கும் பிராட்டி பெருமானை விட்டுப் பிரிவதில்லை.

    அகலகில்லேன் நிறையுமின்னு அலர்மேல் மங்கை உறைமார்பா’, என்று ஆழ்வார் பாடினார்.  ஒரு இமைப்பொழுது கூட பெருமானுடைய திருமார்பை விட்டு பிராட்டி அகலுவதேயில்லை. 

    எதற்காக அவள் கூடவே இருக்கிறாள்?  என்னைக்காவது ஒருத்தன் சரணம்னு பண்ண வர, நாம அன்னைக்குப் பார்த்து ஏதாவது ஊருக்குப் போயிருந்தோம்னா, இந்தப் பெருமாள் கோபத்தைக் காட்டிடுவர்.  அவர் அதுக்குன்னு காத்திண்டுருக்கார்.  கோபத்தை மாத்தி குணங்களைக் கிளறி விடுவதற்குத்தானே பிராட்டி கூட இருக்கிறாள்?  ஆக, அவளுடைய நித்ய யோகத்தைத்தான், ‘ஸ்ரீமந் நாராயண’. 

    விட்டுப் பிரியாமலிருப்பதற்கு ரெண்டு பயன் உண்டு.  ஒன்று, அவள் கூட இருக்கிறபடியாலதான், பெருமான் நாராயணனாகவே ஆகிறார்.  ‘ஸ்ரீமந் நாராயண’ன்னு சொல்லும் போது, நாராயண என்பதற்கு, ‘நாரங்களுக்கு எல்லாம் அயனம்’ அப்படின்னு பார்த்தோம், ‘ஸ்ரீமந் நாராயண’ என்றால், பிராட்டியோடு கூடிய நாராயணன்.  இங்க நாராயணன் தானே முக்கியம்?  நாராயணன முன்னாடி சொல்லிட்டு, ஸ்ரீய பின்னாடி சொல்ல வேண்டியதுதானே?  எதுக்கு பிராட்டிய முன்னாடி சொல்லிட்டு, நாராயணன பின்னாடி சொல்றா?  ’மால்திரு’-னு சொல்லலாமோல்லியோ, எதுக்கு எப்ப பார்த்தாலும் ‘திருமால்’னு சொல்றா?  ‘வைஷ்ணவஸ்ரீ’னு சொல்லிக்கலாமோல்லியோ, ஏன் ‘ஸ்ரீவைஷ்ணவம்’னு சொல்றா?  முன்னாடி அவள் பெயர், பின்னாடி அவன் பெயர்.  இதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கணும். 

    எந்த சமயத்திலும் அவள் விட்டுப்பிரியாதவன் அவன் என்று தோணுவதற்காக.  பேயாழ்வார் முதல் பாசுரத்திலேயே தெரிவித்தார், முதல் பாசுரம் ஆரம்பிக்கறச்சே, பெருமாலைக் கண்டேன்னு சொல்வதற்காக, ‘திருக்கண்டேன்’னு ஆரம்பிக்கிறார்.  பெருமானைப் பார்த்தேன், அவன் திருவோட கூடியிருந்தான்னு சொல்லலாமோல்லியோ?  நான் பார்க்கறச்சே அவளோடு கூடியவனாகத்தான் கண்டேன்.  தனித்து பெருமான கண்டுட்டு அப்புறம் அவள் கூடியிருக்கான்னு ஆழ்வார் சொல்லமாட்டேங்கிறார்.  ‘திருக்கண்டேன், பொன் மேனி கண்டேன்’-ங்கிறாரே, திருவோடு கூடின பொன்மேனி கண்டேன்னாவது சொல்லலாமோல்லியோ?  பாட்டு அப்படி இல்லை.  ’திருக்கண்டேன்’, ஸ்ரீதேவி நாச்சியாரைக் கண்டேன், ஸ்ரீதேவி நாச்சியாரைக் காண்றதுக்கா இவர் இவ்வளவு ப்ரயத்தனப்பட்டார்?  நாராயணன காண்றதத்தான சொல்ல வந்தார்னா, இல்லே, எப்ப திருக்கண்டேன்னு ஒரு லக்ஷ்ணத்த சொன்னாரோ, அப்போ பெருமானையும் சொல்லிற்றாயிற்று.  ஏன்னு விசாரிச்சுட்டு சொன்னதுதான் பரம சாஸ்திர அர்த்தம்.

    எந்த ஒரு பொருளைப் பத்தியும் லக்ஷ்ணம் சொல்றோமில்லையோ, அதுக்கு ‘சொரூப நிரூபக தர்மம்’னு பேரு.  ஒரு பொருளை எடுத்துக்கறோம், இந்த பொருள்னு அதை எப்படி நாம தெரிஞ்சுக்கறது?  ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தர்மம் (அடையாளம்) இருக்கு.  அந்த தர்மம் அதற்கு இன்றியமையாததாக இருந்தால் அதற்கு ‘சொரூப நிரூபக தர்மம்’னு பேரு.   அதாவது நான் என்ன லக்ஷணம் சொல்றேனோ, அந்த லக்ஷணம் அந்த லக்ஷியத்துல மட்டும்தான் இருக்கணும்.   இன்னொரு இடத்துல இருக்கக்கூடாது.  ஆனா கடைசி பக்ஷம் அந்த லக்ஷியத்துல இருக்கணும்.   நான் சொன்ன லக்ஷணம், லக்ஷியத்துல இல்லாம போயிடுத்துன்னா, அப்போ லக்ஷியத்த புரிஞ்சுக்க முடியாது.  நான் சொன்ன லக்ஷணம், லக்ஷியத்த தாண்டி இன்னொரு இடத்துல இருந்ததுன்னா, அப்பவும் லக்ஷியம் நமக்கு தெரியாம போயிடும். 

    வாசல்ல ஆடு ஓடிண்டிருந்தது.  என் பிள்ளை, ரெண்டு வயசுக் குழந்தை, என்னன்னு கேட்டான்.  இதான் ஆடுன்னு சொன்னேன்.  எப்படி தெரிஞ்சுக்கறதுன்னான்.  நாலு கால் இருக்கு பார்ன்னு சொல்லி வச்சுட்டேன்.  மறுநாள் காத்தால குதிரை போய்ண்டிருந்தது.  இங்க வான்னு என்னைக் கூப்பிட்டான்.  ஆடு போறது பார்,ன்னான்.  இல்ல, குதிரைதான போறதுன்னேன்.  நீதான நாலு கால்னு ஆடுக்கு சொன்ன?  அப்போ லக்ஷணம் தப்பு.  நான் ஆட்டுக்கு நாலு கால்னு லக்ஷணம் சொல்லிட்டேன்னா, நாலு கால்ங்கறது இன்னொரு இடத்துல இருக்கக் கூடாது.  அப்பதான் அதுக்கு இன்றியமையாத அடையாளம்னு சொல்லுவர்கள். 

    இதேபோல இப்ப பெருமான தெரிஞ்சுக்கணும்.  எதை ‘சொரூப நிரூபக தர்ம’மாக வச்சுக்கலாம்?  ஜகத்காரணத்துவம் என்றோ, இல்லை கருட வாகனத்துவம்னோ, இல்லை ஆதிசேசன படுக்கையாக் கொண்டவர்னு சொல்லலாமா, அகிலஹேய ப்ரத்யனீக கல்யாநீக தனானன்னு சொல்லலாமா, ஸ்வேதர சமஸ்தவஸ்து விலக்க்ஷணன்னு சொல்லலாமா,  இதெல்லாம் அப்பறம் சொல்லலாம்.  இதுக்குன்னு ஒரு ‘சொரூப நிரூபக தர்மம்’ இருக்க வேண்டும்.  அந்த தர்மம் எதுங்கறதைத்தான் ஆழ்வார், முதல் பாசுரத்தில, முதல் வரில தெரிவிக்கிறார்.  ‘ஸ்ரீயப்பதித்துவமே’ சொரூப நிரூபக தர்மம்.  பெருமான் ஸ்ரீயப்பதிங்கறதுதான் மத்த எல்லாரிடத்திலயும் அவனை வேறுபடுத்தி உயர்த்திக் காட்டும்.  அவளைக் கொண்டுதான் அவனை நாம் இன்னாரென்றே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

    சரி இப்படி பார்ப்போமே, நாலு காலோடே, களத்திரத்தோடே (சின்ன தாடியோடே) ஆடு என்பது இருக்குமுன்னு சொல்லிட்டு, ஆனா மாசத்துல பத்து நாள் அது இருக்காதுன்னு சொல்லிட முடியுமோ?  முப்பது நாளும் இருந்துதான் ஆக வேண்டும்.  முந்நூத்து அறுபத்தைஞ்சு நாளும் இருந்துதான் ஆகணும்.  ஒரு வஸ்துவ அடையாளம் கண்டுக்கறதுக்கு இதுதான் லக்ஷணம்னு சொல்லிட்டேன்னா, லக்ஷணம் என்றுமே அந்த வஸ்துவ விட்டுப் பிரியவே முடியாது.  அதே போல, பெருமானோடே பிராட்டி கூடியிருப்பதுதான் பெருமானுக்கு அடையாளம்னு சொல்லிட்டா, கூடியிருக்கை என்றும் பிரிய முடியாது.

    கூரத்தாழ்வான் தெரிவித்தார், பிராட்டியினுடைய புருவ நெரிப்பில் அவளுடைய மனசில என்ன ஓடறதுன்னு தெரிஞ்சிட்டு, அவன் படைக்கிறான், காக்கிறான், அழிக்கிறான்.  முராரியான எம்பெருமான் படைப்பதே இவள் ஆனந்தத்துக்காக.  பெருமான் படைக்கிறார்.  வேலையைப் பார்த்து முடிச்சவர் முதலாளி அங்கீகாரம் பண்றாரோன்னு எதிர்பார்ப்பரோ, இல்லையோ?  நாம ரொம்ப கஷ்டப்பட்டு உழைப்போம்.  ஆனா நான் யாருக்கு வேலை பார்க்கிறேனோ, அவர் முகத்தையே பத்து வருசமா பாத்ததில்லைன்னு வச்சுப்போம், ’ஆரு வேலை பார்க்கறது, ஏதோ நம்ம பாட்டுக்கு பண்ணிண்டே இருக்கோம், மாடு மாதிரி உழைச்சிண்டே இருக்கோம்’, யாருக்கு வேலை பார்க்கறோம்னே தெரியலைன்னா, சந்தோசமே வராது.  பெருமான் உழைக்கிறார்.. யாராவது ஒருத்தர் நன்னாப் பண்ணேனு கைதட்டணுமோல்லியோ?   எல்லாருக்கும் அதிலே ஆசை இருக்காதா?  இப்ப நாம பாட்டு பாடறோம், நல்லா பாடுனோம்னு சொல்லனும்.  நாம நாட்டியம் ஆடினோம், நல்லா ஆடினோம்னு சொல்லனும்.  இது அகங்காரம்கிறதுக்காகவே இல்லே.  இருந்தாலும் ஒரு பாராட்டுதலை மக்கள் எல்லோரும் எதிர்பார்ப்பாளோ இல்லையோ, இவர் ரொம்பவே எதிர்பார்க்கிறார்.  ஏன்னா பெருமானுக்கு எல்லாரும் ஸ்தோத்திரம் பண்ணிப் பண்ணியே பழக்கம்.  ஸ்தோத்திரப் பிரியன் எம்பெருமான்.  அதுனால, இவர் இவ்வளவு பெரிய ஜகத்த ஸ்ருஷ்டி பண்ணி முடிச்சிட்டாராம்.  யாராவது கை தட்டி நல்லா இருக்குன்னு சொல்லுவர்களா, அப்படின்னு எதிர்பார்த்து காத்திருந்தார்.  பக்கத்துல ஸ்ரீரங்க நாச்சியார் ஒருத்திதான்.  வேற யார் இருக்கப் போறா.  சிருஷ்டிக்கு முன்னாடி ஒருத்தருமே கிடையாதோல்லியோ?  பிராட்டி வாய் திறந்தெல்லாம் பேச மாட்டா.  தன்னுடைய கண் ஜாடையால நல்லாப் பண்ணியிருக்கேங்கறாப்ல பார்ப்பளாம்.  ‘அங்கீஹாரிபிஹி ஆலோஹி’.  ஆலோஹம் = பார்வை.  அங்கீஹாரிபிஹி = நல்லாப் பண்ணிருக்கியே அப்படின்னு, ரொம்ப பெரியவாளாயிருந்தா நாம ஒரு காரியம் பண்ணியிருந்தோம்னா வாயத் திறந்தெல்லாம் பாராட்டிட மாட்டா.  ‘ம்’, அப்படிங்கறாளோல்லியோ.  அப்படின்னா ரொம்ப பெரிய முதலாளின்னு அர்த்தம்.  அந்த முதலாளி, ‘ம்’ சொன்னாலே போறும்.  அதபோல பெரிய பெருமாள் நினைச்சுக்கறார், ‘இவள் கண்ணால ‘ஆம்’னு வாங்கிட்டோமில்லையோ, போறுண்ணா’, அங்கீஹாரிபிஹி ஆலோஹி சார்த்யந்தை,  அப்பதான் தான் பண்ணின ஜகத் சிருஷ்டியே பலம் அடைந்தார்ப்போலே ஆனந்தப்பட்டான் எம்பெருமான்.   அப்படிப்பட்ட நாச்சியாரை வணங்குகிறேன் என்று பட்டர் தெரிவித்தார்.

    தர்மமே அவள்தான்னு பார்த்துட்டா, அப்போ தர்மத்தை சொல்லித்தானே தர்மியைச் சொல்லணும்?  அவனுக்குன்னு இருக்கிற அடையாளத்தைச் சொல்லிட்டுத்தானே பெருமாளைப் பற்றி சொல்ல வேண்டும்?   அதனாலதான், திரு ‘உடைய’ மால், ‘ஸ்ரீமந் நாராயணன்’, ‘ஸ்ரீவைஷ்ணவம்’,’திருக்கண்டேன்’, எல்லா இடத்திலேயும் அவளை முன்னாடி வைக்கறதுக்கு காரணம், இவளையிட்டு அவன் என்பதனால்.

    பெருமாளோடே அவள் எவ்வளவு சேர்ந்திருப்பள் என்று கேட்டால், எவ்வளவு சேர்ந்திருப்பள் என்பதெல்லாம் இல்லை.  ஒரு மீனைத் தொட்டுப் பார்த்தால், மீனுக்கு உடம்பெல்லாம் தண்ணீரைப்போலே, பெருமானுக்கு திருமேனியெல்லாம் அவள்னுட்டார்.  மீனத் தொட்டுப் பார்த்தா, எந்த இடத்துல தொட்டாலும் வழவழன்னு தண்ணிதான் இருக்கும்.  அதேபோல பெருமானத் தொட்டா எங்கு தொட்டாலும் அவள்தான் இருப்பளாம்.  அவ்வளவுதூரம் சேர்ந்திருக்காளோன்னா, ‘அகந்தா ப்ரம்மனத்தஸ்ய சாகமஸ்பி சனாதனீ’ என்று பிராட்டியே லக்ஷ்மீ தந்த்ரத்திலே தெரிவிக்கிறாள்.  ’நான் யாரு தெரியுமோ, ப்ரம்மத்தினுடைய அகந்தா’.  அகந்தான்னா எது?  நான்னு அடியேன் சொல்லிக்கிறேனிப்போ, நான் என்னும் போது, நான் என்கிற தன்மை இருக்கனுமோல்லியோ?  நான் ஆறடி, அஞ்சேகாலடி இந்த கதைக்கெல்லாம் அடியேன் போகவேயில்லை இப்போ.  நான்னு சொன்னா முதல்ல அதுல என்ன தன்மை இருக்கணும்?

    இந்த புஷ்பத்தை பார்ப்போமே.  புஷ்பம்னு சொன்னால், இது என்ன பூ, சாமந்திப்பூ, என்ன வர்ணம், மஞ்சள்.. அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல இது பூவோல்லியோ?  இந்த புஷ்பம்ங்கிற தன்மைக்கு அப்புறம், அத ஒத்துக்கொண்டுதான், மஞ்சள் தன்மை, சாமந்தி தன்மை, மணமணக்கும் தன்மை எல்லாமே ஏத்த முடியும்.  புஷ்பம்ன்னா முதல்ல அதுல என்ன தன்மை இருக்கும்?  புஷ்பத்தன்மை இருக்கும்.  அதே போல, ப்ரம்மம்னு சொன்னால், அவர் அகம்னு சொல்லிக்கிறார், ‘அகந்தா’, அகமாகிற தன்மை இருக்கனுமோல்லியோ?  ஆக, அகம்ங்கிற பகவான், ’அகந்தா’ – அகமாகிற தன்மை, அந்த தன்மைதான் பிராட்டினுடுத்து சாஸ்திரம்.  அத எங்கேயோ தள்ளித்தள்ளி தேடிண்டு போக வேண்டிய தேவையில்லை இப்போ.  அவர் அகமாயிருக்கார்னா, அப்போ அகந்தையாக யார் இருக்க வேண்டும், பிராட்டிதான் இருக்கா.  

    அகந்தாவவிட்டு அகம புரிஞ்சுக்க முடியுமோ முதல்ல?  இப்ப நான், ‘நான்’னு சொல்லிக்கறேன்.  நான் சொல்றச்சே, நானாகிற தன்மை என்னிடத்தே இருக்கும்.  அத பிரிச்சுட்டா என்னாகும்?  அப்ப ’நானே’ இல்லாமப் போயிடும்.  இந்த புஷ்பத்திடத்திலிருந்து புஷ்பத்தன்மையை பிரிச்சுடுவோம்.  அப்ப புஷ்பம் என்னாகும்?  அது மணமில்லாம போயிடும், ஒளி இழந்து போய்டும்னெல்லாம் சொல்லக்கூடாது.  அது புஷ்பமே இல்லாது போய்டும்.  இப்போ இதுகிட்டே இருக்கிற மணத்தை எடுத்துட்டாலும் புஷ்பமாத்தான் இருக்கும்.  காய்ஞ்சு போய்டறது.  ஆனாலும் காய்ந்த புஷ்பமாத்தான் இருக்கு.  ஆனா புஷ்பத்தன்மையை எடுத்துட்டம்னா, வஸ்து மாறிப் போகும்.  அதேபோல பகவானிடத்துல அகம்னுட்டா, அதுக்கு மேல குணங்கள் இருக்கறது இருக்கட்டும், விபூதி இருக்கறது இருக்கட்டும். ஆனா முதல்ல அகத்துல அகந்தான்னு இருக்குமோல்லியோ, இந்த அகந்தா கூட இருக்கறவரைக்கும்தான் அவருக்கு அடையாளமே.  அந்த அகந்தாவையே ஸ்திரீ செல்வமான பிராட்டின்னு சொல்லிட்டம்னா, அப்போ விட்டுப் பிரியறதுக்கு ப்ரசக்தியே கிடையாதே. 

    அந்த அளவுக்கு நித்ய யோகத்திலே ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுவர்கள்.

     

    -- நன்றி ("உந்து மதகளிற்றன்” பாசுரம் - திருப்பாவை - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    பிராட்டியின் முக்கியத்துவம்

    ஸ்ரீவைஷ்ணவத்திலே பிராட்டியை ‘புருஷகார பூதை’ என்று பெரியோர்கள் சாதிக்கிறார்கள்.

    ”லக்ஷ்மீஹி புருஷகாரத்வே நிர்திஷ்டா பரம ரிஷிபிஹி”

    - கற்றுணர்ந்த விஞ்ஞானிகளாலே, மெய்ஞானிகளாலே லக்ஷ்மி என்பவள் புருஷகார பூதையாக நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறாள்.  அந்த புருஷகார பூதையான லக்ஷ்மி செய்ய வேண்டியதென்ன?  அவள் பெருமானுக்கும் நமக்கும் ஒரு பாலமாக இருக்கிறாள்.

    லக்ஷ்மி என்றும், கமலா என்றும், மாதா என்றும், ஈஸ்வரி என்றும் அவளுக்கு திருநாமங்கள்.  இதெல்லாத்துக்கும் முன்னாடி ‘ஸ்ரீஹி’, அவளுக்கு இருக்கிற முக்கியமான திருநாமம்.  ‘ஸ்ரீஹி’ என்னும், லக்ஷ்மி என்னும், மாதா என்னும், ஈஸ்வரி என்னும் பல திருநாமங்களோடே எழுந்தருளியிருக்கிறாள்.  இந்த ஒவ்வொரு திருநாமத்துக்கும், அவள் செய்கிற அனுக்கிரகத்துக்கும்தான் நெருங்கின தொடர்பு.  ‘ஸ்ரீஹி’ என்று சொன்னால், பிராட்டி ஆஷ்ரகிக்கிறவள் மற்றும் நம்மால் ஆஷ்ரகிக்கப்படுபவள்.  நம்முடைய எல்லா குற்றங்குறைகளையும் காதார கேட்டுக் கொள்கிறவள்.  பெருமாளை நன்றாகக் கேட்பிக்குமவள்.  நம் பாபங்களை எல்லாம் தவிர்த்து, பெருமானிடத்தே சேர்த்துவிடுபவள்.  இதெல்லாம் ‘ஸ்ரீஹி’ என்பதற்கு அர்த்தம்.

    ‘லக்ஷ்மிஹி’ என்று சொன்னால், “லக்ஷ்யதே அனயா”.  மக்கள் எல்லோரும் இவளாலே லக்ஷிக்கப்படுகிறார்கள்.  ஒவ்வொரு ஜீவாத்மாவையும் லக்ஷியமாகக் கொண்டு, அவனுடைய பாபங்களை தவிர்த்து, பெருமானிடம் சேர்த்து வைக்கிறாள்.  இன்னொருவிதமாக, ஆத்மாக்களாலே இவள் லக்ஷியமாகக் கொள்ளப்படுகிறாள் என்றும் சொல்லலாம்.  நம் பாவங்களைத் தொலைப்பதற்கு இவள்தான் வழி என்று அவளை புருஷகாரமாக, லக்ஷியமாகப் பற்றுகிறார்களேல்லையோ, ‘லக்ஷ்மி’னு பேரு.

    மாதாவென்று சொன்னால் மிகுந்த மதிப்போடே பற்றப்படுகிறாள்.  அதனாலே ’மாதா’னு பெயர்.

    இங்க முக்கியம் ‘கமலா’னு சொல்லுகிறார்களேல்லையோ.  இங்கு கமலா என்பது, ‘க’, ‘ம’, ‘லா’.  இந்த ‘க’ (ககாரம்), பகவானைச் சொல்லும்.  ‘ம’ (மகாரம்) ஜீவாத்மாவைச் சொல்லும்.

    “க மெள லாதீதி கமலா”

    - ’க’ என்பதனால் சொல்லப்பட்ட நாராயணனையும், ’ம’ என்பதனால் சொல்லப்பட்ட ஜீவாத்மாவையும், ’லாதீ’ – லாதீன்னா, “லா தான ஆதானே தாது”.  கொடுத்து வாங்குவதைத்தான் ‘லா’னு சொல்லித்து.  ஆக, கொடுத்து வாங்கறார்.  பரமாத்மாவை ஜீவாத்மாவுக்கு கொடுத்து, ஜீவாத்மாவை பரமாத்மாவுக்காக வாங்குகிறாளில்லையோ.  ஜீவாத்மா பரமாத்மாவுக்கு சொத்து; பரமாத்மா ஜீவாத்மாவுக்கு கிடைக்கமாட்டேங்கறார்.  ஆனால் இவள் அனுக்கிரகத்தினாலே பரமாத்மா கிட்டுகிறான்.  ரொம்ப நாளா ஜீவாத்மாங்கிற சொத்து பரமாத்மாவுக்கு கிடைக்கலை, அதை வாங்கிக் கொடுத்துறாளேல்லையோ.  கிடைக்காத பெருமானை ஜீவாத்மாவுக்கு கொடுத்து, கிடைக்காத ஜீவாத்மாவை பரமாத்மாவுக்கு வாங்கி, இப்படி ”லா தான ஆதானே”.  வாங்கி, கொடுத்து, பெரிய பண்டமாற்றே பண்ணிடுவாள் போலிருக்கு பிராட்டி.  எனவே கமலா.

    புருஷகாரஹ என்றால் என்ன?  ‘புருஷங் கரோதீதி புருஷகாரஹ’.  புருஷனைப் புருஷனாக ஆக்குவதால் புருஷகாரஹ பூதை.  யாரோ ஒருத்தர் புருஷனா இல்லை; அவனைப் புருஷனாக ஆக்குகிறாள்.  யார் புருஷனா இருந்திருக்கனும்?  புருஷோத்தமந்தான் புருஷோத்தமனா இருந்திருக்கனும்.  ஆனா அவர் அப்படி இல்லை; அப்படி இருக்க மறந்துட்டார்.  புருஷன் செய்ய வேண்டியது என்ன?  ‘புரு பகு ஷனோதீதி புருஷஹா’.  நிறைய, கேட்பவர்களுக்கு கொடுத்துண்டே இருந்து, மறுக்காமல் இருந்தால் அவனுக்கு ‘புருஷன்’னு பெயராம்.  பரமாத்மா அப்படித்தான் இருந்திருக்கணும்.  யார் வந்து எதைக் கேட்டாலும், தான் தயங்காம குடுத்திருக்கோனுமில்லையோ?  தன்னையே கேட்டாலும் குடுத்துருக்கோனுமில்லையோ?  ஆனா பெருமானுக்கு ஒரு தர்ம சங்கடம்.  வந்து கேட்பவனுடைய பாபங்கள் கண்ணிலே படும்.  அதுக்கு தண்டனை குடுக்கணுமுன்னு பகவானுக்குத் தோணும்.  ஏன் இது தப்பில்லையோ, பொருமையைப் பார்க்க வேண்டாமான்னா, பொருமையை மட்டும் பார்த்துட்டால் அப்ப சட்ட புஸ்தகம் என்னாகும்?

    சாஸ்திரம் குடுத்தது உண்மை; நமக்கு ஞானம் குடுத்தது உண்மை; நம்ம எல்லார் மனசிலேயும் ஒரு கேள்வி எழுந்துண்டேயிருக்கும்..

    ”அவர்தான் ‘நிரங்குச சுதந்திர’ராச்சே, சர்வக்ஞனாச்சே, சர்வ சக்தனாச்சே, என்னுடைய பாபங்களெல்லாம் தீயினில் தூசாகக்கடவது அப்படின்னு ஒரே நிமிசத்துல சங்கல்பிச்சுட்டார்ன்னா, எல்லாமே தீயினில் தூசாயிடாதோ? நான் எதுக்கு இதுக்காகக் கஷ்டப்பட்டிண்டிருக்கனும்? இந்த லோகத்துல இருக்கும் பக்தாத்மாக்கள் அனைவரும் அடுத்த நிமிசத்துலேயிருந்து வைகுண்டத்தில் இருக்கக்கடவர்கள்.. அவ்வளவுதான்.. அடுத்த நிமிசத்துலேர்ந்து யாரும் இங்க இருக்க மாட்டோம். எல்லோரும் அந்த இடத்துலதான் இருப்போம்.. ஆனா இதப்போல பெருமாள் சொல்றதில்லையே, ஏனோ நம்மள துக்க சாகரத்துக்குள்ள அழுத்துகிறாரே.. அப்ப அவருக்கு கல்யாண குணங்கள் குறைவு போலருக்கு.. அவர் தண்டிக்கிறதான் பார்க்கிறாரே தவிர, நம்மகிட்ட எவ்வளவோ குற்றங்கள் இருந்தாலும் அத மறந்து தான் அனுக்கிரகிக்கணும்ன்னு பெருமாள் பார்க்க மாட்டேங்கிறாரே?”

    இத நாம சொல்லிண்டே இருப்போம்.  ஆனால் இது சட்டமாகாது.  இன்னென்னபடி நாம வாழணும்னு நினைச்சு பெருமாள் சாஸ்திரம் கொடுத்துட்டார்.  நமக்குன்னு ஒரு சின்ன சுவாதந்திரத்தையும் குடுத்திருக்கார்.  ஞானத்தையும் குடுத்திருக்கார்.  ஏதோ ஆட்டு மந்தை, மாட்டு மந்தையை ஓட்றாப்லயா பெருமாள் நம்மள ஓட்டிண்டிருக்க முடியும்?  அதப்போல பெருமாள் நம்ம ஓட்டுபவனே அல்லன்.  அவன் ஆட்டுவானியன் அல்லனு பிள்ளைலோகாச்சார்யர் தெரிவித்தார்.  அவனென்ன ஆட்டு மந்தை மேய்க்கிறவனா?  நம்மளெல்லாம் ஆடா பிறந்திருந்தா, ’உங்களுக்கு எல்லாம் ஒண்ணும் தெரியாது, நான் பார்த்து மோட்சத்துக்கு ஓட்டிக்கிட்டு போறேன்னு’ சொல்லலாம்.  நாமள்லாம் மக்களா அல்லவா பிறந்திருக்கோம்? மாக்களா பிறக்கலையே? எப்போ சாஸ்திரம் குடுத்து, ஞானத்தையும் குடுத்தானோ, அதுக்குத் தகுந்த அனுஷ்டானம் இருக்கணும்னு பெருமான் எதிர்பார்க்கிறார்.  அப்படி அனுஷ்டானம் இல்லாட்டா தண்டிக்கனும்னு நினைக்கிறான்.  தண்டிச்சுடறாராங்கிறது வேற விசயம்.  ஆனா அனுஷ்டானம் இல்லாது போனா தண்டிக்கனும்னு நினைக்கிறது தப்பில்லையோல்லையோ?  சட்டத்தையும் அமைச்சாச்சு, தப்பும் பண்ணிட்டே.. அதுக்கு தண்டனை கொடுத்துதானே தீர வேண்டும்?  அதனால பெருமாள் திருவுள்ளத்துல ஒரு சீற்றம் எழும். 

    அநாதிகாலமா இப்படியே பாபம் பண்ணிக்கொண்டு இருக்கிறானே, இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு அவர் சீறுகிறாரோ இல்லையோ? அந்த சமயத்தில் பிராட்டிக்குத் தோணுகிறது, கொடுத்துண்டே இருக்க வேண்டிய எம்பெருமான் போய் கோபம் கொள்றாரே, புருஷன்னா குடுக்கிறவந்தானே புருஷன்னு பார்த்தோம்?  நிறைய, கேட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்துண்டே இருக்கணுமே? ‘வரந் ததாதீஹி வரதஹா’..  கேட்பவர்கள் கேட்ட வரத்தையெல்லாம் கொடுப்பவன்தானே வரதன்?  அந்த வரதன் கொடுக்க மாட்டேன், தண்டிக்கனும்ங்கிற கோபத்தோடே இருக்காறே இப்போ?  பிராட்டி நினைக்கிறா, அப்போ பெருமான் புருஷனா நடந்துக்கலை.  இவன நாம இப்போ புருஷனா ஆக்கணும்.  அப்படின்னா கொடுக்க வல்லவனாக ஆக்க வேண்டும்.  மோட்சத்தை சுணங்காமல், இவன் பாபம் கண்ணிலே படாமல் கொடுக்க வல்லவனாய் ஆக்கி விடவேண்டும்.  அதற்கு என்ன செய்யலாம்னு யோசிக்கிறாள்.  இப்போதைக்கு அவர் திருவுள்ளத்திலே இருக்கறது கோபமும், சுவாதந்திரியமும்.  அத மாத்தி, அவரோட வாத்ஸல்யம், செளலப்யம், மாதுர்யம், சுவாமித்வம், செளசில்யம், இதெல்லாத்தையும் கிளப்பி விட்டாதான்னா இவர் இந்த கோபத்தையே மறப்பர்.  சில பேருக்கு கோபத்தை ஊட்றதுக்கும் தெரியும்.  என்ன பேசினா இவர் கோபப்படுவார்னு தெரியும்.  அப்படி கோபப்படும் போது என்னத்தை பேசினா, அடங்குவார்ங்கிறதும் தெரியுமோல்லையோ?  பிராட்டி முதல் வேலை பார்க்கறதேயில்லை.  அவள் கோபத்தை கிளர்றதேயில்லை.  கோபம் கிளர்ந்த போதும் அந்த கோபத்தைக் குறைத்து, வெந்நீரைத் தண்ணீராக ஆற்றி விடுபவள்தான் பிராட்டி.  அப்போதான் அவர் கோபத்தை எல்லாம் மறந்து, நம் பாபத்தை எல்லாம் மறந்து, சரி போனாப் போறதுன்னு பேசறதுக்காக வருகிறார்.  இத அவ பண்றதுனாலதான் ‘புருஷகார பூதை’னு சொல்லுகிறார்கள்.  இது ஒரு பக்கம்.

    அவனோட மட்டும் வியாபரிக்கிறதில்லே பிராட்டி.  அதே போல நம்மோடையும் அவளுக்கு உரிமை உண்டு.  ஒருத்தர், ரெண்டு பேரோட சண்டையைத் தீர்க்கப் போறார்னா, அவர்க்கு அந்த ரெண்டு பேரையும் தெரிஞ்சிருக்கணும்.  ஒரு பக்கம் மட்டும் தெரிந்திருந்தாலோ, ஒரு பக்கம் மட்டும் உரிமை இருந்தாலோ வேலையே நடவாது.  இன்னொரு பக்கத்திலும் உரிமையும், வேண்டியதும் இருக்கணும்.  இன்னொன்னு நாமதான்.  அவர இத்தனை நாழி புருஷனில்லைன்னு சொல்லிண்டமே, நாம புருஷனா நடந்துகிட்டமான்னு பார்ப்போம்.  கொடுக்க வேண்டியவர் அவர், மாட்டேங்கறார், அதனால பௌருஷ்யம் இல்லே.  நாமளும் புருஷர்கள்தான்.  புருஷ சப்தத்துக்கு அர்த்தம், “புரிததீ சேதேதி புருஷஹ”.  புரீதத்து என்னும் மாமிச பிண்டத்திலே சயனிக்கிறான்.  72,000 நாடிகள் இருக்கு, அந்த நாடிகள் அத்தனையும் ஹிருதயத்திலேர்ந்து புரீதத்தை நோக்கி ஓடும்.  புரீதத்துங்கிற மாமிச பிண்டத்துல ஆத்மா சயனிக்கிறான்.  அதனாலே இவனுக்கு புருஷன்னு பேரு. 

    லோகத்துலே புருஷன் என்று யாரைச் சொல்லுவார்கள்.  ஓரடி முன்னே நடப்பவனை புருஷன்னு சொல்கிறார்கள்.  இங்கு ஆண், பெண் பேதமில்லை.  ஆத்மாக்கள் பகவானை நோக்கி ஓரடி முன்னே நடக்க வேண்டும்.  ஜீவாத்மான்னு இருந்தா பராமாத்மாவிடனிடத்தே வெறுப்பு மாறி, விருப்பம் இருக்கணுமோல்லையோ? விருப்பத்தோட ஓரடி முன்னாடி நடக்க வேண்டுமே, போக மறுக்கிறான்.  பிராட்டி பார்த்தாள், ஆக இவனும் புருஷனா நடந்துக்கலே. 

    ஆக இந்த இரண்டு பேருக்கும் நடுவிலே இவள்தான் சிக்கிக் கொண்டாள்.  பெருமானைத் திருத்துறது அவளுக்கு ரொம்ப சுலபம்.  ஒன்னும் கஷ்டமேயில்லை.  பாடு அத்தனையும் நம்மோடதான் பிராட்டிக்கு.  ஏன்னா இவன் சுலபத்துல எதையும் மாத்திக்கவே மாட்டான்.  அவர் ஏதோ அப்படி வம்பு பண்ணுவரே தவிர, பிராட்டி இப்படிதான்னு சொல்லிட்டார்ன்னா, மேல அவன் பேசுவதேயில்லை..  ”நமக்காக நல்லது சேர்ந்தவள்தான் சொல்கிறாள், கேட்போம்.”  இந்தளவுக்கு, சொன்னா கேட்கறங்கிறது அவர்கூட வச்சுண்டிருக்கார்.  ஆனா நாமதான், அதென்ன சொன்னா நான் கேட்டுறது, நான் சுதந்திரனல்லவோன்னு நினைப்போம்.  இந்த சிறு சுவாதந்திரம் இருக்கிற நமக்கு இவ்வளவு பிணக்கு.  ’நிரங்குச சுவாதந்திரம்’ இருக்கிற எம்பெருமான், ‘விஸ்வாமித்திரர் சொன்னார், கேட்டேன்.  வசிஷ்டர் சொன்னார், கேட்டேன்.  சரபங்கர் சொன்னார், கேட்டேன்.  அகஸ்தியர் சொன்னார், கேட்டேன்.  பரத்வாஜர் சொன்னார், கேட்டேன்.’  யார் சொன்னாலும், கேட்பன், கேட்பன், கேட்பன்.  இது மட்டும்தான் இராமனுக்குத் தெரியும்.  சாந்தீபன் சொல்லக் கண்ணன் கேட்டான்.  பாண்டவர்கள் தூதனுப்ப கண்ணன் நடந்தான்.  அர்ச்சுனன் தெரிவிக்கிறான், ‘அச்சுதா, ரெண்டு சேனைக்கு நடுவிலே என்னுடையை தேரைக் கொண்டு நிறுத்து’ன்னு.  மறுபேச்சில்லாமல் கொண்டு போய் நிறுத்துகிறான்.  ஆக சர்வேஸ்வரன்கூட சொல்பவர்கள் சொன்னால் கண்டிப்பாகக் கேட்டுக் கொள்கிறான்.  ஆனா பிராட்டி சொன்னா நாம கேட்டுக்கிறமான்னு பார்த்தா, அவ ரொம்ப போராட வேண்டியிருக்கு.

    நம்மள புருஷனா ஆக்கனுமோல்லையோ, நமக்கு உபதேசம் பண்ண ஆரம்பிப்பாள்.  ‘நீ இதேபோல எத்தனை ஜென்மாக்கள் பாபங்களோடே கிடக்கப் போகிறாய்? உன்னை மாத்திண்டாத்தான நான் அவரிடத்தில அழைச்சிண்டு போக முடியும்.  இத்தனை நாள் இருக்கறது போகட்டும்.  இனிமேலாவது செய்யாமலிருக்க வேண்டும்.’, அப்படின்னு நம்மிடத்தே பேசுகிறாள்.  உபதேசத்தாலே நம்மைத் திருத்துகிறாள்.  பெருமானை நோக்கி அடியெடுக்க வைக்கிறாள்.  ‘புருஷங் கரோதீதி புருஷஹா’.  இதிலே நம்மை மாதிரி துளி பக்தி இருக்கறவாளுக்கு உபதேசிக்கிறது இருக்கட்டும்.  இராவணனுக்கு உபதேசிக்கவில்லையோ சீதை?  இராவணன் சீதையிடனித்திலே அபசாரப்பட வந்து, 700 இராட்சசிகளை தர்ஜனத்தாலும், பர்ஜனத்தாலும் துன்புறுத்த வச்சு, ‘இன்னும் ஒரு மாசம் உனக்கு அவகாசம் தரேன்.  அதற்குள்ள எனக்கு இணங்கினாலுண்டு’ன்னு இராவணன் சொல்லுகிறான்.  எவ்வளவு கோபப்பட்டு அடுத்த நிமிசம் சபிச்சிருக்கணும் பிராட்டி?  அப்படி பண்ணாமல், இராவணனுக்கு உபதேசிக்கிறாள்.  ‘வேண்டாம் இராவணா, இராமனுடைய கால்ல விழறதுக்குக்கூட உனக்கு யோக்கியதை கிடையாது.  ஆனால் உனக்கு நல்லது சொல்றேன்.  கடைசி வாய்ப்பு, பிடித்துக்கொள்.  நீ உயிரோடு இருக்க வேண்டும், இராட்சசர்கள் உயிரோகு இருக்க வேண்டுமென்றால், இராமன் கையையாவது பிடி.  மித்திரன் என்றாவது சொல்லிக்கொள்.’ என்று சீதை எத்தனையோ உபதேசித்துப் பார்த்தா.  இராவணன் காதுல அதெல்லாம் ஏறவே இல்லை.  அப்போ இராவணனைக்கூடத் திருத்தி பெருமானுக்கு ஆட்படுத்தனும்னு ஆசைப் படுகிறாளேல்லையோ?   இது ஒரு பக்கத்திலே நம்மிடத்டே பண்றது. மறுபக்கம் அவனிடத்தே பண்றது.  இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே. 

    பெருமானுக்கு உபதேசிக்கும் போது, ‘நீர் கோபத்தயே பார்த்துக்கிட்டு இருந்தா, உம்ம குணத்தை எப்போ பார்க்க?  நீர் குணத்தைப் பார்த்து அனுகிரகிக்கனுமே தவிர, கோபம் கோபம்னு பார்த்திருந்தா நடக்குமோ?’.  பெருமாள் திரும்பக் கேட்பர், ‘சரி, நான் கோபத்தை விட்டுடறேன். அனுகிரகிக்கிறேன்.  அப்ப சட்ட புஸ்தகம் என்னாகும்? அதுக்கும் நீயே வழி சொல்லு.  நாமதானே இந்த வேதத்தை ஏற்படுத்தினோம்.  நாமதானே இந்த மக்களுக்கு பிரம்மா மூலமாக கொடுத்தோம்?  நானே அதை மீறுவதற்கு ஆரம்பிச்சுட்டா, நாளைக்கு யார் வேணாலும், என்ன வேணாலும் பண்ணிட்டு, சட்டமே பாயாதுன்னு துளிர் விட்டு போயிடமாட்டானா?  ஒரு பக்கம் நாந்தான் சட்டத்தையும் பார்க்க வேண்டியதிருக்கு.  நீ சொல்றது சரி.  ஒரு பக்கம் நாந்தான் என்னுடைய க்ருபையையும் பார்க்க வேண்டியதிருக்கு.  ஆனா ரெண்டுத்துக்குள்ள எதைப் பார்க்கறதுன்னு தெரியலையே.’, என்று பெருமான் சொல்ல, ‘இப்படி வேணா ஒரு வழி வச்சுப்போம்.  அதையும் விட்டுட முடியாது, இதையும் விட்டுட முடியாது.  ரெண்டையும் விட்டுக்குடுத்துறாத ஒரு வழி தேடணுமோல்லையோ. நீ ஒண்ணு செய்.  யாரெல்லாம் சரணம்னு உன் திருவடிகள்ள வந்து நின்னுட்டாளோ, அவாளிடத்திலே கருணையைக் காட்டிடு.  யாரெல்லாம் சரணம்னு சொல்லலையோ சட்ட புஸ்தகத்த காட்டிக்கோ. இப்படி வேணா வச்சுக்கயேன்.  இத்தனை நாள் என்ன பாபம் பண்ணியிருந்தாலும், சரணம்னு சொல்லிட்டு, இனி அந்த பாபங்களோட சேர்க்கை எனக்கில்லை, அப்படின்னு பழைய பாபத்துக்கு அனுதாபம், பச்சாதாபம் பட்டுட்டான்னால், வுட்டுடு.  அப்ப உன்னோட வாத்ஸல்யம், சௌசில்யம், காருண்யம், தயா, க்ருபா, எல்லாத்தையும் காட்டிடு.  இன்னும் இப்படியே பண்ணிண்டுதான் திரிஞ்சிண்டு இருப்பன்னு வச்சுக்கோ, அவனிடத்திலே உன்னுடைய கோபத்தைக் காட்டிக் கொள்ளேன்.’   பெருமாள் யோசித்தார்.  ‘இது நல்ல உபாயமாயிருக்கு.  இத்தனைநாள் தெரியாமலே போயிடுத்தே.  இதை எப்படி நீ மட்டும் தெரிஞ்சிண்டே? நானும் யார்கிட்டயும் பாடசாலைல வாசிக்கப் போலே, நீயும் யாரிடத்திலயும் பாடசாலைல படிக்கப்போலே.  ஆனா உனக்கு மட்டும் இது தெரியறதே.  எனக்கு தெரியாமப் போயிடுச்சேன்னு’, எம்பெருமாள் ரொம்ப ஆச்சர்யப்பட்டார்.  பிராட்டி சொன்னா, ‘உன்னவிட அடியார்கள ரட்சிக்கறதிலே எனக்கு ஆசை அதிகம்.  அதனாலதான் இந்த வழி எல்லாம் எனக்குத் தெரியறது.’  நமக்கு எத்தனை தூரம் ஒரு விசயத்துல ஊற்றம் இருக்கோ, தானே வழி கண்டுபிடிப்போம். 

    விஷ்ணு மகாலக்ஷ்மியை தன் மார்பில் தாங்குகிறான்.   நடுவில மகாலக்ஷ்மி இருந்து கொண்டு, ’அ’காரத்தையும் ஒரு கையில் விடாமல், ’ம’காரத்தையும் மறுகையில் விட்டுடாமல், அவனையும் பற்றிக் கொண்டு, இவனையும் பற்றிக் கொண்டு, இருவரையும் உபதேசத்தாலே திருத்தி சேர்த்து வைக்கிறாளேல்லையோ, அதனாலதான் அவள் நடுவிலே வீற்றிருக்கிறாள்.  அ-காரத்துக்கும், ம-காரத்துக்கும் நடுவிலே உ-காரவாசியாக பிராட்டி இருக்கிறாள்.

     

    - நன்றி ("உந்து மதகளிற்றன்” பாசுரம் - திருப்பாவை - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    December 09

    முதல் ரகசியம்

    வைஷ்ணவத்தில் முதல் ரகசியமெனப்படுவது திருவஷ்டாக்ஷர மந்திரமான (எட்டெழுத்து மந்திரம்) ‘ஓம் நமோ நாராயணாய’.  இதில் முதல் சப்தமான ‘ஓம்’ என்பது ஓரெழுத்தாக கொள்ளப்படும்.  இதன் பொருள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.   இம்மந்திரம் உடையவர் மூலமாக உபதேசமாக அருளப்பட்டது குறித்து நெகிழ்ச்சியான வரலாறு சொல்வார்கள்.

    எம்பெருமானார் ஸ்ரீ இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தே இதை உபதேசமாகப் பெற்றார்.  ஒரு தடவை அல்ல, இரு தடவை அல்ல, 18 முறை உடையவர் திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடந்து இந்த உபதேசத்தை யாசித்தார்.  ஒவ்வொரு முறையும் திருக்கோட்டியூர் நம்பிகள் ஏதாவதொரு காரணம் சொல்லி, இந்த திருமந்திர உபதேசத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.  கடைசியாக 18வது முறை இந்த உபதேசத்தை தந்தருளி, இவ்வுபதேசத்தை எளிதில் யாருக்கும் தந்துவிடலாகாது என்று சொன்னார்.  ஆனால் இவ்வுலக மக்களின் மேல் உள்ள கருணையினால், உடையவர் அங்கிருந்த கோவில் கோபுரத்தின் மேலேறி, ‘யாருக்கெல்லாம் ஸ்ரீ வைகுண்டம் போகவேணுமென்ற ஆசையிருக்கிறதோ அவர்களெல்லாம் கேட்டுக் கொள்ளுங்கள்.   ஸ்ரீ வைகுண்டத்தை அடைய வழி இந்த மந்திரமே’ என்று சொல்லி இந்த மந்திர உபதேசத்தை ஊருக்கெல்லாம் வழங்கினார். 

    திருக்கோட்டியூர் நம்பிகள் இதை கேள்விப்பட்டவுடன் கோபமடைந்து உடையவரிடம், ‘நான் இம்மந்திரோபசத்தை யாருக்கும் எளிதில் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருந்தேனே.  என் பேச்சை எப்படி மீறினாய்?  ஆச்சார்யன் பேச்சை மீறினால் நீ நரகத்துக்கல்லவோ செல்வாய்?’ என்று கேட்டார்.  அதற்கு உடையவர், ‘இம்மந்திரத்தை கேட்டதனால் இந்த ஊரிலிருக்கும் இத்தனை பேரும் ஸ்ரீ வைகுண்டம் போவார்களேயானால், அதன் பொருட்டு நான் நரகத்திற்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்ல, திருக்கோட்டியூர் நம்பிகள் உடையவரின் கருணையைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டு மகிழ்ந்தார் என்று சொல்வார்கள்.

    மேலெழுந்தவாரியான பொருள்:

    ஸ்ரீநாராயணனை சரணடைகிறேன்.

    உட்பொருள்:

    ஓம்

    ‘அ’காரம் + ‘உ’காரம் + ‘ம’காரம் (அ+உ+ம் = ஓம்)

    ’அ’ என்னும் எழுத்து இங்கு விஷ்ணுவைக் குறிக்கிறது.  (இங்கு ப்ரம்மம், விஷ்ணு, நாராயணன் என்ற எல்லா சொற்களும் சுட்டுவது ஒரே பொருளையே என்று கொள்ள வேண்டும்)

    1) சமஸ்கிருத இலக்கணப்படி ‘அ’ என்னும் சப்தம் ப்ரம்மத்தைக் (விஷ்ணு) குறிக்கும்.

    2) அனைத்து மொழிகளிலும் (அடியேன் அறிந்தவரை)  ‘அ’ என்னும் சப்தமே முதலெழுத்தாக அமையும்.  அதுபோலவே ப்ரம்மமே எல்லாவற்றிற்கும் தொடக்கம்.  அதனால் இந்த ‘அ’ சப்தம் ப்ரம்மத்தை குறிக்கிறது.

    3) ‘அ’ என்பது ‘அவா’ என்னும் வினைச்சொல்லின் சுருக்கமே.  அவா என்பதற்கு ’காப்பாற்று / இரட்ச்சி’ என்று பொருள்.  விஷ்ணு எல்லாவற்றையும் இரட்சிப்பதால் ‘அ’ என்பது விஷ்ணுவைக் குறிக்கும்.

    ’உ’ என்னும் எழுத்து இங்கு பிராட்டியை (ஸ்ரீ மகாலஷ்மி தாயாரை) குறிக்கும்.  இன்னொரு பொருளாக ‘மட்டுமே’ என்றும் நிற்கும்.

    ’ம்’ என்னும் எழுத்து ஜீவாத்மாவை குறிக்கிறது.

    • சமஸ்கிருதத்தில் ’ம’ எழுத்து 25வது மெய்யெழுத்தாகும்.  அதேபோல ஜீவாத்மா 25வது தத்வமாக தோன்றியவர் என்று கொள்வார்கள்.
         முதல் தத்வம் – ப்ரகிருதி (matter)
         2வது தத்வம் – மகான்
         3வது தத்வம் – அகங்காரம்
         பஞ்ச சூட்சும பூதங்கள் (ஒலி, தொடு உணர்வு, நிறம் அல்லது உருவம், ருசி, வாசனை)
         பஞ்ச ஸ்தூல (அல்லது) மகா பூதங்கள் (ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி)
         பஞ்ச கர்மேந்திரியங்கள்
         பஞ்ச ஞானேந்திரியங்கள்
         மனசு
        

          ஆக இவற்றிற்கு பிறகு 25வது தத்வமாக ஜீவாத்மா தோன்றினார்.

     

    • ’ம’ எழுத்து ‘அறிய’ என்னும் வினைச்சொல்லின் சுருக்கமாக சொல்லப்படும்.  ஜீவாத்மா அறிந்து கொள்பவர்.  எனவே இந்த ம சப்தம் ஜீவாத்மாவை சொல்லுகிறது.

     

    • ’ம’ எழுத்து ’அளவு’ என்னும் வினைச்சொல்லின் சுருக்கமாகவும் சொல்லப்படும்.  ஜீவாத்மா அணுவைப் போன்ற ஒரு குறிப்பிட்ட அளவிலிருப்பதால், இந்த ம் சப்தம் ஜீவாத்மாவை சொல்லுகிறது.

    மேற்கூறியது போல, ‘அ’ என்பது விஷ்ணுவையும், ‘உ’ என்பது பிராட்டியையும் குறிப்பதாகக் கொண்டால், ஜீவாத்மா இவர்களுக்கு சேவை புரிபவர், அடிமை என்னும் பொருள் கிடைக்கும்.  ’உ’ என்பதை ‘மட்டுமே’ என்று அர்த்தப்படுத்தினால், ஜீவாத்மா விஷ்ணுவுக்கு மட்டுமே அடிமை செய்பவர்; ஜீவாத்மா ஜீவாத்மாவுக்கே கூட அடிமை அல்லர், என்ற பொருள் கிடைக்கும்.  இங்கு பிராட்டி விஷ்ணுவிடமிருந்து பிரிக்கும் தன்மையில்லாமலிருப்பதால் (எவ்வாறு என்பது பிறகு விளக்கப்படும்) ‘அ’ சப்தமே விஷ்ணு, பிராட்டி இருவரையும் குறிக்கும்.  ஆக முடிவில், ஜீவாத்மா சுதந்திரன் அல்லர்; அவர் ‘சேஷ பூதர்’.  ப்ரம்மமே ‘சேஷி’.  ப்ரம்மத்துக்கு சேவை செய்வதே ஜீவாத்மாவின் நோக்கம் என்பது சொல்லப்படுகிறது.

    நமக

    பொருள் 1:  தொழுகிறேன், வணங்குகிறேன்.

    பொருள் 2:

    நமக = ந + மக => என்னுடையதில்லை.  எது என்னுடையதில்லை?  இங்கு ஜீவாத்மாவை சேர்த்து பொருள் கொள்ள வேண்டும்.  அப்படிக் கொண்டால்,

    • நான் என்னுடையவனில்லை.   நான் பரமாத்மாவிற்கு அடியவன், உரியவன்.
    • எதுவுமே என்னுடையதில்லை.  எல்லாமே பரமாத்மாவிற்கு உரியது.  அவன் சொத்து.
    • சுதந்திரம் என்னுடையதில்லை.  ஜீவாத்மா சுதந்திரமானவனில்லை.  ஜீவாத்மா பரமாத்மாவைச் சார்ந்தே இருப்பவன்.
    • முதலாளித்துவம் என்னுடையதில்லை.   நான் யாருக்கும் எஜமானில்லை, நான் உட்பட.  நாராயணனே எல்லோருக்கும் எஜமான்.

    இதன் மூலமாக, என்னை இரட்சித்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையதில்லை.  பெருமானுடையது என்பது தெளிவாகிறது.

    நாராயணாய

    நாரா + அயனம்

    நாரா:

    ர = அசிது -  அழியக்கூடிய வஸ்துக்கள்.  (ஜீவாத்மாவை தவிர மற்ற எல்லாமும் அழிபவையே).

    நர =  சிது = அழியாத வஸ்து;  ஜீவாத்மா, சேதனன்.  இதில் மற்றொரு பொருளும் உண்டு.  இந்த நர என்னும் சொல் பரமாத்மாவையும், அவரது கல்யாண குணங்களையும், அவருடையதான திருவாபரணங்கள், திருஆயுதங்கள் முதலிய அசேதனங்களையும் கூட குறிக்கும்.  ஏனெனில் இவையும் அழியாதவையே.

    நார = ஜீவாத்மாக்களின் குழு.

    நாரா = குழு, குழுவான ஜீவாத்மாக்களின் திரள்.

     அயனம்:  இந்த சொல்லுக்கு கீழ்க்கண்டவாறு மூன்று விதமாக பொருள் கொள்ளலாம்.

    1.  உறையும் இடம்.

    இதனாலே,

    • இந்த நாரங்கள் உறையுமிடம் பரமாத்மா என்று பொருள் வரும்.  நாரங்கள் குழு, குழுவாக, திரள் திரளாக ப்ரம்மத்திடம் உறைகின்றன என்று அறியப்படும்.  இதனால் இந்த சேதன, அசேதனங்கள் அனைத்தும் ப்ரம்மத்திடம் அடங்குகின்றன.  எனவே நாராயணன் மிகப்பெரியவன், அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டவன், அளவிட முடியாதவன், ஆதியிலிருந்தே இருப்பவன் என்ற பொருள்களெல்லாம் புரிய வருகின்றன.  பரம்பொருளின் இந்த குணாதிசயம், ’ஃபாகிர்வியாப்தி’ என்று கூறப்படுகிறது. 

    ‘ஃபாகிர்வியாப்தி’ குணம்,  சேதன அசேதனங்கள் இருக்குமிடத்திலும், இல்லாமிடத்திலும் ஆகிய எல்லா இடங்களிலும் ப்ரம்மம் இருக்கிறான் என்று அறிவிக்கிறது.

    • இன்னொரு விதமாக பார்த்தால்,  பரமாத்மா இந்த நாரங்களில் உறைகிறான் என்றும் தெரியும்.  ஒவ்வொரு ஜீவாத்மாவினுக்குள்ளும் அந்தர்மியாமியாய் பரமாத்மா இருக்கிறான் எனப் பொருள்.    எனவே அவன் அணுவுக்குள்ளும் அணுவாய், மிகச்சிறியவானகவும் இருக்க முடியும் என்று புரிகிறது.  இந்த குணாதிசயம், ‘அந்தர்வியாப்தி’ என்று கூறப்படுகிறது.

    ‘அந்தர்வியாப்தி’  குணம், சேதன, அசேதனங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ப்ரம்மம் இருக்கின்றான் என்று காட்டுகிறது.

    2.  உபாயம்.

    இதனாலே,  ஜீவாத்மாக்கள் ஸ்ரீவைகுண்டத்தை அடைய விஷ்ணுவே உபாயம் என்று பொருள். 

    3.  குறிக்கோள்.

    இதனாலே, ஜீவாத்மாக்களின் குறிக்கோள் விஷ்ணுவே என்று பொருள்.  அவனை அடைவதே குறிக்கோள்.

    இப்பொழுது மேற்சொன்ன அர்த்தங்களை சேர்த்துப் பார்க்கும் பொழுது, கீழ்க்கண்டவாறு மிக ஆச்சரியமான அர்த்தங்கள் கிடைக்கின்றன.

    1. ஸ்ரீமந் நாராயணனுக்கு வணக்கங்கள்.
    2. ஸ்ரீமந் நாராயணனை நான் சரணைடைகிறேன்.  என்னுடைய இருப்பு என்பது நாராயணனை சந்தோசப்படுத்துவதற்கே.  என்னை இரட்சிக்கும் பொறுப்பும் என்னுடையதல்ல, அது நாராயணனுடையது.  இந்த சரணாகதியினால் ஏற்படும் பலனும் அந்த நாராயணனுக்கே, எனக்கல்ல.
    3. பிராட்டியுடன் கூடிய நாராயணனுக்கே நான் அடிமை செய்பவன்.  மற்ற யாருக்குமல்ல.  எனக்கு கூட இல்லை.  எனக்கு சுதந்திரம் என்பது கிடையாது.  நான் எப்போதும் நாராயணனையே சார்ந்திருக்கிறேன்.
    4. ஸ்ரீமந் நாராயணனுக்கு நான் என்னைச் சமர்ப்பிக்கிறேன்.  இந்த அர்ப்பணமும் அவனது கருணையினால் விளைந்ததே தவிர வேறு தனி முயற்சியில்லை.  அவன் மட்டுமே என்னை இரட்சிக்க முடியும்.  வேறு எவரும் என்னை இரட்சிக்க முடியாது.  என்னாலே கூட என்னை இரட்சித்துக் கொள்ள முடியாது.
    5. பிராட்டிக்கும், நாராயணனுக்கும், அவர்களது அடியார்களுக்கும் மட்டுமே நான் கைங்கர்யம் பண்ணுவேன்.  என்னுடைய தனிப்பட்ட சந்தோசத்திற்காக எதுவும் செய்ய மாட்டேன்.  என்னுடைய செயல்கள் அனைத்தும் ப்ரம்மத்தை சந்தோசப்படுத்துவதற்காகவே அமையும்.
    6. பிராட்டிக்கும், நாராயணனுக்கும் மற்றும் அவர்களது அடியார்களுக்கும் நான் எப்போதும் தொண்டு செய்வேன்.
    7. நான் எனக்கு சொந்தமில்லை.  எனக்கு எதுவும் சொந்தமில்லை, எதுவும் என்னுடையதில்லை.  நான் உட்பட, எல்லாமும் நாராயணனின் சொத்து.
    8. ப்ரபத்தியைத் (சரணாகதி) தவிர எனக்கு வேறு உபாயமில்லை.  என்னால் வேறெந்த உபாயமும் (ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்) செய்ய முடியாது.  விஷ்ணுவே உபாயம்.  அவர் என்னை ஆசீர்வதித்து, பகவத் அனுபவத்தையும், பாகவத அனுபவத்தையும், பகவத்-பாகவத கைங்கர்யத்தையும் அளிப்பார்.
    9. என்னுடைய இரட்சகம் பகவானின் பொறுப்பு.  பகவான் என்னுடைய பாவங்களை மன்னிப்பார்.  பகவான் என்னை ஆசீர்வதித்து அவருக்கு தொண்டு செய்ய அருள் புரிவார்.
    10. நாராயணனுக்கு மட்டுமே நான் சொந்தமானவன்.  அவனிடம் நான் சரணாகதி, ப்ரபத்தி பண்ணுகிறேன்.  அவனுக்கு நான் எல்லா காலத்திலும் தொண்டு செய்வேன்.

     

    இக்கட்டுரை நான் படித்த, கேட்டவற்றை மீண்டும் நினைவில் அசை போட்டு, எப்போதும் மனதில் இந்த உயர்ந்த கருத்துக்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற என்னுடைய ப்ரயோஜனத்துக்காக எழுதப்பட்டது. 

     

    - நன்றி (வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகளின் திருப்பாவை உபன்யாசம் மற்றும் srivaishnavam)

    December 08

    வழிபாடு

    கோவில்களில் அர்ச்சா மூர்த்தியாக பெருமானை சேவிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. முதலில் அவன் திருமுகத்தைப்பார்த்து ஓம் நமோ நாராயணாய: என்கிற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை த்யானிக்க வேண்டும். பிறகு திரு உறையும் மார்பைப் பார்த்து ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரப்த்யே! ஸ்ரீமதே நாராயணாய நம: என்கிற த்வய மந்திரத்தை அனுசந்திக்க வேண்டும். பிறகு திருப்பாதங்களை தரிசித்து ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய: மாமேகம் சரணம் வ்ரஜ: அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசு ச:’ என்று அவன் நென்னலே வாய்நேர்ந்த சரம ஸ்லோகத்தை ஸ்மரிக்க வேண்டும்.

    - (நன்றி - திருப்பாவை 27 - கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா!)

    மூன்று ரகசியங்கள்

    1.  திருவஷ்டாக்ஷர மந்திரம்.

    ஓம் நமோ நாராயணாய

    2.  த்வய மந்திரம்

    ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரப்த்யே! ஸ்ரீமதே நாராயணாய நம:

    3.  சரம ஸ்லோகம்

    ஸர்வ தர்மான் பரித்யஜ்ய: மாமேகம் சரணம் வ்ரஜ |

    அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ||

    அறிமுகம்

    பகவான், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யார்கள் திருவடிகளே சரணம்.

    அவ்வப்போது கேட்கும்/படிக்கும் சில விசயங்களை குறித்து வைக்க இந்த இடம் உபயோகப்படும் என்று நினைக்கிறேன்.